Advertisement

*10*

“அந்த அரிசி கடையில வேலை பார்த்தா காலத்தை ஓட்ட முடியாதுனு சிகாவே வேற இடத்துக்கு மாறுனான். நீ திரும்ப அங்கேயே போக போறேன்னு நிக்குற.”

எதிர்ப்புக் குரல் இரு குடும்பத்திலிருந்தும் வந்தது. அவளே கூட அருண் கடையிலிருந்து வேலையை மாற்றிக்கொள்ளும்படி சிகாவிடம் சொல்லி இருக்கிறாள் தான் ஆனால் இன்று அவள் எண்ணம் வேறு.

அலைந்து திரிந்து வேலை தேடுமளவுக்கு அவளிடம் தெம்பும் இல்லை அவகாசமும் இல்லை. வீட்டிலிருந்து தப்பித்தால் போதுமென்ற மனநிலையை சரளாவின் பேச்சு கொடுத்துவிட்டது. இருவீட்டிலும் இனி தன் நிலை என்ன என்பதை முடிவெடுக்கும் கட்டாயம் தொலைவில் இல்லை என்றும் புரிய, தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முயன்றாள். அதற்கேற்றாற்போல் அருண் கடையில் வேலை எளிதாக இருப்பது போல் தெரிந்தது.

அன்று வேலைக்கு முதல் நாள். காலையே சாமி கும்பிட்டு நெற்றியில் சிறு கீற்றாய் பொட்டுக்கு மேல் விபூதியிட்டு தேவியிடம் மதிய உணவை டப்பாவில் அடைத்து வாங்கிக்கொண்டு கிளம்பினாள். அரக்க பறக்கவென்று இல்லாமல் நிதானமாக பேருந்து நிறுத்தம் நோக்கி நடைபோட, அவர்கள் வீட்டு வாயிலில் காயத்ரி நின்று கொண்டிருந்தாள்.

என்னவென்று பார்வையாலே கல்பனா கேட்க, ஒன்றுமில்லை என்று கண்சிமிட்டி தலையாட்டியவள் வேந்தன் கிளம்பி வரவும் அவனோடு வண்டியில் பின்னே ஏறிக்கொண்டாள். வண்டியை நகர்த்தவும் தான் கல்பனாவை கவனித்த வேந்தன்,

“கல்பனா, நான் கொண்டு போய் விடுறேன் வா.” தங்கையை அழைத்துவிட்டு திரும்பி மனைவியைப் பார்க்க, அவள் காளி அவதாரம் எடுத்திருந்தாள்.

“என்னடி? அவளை விட்டுட்டு வரேன், இறங்கு.” என்க, காயத்ரி வாய் திறக்கும் முன்,

“நீங்க போங்க. நான் பொறுமையா நடந்து போயிப்பேன்.” என்றாள் கல்பனா அவர்களை நெருங்கி.

“காயு இறங்கு, நான் அவளை விட்டுட்டு வரேன். முத நாள் போறா…” மனைவியை கெஞ்சலாய்  பார்த்தான் வேந்தன்.

“நீயும் ஆரம்பிக்காத, என் விருப்பத்துக்கு விடுங்க.” என்று அலுப்பாய் சொன்ன கல்பனா அவன் பதிலுக்கு காத்திராமல் நடந்து சென்றுவிட, மனைவியை முறைத்தான் வேந்தன்.

“தங்கச்சி மேல அவ்வளவு அக்கறை இருந்தா அவ இன்னைக்கு வேலையில சேரப் போறான்னு தெரிஞ்சப்போவே அவளை கொண்டு போய் விடுறேனு சொல்லி கிளம்பி இருக்கனும். அதை விட்டுட்டு நான் ஏறுனதும் எதர்ச்சியா கல்ப்ஸ் கண்லபடவும் பாசம் பொத்துக்கிட்டு கொட்டுற மாதிரி சீன் போடாதீங்க.” என்று கேட்டுவிட, சுருக்கென்றது வேந்தனுக்கு.

மனைவி சொல்வது போல் தங்கை பற்றிய நினைவு இல்லாமல் தன் வேலையில் மும்மரமாக இருந்துவிட்டோமே என்று மனம் குறுகுறுக்க,

“ம்ச் பரவாயில்லை விடுங்க, இன்னைக்கு டாக்டர் பார்த்து கன்பார்ம் பண்ற ஆர்வத்துல மறந்திருப்பீங்க.” என்று சமாதானமும் செய்தாள் காயத்ரி.   

தவறை சுட்டிக்காட்டி சமாதானமும் செய்யும் மனைவியின் செயலில் அகமகிழ்ந்த வேந்தன் அவளை காதலாய் பார்த்தான். வெட்கச்சிரிப்புடன் அவள் குனிய, உல்லாச மனநிலையுடன் மருத்துவமனை நோக்கி சென்றார்கள்.

மலர்ந்த முகத்துடன் கல்பனாவை வரவேற்ற அருண் கல்லாப்பெட்டியில் அவளை அமரசொல்ல,

“ஐயோ வேண்டாம், அது உங்க இடம். அத்தான் என்ன பண்ணாங்களோ அதை பண்ணத்தான் நான் வந்திருக்கேன்.”

“கஷ்டமர் வீட்டுக்கு டெலிவரி எடுத்துட்டு போவான். நீங்க பண்றீங்களா?” என்று அருண் கேலியாய் புருவம் உயர்த்த, ரசிக்கவில்லை கல்பனா.

அமைதியாய் சென்று அவன் காட்டிய இடத்தில் அமர்ந்துகொண்டாள். மானசீகமாய் தலையிலடித்துக் கொண்ட அருண், “தினம் இந்த நேரத்துக்கு வந்துட்டு சாயந்திரம் அஞ்சு மணிக்கு நீங்க கிளம்பலாம்.” 

“ஏன் அஞ்சு மணிக்கு மேல இருந்தா வேலையை விட்டு துரத்திடுவீங்களா?” இயல்பாய் கேட்டாள் அவள்.

“என்னங்க எனக்கு மொக்கை கொடுக்கணும்னு முடிவு பண்ணிருக்கீங்களா? உங்களுக்கு கஷ்டமா இருக்குமேன்னு சொன்னேன். சிகா ஏழு மணிக்கு கிளம்புவான், ஒன்பது மணிக்கு கடை அடைச்சிடுவேன்.”

“அத்தான் கிளம்புற நேரத்துக்கே நானும் கிளம்புறேன். எனக்கு வேலை போட்டு கொடுத்ததே பெரிய உதவி, இதுல சலுகை எல்லாம் வேண்டாம்.” 

“சலுகை இல்லைங்க அதுக்கு மேல நீங்க இருந்தீங்கன்னா எனக்கு வேலை இருக்காது.” மென்முறுவலுடன் சொன்னான் அருண். 

“ஓ… வெளில போற வேலை நிறைய இருக்கும்னு சொன்னீங்க,” என்று கல்பனா கேட்கும் போதே வாடிக்கையாளர் ஒருவர் வர, அவரிடம் கவனம் பதித்தான் அருண்.

வந்தவர் அரிசி வாங்கிக்கொண்டு உளுந்தம் பருப்பு இருக்கிறதா என்று கேட்க, இல்லை என்ற அருண் கல்பனாவை ரசீது  தயார் செய்து கொடுக்க சொன்னான். கர்ம சிரத்தையாய் அவன் சொன்னதை செய்தவள் அவர் வாங்கிய அரிசிக்கான விலையில் தடுமாற, அருகில் வந்து அவனே கணக்கை சொல்லி ரசீது தயார் செய்து பணம் வாங்கி கல்பனாவிடம் கொடுத்தான். அவளும் திணறலுடன் மீதி பணத்தை கொடுத்து அனுப்பினாள்.

“வேலையும் போட்டு கொடுத்து என் வேலையும் நீங்களே செய்றீங்க.” குற்றவுணர்வுடன் கல்பனா நிமிர்ந்து பார்க்க,

“புதுசுல அப்படிதான் இருக்கும். போக போக பழகிடும்.” என்று ஆசுவாசப்படுத்தினான் அருண்.

அவன் ஆதரவாய் பேசவும் தெம்பாய் உணர்ந்தவள், “கடையில இன்னொருத்தவங்க வேலை பாக்குறாங்கனு சொன்னீங்கல்ல, அவர் வரல?”

“அவன் சாயங்காலம் மட்டும் வருவான். மறுநாளுக்கு தேவையான ஸ்டாக் மூட்டையெல்லாம் சரிபண்ணி அடுக்கி வச்சிட்டு அன்னைக்கு இருக்குற டெலிவரி எல்லாம் வீட்டுல கொடுத்துடுவான். 

எல்லாரும் பத்து பதினஞ்சி கிலோன்னு வாங்க மாட்டாங்க, மூணு அஞ்சுன்னு கூட வாங்குவாங்க. அதை மட்டும் பைல போட்டு குடுத்துடுங்க. அதுக்கு மேல கேட்டாங்கன்னா டோர் டெலிவரி பண்றோம்னு சொல்லி அட்ரஸ், போன் நம்பர் வாங்கி வச்சிக்கோங்க.” 

“சரிங்க, நான் பாத்துக்குறேன்.” என்றவள் எழுந்து பிரிக்காமல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளையும், பிரிந்திருந்த மூட்டைகளில் இருந்த அரிசியை ஒருபிடி எடுத்துப்பார்த்து ஆராய்ந்து மனதில் ஏற்றிக்கொண்டாள்.

“என்ன சந்தேகம் வந்தாலும் போன் பண்ணுங்க.” என்றவன் கிளம்ப முனைய,

“இப்போ வந்த கஸ்டமர் பருப்பு கேட்டாங்களே, நீங்க ஏன் அதையும் வாங்கி சேல்ஸ் பண்ணக்கூடாது?” யோசனையாய் கேட்டாள் கல்பனா.

“கொள்முதல் பண்ற இடத்துல பருப்பு விலை தினம் ஏறி இறங்கும். கவனமா வாங்கினா தான் நஷ்டமாகாது.”

“ஓ, நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். நான் கடையை பாத்துக்குறேன்.” என்று மென்னகையுடன் சொல்ல அங்கிருந்து கிளம்பினான் அருண்.

அரிசி மூட்டைகளோடு தனித்து விடப்பட்டவளோ அந்த தனிமையில் இளக்கம் கண்டாள். மனம் சமன்பட்டது போலிருந்தது. புது இடம் என்பதாலா இல்லை தன்னை பரிதாபப்பார்வை பார்த்து வாழ்க்கை குறித்து திகிலூட்ட ஆள் இல்லை என்பதாலா என்று காரணம் தெரியவில்லை. புத்துணர்வை உணர முடிந்தது. அதே சமயம் சிகாவின் நினைவுகளும் இந்த கடையில் அவன் உலவிய இடங்களில் அவனின் இருப்பை, வாசத்தை உணரவும் முயற்சித்தாள்.

“அக்கா பாலா, டீயா, காபியா?” என்று அவள் ஏகாந்தத்தை கலைத்தான் ஒருவன்.

கல்பனா யார் என்பது போல் பார்க்க, “சிகா அண்ணன் வேலையை விட்டு போனதுக்கு அப்புறம் நாந்தான் அருண் அண்ணனுக்கு டீ, பன் எடுத்துட்டு வருவேன். உங்களுக்கு என்ன வேணும்னு கேட்டு கொடுக்க சொல்லிட்டு போயிருக்காரு.” என்றான் அவன் தகவலாய்.

“எனக்கு எதுவும் வேண்டாம்.”

“எப்போ வேணும்னு சொல்லுங்க, இங்கிருந்து ரெண்டாவது கடை தான் நம்மளோடது, எடுத்துட்டு வந்து தரேன். நம்ம கடையில ஏலக்கா டீ தான் பெஸ்ட்.” என்றுவிட்டு சென்றான் அவன்.

சற்று நேரத்தில் தேவி அழைத்து கல்பனாவின் நலம் விசாரித்துக் கொண்டார்.

“கஷ்டமா இருந்தா வேற பாத்துக்கலாம் கல்பனா, நீ உடம்பை வருத்திக்காத.” என்று சொல்லி வைத்தார் அவர்.

நேரம் ஆக ஆக சில வாடிக்கையாளர்கள் வந்தனர். அருண் சொல்லி சென்றது போல் சிறிய அளவுகளை தானே அளந்து கொடுத்து, மூட்டையாய் கேட்டவர்களின் விலாசத்தை குறித்துக்கொண்டு பில் போட்டு வைத்தாள். 

அவன் சொன்னது போல் பெரிதாக வேலை இல்லை. சமாளிக்க கூடிய எண்ணிக்கையிலேயே இடைவெளி விட்டே வாங்க வந்தனர். முதலில் பரிந்துரைத்த நிதி நிறுவனத்தில் வேலை கிடைத்திருந்தால் கூட இப்படி ஓய்வாய் இருந்திருக்க முடியாது என்று தோன்றியது.

மதியம் சரியான நேரத்திற்கு உண்டவள் அலைபேசியை நோண்ட, சரளா அழைத்துவிட்டார். பெருமூச்சுடன் அழைப்பை ஏற்க,

“சாப்டியா? வேலைக்கு போகணும்னு என்ன வந்துருக்கு? இப்படி பண்றியேடி. நாங்க பாத்துக்க மாட்டோமா?”

“ம்மா,” இயலாமை, ஆதங்கம், அலுப்பு கல்பனாவிடம்.

“அங்க என்ன கத்துகிட்டு முன்னேற முடியும்? மூட்டையெல்லாம் தூக்கி எங்க மானத்தை வாங்காத. அப்பா கடையில வேலை கிடைக்குமான்னு பாக்கலாம்.” அவர் விருப்பப்படி மகளை வளைக்க நினைத்தார் சரளா. 

அவளோ கடுப்பாகி, “இதை சொல்லத்தான் கூப்டீன்னா போனை வை.” கறாராய் சொன்னாள்.

“நல்லதுக்கே காலம் இல்லை. எல்லாம் அவங்கவங்க இஷ்டத்துக்கு பண்றீங்க.”

“பின்ன எல்லாரும் உன் இஷ்டத்துக்கு நடப்பாங்களா?” இதுமாதிரியெல்லாம் தான் இதுவரை பேசியதில்லை என்று கல்பனாவுக்கே தெரியும் ஆனால் பேசாமலும் இருக்க முடியவில்லை. சரளாவின் பேச்சுக்கள் யாவும் அவளை சோர்வுற வைத்து அழுத்தமாய் பேசத் தூண்டியது. 

“நீயும் வரவர உன் அண்ணிக்காரி மாதிரி எதிர்த்து எதிர்த்து பேச கத்துகிட்ட. காலையிலேயே எங்கேயோ மினுக்கிட்டு கிளம்புனா இன்னும் காணும், மதியம் சாப்பிட்டேனா என்னனு ஒன்னும் கண்டுக்கல.” என்று குறைபடிக்க, யோசனையான கல்பனா,

“காலைலயே கிளம்புனாங்க இன்னுமா வரல?”

“ம், சீக்கிரம் வந்துறேன்னு மட்டும் தான் சொன்னா. எங்க போனாங்க என்னனு ஒன்னும் தெரியல. சொல்லிட்டு போனா தான, என்னை மதிக்கிறதே இல்லை.”

“வேந்தன் கூட தானே போயிருக்கா வந்துருவாங்கமா. நீ சாப்டியா?”

“ஆச்சு ஆச்சு. முடியாத உடம்பை வச்சிக்கிட்டு என்னை நானே தான் பாத்துக்கணும்னு தலைவிதி. பொண்ணு மருமகன்னு இருந்தும் தனியா அல்லாடிட்டு இருக்கேன்.” சரளாவின் ஆதங்கம் இப்போதைக்கு முடியாது என்பதை புரிந்து கொண்டவள்,

“கடைக்கு ஆள் வந்திருக்காங்க. அப்புறம் பேசுறேன்.” என்று போனை வைத்துவிட்டு பெருமூச்சு விட்டாள்.

‘இந்த அம்மா வரவர சரியே இல்லை.’ என்று நினைத்துக்கொண்டே வேந்தனுக்கு அழைத்தாள்.

“எங்க இருக்கீங்க? அம்மா காணுமேன்னு எதிர்பாத்துட்டு இருக்கு.”

“வீட்டுக்கு தான் போய்ட்டு இருக்கோம். சாயங்காலம் வேலை முடிச்சிட்டு நேரா நம்ம வீட்டுக்கு வந்துரு.” என்றான் வேந்தன்.

சரியென்றவள் கடையில் கவனம் செலுத்த மதிய வேளை என்பதால் கூட்டமின்றி காற்றாடியது கடை. அமைதியாய் இருப்பது அழுத்தத்தை கொடுப்பது போல் இருக்க, கடையின் மேசையில் இருப்பவற்றை ஆராய்ந்தாள்.

பில் நோட்டுக்கள் இரண்டு, ஒரு பேனா ஸ்டான்ட், கத்திரிக்கோல், கத்தி, கால்குலேட்டர் இருந்தது. பொழுது நகரமாட்டேன் என்று அடம்பிடிக்க, மேசையின் இழுவை டிராயர்களை ஆராய்ந்தாள். ஒரு டிராயரில் கல்லாப்பெட்டியும் அடுத்ததில் பெரிய கோணி ஊசிகளும் நரம்பும் மூட்டைகளை பராமரிக்க தேவையான இன்ன சிலதும் இருந்தது. அடுத்த இழுவை பூட்டியிருக்க அதற்கான சாவியை மேல் டிராயரில் பார்த்தவள் அதை திறக்கலாமா வேண்டாமா என்று யோசனையோடு சில நிமிடங்களை கடத்தினாள். 

வெயிலின் தாக்கத்தில் நன்றாக வியர்க்க, மின்விசிறியை பார்த்துவிட்டு துப்பட்டா கொண்டு கழுத்து, முகத்தை துடைத்துக்கொண்டாள். மனசோர்வையும் தாண்டி உடல் சோர்வாய் உணர தண்ணீர் குடித்தவள், கல்லாப்பெட்டியை பூட்டி கையோடு சாவி எடுத்துக்கொண்டு கடை வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்தாள்.

Advertisement