Advertisement

“எங்க போறோம்?”

“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட…” என்று தலைசிலுப்பியவன் வண்டியை கிளப்பி, “போனதும் நீயே பாத்து தெரிஞ்சிக்க.” என்று வண்டியை கொண்டு சென்று நிறுத்தியது கடற்கரையில்.

‘உச்சி வெயிலில் கடற்கரையிலா?’ என்று இறங்காது வண்டியில் அமர்ந்திருந்தாள் கல்பனா.

அவள் இறங்காதிருக்கவும் வண்டியை உலுக்கியவன், “என்ன கனா கண்டுட்டு இருக்க கல்ப்ஸ்? நீதான ஒருநாள் நம்ம ரெண்டுபேரும் சேர்ந்து பீச் போகணும்னு சொன்ன?” என்று அவன் வினா எழுப்ப, முகம் சுருக்கிய கல்பனா, “இந்த வெயில்லையா?”

“சரி சாயங்காலம் வரலாம் இப்போ உன்னை வீட்டுல விட்டுறேன்.” என்ற சிகா வண்டியை கிளப்புவது போல் முறுக்க, பதறியபடி கீழே இறங்கினாள் கல்பனா.

“இப்போ உன்கூட இங்க சுத்திட்டு லேட்டா வீட்டுக்கு போனாலே எப்படி சமாளிப்பேனு தெரில இதுல வீட்டுக்கு போயிட்டு சாயங்காலம் வர்றதெல்லாம்…” தலையை சிலுப்பியவள் பாவம் போல் சொன்ன தொனியில் சிரித்துவிட்ட சிகா வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு கடல் மணலில் இறங்கி நடக்கத் துவங்கினான். 

அவனை பின்தொடர்ந்து அவள். இடைவெளிகள் இடைபுகுந்து கொள்ள இரு மனமும் ஒன்றாய் அப்பொழுதை ரசிக்கத்துவங்கின. நேசித்தவரின் நிழல் உரசி நடக்கும் நடை கூட சிலிர்க்கும் என்று ஒருபோதும் எண்ணியதில்லை இருவரும். ஆனால் அந்த உச்சி வெயிலிலும் பிரியமானவரை அருகே உணர தித்திப்பு நிதானமாய் உள்ளிறங்கியது. 

ஒருவரை ஒருவர் உணர்ந்தபடி நீர்பரப்பை நெருங்கி இருக்க ஆர்வத்துடன் வேக எட்டுக்கள் எடுத்து வைத்து தண்ணீரில் கால் நனைத்தான் சிகா. ஆர்ப்பரிக்கும் ஆழி தன் ஆவேசத்தை கரை தொட்டு கரைத்துக்கொள்வது போல் ஒவ்வொரு முறையும் அலைகள் வேகமாய் கரை தொட்டு வந்த வேகத்தில் பின் சென்ற வண்ணமிருக்க சில நொடிகள் அதில் லயித்தபடி கால் நனைத்து விளையாடிய சிகா கல்பனா தன்னுடன் வராதிருப்பதை தாமதமாகவே உணர்ந்தான்.

அவள் எங்கே என்று பார்வையை சுழற்ற தண்ணீர் காலை தொட்டுவிட முடியாத தூரத்தில் மணல் திண்டில் தள்ளி நின்றிருந்தாள். 

“வராம இங்கேயே நின்னுட்ட?” அவளை நெருங்கி கேள்வியாய் காண, மறுப்பாய் தலையசைத்தவள், “இல்லை எங்கேயாவது உக்காரலாமா?” 

வில்லென்ன புருவங்களை நெறித்த சிகா, “பீச் வந்துட்டு தண்ணில விளையாடாம வேடிக்கை பாக்க வந்தியா?” முறைத்தான் அவன்.

“பீச் வந்தா கண்டிப்பா தண்ணியில விளையாடணும்னு சட்டம் இருக்கா என்ன? எனக்கு அலையோட சத்தத்தை காதுல வாங்கிட்டு வீசுற காற்றை அனுபவிச்சிட்டு அமைதியா உக்காந்தாலே நிறைவா நிம்மதியா இருக்கும். வேற எங்கேயும் மனசு போகாது.” என்று கூறி அமைதியாய் கைகட்டி நின்றுவிட, ஒன்றும் சொல்ல முடியாது தலை சிலுப்பிய சிகா சுற்றும் முற்றும் பார்த்தான்.

“நீ வேணும்னா கொஞ்ச நேரம் தண்ணில நின்னுட்டு வா அத்தான். நான் வெய்ட் பண்றேன்.” என்று அவனுக்காய் சொன்னாள் கல்பனா.

அதை காதில் வாங்காதவன் போல் வா என்று சைகை காட்டி சற்று தள்ளி போடப்பட்டிருந்த ஒரு கடையின் நிழற்குடை நோக்கி முன்னேறினான். கல்பனாவும் உடன் சென்று அங்கு அமைதியாய் அமர்ந்து கொண்டாள். மதிய நேரமாதலால் வெகு சிலரே தென்பட அதை கவனித்தபடி தன் பையிலிருந்து தண்ணீர் எடுத்து பருகியவள் அவன் புறம் நீட்ட அவனும் தொண்டையை நனைத்துக்கொண்டான்.

“நானும் யோசிக்காம உன்னை கூட்டிட்டு வந்துட்டேன். வீட்டுக்கு போக லேட் ஆகுமே, கேட்டா என்ன சொல்லுவ?” என்றான் யோசனையாய்.

“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட…”

“எத்தினி நாள் கழிச்சி பாக்குறோம் இதெல்லாம் யோசிச்சிட்டு இருக்க முடியுமா? அப்படியே ஒரு குஷில உன்னை ஏத்தியாந்துட்டேன். முதலாளிகிட்ட உன்னை பத்தி சொல்லிட்டு இருந்தேனா அவர் தான் உன்னை காக்க வைக்காம நேரமே பாத்துட்டு வர சொன்னாரு.”

“அவர்கிட்ட எல்லாம் எதுக்கு சொல்ற அத்தான்?” தங்கள் விசயத்தை வேலை செய்யும் இடத்தில் எல்லாம் பரப்பி வைத்திருக்கிறானே என்ற கோபம் அவள் கேள்வியில் இருந்தது.

“பேசிட்டு இருக்கும் போது சொல்லிட்டேன். நல்ல மனுசன். சேகர் மாதிரிதான் அவரும்.” அவன் முதலாளி உடன்பிறவாத அண்ணன் என்றால் சேகர் கருவறை, உதிரம் பகிர்ந்து உடன்பிறந்த அண்ணன். 

“ம்க்கும். உனக்கு எல்லாரும் நல்ல மனுசங்கதான்…” என்று உதடு சுழித்தாள் கல்பனா.

“யாரும் கெட்டவங்க இல்லை கல்ப்ஸ். சூழ்நிலை மாறும் போது அதுக்கேத்த மாதிரி பார்வையும் மாறி இவங்க நல்லவங்க இவங்க கெட்டவங்கன்னு தரம் பிரிச்சிடுறோம் அவ்ளோதான்.” 

“…”

“இப்போகூட பாரு முதலாளி அண்ணன் அவங்களோட வண்டியை என் தேவைக்காக கொடுத்திருக்காங்க. யார் செய்வா? அதுவும் இந்த வண்டியைத்தான் அவரும் யூஸ் பண்றாரு டெலிவரிக்கும் இதுதான் போகுது. உனக்காக பின் சீட் எல்லாம் போட்டு பக்காவா எடுத்துட்டு வந்தா நீ அவரையே பேசுற.” என்று சிகா பாய்ந்துகொண்டு வர, கடுப்பில் அவன் தலைமுடியை பிய்த்து எடுத்தால் என்ன என்றிருந்தது கல்பனாவுக்கு.

“யாரையும் ஈஸியா நம்பாதேன்னு சொன்னா நான் சொல்லாத ஒன்னை சொன்னதா நினைச்சிட்டு பேசுற. முதல்ல உன்னோட அந்த முதலாளி எதுக்கு இப்போ நம்ம பேச்சுக்குள்ள வந்தாரு?” என்று அழுத்தமாய் கேட்டாள் கல்பனா. 

அவளின் கேள்விக்கு அசட்டுச் சிரிப்பை உதிர்த்தவன், “சம்பளம் கொடுக்குற முதலாளியாவே இருந்தாலும் வாய் நிறைய அண்ணன்னு கூப்புட்டு பழகிட்டேன்… நீ நம்பாதேனு சொல்லவும் சட்டுனு கோவம் வந்துருச்சு.”

“சொல்றதை ஒழுங்கா காது கொடுத்து கேட்காம அப்படி என்ன கோவம்? இப்படி கோவப்பட்டு என்ன ஆகப்போகுது?”

“…”

“கோவப்படுறதால வேண்டியப்பட்டதை இழக்கத்தான் வேணுமே தவிர எதையும் சாதிக்க முடியாது.” என்றதும் அதிலிருக்கும் உண்மை புரிந்தவனாய் அமைதியாய் தலை குனிந்தான் சிகா.

“கோவப்பட்டு ஒருத்தரை ஒருத்தர் சரியா புரிஞ்சுக்காம உறவுகளை இழந்தது நம்மளோட அப்பா அம்மாவோட போகட்டும் அத்தான். நமக்கு அந்த கோவம் வேணாம். எனக்கு எல்லாரும் ஒத்துமையா இருக்கனும் ஆனா அதுக்காக எல்லாரையும் எடுத்த உடனேவோ பார்த்த பார்வையோடவோ நம்பிட கூடாது. மனசுக்கு தோணும் இது சரிவரும் வராதுன்னு அது பேச்சை கேட்டாலே நம்மளை சரியான பாதைக்கு கூட்டிட்டு போயிடும்.”

“எப்படி? உனக்கு நான்னு தோணுன மாதிரியா?” என்று கண்களை சுருக்கி மலர்ந்து விரிந்த புன்னகையுடன் சிகா கேட்க, அப்புன்னகை அவள் இதழிலும் ஒட்டிக்கொண்டது. 

“கேடி அத்தான் நீ! எதிரில வரும் போதெல்லாம் குறுகுறுன்னு பாத்தே எனக்குள்ள நுழைஞ்சிட்ட.” என்று இன்பமாய் சலித்து சலுகையாய் மணலில் இருக்கும் அவன் கரத்திற்கு பக்கத்தில் தன் கரம் வைத்தாள்.

ஓர் நொடி நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவன் பட்டென அக்கரத்தை தனக்குள் அடக்கிக்கொண்டான். 

“ம்ச் என்ன அத்தான்…” அவள் குரலை களவாடிக்கொண்டு காற்றுதான் வெளியே வந்தது அவள் இதழ் இடுக்கினில். ஆனால் அவளின் உதட்டசைவும் அவனிலிருந்து விரல்களை பிரித்து எடுக்க முயலும் அவள் முயற்சியும் அவள் எண்ணவோட்டத்தை காட்டிக்கொடுத்துவிட, “ரெண்டு வருசமா காதலிச்சு இப்போதான் கையே புடிச்சிருக்கேன் கல்ப்ஸ். கூடாதுன்னு சொல்லாத…” என்றிட தயக்கத்துடன் அவனை ஏறிட்டு பார்த்தாள் கல்பனா. 

“இப்போதான் அப்பா தவறி எல்லாத்தையும் இழந்து சென்னைக்கு வந்தமாதிரி இருக்கு அதுக்குள்ள மூணு வருசம் ஓடிடுச்சு…” பெருமூச்சு சிகாமணியிடம். 

“இழந்தது திரும்ப கிடைக்கும் அத்தான். நீ சம்பாரிச்சிடுவ எனக்கு நம்பிக்கை இருக்கு.”

“அப்பா?” 

இழந்த பொருளை வேண்டுமென்றால் மீட்கலாம் இல்லையா இழந்ததை விட பன்மடங்கு ஈன்று பெருக்கலாம்… இழந்த உயிரை எதை கொண்டு ஈடுசெய்ய?

வலி நிறைந்த விழிகளுடன் அவள் விழிகளை அவன் சந்திக்க, பற்றி இருந்த அவன் கரத்திற்கு அழுத்தம் கொடுத்தாள் கல்பனா. இருந்தும் கசங்கி இருக்கும் அவன் முகம் காண சகிக்காது,

“அப்போ மூணு வருசமாச்சா உன் முதலாளிய உன் அண்ணனா தத்து எடுத்து?” என்று கேலி பேச, மெல்லிய முறுவல் அவனிடம்.

“ஆமா… அவரும் கடை ஆரம்பிச்சு ஒரு வருசம் தான் இருக்கும்… இப்போ இருக்குற கடையே தான் ஆனா இவ்ளோ சரக்கெல்லாம் அப்போ இல்லை. அவர் ஒரு ஆள் தான் தனியா எல்லாத்தையும் பாத்துட்டு இருந்தாரு. எனக்கும் எங்கேயும் சரியா வேலை கிடைக்கல சேகரும் தினம் ஒரு வேலைனு சுத்திட்டு இருந்தான். அப்போதான் அண்ணன் கடை முன்னாடி ஒருநாள் மயங்கி விழுந்துட்டேன். ஜுஸ் வாங்கி கொடுத்து என்ன ஏதுன்னு விசாரிச்சு எனக்கு ஒரு வேலை கிடைக்க ஏற்பாடு பண்றேன்னு சொன்னாரு. நாந்தான் வம்படியா அவர் கடையில சேர்ந்துக்கிட்டேன். இப்போ கடை ஓரளவு வளர்ந்துடுச்சு என் சம்பளமும் கூட்டி கொடுக்குறாரு வருசா வருசம்.” அண்ணனாகிவிட்ட முதலாளியை நினைத்து பெருமிதம் கொண்டான் சிகா.

பழகிய காலம் தொட்டு அவ்வப்போது அவர்கள் பேச்சினில் இடைபுகுந்து கொள்ளும் அவனின் முதலாளியை இன்றுவரை பெரிதாய் எடுத்துக்கொண்டதில்லை கல்பனா. ஆனால் சிகாவின் மனதை திசை திருப்ப அவரின் பேச்சே கைகொடுத்தது.   

“அவரை பத்தி பேசுனா நேரம் போறதே தெரியாது அத்தான் உனக்கு… அவரை பத்தி இவ்ளோ சொல்றியே என்னை பத்தி ஒரு அஞ்சு நிமிசம் பேசு பாப்போம்… என்னை பத்தி என்ன தெரிஞ்சு வச்சிருக்கேன்னு நானும் பாக்குறேன்.” கதை கேட்கும் பாவனையில் அவன் புறம் திரும்பி அமர்ந்துகொள்ள ரசனையுடன் அவள் முகத்தை கண்களால் அளந்தவன், 

“வில் மாதிரி வளைஞ்சிருக்கிற இந்த புருவம் நீ பேசுற பேச்சுக்கு ஏத்த மாதிரி டேன்ஸ் ஆடும் கல்ப்ஸ்…”

“ஓ… இந்த ரெண்டு வருசத்துல சேந்தாப்புல நிமிசம் தாண்டி ஒரு நாலஞ்சு தடவை பாத்திருப்போமா அதுல இந்த டேன்ஸ் எல்லாம் கவனிச்சியா அத்தான்?” என்று வியந்தவள் உள்ளம் அடுத்து என்ன சொல்லப் போகிறான் என்று ஆர்வமாய் பரபரத்தது.

“புருவத்துக்கு கீழ இந்த பக்கமும் அந்த பக்கமும் உருண்டு உருண்டு விளையாடுற கண்ணு காந்தம் மாதிரி என்னை இழுக்கும் கல்ப்ஸ்…”

“அத்தான்…” அத்தனை குழைவாய் அவளுக்கு பேசத்தெரியும் என்பதே இருவருக்கும் அப்போதுதான் உரைத்தது. உரைத்த கணம் உணர்ச்சியின் கனம் தாங்காது இருவரும் நெருங்கிவிட, நூலளவே இடைவெளி இருக்கும் தருணத்தில் கரடியென ஒலித்த அவள் அலைபேசி இருவரையும் நிகழ்காலத்துக்கு கொண்டுவர, இருவரின் விழியும் விரிந்து பின் வெட்கம் கொண்டு வேறு பக்கம் பார்வையை பதித்துக்கொண்டது.

ஓயாமல் அழைத்த அலைபேசி எடுத்து அழைப்பை பார்த்தவள் சிகாவிடம் அதை காட்டி, “சொல்லுமா…” என்றபடி காதில் வைத்தாள்.

“இந்நேரம் வீட்டுக்கு வந்துடுவியே? என்னாச்சு கல்பனா? பஸ் லேட்டா?”

அன்னையின் கேள்வியில் ஒரு நொடி தயங்கியவள் பின் சரளமாய், “அடுத்த பரீட்சைக்கு தேவையான நோட்ஸ் வாங்கிட்டு வர லேட்டாகிட்டு எப்போதும் வர பஸ் போயிடுச்சுமா… அடுத்த பஸ்ல வந்துறேன்…”

“வேற பஸ் எல்லாம் வேணாம். பழக்கம் இல்லாத பஸ்ல எல்லாம் வராத. நான் வேந்தன வர சொல்றேன்…” என்று மறுத்தார் அவள் அன்னை சரளா.

“அண்ணனுக்கு இப்போ வேலை இருக்கும்மா தொந்தரவு பண்ணாத நான் பத்திரமா வந்துறேன்.”

“ஊர் உலகத்துல என்னென்னமோ நடக்குது நீ தனியா வர்றேங்குற… நீ வர்ற வரைக்கும் என்னால வயித்துல நெருப்பு கட்டிட்டு இருக்க முடியாது… இன்னும் ஒரு பரீட்சை அது முடிஞ்சதும்தான் எனக்கு நிம்மதி. நீ காலேஜ் வாசல்லேயே இரு நான் அப்பாவை வர சொல்றேன்…” என்று பிடிவாதமாய் இருந்தார் சரளா.

அவள் தந்தை கபிலன் வேலை செய்யுமிடம் கல்லூரியில் இருந்து இருபது நிமிட தொலைவுதான். இவர்கள் கடற்கரையில் இருந்து இனி கிளம்பி கல்லூரி செல்ல எப்படியும் குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும். அதற்குள் அவர் கல்லூரிக்கு வந்துவிட்டால் மாட்டிக்கொள்வோம் என்பது உரைக்க, வேறு வழியே இன்றி, “சிகா அத்தானை இங்க காலேஜ் பக்கத்துல ஒரு கடையில பாத்தேன் அவங்களோட வந்துறவா?” என்று தயங்கிக் கேட்க, ஆடி தீர்த்துவிட்டார் சரளா.

Advertisement