Advertisement

*1*

வாகன நெரிசலை தவிர்க்கவென அத்தெருவுக்கள் புகும் வாகனங்களின் எண்ணிக்கை அசராது நூறைத் தொடுமென்றால் அத்தெரு முனை வரை நீண்டிருக்கும் கடைகளில் உடமைகள் வாங்க வந்தவர்களின் வாகனங்கள் பல சாலையின் இருபக்கமும் ஆங்காங்கே ஒழுங்கற்று நின்று கொண்டிருந்தது. பெரும்பான்மையானோர் தங்களுக்கு வசதிபடும் வகையில் வண்டிகளை கடைகளின் வாயிலை அடைத்தபடி வைத்திருக்க அதுவே பலருக்கு சிரமம் கொடுத்தது. ஆனால் கூட்டமும் நெரிசலும் ஒரே இடத்தில் தேங்காமல் வருவதும் போவதுமாக இருக்க,

“அண்ணன் வண்டில இந்த மூட்டையை வச்சிடு சிகா…” என்று வாடிக்கையாளர் ஒருவரை காண்பித்து அவர் வாங்கியிருந்த அரிசி மூட்டையையும் அவன் முதலாளி காண்பிக்க, சரியென்று தலையாட்டிய சிகாமணி அந்த பத்து கிலோ இட்லி அரிசியையும் பத்து கிலோ பொன்னி அரிசி மூட்டையையும் தூக்கிச் சென்று அவர் கைகாட்டிய ஆக்டிவாவில் வைத்தான்.

சிகாமணிக்கு நன்றி கூறியவர் தன் வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றுவிட விறுவிறுவென உள்ளே நுழைந்த சிகாமணி கல்லாவில் அமர்ந்து ஏதோ கணக்கு பார்த்துக்கொண்டிருந்த முதலாளி முன் நின்றான்.

“நம்ம கடைக்கு முன்னாடி நோ பார்க்கிங் போர்டு வச்சிடலாமா ண்ணா? பக்கத்து கடை எதுத்த கடைக்கு வரவங்க வண்டியை இங்க நிறுத்திட்டு போயிடுறாங்க  நம்ம கஸ்டமருக்கு தான் கஷ்டமா இருக்கு.” என்று கோரிக்கை வைக்க,

“அதெல்லாம் நம்ம வைக்க முடியாது சிகா. போலீஸ் வைக்கணும். ஆனா அப்படியே நாம போர்ட் வச்சாலும் நம்மாளுங்க கரக்ட்டா அந்த போர்ட் மேலேயே வண்டியை சாச்சு வைச்சிட்டு போயிடுவாங்க. ஒன்னும் பண்ண முடியாது. ப்லோட்டிங் கூட்டம் தான யாரும் ஒரு மணி நேரம் ரெண்டு மணி நேரம்னு நம்ம கடை வாசல்ல வண்டி நிறுத்திட்டு போறதில்லை. வந்த வேலை முடிஞ்சதும் எடுத்துட்டு கிளம்பிடுறாங்க. விடு பாத்துக்கலாம்.” என்பதே முதலாளியின் பதிலாய் வந்தது. அதில் பெரிதாய் கவலையோ யோசனையோ எதுவும் இல்லை.

“ஆனா ண்ணா நம்ம கடைலேந்து அஞ்சாவது கடை அதான் அந்த வாசு புதுசா அரசி, செக்கு எண்ணெய் மெஷின் எல்லாம் போட்டு துறந்திருக்கானே… அங்க வண்டி நிறுத்த இடமெல்லாம் விட்டு கட்டி இருக்கான். நம்ம கஸ்டமர் எல்லாம் அங்க போறாங்க.” என்றான் கவலையாய்.

“நாம கடை நடத்துறது நம்ம பொருளோட தரத்தை வச்சி. நம்மளோட தரம் புடிச்சிருந்தா நம்ம கடை எங்க எப்படி இருந்தாலும் தேடி வந்து வாங்குவாங்க.” என்றுவிட சிகா வாய் தன்னால் மூடிக்கொண்டது.

மதிய நேர உணவு வேளை வரவும் சிகாவின் கண்கள் தானாய் முதலாளியிடம் சென்றது. சோறு, குழம்பு, கூட்டு, பொரியல் என்று நீண்டிருக்கும் மதிய உணவுப் பட்டியல் பற்றியெல்லாம் அவருக்கு தெரியுமா தெரியாதா என்று யோசனை என்றும் போல் இன்றும் வந்தது. 

காய்கறி கடைகளுக்கு இணையாக காலை ஏழு மணிக்கு முன்னமே அவன் முதலாளி கடை திறந்து அமர்ந்துவிட சிகாவின் வேலை நேரம் காலை ஒன்பதிலிருந்து துவங்கும். காலை உணவு வாங்கி வரவா என்று கேட்டால் வேலையைப் பார் என்ற பதிலே வரும். மதியம் டீ, இரண்டு பன் அதோடு முடிந்துவிடும் அவன் முதலாளியின் உணவு. முன்னிரவு ஏழு மணிக்கெல்லாம் சிகா கிளம்பிவிடுவான் பின் கடை அடைப்பது இரவு பத்து மணிக்கு. இரவும் உண்பாரா என்ற சந்தேகம் அவனுக்கு எப்போதும் உண்டு. துவக்கத்தில் கண்டுகொள்ளாமல் இருந்தவனுக்கு தற்போது மெலிந்துகொண்டே செல்லும் முதலாளியைக் கண்டு சிறு வருத்தம். உடனிருந்து கவனித்துக்கொள்ளவோ அதட்டி உண்ண வைக்கவோ கேட்பாரின்றி இருக்கிறாரே என்ற கவலையில் அவரை நெருங்கியவன்,

“ண்ணா நம்ம மணி கடையில பிரைட் ரைஸ் சூப்பரா இருக்கும். வாங்கிட்டு வரேன் இன்னைக்காவது ஒழுங்கா சாப்புடுண்ணா. ஏன் உடம்பை கெடுத்துகிற?”

“எனக்கு இதுவே போதும்டா. பசிக்கல. நீ இன்னைக்கு நேரமே கிளம்பலாமான்னு கேட்டதான? போய்ட்டு சாயங்காலமா வந்துடு. நைட் லோட் வருது.” இதற்கு மேல் நீ என்னை நெருங்க அனுமதி இல்லை என்று நாசூக்காய் கத்தரித்தது போலிருந்தது பதில்.

“நான் சாப்பிடாம இருந்தா அப்படியே விடுவியா ண்ணா? அதட்டி சாப்பிட அனுப்ப மாட்ட… நான் சொன்னா மட்டும் பேச்சை மாத்துற ண்ணா…” என்று சிகா அவனின் அலட்சியத்தை பொருட்படுத்தாது முறையிட சிறிய புருவச் சுழிப்பு மட்டுமே பதிலாய். 

“ண்ணா…” அதிருப்தியாய் சிகா நிற்க,

“கல்பனாவை பாக்க போகணும்தான? நேரமாகிடுச்சு வண்டி எடுத்துட்டு கிளம்பு. அந்த புள்ளையை காக்க வைக்காத.” அர்த்தம் பொதிந்து அழுந்த வந்த சொற்களுக்கு மதிப்பு கொடுத்து அங்கிருந்த டீவிஎஸ் எக்ஸல் வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றான் சிகா. 

தேகத்தை ஊசியென துளைக்கும் உச்சி வெயிலின் தாக்கமெல்லாம் கல்பனாவை காணும் உற்சாகம் மழுங்கடித்துவிட, பாடலை உதட்டுக்குள் முணுமுணுத்தபடி சீரான வேகத்தில் வண்டியை வேளச்சேரியில் உள்ள கலை அறிவியல் கல்லூரிக்கு இயக்கினான். இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடப்பதால் அரைநாள் மட்டுமே கல்லூரி. கல்லூரி விடுவதற்கும் இவன் அங்கு சென்று சேர்வதற்கும் நேரம் சரியாய் இருந்தது. 

மாணவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியேறிக் கொண்டிருக்க, கல்லூரி வாயிலின் எதிரே இருந்த பேருந்து நிறுத்தத்தில் வண்டியை நிறுத்தி அதில் சாய்ந்துபடி நின்றுகொண்டான் சிகாமணி. கண்கள் அவனது கவியை தேடி அலைபாய தோழியிடம் பேசியபடி வந்த கல்பனா இவனைக் கண்டதும் அதிர்ந்து பின் மலர்ந்து விரிந்த வதனத்துடன் வேகமாய் அவனை நெருங்கினாள்.

“அத்தான்.” ஆசையாய் ஒலித்த குரலில் சட்டையை இழுத்துவிட்டு நேராக நின்றவன் கல்பனாவின் தோளில் இருந்த பையை இயல்பாய் வாங்கி வண்டியின் முன் கொக்கியில் மாட்டிக்கொண்டான்.

அவன் செயலை கவனித்தவள் விழியில் ஆச்சர்யம் தேக்கி, “யாரோட வண்டி அத்தான்?” 

“முதலாளி வண்டி கல்ப்ஸ்.”

“வண்டி கொடுக்கிற அளவுக்கு அவர் நல்ல முதலாளியா இல்லை சாக்கு போக்கு சொல்லி நைசா தள்ளிட்டு வந்துட்டியா அத்தான்?” அவள் புருவம் உயர்த்தி கேட்க, 

“எல்லாத்தையும் இப்படி ரோட்டுல நின்னு கேட்கணுமா? வர மாட்டியா?” என்ற சலிப்பு சிகாவிடம். 

“அம்மாக்கு தெரிஞ்சா தோலை உரிச்சிடும்.” என்ற கல்பனா விழிகளை உருட்டி மிரண்டு விழித்தாள்.

“ஏட்டி நான் என்ன தினமுமா வெளியே கூப்பிடுறேன்? இன்னும் ஒரு பரீட்சை தான் இருக்கு அப்புறம் நினைச்சாலும் இப்போ மாதிரி அடிக்கடி வீட்டை விட்டு தேவையில்லாம வெளிய வர முடியாது. அவ்ளோ ஈசியா பாத்துக்க முடியாது இப்படி தனியா போறதெல்லாம் கற்பனைல கூட நினைச்சி பாக்க முடியாது.” என்று வரிசையாய் முடியாதுகளை அடுக்கினான் சிகாமணி. 

இது இறுதி ஆண்டு என்பதால் இதற்கு மேல் அவளது வாழ்க்கை எந்த திசையில் செல்லும் என்றே தெரியாத போது கிடைத்த இந்த தருணத்தை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை அவன். அவனது எண்ணம் அவளுக்குள்ளும் இருந்திருக்கும் போல யோசனையுடன் அவனை பார்த்தபடி நின்றாள்.

“விரும்புறோம்னு தான் பேரு இதுவரைக்கும் எங்கேயாவது ஊர் சுத்தி இருப்போமா இல்லை தனியா இப்படி சந்திச்சு பேசிதான் இருப்போமா? யாருக்கும் தெரியாம எப்போவாவது போன்ல பேசுறதோட சரி.” என்று அவன் ராகமிழுக்க கல்பனாவுக்கும் அவனுடன் செல்ல ஆசை முளைத்தது. ஆனாலும் வீட்டிற்கு தெரிந்துவிட்டால் என்ற பயமும் எழாமல் இல்லை.

“பயப்படாம வா கல்ப்ஸ். இதுவரைக்கும் எங்கேயும் போனதில்லை இனிமே எப்படி இருக்கும்னு சொல்ல முடியாது…” எனும் போதே,

“இனிமே எப்படி இருக்கும்னா? நான் M.Sc படிக்க போறேன் அதுவும் இதே காலேஜுல.” குறுக்கிட்டு சிலுப்பினாள் கல்பனா.

“ம்க்கும்… உன் வூட்டுல அப்படியே படிக்க வச்சிட்டாலும். இதுக்கு மேல படிக்கலாம்னுலாம் கனவு காணாத கல்ப்ஸ்.” என்றபடி சிகா வண்டியில் அமர்ந்து அவளை பார்க்க, கண்களை சுருக்கினாள் கல்பனா.

“எல்லாத்தையும் இங்கேயே நின்னு பேசி முடிச்சிட்டா அப்புறம் இது எதுக்கு?” என்று வண்டியை சுட்டிக்காட்டி உதடு சுழித்தான் சிகா. 

கல்பனாவுக்கு ஒரு புறம் பயமென்றாலும் மறுபுறமோ இது போலொரு வாய்ப்பு மீண்டும் எப்போது வாய்க்குமோ என்று மனது இருபுறமும் ஊசலாடியபடி இருக்க சிகாவின் பொறுமை காற்றில் கரைந்தது. 

“இப்படி என்கூட ஒரு மணி நேரம் தனியா வரவே யோசிக்குறவ என்னை விரும்பியிருக்கவே கூடாது.” என்று கடிந்துகொண்டவன் அவள் முகம் பாராது வண்டியில் மாட்டியிருந்த பையை கழட்டி அவளிடம் நீட்ட, அதை வாங்காது சுற்றி முற்றி பார்த்தவள் துப்பட்டாவை தலை சுற்றி எடுத்து வந்து கண்கள் மட்டும் தெரியும்படி முகத்தை மூடி கட்டிவிட்டு சிகா பின் ஏறிக்கொண்டாள்.

அவள் தேகம் உரசாவிடினும் அவன் பின்னே அவள் அமர்ந்திருப்பதே அவனுள் ராசாயன மாற்றம் நிகழ்த்த, எகிறிய இதயதுடிப்பும் புல்லரித்த தேகமும் ஒருவித களிப்பை அவனுள் உண்டுபண்ண மிதமான வேகத்தில் வண்டியை செலுத்தினான் சிகா. வழி நெடுகும் வேடிக்கை பார்த்தபடி வந்த கல்பனா பிடிமானத்திற்கு வண்டியின் பின் கம்பியை பிடித்துக்கொண்டு வர, வேகத்தடையில் ஏறி இறங்கிய வண்டி குலுங்கி அவனை உரசும்படி அவளை முன்னே தள்ளியது.

நாக்கை கடித்துக்கொண்டவள் அமர்ந்த வாக்கிலேயே சட்டென பின்னே நகர்ந்துவிட அவளின் அசைவில் ஒருநொடி நிலைத்தடுமாறி அவன் வண்டி வளைந்து நெளிய அவன் தோளை அழுத்திப் பிடித்தவள், “வண்டியை நிறுத்து அத்தான். பயமா இருக்கு.” என்று கத்தியே விட்டாள்.

“சாரி சாரி கல்ப்ஸ்…” உடனே மன்னிப்பு வேண்டியபடி வண்டியை சற்று தள்ளி ஓரமாய் நிறுத்தியவன் அவள் புறம் திரும்பி, “வண்டி ஓட்டிட்டு இருக்கும்போது இப்படி ஆட்டுனா பேலென்ஸ் போகாதா… இதுவரைக்கும் வண்டியிலேயே வராத மாதிரி பண்ணாத கல்ப்ஸ்.” என்று கடிய,

“தினம் வண்டியிலதான் வந்துட்டு போறேன் பாரு.” கல்பனாவும் சிடுசிடுத்தாள்.

காரணம் அவளின் பயணங்கள் யாவும் பேருந்துகளிலோ ஷேர் ஆட்டோவிலோ முடிந்துவிடும். வண்டி வைத்துக்கொள்ளும் வசதி இல்லை என்று கிடையாது அதை உபயோகப்படுத்தும் சுதந்திரம் அவளுக்கு கொடுக்கப்படவில்லை. இதேபோலொரு டிவிஸ் எக்சல் வண்டி அவள் அப்பாவும் அண்ணனும் மாறி மாறி உபயோகப்படுத்துவர். ஆனால் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலே அவள் அதில் ஏறி பயணம் செய்திருக்கிறாள்.

“அதுவும் சரிதான் உன்னை தனியா அனுப்புறது இந்த காலேஜுக்கு மட்டுந்தான் அதுவும் முடியப்போகுது.” என்று அவள் எண்ணத்தில் இருந்தவற்றை பலப்படுத்தும் விதமாய் சோர்ந்து பேசினான் சிகா. அந்த சோர்வு அவளை தொற்றிக்கொண்டாலும்,

“நான் பீ.ஜி இங்கதான் படிக்கப்போறேனு சொன்னேனே அத்தான்.” என்று நம்பிக்கையுடன் பேசினாள் கல்பனா. 

எதற்கும் நேரடி எதிர்ப்பு இருக்காது அவள் வீட்டில். அனைத்தும் இலை மறை காய் போல வேறொரு விஷயம் கொண்டு முன்னது மறுக்கப்பட்டுவிடும். மறக்க வைக்கப்பட்டுவிடும். ஆனாலும் படிப்பு சம்மந்தமாக இருப்பதால் எப்படியும் வீட்டில் தன் விருப்பத்துக்கு சம்மதித்து விடுவர் என்ற எண்ணம் அவளுக்கு. 

Advertisement