Advertisement

“டாக்டரா…. அது யாருடி?” என கல்பனா கேட்க,
“அது  ஒரு தனி சாப்டர்.  அதை இப்போ சொல்ல நேரம் இல்லை.  நான் இப்போ  ரூம்க்கு  போயிட்டு  இருக்கேன்.  நீங்க  எங்கேடி  இருக்கீங்க?” எனக் கேட்க
“நாங்க ரூம்ல தான் இருக்கோம்.  வா” என நிர்மலா சொல்ல 
“ம்ம்ம்…. வந்துட்டு தான்  இருக்கேன். இப்போ கூட  அண்ணன்களை  என் கண் பார்வையிலே  இருக்கணும்னு சொல்லிட்டு தாண்டி வந்திருக்கேன்” னு  சொல்லிக் கொண்டே  அறைக்குள்  நுழைந்தாள்  ஜனனி.
“ஆமா!….. உன்  நொன்னன்கள்  சாரி உன் அண்ணன்கள்  சின்ன  குழந்தைகள் பாரு.  உன்  கண் பார்வையிலே  இருக்குறதுக்கு. போடி …. ஓவரா  பில்ட் அப்  பண்ணிட்டு இருக்க”  என்று  கிண்டலாக  முடித்தாள் கல்பனா.
         கல்பனாவின்  கிண்டலை பொருட்படுத்தாமல்  சூட்கேஸை எடுத்து  தன் பொருட்களால் நிரப்பத் தொடங்கினாள்  ஜனனி,
“கல்பனா.!”  கத்தியது நிர்மலா  தான்….
“கொஞ்ச நேரம்  வாயை மூடிட்டு இரு”  என்று  கல்பனாவிடம்  சொல்லி விட்டு , 
“உன்  அண்ணன்களிடம் என்ன  சொல்லிட்டு  வந்து இருக்க? ஏன் எல்லாத்தையும்  பேக் பண்ணிட்டு இருக்க?” என்று  ஜனனியிடம்  நிர்மலா  கேட்க…..
  “செமஸ்டர்க்கு  இன்னும் பத்து நாளைக்கு அப்புறம்    ஸ்டடி ஹாலிடேய்ஸ்   விட்டுடுவாங்க. சோ…. நான்  இந்த டென் டெய்ஸ் மெடிக்கல் லீவ்  போட்டு   ஊருக்கு  போக போறேன்.  அப்புறம் எக்ஸாம் எழுத மட்டும் தான் வருவேன்” என்று  ஜனனியின் வாய் பேசிக் கொண்டு இருந்தாலும்   அவளது  கைகளோ  தன் பெட்டியை அடுக்கும் பணியை செவ்வனே  செய்து கொண்டிருந்தன.
“காயம்  ரொம்ப வலிக்குதா ஜனனி?  அதான் ஊருக்கு போக போறியா?” என்று  தன் தோழியை  பிரிய போகும் மனநிலையுடன்  நிர்மலா  கேட்க,
“அப்படி ஒண்ணும் பெருசா வலிக்கலை நிம்மி.  இப்போ  எனக்கு உள்ள கவலை எல்லாம்  என் அண்ணன்கள் யாரையும் அடிச்சிடக் கூடாது. அதான் என் கூடவே அவுங்களை கூட்டிட்டு போக போறேன்”
“உன் நொன்னன்கள் உன் கூடவே வந்தாலும்  ஆள் வச்சு அடிக்க மாட்டாங்கனு என்ன நிச்சயம்?” கேட்டது  கல்பனாவே தான்.
“காசு  குடுத்து  நூறு  பேரை வைச்சு அடிச்சாலும்  அவுங்க கையால அடிச்ச திருப்தி அவுங்களுக்கு  கிடைக்கவே கிடைக்காது.  சோ… இப்போதைக்கு சிவாவின்  நேரமும், டாக்டரோட நேரமும் நல்லா இருக்கு”  என்றாள்  ஜனனி 
“எனக்கு ஒரு டவுட்…. நீ உன் அண்ணன்கள் கூட  போயிட்டு இருக்கும்போது…………”  டவுட் கேட்ட கல்பனாவை,  இடைமறித்த   நிர்மலா,
“அவளுடைய  அண்ணன்கள்  பற்றி  உனக்கு தான்  நிறைய டவுட் வருது போல” என்றாள் நக்கலாக.
“நீ  என்ன கேட்க போறனு எனக்கு தெரியுது கல்பனா.  என் முன்னாடி வைச்சு  என் அண்ணன்கள்  யாரையும் அடிக்க மாட்டாங்க. ஆனா  நான் கூட இல்லாதப்போ அவுங்க கையில் கிடைச்சா அது அந்த ரெண்டு பேரோட கெட்ட நேரம்..” ஜனனியின் கண்கள் லேசாக கலங்கியது.
“சின்ன வயசுல இருந்து எவ்ளோ பாவ சுமைகள் என் மேல. அறியா பருவத்துல இருந்து சுமக்க ஆரம்பிச்சுட்டேன்டி. இன்னும் எவ்ளோ நாளோ  தெரியல”  அழ ஆரம்பித்த ஜனனியை  நிர்மலாவும்  கல்பனாவும் ஆதரவாக  கையைப் பற்றிக்  கொண்டனர்.
“சரிடி…. என்னைத் தேடுவாங்க.   போயிட்டு வரேன்” என்று  கிளம்பியவளை ,
“ஆமாண்டி சீக்கிரம் கிளம்பு.  இல்லைனா  உன்னைக் காணாமல்  ரெண்டு பாப்பாக்கள் அழ ஆரம்பிச்சுடும்” என்ற கல்பனாவை,
“நீ அடங்கவே மாட்டியாடி?” என்றாள் நிர்மலா.
“ஹுக்கும்…. நான் எதுக்கு அடங்கிப் போகணும்?” என்று சிலிர்த்துக் கொண்டு நின்றவளை  சிரிப்புடன் நோக்கினாள் ஜனனி.
“என்னால் உங்க கூட ரொம்ப நேரம் பேச முடியாதுடி.  நான்  ஊருக்குப் போன பின்னாடி கால் பண்ணுறேன் … நீங்க பண்ண வேண்டாம்.” என்று சொல்லிக்கொண்டே  அவர்களது அறையின்  ஜன்னல் வழியே பார்த்து கைகாட்டி  சிரித்தவள்  கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்னு சைகையின் மூலம் பேசிக் கொண்டிருந்தாள்.
           ஜனனி     யார் கூட இப்படி  பேசுறானு  நிர்மலாவும், கல்பனாவும் எட்டிப் பார்க்க அங்கே நின்று கொண்டு இருந்தது அவளது அண்ணன்கள். அதுவரை  சிரித்துக்  கொண்டு இருந்தவர்கள் நிர்மலா, கல்பனாவின்  முகத்தைக் கண்டதும் முறைக்க ஆரம்பித்து விட்டனர்.  
          அது  விடுதியின் ஆபீஸ் ரூம் வாயில்.  இவர்களது  அறையின் ஜன்னலில் இருந்து பார்த்தால் தெரியும். 
      ஆபீஸ் ரூம் முன்னாடி  ஒரு சிறிய பூங்கா போல அமைத்து இருப்பார்கள்.  எப்பவுமே  அந்த பூங்காவில் யாரும் அமர மாட்டார்கள்.  காரணம்….. வெயிலின்  கொடுமை தாங்காமல்   பூங்காவின்   நிழலில்  ஒதுங்கினால்  ஆபீஸ்  ரூம்க்குள் இருந்து  வார்டன்  மேடம் வெளியே  வந்து  விடுதியின்  நிறை, குறைகளை  கேட்கிறேன்  என்று  கடலை  போட  ஆரம்பித்து விடுவார்.  அவர்  போடும்  கடலைக்கு  வெய்யிலே  மேல்  என்று  அந்த  பூங்காவினுள்  யாரும்  நுழைய  மாட்டார்கள் .   அப்படி  பட்ட அந்த பூங்கா  இன்று  அழகான பாவைகளால்  நிரம்பியிருக்கின்றது  ஜனனியின் அண்ணன்களை  பார்ப்பதற்காக!. 
“அவுங்களை  ஏன்டி  அங்கே உட்கார வைச்சுட்டு  வந்து இருக்க?” கேட்ட  கல்பனாவை  முறைத்தாள்  நிர்மலா.
“அதுல உனக்கு ரொம்ப  வருத்தமோ?” கேட்டாள் நிர்மலா.
“இங்கே    ஆபீஸ்  முன்னாடி  யாரையும்  வெயிட் பண்ண   விட மாட்டாங்களே.  கார்டியன்  சைன்  பண்ணிட்டு ,  செகண்ட்  கேட் கிட்ட இருக்குற  விசிட்டர்ஸ்  ஹால்ல தான  வெயிட்  பண்ணனும். அதான்  கேட்டேன்.  இதுல எனக்கு என்னடி  வருத்தம்?”  என்று தன்  முகவாயை  தோள்பட்டையில்  இடித்துக்  கொண்டாள்.
“நான்  தான்  சொன்னேன்ல   என்  அண்ணன்களை  என்  கண் பார்வையிலே  வைச்சு இருக்கேன்னு.  அதான் இது. கார்டியன்  சைன்  போட  உள்ளே  வந்த  அண்ணன்களை  இங்கேயே  இருங்கனு சொல்லிட்டு  வந்து இருக்கேன்.  இனி  நான்  போகும் வரை  கடவுளே  வந்து கூப்பிட்டாலும்  அந்த  இடத்தை  விட்டு நகர மாட்டாங்க” என்றாள்  ஜனனி.
“பாசமலர், கிழக்கு சீமையிலே  பட வரிசையில  உங்க படத்தையும் சேர்த்து  ஓட்டிடுவோம்டி….”  மேற்கொண்டு  பேச போன கல்பனாவை   நிர்மலாவின்  கோபப் பார்வை  அடக்கியது.
“எல்லாம்  சரிடி…. என்ன  சொல்லி  உன்  அண்ணன்களை  இங்கேயே  நிக்க  வைச்சிருக்க?”  நிர்மலா  கேட்க…
“சாரிடி… நீ  சொன்னதை  வைச்சு  தான்  அவுங்களை  இவ்ளோ  நேரம்  இழுத்துப்  பிடிச்சுட்டு  இருக்கேன்”  என்ற  ஜனனிக்கு ,
“நிம்மி  தான  உன்னை  அப்படி  பேசினா…. என்னை  ஏன்டி  உன்  அண்ணன்கள்  முறைக்குறாங்க?” என கேட்டாள் கல்பனா.
“உன்னையும்  சேர்த்து   தான்டி கோர்த்து விட்டுருக்கேன்.  சாரிடி!”
“ராட்சசி…. என்னடி  சொல்லி வைச்சு இருக்க?….. சொல்லித்தொலை” கடுப்பானாள்  கல்பனா.
“அண்ணா…. அண்ணா … உங்க  முன்னாடியே  என்னை  நிம்மி அப்படி பேசுறா. அந்த  கல்பனா  உங்களையே  முறைக்குறா.  இப்போ  நான்  தனியா  என்  ரூம்க்கு  லக்கேஜ்  எடுக்கப்  போனா , என்னை  ரெண்டு  பேரும்  சேர்ந்து  அடிச்சுட்டா நான்  என்ன   பண்ணுவேன்னு  அழுது  சீன்  போட்டு,  என்  கண்  முன்னாடியே  இருங்க  நான்  கூப்பிட்டவுடன்  ஓடியே  வந்துடுங்கன்னு  சொல்லிட்டு  வந்து இருக்கேன்”  என்று ஜனனி  சொன்னதும் ,  
நிர்மலாவும் ,  கல்பனாவும்  ஜனனியை  முறைத்துக்  கொண்டு இருந்தனர்.
“சரியான  லூசுங்கடி  உன்  நொன்ணன்கள்…..  இதுக்கு எல்லாம்  முறைக்கனும்னா”  என்ற  கல்பனாவை ,சிரிப்புடன்  நோக்கி விட்டு 
“என்  அண்ணன்களுக்கு  அவ்ளோ பாசம்  என் மேல” என்றாள்  ஜனனி.
அப்போது  அவர்களது அறையின்  கதவு  தட்டப்பட…. நிர்மலா   போய்   திறக்க…. வெளியே  நின்று  கொண்டு இருந்தது  வார்டன். 
“ஜனனி ….. இங்கே  என்ன நடக்குது? உன் அண்ணன்கள்  ரெண்டு பேரையும்  விசிட்டர்ஸ்  ஹால்ல  வெயிட் பண்ண சொன்னா   அங்க  போக மாட்றாங்க.  இங்கேயே  நின்னுட்டு  இருக்காங்க.  பார்த்தா  படிச்சவுங்க  மாதிரி இருக்காங்க. ஆனா  டிசிப்ளின்  இல்லை  அவுங்க கிட்ட. இதுவரை  பொண்ணுங்களையே  பார்க்காதது  மாதிரி  பார்த்துட்டு  இருக்காங்க.  முதல்ல  நீ  கிளம்பு”.. என்று  கோபத்தின்  உச்சியில்  கத்திவிட்டு  சென்றார்.
“ஜனனி….. ப்ளீஸ்  எனக்கு  ஒரு ஹெல்ப்  பண்ணிட்டு  ஊருக்குப் போ”  என்றாள்  கல்பனா.
“சொல்லுடி…. உனக்கு  செய்யாமல்  நான்  வேறு  யாருக்கு செய்யப் போறேன்”  என்றாள் ஜனனி
“நீ  ஊருக்கு  கிளம்பும் முன்னாடி   உன் நொன்ணன்களை  விட்டு  இந்த வார்டனை  முறைக்க சொல்லுடி.  இது  இம்சை  தாங்க  முடியலைடி”  என்ற  கல்பனாவை  முறைத்தாள்  ஜனனி.
“ஓ!… நீயே  முறைக்குறேன்னு சொல்லுறியா?”  என்ற கல்பனாவின்  முதுகில்  ஓங்கி அடி ஒன்றை வைத்தது நம்ம நிர்மலாவே தான்.
        அண்ணன்கள்  இருவரும்    லக்கேஜை  தூக்கி கொள்ள  அவர்களை பின்தொடர்ந்தாள் ஜனனி.
      “எழுதுகோலும் மையும் போதும் என்றிருந்தேன்…
       எண்ணத்தை  வடிக்க!!
       எந்த  சொல்லிலும் அடங்கவில்லை…
       நான்  உன்னை பற்றி உரைக்க!!”

Advertisement