Advertisement

         மைலாஞ்சியே நாணமோ
அத்தியாயம்-2
        சிவாவிடம்  கோவமாக ஜனனி பேசினாலும்  இன்னும் சிறிது  நேரத்தில் அவனுக்கு நேரப் போகும் விபரீதத்தை தடுக்கவே  எண்ணினாள்.  அவளது  அண்ணன்கள்  இருவருக்கும்  இந்த நொடி வரை   இங்கே  நடந்தது அனைத்தும்  இந்நேரம்  தெரிந்திருக்கும். 
      
           இப்போது  போன்  போட்டாலும் எடுக்க மாட்டார்கள்.  இந்த விசயத்தில் மட்டும் அவளது பேச்சை யாரும் கேட்க மாட்டார்கள்.  என்ன செய்வது?… என்ன செய்து அவர்களை தடுத்து  நிறுத்தலாம்?  என்று தனக்குள்  புலம்பிக்கொண்டே  நடந்து கொண்டிருந்தாள்.  
        அப்போது தனக்கு எதிர் திசையில் … ஒரு மரத்தின் மீது சாய்ந்து நின்று  தன்னையே  ஒருவன் கவனித்துக் கொண்டிருப்பதை  பார்த்துவிட்டாள்.  அவனது முகம்? கண்டுவிட்டாள் அவனை.  எத்தனை வருடங்கள்  ஆயிற்று?  மறக்க  முடியுமா அவனை?… இவள் கண்டுகொண்டதை அவனும் அறிந்து கொண்டான் போல …. 
           திரும்பி நடக்கலானான்.  அவன் போவதைக் கண்டதும்  ஜனனி  வேகமாக ஓடினாள்.  வழியில் இருந்த பூந்தொட்டியை  பார்க்காமல்  அதில் கால் தடுக்கி  விழுந்து அடுத்த பூந்தொட்டியின் விளிம்பு அவளது நெற்றியை பதம் பார்த்தது.  வழியும் இரத்தத்தோடு அவளது கண்ணீரும் சேர்ந்து கொண்டது.  அவளது  பார்வை வட்டத்தில்  இருந்து அவனும் மறைந்து விட  ஜனனியோ  அவளது நிகழ்வுலகத்தில் இருந்து  கடந்த  காலத்துக்குள்  பயணமாகிக் கொண்டிருந்தாள்.
                ஜனனி  மீண்டும் கண்விழித்த போது  அவளது  அண்ணன்கள்  இருவரும் அவளது கண்முன்  இருந்தனர்.  அவளிடம் அசைவைக் கண்டதும் ஒரு அண்ணன் டாக்டரை கூப்பிட ஓடினான்.  அவள் படிப்பது மருத்துவக்கல்லூரி  என்பதால் அந்த கல்லூரியின் மருத்துவமனையிலே அவளுக்கு ட்ரீட்மென்ட் நடந்து கொண்டிருந்தது. 
            அவள் கீழே விழுந்த அதே சமயத்தில்… மற்றொரு கேட்டின் வழியே அவளது அண்ணன்கள்  உள்ளே நுழைந்திருந்தனர்.  வெறி கொண்ட வேங்கையாய் அவர்கள் மாறி, சிவாவைத் தேடிக் கொண்டிருக்க அவன் இருக்கும்  இடத்தை  ஒருவன் வந்து சொல்ல  அத்திசை நோக்கி திரும்புகையில் … இன்னொருவன்  ஓடி வந்து ஜனனி  கீழே விழுந்து அடிபட்டதை சொன்னவுடன் , சிவாவை  மறந்து அவளிடம் ஓடினர்.
                   “என்னடாம்மா? பார்த்து நடக்க கூடாதா ?… ரொம்ப வலிக்குதாம்மா?” என்று ஜனனியின் தலையை மிகவும் பாசத்தோடு கேட்டுக் கொண்டே வருடினான் ஒரு அண்ணன். அவன் வருடிய பிறகு தான் தன் தலை  முழுவதும் வலிப்பதை  உணர்ந்தாள்.  அதுவரை  அவளது எண்ணங்கள், உணர்வுகள்   முழுவதையும் “அந்த அவனே”  அல்லவா  ஆக்கிரமித்திருந்தான். 
                டாக்டருடன் அவளது இன்னொரு அண்ணனும் அந்த அறையினுள்ளே  நுழைந்தனர். “என்ன  ஜனனி?….தனியா ஓட்டப்பந்தயம் நடத்துனீங்கலாமே?  சொல்லி இருந்தா நானும் வந்து இருப்பேன்ல. உங்ககூட ஓட” என்று சொல்லிவிட்டு  ஏதோ  பெரிய நகைசுவையை சொன்னவர் போல வெடி சிரிப்பு சிரித்த  அந்த  டாக்டர் , ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும்  சற்றே சபல புத்தி வாய்ந்த ஆண்மகன்.  ஜனனியின்  அண்ணன்களைப் பற்றி அறியாத டாக்டர்.  அந்த அறையின்  நிசப்தம் அவரது சிரிப்பை தானாக நிறுத்தியது. ஜனனியின்  மருண்ட விழிகளும் , அவளது  அண்ணன்களின் சிவந்த விழிகளும்  அவருக்கு  எதையோ உணர்த்த….
“ஜனனி  உங்களுக்கு  நெற்றியில் மூன்று ஸ்டிச்  போட்டு இருக்கோம்… நீங்களே ஒரு மெடிக்கல் ஸ்டுடென்ட் தான். எப்படி பாதுகாப்பா இருக்கணும்னு  நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை . குடுத்து இருக்குற ப்ரிஸ்க்ரிப்ஷன்  மட்டும் பாலோ பண்ணுங்க.” என்று  சொல்லி விட்டு அவசரமாக அவர் வெளியேறினார்.
             “ஏன்  அண்ணா? அந்த டாக்டரை அப்படி முறைச்சுப் பார்த்தீங்க? பாவம் அவர். எப்படி  ஓடுறார்  பாருங்க?”  என ஜனனி  வருத்தப்பட்டதும், 
 “என்னது ?…. அவன் பாவமா ? அவன் செய்யும் தொழிலுக்கு  கடவுளைப் போன்றவன்  இங்கே வரும் மக்களுக்கு.  ஆனால் அவனுடைய  இந்த கேவலமான பேச்சு ஒண்ணே போதும்  அவன்  ஒரு பொறுக்கினு  சொல்லிடுச்சு. நாங்க பக்கத்துல நிற்கும் போதே  அவன் இப்படி  பேசணும்னா  அவனுக்கு எவ்ளோ திமிரு இருக்கணும்??”   என்று  உக்கிரமூர்த்தியாய் தகித்துக் கொண்டிருந்தான்  ஒரு அண்ணன். 
 “அவன்  திமிரை மட்டும் இல்லை ஜானும்மா இங்கே  இன்னொருவன்  திமிரையும் சேர்த்து அடக்கணும்”  என்றான் இன்னொரு அண்ணன்.
              ஜனனிக்கு  இப்போது தான் சிவாவின்  நினைவே வந்தது.  அப்போ இன்னும் அவன் அடி வாங்கவில்லை என்ற நினைவே  அவளது மனதுக்கு பெருத்த நிம்மதியைத் தந்தது.
              சிவாவைப்  பற்றி  பேச  ஜனனி  ஆரம்பிப்பதற்கும்    ஜனனியைக்  காண  நிர்மலாவும், கல்பனாவும் அந்த  அறைக்குள்  நுழைவதற்கும்  சரியாக  இருந்தது.  இனி  இவர்களின்  முன்னால்  தன் அண்ணன்களை  எதிர்த்துப்  பேச தன்னால் முடியாது.  என்ன செய்யலாம்? என  யோசிக்க ஆரம்பித்தாள்.
             இவளது  குழப்பமான முகத்தைக் கண்ட நிர்மலா , “என்னடி ? பேய் அறைஞ்ச மாதிரி இருக்க? ரொம்ப வலிக்குதா?.” னு  கேட்க 
             ஜனனியின்  மனதோ, ‘இதை தான்டி எதிர்பார்த்தேன்…. ‘ஜானும்மா  கெட்டியா பிடிச்சிக்கோ இந்த பாயிண்ட்ட’ என  கூக்குரல் இட்டது.
               தங்கையை  அவளது தோழிகளுடன்  சிறிது நேரம் விட்டுட்டு… சிவாவையும்  , அந்த டாக்டரையும்  ஒரு கை பார்த்து விட்டு வரலாம் என நினைத்து கிளம்பினர் அண்ணன்கள் இருவரும்.
“ஜானும்மா  நீ … உன்  பிரண்ட்ஸ்  கூட பேசிட்டு இரும்மா… இதோ நாங்க  இப்போ வந்துடுவோம். எங்களுக்கு  தெரிஞ்சவர் ஒருத்தர்  இங்கே அட்மிட் ஆகி இருக்காராம்.. அவரை ….தேடி ….கண்டுபிடிச்சு ….பார்த்துட்டு ….வந்துடுவோம்  சீக்கிரம்” என்றான் ஒரு அண்ணன்.
“அண்ணா!….இவள்  என்ன  சொன்னாள்னு… நீ  கவனிக்கவே இல்லையா?” என்று வராத அழுகையை வரவழைக்க ….தன் கண்களை  கசக்கிக்  கொண்டே கேட்டாள்  ஜனனி.
          அங்கே  உள்ள  யாருக்குமே புரியவில்லை  ஜனனி சொல்வது.  தோழிகள்  கிண்டல்  பேசி விளையாடுகின்றனர்  என  முடிவு  செய்தனர்  அண்ணன்கள்.  ஆனால்  ஜனனியைப்  பற்றி  நிர்மலாவும் ,  கல்பனாவும்  அறிவர்.  அவள்  விளையாட்டுத்தனம்  வாய்ந்த   சுட்டிப்  பெண் அல்ல. 
          கண்களில் இருந்து கஷ்டப்பட்டு கண்ணீர்  என்னும் திரவத்தை வெளிக்கொணர்ந்து விட்டாள்.  கதவு வரை சென்றவர்கள்  இதோ  ஓடி வந்து விட்டனர்  அவளிடம் . 
“அண்ணா எனக்கு பேய் பிடிச்சு இருக்குனு சொல்லுறா. மூன்று தையல் போட்டு இருக்காங்க. வலிக்குதானு கேட்குறா?.  உங்க முன்னாடியே எவ்ளோ  திமிர்  இருந்தா இப்படி பேசுவா? நீங்க  இல்லைனா  இன்னும்  எவ்ளோ பேசுவா?” என்று  கண்ணீரோடு  மூச்சு வாங்க  பேசியவளைக்  கண்டு  அதிர்ந்தது  நிர்மலாவும், கல்பனாவும்  மட்டுமல்ல  அவளது  அண்ணன்களும் தான்.
              என்ன  செய்வது  என்று  தெரியாமல்  ஒரு அண்ணன் அவளை தன் தோளில்  சாய்த்துக்கொண்டு  அவளை  தேற்றிக்கொண்டு  இருந்தான்.  இன்னொரு  அண்ணன்  இப்படி  பேசிய  நிர்மலாவை  தன் முட்டைக் கண்களால் முறைத்துக்  கொண்டு இருந்தான்.  அவன்  முறைத்த முறைப்பில்   நிர்மலாவின்  உடல் தானாக நடுங்க ஆரம்பித்தது. 
“அவளை  ஏன் முறைக்கீறீங்க?.” என்று கல்பனா  சண்டைக்கு நிக்க, அவளை  இழுத்துக்கொண்டு  நிர்மலா  நடக்க ஆரம்பித்துவிட்டாள்.
“விடுடி என்னை…. அவன் என்ன பெரிய இவனா ?… அவனுக்கு  அவன்  தங்கச்சி மேல பாசம்னா   அவளை  வீட்டுக்குள்ளே  வச்சி   பொத்தி  பொத்தி  வளர்த்துக்க வேண்டியது தான?  யார்  வேண்டாம்னு  சொன்னது?” என பொரிந்து கொண்டே சென்றவளை , 
“நிறுத்துடி…. உன் புலம்பலை” என இடைமறித்தாள் நிர்மலா.
“புலம்பலா….அடி பாவி!  உனக்காகத் தான்டி நான் கத்திட்டு  இருக்கேன்.” என கல்பனா  கூறியதும்,
“யோசிக்கவே  மாட்டியா….. ஜனனி  இன்னைக்கு இப்படி பேசியது மாதிரி  நம்ம கிட்ட எப்போதாவாது  பேசி இருக்காளானு”  என்ற  நிர்மலாவின்  கேள்விக்கு,
“ஹுக்கும்!…. இன்னைக்கு  இவ கொஞ்சுனதையே என்னால தாங்க முடியலை.  இதுல இவ  டெய்லி  கொஞ்சுனா  அவ்ளோ தான்  தாயே!!  நான்  மெண்ட்டல் ஆகிடுவேன்” என்றாள்  கல்பனா.
“எப்பவுமே இப்படி பேசாதவ  இன்னைக்கு மட்டும் இப்படி பேசுறானா என்ன அர்த்தம்?”  என்று தன் கேள்வியை நிர்மலா,  கல்பனாவை  நோக்கி  வீச ,  
“ம்ம்ம்….. அடி…. மண்டையில ரொம்ப பலமா  பட்டுருக்குனு அர்த்தம்…… பைத்தியம் ஆகுறதற்குரிய பொருத்தங்கள் எல்லாம் கூடி வந்துட்டு இருக்குனு  அர்த்தம்?” என்றாள்  கல்பனா.
“அவளுடைய  அண்ணன்கள்  பற்றி  தெரியாததால் நீ  இப்படி  கேலி  பேசிட்டு இருக்க.  நான்  அவுங்க  ஊர்க்காரி. எனக்கு  தான்  தெரியும்  அவுங்க  குடும்பத்தை பற்றி.  எல்லோரும்  டீஸன்ட்டா  தான் இருப்பாங்க.  எல்லோரும்  படிச்சவுங்க ,  நல்லவுங்க  தான்.  ஆனா  ஒரு  விஷயத்தில்  மட்டும்  எல்லோரும்    அடிதடியில்  இறங்கி  வில்லத்தனம்  பண்ண ஆரம்பிச்சிடுவாங்க.”  என்று  ஜனனியின்  குடும்பக்  கதையை ஏதோ  திகில்  கதையை  சொல்லும்  பாணியில்  சொல்லிக்  கொண்டே  நடந்து  கொண்டிருந்தாள் நிர்மலா.
“போடி….. இவளே….. நானும் இவ்ளோ  நாளா  நீ  சொன்னதை   வைச்சு  ஜனனியின்  அண்ணன்கள்  பார்க்குறதற்கு  டெரர்ரா இருப்பானுங்கனு கற்பனை பண்ணி  வைச்சிருந்தேன்.  ஆனா  சூப்பரா ஹீரோ மாதிரி  அழகா இருக்கானுங்கடி” என்ற  கல்பனாவை  வினோதமாக  பார்த்தாள் நிர்மலா.
“என்னது? அழகா இருக்காங்களா!! என்னடி ஆச்சு  உனக்கு?” என்று பேசிக்  கொண்டே விடுதியில்   தங்களுடைய அறைக்கு  வந்து  சேர்ந்து இருந்தனர்.
       கல்பனா  மின்விசிறியின் ஸ்விட்சை  தட்டி விட்டு கட்டிலில் வந்து உட்கார  நிர்மலாவோ  வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை  முழு வீச்சில் காலி பண்ணி கொண்டிருந்தாள்.
“பார்த்துடி…. மெதுவா குடி. புரையேறிடப் போகுது” என்ற கல்பனாவை முறைத்தாள்  நிர்மலா.
அப்போது நிர்மலாவின்  போன் அலர…. செல்போன் ஸ்க்ரீனில்  ஜனனியின்  முகம்  ஒளிர்ந்ததும்  கல்பனாவோ  கடுப்பாகி  திட்ட ஆரம்பித்தாள்.
“கால் அட்டென்ட் பண்ண வேண்டாம்  நிம்மி”  என்று  சொல்லிக்  கொண்டு இருக்கும் போதே நிர்மலா  அட்டென்ட் பண்ணி விட்டாள்.
“ஹலோ!….   நிம்மி.! போனை  ஸ்பீக்கர்ல  போடுடி. சாரிடி!  என்னை மன்னிச்சிடுங்கடி. நான் அப்படி  உங்ககிட்ட பேசலைனா  என்னை உங்ககூட  விட்டுட்டு, கிடைக்கும் கேப்பில் சிவாவையும் , அந்த டாக்டரையும்  அடிச்சு துவைக்க கிளம்பி இருப்பாங்க.”

Advertisement