Advertisement

                            மைலாஞ்சியே   நாணமோ

                          அத்தியாயம் 13

                        “முட்களிலும்   உணர்கின்றேன்…

                         பூக்களின்  மென்மையை.

                          உன்  முகத்தில்  பூத்திருக்கும்  முடிகளின்  உராய்வினில்!!”

“போதுண்டா மச்சான்… என்  தங்கச்சி  தாவணியில   ஓட்டை  விழுந்துட  போகுது”  என்ற   தனாவின்   கேலிக்  குரலில்   ரிஷியும்  ஜனனியும்  அதிர்ச்சியாகிப்  பின்  பிரிந்து  நின்றனர். 

‘கரடி’  என   ரிஷி   முனுமுனுத்துக்  கொண்டே… “உன்னை  வீட்டுல  உள்ளவங்களை  கவனிச்சுக்கத்  தான்டா  அனுப்பி  வைச்சேன்.  நீ   திரும்ப  இங்க  வந்து  நிக்குற?”  என  கேட்டான்.

“டேய்… உங்க  அக்கப்போருக்கு   ஒரு   அளவே  இல்லாம  போயிட்டு  இருக்கு.  நீ  என்னை  அங்க  அனுப்புற,  அங்க  உள்ளவங்க   உன்னை   சாப்பிட  வைக்க  என்னை   இங்க  அனுப்புறாங்க.  என்ன தான்டா   நினைச்சுட்டு  இருக்கீங்க?”  என்ற  தனாவுக்கு,

“நான்  என்ன   சின்ன  குழந்தையா?  என்னை   சாப்பிட  வைக்க?  எனக்கு  பசிச்சா  சாப்பிட  தெரியும்.  உன்னை   யாருடா  இங்க  அனுப்பினது?”  என  கேட்டான்   ரிஷி.

‘மாட்டிக்கிட்டியே  மனோகரா…  இப்படி  வசமா  வந்து  மாட்டிக்கிட்டியே?   இங்க   அனுப்புனது   பத்மா  அம்மானு  தெரிஞ்சா… இது  பப்ளிக்  ப்ளேஸ்னு  கூட  பார்க்காம   அவதாரம்  எடுத்துடுவான்.  அவதாரம்   எடுத்தா  கூட   தாங்கிக்கலாம்… தன்  கோவத்தை   சாப்பாடு  மீது  காட்டி   பட்டினியா  கிடப்பான்’  என  ரிஷியின்  கோவத்தைப்  பற்றியும்,  அதன்  பின் விளைவுகள்  பற்றியும்  ஆராய்ந்து  கொண்டிருந்தவனுக்கு… அந்த  அறைக்கு   வெளியிலிருந்த  காலியான  நாற்காலி  ஒன்றை  கொண்டு  வந்து   தனா   அமர்வதற்காகப்  போட்டாள்   ஜனனி.

“கேட்ட  கேள்விக்கு இன்னும் பதில்  வரலை”  என்ற  ரிஷி   வாட்டர் பாட்டிலைத்  திறந்து  தன் தொண்டைக்குள்  தண்ணீரை   அனுப்பிக்  கொண்டிருந்தான்.

 ‘கேள்வி  கேட்குறவனே  டயர்ட்டாகி  தண்ணீ  குடிச்சிட்டு இருக்கான்…  அவனுக்கு   தினமும்  பதில்  சொல்லுற  நான்  எதை  குடிக்குறதுனு   தெரியல’  என  மனதுக்குள்   அலுத்துக் கொண்டவன்,

“ரேணு  தான்டா  அனுப்பி  விட்டா”  என  வாய்க்கு  வந்த   பேரை   அடிச்சுவிட்டான்  தனா.  இப்பொழுதெல்லாம்   அவன்  வாய்க்கு   ரேணுவின்  பெயர்  மட்டும்  தான்  வருகின்றது   என்பது  வேற  விஷயம்.

“அண்ணா  நீங்க  சாப்பிட்டீங்களா?”  என  ஜனனி   தனாவிடம்  கேட்டாள்.

“அடிக்கடி   இந்த  கேள்வி  என்னை கேட்க  வைக்குற  சிட்டு”  என  ரிஷி  சொன்னதும்

“என்ன  அத்தான்?”  என்றாள்  விழிகளை  விரித்து   ஆர்வமாய்.

அவளது   ஆர்வத்தை   பார்த்த   ரிஷிக்கு…   ‘இந்நேரம்  பக்கத்தில்  தனா  மட்டும்  இல்லாமல்  இருந்தால்?   இப்படி  கேட்குற அந்த  லிப்ஸை’ என   அவளை  ஒரு  மார்க்கமாய்   பார்த்துக்  கொண்டிருந்தவனிடம்,  

“ம்ம்… சொல்லுங்க   அத்தான்”  என்றாள்   ஜனனி

ரிஷியின்  பார்வை மாற்றத்தையும்,  ஜனனியின்   ஆர்வத்தையும்   பார்த்த  தனா,  “வேண்டாம்மா…அவன்கிட்ட  எதுவும்  கேட்காத,  வில்லங்கமா  ஏதாவது  சொல்லிட  போறான்.  விட்டுரு”  என்றான்.

“அப்படியெல்லாம்  ஒன்னுமிருக்காது.  நீங்க  சொல்லுங்க  அத்தான்”  என்றாள்  மீண்டும்  ரிஷியிடம்.

தனாவை   ஒரு  பார்வை  பார்த்துவிட்டு  ஜனனியிடம்,  “உன்னையெல்லாம்  மெடிக்கல்  படிக்க  எவன்  சேர்த்து விட்டது?”  என்றான்   ரிஷி  நக்கலாய்.

“இதுக்கு  தான்மா  கேட்காதனு   சொன்னேன்.”  என  ஜனனியிடம்  சொன்ன  தனா…

“இப்போ  சிட்டு  மெடிக்கல்  படிக்குறதுல  நீ  என்ன  குறை  கண்டுபிடிச்சுட்ட  ராசா?”  என  ரிஷியிடம்   எகிறிக்  கொண்டு  வந்தான்.

“உன்   உடன்பிறவா  உடன்பிறப்புக்காக பாசத்துல   ரொம்ப  தான் பொங்குறீயேடா  மாப்பிள்ளை”  என்ற  ரிஷிக்கு

“என்  தங்கச்சிக்காக  நான்  தான்டா  பொங்கனும்.   உன்  தங்கச்சிக்காக   நீ  பேசுவ  தான?… அது  மாதிரி”  என்றான்  தனா.

“என்  தங்கச்சிக்காக  நான்லாம்  பேச  தேவையில்லை.  அவளே  அவளுக்காக  பேசிக்குவா”  என்றான்  கெத்தாக  ரிஷி.

“பேசுறா…பேசுறா…நல்ல்ல்லா  பேசுறாளாம்.   அவ  பேச்சைப்  பார்த்து   சித்தியும்  சித்தப்பாவும்  தான் பயந்து  போயிருக்காங்க”  என்றான்  தனா.

“அவுங்க   எதுக்குடா  பயப்படனும்?  அப்படி  என்ன  பேசிட்டா?”  என்றான்  ரிஷி   குழப்பத்துடன்.

“தாத்தா  வீட்டுக்கு  போய்  ரணகளமாக்கிட்டு  தான்  ஜனனியை  இங்க  கூட்டிட்டே  வந்துருக்கா. ரேணு  ரொம்பவே  பேசிட்டா போலடா. எல்லோருக்கும் குடும்பத்துக்குள்ள    திரும்ப  சண்டை  வந்துடுமோனு  கவலை  ஒரு பக்கம்.    மாமாக்கள்  ரெண்டு பேரும்  கல்யாணதுக்கே  வருவாங்களோ  என்னவோனு  பயம் ஒரு  பக்கம்னு  எல்லோரும்  ரொம்ப  டென்ஷனா  இருக்காங்கடா.   உங்க   மாமாக்கள்  ரெண்டு  பேரும்  கூண்டுக்குள்  அடைப்பட்ட   சிங்கம்  போல  அங்க  கர்ஜிக்குறது  இங்க  பண்ணை  வீடு  வரை  கேட்குதாம்”  என்றான்  தனா.

“ஹாஹா…ஓவரா  பில்டப்  பண்ணாதடா.  சிங்கம்  அது  இதுனு.  பல்  பிடுங்கப்பட்ட  கிழட்டு சிங்கம்னு  சொல்லு  ஒத்துக்குறேன்”  என  ஜனனியைப்  பார்த்துக்  கொண்டே  ரிஷி  சொல்லவும்,

“இன்னைக்கு   நான்  தான்  சிங்கம்னு   சுத்திட்டு  இருக்குற  ஒவ்வொரு  மனுஷனும்… ஒரு  நாள்  கிழட்டு  சிங்கமா  மாறத் தான்  போறான்  அத்தான்.  ஹேன்ட்வாஷ்  பண்ணிட்டு  வரேன்”  என  சொல்லியவாறு அங்கிருந்து   நகரப்  போன  ஜனனியை  தடுத்து  நிறுத்திய  ரிஷி,

“ஹாஹா… என்னை  மறைமுகமா  பாராட்டுனதுக்கு  ரொம்பவே   தாங்க்ஸ்  சிட்டு.  இந்த  கரடி   இல்லைனா  இப்போவே  உனக்கு  ஒரு  கிஸ்  கொடுத்துருப்பேன்”  என்றான்.

“ஏன்  மச்சான் …இப்போ  நான் இருக்குறேன்னு  நீ  ரொம்ப தான்   மேனர்ஸ்  பார்க்குறியோ?”  என  கேட்டான்  தனா.

“அஃப்கோர்ஸ்  மாப்பிள்ளை”  என்ற  ரிஷிக்கு

“கொஞ்சமாவது  மனசாட்சியோடு   பேசுடா.  அங்க  குடும்பமே  பீதில  பேதியாகிப்   போயி  உட்கார்ந்துருக்காய்ங்க.  அவுங்கள  வந்து  என்னனு  பாருடானு  சொன்னா… என்  கண்ணு  முன்னாடியே   ரொமான்ஸ்  பண்ணிட்டு  இருக்க?  நியாயமடா  மச்சான்”  என தனா  கோவமாய்  கேட்பது  போல் இருந்தாலும்     அவனது  முகத்தில்   சிரிப்பே  மேலோங்கியிருந்தது.

இவர்கள்  இருவரது  பேச்சைக்  கேட்ட  ஜனனி  தன்  தலையில்  அடித்தவாறு  மீண்டும்  அங்கிருந்து   நகரப்  போக,

“ஹேன்ட்வாஷ்  பண்ணிட்டு  வரும்  போது    தனாவுக்கும்   சாப்பிட   பார்சல்  எடுத்துட்டு  வா”  என்றான்  ரிஷி.

ஜனனி மேஜையின்  மீதிருந்த   மூன்று   உணவு  பொட்டலங்களையும்   ஒரு  பார்வை  பார்த்து விட்டு  கேள்வியாய்  ரிஷியை  நோக்க,

“உன்  தங்கச்சி  உனக்கு   இந்த  ஒரு  பார்சல்  போதாதானு  கேட்குறாடா?”  என   சிரிப்போடு   ரிஷி   கேட்க,

“ஐயோ… சத்தியமா  இல்ல  அண்ணா”  என  ஜனனி  தன்  தலையில்  தானே  கை  வைத்து  சத்தியம்  செய்தவாறு  சொன்னாள்.

“அப்போ   எதுக்கு  அப்படி   ஒரு  பார்வை    பார்த்த?”  என  ரிஷி  கேட்டான்.

“ஒன்னுமில்லை  அத்தான்…  சும்மா  தான்  பார்த்தேன்”  என   ஜனனி  மென்று  விழுங்கவும்..

“டேய்… இப்போ  எதுக்கு  சிட்டுவை   படுத்துற?  உனக்கு   கேள்வி  கேட்கனும்னு   ஆசையா இருந்தா  என்னை  கேளு.  நான்  பதில்  சொல்லிட்டு  போறேன்.  அவ  சின்ன  பொண்ணுடா”  என்றான்   ரிஷியிடம்.

“சின்ன  பொண்ணோ,  பெரிய  பொண்ணோ  நான்  கேட்குறதுக்கு   பதில்  சொல்லனும்”  என்றான்  ரிஷி   ஜனனியை   பார்த்துக்  கொண்டே. 

“நீ   பதில்  சொல்லிடுமா.. அது வரை   விட  மாட்டான்”  என்றான்  தனா  சலித்தவாறு.

“இல்ல… இங்க   தான்  மூனு  பார்சல்  இருக்குல..  அப்புறம்  ஏன்  அண்ணாவுக்காக   எடுத்துட்டு  வர  சொல்லுறாங்கனு  பார்த்தேன்?”  என  ஜனனி   சொன்னதும்  தன்  நெற்றியை   இரு  விரல்களால்  நீவிவிட்டவாறு  அவளையும்   ரிஷியையும்  மாறி  மாறிப்  பார்த்தான்  தனா.

“சரிடா  மச்சான்… நீ  பஞ்சாயத்தை   முடிச்சு  வை.  நான்  வீட்டுல  போய்   சாப்பிட்டு வர்றேன்”  என  சொன்னவாறு   நாற்காலியிலிருந்து   எழுந்த  தனாவை,

“நாட்டாமையே  நீ  தான்டா  மாப்பிள்ளை.  தீர்ப்பு  சொல்லிட்டு  விருந்து  சாப்பிட்டு  போ”  என    ரிஷி  சொன்னதும்

“எது?…இந்த   சாம்பார்  சாதமும்   தயிர்  சாதமும்  விருந்தா?…  வழக்கு  இருக்குற  வீட்டுல  கை  நனைக்க   கூடாதுனு  எங்க  பெரிய நாட்டாமை  விசயகுமாரு  சொல்லியிருக்காரு  மச்சான்”  என  தனா  சொல்லிக்  கொண்டிருக்கும் போதே  அங்கே   வந்த   கோபி,

“ஸார்… வேற  ஏதாவது   கொண்டு  வரனுமா”  என  கேட்டபடி  வந்து  நின்றான்.

தனாவுக்கு   சாப்பிட   கொண்டு  வருமாறு   கோபியிடம்  சொல்லிவிட்டு  ஜனனியிடம் ,

“என்னை   சாப்பிட  கூப்பிட்டு  போக  வந்துருக்குறவன், சாபிட்டா  வந்திருப்பான்?  அவனை  சாப்பிட்டிங்களானு  கேட்குற?  அதான்   கேட்டேன்… உன்னை   எவன்  மெடிக்கல்  காலேஜ்ல  சேர்த்ததுனு?”  என  கேட்டான்  ரிஷி.

“ஸாரி   அத்தான்.. நான்  அத  யோசிக்கவேயில்ல” என  ஜனனி  சொல்லிக்  கொண்டிருக்கும்  போதே…   கோபி  கையில்  நான்கு  உணவு  பொட்டலங்கள், வாட்டர் பாட்டில்கள்,  டிஸ்யூ  பாக்ஸ்  சகிதமாய்  வந்தவன்  அனைத்தையும்  மேஜையின்  மீது  வைத்து  விட்டு போனான்.

“ஹேன்ட்வாஷ்  வாஷ்  பண்ணிட்டு  வா  சிட்டு.  பசிக்குது”  என  ஜனனியிடம்  சொன்ன  ரிஷி, அவள்  கைகழுவ  வெளியேறியதும்  தனாவிடம்,

“வீட்டுல  உள்ளவங்க  ஏன்  பயப்படனும்?  என்  மேல  நம்பிக்கையில்லையா?    ரஞ்சி  கல்யாணத்துக்கு  எல்லோரும்  வருவாங்கனு  சொல்லு”  என்றான்.

“ம்ம்…நேசன்  ஸார்   ஃபோன்  போட்டார்.  உன்கிட்ட  பேசனும்னு  சொன்னார்” என்ற  தனாவுக்கு

“எப்போ  ஃபோன்  போட்டார்..  நீ  வீட்டுக்கு  போனதுல  இருந்து நான்  ஃப்ரீயா  தான்டா  இருந்தேன்” என்றான்  ரிஷி.

“ஜஸ்ட்  ஒன் ஹவர்  தான் இருக்கும்”  தனா  சொல்லிக் கொண்டிருக்கும் போதே… ஜனனியும்  கைகழுவிக்  கொண்டு வந்துவிட… மூவரும்  பொதுவான  விஷயங்களைப்  பேசியவாறு   சாப்பிட்டது  வயிற்றை  மட்டுமல்ல,  அவர்களது   மனதையும்  நிறைத்திருந்தது.

சாப்பிட்ட   பின்  ஜனனி  மீண்டும்  தன்  வேலைகளை  கவனிக்கத்  துவங்கி விட்டாள்.

            நேசன்  டிடெக்ட்டிவ்   என  தன்  ஃபோனில்  பதிவு  செய்து வைத்திருந்த   எண்ணிற்கு  டயல்  பட்டனை தனா  அழுத்த… எதிர்ப் பக்கம்   ‘பிஸி’    என சொல்லவும்…மேலும் ஒரு  முறை  முயற்சி  செய்தவன்… ரிஷியிடம்   அதை  சொல்லிவிட்டு  தன்  லேப்டாப்பை  ஆன் பண்ணி  காருக்குள்ளே உட்கார்ந்து  தன்  வேலைகளை  கவனிக்கத்  தொடங்கி விட்டான்.

           ரிஷியோ   தனது   லேப்டாப்பை  தூக்கிக்  கொண்டு   ஜனனி  இருக்குமிடத்திற்கு  சற்று  முன்னில்  போய்…     அவனது   ஒரு   கண்  லேப்டாப்பிலும்,  மற்றோர் கண்  ஜனனியின்  மீதும்   இருக்கும்  படியாக  அமர்ந்து   தன்  வேலைகளைப்  பார்க்க  ஆரம்பித்துவிட்டான்.

         ஜனனியோ  வேலை  மும்முரத்தில்  இதை  முதலில்  கவனிக்கவில்லை.   பிறகு  தான்  உணர்ந்தாள்  தான்  கவனிக்கப்படுகின்றோமென்று.  நிமிர்ந்து  பார்த்தவளது   தேகத்துக்குள்  ஆயிரம்  வாட்ஸ்  மின்சாரம்  பாய்ந்தது    போன்றதொரு  உணர்வு.   சின்னதொரு  கண்சிமிட்டல்  ரிஷியிடமிருந்து.  ‘கள்ளன்’ என்று ரசித்தவளின்  மனது  இதை  பொக்கிஷமாய்   பாதுகாத்து  வைத்துக்  கொண்டது.

            “இமைகள்  கூட   இம்சிக்குமென்று…

             உன்   கண் சிமிட்டலில்…

             கண்டு கொண்டேன்!!”

அங்கே   ஜனனியின்   வீட்டிலோ  மஹா  பிரளயம்  ஒன்று  வெடித்துக்  கொண்டிருந்தது.

“என்னப்பா…இப்படி   பண்ணிட்டீங்க?  கலெக்ட்டர்  சொன்னா  நம்ம  வீட்டுப்  பிள்ளையை  அனுப்பிடுறதா?”  என  ஆதங்கத்தோடு  கேட்டான்  உதய்.

“இப்போவும்  ஒன்னும்  கெட்டுப்  போகலைப்பா.  நானும், உதய்யும்  போய்  ஜானுவை  கூட்டிட்டு  வந்துடுறோம்.  சரினு  மட்டும்  சொல்லுங்கப்பா”  என்றான்  பாலா.

“டேய்  தம்பி.. நடந்ததை  நம்மால  மாத்த  முடியாது.  நடக்க வேண்டியதை  பார்ப்போம்.  அதான்  பசங்க  சொல்லுறாங்கல்ல.  சரினு  சொல்லு.  கூட்டிட்டு  வரட்டும்”   என்றார்  அருள்பிரகாசம்.

“ரெண்டு  மணிக்கு  மேலாகிடுச்சு.  என்  பொண்ணுக்கு  பசிக்கும்.  கூட்டிட்டு  வாங்க  தம்பி”  என்றார்  சுமித்திரை.  அவர்  கவலை  அவருக்கு.

           இத்தனை  பேரின்  அனுமதி  மனுக்களும்  அருள்குமரனின்  செவியை   எட்டியதாகவே  தெரியவில்லை.  பலத்த  சிந்தனையின்  முடிச்சுக்கள்  அவரது   புருவ  மத்தியில். 

         ஜானு  பன்னிரண்டு  வருஷமாக  ரிஷியை  சந்திக்கவேயில்லையெனும்  போது… நேற்று   அர்த்த  ஜாமத்தில்  அவனுக்கு  சாப்பாடு  கொண்டு  போய்  கொடுக்க  வேண்டிய  அவசியமென்ன?   இதை   முனியன்   அருள்குமரனிடம்  சொன்னதும்  அவரது   சப்த  நாடியும்  ஒடுங்கி  ஒரு முறை  ஆட்டம்  கண்டது.  

          இந்த  கலெக்ட்டர்  மட்டும்  குறுக்கே   வராமல்   இருந்திருந்தால்…  அவர்  ஜானுவை  மெடிக்கல்  கேம்ப்பிற்கு  அனுப்பியேயிருக்க  மாட்டார்.   அருள்குமரனின்  சிந்தனை  ஓட்டத்தை   தடை  செய்தது   சந்தோஷின்  குரல்,

“தப்பு   செய்துட்டீங்க  மாமா… நீங்க  ஜானுவை  அனுப்பியிருக்க  கூடாது.  அதுவும்   அந்த  பொறுக்கி  அரேஞ்ச் பண்ணியிருக்குற  கேம்ப்க்கு.  அவனும்  அங்க  தான்  இருக்கான்.   நம்ம  ஜானுவுக்கு   திரும்ப  ஏதாவது  ஆகிட்டா  நாம  என்ன  செய்யுறது?”  என  ஆங்காரமாய்  கத்திக்  கொண்டிருந்தான்.

   ஹாலில்   தொங்க விடப்பட்டிருந்த  பெரிய தேக்கு மர  ஊஞ்சலில்  ஆடியபடி   அனைவரும்  பேசுவதை   அமைதியாக  வேடிக்கைப்  பார்த்துக்  கொண்டிருந்த  தாத்தா… சந்தோஷின்  பேச்சால்   கொதித்தெழுந்தார்.

“நிறுத்துடா… என்  பேரனை  பொறுக்கினு  சொல்லுற  யாருக்கும்  என்  வீட்டுல  இடமில்லை.  வெளிய  போ”  என  ஆவேசமாய்   சொன்னபடி  ஊஞ்சலிலிருந்து  இறங்கியவரின்   கால்களில்   வந்து   விழுந்தார்   வடிவாம்பாள்  எனும்  வடிவு.

தாத்தாவின்   குரலுக்கு   மொத்த  குடும்பமே  மிரண்டு  போய்  நின்றதென்றால்…  சந்தோஷுக்கு   முதலுக்கே  மோசம்  வந்துவிட்டதென்ற  பயத்தில்  சர்வாங்கமும்  ஒடுங்கி மரமாய் நின்றான்.

“நீங்களே  இப்படி  சொன்னா  நாங்க  நாதியத்து  போயிடுவோம்  பெரியப்பா. இவனை பத்து  மாச  கைக் குழந்தையா    தூக்கிட்டு  இந்த  வீட்டுக்குள்ள  வந்தேன்.   புருஷனையும்  இழந்துட்டு  ஆதரவத்து நடுத்தெருவுல  நின்னவளுக்கு  நீங்க  மட்டும்  தான்  பெரியப்பா ஆதரவு  கொடுத்தீங்க.   என் பையனை  டாக்டருக்கு   படிக்க  வைச்சு   அவனுக்குனு  ஒரு  அடையாளத்தை   கொடுத்துருக்கீங்க.  அவன்  நீங்க  தூக்கி  வளர்த்த  பையன்.  தெரியாம  பேசிட்டான்.  அவனை  மன்னிச்சுடுங்க  பெரியப்பா”  என்று  தாத்தாவின்  காலில்  விழுந்து  அழுது  கொண்டிருந்த  வடிவு  வெள்ளந்தியான  கிராமத்து  மனுஷி.

“எழுந்திரு  வடிவு.    இன்னைக்கு  காலைலயிருந்தே சந்தோஷ்  பேசுனது  சரியில்லை”  என்றார்  பாட்டி.

“தாத்தாகிட்ட  மன்னிப்பு  கேளுடா”  என  சொன்னவாறு  சந்தோஷின்  சட்டையைப்  பிடித்து  இழுத்து  வந்தார்  வடிவு.

ஜனனியை  அடைய  வேண்டுமென்பது சந்தோஷின்   இன்றைய  நேற்றைய   ஆசையல்ல.   தன்  சிறு வயதுக்  கனவு  அவள். 

 ‘பல  பெண்களை  ருசித்தும்  ஏறாத போதை  அவளைப்   பார்த்தாலே   கிடைச்சிடுது.   ஜனனியைக்  கல்யாணம்  பண்ணிக்  கொண்டால்  சுகத்தோடு, சொத்தும்… ஊருக்குள்  பெரிய  வீட்டு  மாப்பிள்ளை  என்ற  மரியாதையோடு  சகல வசதியும்   கிடைக்கும்.    அதுக்காக  தான்  கஷ்டப்பட்டு  பிட்டடிச்சு  பாஸாகி எல்லா  ஃப்ராடு தனமும்  பண்ணி  டாக்டராகி  நல்லவன்னு  பேரெடுத்தா… எல்லாத்தையும்  ஒரே  நொடியில  இந்த  கிழம்  பாழாக்கிடும்  போல’  என  மனதுக்குள்  தாத்தாவை  மரியாதையில்லாமல்  திட்டியவன்  வெளியே,

“மன்னிச்சுடுங்க  தாத்தா”  என  சொன்னவன்  அவரது  பதிலை  எதிர்பார்க்காமல்   மேலே  தனது   அறைக்குள்  சென்று  கதவடைத்துக்  கொண்டான்.

             “அணிந்திருக்கும்   முகமூடி…

              கிழிந்திடாத  வரை…

              அனைவரும்   நல்லவர்களே!!” 

 

Advertisement