Advertisement

இதழ் 09

“பாட்டி அவளை நல்லபடியா படிக்க வைத்து, குணமான பையனா,நல்ல வசதியான இடத்தில் கட்டிக்கொடுத்து கடைசி வரையும் அவளுக்கு தேவையானதை செய்கின்றேன் பாட்டி ப்ளீஸ் என்னை கல்யாணம் பண்ண கேட்காதீங்க.”

“நீ சொன்ன தகுதி எல்லாம் உன்னிடமே இருக்கு கண்ணா.பிறகு கஸ்ரப்பட்டு வேற மாப்பிள்ளா பார்க்க வேணும்.” என்று லக்ஷ்மி பாட்டியும் விட்டுக்கொடுக்காது நின்றார்.

“நான் அவளை அந்த மாதிரி எல்லாம் நினைக்கவில்லை பாட்டி.”

“இப்போது நான் அப்படி நினைக்க சொல்லவில்லையே…! அவளுக்கு பதினெட்டு வயசு. உனக்கு இருபத்து மூன்று. இப்போது கல்யாணம் பண்ணு பிறகு மற்றதுகளை பார்க்கலாம்.”

“பாட்டி வற்புறுத்தி கல்யாணம் பண்ணலாம் ஆனால் காதல். மனசு இரண்டும் ஒத்து போகாமல் அடுத்த ஸ்ரெப் எப்பிடி போகும்.”

“இங்க பார் ஆதி மேகா பிறந்த போதே உனக்கு தான் என்று நாங்கள் முடிவு பண்ணினது தான். இப்ப நீ புதுசு புதுசா கதை சொன்னால் எப்படி.”

“பாட்டி இப்ப எதுக்கு கல்யாணம் பண்ண வேண்டும் என்று அவசரப்படுத்தி கல்யாணம் பண்ண சொல்லுவது ஏன்? என்று நான் தெரிந்து கொள்ளலாமா?”

“மேகா அப்பா,அம்மா இருந்த போது எல்லோரும் கூட்டுக்குடும்பமாக இந்தோம். இப்போது என் மகளும்,மருமகனும், என் பேத்தியை தனியா விட்டுட்டு போய்ச்சேர்ந்து விட்டார்கள். அந்த வலியே என்னை விட்டு நீங்கவில்லை. அதற்குள்ளாக இப்போது புதுசா ஊர்ல ஆட்கள் அரசல் புரசலாக கதைக்கிறதை கேட்க முடியல்லடா.” என கலங்கிய பாட்டியை வெறித்தான்.

“என்ன கதைத்தாலும் இது சரியான முடிவில்ல பாட்டி. அவளை நான் ப்ரண்டா தான் நினைச்சன் பாட்டி.”

“என்னை திசை திருப்ப பார்க்காத ஆதி. அவளை நீ கல்யாணம் பண்ணணும் அது தான் என் முடிவு. இல்லை என்றால் அத்தனை சொத்துக்களும் மேகாவிற்கு தான் போகும்.”

இதெல்லாம் அவளுக்கு காதில் கேட்டதே தவிர உணர்வற்ற மரமாய் நின்றாள். அவளை பார்த்தவனுக்கு ஆத்திரமா வந்தது. ‘எதுவும் பேசாமல் நிற்கின்றாள் எனில் இவள் தான் பாட்டிக்கு  ஐடியா கொடுத்ததா…? இவளை பொறுப்பா பார்த்ததற்கு நல்ல கைமாறு செய்து விட்டாள்.’ என மனம் நொந்தவன் அவளை தீப்பார்வை பார்த்தான்.

“இப்போது ஏன்? அவளை முறைக்கிறாய். அவளுக்கே இது புது தகவல் தான். அவளுக்கு உன்னை மட்டும் தான் பிடிக்கும் ஆதி அது உனக்கு தெரியாதா?” என்ற தாயின் வார்த்தையால் மிகவும் நொந்து போனான்.

‘என் மனதை பற்றி எப்போதும் இவர்கள் புரிந்து கொள்ளப்போவதில்லை. மேகா தான் இவர்களுக்கு முக்கியம். ஏன் அவளும் தான் என்னை புரிந்து கொள்ளப்போகின்றாளா? என்ன?’ என மனதோடு போராடியவன் கடைசியாக ஒருமுறை அவளை கேட்கலாமா?’ என்ற என்னம் தோன்ற அவளருகே சென்றான்.

“மேகா நீ சொல்லு நாம கல்யாணம் பண்ணணுமா? நீ பதில் சொல்லு… சொல்லு…டி.” என அதட்டவும் நின்ற நிலையில் இருந்து இரண்டடி பின்னே எடுத்து வைத்தாள்.

‘என்னை உனக்கு பிடிக்காதா? ஆது. என் பதின்மூன்று வயதில் இருந்தே நீ தான் எனக்கு அம்மா, அப்பா இல்லாத ஏக்கத்தை தீர்த்து வைச்சனி.  உன்னை கேட்காமல் நான் என் விரலை கூட அசைத்ததில்லை. நீ இல்லாத இந்த உலகத்தை நான் நினைச்சு கூட பார்க்க மாட்டன். ஆனால் நீ ஏன் என்னை பார்த்து அநாதை என்றெல்லாம் சொல்லுகின்றாய். அப்பா,அம்மா இறந்த போது கூட எனக்கு பக்கத்திலே நின்று அழவிடாமல் என்னை பார்த்தவனே…! நீ இப்படியொரு வார்த்தையை கூறுவாய் என்று நினைத்து பார்க்கவில்லையே!’ என மனதுக்குள் புலம்பியவளது வாயிலிருந்து வார்த்தைக்கு பதில் காற்று வெளியேறியது. கண்களில் இருந்து திரண்டு நின்ற கண்ணீர் அவளது பார்வையை மங்கலாக்கியது.

அவளது அமைதியைக்கண்டவன் இவள் தனக்கு சாதகமாக எதுவும் சொல்லப்போவதில்லை என்று புரிந்து கொண்டு, ‘நேரம் பார்த்து காலை வாரிட்டா’ என நினைத்தவன் நெஞ்சுக்குள் அத்தனை வலி.

“பாட்டி ப்ளீஸ் இப்பவும் சொல்கின்றேன் நன்றாக கேளுங்கோ. இந்த கல்யாணம் நடந்தால் நீங்கள் பார்க்கின்ற ஆதவனை வேறயாளாத்தான் பார்ப்பீர்கள்.”

“இங்கே பார் ஆதி. ஊர்ல நீங்க இரண்டு பேரும் ஒன்றாக சுத்துறதை பார்த்து என்னென்னமோ கதை எல்லாம் என் காதில விழுகிறது.”

“ஊர் சொல்றதை நீங்கள் நம்புவீர்கள். நான் சொல்வதை நம்ப மாட்டீர்கள் அப்படித்தானே.”

“உன்னை விட்டு வேற யாரையாவது கட்டி வைத்தால் தான் அவளது வாழ்க்கை கேள்விக்குறியாகும். அவளுக்கு வாறவன் எப்படிப்பட்டவனாக வருவான் என்றே தெரியாமல் அவளை கொண்டு போய் பாழுங்கிணத்தில் தள்ளிவிடச்சொல்றியா? என்ன?”

“பாட்டி நீங்க என்ன சொன்னாலும்  என்னால அவளை கல்யாணம் பண்ண முடியாது.இது தான் என் முடிவு.”

“சரி இன்னும் கொஞ்சம் பொறு வக்கீல் வந்துடுவார் வந்தவுடன் என் பெயரில் இருக்கும் சொத்துக்கள் எல்லாவற்றையும் அவளுக்கு மாற்றிய பின் நீ போ?”

“பாட்டி உங்கள் பெயரில் இருக்கும் சொத்துக்கள் எல்லாப்பேரப்பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுக்கபட வேண்டியது. எனக்கு உங்கள் சொத்து எதுவும் தேவையில்லை ஆனால் மற்றப்பேரப்பிள்ளைகளுக்கும் கொடுக்க வேண்டும் தானே பாட்டி. என்மீதுள்ள கோபத்தை நீங்கள் என்னிடம் தான் காட்ட வேண்டும். மற்ற பேரப்பிள்ளைகளிடம் ஏன் காட்டுகின்றீர்கள்.”

“இது என் சொத்து யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். அவ்வளவு அக்கறை இருக்கின்றவன் உன்னால் தான் அவர்களுக்கு இந்த சொத்து போகவில்லை என்பதையும் யோசித்தால் நல்லது.”

அவனுக்கு தெரியும்  அவனது சிறிய அத்தையின் மூத்த மகனான அசோக்ற்கு அவன் புதிதாக செய்யவிருக்கும் பிஸ்னசுக்கு பாட்டியின் கோடான கோடி சொத்துக்கள் உதவியாக இருக்கும்.

‘ஆனால் பாட்டி இந்த பைத்தியகாரிக்கு எல்லாவற்றையும் கொடுப்பது மட்டுமல்லாது, சொத்தை வைத்து என்னையே ஃப்ளாக்மெயில் பண்ணுதே…’ என நினைத்தவன் பாட்டியை பேசி கோபமூட்டாமல் அமைதியானான்.

பாட்டி பேசுவதெல்லாம் மேகனாக்கே நியாயமாக படவில்லை. அவள் அவனை பதின்மூன்றுவயதில் இருந்து நெஞ்சில் சுமக்கின்றாள் தான். அதற்காக அவளை பிடிக்கவில்லை என்பவனை, யாரோ ஏதோ சொன்னார்கள் என்று வற்புறுத்தி  திருமணம் செய்ய அவள் விரும்பவில்லை. அதுவும் அவளது கனவுகள் பல, அவற்றை நிறைவேற்றாது அவள் திருமணத்தை இந்த சிறிய வயதில் எதிர்பார்க்கவே இல்லை. அவனை அடியாளத்தில் இருந்து நேசித்தவள் தான் அதற்காக அவனை அரக்கனாக்க விரும்பவில்லை. பாட்டி கூறுவது சரியில்லை நீ தான் எடுத்து சொல்லி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டுமென ஆதவனருகே கேட்க வந்தாள் என்று புரியாமலே அவன் பிடித்து தள்ளிய வேகத்தில் அருகில் இருந்த பழத்தட்டு மேல் விழுந்வளின் கையை கத்தி ஆழமாக பதம் பார்க்கவும் பழத்திலிருந்த கத்தியை கையால் உருவி எடுத்தவளை பார்த்த அனைவரும் ஏங்கிப்போய் நின்றனர்.

கத்தி அழமாக பதிந்ததால் இரத்தம் அளவுக்கதிகமாகவே போய்க்கொண்டிருந்தது. அதைப்பார்த்தவள் அந்த இடத்திலே மயங்கிச்சரிந்தாள்.

அவ்வளவு நேரம் கோபத்தில் கத்திக்கொண்டிருந்த ஆதவனும் கண்ட காட்சியில் திடுக்கிட்டு போனவன் தன்னை சுதாகரித்துக்கொண்டு அவளை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினான்.

நிறைய இரத்தம் போயிருக்கு. முதல்ல ப்ளட் ஏத்தனும். ஏற்கனவே ரொம்ப வீக்கா இருக்கிற பொண்ணு சூசைட் அட்டெம் பண்ணியிருக்கிறதால நிறைய ரெஸ்ட்டும் தேவைப்படும். என தையலை போட்டுக்கொண்டு கூறிய டாக்டரது குரல் அவனது காதில் விழுந்தாலும், அவனது பார்வை முழுவதும் அவளிடமே இருந்தது.

‘உயிரை குடுத்து என்னை கல்யாணம் பண்ற அளவுக்கு நம்ம ப்ரண்ட்சிப்பையே கேவலப்படுத்திட்டியேடி.’ என மனதுக்குள் புலம்பியவனுக்கு தெரியாதல்லவா? அவன் தள்ளி விட்டதனால் தான் அவள் கத்திக்கு மேல் விழுந்தாள் என்று.

அவள் மயக்கத்தில் ஆழ்ந்த வேளை வெளியே வந்தவனை பாட்டி பார்த்த பார்வையில் துவண்டுபோனான்.  “உன்னை அவ்வளவு லவ் பண்ணியிருந்தால் சூசைட் அட்டெம் பண்ணப்போயிருப்பாள். ஆனால் நீ உன் சுயநலத்துக்காக அவளை வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாய்.” என்றார்.

அவன் வாயிலிருந்து எந்த வார்த்தைகளும் வரவில்லை.

இரண்டு நாள் ஆஸ்பத்திரியில் இருந்து வந்தவளை சரிதா நன்றாக கவனித்து கொண்டார்.

“என்ன? மேகா சட்டென்று கையை அறுத்துக்கிட்ட… காய் வெட்ற மாதிரி.”

“இல்லத்த நான்…” என்றவளது பார்வை, தட்டாமலே கதவை திறந்து உள்ளே வந்தவனை கண்டதும் அவளது பேச்சும் அப்படியே நின்றது.

“அம்மா உங்களை அப்பா வரச்சொன்னார் அவசரமாம்.”என்றான்.

“சரி மேகா ரெஸ்ட் எடு. அத்தை போயிட்டு வாறன். என்றவர் நீ ஏன் ஆதி இங்கே நிண்டு அவளை குழப்பாமல் வா.” என்றார்.

“நான் மேகாக்கிட்ட பேசணும். பேசிவிட்டு வருகின்றேன்.நீங்கள் போங்கம்மா.”

“உடம்பு சரியில்லாத பிள்ளையை மிரட்டிப்போடாத சரியோ.” என்றவாறு கிளம்பினார்.

“ஆது…” என்று பரிதவித்தவள் மீது அவனுக்கிருந்த கோபத்தை காட்ட நேரமில்லை என உணர்ந்தவன் அவளை முறைக்கவும் “எனக்காக நான் சொல்றதை கேட்க மாட்டியா…”

“என்ன கேட்கனும். உயிரை குடுத்தால் கூட என்காதல் உனக்கில்லை. கையை வெட்டினால் உன்னை இந்த ஜென்மத்தில்  கல்யாணம் பண்ணுவேன் என்று நினைத்தால் அது உன் தப்பு.”

“நான் என்ன? சொல்லவாறன் எண்டு கேக்கவே மாட்டியா ஆதி.”

“இதுபற்றி சொல்றது என்றால். வேண்டாம் எனக்கு கேட்க விருப்பமில்லை. இதுபற்றி கதைக்காதே. திட்டம் போட்டு நாடகமாடி என்னை ஏமாத்தலாம் என்று நினைக்காதே.”

“இல்ல… ஆதி. நான் கையை… வெட்டி…”என்றவள் அவன் கை சுவற்றில் ஓங்கி குத்திய வேகத்தை பார்த்து வாயை இறுக்கி மூடிக்கொண்டாள்.

“இதுக்கு மேலே ஏதும் பேசினால் சாவடிச்சிடுவன்டி. வாயை மூடிற்று படு.” என்றவன் அவளது அறையை விட்டு வெளியேறினான்.

இரண்டு வாரங்களுக்கு பிறகு அவளுக்காக எல்லோரும் கோயிலுக்கு வந்திருந்தனர். படையல் போடுவதற்கு.

அங்கே அவளை கண்ட இரு பெண்கள் அவளுடன் வந்து கதைத்து விட்டு, அவள் சென்ற பின் ஒரு பெண் விசம புன்முறவலோடு “என்னடி இவளை பார்த்தியா….? ஒன்றுமே நடவாதது போல போக இந்த பணக்காரர்களால் மட்டுமே முடியும் போல.”

“ஏன் அந்தப்பொண்ணு நன்றாகத்தானே கதைத்து விட்டு போகிறது.”

“நன்றாக கதைத்தால் நல்ல பெண்ணா? பழக்கவழக்கம் சரியில்லையே…”

“என்னக்கா சொல்லுறீங்க… எனக்கு ஒன்றுமே விளங்கல்ல போங்க.”

“ஒரு மசத்துக்கு முன் இவ ஆஸ்பத்திரியில் இருந்தா? பெரிய வீட்டு பிள்ளை ஆச்சே என்று கேட்கப்போனால் என்ன காரணம் என்றே வெளியில் சொல்லாமல் மூடி மறைச்சிட்டாங்கள். விடுவனா நான். விசாரிச்சு பார்த்தால் அந்த பொண்ணுக்கு ஆபார்ஷன் ஆயிடுச்சாம்.”

“என்னக்கா சொல்றீங்க…! அதுக்கு காரணமானவனை கண்டு பிடிச்சு கட்டி வச்சிருக்கலாமே.”

“அது தான் முக்கியமான விசயமேடி. மாமா பையன் அத்தை பொண்ணு. சும்மாவே எல்லா இடத்துக்கும் சுத்தி திரிவானுங்கள். அந்த சமயத்தில இந்த பையன் இந்த புள்ளய மாசமாக்கிட்டான் போல. சின்ன வயசு பொண்ணு என்று கர்பத்தை கலச்சிட்டாங்க போல.”

“அட ஆமாக்கா…! இதையே கஸ்ரப்பட்ட பொண்ணுங்களுக்கு நடந்தா எத்தினை கதை கதைச்சு சாவடிச்சிருப்பாங்க. பணக்கார வீடு என்றவுடன் காதும் காதும் வச்ச மாதிரி விசயத்தை முடிச்சிட்டாங்க போல.”

“அட நமக்கேன்டி மத்தவங்க பிரச்சனை வா போய் சாமியை கும்பிடலாம்.” என்றபடியே இருவரும் நகர்ந்தனர்.

Advertisement