Advertisement

இதழ் 08

அன்றே அலுவலகம் செல்லும் போதே அவள் தனது மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு வெளியே போகலாம் என நினைத்தவள், தயாராகிக்கொண்டு தனது உடமைகள் உள்ள குட்டிப்பையை தூக்கிக்கொண்டு வெளியே வந்தவள் மனதில்  ‘யாரும் உள்ளே இருக்கமாட்டார்கள்’ அத்தை, மாமாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்புவதாக சென்றவள் நினைப்பில், அவன் முகத்தை கடைசியாக ஒருதடவை பார்த்தால் என்ன? என தோன்றிய உணர்வை ஒருகணம் நின்று அடக்கியவள், அதன் பின்னே உள்ளே சென்றாள்.

சரிதாவிடம் விடைபெற்றவள் மாமனார் எங்கே என்று கேட்கவும், அவர் சீக்கிரமாக கிளம்பியதை அத்தை மூலம் அறிந்தவள்,  “அத்தை மாமாவிடம் சொல்லுங்கள். நான் போகப்போறன்.” என்றவளை வெளியே வராமல் உள்ளிருந்தே அனுப்பினார்.

மேகா அத்தை உடன் வந்து வழியனுப்ப வேண்டும் என நினைக்கவில்லை. இருந்தபோதும் அவள் நெஞ்சுக்குழிக்குள் வலிக்கவே செய்தது.

வெளியே வந்தவள் தன் அலுவலகம் செல்வதற்காக பஸ்சுக்காக வெயிட் பண்ணினாள். பஸ் வருவது போல இல்லாமல் இருக்கவே ஆட்டோ ஒன்றை நிறுத்தி அதில் எறியவள், ஆட்டோகாரனிடம் போகவேண்டிய இடத்தை கூறிவிட்டு சாய்ந்து அமர்ந்தாள்.

இன்றிலிருந்து முற்றாக மாறுபட்ட வாழ்க்கை ஆரம்பிக்கப்போகின்றது. அது எப்படியிருக்கும் என்று அவள் நினைத்து கூட பார்க்கவில்லை. விதியின் வழியில் செல்லலாம் என முடிவு செய்த பின் யோசிப்பதற்கு அவளுக்கு எதுவும் தோன்றவில்லை.

அவளை வழியனுப்ப வந்தால் தான் அழுது விடுவேன் என்று நன்றாக தெரியும் சரிதாவிற்கு, பிறகு அவள் தனக்கு வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். தான் இங்கே வேலைக்காரியாக இருந்து விடுவேன் என்று அவள் தன் எதிர்காலத்தையே பணயம் வைத்து விடுவாள் என்று தெரிந்தே இரண்டு மூன்று நாட்களாக அவளிடம் விட்டேத்தியாக பேசிக்கொண்டார். ஆனாலும் தனியாக போகிறாள் என்ற பயமே, மகன் மீது அளவற்ற சினம் தான் உருவாகியது.

அதை விட மருமகள் கையில் தந்து விட்டு போன கவர் மேலும் பதட்டத்தை கூட்ட அதனை திறந்து பார்க்காமலே தலையணைக்கடியில் வைத்தவர் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்திருந்தது. 

கட்டினால் ஆதவனை தான் கட்டுவேன் என்று பதினெட்டுவயதில் இருந்த தைரியம்,பிடிவாதம் எல்லாவற்றையும் ‘கொஞ்சம் கொஞ்சமாக’ அவரது மகன் பிடுங்கி எடுத்து விட்டானே…!

அவரது கணவர் வேலை விசயமாக வெளியூருக்கு சென்றுவிட்டார்.அருகில் ஆறுதல் தேட முடியாமல் அழுகையில் கரைந்து கொண்டிருந்தார் மேகாவின் அன்புக்குரிய மாமியார்.

அவரது கணவர் கூட மேகா விடயத்தில் அதிக அக்கறை எடுத்ததில்லை.இருந்தும் அவரது சொந்த தங்கை மகள் தான் மேகா. மகன் பக்கமே அவர் சாய்ந்ததால் எது நடந்தாலும் மகன் வாழ்வு நன்றாக இருந்தால் சரி என்பது அவரது எண்ணம்.மனைவியாய் அவர் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அவர் பெரிதாய் மேகாவை வரவேற்காத ஒரு உணர்வு சரிதாவுக்கு இருந்து கொண்டேயிருந்தது.

எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் தான் அவளை சரிதா வழியனுப்பி வைத்தார்.

                          

                           *****

அவள் வீட்டை விட்டு கிளம்பி வந்து இன்றோடு இரண்டு வாரங்களுக்கு மேலாகி விட்டது. அவள் தனது புது இருப்பிடத்திற்குள் தன்னை நன்றாக பொருத்திக்கொண்டாள். பெண்கள் ஹோஸ்டல் என்றபடியால் மூன்று நேரமும் உணவு கிடைத்தது.போதியளவு துணிகளும் இருந்தது. வாழ்க்கை அதன் போக்கிலேயே சென்று கொண்டிருந்தது.

இங்கே ஆதவனது வீட்டில் புதிதாக இரண்டு சமையல் செய்பவர்களை வேலைக்கு அமர்த்தியும் உயயோகமில்லை. அவர்கள் நன்றாக தான் சமையல் செய்தார்கள், ஆனால் உயிர்ப்புடன் உணவை பரிமாற முடியவில்லை அவர்களால். வேலையை கூட இரசனையுடன் எல்லோராலும் செய்ய முடியாதல்லவா? 

ஆதவன் இப்போதெல்லாம் ஏதோ காரணங்களை கூறிக்கொண்டு வீட்டில் உணவு உண்பதை குறைத்திருந்தான்.

முதலில் மேகா வேலைக்கு போகப்போகின்றாள் என்பதே அவனுக்கு தெரியாது. தாய் மூலம் தெரிய வந்த போதும் அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவள் வேலைக்கு போகப்போவதால் இனி சமையலுக்கு வேறு ஆட்கள் வைப்பதாக இருந்தது. அவள் வீட்டை விட்டு முழுதாக போய்விட்டாள் என்ற விடயமே அவனுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தெரிந்தது.

அவள் வீட்டை விட்டு போனதை உணர முடியாத அளவிற்கு அவள் அந்த வீட்டை விட்டு சென்றிருந்தாள். கடந்த ஐந்து வருடங்களாக அவளை எதிலும் கண்டு கொண்டதில்லை என்ற போதிலும், அவளது இருப்பு எந்தளவிற்கு வேரோடி நிற்கின்றது என்பதை அவன் ஒத்துக்கொண்டேயாக வேண்டும்.

தனது அறைக்குள்ளே ஓய்வாக இருந்த சரிதாவின் கற்பனைகள் எல்லாம் மேகாவைச்சுற்றியபடியே இருந்தது.

“அம்மா என்றபடி கதவை தட்டிவிட்டு, உள்ளே வந்த ஆதவன் தாயின் முகத்தை பார்த்தபடி அருகில் அமர்தான்.

தாய் மேகாவை பற்றிய யோசனைகளில் தான் இருக்க வேண்டும் என நினைத்தவன், தாயின் அருகே போய் அமர்ந்தான்.

“அம்மா மேகா எங்கே இருக்கிறா எண்டு சொல்லுங்கோ, போய்க்கூட்டிக்கொண்டு வாறன். உங்களை இப்பிடி பார்க்க சகிக்கல்ல.”

மகனது பேச்சில் தனது யோசனையை தற்காலிகமாக கைவிட்டபடி திரும்பி பார்த்தவர், “ஏன்? நான் நல்லாத்தான் இருக்கின்றேன். நல்லா சாப்பிடுறன். நல்லா தூங்குறன். எனக்கு என்ன? 

என்னை பார்க்க ஏன்? சகிக்கவில்லை. அதைச்சொல்லு.”

“அம்மா. நீங்க எப்பவும் மேகாவை பற்றியே நினைச்சுக்கொண்டிருந்தால் எப்படி நினைக்கிறது.”

“நீ எதையும் நினைக்கத் தேவையில்லை. அவளை இங்கே கூட்டிக்கொண்டு வரவும் தேவையில்லை. மேகாவுடைய நிம்மதியை மறுபடியும் கெடுக்காமல் இருந்தாலே போதும்.”

“உங்களுக்காத்தான் சொன்னேன் அம்மா. நீங்க அவ நினைப்பில்லாமல் இருந்து கொள்வீர்கள் என்றால் ஓகே தான்.”

“ஏன்டா? அவ என்ன? என்னோட லவ்வரா? எப்பவும் அவளையே நினைச்சுக்கொண்டிருக்க? சொல்ப்போனால் நீ தான் அவளை நினைத்து உருக வேண்டும். நீ செய்ய வேண்டிய வேலையை நான் செய்ய நான் என்ன பைத்தியமா? அவளுக்கான கடமைகளை செய்ய எனக்கு தெரியும்.”

“சரி. அவளை தவிர என்னோடு கதைப்பதற்கு வேற எந்த கதையுமே இல்லையாம்மா?”

“இல்லை. நீ தானே எங்கள் எல்லோருக்கும் என்ன? வேண்டும் என்று ‘பார்த்து பார்த்து’ செய்கின்றவன். இதில் எல்லோருக்கும் பிடித்தமும் கூட, நாங்கள் மறுப்பு எதுவும் சொல்லவில்லையே ஆதி.”

“நான் அதைக்கேட்கவில்லை. அம்மா.”

“நீ எல்லாவற்றையும் நன்றாக செய்கின்றாய் என்று சொன்னனே தம்பி.”

இவரிடம் இனிமேல் பேசி எதுவும் ஆகப்போவதில்லை என்று உணர்ந்தவன், எதுவும் பேசாமல் அறையை விட்டு வெளியேறியிருந்தான்.

‘மறுபடியும் அவளை பற்றியே இவன் யோசிக்கிறது நல்லதுக்கோ, கெட்டதுக்கோ என்று தெரியல்லியே கடவுளே மேகாக்கு  எந்த தொந்தரவு இல்லாமல் இருக்க, கடவுளே நீ தான் காப்பாற்ற வேண்டும்.’ என மனதுக்குள் முருகனை வேண்டிக்கொண்டே படுக்கையில் சரிந்தார்.

‘எது எப்படியிருந்தாலும் அவளை மறுபடியும் உங்களுக்கு முன்னே, மறுபடியும் கொண்டு வருவேன்.’ என நினைத்தபடி ஃபோனை எடுத்துக்கொண்டு படுக்கையில் அமர்ந்தவன் நினைவுகள் அவனையறியாமலே சின்ன வயதுப்பருவத்திற்கு ஓடியது.

மேகா சின்னவயதில் இருந்தே ‘துரு துரு’

தான். அதுவும் ஆதவன் மீது எவ்வளவு பொசஸ்சிவ்நஸ் என்பது வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்ததே. ஆதவனுக்காக எல்லாமே செய்வாள். ஆத்மிகா கூட மேகா இல்லாத நேரத்தில் தான் தமயனுடன் பேசுவதே.

ஆதவனும், மேகாவும் உறவுக்கு மேலாக நண்பர்களாக இருந்தனர். ஆவனது எல்லா விசயங்களுமே மேகாக்கு தெரியும். அவனோடு தான் அவள் எப்போதும் சுற்றுவதே.

ஆனால் அவளது பதின்மூன்று வயதிலிருந்தே அவனை நெஞ்சில் சுமந்து கொண்டிருந்த விடயமே அவனுக்கு தெரியாது. அவளது மனதுக்குள் அவன் இருப்பதை அவள் காட்டிக்கொண்டதே இல்லை.

அவள் தாய்,தந்தை மறைந்த போது கூட அவனருகே தான் ஆறுதல் தேடினாள்.அவன் தான் அவளை நன்றாக பார்த்தும் கொண்டிருந்தான். அவளுக்கு தேவையான எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தான்.அவனது அரவணைப்பு பெற்றவர்களது நினைப்பில் இருந்து மீண்டு வர வைத்தது. அவளது பதினெட்டு வயது வரை அவனே தான் அவளுக்கு வேண்டியதெல்லாம்  பார்த்துக்கொண்டிருந்தான். அதை நினைத்து பார்தவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. தான் எந்த இடத்தில் இருந்து அவளை விட்டு விலகத்தொடங்கினேன் என்பதனை நினனத்தவனுக்கு லேசாக சிரிப்பு கூட தோன்றியது.

எந்தளவு அவளை பார்த்துக்கொண்டானோ…? அந்தளவிற்கு குப்பையை தூக்கி எறிவது போல எறிந்து விட்டான். அதற்கு பின்பு அவளை பற்றி எதுவும் நினைத்து பார்த்ததே இல்லை.இன்றுவரை அவள் இருக்கின்றாள் என்பதே அவனுக்கு சுமை போல இருக்கின்றது.

இருவருக்கும் திருமணமாகாது இருந்திருந்தால் அவனும்,அவளும் தான் இணை பிரியாத நண்பர்களாக இருந்திருக்ககூடும். ஆனால் நாம் நினைப்பது போல வாழ்க்கை எல்லோருக்குமே அமைவதில்லையே….!

அந்த நேரத்தில் தான் அவன் முதல் முதலாக அனுராதாவை கண்டு அவன் மனதில் ஒரு மின்னல் தோன்றிய நேரம். அப்போது தான் அவள் அவனிடம் காதலை சொல்லி சில நாட்களாயிருந்த தருணம்.

மேகாக்கும், அவனுக்கும் ஐந்து வயது வித்தியாசம் என்பதனாலே அவன் நட்பை தாண்டி தாயுமானவனாய் அரவனணைத்துக்கொண்டவனுக்கு அவள் அவனை காதலிக்கின்றாள்,இவனை மட்டும் தான் கல்யாணம் பண்ணுவேன் என்று விடாப்பிடியாக அடம் பிடித்து அவனது கையாலே தாலி வாங்கிக்கொண்டதை அவனால் இன்றுவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதையும் விட அவனது வாதத்தை அவளது பெற்றோர்,மற்றும் உயிரான பாட்டி கூட எதையும் கேட்காது அவளுக்கு சாதகமாக இருந்தது தான் அவனுக்கு வலித்தது.

சொத்தை வைத்து அவளை அவன் தலையில் கட்ட நினைத்தது இன்னமும் அவனுக்குள் இருந்த வெறியை கிளப்பியது. தன்னை இவர்கள் புரிந்தது இவ்வளவு தானா என்று உள்ளூர வெதும்பி போனான். அவன் இருந்த நிலையில் தனக்கு ஒரு காதல் இருப்பதையே சொல்ல மறந்து போனான்.

“இப்போது எதற்காக இவளை எனக்கு கட்டி வைக்கப்பார்க்கிறீர்கள் பாட்டி. இப்போது எனக்கு கல்யாணம் பண்ற வயசா சொல்லுங்க.”

இல்ல ஆதி உங்களிருவருக்கும் கல்யாணம் பண்ற வயசில்ல என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் ஊர் வாயை மூடமுடியாதல்லவா? அதற்காகதான் இந்த கல்யாணம். நீ அவளுக்கு தாலியை கட்டி விட்டு உன்ரவேலையை பார்… வெளிநாட்டுக்கு போய்விட்டு வா… எங்களது தொழில்  அனைத்தையும் நீ தானே பார்க்க வேண்டும். என அவனது தாய் கூறவும் கடுப்பாகி விட்டான்.

“அதுசரி… நீங்கள் சொல்வது போல் செய்தால் தான் சொத்தை கொடுப்பீர்கள் என்று சொல்ல வருகின்றீர்கள் அப்படித்தானே அம்மா”

“இதில் நானும் அம்மாவும் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பாட்டி சொல்வது தான் இறுதி முடிவு.”என்று தந்தை முடிவுக்கு வரவும் இன்னும் ஏறியது அவனுக்கு. 

“ஓ… அப்படியா”. இவ யாரும்மா. அப்பா,அம்மா இல்லாத அநாதை என்று நினைத்து கொஞ்சம் அன்பு காட்டினால், எனக்கே செக் வைக்கிறிங்களா அப்பா. அவ மனசளவில நொந்து போகக்கூடாது என்று பார்த்தால், என் மனசை நோகடிக்கிறீங்க இல்லை அப்பா.”

அவன் சொன்ன அநாதை என்ற ஒற்றை வார்த்தையில் அவள் உள்ளம் சுக்கல் சுக்கலாக வெடித்து சிதறியது.

அவனது தந்தைக்கும் அவனது திருமணத்தில் இப்போது விருப்பமில்லை என்றாலும் அவரது தாயை எதிர்த்து பேச வேண்டாம் என்பதற்காக அமைதியாக இருந்து விட்டார்.

உன்னோட கனவை தடுக்கல்ல ஆதி. யாருமே இல்லாமல் இருக்கின்ற என் பேத்தியை உன்னால் தான் நன்றாக கவனித்துக்கொள்ள முடியும். அவளுக்கும் உன்னை பிடிக்கும் பாரு.அதனால் தான் சொல்லுகின்றேன். என் பேச்சையும் கொஞ்சம் கேள் என்றார் லட்சுமி பாட்டி. 

 

Advertisement