Advertisement

இதழ் 07

நட்டநடு வெயிலில் இரண்டு, மூன்று பைகளுடன், தலைக்கு மேல் கையை வைத்தபடி  நின்ற மேகாவை கண்ட ஆதவன்,  இன்று காலை பத்து மணியளவில் தான்  வெளியூரில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான். அவள் தானா என கார் கண்ணாடிக்குள்ளால் சரி பார்த்துக்கொண்டான்.

‘இது  அவ தான்.எதுக்கு இந்த வெயிலில் நின்று வேகிக்கொண்டு நிற்கிறா. தலையில ஒரு கையை வைத்து மறைத்தால், வெயில் படாமல் போய்விடுமா என்ன?’  என மனதுக்குள் நினைத்தவாறு காரை அவளருகில் கொண்டு செல்லலாம் என அவன் அருகில் கொண்டு செல்ல முன்னர், அவளுக்கு முன்னால் பஸ் வந்து நிற்கவும் தடுமாறியபடி பஸ்சினுள் ஏறினாள்.

‘கடைக்கு ஏதும் அலுவலாக வந்திருப்பா. வீட்லயே வேற கார் எல்லாம் இருக்கு.பிறகு எதுக்கு பஸ்ல திரியுறா.இல்லாட்டில் ஆட்டோவை பிடித்து போக வேண்டியது தானே…! அம்மாகிட்ட இதுபற்றி சொல்ல வேண்டும்.’ என யோசித்தவாறே காரை வீடு நோக்கி செலுத்தினான் ஆதவன்.

என்றும் இல்லாத அக்கறை தான்.அவன் இந்த இரண்டு மூன்று தினங்களாக யோசித்தது தானே. இந்த ஐந்து நெடிய வருடங்கள் பிடிவாதமாகவே இருந்தவன் தான். கொஞ்சநாட்களுக்கு முன்னதாக தன் வாழ்வை மேகாவுடன் இணைத்துக்கொண்டால் என்ன? என்பது போல யோசனைகள் எழுந்து கொண்டேயிருந்தன. அதன் விளைவாக தான் அவளருகே காரை கொண்டு சென்றதும்.

                         ************

மேகா வீட்டுக்கு வந்தவுடன் , நேராக சென்றது அத்தையிடம் தான்.

“அத்தை எனக்கு வேலை கிடைத்து விட்டது. என்னோட சேர்த்து நான்கு பேர் இன்ரவியூ வந்திருந்தாங்க. எல்லாருக்கும் வேலை கிடைச்சிருக்கு.”

“எனக்கு தெரியும்.”

“எப்படி.”

“உன் திறமை அப்படி கண்ணு. நான் பார்க்க வளர்ந்தவ நீ. என் நிழல்லயே வளர்ந்தவ நீ. உன்னை தெரியாதா? எனக்கு.”

“ம்… தாங்ஸ் அத்தை. முதல் மூணு மாசம் ரெயினிங் அத்தை. ரெயினிங்கின் போதே சம்பளம் கூட குடுப்பாங்க. முப்பதாயிரம் சலரி. ரெயினிங் முடிஞ்ச பிறகு டபிள் மடங்கு கூடும்.இவங்க வெளிநாட்ல இருக்கிற நம்மநாட்டு பெரிய கம்பனிகளுக்கெல்லாம் ஆடிற் பண்ணிதாராங்களாம். விரும்பின வெளிநாட்டுக்கு கூட போகலாம் அத்தை.”

“அடிசக்கை. என் மருமக உலகம்சுத்தப் போறாளா? இந்த அத்தையை மறந்துடமாட்டியே…?”

“அதெல்லாம் மாட்டேன். சில பேரை, சில விடயங்களை நாம் நினைச்சாலும் மறக்க முடியாது.அதுல நீங்களும் அடக்கம் அத்தை.”

“சரி இரு மேகா. உனக்கு நான் சுவீட் ஏதாவது எடுத்திட்டு வாறன்.”

“அத்தை அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். கம்பனில லேடிஸ்க்கென்று குவாட்டஸ் தருவாங்களாம். ஆபிசுக்கு நடந்தே போறளவு தூரம். அங்கே இருந்து போறது கொஞ்சம் ஈஸி அத்தை. இங்கேருந்து போறது எண்டா ரொம்ப அலைச்சல். நான் அங்கிருந்து போகட்டுமா.”

“அங்கே ரொம்ப வசதியா இருக்குமா. பொம்பிளை பிள்ளைகளுக்கு பிரச்சனை எதுவும் இருக்காதில்ல.”

“அவர் இப்படிசொன்னது அவளுக்கு சிறு ஏமாற்றத்தை தந்தாலும்,  ” இல்லை அத்தை ரொம்ப பாதுகாப்பு, கண்டிப்பு, கவனிப்பு எல்லாம் இருக்குமாம். ஒராளுக்கு ஒரு அறை கொடுப்பார்களாம்.”

‘சரி… மேகா. நீ உனக்கு வசதிப்படும் என்று சொல்கிறாய். அங்கேயே இரு எப்போது போகணும்.”

“இரண்டு நாள் கழித்து அத்தை. நீங்க கொடுத்த பணத்தில் நாலு புடவை வாங்கினேன் அத்தை. பாருங்க.” என்று அவரிடம் புடவை பையை நீட்டினாள்.

“நாலு புடவை போதுமா? ஒரு முப்பது புடவையேனும் இப்போதைக்கு வாங்கியிருக்கலாமே…? மேகா?”

“இல்ல… அத்தை. சுடிதார் கூட போடலாம். ரொம்ப வெயில் அத்தை. நாளைக்கு வரும் போது சுடிதார் வாங்கலாம் என்றுதான் வந்துட்டேன். அத்தை நீங்கள் இப்போது கொஞ்ச நேரம் படுங்கள் நான் அப்புறமாக வருகின்றேன்.” என பையை தூக்கிக்கொண்டு தன் வசந்த மாளிகை நோக்கிச் சென்றாள்.

பைகளை வைத்து விட்டு முகம் கழுவி உடை மாற்றி வந்தவள், நிலத்தில் அமர்ந்தவள், யோசனையாக இருந்தாள். உடனே அத்தை போகச்சொல்லி விட்டார்களே. நான் ரொம்ப பாரமா இருக்கிறேனா? பேச்சுக்கு கூட இருக்கச் சொல்லவில்லையே?  என ஏதேதோ கற்பனைகளை பண்ணி முடித்தவள் இறுதியாக, நான் இங்கே இருந்து மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் போய்விடலாம். ஏற்கனவே இதுதான் திட்டம். பிறகு மனசை அலைபாய விடக்கூடாது என நினைத்தவாறு தன் மூட்டை முடிச்சுகளை கட்டத் தொடங்கினாள்.

நான்கு பழைய புடவைகள்,நான்கு ஓரளவு நல்ல புடவைகள், மூன்று சுடிதார்,மற்றும் சில பொருட்களை எடுத்து வைப்பதற்கு பத்து நிமிடம் கூட தேவைப்படவில்லை. 

தாயின் அறைக்குள்ளே வந்த ஆதவன். “அம்மா உங்களிடம் பேச வேண்டும் என்றவாறு சரிதாவின் அருகில் அமர்ந்தான்.”

அவர் எதுவும் பேசாது இருக்கவும், ‘இவங்க எதுவும் பேச மாட்டாங்க.’ என நினைத்தபடி அவனே பேசத் தொடங்கினான். “அம்மா. இந்த வீட்ல எத்தனை கார் இருக்கு, இந்த மேகா ஏன்? பஸ்ல திரியுறா? எப்ப பார்த்தாலும் அவளுக்காக போர் கொடி தூக்குவீங்க, இதை கண்டுக்க மாட்டிங்களா? கார்ல போகவில்லை என்றாலும் ஆட்டோல போகச்சொல்லியிருக்கலாமே.”

“அவ நடந்து போனால் உனக்கு வலிக்குதா ஆதி. உன் கரிசனத்தை பார்த்து தான் எனக்கு நெஞ்சு வலி வந்திடும் போல.”

“என்னம்மா இது. எதற்கெடுத்தாலும் விவாதம் பண்ணணுமா? நமக்காக தானே வெளியில போறா? அது தான் சொன்னேன். இந்த வேகுற வெயில்ல பஸ்சுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தா பார்க்க சகிக்கல்லமா.”

“அவ அவளோட தேவைக்கு தான் போனா. ஏன்? அவளை உன் கார்ல ஏந்திக்கொண்டு வரவேண்டியது தானே. அதைச்செய்யல்ல, நியாயம் சொல்ல மட்டும் இங்கே நிறையப்பேர் லைன் கட்டி வந்திடுவாங்க. அவ நடந்து போறா, இல்லை உருண்டு போறா.நீ ஒன்றும் வருத்தப்படத்தேவையில்ல போ, வேற வேலை இருந்தால் பார்.அவளைப்பற்றி உனக்கு கதைக்க தேவையுமில்லை, அருகதையுமில்லை.”

“அம்மா… நான் கார்ல போகச்சொன்னது ஒரு தப்பா?”

“நீ அவளை பற்றி பேசாத.எனக்கு அது பிடிக்கல்ல, வீட்டுக்குள்ள பிச்சைக்காரி மாதிரி வச்சுகிட்டு,வெளியே வேசம் போடச் சொல்றியா?”

“இல்லம்மா, இனி அவளை என் றூமிலேயே  தங்க சொல்கின்றேன்.”

“வெளியில் வச்சு செய்த கொடுமை எல்லாம் பத்தாமல் இப்போது அவளை உன் ரூம்ல வச்சு சித்திரவதை யாருக்கும் தெரியாமல் பண்ண போறியா? ஆதி.”

“என்ன? பேச்சு பேசுறீங்க அம்மா.”

“இல்லடா. அவ தாங்கமாட்டா. அன்றைக்கு ஹோட்டல்ல உன்னை அந்த பிசாசு கட்டிப்பிடிச்சதை பெத்த தாய் என்னாலேயே தாங்க முடியல்லடா. மேகா வேற அந்த கருமத்தை பார்த்து தொலைச்சா. அப்பவே அவ செத்துபோனா. நீ இவ்வளவு நாளும் எல்லார் முன்னாடி அவமானப்படுத்திட்டு இருந்தாய். இப்போ பக்கத்தில் வச்சு அவளை கொல்லப்போறியா…?” என தாய் அவனை வெறித்தபடி கூறவும், முதல் முதலாய் ஆதவன் திகைத்து நின்றான்.

அந்தப் பொண்ணு கட்டிப்பிடிச்சதை பாத்தீங்க…சரி. நான் கட்டிப்பிடிச்சனா. நானே அதை எதிர்பாக்கவில்லை. முக்கியமாக உங்களையும் பார்க்கவில்லை.

அவளுக்கு நீ இரக்கப்படவோ, அனுதாபப்படவோ தேவையில்லை. ஆதி அவள் இப்போது இருக்கின்ற இந்த தவ வாழ்க்கைக்கு,என்றோ ஒருநாள் நீ தான் பதில் கட்டாயம் சொல்லுவாய். இப்போ நீ இங்கிருந்து கிளம்புறியா?

“அம்மா… நான் சொல்றது உங்களுக்கு புரியுதா? இல்லையா.?”

“ம்… நீ நினைச்சா அவளை ஸ்ரோர் ரூமுக்கு துரத்துவாய். தேவை  என்றால்

உள்ளே கூப்பிடுவாய். பிறகு மனசு மாறி அவளை வெளியே துரத்தவா? ஆதி ஐந்து வருடமாக அவள் மனசால, உடம்பால் என ரொம்ப வருத்தப்பட்டுட்டா. அவ ஒழுங்கான சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப காலமாச்சு. உன் தங்கை அவளுக்கு நாய் பிஸ்கட்டை அவளுக்கு கொடுப்பா, அதுக்கு நீ உன் தங்கைக்கு சப்போட் பண்ணுவ, பிறகு அவ மேல இரக்கம் காட்டுகிறாய்.என்னால உன்னை இந்த விசயத்தில் நம்ப முடியவில்லை. முடிந்தால் எனக்கு ஒரு உதவி பண்ணு.”

“என்ன உதவி அம்மா சொல்லுங்க பண்றேன்.”

“மேகாக்கு டிவோஸ் குடு. அவளுக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.போற இடத்திலாவது அவ நிம்மதியா, சந்தோசமா வாழட்டும்.”

“……”

“இப்போது நீ கிளம்பு ஆதி. உனக்கு வேலை இருக்கும் தானே…”

அவன் ஏதும் பேசாமல் தன் அறைக்குள் சென்று கதவடைத்து கொண்டான்.

‘இவன் என்கிட்ட சொல்வதை மேகா கிட்ட  சொன்னால் குறைந்து போய்விடுவானா…?’ என்ற கவலை நெஞ்சை அரிக்க மாத்திரைகளை விழுங்கியவர் அது தந்த நிவாரணத்தினால் நித்திரைக்கு சென்றார்.

                      ************

அதிகாலை தூக்கம் கலைந்து எழுந்த ஆதவன், காலைக் கடமைகளை முடித்துக்கொண்டு தன் அறைக்குள்ளே இருக்கும் ஜிம்மிற்குள் புகுந்தவன், சுமார் ஒரு மணி நேர உடற்பயிற்சியின் பின்னரே வெளியே வந்தான். வழக்கமாக ஜிம்மிலிருந்து அவன் வெளியே வரவும், சுடுதண்ணியில் லெமன்,இஞ்சி,தேன் கலந்து ஒரு கப்பினுள் வைக்கப்பட்டிருக்கும். அது வழமைக்கு மாறாக இன்று மிஸ்ஸிங்.  அது இல்லை என்றால் கொண்டு வந்து வைக்கும் மேகாவை வாட்டி எடுத்து விடுவான். இன்று ஏன்? வைக்கவில்லை என்று காரணம் தேடத்தொடங்கியது மனது.

குளித்து விட்டு வந்தவன் மேசை மீது காஃபி வைக்கப்பட்டிருப்பதை உணர்ந்து, அதனை எடுத்து பருகியவன் முகம் சுழித்தான். ‘என்ன? காஃபி கண்றாவியா இருக்கே…? யார்? இதைப்போட்டது மட்டுமில்லாமல் இங்கே கொண்டு வந்தும் வைத்தது.’ என நினைத்தவனது முகம் கோபத்தில் சுருங்காமல் காரணம் தேடியது.

காஃபியை சிங்கில் ஊற்றியவன் கப்பை கழுவி வைத்தான். ‘பால் இல்லை, சர்க்கரை இல்லை, டிகாஷனும் இல்லாமல் எப்படி தான் இந்த காஃபியை போட்டார்களோ?’ என அவனால் நினைக்கமட்டுமே முடிந்தது.

அன்றைய வேலைகளை அவனது ஐபாட்டில் தட்டிப்பார்த்துக் கொண்டவன், தயாராவதற்கு கபேட்டை திறந்தவன் பார்வை துணிகள் அனைத்தும் அயன் பண்ணி ஒழுங்காக அடுக்கி வைத்திருக்கும் விதத்தினை இத்தனை நாள் கவனிக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டு, ஆடைகளை அணிந்தவன், எப்போதும் போல அறக்கப்பறக்க படிகளில் பறந்து வராமல், நிதானமாக நடந்து வந்தவன் சமையல்கட்டை எட்டிப்பார்த்தான். அங்கே மேகா கண்களில் தென்படாமல் போகவே, டைனிங் டேபிள் அருகே போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்து ஃபோனை நோண்டியவன் பார்வை அடிக்கடி சமையலறை பக்கமும் போய் வந்தது.

சிறிது நேரத்தில் காந்தா உணவுப் பதார்த்தங்களை கொண்டு வந்து மேசை மீது அடுக்கினார்.

“காந்தா இன்று ரீ போட்டது…..” என்றது மட்டும் தான் ஆதி.

“நான் தான் ஆதி தம்பி ரொம்ப நல்லா இருந்துச்சுல்ல….. எத்தனை வருச கைப்பக்குவம் தெரியுமா? தம்பி. டாங்சு தம்பி.” என்று காந்தா முகத்தை மறைத்து வெட்கப்படவும் அவனுக்கு ‘ச்சை…’ என்றானது.

தம்பி உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா? என்றவர் தானே தட்டை அவனுக்கு முன்னே எடுத்து வைத்து இட்லிகள் இரண்டை வைத்தவர், “ஆதி தம்பி இன்று சமையலும் நான் தான் சும்மா சூப்பராக இருக்கும். சாப்பிடுங்கள்.”

‘இவங்க தான் இட்லி செய்ததா? அது காஃபியை போல இருக்குமா? இல்ல வேற மாதிரி இருக்குமா என்று தெரியல்லியே…?’ என மனதுக்குள் புலம்பியவன் இட்லியை பிய்த்து வாயில் வைத்தான். 

“தம்பி நான் ரவா கேசரியும் செய்து வைத்திருக்கிறேன், கொண்டு வருகின்றேன் சாப்பிட்டு பாருங்கோ…! சும்மா சூப்பரா இருக்கும் தம்பி.”

அவன் தலையசைக்கவும் சந்தோசமாக உள்ளே போனார்.

‘இன்றைக்கு பார்த்து வீட்ல இருக்கிறவங்க ஒருத்தரையும் காணல்லயே? எங்கே போய் தொலைஞ்சாங்க…’ என அவனை யோசிக்க விடாது காந்தா கேசரியோடு வந்தார்.

“என்ன? தம்பி யோசனை. நல்லாச்சாப்பிடுங்கோ.” என்றவள் கேசரியை வைக்கப்போக, வேண்டாம் என கையால் தடுத்தவறன், சாப்பாட்டு தட்டை முன்னாலே தள்ளி வைத்து விட்டு எழுந்தான்.

தம்பி… ஏன்? ஏன்? சாப்பிடவில்லை என காந்தா ‘துருதுரு’க்கவும் உள்ளே கனன்ற சினத்தை அடக்கியவன், “இல்ல வேண்டாம் வயிறு வலிக்கிற மாதிரி இருக்கு என்றவாறு, மறுபடியும் சென்று ஷோபாவில் அமர்ந்து ஐ பாட்டை குடைந்து கொண்டிருந்தவன் முன்னாடி அமர்ந்த சரிதா, மகனை பார்க்கவும், நிமிர்ந்து அமர்ந்தவன் “என்னம்மா என்னிடம் ஏதும் சொல்ல வேணுமா?”

ஆமாம் என்பது போல தலையசைத்தவர்,வீட்டுக்கு சமையல் பண்றவங்க இரண்டு பேரை வேலைக்கு அமர்த்த ஏற்பாடு பண்ணு. முக்கியமாக நன்றாக சமையல் பண்றவங்களாக இருக்க வேண்டும்.

                    

Advertisement