இதழ் 05

அவள் கண்ட

கனவெல்லாம் 

நீர் பட்ட சாம்பலாய்

புகை கிளப்பி சென்றதோ… !

 பதின்மூன்று வயதிலிருந்தே அவனில்லாத கனவேதும் அவளிற்கில்லையே… உயிர் மூச்சே அவனென்று இருந்தவள், இன்று அவளாகவே அவன் வேண்டாம் என்று சொல்லி விட்டாளே…! கானும்  இடமெல்லாம் நிழலாய் அவன் வருவது போலிக்கும்.இன்று அந்த நிழலும் கானலாய் போனதோ… !

தூக்கத்தில் இருந்து எழுந்தவளிற்கு உடல் அசதியை கூட்ட, நடந்த நிகழ்வுகளை மறந்து ‘திரு திரு’ என விழித்துக்கொண்டிருந்தவளை பார்த்த மாமியார், “மேகா தூக்கம் சரியா போகல போலிருக்கு,இன்னும் கொஞ்ச நேரம் தூங்குமா… ?”

“ம்கூம்… வேண்டாம்… இப்போது தூங்கினால் இரவு தூக்கம் வராது. அத்தை.” என்றவளது தூக்கம் முழுதாக கலைந்து இயல்பு நிலைக்கு வந்தாள். 

“அத்தை நான் ஒரு விசயம் உங்களை கேட்கட்டுமா? “

“ம்…  ஒன்று இல்ல…  நாலஞ்சு கேளு. “

“அத்தை நான் இங்கே இனி சமையல் வேலை பார்க்கல்ல,காலேஜ்ல றிசல்ட் வரும் வரைக்கும் ஆடிட் ட்ரைனிங் போகலாம் என்றிருக்கின்றேன். போகட்டுமா? “

“நான் உன்னை தடுத்தேனா…? மேகா. 

முன்பிருந்தே சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றேன். நீ தான் கேட்பதில்லை. உன் புருசன் கூடவே அவன் கம்பனிக்கே போ. ட்ரெனிங்குக்கு போன மாதிரியும் இருக்கும். உன்னை பாதுகாப்பாக அனுப்பின மாதிரியும் இருக்கும். ஆதவன்கிட்ட சொல்லட்டுமா… ?”

வேண்டாம் என்பது போல வேகமாய் தலையாட்டியவள். “இல்ல அத்தை என்னோட படிக்கின்ற சினேகிதியுடைய அப்பாவின் ஆபீசுக்கு ட்ரெயினீஸ் வேணும் என்று சொல்லியிருந்தா… நான் அங்கேயே போகின்றேன் அத்தை. ப்ளீஸ்.” என்றாள் ஏக்கப்பார்வையோடு. 

” ‘சரி சரி’ உன் முகத்தை இப்படி வைக்காதே…  உன் சினேகிதி அப்பா பெயரையும், கம்பனியின் பெயரையும் சொல்லு நான் விசாரிச்சு பார்க்கின்றேன்.”

“ஓகே அத்தை தாங்ஸ்.நான் இப்போது போய் உங்களுக்கு சாப்பாடு செய்து எடுத்துக்கொண்டு வருவனாம். நீங்கள் சமத்தாய் சாப்பிடுவிங்களாம்.” என துள்ளி ஓடியவளை கேலிப் புன்னகையோடு நிறுத்தியவர். விழியசைவால் எங்கே என்று கேட்கவும், அசடு வழிய சிரித்தவள், “இன்று மட்டும் நான் சாப்பாடு செய்து கொண்டு வாறன்.நாளையிலிருந்து காந்தாவே செய்யட்டும். ” என்றாள். 

“தேவையில்லை. இனி நீ சமயற்கட்டுக்குள் போகவே கூடாது. நான் சொன்னேன் என்று காந்தாவை கூட்டி வா.”

“இல்லை… அத்தை… “

“நான் உன்னை காந்தாவை கூட்டிவரச்சொன்னேன்.” என்றவர் அமைதியாகிவிட சரி என்பது போல தலையசைத்தவண்ணம் காந்தாவை கூட்டி வருவதற்கு சென்றாள். 

அவள் சமையற்கட்டிற்குள் செல்லவும், அங்கே காந்தா புலம்பியவாறே, இரவு உணவு செய்வதற்கு தயாராகிக்கொண்டிருக்கவும், பின்பக்கமாக சென்று, காதருகில் பெரிதாக குரல் கொடுக்கவும்,  ஏற்கனவே தான் முழு வேலையையும் செய்து கொண்டிருக்கும் கடுப்பில், “யாரது நேரம் காலம் தெரியாமல், மனுசரை கடுப்பேத்துறது,” என்றவாறே திரும்பிய காந்தா, இவளைப்பார்த்ததும் இன்னும் கடுப்பாகி, 

“என்ன?  பாப்பா இவ்வளவு வேலையையும் நானே…! அனுமார் மலையை சுமப்பது போல, செய்ய முடியும் என்று நினைப்பில சுத்திக்கிட்டிருக்கியா?  வா வந்து மற்ற வேலைகளை கவனி…” என்றார். 

“சரி சரி’ நான் மற்ற வேலைகளை பார்க்கின்றேன்.” என்றவள் பம்பரமாக வேலைகளை செய்ய தொடங்கினாள். காந்தாவை  பார்த்து  பார்த்து பாவமாகவும் இருந்தது.

எல்லா வேலைகளையும் அவரே செய்வார் என்றால் பாவம் தானே தானும் இல்லாதபோதும் இவ்வளவு வேலைகளையும் மூன்று நேரமும் செய்வதென்பது இலகு அல்ல. இருந்த போதும் தனியாளாக எல்லாவேலைகளையும் இந்த வயதிலும் செய்வதால் தான் ஆள் இப்படி சிக்கென்று வயதானவர் போல தெரியாமல் இருக்கின்றார். என நினைத்தபடி, அரை மணிக்குள் எல்லா வேலைகளையும் முடித்து கிச்சினை ஒதுக்கி வைத்தபின் தான் இயல்புக்கு வந்தாள். 

 

“காந்தா உங்களை அத்தை வரச்சொன்னார்கள். வருகிறீர்களா?”

“ஏன்? என்னை அம்மா வரச்சொல்லுகிறார்கள் என அவளிடமே திரும்ப கேட்கவும்,” சிரித்தபடி எனக்கு தெரியாது? காந்தா. நீங்கள் அவர்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.” என்றவள் உணவு பதார்த்தங்களை எல்லாம் கைபிடி பாத்திரங்களில் எடுத்துக்கொண்டு போய் டைனிங் டேபிளில் அடுக்கி வைத்தவள், திரும்பி வந்து,  “காந்தா வேலை எல்லாம் முடிஞ்சுது என்றால் வாங்களேன் அத்தையிடம் போகலாம்.” என்றாள். 

“சரி பாப்பா வா போகலாம்.” 

“சரி வாங்க போகலாம். “

மேலே சென்ற இருவரையும் முறைத்த சரிதா,காந்தாவை பார்த்து,  “காந்தா உங்களை எப்போது வரச்சொன்னேன்.  இப்போது லேட்டாக வந்து இருக்கிறீர்களே சொன்னா சொன்ன நேரத்துக்கு வர மாட்டீங்களா…?” எனக் கடிந்து கொள்ளவும் காந்தாவை இரக்கமாய் பார்த்த மேகா அவளுக்காக சப்போர்ட் பண்ணினாள்.

“நான்தான் அத்தை லேட்டா விசயத்தை சொல்லிட்டேன். அவங்க நைட் சாப்பாடு செய்திட்டிருந்தாங்க அதை குழப்ப வேண்டாம் என்று, பிறகு சொல்லலாம் என்று நினைத்தேன்…” என்று இழுக்கவும்

 

“நான் உன்கிட்ட எந்த கதையும் கேட்கல நான் கதைக்கிறது மட்டும் நீங்க கேட்டா போதும்.”

 “சாரி அத்தை சாரி சாரி நான்தான், என்னாலதான் மன்னிச்சிடுங்க.”

“காந்தா இனிமேல் மேகா சமையல் பண்ண, மற்ற வீட்டு வேலைகளை பாத்துக்க,என்று எதற்கும் வர மாட்டா… ? நீங்க அவளை உதவிக்கும் கூப்பிடக்கூடாது ஓகே. உங்களுக்கு உதவிக்கு ஆட்கள் தேவை என்றால், எத்தனை பேர் வேண்டும் என்று சொல்லுங்க… ஆட்களை புதுசா வேலைக்கு சேர்த்துடலாம். “

இதையெல்லாம் கேட்ட காந்தாக்கு தலையை சுற்றியது. சந்தோசத்தில் கண்கள் கலங்கின. “அம்மா நிஜமாவே இனி பாப்பா வேலைக்கு வராதா…? சந்தோசம் அம்மா. ஆட்கள் இரண்டு, மூன்று பேர் வேண்டும். சீக்கிரமா தந்தால் நல்லதும்மா…”

“சரி. காந்தா நீங்கள் கீழே போய் வேலையை பார்க்கலாம்.” 

“சரிமா நான் கீழ போறேன் நிறைய வேலை இருக்குது.” 

காந்தா கீழே போகவும் அவரைப் பார்த்த மேகா மாமியாரிடம் சொல்லிக் கொண்டு கீழே சென்றாள். 

“காந்தா நான் உங்கள் பின்னாடியே வந்தேன். நில்லுங்க. என்றுமேகா அவரைப்பார்த்து கூறவும் நின்ற  காந்தா,அவளை என்ன என்பது போல பார்க்கவும், 

“இல்லை. நான் இனிமேல் வரமாட்டேன் என்றதும் உங்களுக்கு பெரிய சந்தோசம் போல இருக்கே நான் உங்கள ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டேன் போல இருக்கு அப்படியா…?”

“அப்படி ஒன்னும் இல்ல கண்ணு நீங்க படுற பாட்டை நான் பாக்குறேன் தானே. உன் அம்மா தான் என்னை வேலைக்கு வைத்தார்கள். எனக்கு  அந்த நன்றிக்கடன் கூட இருக்கக் கூடாதா…? நீ சந்தோசமா இருக்கணும், என்று தானே நான் சாமி கும்பிடுறன். ஆனால் நீ தான் கேட்கிறதே இல்லை சரியான பிடிவாதம் இனிமேலாவது கடவுள் உனக்கு நல்ல வழியை காட்டட்டும்.” 

“நிச்சயமாக  இனிமேல் நான் சந்தோசமாக தான் இருப்பேன். நீங்களே… பாப்பீங்க காந்தா.”

“நீ சந்தோசமா இருக்கணும் பாப்பா கவலை எல்லாத்தையும் விட்டுட்டு நீ சந்தோசமா இரு.”

“கட்டாயமாக காந்தா. என்றவள் நான் கிளம்புகின்றேன். நீங்க போங்க நான் அப்புறமாக வந்து பார்க்க்கின்றேன்.”

“சரி பாப்பா நீ போ. “

இவர்களது கதைகளை எல்லாம் ஆதவன் காதுகள், கேட்டுக்கொண்டு இருந்தன. அவனுக்கு ஒரே யோசனையாகவும் இருந்தது. ‘இவ என்ன? ரொம்ப சந்தோசமாக திரியுறாப்போல இருக்கே…? திடீரென்று என்னவாக இருக்கும்.’ என யோசித்தவாறு, புதுசா ஏதாவது பண்ணி என் நிம்மதியை கெடுக்கிறதுக்கு ஏதாவது ப்ளான் பண்றாளா? அப்படி என்றால் முளையிலேயே கிள்ள வேண்டியது தான். இந்த  ஆதவனுக்கே ஆட்டம் காட்ட பார்க்கிறாளா? இவ ப்ளான் என்ன? என்பதை கண்டு பிடிக்கனும்.யார்க்கிட்ட கேட்கலாம். வேண்டாம். சரக்கு மலிஞ்சா சந்தைக்கு வரும்.அப்போதைக்கு பார்க்கலாம். தேவையில்லாமல் எதுக்கு ரென்சன். பிறகு பார்க்கலாம்.என நினைத்தவாறு வேலையில் மூழ்கிப்போனான். 

சரிதாவின் ரூமுக்கு வந்த மேகா “அத்தை நான் நாளைக்கு ஹாஸ்டல் எங்க இருக்குது என்று போய் விசாரிச்சுட்டு வர்றேன். என்ர பிரெண்ட் ஒருத்தி ஹாஸ்டல்ல இருக்கிறா. அங்கேயும் போய்  பாத்துட்டு வாரேன் அங்க நல்ல ரூம் ஏதாவது இருந்தால் நான் அங்கேயே தங்குவதற்கு, நீங்க மறுப்புச் சொல்ல மாட்டீங்க இல்ல அத்தை. ப்ளீஸ் அத்தை.”

“நீ கட்டாயம் ஹாஸ்டலுக்கு போகணுமா? வேண்டாம்டா  இங்கே இருந்துகொண்டே அப்படின்னு வேலைக்கு போயிட்டு வாயேன். எனக்கு ஆறுதலாக இருக்கும்.”

“அத்தை நான் இங்கே இருந்து முழுசாக விலகி போகணும் என்று நினைக்கிறேன். இனிமேல் உங்க மகன் வாழ்க்கையே நீங்க மாற்றுவதற்கான வழிய பாருங்க. என் வாழ்க்கைக்காக நீங்க கல்வியை தந்திருக்கிறீங்க அதுவே போதும். இனிமே உங்க பையன் பாத்துக்கோங்க அதுதான் நல்லது ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் இப்படியே இருக்கிறது ரொம்ப கஷ்டம். அவருக்கு புடிச்ச பொண்னை அவர் கல்யாணம் பண்ணிக்கட்டும். நீங்களும் சம்மதம் சொல்லி, அவருக்கு கல்யாணம் பண்ணி வையுங்க அத்தை. எவ்வளவு நாளைக்கு தான் இப்படியே நீங்களும், நானும் இருக்கிறது. எதுவுமே மாறாது என்கின்ற போது ஏன்?  வீண் பிடிவாதம் பிடிக்கணும்.”

சரிதா பேசாமல் இருக்கவும் மேற்கொண்டு மேகாவே பேசினாள். “அத்தை நாளைக்கு உங்களுக்கு கிளினிக் ஹாஸ்பிடலுக்கு போகணும் ரெடியா இருங்க காலைல போகலாம் நான் தான் உங்க கூட நான் ஹாஸ்பிடலுக்கு வருவேன் ஓகேவா அத்தை இப்போது தூங்கப்போகலாம். வாங்க என்று அழைத்து சென்று அவரை அவரது பெட்டில் படுக்க வைத்து, பெட்சீட்டை 

இடுப்பு வரை இழுத்து மூடி,  லைட்டை அணைத்து விட்டு அவள் இடத்தில் போய் படுத்துக் கொண்டாள். 

அடுத்த நாள் காலை ஒன்பது மணி அளவில் ஹாஸ்பிடல் செல்வதற்கு தயாராகி இருவரும் வெளியே வரவும், டிரைவர் காருடன் தயாராக இருந்தார். இருபதும நிமிட போக்குவரத்திற்கிடையில்  ஹாஸ்பிட்டலை அடைந்தவர்கள் அங்கே டாக்டரை சந்தித்து சரிதாவின் உடல்நிலையை செக் பண்ணி முடித்த பின்னும், அவர் கொடுத்த மருந்துகளையும் பெற்றுக் கொண்டு கொண்டவள், மறுபடியும் டாக்டரிடம், “டாக்டர் அத்தைக்கு ஒன்றும் இல்லை தானே இனிமேல் ஓகே ஆக நடமாடலாம் தானே, ஒரு பிரச்சினையுமில்லை தானே, என்று ஆயிரம் தடவைகள் விசாரித்து விட்டாள். 

“என்ன பொண்ணுமா நீ அத்தை மேல அக்கறை இருக்கிறது  தான் அதற்காக இப்படியா…?” என  டாக்டர்  சிரித்துக்கொண்டே பதில் கூறினார். 

“சாரி…  டாக்டர். இவ எப்பவும் இப்படித்தான். தன்னை தவிர எல்லாரையும் நல்லா கவனிப்பா.நீங்க இவ கேள்வி கேட்டா பதிலே சொல்லாதீங்க… ?”

“சரி. சரிதாம்மா உங்களுக்கு நூறு வீத உடல்நிலை சரியாகி விட்டது. அதுக்காக நீங்க இப்போது உடம்பை அலட்டிக்காமல் இன்னுமொரு மூன்று மாதத்திற்கு இருந்தால் நல்லது.மற்றப்படி தந்திருக்கின்ற மாத்திரைகளை டெய்லி யூஸ் பண்ணுங்க, வாக்கிங் போங்க அது ரொம்ப முக்கியம். அதையும் விட முக்கியமாக மனசை ரிலாக்ஸாக வச்சிருங்க, அவ்வளவு தான்.” என டாக்டரிடம் சில பல அட்வைசுகளை வாங்கிக்கொண்டு,இருவரும் காரில் ஏறி,ட்ரைவரை எடுக்கச்சொல்ல கார் நகர்ந்தது. 

“அத்தை காலைல ஹாஸ்பிட்டல் வர்ற வேகத்தில் சாப்பிடவே இல்லை. அடுத்த தெருவில் இருக்கின்ற ரீ கபேல காஃபி சாப்பிடலாம்?  நீங்களும் வாங்களேன்.”

“எனக்கும் பசிக்கிற மாதிரி இருக்கு மேகா. அந்த கடையில் வடை கூட நல்லாருக்கும் சாப்பிடலாம். டிரைவர் வண்டியை கடையோரம் நிப்பாட்டுங்க… “

“ஆ… .சரிம்மா. “

“காரில் இருந்து இறங்கி உள்ளே சென்று தனித்தனியே போடப்பட்டிருந்த வட்ட மேசையின் கீழ் அமர்ந்தபடி, அத்தை ரொம்ப நல்லா ப்ளான் பண்ணி இந்தக்கடையை கட்டியிருக்காங்க பாருங்க… முதலாளி ரசிகனாய் இருக்க வேண்டும்.”

“கடை முதலாளிக்கு ரசிக்க வருமா?  இல்லையா?  என்று எனக்கு தெரியாது? ஆனால் நீ மிகப்பெரிய கலாரசிகை என்று உன் ஐந்து வயதிலேயே எனக்கு தெரியும்.”

“ஆ….  அதெல்லாம் உங்களுக்கு நினைவிருக்கிறதா… “

“ம்ம்…  நன்றாக திவ்வியமாக தெரியும். “

“சரி அத்தை நான் ஒரு கேள்வி உங்களை கேட்கட்டுமா.”

“ம் கேள்… “

“ஏன்?  அத்தை. இத்தனை பாசம்,அன்பு,அக்கறை எல்லாம் என் மீது வச்சிருக்கீங்க…”

“ஏனென்றால் உன் அப்பழுக்கில்லாத இயல்பு எனக்கு பிடிக்கும். என் உயிர் தோழியின் மகள். என் சொந்த மருமகள். ஆதவனை நீ கல்யாணம் பண்ணல்ல என்றாலும் நீ எனக்கு மருமகள் முறை தானே… “

“உங்கள் மகனை வைபோஸ் பண்ணி கட்டிக்கிட்டது மட்டுமில்லாமல், என்னால தான் அவரோட நீங்கள் கதைக்கிறதுமில்லை. என் மீது உங்களுக்கு கொஞ்சக்கோபம் கூட இல்லையா? “

“இல்லையே…  நீ தான் எனக்கு மருமகளாக வரவேண்டும். என பல நேரங்கள் ஆசைப்பட்டதுண்டு. ஆனால் எதிர்பாராத வகையில் திடீர் என கல்யாணம் நடக்கும் என நினைக்கவில்லை. அதிர்ச்சி என்றாலும்,எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா? “

“அப்போதே உங்கள் வீட்டுக்கு நான் வேலைக்காரியாக வருவது தெரிந்து விட்டது போலவே.”

“அடப்போடி…  உன்னை வீட்டுக்குள்ளே கொண்டு வரதுக்கு எவ்வளவு கஸ்ரப்படுறேன். நீ கூட அந்தளவுக்கு முயற்சி செய்ததில்லை. “

பேரர் வரவும் வடைக்கும்,காஃபிக்கும் ஆடர் பண்ணி விட்டு,கதை பேசிக்கொண்டிருக்கும் போதே, தூரத்தில் ஒரு பெண் வருவதை கவனித்தாள் முகம் நிறம்மாறி திரும்பியது. 

அப்பெண் இவர்களை கவனிக்காது இவர்களை கடந்து சென்று இவர்களுக்கு பின்பக்கமாக இருந்த மேசையில் அமர்ந்து  கொண்டாள். அமர்ந்த சிறிது நேரத்திலே அவள் வாசலை நோக்கி அடிக்கடி பார்வையை திருப்பி பார்த்ததிலிருந்தே, யாரோ வரவிற்காய் காத்திருப்பது தெரிந்தது. 

“அத்தை நம்மளுக்கு பின்னால இருக்கிற பொண்னை  திரும்பி பாருங்களேன்… “

இவள் சொன்னதற்காக திரும்பி பார்த்தவர் அதிர்ச்சியை காட்டாது, “அவளுக்கென்ன… ?” என்றார். 

“ரொம்ப அழகான பொண்ணுல்ல அத்தை, நல்ல எலுமிச்சை பழக்கலர்ல இருக்கா. “

‘ம்… இவ வாழ்க்கை நாசமாப் போனதே அவளால தான் என தெரியாமல், அவளை பார், அவ அழகை பார் என்று என்கிட்ட சொல்றாளே… இவளை என்ன?  செய்தால் தகும்.’ என மனதுக்குள்ளே நினைத்தவர் அவளை பார்த்து “எனக்கு அந்த பெண்  மேல் எந்த அபிப்பிராயமும் இல்லை.”

“ஏன் அப்படி சொல்றீங்க… ” எனும் போதே அவர்களது வடையும், காஃபியும், வரவே அவர்கள் கதையை நிறுத்தி விட்டு, தாங்கள் வந்த வேலையை கவனிக்க தொடங்கினார்கள். 

அத்தை இப்போது சாப்பிட்ட பிறகு தான் எனக்கு இரண்டு கண்ணும் கிளியரா தெரியுது. இவ்வளவு நேரமும் பசியில் கண் இருட்டியெல்லோ, கிடந்தது.”

“சரி சாப்பிட்டு முடிஞ்சுது. காஃபியும் குடிச்சாச்சு,  கிளம்பலாமா…?”

“ம் கிளம்பலாம் அத்தை.”

சரிதாவின் ரிப்போட் இருந்த பையை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தவள் பார்வை வாசலை நோக்க, அங்கே ஆதவன் மிகவும் அவசரமாக வந்து கொண்டிருந்தான். 

“அத்தை உங்கள் மகனுக்கு நீங்கள் இங்கே வந்திருப்பது தெரியும் போல.அவர் இங்கே தான் வருகின்றார். பாருங்களேன்.”

மேகாவின் கதையை கேட்ட மாமியாருக்கு எதுவோ சரியில்லாமல் நடக்கப்போவது தெரிந்து எந்த ஸ்ரெப்பும் எடுக்க முடியாமல் தடுமாறி நின்றவருக்கு தெரியும். மகன் தன்னை பார்க்க வரவில்லை என்பது.