இதழ் 04

கண்ணீர் கடல் 

வற்றிப்போனதனால்…

வரண்டு போய் கிடக்கும்

அவள் விழிகள்… 

அதனால்

அழுகை கூட அவளை

கைநீட்டி…

ஆறுதல் கொடுக்க…

அணை(ழை)க்கவில்லை…!

அவள் சற்று நேரத்தில் கண்களை திறந்தவள், இயல்புக்கு வந்திருக்கவே…  தண்ணீர் குழாயை திறந்து முகத்தை நன்றாக நீரடித்து கழுவியவள், தன் துப்பட்டாவால் அழுந்த துடைத்தவள்,  தன்னை சமப்படுத்திக்கொண்டு வெளியே வந்தாள். ஆனால் உள்ளுக்குள் மொத்தமாய் தான் வெடித்து சிதறியிருப்பதை வெளிக்காட்டாது வெளியே வந்தவள் சரிதாவின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

அருகிலே அமர்ந்தவளை பார்த்த மாமியார், “மேகா அழுதியா… உன் முகமெல்லாம் வித்தியாசமாக இருக்கிறதே…” என அவளது கன்னத்தை வருடியவர் கைகளை அழுந்தப்பற்றியவள் அழவில்லை என்பது போல ஒரு புன்னகையை சிதறவிட்டாள். அவளுக்கு தான் தன் சோகங்களை சிரிப்பிற்கடியில் மறைப்பதற்கு நன்றாக தெரியும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. 

அவர் முகத்தை பார்த்தவள், “அத்தை எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை… நீங்கள் கவலைப்படாமல் ரெஸ்ட் எடுங்கள். நான் வேணும் என்றால் உங்களுக்கு கதை சொல்லட்டா…” என்றாள் கனிவோடு. 

“ம்…  என் பேரப்பிள்ளையை தூக்கி வைத்து கதை சொல்கிற வயதில் எனக்கு நீ கதை சொல்லி தூங்கவைக்க போகின்றாயா… ?” 

எனக்கூறி விழிகளை மூடவும் கண்ணீர் கோடாக வழிந்து தலையணையை நனைத்தது.

“அச்சச்சோ… அத்தை… நான் உங்களை சமாதானப்படுத்த தானே விளையாட்டுக்கு சொன்னேன். நீங்கள் அதை பெரிதாக எடுத்துக்கொண்டு அழுதால், உங்கள் மகன் நான் உங்களை கொடுமை பண்ணினேன் என்று நினைத்து புதிதாக ஏதாவது களோபரம் பண்ணிடப்போகின்றார்.” என்றாள் சிரிப்பும், பயமுமாக.

“அவன் கிடக்கிறான் அருமை தெரியாத பயல். அவனை எல்லாம் திருத்த முடியாது. அவனாக திருந்தினால் தான்…” என்றவரது குரலிலும் கவலை தோய்ந்திருந்தது. 

“அத்தை இப்போதைக்கு அதெல்லாம்   நீங்கள்யோசித்து குழம்ப வேண்டாம். இந்தப்பிரச்சனைக்கு கொஞ்சநாளைக்கு நீங்க லீவு கொடுங்கள் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். எல்லாம் சரியாகும் நம்புங்க…”  என்றாள். 

அவளது ஒற்றை வார்த்தையில் அவர் முகம் ஒளிபெற்றது. “மேகிம்மா… நிஜமாத்தான் சொல்லுறியா…? எல்லாம் சரியாகிவிடும் இல்ல… கடவுளே… நீ தான் என் மகனையும், மருமகளையும் நல்லபடியாக வாழ்வைக்க வேண்டும். அப்படி நடந்தால் நான் உனக்கு என் மருமகள் கையாலேயே பொங்கல் வைக்கின்றேன்.” என படிப்படியாக பல திட்டங்களை போட்டவர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. 

அவரது சந்தோசத்தை விழியெடுக்காது பார்த்தவளுக்கு அவள் சொன்ன பொய்யால் வருத்தம் ஏற்படவில்லை. 

இவர்களது பேச்சை தடுக்கும் வகையில்,கதவை திறந்து உள்ளே வந்த ஆதவன் தன் ஃபோனை பாண்ட் பாக்கெட்டினுள் வைத்தபடி தாயை நிமிர்ந்து பார்த்தவன், அவர் முகத்திலிருந்த மகிழ்ச்சியை நீண்ட காலத்திற்கு பின்பு பார்த்ததில் அவனது முகம் இளகியிருந்தது. 

அவனது அம்மாவின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சிக்கு காரணம் எதுவாக இருந்தாலும் அது மேகாவினால் தான் இருக்கும் என நினைத்தவன், அதனை என்னவென்று அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. இருந்தாலும் தாயிடம் அவள் என்ன?  சொல்லியிருக்ககூடும் என அவன் தன் மனதுக்குள் கேட்டுக்கொண்டிருந்தான். 

தன் மனதுக்குள் நடக்கும் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து அதனை தூக்கி மூலையில் போட்டவள் தன் மாமியாரை கவனித்துக்கொள்வதில் தன் கவனம் முழுவதையும் செலுத்தியவள், தன் பிரச்சனைகள் அனைத்தையும் தற்காலிகமாய் மூட்டை கட்டி பரண்மீது போட்டு விட்டு, மாமியாருடன் ஒன்றினாள். 

இவள் கவனிப்பையும், பராமரிப்பையும்  ஆதவன் பேச்சின்றி கவனித்தபடி தன் வேலையில் ஆழ்ந்திருந்தான். 

இருவரது வாழ்க்கையும், ஒரே இடத்தில் இருந்தாலும் வேறு திசைகளை நோக்கிச்சென்று கொண்டிருந்தது. இதற்கான தீர்வு, அவன் நினைத்தால் உடனே பெற முடியும் அதற்கு அவன் அதைப்பற்றி யோசித்தால் தானே…!

இன்றோடு இரண்டு வாரங்களுக்கு மேலாகி விட்டது. சரிதா ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டுக்கு திரும்பி, அவர் மேகாவின் கவனிப்பால் தேறியிருந்தாலும், இதுவரையும் அவரது றூமில் ரெஸ்ட் எடுத்தவாறே இருக்கிறார். இதுவும் மேகாவின் ஏற்பாடு தான். தன் வேலைகளை எல்லாம் காந்தா பொறுப்பில் ‘விட்டு விட்டு’ சரிதாவிடம் கவனத்தை திருப்பிக்கொண்டாள். 

சரிதா விழித்திருக்கும் நேரமெல்லாம் அவருடன் கதை பேசுவாள். முடிந்தவரைக்கும் ஆறுதல் வார்த்தைகள் கூறி சமாளித்து வைத்திருந்தாள். அவர் தூங்கும் நேரமெல்லாம் இவள் தன்தனிமையை விரட்ட, தனக்குள் தானே பேசிக்கொண்டிருப்பாள். 

அன்றும் அதே போல தன் மனதுக்குள் தானே பேசி, தானே விடையளித்துக்கொண்டிருந்தாள். அதை பார்ப்பவர்கள் அவள் ஆழமாக ஏதோ யோசித்து கொண்டிருக்கின்றாள் என நினைத்துக்கொள்வார்கள். ஆனால் அவளது முகபாவனையை வைத்தே அவளது எண்ணங்களை கண்டுபிடித்துவிடுவார் சரிதா. 

அவள் ஏதோ தீவிரமாக யோசிப்பதை பார்த்தவர். “மேகா…  மேகா” என்று இரண்டு முறை அழைக்கவும், தன் எண்ணக்களுக்குள் புதைந்திருந்தவள் அவர் கூப்பிட்டதை கவனியாது சிலையென அமர்ந்திருந்தாள்.

மறுபடியும் “மேகா… என்னடா… ஏதாவது பிரச்சனையா?  இப்படி யோசனையாக இருக்கின்றாய்… எழும்பி அத்தைக்கு பக்கத்தில வந்து உட்காருடா…”  என  சரிதா  உரத்து அழைத்தவுடன் மேகா எனும் சிலை தன்னிலை பெற்று அவசரமாக எழுந்து, “என்னத்தை ஏதாவது வேணுமா?  பாத்ரூம் போகப்போறியளா?” என்றவாறு அருகில் வந்தவளை பார்த்து தலையசைத்தவர்… ” என்ன?  மேடம் ஏதோ ஒரு யோசனை உங்களுக்குள்ளே ஓடிற்றிருக்கு போலவே…” என்றவர். 

“ஆ… அது ஒண்ணுமில்ல அத்தை.சும்மா ஈஈஈஈ…” என சமாளித்தவளை பார்த்து “இங்கே எனக்கு பக்கத்தில வந்து உட்கார். உட்கார்ந்து உனக்கு என்ன?  வேண்டும் எண்டாலும் அத்தைக்கிட்ட சொல்லுடா… ” என்றார். 

அவரது காலடி பக்கத்தில் இருந்த மெத்தைப்பகுதியில் அமர்ந்து அவரது காலை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு விரல்களுக்கு சொடக்கு எடுத்தவள், “இல்லங்கத்தை அப்படியெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. எனக்கு எதாவது வேணும் என நினைப்பவர்கள் நீங்கள் வாங்கித்தந்து விடுவீர்களே…?”.

என்றாள். 

“ம்… உண்மைச்சொல்லு மேகா. நீ அப்படி ‘ஆகா ஓகோ’ என்று நீ நினைக்கிறியா…”.என்றார். 

” …’ஆகா ஓகோ’, என்று வாழ்ந்தால் தான் வாழ்க்கையா? அத்தை. படுக்கிறதுக்கு ஒரு இடம். சாப்பிட மூன்று வேளை சாப்பாடு… இதுக்கு மேல என்னை நல்லா பாத்துக்க நீங்க, என எல்லாம் இருக்கே அத்தை. இதுக்கே முடியாமல் இந்த உலகத்தில் எத்தனை கோடி பேர் இருக்கும் போது எனக்கு என்ன?  ராணி மாதிரி தான் இருக்கின்றேன். என்னைப் பற்றி கவலைப்பட்டு நீங்க மனசை வருத்தக்கூடாது… ஓகேயா?”

என்று அவரை சமாதானப்படுத்தினாள். 

“அடப்போடி… எப்ப பாரு வாயில ரெடிமேட்டா வார்த்தையை வச்சிருப்பியே… என்னை கதைக்க விடாமல் பண்ணுவதற்காக… என்றவர், சரிடா தண்ணீர் குடிப்பதற்கு இல்லை போல போய் எடுத்துக்கொண்டு வாடா…” என்றார். 

அவள் தண்ணீர் எடுக்கப்போன இடைவெளியில் தாயை பார்பதற்காக உள்ளே வந்து அருகில் அமர்ந்த மகனை கணாதது போல அருகிலிருந்த ரீவி ரிமோட்டை எடுத்து சேனல்களை மாற்றி பார்த்த வண்ணம் இருந்தவரின், கைகளை பற்றி ரிமோட்டை பிடுங்கி அருகில் போட்டவன், “அம்மா… ப்ளீஸ்மா… உங்க பிரச்சனை என்ன?  நான் மேகாவோட குடும்பம் நடத்தி, குழந்தை, குட்டி பெற்று வாழனும்.அதுதானே…? உங்க ஆசை 

பண்ணித்தொலைக்கின்றேன்… என்னால் முடியல்ல என்றாலும், முயற்சி பண்றேன். அதுக்காக தானே என்னோடு பேசாமல் இருக்கிறீங்க…? ” என்றவனது குரல் சுரத்தை இல்லாமல் ஒலித்தது. 

அருகிலே மகன் பறித்துப்போட்ட ரிமோட்டை மறுபடியும் எடுத்து சேனல்களை மாற்ற ஆரம்பித்த தாயின் பிடிவாதம் உணர்ந்து மகன் பின்வாங்கினான். 

ஆதவன் தாயின் அறையை விட்டு சோர்வுடன் வெளியேறுவதை, கதவின் பின்பக்கமாக மறைந்து நின்று பார்த்துக்கொண்டிருந்த மேகா, அவன் தன் அறைக்குள் நுழைந்து கதவை மூடிய பின்னரே மாமியாரின் அறைக்குள்ளே தண்ணீர் போத்தலோடு உள்ளே நுழைந்தவள் சரிதாவை முறைத்தாள். 

“என்னடி…? என்ன…? முறாய்ப்பு. உன் புருசன் கூட நான் பேசாமல் இருந்தால் நீ முறாய்க்கலாம். நான் என் பையனோட பேசுவன்… பேசாமல் இருப்பேன் அதில உனக்கு என்ன?  வருத்தம்.” என்றார் நக்கலாக. 

“ம்… என் புருசனும்… உங்கள் பையனும் வேற வேற ஆட்கள் இல்லை அத்தை இரண்டு பேரும் ஒரே ஆள் என்பதை நீங்களே… அடிக்கடி மறந்திட்டால் என் நிலமை என்னாவது?” என யோசிப்பது போல பாவனை செய்தவள் அவரது கைகளில் தண்ணிர் போத்தலை கொடுத்து, அவர் குடித்து முடித்ததும், தண்ணீர் போத்தலை வாங்கி வைத்தவள், மறுபடியும் அவரருகில் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

“மேகா… நீ முறைத்து பார்த்ததை பார்த்து பெரிய சண்டையாக போடப்போகின்றாய் என்று பார்த்தால் அமைதியாக இருக்கியேடி… அப்ப நீ ஏதும் சொல்லப்போறதில்ல… அப்படித்தானே… நல்ல வேளை தப்பிச்சன்டா சாமி…” என்ற சரிதாவை  சாந்தமாக பார்த்தவள், 

“அத்தை ஒருகை தட்டினால் எப்படி ஓசை வராதோ, அதே போல என் பேச்சை நீங்க கேட்கப்போவதில்லை என்று தெரிந்த பின் நான் ஏன் பேசணும்.  அம்மாவாச்சு…

பையனாச்சு என்று போய்க்கிட்டே இருக்கணும். “

“அடிப்பாவி உனக்காகத்தானே நான் என் பையனோட அடிச்சுக்கிறன்.”

“அதை தேவையில்லாத ஆணி எண்டு தான் நானும் சொல்றன்.  உங்க மகன் தான் கடைசி வரைக்கும் உங்க கூட வர்ற சொந்தம் என்றதை நல்லா ஞாபகம் வச்சுக்கங்க அத்தை.”

“அது சரி மேடம் நீங்க என்னை விட்டுட்டு எங்கே போறதா இருக்கீங்க எண்டு தெரிஞ்சுக்கலாமா… ?”

“அத்தை…  நான் உங்க கூட ஆயுள் வரைக்கும் இருக்க தயார் தான். அப்படி நடந்தால் உங்கள் மகன் உங்களருகில் இருக்கமாட்டார். அவரோட இப்பவெல்லாம் நீங்க பேசுவதில்லை. அதனால் உங்களுக்கும், அவருக்கும் எத்தனை மனக்கஸ்ரம். இதை பார்க்கிறப்போதெல்லாம் என்னால தான் என்று எனக்கு குற்றவுணர்ச்சியா இருக்கு… என்பதை விட அது நாளுக்கு நாள் அதிகமாகிட்டே இருக்கு. “

“என்னடி சொல்ற…? புரியுற மாதிரி சொல்லுடி மேகா… “

“அத்தை இந்த வீட்டிலயே உங்களை விட்டா என்னை பார்த்துக்கிறதுக்கிறதுக்கு யார்?  இருக்கா?  எனக்கு என் அப்பா, அம்மா எல்லாம் யார் என்றது கூட ஞாபகமில்ல. எத்தனையோ நாளா நான் நினைச்சிருக்கேன் உங்க வயிற்றில் நான் ஏன்?  பிள்ளையாகப்பிறக்கல்ல… என்று… அவ்வளவு அன்பையும் என் மீது காட்டுற என் அத்தை இப்பல்லாம் எனக்கா சப்போட் பண்ணி வீட்ல இருக்கிற மத்தவங்களோட பகைச்சுக்கிறது நல்லாவே இல்ல அத்தை. முக்கியமாக ஆதி அத்தானோட பேசுறது இல்ல. அவர்கூட நல்லபடியாக பேசுங்கள் என்று எத்தனையோ தரம் கெஞ்சியும் நீங்க கேட்கலியே அத்தை.”

“……. “

“அத்தை…  நான் ஆதி அத்தானை  கட்டிக்கிட்டேன். ஆனால் அதுக்கு பிறகு நடந்தது என்ன? என்பது உங்களுக்கு தெரியும் தானே அத்தை. இன்னும் இருபது வருசம் பினால் கூட இரண்டு பேர் வாழ்க்கையும் எந்த மாற்றமும் இல்லாமல் தான் இருக்கும்.

“அதுக்கு….” 

“அப்படி இருப்பதற்கு பதிலாக அவர் எப்போதோ கேட்ட டிவோஸ். அதை நான் அவருக்கு குடுக்கப்போகின்றேன் அத்தை அதுக்கு நீங்க சம்மதம் சொல்லணும் அந்த ஏற்பாட்டை முற்றுமுழுதாக நீங்களே நடாத்தி தரவேண்டும்.”

“உன் வாழ்க்கையைப்பற்றி ஏதாவது நினைச்சுப் பாத்தியாடி… கூறுகெட்டவளே… ?”

“அத்தை… இரண்டு பேரும் இந்த கல்யாணம் என்ற முடிச்சில இருந்து வெளியே வந்தாலே பாதிப்பிரச்சனை முடிஞ்சு போயிடும் என்பது உங்களுக்கே தெரியும் தானே அத்தை. ப்ளீஸ் அத்தை என்னால முடியல்ல… இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்படி இருந்தால் நான் செத்திடுவேனோ என்று பயமா இருக்கு அத்தை. அதை விட நான் கல்யாண வாழ்க்கையில தோத்து போய் பின்வாங்கலாம் என்று முடிவு பண்ணிட்டேன்.”

“டிவோஸ் வாங்கிட்டு என்ன பண்றதா இருக்கீங்க மேடம். “

“றிசல்ட் வருவதற்கு இன்னும் மூணுமாசம் வெயிட் பண்ணணும். எக்ஸாம் நல்லா எழுதியிருக்கேன் எப்படியும் கம்பஸ் இன்ரவியூல நல்ல வேலை கிடைச்சிடும் அத்தை. “

“இதுக்குதான் கட்டினால் அவனைத்தான் கட்டுவேன் என்று கையை அறுத்துக்கிட்டியா, அப்போதெல்லாம் பெரிசா பீத்திக்கிட்டு திரிஞ்ச… உன் காதலை கடைசி வரைக்கும் கைக்குள்ளே வச்சு காப்பாத்துவேன், கடைசி வரைக்கும் ஆதவனை விட்டு போகமாட்டன் என்று சொன்னதெல்லாம் வெறும் வாய் வார்த்தை தானா… ?”

“அவர் என் கழுத்தில விருப்பமில்லாமல் தாலி கட்டிய போதே நான் தோத்துப்போனேன். அதுக்கு பிறகும் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இப்போது இல்லாமல் போச்சு… காலம் முழுவதும் ஒரே வீட்ல தனித்தனியாக, கீரியும், பாம்பும் போல இருந்தால், உங்களால் அதை பார்த்து மகிழ்ச்சியாக இருக்க முடியுமா?  சொல்லுங்க அத்தை.”

“என்னடி இப்படி இடையிலே போறதுக்கு தான் அவனை அந்தப்பாடுபட்டு கட்டிக்கிட்டியா… ?”

“இல்ல… இல்ல…இல்ல… அவர்கூட ஆயுள் முழுவதும் வாழ ஆசைப்பட்டு தான் கட்டிக்கிட்டேன்… அத்தை… அதனால் நான் ரொம்பவே இழந்ததுட்டேன்.இனி இழக்கிறதுக்கு உயிரை தவிர எதுவுமில்லை… காதலுக்கு கண் இல்லை என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் எனக்கு அத்தானை கல்யாணம் பண்ணணும் என்கின்ற பேரவாவில் மூளை கூட வேலை செய்யல… கல்யாணம் நடந்தால் என்கூடவே இருப்பாங்க. என்னை விட்டுட மாட்டாங்க என்று எனக்குள் நானே கனவுக்கோட்டையை கட்டிக்கொண்டேன். ஆனால் அது கனவு தானே… எல்லாம் தரைமட்டமாக போயிடுச்சே… ” என ஜன்னல் வழியே தெரிந்த வானத்தை வெறித்தபடி நின்றவளது கண்கள் வழியே கண்ணீர் கோடாக இறங்கியது. 

“அழாத மேகாம்மா… நீ அழுகிறதை தாங்கிற சக்தி இந்த அத்தைக்கு இல்லை. உன்னை கண்கலங்காமல் பாத்துக்கொள்றேன் என்று உன் அம்மாக்கிட்ட வாக்கு கொடுத்திருக்கின்றேன். அதில இருந்து நான் தவறிட்டேனோ என்கிற குற்றவுணர்ச்சிக்கு ‘மேலும் மேலும்’ தள்ளாத தாயி. நீ துடிக்கிற ஒவ்வொரு நிமிசமும் நான் தீக்குள்ளே நிக்கிறது மாதிரி இருக்கு கண்ணம்மா…” என்றவரது விழிகளும் குளமாகியதை கண்டவள் சரிதாவின் அருகே அமர்ந்து அவரது கண்ணீரை மென்மையா துடைத்து விட்டாள்.

“அத்தை உங்களை மாதிரி யாராலும் என்னை பொறுப்பாக பார்க்க முடியாது. என் அம்மாக்கு கெடுத்த வாக்கை விட பல மடங்கு மேலாக பாத்துக்கொள்ளும் உங்களை நான் கஷ்டப்பட வைக்கின்றேன் என்பது தான் எனக்கு மிகவும் கஷ்ரமாக இருக்கிறது. எனக்காக உங்கள் மகனுடன் கூட கதைக்காமல் இருக்கின்றீர்கள். மாமாவுடன் கூட கருத்து மோதல்கள், சித்தி, என் அம்மா கூட பிறந்தவங்க தான் என்றாலும் அவங்களோ,  சித்தப்பாவோ,அவங்க பசங்களோ, என்னை எப்பவும் கண்டுக்க மாட்டாங்க. நீங்க அதையும் தாண்டி என்னை உங்களுடைய மக மாதிரி பாத்துக்கிறீங்க…  இப்பிடி எல்லோராலயும் முடியாது. அப்படிப்பட்ட உங்களையே மனவருத்தப்பட வைத்த பாவி நான்.” என தன் தலையில் அடித்துக்கொண்டவளை பார்த்து அவரால் பரிதாபப்பட மட்டுமே முடிந்தது. 

தன்னை சரிப்படுத்தியவள். “அத்தை நான் இங்கே இருக்கப்போகும் இந்த மூன்று மாதங்களுக்குள், நான் செய்ய வேண்டியன எல்லாவற்றையும் செய்து விடுவேன். எல்லோரது புன்னகையையும் அவரவர்க்கே கொடுத்து விட்டு தான் போவேன்.” என்பதை தலையை ஆட்டியவாறு கூறியவளது முகத்தில் பதினெட்டு வயதில் இருந்த துணிச்சலான மேகனா வந்து போவதைப்போன்றிருந்தது அவருக்கு. 

பேசி முடித்தவள் அப்படியே சுருண்டு சரிதாவின் கால்களை கட்டிக்கொண்டு அவரது மடியில் முகத்தை புதைத்து ஒரு மூச்சு அழுது தீர்த்தவள் அப்படியே உறங்கியும் போனாள்.