Advertisement

இதழ் 03

சரவணன் மேகாவிடம் பணத்தை கொடுக்க திரும்பவும்,  கதவை திறந்து கொண்டு அவர்களது வீட்டில் வேலை செய்யும் காந்தா உள்ளே வந்தாள். வந்தவளை எல்லோரும் பார்க்க “அம்மா… மேகாப்புள்ள… ரொம்ப நேரமா இங்கே நிக்குது… அதான் நான் உங்களுடன் இருந்து கொண்டு  அதை வீட்டுக்கு போய் சுத்தப்படுத்திக்கொள்ள அனுப்பலாம் என்று தான் வந்தேன். “என கூறியவாறு தன் கையிலிருந்த மேகாவினுடைய குட்டி வோலட்டையும், சாப்பாட்டுபாசலையும் கையில் கொடுத்தவர் சாப்பிட்டு நீ கிளம்பு பாப்பா…” என்றவரை நன்றியுடன் பார்த்தாள் மேகா. 

மேகாவின் முக மாற்றத்தையை பார்த்துக்கொண்டிருந்த சரிதா அந்த இடத்தில் தான் முற்றுமுழுதாக காந்தாவிடம் தோற்றுவிட்டதை உணர்ந்து மனதளவில் அடி வாங்கி நின்றார். 

“மேகா நீ முதலில் போய் சாப்பிடு…” என்ற சரிதாவை பார்த்த மருமகள் “முதலில் நீங்கள் சாப்பிடுட்டு விட்டு மாத்திரையை போடுங்கள்,அதற்கு பிறகு நான் சாப்பிடுகின்றேன்.” என்று பிடிவாதம் பிடிக்க வேறுவழியின்றி வாயைத்திறந்து உணவை வாங்கினார். 

உணவை ஊட்டி முடித்து, வாயை துடைத்து, மாத்திரையை போடவைத்து விட்டு, காந்தா கொடுத்த வோலட்டையும், சாப்பாட்டு பையையும், அழுக்குதுணி இருந்த பையையும் கையிலெடுத்தவள் “அத்தை இப்போது  நான் வீட்டுக்கு போகின்றேன், ஒருமணி நேரத்துக்குள் திரும்பி வந்து விடுவேன், நீங்கள் சமாளித்துக்கொள்வீர்களா?” என்றாள். 

“இல்ல… குட்டிம்மா…  நீ இப்போது திரும்பி வர வேண்டாம் நன்றாக ரெஸ்ட் எடுத்து விட்டு இரவுக்கு வா. ” என்றார். 

“இல்லை அத்தை அவ்வளவு நேரம் எல்லாம் உங்களை தனியாக விட்டுவிட்டு என்னால் அங்கே இருக்க என்னால் முடியாது. நான் சீக்கிரமாக வந்துவிடுவேன்.” என்றவாறு கிளம்பினாள். அவள் பின்னே வந்த மாமனார் “மேகாம்மா வா ஆட்டோ பிடித்து விடுகின்றேன்” என கூறி ஆட்டோ ஒன்றில் ஏற்றி அவளை பத்திரமாக கொண்டு போய் விடுமாறு ஆட்டோகாரனிடம் கூறி பணத்தையும் கொடுத்தார். 

மருமகளை அனுப்பி விட்டு உள்ளே வந்தவர், மனைவியின் கண்டன பார்வையில் தயங்கி நின்றார். 

“நீங்கள் இப்போது எங்கே போனீர்கள்…”

“மேகா தனியா போறாளே…  அவளை ஆட்டோவில் ஏற்றி விட்டு வருகிறேன்மா… ஏன்?  ஏதாவது பிரச்சனையா?”

இல்லை என்பது போல் தலையசைத்த சரிதா கணவனை பார்த்து, “நான் உங்களிடம் தனியாக பேசணும்…  இவனை வெளியே போய் இருக்கச்சொல்லுங்கள்.” என்றார்.

“பேசலாம் சரிதா…! ஆனால் இப்போது உனக்கு உடம்பு சரியில்லை சரியானதும் பேசலாம்.”

அவர் பிடிவாதமாக “இல்லை. இப்போது  நான் பேச வேண்டும்.” என்று உறுதியான குரலில் கூறவும் மகன் அடிபட்ட பார்வையுடன் எழுந்து வெளியே செல்லவும், கணவனை நிமிர்ந்து பார்த்து தன்னருகில் இருந்த ஆசனத்தில் அமருமாறு சைகையால் கூறவும், மனைவியின் வார்த்தையை தட்டாது அமர்ந்து அவரின் கையை பிடித்து வருடியவாறு, “என்னிடம் என்ன…? கேட்க நினைக்கின்றாய் சாரு…” என்றார் செல்லமாக. 

“இப்போது நீங்க ஏன்…? மேகா பின்னாடி போனீர்கள்… .”

என்ன?  கேள்வியிது என்று பார்த்தவர், “நம்ம மேகா தனியாக போறாளே…! அது தான் ஆட்டோ பிடித்து அனுப்புவதற்கு… “

இப்போது இப்படி விழுந்தடித்து ஓடியவர், “நேற்று ஏன்…? அப்படிச்செய்தீர்கள்.”

“நான் என்ன…? செய்தேன். புரியும்படி சொல்லும்மா… “

“முதல் நாள் ராத்திரி மேகா சாப்பிடவில்லை. அதற்கான காரணமும், உங்கள் மகனின் பேச்சு என எல்லா விடயமும் சொல்லியிருந்தேன். நேற்று காலை அவளை ஆஸ்பத்திரிக்கு கூட்டி வரும் போதும் அவள் எதுவும் உண்ண, குடிக்கவில்லை. அதற்கு பிறகும் அவள் இப்போது வரை ஏதுவும் சாப்பிடவில்லை.  இன்று காலை சாப்பாடு எனக்கு வந்தது. அவளிற்கு ஏன்?  சாப்பாடு அனுப்பவில்லை. “

“என்னது…? மேகா இரண்டு மூன்று நாளாக சாப்பிடவில்லையா…! “

“ஆமாம். நீங்க தானே…. குடும்ப தலைவன் நான் இல்லாத நேரம் நீங்கள் தானே இதையெல்லாம்  கவனிக்கனும். அதை ஏன்?  செய்யவில்லை.  நம்ம வீட்டு வேலைக்காரம்மா காந்தவிடம், மேகா விடயத்தில் தோற்றுப்போய் நிற்கின்றேன்.”

“என்னம்மா… நம்ம வீட்ல பொருளுக்கோ, பணத்துக்கோ இதுவரை பஞ்சமில்லை. அப்படியிருக்க உணவுக்கு தட்டுப்பாடு வருவானேன். மேகாக்கு சாப்பாடு இல்லாமல் போவானேன். ” 

“அது…   உண்மையாக குறைகின்றதா…? இல்லை வேண்டுமென்றே குறைக்கப்படுகின்றதா…? என்பதை நீங்கள் தான் கண்டு பிடிக்கவேண்டும். நான் ஹாஸ்பிட்டலில் இருந்து வரும் போது இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்க வேண்டும்.  அது பத்தாது என்று உங்க பையன் ரொம்ப பண்றான்.” என்றவரது குரல் சோர்வை காட்டியது. 

“சரிம்மா… நானும் இப்போது இருக்கின்ற புது புரஜெட் விடயத்தில் மைண்டை வைத்திருப்பதால் வீட்டை நீ பார்ப்பாய் என நினைத்தேன்.” என்றவர் மனைவியிடம் மன்னிக்கும்படி பார்வையால் வேண்டி நின்றார். 

“நான் என்னதான் வீட்டிலுள்ள மற்ற விடயங்களை பார்த்தாலும், முடிவெடுத்தாலும்,  மேகா விடயத்தில் அவன் தானே எல்லா முடிவுகளையும் எடுக்கின்றான். மீறி அவளுக்காக ஏதாவது கதைத்தால் தண்டனையை அவளுக்கல்லவா வழங்கிவிடுகின்றான். அவ என்னடா என்றால் அவன் கொடுக்கும் தண்டனைகளை மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக்கொள்கின்றாள்.  இவங்க இரண்டு பேர் விஷயத்திலும் என் சொல் எடுபடாது, நீங்க தான் ஏதாவது செய்ய வேண்டும். “

“சரிம்மா… நீ என்ன?  சொன்னாலும் செய்கின்றேன். நீ நல்லபடியாக உடம்பு குணமாகி வீட்டுக்கு வா, இரண்டு பேரும் சேர்ந்து நம்ம பிள்ளைகள் விடயத்தை சரிபண்ணலாம். இப்போது நீ கொஞ்ச நேரம் ஓய்வெடும்மா…” என்றார். 

தலையசைத்த படி அவர் கரங்களுக்குள் தன் கரத்தை பிணைத்தவாறு கண்ணயர்ந்த மனைவியை பார்த்தபடி இருந்தவரை  “இப்போது அம்மாவுக்கு உடம்புவலி எப்படி இருக்கின்றது.” என்றவாறு அவரது சிந்தனையை கலைத்த மகனை எந்த வித உணர்ச்சியுமின்றி பார்த்தவருக்கு அத்தனை கோபம் உள்ளே இருந்தாலும் அடக்கிக்கொண்டு, “இன்னும் உயிரை விடவில்லை, கொஞ்சநாளையில நீயாவே விட வைத்துவிடுவாய் போலவே… ஆதவா…” என்றவரது குரலில் அத்தனை வலியிருந்தது. 

அவரது வார்த்தைகளில் அடிவாங்கி நின்றான். கடற்கரையோரம் காருக்குள் இருந்த அவனது மனதும் புழுங்கிக்கொண்டிருந்தது.   அவன் மட்டும் வேணும் என்று ஏதாவது செய்கின்றானா…? என்ன…? அவனுக்கும் ஆசாபாசம் எல்லாம் இருந்ததே…! அவனுக்கும் மனசு ஒன்று இருந்து, அதில் காதல் என்ற ஒன்றும் இருந்தது ஆனால் அது மேகனா மேல் இல்லை அவனுடன் படித்த பெண் அனுராதா மீது.  இவதான் பிடிவாதம் பிடித்து என்னை கட்டிக்கிட்டா… அதில இருந்து பிடிச்ச கிரகம் இன்னும் விடவில்லை. மனசு இரண்டும் இணையாமல் எப்படி…? வாழ்க்கையை தொடங்குவது. இவ முகத்தை பார்த்தாலே பத்திக்கிட்டு வேற வரும். 

நடந்தவை எல்லாவற்றையும் மறந்து விட்டு மேகனாவுடன் வாழ்வை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும் போதே கண்ணீருடன் அவன் காதலி என்னை ஏமாற்றி விட்டாயே…! ஆதவன் என்று அழுவது போல இருக்கும். 

மேகனாவை தண்டணை என்ற பெயரில் வீட்டை விட்டு ஸ்ரோர் றூமுக்குள் தள்ளி வைத்தான். பார்க்கும் நேரம் எல்லாம் வார்த்தைகளால் வதைத்தான். அவள் முகம் வாடுவதை பார்ப்பதில் அத்தனை ஆனந்தம். அவளுக்காக வீட்டில் இருக்கும் உறவுகள் ஏதாவது சப்போட் பண்ணி வந்தால் அவர்களையும் தள்ளி வைத்தான். அதன் காரணமாக யாரும் இவர்கள் இருவரது பிரச்சனைக்குள்ளும் தலையிடாது, தள்ளி நின்று வேடிக்கை மட்டும் பார்த்தனர். ஆனால் இப்போது எல்லாம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இவன் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்தாலும் மேகாவின் நலனை கருத்தில் கொண்டு எதுவும் பேசுவதில்லை. 

இவன் மேகனாவை தள்ளி வைத்தது எல்லோரையும் விட அவனது தாயாருக்கு மிகுந்த கவலை, அதனை இத்தனை நாளும் அவன் முன் வெளிக்காட்டுவதில்லை. இப்போதெல்லாம் ஜாடை, மாடையாக கூறிக்கொண்டு தான் இருந்தார். ஏனெனில் அந்த வீட்டில் அத்தனை பிள்ளைகள் இருந்தாலும் மேகா மட்டும் எல்லோருக்கும் ஸ்பெஷல் தான். அதுவும் அவனுடைய தாயாரின் செல்ல மருமகள். அவனுக்கும் ஒருகாலத்தில் அவள் சினேகிதி தானே… ! 

இன்று தந்தை சொன்ன வார்த்தை, சாட்டை கொண்டு அவனை அடித்தது போல இருந்தது.  இப்போது அவர்கள் வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்குமாக சேர்த்து முடிவெடுக்கும் நிலையிலிருப்பவனால், எந்த முடிவையும் எடுக்கும் நிலை புரியாதுதடுமாறி நின்றான். 

எதுவாக இருந்தாலும் முக்கியமான தொழில் விடயமாக அவன் கனடா செல்ல ஒருவாரம் இருக்கின்றது, அங்கே ஒரு மாதம் தங்க வேண்டும் அதற்கு பின் தான் கல்யாண வாழ்க்கை வேண்டுமா…? வேண்டாமா…? என முடிவு செய்யலாம் என நினைத்தவன் மறுபடியும் காரை செலுத்திக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு சென்றான். 

அங்கே போகவும் அப்போது தான் வந்திருப்பார்கள் போல வீட்டில் இருக்கும் அனைவரும் தாயாரை சுற்றி நலம் விசாரித்துக் நின்றனர். அவன் உள்ளே செல்லாது வெளியே இருந்த திவானில் தூணுக்கு அருகில் அமர்ந்து கண்களை மூடியவன் அப்படியே தூணில் தலையை சரித்தான்.

அப்போது தான் அவசரமாக உள்ளே வந்த மேகா மாமியாரை சுற்றி குடும்பத்தவர்கள் எல்லோரும் நிற்கவும் அவள் வெளியே வந்து எதிரே இருந்த திவானில் அமர்ந்தவள், கையில் இருந்த கூடையை தன் அருகில் வைத்தவள், தன் துப்பட்டாவால் முகம் முழுவதும் துடைக்க, வியர்வை ஊற்றாக பெருகவும் தன் துப்பட்டாவை விசிறி போல் சுழற்றியும் வியர்வையாறு நிற்காது பெருகியது. 

யாரோ தன்னருகில் வந்து இருப்பது போல தோன்றவும் கண்திறந்து பார்த்தவன் அவள் தன்னருகில் வியர்த்து விறுவிறுத்து அமர்ந்திருந்தாள். வெயிலில் நடந்தே வந்திருப்பாள் போல, அவளது பால் நிறம் சிவப்பாய் மாறியிருந்தது. ‘ஒரு ஆட்டோவை பிடித்து வருவதற்கு என்ன…?’  என நினைத்தவன் எதுவும் பேசாது  அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். 

அவளுக்கு மட்டும் இந்த வெயிலில் வேகினபடி வருவதற்கு ஆசையா… ? அவளிடம் காசிருந்தால் ஆட்டோவை பிடித்து வந்திருப்பாள்,  ஆனாலும் பஸ்சில் போகலாம் என்று நினைத்து பஸ்சுக்கு நின்று பார்த்தவள் அது வராமல் போக்கு காட்டவும் பொடிநடையாய் அடித்தள்ளிக்கொண்டு வந்தவளுக்கு பாதி தூரத்தில் தான் குடை கொண்டு வரவில்லை என்பது உடைத்தது. 

தோளில் கிடந்த துப்பட்டாவால் தலையை மூடியபடி நடையைக்கட்டியவளுக்கு, பங்குனி வெயில் பல்லை இளித்து காட்டியது மட்டுமல்லாது, எதிரே இருப்பவை எல்லாம் பசாடாக தெரியவும், அவள் தன் நடையை நிறுத்தவில்லை இரண்டு கிலோ மீற்றர்  தூரமும் நடந்தே… வந்து விட்டாள். உள்ளே வரவும் எல்லோரும் சுற்றி நின்று கதை பேசிக்கொண்டிருக்கவும் அவள் வெளியே வந்தமர்ந்தவள் அருகிலிருந்தவனை கூட கவனிக்காது தன் தலையை தூணில் சாய்த்தபடி கண்ணை மூடி தன்னை சமப்படுத்திக்கொண்டவளது முகம் இரத்தச்சிவப்பிலிருந்து தன்னிலைக்கு மாறிக்கொண்டிருந்தது.

அவளையே பார்த்துக்கொண்டிருந்த ஆதவன் அவளது தோற்றத்தை எடை போடத்தவறவில்லை. இப்படி சாதாரண சுடிதாரும், இடை வரை நீண்டு அடர்ந்த தலைமுடியை பின்னலிட்டு எதுவிதமான ஒப்பனையுமின்றி கொள்ளை அழகுடன் இருந்தவள் முன்பொரு நாள் எப்படியிருந்தாள் என்பதை நீண்ட காலம் கழித்து நினைவடுக்கில் இருந்து கிளறி, எடுத்தவனது மனக்கண்ணில், அவர்களது திருமணத்துக்கு முதலான அவளது தோற்றம் விம்பங்களாய் சிதறியது. 

இவளை பிடிக்காமல் போனது அவனுடைய வரமா… ? சாபமா…? என்பது இன்று வரை அவனுக்கு தெரியாத உண்மை. 

சிறிது நேரத்தில் கண்திறந்தவள் சரிதா இருந்த அறையை நோக்கி சென்றவள் உள்ளே சென்ற போது உறவினர் யாரும் இல்லை. பார்வை நேரம் முடிந்து வெளியேறி இருந்தனர். இத்தனை நேரமாகவா வெளியே தூங்கிக்கொண்டிருந்தேன் என தனக்குள் வெட்கியபடி கையில் கொண்டு வந்த பையை மேசை மீது வைத்து விட்டு மாமியாரின் அருகில் சென்றவள் “அத்தை உடம்பு துடைத்து, உடை மாற்றிய பிறகு சாப்பிடலாம்.” என கூறியபடி அவரை தூக்கி நிமிர்ந்தபடி அமர்த்தியவள் அவரை ஒரு கையால் பிடித்தபடி தலையணைகளை அடுக்க முயலவும் அவளுக்கு பின்னால் வந்த ஆதவன், அவள் தன் தாயையும் தூக்கி வைத்துக்கொண்டு பின்னாடி இருந்த தலையணைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி அதில் அவரை சாய்த்து அமர்த்துவது கடினம் என்பதை உணர்ந்தவன் தன் கைகளிரண்டாலும் தாயை அணைத்து பிடிக்க, அதனை உணர்ந்தவள் தன் கைகளை தளர்த்தியவள், வேகமாக பின்னே சென்று தலையணைகளை உயர்த்தி வைக்கவும்,  அவன் தாயை சாய்த்து அமர்த்தினான். 

மேகா அவரது முகத்தை துடைத்து, தலையை வாரி, “துணி மாற்றலாமா? அத்தை” என கேட்கவும், வேண்டாம் என்பது போல தலையசைத்தவர் “காலையில் மாற்றியது தானே இப்போது வேண்டாம்.” என கூறவும் அவரது பேச்சை கேட்டு தலையசைத்தவளை பார்த்து புன்னகைத்தவர் மகன் இருந்த பக்கம் திரும்பியும் பார்க்காமல் இருக்கவும், தாய் தன்னோடு பேசுவார் என்று காத்திருந்தவன், அவர் பேசாதிருக்கவும் அவரது கன்னத்தில் கைவைத்து முகத்தை திருப்பவும் திமிறியவர் வலியில் முனகவும் பதட்டத்துடன் தாயை விட்டு நகர்ந்தவன், விழிகள் கலங்கியிருந்தது. 

இவர்களிருவரது போராட்டத்துக்கு காரணமே அவள் தான் என்பது அங்கிருந்த மூவரும் அறிந்திருந்தாலும் யாரும் அதை வெளிக்காட்டவில்லை. 

தாயையும், மகனையும் சுமூகமாக்கி விட நினைத்தவள், கையில் வைத்திருந்த உணவுத்தட்டை அவனிடம் நீட்டியவள் “அத்தைக்கு ஊட்டி விடுங்கள் நான் கீழே பார்மசி வரை போய் வருகின்றேன்.” என்றவள் தட்டை அவனிடம் கொடுத்து விட்டு மருந்தின் பெயர் எழுதிய றிசீப்ற்றை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.

அவள் வெளியே செல்வதையே பார்த்தபடி இருந்த தாயின் அருகே சென்றவன் அவரது முகத்தை தன் பக்கமாக திருப்பி, “அம்மா… வாயைத்திறவுங்கள்.” என அவர் வாயருகில் உணவை கொண்டு போகவும் அவர் தலையை மறுபடியும் திருப்பிக்கொண்டார். 

“அம்மா ப்ளீஸ்… என்னை தண்டிப்பதாக நினைத்து, உங்களை நீங்களே வருத்திக்கொள்கிறீர்கள்… என ‘கரகர’த்த குரலில் கூறவும், அவனை வெற்றுப்பார்வை பார்த்து விட்டு, முகத்தை திருப்பிக்கொண்டார். 

கீழே சென்ற மேகா மருந்தை வாங்கிக்கொண்டு, மிக மெதுவாக நடந்து வந்தவள் கால்கள் தன்பாட்டில் அருகிலிருந்த கல்நாற்காலி அருகில் போய் நின்றது.  ‘அக்கம்பக்கம்’ பார்வையை சுழல விட்டவள் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கவே அங்கே அமர்ந்து கொண்டாள். அவள் மனம் மட்டும் நிலை கொள்ளாது பல சிக்கலுக்குள் சிக்கிக்கொண்டு விடுபட முடியாது தவித்துக்கொண்டிருந்தது. 

ஏதாவது செய்து இந்த சிக்கலுக்குள் இருந்து விடுபட்டே ஆகவேண்டும் என்று, தீர்க்கமான முடிவை எடுத்துக்கொண்டாள். இவளது முடிவால் அவளுக்கு நிம்மதி கிடைக்குமோ, இல்லையோ? அவளை சுற்றியுள்ளவர்கள் நீண்ட காலத்திற்கு பின்பு நிம்மதியாக இருப்பார்கள். என்பதே அவளுக்கு போதுமாயிருந்தது. இதற்கு மேல் இங்கிருந்தால் பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கவே எழுந்து நடையை கட்டியவளுக்கு உடல் முழுவதும் பசியால் சோர்வாயிருக்கவும், அங்கிருந்த கன்ரீனுக்குள் உள்ளே சென்று ரீயையும், பன் ஒன்றையும் ஆடர் பண்ணி வாங்கிக்கொண்டு தனியே ஓரிடத்தில் அமர்ந்தவள், ‘பன்’னை பிய்த்து ரீக்குள்ளே அமிழ்த்தியவளது விரல்கள் சுடவும் நினைவுக்கு திரும்பியவள் வெறும் கையை வெளியிலே எடுத்தாள். பண் ரீக்குள்ளே முழுவதுமாக புதைந்து போயிருந்தது.   ‘ச்சே ஒரு பன் கூட  ஒழுங்காக உண்ண முடியவில்லையே.’ என நினைத்தபடி ரீயை ஒதுக்கி வைத்தவள், கையிலிருந்த பன்னை ஏக்கப்பார்வையை பார்த்தவள் மறுபடியும் மனதுக்குள்ளே என்ன? நினைத்தாளோ? தெரியவில்லை…? இன்னுமொரு ரீயை ஓடர் பண்ணி           வாங்கியவள் தளர்வாக உட்கார்ந்து உண்டவள், ரீயையும் குடித்து முடித்து விட்டு, அங்கிருந்து கிளம்பியவள் மறுபடியும் ஓரமாக போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்தியவள்  ‘கொஞ்சம் கொஞ்சமாக’ சுற்றுவட்டத்தை கவனிக்கலானாள். 

கர்ப்பிணி பெண்கள் அவ்விடத்தில் அதிகமானளவு நடமாடத்தான் அது கர்பிணி தாய்மார்களின் செக்கப்பிற்க்கான இடம் என்பதை உணர்ந்தவள், அவர்களை நோக்கி தன் பார்வையை செலுத்தியவளது கை அவளது அடிவயிற்றை அழுத்தமாக வருடி நின்றது. 

அவளுக்கு எதிரே போய்க்கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணிகளை பார்த்தவளிற்கு, அவளையறியாது பெருமூச்சொன்று வரவும் திடுக்கிட்டவள்,’ எங்கே…? அவ்விடத்தில் நின்றால் தான் பொறாமைப்பட்டுவிடுவோம் என்ற நினைப்பே…! அவளுக்குள் திகிலைப்பரப்பியது மட்டுமல்லாது அவளது உடலில் தீயள்ளி கொட்டியது போல துடித்து போனவள் அவ்விடம் விட்டு ஓட்டமும் நடையுமாக சரிதா இருந்த அறைக்குள் வந்தவள் யாரையும் கவனிக்கும் நிலையில் இல்லை. கையிலிருந்த மருந்தை மேசை மீது வைத்தவள் அங்கிருந்த வோஸ்றூமிற்குள் புகுந்து கொண்டு கதவை  அடைத்தவள், அதன் மீது சாய்ந்து கொண்டு கண்களை இறுக்கமாக மூடியபடி தன்னை சமப்படுத்த நேரம் எடுத்துக்கொண்டாள். 

Advertisement