Advertisement

அத்தியாயம் -9(2)

சிறிது நேரத்தில் மகளை பார்க்க அரங்கநாதனும் கங்காவும் வந்தனர். விஜய் பாவனா இருவரும் முதல் நாள் மாலையே வந்து சென்று விட்டனர்.

அனைவருக்கும் மதிய விருந்து தயாரானது. அரங்கநாதனுக்கு பிருந்தா மீது வருத்தம் என்றாலும் வாங்க என அழைத்தவளிடம் முகம் திருப்பாமல் எப்போதும் போல பேசவே செய்தார். பிருந்தா இங்கு இருப்பது கங்காவுக்கு தெரியாது, கொஞ்சம் மகிழ்வாக திகைத்தவர் மகளிடம், “உன் அண்ணன் வருவான் கொஞ்ச நேரத்துல, பார்ப்போம் ஏதாவது நல்லது நடக்குதான்னு” என்றார்.

“யாரு பிரசன்னா அண்ணாவா?”

“ஆமாமாம். முதல்ல வரமாட்டேன், நீ அங்க வீட்டுக்கு வரும்போது பார்த்துக்கிறேன்னுதான் சொன்னான். உன் தங்கச்சி ஒண்ணும் இப்போ வர மட்டா, அவளை மட்டும் பார்க்க வான்னு சொன்னேன் அவன் யோசிக்கதான் செஞ்சான், அப்பா வந்திட்டு போடான்னு சொல்லவும் பார்க்கிறேன்னு சொல்லியிருக்கான்” என்றார்.

“பார்க்கிறேன்னுதான சொன்னான்?” சந்தேகமாக சொன்னாள் வைஷு.

“உங்கப்பா சொன்னா கண்டிப்பா வந்திடுவான். நீ வேணா பாரு” என கங்கா சொல்ல வைஷுவும் அண்ணன் மற்றும் அண்ணி சந்திப்புக்காக ஆவலாக காத்திருந்தாள்.

பிரசன்னா வருவான் என்ற நம்பிக்கை இருந்த போதும் வராமல் போய் விட்டால் என்ற நினைவும் கங்காவுக்கு இருக்க முன் கூட்டியே எதுவும் சொல்லவில்லை கங்கா, மகளையும் சொல்ல வேண்டாம் என சொல்லியிருந்தார்.

தாத்தா, பாட்டியோடு அமர்ந்து அரங்கநாதன், தேவா உணவை முடித்துக் கொண்டு ஹாலில் அமர பெண்கள் உணவருந்த அமர்ந்தனர்.

சௌந்தரி பின்னர் சாப்பிட்டு கொள்வதாக சொல்லி மற்றவர்களுக்கு பரிமாறினார். உறங்கிக் கொண்டிருந்த ரமணன் விழித்துக் கொண்டதாக வேலையாள் வந்து சொல்ல, ‘அவருக்கு சாப்பாடு கொடுக்கணுமே…’ என சௌந்தரி யோசிக்க, “போங்க பெரியம்மா, நாங்கதானே பார்த்துக்கிறோம்” என அனுப்பி வைத்தாள் பிருந்தா.

பிரசன்னா வந்து சேர்ந்தான், ஹாலில் அவனை வரவேற்பது காதில் விழ நிமிர்ந்து பார்த்தாள் பிருந்தா. அங்கிருந்து ஹாலை நன்றாக பார்க்க முடிந்தது. எதேச்சையாக பிரசன்னாவும் மனைவியை பார்த்து விட்டான். ஆனால் இருவருமே வெகு அழகாக தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என காட்டிக் கொண்டனர்.

தேவா அவனை சாப்பிட அழைக்க, ஏற்கனவே சாப்பிட்டு விட்டதாக மறுத்தான். பிரசன்னா குணம் தெரிந்ததால் தேவாவும் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை.

ஏதோ எடுக்க வந்த சௌந்தரி பிரசன்னா வந்திருப்பது அறிந்து ஹால் சென்று வரவேற்றார். பாட்டி ஏதோ கேட்க பேசிக் கொண்டு அங்கேயே நின்று விட்டார்.

சாப்பிட்டு முடித்திருந்த பிருந்தா ஹால் வந்து பெரியம்மா கையில் இருந்த கிண்ணத்தை வாங்கிக் கொண்டு, “பெரியப்பாக்கு நான் சாப்பாடு கொடுக்கிறேன், நீங்க சாப்பிடுங்க” என சொல்லி கணவனை நிமிர்ந்தும் பாராமல் சென்று விட்டாள்.

தன்னை வா என அழைக்காமல் கூட செல்கிறாள் என்பதிலும் வேண்டுமென்றே ரமணனுக்கு உணவூட்டுகிறேன் என என் முன்னாலேயே சொல்லி செல்கிறாள் என்பதிலும் கோவம் வரப் பெற்றவனாக பிரசன்னா அமர்ந்திருக்க அரங்கநாதனுக்கும் மருமகளின் செயலில் அதிருப்தி.

பாட்டி சங்கடமாக பார்க்க, “இன்சல்ட் செய்யணும்னு நினைச்சு பிருந்தா செய்யல, ஏதோ கோவம் வருத்தம். அவளை பத்தி தெரியாதவங்களா நாம? பெருசு பண்ணாதீங்க” என்றான் தேவா.

“பிருந்தாகிட்ட நீ பேசி சரி செய்யேன் பிரசன்னா” என்றார் பெரியவர்.

“என்ன சரி செய்யணும் நான்? உங்க பேத்திய யாரும் விரட்டி அடிக்கல. உங்க பையன் மாதிரி நானும் அவளை விட்டுட்டு…” என்றவன் அரங்கநாதனின் பார்வையில் அமைதியானான்.

“சொல்லுங்க பிரசன்னா, முழுசா சொல்லி முடிங்க” என்றான் தேவா.

“என்ன சொல்லணும் நான்? நான் எப்படி என்னன்னு உங்க எல்லாருக்கு தெரியும், என்ன பெரிய தப்பு பண்ணினேன்னு வீட்டை விட்டு போனா அவ. இப்போவும் ஒண்ணுமில்ல, வர்றேன் கூட்டிட்டு போங்கன்னு ஒரு வார்த்தை சொல்ல சொல்லுங்க, எதுவும் கேட்காம கூட்டிட்டு போறேன். அதை விட்டுட்டு… ஓவரா பணிஞ்சு போறதாலதான் வீட்டை விட்டு போற அளவுக்கு தைரியம் வருது? இனி பணியறதா இல்லை” என்றான் பிரசன்னா.

தேவா தன் தங்கைக்கு பரிந்து கொண்டு பேச இருவர் பேச்சிலும் சூடு பறக்க ஆரம்பிப்பது போல இருக்க தாத்தா தன் பேரனை அங்கிருந்து அப்புற படுத்தினார்.

வைஷு பழச்சாறு எடுத்து வந்து தன் அண்ணனுக்கு கொடுக்க தங்கையை விசாரித்து இரண்டு வாய் பருகியவன் வேலை இருப்பதாக சொல்லி கிளம்பி விட்டான்.

பெரியப்பாவுக்கு உணவு கொடுத்து விட்டு அந்த அறையிலேயே இருந்த பிருந்தாவுக்கு அழைப்பு வந்திருப்பதாக சொல்லி அவளிடம் கைபேசியை தந்து சென்றாள் வைஷு. அலுவலக அழைப்பு என்பதால் ஏற்றவள் பேசிக் கொண்டே அறையை விட்டு வந்தாள்.

அப்படியே பேசிக் கொண்டு ஹாலின் பக்கவாட்டு பகுதி வழியாக வீட்டிற்கு வெளியில் வந்து விட்டவள் நடந்து கொண்டே பேசினாள்.

பிரசன்னா காருக்கு போக நடந்து கொண்டிருக்க அவன் மீது மோதி நின்றாள் பிருந்தா. விழாமல் அவள் நின்று கொண்டாலும் இயல்பாக அவள் கையை பிடித்துக்கொண்டான் அவன்.

பிருந்தா கையை விலக்க முனைய உடனே விட்டு விட்டவன் குற்றம் சாட்டும் பார்வையோடு அவளை பார்க்க அவள் நிமிர்வாக நின்றிருந்தாள்.

“என்ன… நான் வந்து கெஞ்சி கூப்பிட்டாதான் வருவியா? எப்பவும் நான்தான் கெஞ்சணுமா? ரொம்ப இடம் கொடுத்திட்டேன்ல உனக்கு?” எனக் கேட்டான்.

“கெஞ்சி கூப்பிட்டா வந்திடுவேன்னு நினைப்பா?” எனக் கேட்டு சிரித்தாள் பிருந்தா.

“கால்ல விழணுமா?” கேட்டுக் கொண்டே அவளை நெருங்கினான்.

“தொட்டீங்க பிச்சிடுவேன்!” அதட்டினாள்.

“எங்க உண்மையை சொல்லு, மாமனை நீ மிஸ் பண்ணல?”

“யாரு நீங்களா கேட்கிறது! நான் வேற யாரையோ மிஸ் பண்ணிட்டதா சொன்னீங்க” இகழ்ச்சியாக கேட்டாள்.

“அதுக்கு என்கிட்ட சண்டை போடணும் நீ, ஆமாம்னு சொல்லிட்டு அம்மா வீட்டுக்கு பயந்து ஓடக் கூடாது”

“பயந்திட்டு போனேனா… அப்படி சொன்னா வந்திடுவேன்னு நினைச்சீங்களா?”

“என்னதான் டி வேணும் உனக்கு?” பற்களை கடித்து எரிச்சலாக கேட்டான்.

“மாறணும் மாமா நீங்க, அதை நான் உணரணும்”

“மாற நான் என்ன தப்பு செய்றேன்?”

“உங்ககிட்ட பேச நேரமில்லை எனக்கு, நீங்க இப்படியே இருங்க” என்றவள் திரும்பி நடக்க, அவள் கரத்தை வலிக்க பிடித்தவன், “ஒழுங்கு மரியாதையா வீடு வந்து சேர். நம்ம ரூம்குள்ள வச்சிக்கலாம் சண்டையை” என்றான்.

“எனக்கு சண்டை போடுற மூட் இல்ல, விடுங்க என்னை” என்றவள் அவன் கையை உதறி விட்டு செல்ல, “போடி போ… நியாயம் பிரசன்னா பக்கம்தான், வருவ தானா என்கிட்ட வருவ” என்றான்.

“நீ மாறவே மாட்ட பரங்கிமலை. அந்த மலை அளவுக்கு இருக்கு உன் ஹெட்வெயிட். அது குறையாம நான் வரவே மாட்டேன்” என சொல்லிக் கொண்டே அவன் கண்களில் இருந்து மறைந்து விட்டாள்.

‘வந்து விட மாட்டாளா என்னிடம்’ என்ற ஏக்கம் இருந்த போதும் முறுக்கிக் கொண்டு சென்றான் பிரசன்னா.

இன்னும் ஒரு வாரம் சென்றிருக்க பிருந்தாவே பிரசன்னாவை தேடிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.

இவளின் அறக்கட்டளை மூலம் அவன் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருத்திக்கு சிக்கல். முதல் வருடம் படிக்கும் ஆனந்தி எனும் மாணவி அவள் வகுப்பு மாணவன் தமன் எனும் மாணவனுடன் மாலை நேரம் வகுப்பு முடிந்த பின் பேசிக் கொண்டிருக்க ஆசிரியர் பிடித்து விட்டார் இருவரையும். விசாரித்ததில் இருவருக்கும் காதல் என தெரிய வர ஒரு வாரம் இடை நீக்கம் செய்யப் பட்டு விட்டனர்.

பெற்றோரை அழைத்து வர வேண்டும் எனவும் கூறப் பட்டிருக்க ஆனந்திக்கு வீட்டில் சொல்ல பயம். அறக்கட்டளை மூலம் பயிலும் மாணவர்களை பிருந்தாவுக்கு நன்றாக தெரியும், ஆகவே இவளின் உதவியை நாடி வந்து விட்டாள் ஆனந்தி.

பிருந்தாவுக்கும் கோவம்தான்.

“எவ்ளோ கஷ்டத்துல உன் படிப்புக்காக உன் அப்பா என்கிட்ட பேசினார், எப்படி பொறுப்பில்லாம நடந்திருக்க நீ?” எனக் கோவப்பட்டாள்தான்.

ஆனந்தி மன்னிப்பு கேட்டதுடன், “இனிமே நான் கரெக்ட்டா இருக்கேன் மேடம். சார்கிட்ட என்ன கெஞ்சியும் அப்பாவை அழைச்சிட்டு வந்தே ஆகணும்னு சொல்லிட்டாங்க. இனிமே செய்ய மாட்டேன், ஒழுங்கா படிக்கிறேன் மேடம். அப்பாகெல்லாம் தெரிஞ்சா… அவர் முகத்துல எப்படி முழிப்பேன்…” எனக் கேட்டு தேம்ப ஆரம்பித்து விட்டாள்.

இனி படிப்பில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும் என உறுதி பெற்றுக் கொண்ட பிருந்தா ஆனந்திக்காக பிரசன்னாவை சந்திக்க சென்றாள்.

அலுவலக அறையில் மனைவியை கண்டதும் கண்களும் இதழ்களும் மலர, “வாங்க சண்டிராணியம்மா, இவ்ளோ நாள் ஆகுமா என்கிட்ட வர?” எனக் கேட்டான்.

சலித்துக் கொண்டே அவன் முன் அமர்ந்தவள் எதற்கு பார்க்க வந்திருக்கிறாள் என கூற அவன் முகம் கடினமாகி விட்டது.

“இங்க டிஸிப்பிளின்தான் ஃபர்ஸ்ட். ட்ரஸ்ட் மூலம் படிக்கிற பொண்ணுக்கு இன்னுமே அக்கறை வேணாமா? படிக்கிற வயசுல என்ன மானங்கெட்ட லவ் கேட்குது? வரட்டும் அந்த பொண்ணோட அப்பா, அப்பதான் அவளுக்கும் பொறுப்பு வரும், மத்த ஸ்டூடண்ட்ஸுக்கும் பயம் வரும்”

“ப்ச்… உங்க காலேஜ்ல யாரும் லவ் பண்றதே இல்லைனு நினைப்பா உங்களுக்கு?”

“என் காலேஜ் கேம்பஸ்ல யாரும் ஜோடியா சுத்துறது இல்ல. இதுக்கு முன்னாடி இப்படி மாட்டினவங்களையும் இப்படித்தான் ஹேண்டில் பண்ணினேன். இந்த பொண்ணு மட்டும் ஸ்பெஷல் இல்லை”

பிருந்தாவுக்கு நன்றாக தெரிந்தது இவன் மனம் மாறப் போவதில்லை என. இருந்தும் ஆனந்தியின் அப்பா கோவத்தில் படிப்பை நிறுத்தி விட்டால் என்ன செய்வது, அந்த பெண் அப்பாவுக்கு தெரிந்த அவமானத்தில் தற்கொலை என தவறான முடிவு செய்து விட்டால் என்னாகும்? என்றெல்லாம் சொல்லி பார்த்து விட்டாள்.

“நீ ரொம்ப யோசிக்காத, இதை சும்மா விட்டா மத்த பசங்களும் இப்படி நடப்பாங்க. உன் டைம் வேஸ்ட் பண்ணாத” என்றான்.

எழாமல் அமைதியாக அங்கேயே அமர்ந்திருந்தாள் பிருந்தா. நீ என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் எனும் விதமாக அவனது அலுவல்களை பார்க்க தொடங்கி விட்டான் பிரசன்னா.

“ஓகே மாமா, எனக்காக செய்ங்க. ப்ளீஸ், அவ அப்பாவை எல்லாம் பார்க்க வர சொல்லாதீங்க. இனிமே கரெக்ட்டா இருப்பா. நான் பொறுப்பு” என கெஞ்சலாக கேட்டாள்.

நிமிர்ந்து அமர்ந்தவன், “இன்னொரு முறை சொல்லு” என்றான்.

“என்ன? எனக்காக செய்ய சொன்னேன், ஏன் நான் கேட்டா என்ன வேணா செய்வேன்னு டயலாக் எல்லாம் விட்டீங்க, செய்ய மாட்டீங்களா?”

கைகளை உயர்த்தி சோம்பல் முறித்துக் கொண்டவன், “என் கூட இல்லாதவளுக்காக எல்லாம் எதுவும் செய்ய மாட்டேன்” என்றான்.

பிருந்தா கோவமாக பார்க்க, “வா வந்திடு என்கிட்ட, நீ கேட்டது கேட்க போறது எல்லாத்தையும் செய்து தரேன்” என்றான்.

முழுதாக ஒரு நிமிடம் கடக்க, வேறு வழி தெரியாமல், “வர்றேன்” என்றாள்.

“ம்ம்.. இங்கேர்ந்து நாம சேர்ந்துதான் வெளில போறோம்… நேரா நம்ம வீட்டுக்கு, ஹ்ம்ம்?” புருவங்களை உயர்த்தி கேள்வியாக அவன் பார்க்க, முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு சரி என்பது போல தலை அசைத்தாள் பிருந்தா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement