Advertisement

மெல்ல உன் வசமாகுறேன் -9

அத்தியாயம் -9(1)

கல்லூரியின் துணை முதல்வருக்கு இரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப் பட்டு சிகிச்சை அளிக்க பட்டது. மாலை வரை பிரசன்னா மருத்துவமனையில்தான் இருந்தான்.

வீட்டுக்கு புறப்பட்டவனுக்கு வரும் வழியெல்லாம் பிருந்தா பற்றிய சிந்தனைகள்தான். ‘சீக்கிரம் சமாதானம் ஆக மாட்டாளே… ஹ்ம்ம்… சமாளிப்போம்’ என நினைத்துக்கொண்டே கார் ஓட்டினான்.

இரவு நெருங்கும் நேரம் வீடு வந்தவன் அப்பாவிடம் விவரம் சொல்லி விட்டு அறைக்கு செல்ல அங்கு பிருந்தா இல்லை. குளித்து விட்டு அம்மாவிடம் வந்தவன் காபி கேட்டுவிட்டு, “பிருந்தாகிட்ட கொடுத்து அனுப்புமா” என்றான்.

“அவ இன்னும் வரலையேடா. ரெண்டு பேரும் சேர்ந்துதான் போனீங்க… நீ ஹாஸ்பிடல் போகவும் அவ மில் போய்ட்டானு நினைச்சேன். எங்க அவ?” என இவனிடம் கேட்டார் கங்கா.

அம்மாவிடம் எதுவும் சொல்லாமல் கோவம் பொங்க பிருந்தா கைபேசிக்கு அழைக்க அழைப்பு துண்டிக்க பட்டது. இரண்டாவது முறை எல்லாம் அழைக்கவில்லை. தன் அத்தைக்கு அழைத்தவன் அங்குதான் பிருந்தா இருக்கிறாள் என்பதை உறுதி செய்து கொள்ள, “என்னாச்சு பிரசன்னா? கோச்சுக்கிட்டு வந்திட்டாளா இங்க?” என பயந்து போனவராக கேட்டார் நிர்மலா.

“ஏன் இதுவரைக்கும் அவகிட்ட நீங்க கேட்டுக்கலையா?”

“வந்தவ ட்ரெஸ் மாத்திட்டு தூங்கிட்டா”

“ம்ம்… இப்போதான் என் கால் கட் பண்ணினா, எழுந்திருப்பா, அவகிட்டயே கேட்டுக்கோங்க அத்தை” என்றவன் கைபேசியை வைத்து விட்டான்.

பிரசன்னாவுக்கு சொல்லொனா கோவம். அதென்ன கோவத்தில் அங்கு செல்வது? யாரிடமும் சொல்லக்கூட இல்லை. இங்கு இருந்து கொண்டே என்ன சண்டை வேண்டுமென்றாலும் போடட்டும், எப்படி அவள் அங்கு செல்லலாம்? மனதில் பொருமியவன் யாரிடமும் பேசாமல் அறைக்குள் முடங்கி விட்டான்.

இங்கே நிர்மலா மகளிடம் கேட்டதற்கு, “சும்மா குடைஞ்சு குடைச்சு கேள்வி கேட்காதம்மா. நான் கொஞ்ச நாள் இங்க இருக்கேன், உனக்கு பிடிக்கலைனா வேற எங்கேயாவது போறேன்” என்றாள்.

இப்போது மகளிடம் எதுவும் பேசக்கூடாது என நினைத்தவர் கணவருக்கு அழைத்து விவரம் சொல்ல அவருமே பயந்து போனார். அவர் முறையாக அரங்கநாதனுக்கு அழைத்து பேச, “நான் என்னன்னு அவனை கேட்கிறேன் மாப்ள, என்ன இப்போ ரெண்டு நாள் இருந்திட்டு வரட்டும்” என்றார் அரங்கநாதன்.

மனைவியிடம் சின்ன மகனை அழைத்து வர சொல்ல, “இப்போதான் நிர்மலா பேசிச்சு. இதுங்க எப்பவும் அடிச்சிக்கிறதுதான். நீங்க ஏதும் பேசி பெருசு பண்ணிடாதீங்க” என்றார் கங்கா.

அரங்கநாதன் தன் மனைவியை முறைக்க, “அப்படியே விட்டா அவங்களா சரியாகிடுவாங்க. நாம தலையிட்டா நல்லா இருக்காதுங்க” என்றார் கங்கா.

“நம்ம வீட்டுக்குள்ள நடந்தா சரி. பிருந்தா கோச்சுட்டு அம்மா வீடு போயிருக்கான்னா இது ஏதோ பெருசு. அப்படியெல்லாம் கண்டுக்காம விட முடியாது. கூப்பிடு அவனை” என உறுமினார் அரங்கநாதன்.

கங்கா மகனை அழைத்து வர, அப்பா விசாரிக்க எல்லாம் இடம் தரவில்லை பிரசன்னா. உண்மையை சொல்லி விட்டான்.

 அவன் பெற்றோர் அதிர்ந்து பார்க்க, “இப்படி திடீர்னு அவளுக்கு கல்யாணம் வரும்னு நான் நினைக்கல. அந்த அபினேஷ் சரி கிடையாது, நான் தப்பொன்னும் செய்யல” என்றான்.

“டேய்! உனக்கு பிடிச்சிருக்குன்னா என்கிட்ட சொல்லணும்” என கோவமாக சொன்னார் அரங்கநாதன்.

“அவதான் ஏற்கனவே என்னை வேணாம்னு சொன்னா ல்ல? திரும்பவும் வேணாம்னு சொல்லுவான்னு நினைச்சுதான் இப்படி செயதேன்” என தெளிவாகவே கூறினான்.

“ம்ம்… செஞ்சது சரியா?” அழுத்தமாக கேட்டார்.

“தெரியாது ப்பா. ஆனா நான் கெடுதல் செய்யல. கல்யாணம் பண்ணிட்டு வந்து ஒண்ணும் அவளை கொடுமை செய்யல. அவளுக்கு கோவம்னா என் கூட சண்டை போடணும், அதை விட்டுட்டு சொல்லிக்காம அம்மா வீடு போவாளா?” எனக் கேட்டான்.

யோசித்த அரங்கநாதன், “சரி போ, ரெண்டு நாள் கழிச்சு அனுப்பி வைக்க சொல்றேன் பிருந்தாவ” என மகனை அனுப்பி வைத்து விட்டார்.

“என்னங்க இது? பிருந்தா மனசு என்ன பாடுபடும்? இவனுக்கு பிடிச்சிருக்குன்னா பிருந்தாவுக்கு பிடிச்ச மாதிரி நடந்து அவ மனச மாத்தி இருக்கணும், அதை விட்டுட்டு என்ன கோல்மால் இது? நீங்க ஒண்ணும் சொல்லாம அனுப்பி வச்சா அவனுக்கு இன்னும் துளிர் விடும்” என்றார் கங்கா.

“என்னவோ பண்ணிட்டான், விடேன். யாருக்கு என்ன கெடுதல் நடந்து போச்சு இப்போ? பிருந்தாவை நல்லா வச்சுக்கலைனா கேட்கலாம். முடிஞ்சு போனதை என்ன செய்ய சொல்ற? நாளைக்கு நீ பிருந்தாவுக்கு பேசி புரிய வை, வீட்டுக்கு வர சொல்லு”

“முடியாதுங்க,கேட்கிறது வாங்கிக் கொடுத்து பாசமா பார்க்கிறது விட முக்கியம் உணர்வுகளை புரிஞ்சு நடந்துக்கிறது. நான் சொல்றதுதான் சரி, அதுதான் உனக்கு நல்லது அப்படியே இருன்னு எப்படி நீங்க என்னை வச்சிருக்கீங்களோ அப்படித்தான் உங்க பையனும் அவன் பொண்டாட்டிய நடத்த பார்க்கிறான். என் காலம் எப்படியோ போய்டுச்சு, பிருந்தாவும் அப்படி வாழ வேணாம். ரெண்டு நாள்ல வந்திடுவாளா பிருந்தா? அப்பாவும் புள்ளையும் அப்படித்தானே நினைக்கிறீங்க… நினைச்சிட்டே இருங்க” என்றவர் அங்கிருந்து சென்று விட்டார்.

மனைவியின் பேச்சை பெரிதாக நினைக்காமல் விட்டு விட்டார் அரங்கநாதன்.

‘எத்தனை நாட்கள் அம்மா வீட்டில் இருப்பாளாம்? வந்துதானே ஆக வேண்டும் இங்கே’ என இறுமாப்போடு பிரசன்னா இருக்க தான் அத்தனை எளிது இல்லை என நிரூபணம் செய்தாள் பிருந்தா.

பிரச்சனை என்ன என கங்கா மூலம் நிர்மலாவுக்கும் அரங்கநாதன் மூலம் கேசவனுக்கும் தெரிய வந்தது. அம்மாதான் தன்னை புகுந்த வீடு செல்ல நிர்பந்தம் செய்யக் கூடும் என பிருந்தா நினைத்திருக்க நேர்மாறாக கேசவன்தான் மகளை சமாதானம் செய்து வைத்து அனுப்ப பார்த்தார்.

“என்ன கெட்டது நடந்து போச்சும்மா இப்போ? எல்லாம் நல்லதுக்குதான். உன் மேல உள்ள விருப்பத்துல நம்ம மாப்ள இப்படி பண்ணிட்டான். நல்லாத்தானே இருக்கீங்க ரெண்டு பேரும். நீ நல்லா வாழறதை பார்க்கத்தானே நானும் அம்மாவும் ஆசை படுறோம்? வேற என்ன குறை வச்சான் மாப்ள. அங்க போடா, சேர்ந்து இருங்கடா” என கேசவன் சொல்லிக் கொண்டிருக்க நிர்மலா இடையிட்டார்.

“பிரசன்னாவுக்கு ஆசைன்னா பெரியவங்ககிட்ட சொல்லியிருக்கணும். இல்ல பிருந்தாகிட்ட விருப்பத்தை சொல்லி கேட்ருக்கணும். கல்யாணம் வரை வந்து நின்னு போறது சாதாரண விஷயமா? அன்னிக்கு என்னெல்லாம் நடந்துச்சு மறந்து போய்ட்டீங்களா?” என கேள்வி கேட்டார் நிர்மலா.

“என்னடி நீ வேற… இப்படியே ரெண்டு பேரும் பிரிஞ்சு இருக்கிறதா? ஒண்ணா இருந்து என்ன வேணா செய்துகட்டுமே…” என்றார் கேசவன்.

“அப்படி செஞ்சா பிரசன்னா செஞ்சது சரின்னு ஆகிடாதா? என் அண்ணன் பையன் எனக்கு மருமகனா வந்ததுல நிறைஞ்ச சந்தோஷம்தான், அதுக்குன்னு அவனை எல்லா விதத்திலேயும் சப்போர்ட் செய்ய மாட்டேன். அம்மா நானே என் பொண்ணை புரிஞ்சுக்கலைனா என் அண்ணன் பையன் புரிஞ்சுக்கணும்னு நான் நினைக்கிறது முட்டாள்தனம். அவளை ஃப்ரீயா விட்டுட்டு வாங்க வெளில” என உறுதியாக நிர்மலா சொல்ல கேசவன் வேறு பேச முடியாமல் வெளியேறினார்.

கலங்கிய கண்களோடு பேச்சு வராமல் மகள் நிற்க, அவள் கையை அழுத்திக் கொடுத்தவர், “நீயா போகணும்னு நினைக்கிற வரை இரு. உன் விருப்பம் இல்லாம நான் அனுப்ப மாட்டேன். அப்பாவை நான் பார்த்துக்கிறேன்” என்றார் நிர்மலா.

அம்மாவின் மீது சாய்ந்து கொண்டாள் பிருந்தா. மனம் அலைப்புறுதலை நிறுத்தியிருக்க ஆசுவாசமாக உணர்ந்தாள்.

இரண்டு நாட்கள் என்பது ஐந்து நாட்கள் என்றான பின்னும் பிருந்தா வராமல் போக அரங்கநாதன் வந்தார் நேரில். பிருந்தாவுக்கு முன் நிர்மலாவே பேசி மகளை அனுப்ப மறுக்க அவரும் தங்கையிடம் கோவம் கொண்டார்.

“வெளியிடத்திலயா கட்டிக் கொடுத்திருக்க? அங்க பிருந்தாவுக்கு ஏதாவதுன்னா விட்ருவேனா நான்? அவன் மூஞ்சு பார்க்க முடியலை, கஷ்ட படுறான் அவன். அனுப்பி வை” என அரங்கநாதன் சொல்ல கேசவனும் உங்க தங்கைக்கு நீங்களே நல்லா சொல்லுங்க என அலுப்பாக சொன்னார்.

“பிரசன்னா கொடுமை செய்றான்னு நானும் சொல்லலை அண்ணா. இது வேற… இழுத்து வச்சு நம்மாள சரி பண்ண முடியாது. தானா அவங்களே சரி பண்ணிக்கட்டும்” என முடிவாக சொல்லி விட்டார் நிர்மலா.

பாவனா கூட நாம் பிருந்தாவிடம் பேசி பார்க்கலாமா? என விஜய்யிடம் கேட்க, “இல்ல… பிரசன்னாதான் பேசி சரி பண்ணனும். அதுதான் நிரந்தர தீர்வு” என சொல்லி விட்டான்.

ஆக மொத்தம் பேசி சரி செய்யலாம் என நினைத்த அரங்கநாதன், கேசவன் இருவரின் பேச்சுக்கள் எடுபட வில்லை. தேவா, வைஷு உட்பட மற்ற அனைவரும் தலையிடக் கூடாது என்ற முடிவில் இருந்தனர். பிருந்தாவின் தாத்தா பாட்டிக்கு வருத்தம், ஆனாலும் அவர்களும் பொறுமையாகவே இருந்தனர்.

பிரசன்னாவுக்குத்தான் மண்டை காய்ந்தது. அப்பா மாமாவை தவிர மற்ற அனைவரும் பிருந்தாவுக்கு ஆதரவாக இருக்க இப்படி நடக்கும் என எதிர்பார்த்திராதவனுக்கு அதிரச்சிதான். இது அவனது ஈகோவை நன்றாக சீண்டி விட பிருந்தாவை அதிக அளவில் மனம் தேடிய போதும் நானாக சென்று அழைப்பதில்லை, அவள்தான் என்னை தேடி வரவேண்டும் என அகந்தையாக இருந்து கொண்டான்.

வாட்டி வதைக்கும் பிரசன்னாவின் நினைவை தள்ளி வைத்து விட்டு தன் தொழிலில் மட்டும் கவனம் செலுத்தினாள் பிருந்தா.

இருவருக்குமே நாட்கள் மெதுவாக கடந்து கொண்டிருக்க வைஷ்ணவி கரு தரித்தாள். அவளை காண சென்றாள் பிருந்தா.

 “நீ எப்போடி நல்ல சேதி சொல்லுவ?” என பிருந்தாவை பிடித்துக்கொண்டார் தாத்தாவின் ஒன்று விட்ட தம்பியின் மனைவி, வெளியூரில் இருக்கும் அந்த பாட்டி ரமணனை காண்பதற்காக வந்திருந்தார்.

“ஓ இருக்கே பாட்டி. போன மாசம் விட இந்த மாசம் எக்ஸ்போர்ட் இன்னும் அதிகம் செய்றேன். இன்னொரு அக்ரிமெண்ட் சைன் ஆக போகுது, அப்புறம் கூட ஒரு யூனிட் ஆரம்பிக்க வேலை நடக்குது” என பெருமையாக சொன்னாள் பிருந்தா.

அந்த பாட்டி மோவாயில் இடித்துக் கொள்ள, “கல்யாணத்தையும் குழந்தை பெத்துக்கிறதையும் மட்டும் பொண்ணுகிட்டேர்ந்து எதிர்பார்க்காதீங்க. அதெல்லாம் தானா நடக்கும், எங்களுக்கு அதை தாண்டிய கனவுகள் இருக்கு, அதுவும் நல்ல சேதிதான்” என்றவள் அவர் அருகில் அமர்ந்திருந்த தன் பாட்டியின் கன்னத்தை கிள்ளி சிரித்தாள்.

“என்னவோ போங்கடி… கல்யாணம் கட்டி ரெண்டு மாசம் சரியா குளிச்சதுக்கே என் மாமியார் என் புருஷனுக்கு ரெண்டாங்கல்யாணம் கட்டலாமான்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. காலம் மாறிப் போச்சு” என அங்கலாய்ப்பாக சொல்கிறாரா அல்லது நல்ல விதமாக சொல்கிறாரா என தெரியாத தொனியில் கூறினார் சின்ன பாட்டி.

“ஆமாம் டி, காலம் மாறித்தான் போச்சு! உன் மாமியாரும் என் மாமியாரும் ரவிக்க போட்டா புடவை கட்டினாங்க, அதுக்கும் முன்னால சட்டையில பட்டன் வைக்கிறது மட்டுமில்லை சட்டையே போடாம இருந்தாங்கதானே ஆம்பளைங்க? பெருசா பொட்டி மாதிரி இருந்த டிவி போய் சிக்குன்னு ஒல்லியா வந்திடுச்சு டிவி. காலத்துக்கு ஏத்த மாதிரி மாறிப் போகலைனா அது என்னாடி பிருந்தா பெருசா இருக்குமே ஒரு மிருகம் இங்கிலிஷ் படமெல்லாம் வந்துச்சே…” என பாட்டி கேட்க, “டைனோசர் பாட்டி” எடுத்துக் கொடுத்தாள் வைஷு.

“ஹான் அந்த டைனோசர் கணக்கா நாமளும் காணாம போயிடுவோம்” என சொல்லி கெத்தாக பார்த்தார் பாட்டி.

பாட்டிக்கு ஹைஃபை கொடுத்தாள் பிருந்தா. வந்திருந்த சொந்தக்கார பாட்டி “அடி ஆத்தி!” என வியந்து சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டார். பின் கிளம்பியும் விட்டார்.

“நான் எதிர்பார்க்கவே இல்ல வைஷு, பாட்டியிலேர்ந்து எல்லாரும் எனக்கு சப்போர்ட் பண்ணுவாங்கனு” தனிமையில் வைஷுவிடம் சிலாகித்தாள் பிருந்தா.

“அண்ணா நல்லவன்தான், ஆனா டாமினன்ட். தாத்தாலேர்ந்து அப்பா மாமா எல்லாரும் அப்படித்தான். அதான் அனுபவிச்ச லேடிஸ் எல்லாம் உனக்கு சப்போர்ட்” என்றாள்.

பிருந்தா புன்னகை செய்ய, “ஆனா எப்போ சரியாகும் உங்களுக்குள்ள? கண்டிப்பா எல்லாருக்கும் அந்த வருத்தம் இருக்கு” என்றாள்.

“சரி செய்ய வேண்டியது உன் அண்ணன்தான். இதுவரைக்கும் எந்த ஸ்டெப்பும் எடுக்கல. இன்னும் அவர் செஞ்சது தப்பில்ல, சரிதான் அப்படிங்கிற மெண்டாலிட்டியோடதான் இருக்கார். நானா போனேன், அதனால நானாதான் திரும்ப வரணும்ங்கிற ஈகோ”

“சீக்கிரம் மாறுவான் எங்கண்ணன்… உன்னை விட்டுட்டு எவ்ளோ நாள் இருக்க முடியும்?” என வைஷு கேட்க பிருந்தா அழகாக பேச்சை மாற்றி விட்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement