Advertisement

அத்தியாயம் -8(2)

பிருந்தா அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவள் தட்டில் இன்னும் இரண்டு இடியாப்பம் குருமாவோடு பரிமாறியவன், “சாப்பிடு. முடியலைனா எனக்கு கால் பண்ணு, நான் வந்து கூப்பிட்டுக்கிறேன், தனியா டிரைவ் செய்யாத” என்றான்.

மனசோர்வாக உணர்ந்த பிருந்தாவும் அமைதியாக உண்டு எழுந்து சொல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டாள். இவர்கள் பேசுவது கொஞ்சம் கொஞ்சம் காதில் வாங்கியிருந்த கங்கா மகனிடம் தாங்கள் பேசியதை சொல்லி, “உனக்கு தெரியாம எதுவும் செய்ய மாட்டேன்னு சொல்றா அவ. என்னடா வீம்பு உனக்கு? உன்னைய வான்னு கூப்பிடுறாளா? நீ செய்றது சரியில்லடா” என்றார்.

“குட், அவ அவளோட புருஷனுக்கு ரொம்ப லாயலா இருக்கா. நீயும் பொண்ண பார்க்க போனோமா வந்தோமான்னு இரு. உன்னை படுக்க வச்சவர் அந்தாள், நினைப்பு இருக்கட்டும், உன் மருமக மாதிரியே நீயும் உன் புருஷனுக்கு தெரியாம வேற எதுவும் செய்யாத” என சொல்லி சென்றவனை தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக பார்த்தார் கங்கா.

மாலையில் வீடு வந்த பின் பிருந்தா மேலும் அவனிடம் வாதிடவில்லை. எப்படியும் சண்டையில் முடியும் எனும் போது இப்போது வேண்டாம் என அந்த பேச்சை தள்ளி வைத்தாள்.

அன்று பிரசன்னாவின் நண்பனின் சகோதரி திருமணம். ஆலை செல்ல வேண்டாம் என்பதால் பொறுமையாகவே எழுந்தாள் பிருந்தா. அவன் தயாரான பின்னர்தான் இவள் குளிக்கவே சென்றாள்.

குளித்து வந்தவள் அவன் அறையில் இருக்கும் போதே தயாராக ஆரம்பிக்க, “மறந்திட்டியா நான் இருக்கிறதை?” எனக் கேட்டான்.

“கணவரின் கண்களுக்கு விருந்து!” என வேடிக்கையாக பிருந்தா சொல்ல, “எப்போலேர்ந்து உன் மனசு இவ்ளோ தாராளமா ஆச்சு?” எனக் கேட்டான்.

“ம்ம்… ரெண்டு நாளா முதுகுல பிடிச்சு விடறதும் வயித்துல ஆயில் போட்டு மசாஜ் செய்றதும் கால்ல சொடக்கு எடுத்து விடறதும்னு இந்த பிராணநாதரின்… ச்சே… பிரசன்ன… ம்ஹூம்…. ஹான்… பிருந்தாநாதரின்… இது ஓகே. பிருந்தாநாதரின் கவனிப்பில் பிருந்தா செம ஹாப்பி. அதான் கொஞ்சம் நானும் கவனிக்கலாம் நினைச்சா… போங்களேன் எழுந்து, யார் தடுத்தா?” எனக் கேட்டாள்.

வாய் விட்டு சிரித்தவன், “கலக்குறடி. ஆனா டைம்க்கு ஃபங்ஷன் போகணும். அதனால நல்ல பிள்ளையா இந்த சேர் விட்டு எழ மாட்டேன். தைரியமா ரெடி ஆகு” என்றான்.

பிருந்தாவும் அவனை நம்பி தயாராக, அவளை வர்ணிக்கிறேன் என அவன் பேசிய பேச்சில் அவளது காது சவ்வு வரை செம்மை நிறம் கொண்டு விட்டது. ஒரு கட்டம் அவனை பாவமாக பார்த்தவள், “மாமா நீ பக்கத்துல வந்து நின்னு கூட எதுவும் செய்துக்கோ. தயவுசெஞ்சு வாய மூடு” என கெஞ்சினாள்.

“அப்போ சீக்கிரம் கிளம்பு” என அவன் சொல்ல வேகமாக தயாரானவள் கையில் உதட்டு சாயம் எடுத்துவிட்டு தயக்கமாக அவனை பார்த்து, “இன்னிக்கு மட்டும்” என கெஞ்சலாக கேட்டாள்.

“அதென்னடி அழகான ஓவியத்துல திருஷ்டிக்கா? இருக்கிறது எல்லாத்தையும் தூக்கி போட்ரு. இனிமே உனக்கு எப்பவும் தேவைப்படாது” என அவன் சொல்ல மனமே இல்லாமல் வைத்தாள்.

இனிமையான மன நிலையோடு திருமண விழாவுக்கு சென்றனர். பிரசன்னாவின் நண்பர்கள் சிலரும் வந்திருந்தனர். பிருந்தாவுக்கு பிரசன்னா சூப்பர் சீனியர் என்பதால் அவன் நண்பர்கள் இவளுக்குமே பரிட்சயம்தான்.

பிரசன்னாவின் பெண் தோழி ஒருத்தி உதட்டு சாயம் போட்டிருக்க அவளுடன் தனியே பேசும் வாய்ப்பு கிடைத்தவுடன் பிருந்தா கேட்டே விட்டாள்.

“யாருக்கா அது லிப்ஸ்டிக் போட்டு உங்க ஃப்ரெண்ட்டோட ஃபிரெண்ட்டை ஏமாத்தினது? ஃபர்ஸ்ட் உங்களை பார்த்து நீங்களோனு நினைச்சிட்டேன், உங்க கூடதான் நல்லா பேசுறாரே. சொல்லுங்க யாருக்கா அது?” எனக் கேட்ட பிருந்தாவை வித்தியாசமாக பார்த்த அந்த பெண், “புரியுற மாதிரி கேளு பிருந்தா” என்றாள்.

சற்றே விளக்கமாக சொல்லி விட்டு, “என்னை லிப்ஸ்டிக் போட விடவே மாட்டேங்குறார்க்கா. யாருக்கா அது?” என்றாள்.

வாயை மூடிக் கொண்டு சிரித்த அந்த பெண் சில நொடிகள் சென்று, “அவனுக்கு என்னவோ லிப்ஸ்டிக் பிடிக்காது. என்னையும் சொல்வான் போடாதன்னு. அவன் ஏதோ கதை சொன்னான்னு… போ பிருந்தா” என சொல்லி சென்று விட்டாள்.

பிருந்தாவுக்கு வந்ததே வெறி. சற்று தள்ளி நண்பன் ஒருவனோடு இவன் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருக்க பொது இடத்தில் ஒன்றும் சொல்ல முடியாமல் அமைதியாக அமர்ந்து விட்டாள்.

பிருந்தாவின் மாற்றம் இவனுக்கும் புரிய, “என்னடி மூணு நாள் ஆகிடுச்சே, உனக்கு இன்னும் சரியாகலையா?” என மெதுவாக விசாரித்தான்.

 சிரிப்பை வலிந்து வரவழைத்துக் கொண்டவள், “இந்த கல்யாணம் பார்த்து நம்ம கல்யாண நாள் நினைவு வந்திடுச்சு மாமா” என்றாள்.

“அன்னிக்கு நீ உர்ருன்னு இருந்தது நினைச்சு ஃபீல் பண்றியா? விடு விடு அதுவா முக்கியம்? இப்போதான் நல்லா மஜாவா போகுதே எல்லாம்” எனக் குறும்பாக கேட்க, ஆமோதிப்பது போல முகத்தை வைத்துக்கொண்டாள்.

மதிய உணவை பனிரெண்டரைக்கு எல்லாம் முடித்து விட்டு நண்பர்களிடம் விடை பெற்று கிளம்பி விட்டனர்.

கார் புறப்பட்டு ஐந்து நிமிடங்கள் ஆகியிருக்க, “உங்க ஃப்ரெண்ட்ட லிப்ஸ்டிக் போட்ட ஒருத்தி ஏமாத்தினாளே… அவளை பார்த்தேன் கல்யாணத்துல” என்றாள் பிருந்தா.

அசராமல், “அப்படியா? அவளை பத்தி மட்டும் பேசாத. மூட் அவுட் ஆகிடும் எனக்கு” என்றான் பிரசன்னா.

கோவத்தை அடக்கியதில் மூச்சு வாங்க அவனை பார்த்தவள், “உங்களை என்ன பண்ணலாம்?” என சீறினாள்.

சின்ன சிரிப்போடு, “என்ன வேணா…” என குறும்பு கொப்பளிக்க சொன்னான்.

“உங்களை…” என்றவள் அவன் தலை முடியை பற்றி இழுக்க காரை ஓரமாக நிறுத்தியவன், “அதான் வேலிடா இன்னொரு ரீசன் சொன்னேன்தானே? அப்புறம் என்ன? ஏற்கனவே பள பளன்னு இருக்க உன் லிப்ஸுக்கு எதுக்கு ஆர்டிஃபிஸியல் சாயம்?” என கேட்டு அவள் இதழ்களை அவன் வருடி விட, ஒரு நொடி மயங்கியவள் அடுத்த நொடி அவன் கையை விலக்கி விட்டு முறைத்தாள்.

“இப்போ நமக்குள்ள ஒரு மாதிரி ஒரு அண்டர்ஸ்டாண்ட்டிங் வந்திருக்குதானே? இப்போ லிப்ஸ்டிக் எனக்கு பிடிக்காது, போடாதன்னு நான் சொன்னா கண்டிப்பா கேட்ருப்ப. ஆனா அப்போ… அதான் சும்மா ஒரு கதை விட்டேன். சின்ன விஷயத்தை பெருசு பண்ணாத” என்றவன் அவள் கன்னம் தட்டிக் கொடுத்து விட்டு மீண்டும் காரை எடுத்தான்.

“தடியன்… அண்டா சோத்துக்குள்ள அம்பது பரங்கிக்காய மறைச்சு வச்சிருக்கான் பரங்கிமலை! அது தெரியாம… போடி பிருந்தா! நீ முட்டாள் ஆகிட்ட அவன்கிட்ட” வாய் விட்டு அவள் புலம்ப, பாடல் ஒலிக்க விட்டான் பிரசன்னா.

“நான் கடுப்புல இருக்கும் போது பாட்டு கேட்குதா உங்களுக்கு?” என்றவள் பாடலை அணைத்து விட்டாள்.

சில நிமிடங்கள் அமைதியாக செல்ல ஏதோ யோசித்துக் கொண்டிருந்த பிருந்தா திடீரென, “ஏன் மாமா… அந்த அபினேஷ் வீட்ல ஐ டி ரெய்ட் நடந்ததே… அது உங்க வேலையா?” எனக் கேட்டாள்.

அனிச்சையாக காரை நிறுத்தியிருந்தவன் அவளை பார்த்து விட்டு, “இல்லையே…” என்றான்.

அவன் கண்களை அவள் உற்று நோக்க, அவளின் பார்வையை சந்திக்க திராணி இல்லாமல் முகம் திருப்பிக் கொண்டவன், “பழசை எல்லாம் இப்போ ஏன் கிளறி விடுற?” எனக் கேட்டான்.

“அப்போ நீங்கதான் இல்ல?”

அவன் பதில் சொல்லாமல் போக, “சொல்லுங்க மாமா” என பிடிவாதமாக கேட்டாள்.

“என்னடி இப்போ? நான்தான். அவன், அவனோட அப்பா எல்லாம் நேர்மை இல்லாதவங்க, சொல்ல போனா ஒரு குடிமகனா என் கடமையைத்தான் செய்திருக்கேன் நான்” என சீறலாக சொன்னான்.

“வெரி குட் மாமா, வெல் டன்!” இகழ்ச்சியாக சொன்னவள், “அவங்கள பத்தி என் எங்கேஜ்மெண்ட்டுக்கு ரெண்டு நாள் முன்னாடிதான் தெரிய வந்ததா உங்களுக்கு?” என அழுத்தமாக கேட்டாள்.

“பிருந்தா, என்ன பிரச்சனை உனக்கு? முடிஞ்சு போச்சு அதெல்லாம். இந்த நிமிஷம் சொல்லு உனக்கு என்னை பிடிச்சிருக்குதானே? என்னை கல்யாணம் செய்துகிட்டதுக்காக ரெக்ரெட் பண்றியா இப்போ? ப்ச்… விடு” என சமாதானக் குரலில் சொன்னான்.

“ஒரு சேலஞ் பண்ணுனீங்க. அது நமக்கு மட்டும்தான் தெரியும். எந்த காலத்திலும் அதை வச்சு உங்களை நான் கீழா பேசியிருக்க மாட்டேன்னு உங்களுக்கு நல்லா தெரியும். ஒண்ணுமே இல்லாத ஒரு விஷயத்துக்காக… மை காட்!” இரு நொடிகள் நன்றாக மூச்சு விட்டுக் கொண்டவள், “அப்ப என் அம்மாக்கு எதுவும் ஆகியிருந்தா என்ன ஆகியிருக்கும் மாமா? கொஞ்சம் கூட கில்டி ஃபீல் இல்லையா உங்களுக்கு? நமக்குள்ள எல்லாம் சரியான அப்புறம் கூட என்கிட்ட சொல்லணும்னு தோணல இல்ல உங்களுக்கு?” என கண்களில் நீர் தளும்ப கேட்டாள்.

“பிருந்தா!” அதட்டியவன் அவள் கையை பிடிக்க உதறி விட்டவள், “எவ்ளோ கன்னிங் மாமா நீங்க? என்னால டைஜஸ்ட் பண்ண முடியலை” என்றாள்.

“பிருந்தா!” கண்டிப்பாக ஒலித்தது அவன் குரல்.

“உங்களுக்கு நீங்க நினைச்சது நடக்கணும்னா எந்த லெவல் வேணா போவீங்களா? என் லைஃப் கையில எடுத்துப்பீங்களா?”

“என்ன கையில எடுத்தேன் உன் லைஃப? ஒரு கெட்டவன்கிட்டேர்ந்து காப்பாத்தி இருக்கேன் உன் லைஃபை”

“அதுதான் உங்க இண்டென்ஷன்னா என் அப்பாகிட்ட இப்படின்னு சொல்லியிருக்கணும் நீங்க. உங்க வார்த்தையை நம்பாதவரா எங்கப்பா? உங்க குறிக்கோள் எல்லார் மத்தியிலும் உங்களை கட்டிக்கிறேன்னு என்னை சொல்ல வைக்கிறது. உங்க சவால்ல என்ன பண்ணியாவது ஜெயிக்கணும் உங்களுக்கு… அதுக்கு அதுக்கு… ச்சே எவ்ளோ மோசமானவர் நீங்க? அது தெரியாம…” அழுதே விட்டாள் பிருந்தா.

“எதுக்குடி இப்போ அழுகை? என்ன உன் வாழ்க்கை சீரழிஞ்சா போச்சு? சும்மா ராணி மாதிரி வச்சிருக்கேன் உன்னை. உன் பாதத்தை என் கையில தாங்காத குறையா தாங்குறேன். எவன் டி பார்த்துப்பான் பொண்டாட்டிய இப்படி? சும்மா சீன் போட்டுக்கிட்டு” எரிச்சலாக சொன்னான்.

பிருந்தா அழுவதை நிறுத்தாமல் போக, “எதுக்கு அழுகைனு கேட்டேன் உன்னை? எல்லாம் நல்லாத்தானே போயிட்டு இருக்கு நமக்குள்ள, அப்புறமும் அழுதா என்னடி அர்த்தம்? ஓஹோ! ஒரு வேளை அந்த அபினேஷ் நாதாரிய மிஸ் பண்ணிட்டேன்னு அழறியோ” கோவத்தில் என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசினான்.

அழுகையை நிறுத்தியவள், “ஆமாம் ஆமாம் ஆமாம்…” என கூச்சலிட்டு, “ஆமாம் மிஸ் பண்ணிட்டேன்தான்…” என சொல்லி முடித்திருக்கவில்லை அவளை அடிக்க கை நீட்டினான் பிரசன்னா.

நொடியில் அவன் கையை பற்றியவள் அழுந்த பிடிக்க, தன் வலிமை கொண்டு விடுவித்துக் கொள்ள முடியும் என்ற போதும் தன் செயலில் வருத்தம் கொண்டு அவள் பிடிக்குள்ளேயே தன் கையை வைத்திருந்தான்.

“இந்த கை நீட்டுற வேலை எல்லாம் என்கிட்ட வேணாம்” என சொல்லி அவன் கையை உதறி விட்டவள் காரை திறந்து கொண்டு இறங்கி சென்றாள்.

சில நொடிகள் அவளையே பார்த்திருந்தவனும் காரிலிருந்து இறங்கி செல்ல, அவள் ஆட்டோ ஒன்றில் ஏறி சென்று விட்டாள். காருக்கு வந்தவன் அந்த ஆட்டோவை பின் தொடர நினைக்க அவன் கைபேசியில் கல்லூரி முதல்வரிடம் இருந்து அழைப்பு வந்தது.

திடீரென மயங்கி விழுந்த துணை முதல்வரை மருத்துவமனை அழைத்து செல்வதாக அவர் தெரிவிக்க அவர் சொன்ன மருத்துவமனைக்கு விரைந்தான் பிரசன்னா.

வெறுப்பு நிறைந்த மனதுடன் தன் அம்மா வீடு நோக்கி சென்று கொண்டிருந்தாள் பிருந்தா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement