Advertisement

மெல்ல உன் வசமாகுறேன் -8

அத்தியாயம் -8(1)

பிருந்தா இன்னும் எழாமல் சுருண்டு படுத்திருக்க, உடற்பயிற்சி முடித்து வந்த பிரசன்னா, “என்னடி மிட்நைட் தாண்டி தூங்கினா கூட கன் மாதிரி கிளம்பி நிப்ப, இன்னிக்கு என் கூடவே எழுந்திரிச்சதானே… திரும்ப ஏன் படுத்திருக்க, என்னாச்சு?” எனக் கேட்டுக் கொண்டே அவள் அருகில் வந்தமர்ந்தான்.

“எனக்கு டேட், சும்மா படுத்தேன், எழவே தோணல மாமா” என்றாள்.

“சாப்பிட்டு படுக்க வேண்டியதுதானே?” எனக் கேட்டவன் அவள் பதில் எதிர் பார்க்காமல் கண்டு கொள்ளாமல் செல்ல, “வர வர பரங்கிமலைக்கு என் மேல மயக்கம் குறையுது!” முகம் சுளித்து முணுமுணுத்து விட்டு புரண்டு படுத்துக் கொண்டாள்.

கால் மணி நேரத்தில் அவளுக்கான காபி மற்றும் தினசரியோடு வந்தவன், “இது ரெண்டும் இல்லாம உனக்கு நாள் நல்லா இருக்காதே, எழுந்திரு” என்றான்.

மனம் இதமாக உணர எழுந்து கொண்டவள், “காபி போதும், படிக்கிற மூட் இல்ல இப்போ” என சொல்லி காபியை மட்டும் வாங்கிக் கொண்டாள்.

அவன் அவள் அருகில் அமர, ‘என்ன சொன்னாலும் செய்வானா, இல்ல கடுப்பாவானா?’என நினைத்தவள், “எனக்கு சாஞ்சுக்கணும், முதுகு பின்னால பில்லோ வச்சு விடுங்களேன்” என இன்னும் வேலை ஏவினாள்.

“சாயணும்தானே?” என்றவன் படுக்கையில் இன்னும் நன்றாக அமர்ந்து, “என் முதுகுல சாஞ்சுக்கோ” என்றான்.

“பார்டா! என் மாமா பின்னி பெடல் எடுக்கிறார்” என சிரிப்போடு சொன்னவள் அவன் முதுகில் சாய்ந்து காபியை அருந்த அவளின் சோர்வெல்லாம் எங்கோ ஓடி சென்று விட்டது.

தினசரியை விரித்து வைத்தவன் அவளுக்காக வாசிக்க ஆரம்பிக்க, அவன் செயலில் மனம் கொள்ளை போனாலும், “இப்படி எல்லாம் லைன் லைனா படிக்க மாட்டேன் நான்” என்றாள்.

“சரிடி, நான் படிச்சிட்டு மேட்டர் மட்டும் சொல்றேன் கேட்டுக்க” என்றவன், பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தை பற்றிய செய்தியை சுருக்கமாக சொல்லி, “நீ என்ன நினைக்கிற?” எனக் கேட்டான்.

“நான் ஒண்ணும் நினைக்கல மாமா? பேப்பர்ல பாட்டோட லிரிக்ஸ் இடையில உள்ள லைன் போட்ருப்பாங்க பாருங்க, அதை படிங்க, என்ன பாட்டுன்னு கண்டுபிடிக்கிறேனா பார்க்கலாம்” என்றாள்.

முகத்தை மட்டும் திருப்பி அவளை அவன் பார்க்க அவளும் லேசாக தலையை திருப்பி, “என்ன மாமா?” என்றாள்.

“டெய்லி காலைல நியூஸ்பேப்பர் எல்லாம் படிக்கிறாளே… நிறைய விஷயம் தெரிஞ்சு வச்சிருப்பா போலன்னு நான் நினைச்சா நீ தினம் படிக்கிறது இதைத்தானா?” எனக் கேட்டான்.

“அதை மட்டுமா படிப்பாங்க? ஏதாவது அடிதடி வெட்டு குத்து சண்டை சச்சரவுன்னு இன்ட்ரெஸ்டிங்கா இருந்தா படிப்பேன்” என சிரிக்காமல் அவள் சொல்ல உண்மை என நம்பியவன், “நல்லா இருக்குடி உன் ரசனை, காலையிலேயே நல்ல விஷயம் எல்லாம் படிச்சு தெரிஞ்சுக்கிற” என்றவன், “பாட்டெல்லாம் நமக்கு செட் ஆவாது” என சொல்லிக் கொண்டே தினசரியை புரட்டி புரட்டி பார்க்க ஆரம்பித்தான்.

சில நொடிகள் சென்று, “ஹான்… நீ படிக்கிற நியூஸ்” என்றவன் அடிதடி வரை சென்றிருந்த ஒரு கணவன் மனைவி சண்டை நிகழ்வை கர்மசிரத்தையாக படித்து சொல்ல வாய் விட்டு சிரித்தாள் பிருந்தா.

“ஹான்! ச்சீ… எனக்கொன்னும் இந்த நியூஸ்ல சிரிப்பு வரலை” என பிரசன்னா சொல்ல, எழுந்து நின்று வயிறை பிடித்துக்கொண்டு சிரித்தாள்.

அரை நொடி சிந்தித்தவன், “அடிங்! காலையிலேயே என்னை வச்சு ஓட்டுறியா நீ? உன்னை…” என்றவன் அவளை பிடித்திழுக்க அவன் மேலேயே விழுந்தாள்.

அவளை சரியாக தன் மடியில் அமர வைத்துக்கொண்டவன், “என்னடி அறிவாளி உன் பிளான்?” என்றான்.

“எவ்ளோ தூரம் கவனிக்கிறீங்கனு பார்த்தேன். பரவாயில்லை ஓகேதான்” என்றாள்.

“கொழுப்பு! நீங்க என்னை என்ன கவனிச்சீங்களாம்?” எனக் கேட்டான்.

“கவனிச்சிட்டா போச்சு” என்றவள் அவனை அப்படியே கட்டிக் கொண்டாள்.

“இன்னும் குளிக்கல, வேர்வையா இருக்கேன், தள்ளி போ” என்றான்.

இன்னும் இறுக்கிக் கொண்டவள், “எப்படி வேணா இருந்திட்டு போங்க. தோன்றப்ப எல்லாம் கட்டிக்கணும் எனக்கு. அதுக்கு நோ தடா” என்றாள்.

அவளாக விடும் வரை அவனும் அவளை அணைத்துக் கொண்டான்.

“ஓகே, டல் மார்னிங் செம எனர்ஜி மார்னிங் ஆக்கிட்டீங்க. நான் ரெடி ஆகுறேன். அப்புறம் நீங்க குளிக்க போங்க” என சொல்லி எழுந்து கொண்டாள்.

“வீட்ல இருன்னா கேட்கவா போற? கிளம்பு” என்றவன் படுக்கை விரிப்புகள் எல்லாம் மாற்ற ஆரம்பிக்க அவனை பார்த்துக் கொண்டே குளியலறை சென்றாள் பிருந்தா.

திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. முட்டிக்கொள்வதும் மோதிக் கொள்வதும் நின்ற பாடில்லை. ஆனால் அதெல்லாம் தூக்கி சுமக்காமல் ‘அது நேற்று, இது இன்று’ எனதான் இருந்தார்கள்.

எப்போதாவது இருவரும் முறைத்துக் கொண்டிருப்பதை வீட்டினர் கவனித்தால் இவர்களுக்குள் என்ன சண்டை என தெரியா விட்டாலும், ‘இதுங்களுக்கு வேற வேலை இல்ல’ எனதான் நினைத்துக் கொண்டனர்.

பிரசன்னா தன் மனைவி மீது பிரியத்தை கொட்டினான். கணவனின் அன்பில் திளைத்திருந்தாள் பிருந்தா. ஆனால் இருவரும் அவர்களின் கருத்தில் எப்போதும் மோதிக் கொண்டுதான் இருந்தனர்.

‘உனக்காக தணிந்து போகிறேன், அதற்காக நான் செய்வது சரியில்லை என்பது கிடையாது’ எனும் விதமாக இருந்தான் பிரசன்னா.

‘உன்னிடம் உடனே சமாதானம் ஆகிறேன் என்றால் பேசாமல் இருக்க முடிய வில்லை என்னால், ஆனால் நீ நடந்து கொள்ளும் விதம் தவறுதான், உன் கோட்பாடு எனக்கு ஒத்துவராதுதான்’ என இருந்தாள் பிருந்தா.

காலையில் முட்டிக் கொண்டு சென்றாலும் மாலை வீடு திரும்பியதும் சாதாரணமாக பேசிக் கொள்வார்கள். இரவானால் இருவருக்குள்ளும் தேடல்கள் தொடங்கி விடும். வாழ்க்கை இருவருக்குமே சுவாரஷ்யமாக ரசனையாக செல்வது போலத்தான் இருந்தது.

பிருந்தா குளித்து வர, “என் ஃப்ரெண்ட் சிஸ்டர் மேரேஜ் வருது பிருந்தா, இங்கதான் பவானில நடக்குது, கூப்பிட்டிருக்கான். நீயும் வர்றியா?” எனக் கேட்டான்.

“என்னைக்கு?”

“நாளைன்னைக்கு” என அவன் சொல்ல சரி என்றாள்.

அவன் இன்னும் எழாமல் இருக்க, “அதான் சரின்னு சொல்லிட்டேனே… குளிக்க போங்க” என்றாள்.

“செவிக்கு உணவில்லாத போது சிறிது வாய்க்கும் ஈயப் படும்னு வள்ளுவர் சொல்லியிருக்கார். அதே போலத்தான் இதுவும். அஞ்சு நாள் நான் கொலை பட்டினிதானே… அதனால கண்ணால சாப்பிட்டுக்கிறேன் கொஞ்சம்” தீவிர தொனியில் சொன்னான்.

“கள்ளன் மாமா நீங்க, எங்கேர்ந்து எங்க கனெக்ட் பண்றீங்க? வள்ளுவரை வம்பு பண்ணாதீங்க” என சொல்லிக் கொண்டே குளிப்பதற்கு முன் கழட்டி வைத்திருந்த வளையல்களை அணிந்து கொண்டாள்.

“ஏது நான் வம்பு பண்ணினேனா? அவர் வாழறதுக்கு உண்டான எல்லாம் சொல்லி தந்திருக்கிறார்” என்றவன்,

“கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள” என்ற குறளை சொல்ல புரியாமல் பார்த்தாள்.

“கண்ணால் கண்டும் காதால் கேட்டும் நாவால் உண்டும் மூக்கால் நுகர்ந்தும் உடலால் தீண்டியும் அனுபவிக்கப்படும் எல்லா இன்பங்களும் இந்த ஒளி பொருந்திய வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு” என விளக்கம் சொன்னவன் எப்படி என பார்த்தான்.

“வேற ஏதாவது குறள் கேட்டா முழிப்பான், என்ன எல்லாம் படிச்சு வச்சிருக்கான் பார்” புலம்பியவள் கட்டிக் கொள்ள கையில் எடுத்த புடவையோடு அவனை பார்க்க கால் மேல் கால் போட்டுக் கொண்டு தோரணையாக படுத்திருந்தவன் கண்கள் சிமிட்டி, “ஸ்டார்ட் பேப்” என்றான்.

“இதுக்கொன்னும் குறைச்ச இல்ல. போயா குளிக்க” என செல்லமாக கோபித்தாள்.

“ஒரு புருஷனுக்கு உண்டான உரிமைய தடை செய்ற, இதெல்லாம் சரி கிடையாது. போராட்டம் செய்வேன் பார்த்துக்க” என்றான்.

இடுப்பில் கை வைத்துக்கொண்டு பிருந்தா முறைக்க, அலுத்துக் கொண்டே எழுந்தவன் அவள் கன்னத்தில் தன் மீசை பதிய அழுந்த முத்தமிட்டு விட்டுத்தான் குளிக்க சென்றான்.

“சரியான ரெட்டை குணம். எப்ப வெடிச்சு சிதறுவான்னு தெரியாது” வாய் விட்டு சொல்லிக் கொண்டே ஆடை உடுத்தி தயாரானவள் அறையை விட்டு வெளியேறினாள்.

பிரசன்னா போக கூடாது என்றதால் தன் பெரியப்பாவை பார்க்காமலேதான் இருந்தாள் பிருந்தா. ஆனாலும் அவளுக்கு ஒரு முறை பார்த்து வந்து விட்டால் தேவலாம் என தோன்றிக் கொண்டே இருந்தது.

மகளை பார்க்க செல்வதாக இருந்த கங்கா அதை மருமகளிடம் சொல்ல, “நானும் போகணும் அத்தை பெரியப்பா பார்க்க, ஆனா உங்க புள்ள ரொம்ப சண்டை போடுவார்” என்றாள்.

“அவன் காலைல போனா சாயந்தரம்தான் வீடு வருவான். மதியம் போல நீ வந்திடு, சேர்ந்து போயிட்டு வந்திடுவோம். அவனுக்கு தெரியவா போகுது?”

“ஏன் அப்படி ஒளிச்சு மறைச்சு போகணும்? என் பெரியப்பா நடத்தை எனக்கும் பிடிக்காதுதான். ஆனா என்கிட்ட அவர் பாசமாதான் இருந்தார். அவருக்கு சரியா பேச்சு கூட வர்றது இல்லை, ஒரு வேளை அவர் செஞ்சது நினைச்சு இப்போ ஃபீல் கூட செய்யலாம். என் முகத்தை பார்த்தா கொஞ்சம் நல்லா ஃபீல் பண்ணுவார்தானே? பார்க்க போறதால யாருக்கு என்ன நஷ்டம்? ஏன் உங்க பையன் புரிஞ்சுக்க மாட்டேங்குறார்?” என அத்தையிடம் புலம்பினாள் பிருந்தா.

“அதான் நான் ஐடியா கொடுக்கிறேன்ல, அப்புறம் என்னடி?” எனக் கேட்டார் கங்கா.

“எங்களுக்குள்ள ஒளிவு மறைவு வேணாம் அத்தை. நான் செய்றதெல்லாம் அவர்கிட்ட பெர்மிஸன் வாங்கணும்னு இல்ல, ஆனா அப்படி பர்பஸ்ஃபுல்லா அவருக்கு தெரியாம ஒரு விஷயம் நான் செய்ய மாட்டேன். அவருக்கு தெரிஞ்சே ஒரு நாள் போயிட்டு வர்றேன்” என சொல்லி விட்டாள்.

பிரசன்னாவும் தயாராகி வர கங்கா அது பற்றி பேச்சு வளர்க்காமல் அகன்று விட்டார்.

சாப்பிடுகையில் பிருந்தா முகத்தை கவனித்தவன், “என்ன திரும்ப டயர்ட் ஃபீலா? மூஞ்சு சரியில்லை” எனக் கேட்டான்.

“அத்தை வைஷுவ பார்க்க போறாங்களாம், நானும் போயிட்டு வந்திடுறேன்” என்றாள்.

“என் அம்மா அவங்க பொண்ணை பார்க்க போறாங்க. நீயும் அப்படியா உன் நாத்தனார் அண்ணனை பார்க்கத்தான் போறியா?” எனக் கேட்டான்.

“அத்தை, மாமா, விஜய் மாமா எல்லாரும் அங்க போக வரத்தான் இருக்காங்க. நான் மட்டும் போகக் கூடாதா? அப்படி என்ன பிடிவாதம் உங்களுக்கு?” கோவம் கொள்ளாமல் மெதுவாகவே கேட்டாள்.

“ஏன்னா நீ போய் பார்த்தா நான் போய் பார்த்த மாதிரி” அவனும் மெதுவாகவே சொன்னான்.

“ம்ம்… அதான் நான் சாப்பிடுறேனே… அப்புறம் ஏன் தனியா நீங்க வேற சாப்பிடணும்?”

“ஹோய்… மடக்கிட்டதா நினைப்பா?”

“இல்லையில்லை… இதுக்கு என்ன மொக்கை காரணம் சொல்ல போறீங்கன்னு ஆவலா எதிர்பார்த்திட்டு இருக்கேன்”

“ம்ம்ம்! ஏன்னா பிஸிகலா நமக்கு ரெண்டு உடம்பு இருக்கு. அதுக்கான தேவைகளை கவனிச்சுதான் ஆகணும். ஆனா விர்ச்சுவலா நாம ஒண்ணுதான். அப்படித்தான் நான் நினைக்கிறேன்” என்றான்.

“அதெல்லாம் சும்மா. ஹஸ்பண்ட் வைஃப்ங்கிறது மத்த எல்லா ரிலேஷன்ஷிப் விட ரொம்ப டீப், அதை ஒத்துக்கிறேன். ஆனா ரெண்டு பெரும் வேற வேற இண்டிவிஜுவல். அவங்களுக்குள்ளேயும் ஸ்பேஸ் வேணும் மாமா”

“ஒரு இம்மி அளவு கூட ஸ்பேஸ் தேவையில்லை” கடினமாக சொன்னவன் உடனே முகத்தில் புன்னகையை வரவைத்துக் கொண்டு, “உன் ஃபேவரைட் இடியாப்பம், ஆனாலும் சரியா சாப்பிடல நீ. நிறைய ஸ்ட்ரென்த் வேணாமா இப்போ? சாப்பிடும் போது கண்டதையும் பேசிக்கிட்டு…” என்றான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement