Advertisement

அத்தியாயம் -6(3)

“ஒரு சவால் போட்டு கல்யாணம் பண்ணிகிட்டு எனக்கு ரொம்ப ஃபீலிங்ஸ்ங்கிற மாதிரியே பீலா விடுறீங்க” என்றவளை பார்த்து முறைத்துக் கொண்டே சிரித்தானே ஒழிய வேறு எதுவும் கூறவில்லை.

“என்ன வாங்கன்னு ஐடியா இல்லை, இன்னொரு நாள் பார்க்கலாமே” என்றாள் பிருந்தா.

“காலைல போட்ருந்தியே ஃபிராக் அது போல எத்தனை வச்சிருக்க?”

“அது எப்பவோ சென்னை போனப்ப வாங்கினது, ஒண்ணுதான் இருக்கு. பாத்ரூம்ல ட்ரெஸ் சேஞ்ச் பண்ண வசதியா இருக்கும்னு அது யூஸ் பண்ணிக்கிட்டேன்” என்றாள்.

“ம்ம்ம்… நீ ஏன் ரூம்ல என் கூட மட்டும் இருக்கிறப்ப அப்படியே ஏதாவது ஃபிராக்ஸ் போடக்கூடாது?” என அவன் கேட்க அவள் செல்லமாக முறைத்தாள்.

“அது போல வாங்கிக்க. நிறைய கலர் கலரா வாங்கிக்க. அதை விட குட்டையா இருந்தா கூட ஐ டோண்ட் மைண்ட்” என்றான்.

“விளையாட்டா போச்சா உங்களுக்கு?”

“சீரியஸா டி, நல்லா ஒரு மாதிரி… கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்க. வாங்கிக்க”

“வெளில ஸ்லீவ்லெஸ் கூட போடக்கூடாது, ரூம்ல என்ன வேணா போடலாமா?”

“அடி அசடு! நம்ம ரூம்ல அந்த குட்டை கவுன் கூட தேவையில்லை உனக்கு” என சொல்ல, தன் வாயில் கை வைத்து வியந்தவள், “காலேஜ் வச்சு நடத்துற ஒரு கண்ணியவான் பேசுற பேச்சா இது?” எனக் கேட்டாள்.

“காலேஜ் நடத்தறதுக்கும் பொண்டாட்டிகிட்ட பேசுறதுக்கும் என்னடி அறிவாளி கனெக்ஷன்? சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு போய்டலாம், ஈவ்னிங் ரெஸ்ட் எடுத்தாதான் நைட் நல்லா…” அவன் வாயை மூடியவள், “போதும் மாமா, கார் பயந்திட போகுது” என்றாள்.

அவள் கையை விலக்கியவன், “நீ பயப்படாமதானே இருக்க? கார் பயப்பட இங்க ஒண்ணும் நடக்க போறதில்லை. வசதி படாது” என விடாமல் பிரசன்னா பேச, பிருந்தாவுக்கு இதற்கு மேல் என்னால் முடியாது எனும் நிலை.

எதுவும் பேசாமல் காரிலிருந்து இறங்கிக் கொண்டவள், “அங்க வந்து எதுவும் பேசாதீங்க. பப்ளிக் பப்ளிக்… அதை ஞாபகம் வச்சிட்டு வாங்க” என்றாள்.

உல்லாச சிரிப்போடு இறங்கினான் பிரசன்னா.

மனைவிக்கு சொன்னது போலவே வித விதமாக குட்டை கவுன்கள் வாங்கிக் கொடுத்துதான் விட்டான்.

நகைக்கடைக்கு அழைத்து சென்ற பிருந்தா அவனுக்கு கழுத்துக்கு சங்கிலி ஒன்று வாங்க, “இதெல்லாம் நான் போடுறது இல்லை” என மறுத்தான்.

“ஆசையில வாங்கி போடுறதா நினைக்காதீங்க. எனக்கு மட்டும் கழுத்துல போட்டு விட்ருக்கீங்க, நீங்களும் போட்டுத்தான் ஆகணும். அப்புறமா லாக்கெட் ஒண்ணு வாங்கி கோர்த்து விடுறேன். அப்பதான் என் கஷ்டம் புரியும்” சின்ன குரலில் அவனிடம் மட்டும் ரகசியமாக சொன்னாலும் அவளுக்கு சங்கிலிகள் காட்டிக் கொண்டிருடுந்த விற்பனை செய்யும் பெண்ணின் காதில் விழுந்து விட அவள் சிரிப்பை அடக்கினாள்.

“சரிடி, இது பப்ளிக் பப்ளிக்…” அவன் சிறு குரலில் அவளை எச்சரிக்கை செய்ய பொறுப்பாக சங்கிலி ஒன்றை தேர்வு செய்தாள்.

காரில் அமர்ந்த உடனே நகைப் பெட்டியை திறந்து அவன் கழுத்தில் போட்டு விட்டவள், “மத்தவங்களுக்குத்தான் வெறும் சங்கிலி, ஆனா இது உங்களுக்கு நான் போடுற தாலி சங்கிலி” என தோரணையாக சொன்னாள்.

“நடத்து நடத்து… இன்னும் என்னெல்லாம் செய்றன்னு பார்க்கிறேன்” என சலிப்பாக சொல்வது போல சொன்னாலும் பிரசன்னாவுக்கு அவள் செய்கையில் கோவம் துளியும் வரவில்லை.

வெளியிலேயே மதிய உணவை முடித்துக் கொண்டு முன் மாலை போல வீடு வந்த பின் அறைக்கு வந்த பிரசன்னா உறங்கி விட பிருந்தா ஆழினியோடு நேரம் செலவிட்டாள்.

மாலையில் பிரசன்னா எழ பிருந்தா வெளியில் செல்வது போல தயாராகி இருந்தாள்.

“எங்க பிருந்தா?” படுக்கையில் இருந்தவாறே கேட்டான்.

“எழுந்திட்டீங்களா? நைட் டின்னருக்கு வீடு வந்திடுவேன் மாமா. பாவனா கூட வெளில போறேன்” என்றாள்.

“காலைல நான்தான் வெளில அழைச்சிட்டு போனேனே… இன்னும் என்ன வாங்கணும் உனக்கு? தேவையில்லாம அலையாத. நாளைக்கு ஈவ்னிங் போ, இன்னிக்கு வேணாம். நைட் தூங்கி வழிவ… பாவம்டி நான்” என்றான்.

“கடைக்கெல்லாம் போகல” என்றவள் லேசான தயக்கத்துக்கு பின், “வைஷு வீடு வரை போயிட்டு வர்றேன். கல்யாணம் முடிஞ்சு பெரியப்பாவை பார்க்கவே இல்ல. பாவனா போறதா சொன்னா, அதான் நானும் போயிட்டு வரலாம்னு கிளம்பறேன்” என்றாள்.

அதுவரை இருந்த இலகு தொனியை மாற்றியவன் தீவிரமான பார்வையோடு எழுந்தமர்ந்தான். அவ்வளவுதான் சொல்லி விட்டேன் என பிருந்தா கைபேசியை எடுத்துக் கொண்டு போக, “நில்லுடி!” என அதட்டினான்.

சற்றே திகைத்தவள் நின்று அவனை பார்க்க, “நீ ஒண்ணும் அந்தாள பார்க்க போக வேணாம். இப்ப இல்ல எப்பவும் போக கூடாது” என உறுமலாக சொன்னான்.

பிருந்தாவுக்கு தெரியும், இவனுக்கு ரமணனை துளியும் பிடிக்காதென. வைஷுவின் திருமணத்திற்கு பின் தேவாவுடன் சகஜமாக இல்லை என்றாலும் பெயருக்கு பேசுபவன் ஒரே ஒரு முறை அவர்கள் வீட்டுக்கு சென்றிருக்கிறான், அவ்வளவுதான்.

பெண்ணை கொடுத்து விட்டோம் என்பதால் அரங்கநாதன் அங்கு செல்வதை தவிர்க்க முடியாமல் சீர் கொடுப்பது, வீட்டு நிகழ்வுகளுக்கு அழைப்பது என செல்வார். ஆனால் வெகு நேரம் இருக்க மாட்டார். அனைத்தையும் விஜய்யும் பாவனாவும்தான் செய்வார்கள்.

 ரமணன் வீட்டிலிருந்து முற்றிலும் ஒதுங்கிய நிலையைத்தான் இதுவரை கடைபிடிக்கிறான் பிரசன்னா. இவன் குணம் தெரிந்துதான் வைஷு வீட்டில் இவர்களை விருந்துக்கு கூட அழைக்கவில்லை. அழைத்தாலும் வர மாட்டான் என்பதால்தான் தான் மட்டும் சென்று வரலாம் என நினைத்தாள்.

வெளியில் சென்று விட்டு வந்த போதே அத்தையிடம் கேட்டு சம்மதமும் பெற்றிருந்தாள். இவன் செல்லாதது வேறு, என்னையும் செல்லக் கூடாது என்பது அடக்குமுறை அல்லவா? இவன் மாற மாட்டான், நான்தான் இவனை பற்றி முழுதும் தெரியாமல் மயங்கி கிடக்கிறேன்….

“என்னடி பதில் சொல்லு, போக மாட்டேன்னு சொல்லு” அவளது சிந்தனையை கலைத்தான் பிரசன்னா.

“நான் போவேன்” என அழுத்தமாக சொன்னாள்.

“முன்னாடி எப்படியோ இப்ப என் வைஃப் நீ. அந்த ஒழுங்கங்கெட்டவர் கூட என் வைஃப்க்கு எந்த சகவாசமும் தேவையில்லை”

“நான் அவரை நல்லவர்னு ஒண்ணும் சொல்லலை. இது முறை, என் பெரியம்மா ஃபீல் பண்ணுவாங்க. என் அண்ணன் இருக்கான். எல்லாத்துக்கும் மேல அவர் பொண்ணு இங்க மருமக, அவர் பையன் இந்த வீட்டு மருமகன். ஃபார்மாலிட்டியா போயிட்டு வந்திடுறேன்” என கொஞ்சம் பொறுமையாகவே சொன்னாள்.

“அதுக்கெல்லாம் அந்த ஆள் ஒர்த் இல்லை. தப்பு செய்றவனை எதுவும் கேட்காம விடுறது கூட என்னை பொறுத்த வரை தப்புதான். டிஸிப்பிளின் இல்லாத ஒருத்தனை ஒதுக்கி வைக்கிறதுதான் சரி. மத்தவங்க பத்தி டோண்ட் கேர், நீ போக கூடாது”

“உடம்பு முடியாதவரை சும்மா பார்த்திட்டு வர்றேன்னு வச்சுக்கோங்க. கொஞ்சமும் பரிதாபம் இல்லையா அவர் மேல”

“அந்தாளால எங்கம்மா உயிர் போய் உயிர் பொழச்சு வந்தாங்க. என்ன பெரிய உடம்பு முடியாதவர்? ஆடின ஆட்டத்துக்கு இப்போ படுக்கையில கிடக்கார். எனக்கு ஒரு…” தன் பின் கழுத்தை தேய்த்து தன்னை சற்றே நிதானப் படுத்திக் கொண்டவன், “பரிதாபம் பச்சாதாபம் எல்லாம் அந்தாள் மேல எனக்கு கிடையாது. போகாதன்னா போக கூடாது நீ!” கட்டளையாக சொன்னான்.

“ப்ச்… சொல்லி புரிய வைக்க முடியாது உங்களுக்கு” என்றவள் அறைக் கதவில் கை வைக்க, வேகமாக அவளிடம் வந்தவன் அவளை பிடித்து இழுத்து படுக்கையில் தள்ளினான். சாவி கொண்டு கதவை அடைத்தவன் அதே வேகத்தில் பின் பக்க கதவையும் அடைத்தான்.

பிரசன்னாவின் செய்கையில் மனம் நொந்தவள் எதுவும் பேசாமல் படுக்கையில் கிடக்க அவளது கைபேசி அழைத்தது.

பாவனாவின் பெயரை திரையில் பார்த்த பிரசன்னா அவனே ஏற்று “ஹலோ” என்க, இவனை எதிர்பார்க்காத பாவனா “பிருந்தா… பிருந்தா இல்லையா?” என தடுமாற்றமாக கேட்டாள்.

“அவளுக்கு ஹெட் ஏக், தூங்குறா” என கடினக் குரலில் சொன்னான்.

‘அரை மணி நேரம் முன்பு தயாராகி வருகிறேன் என நன்றாக சொல்லி விட்டுத்தானே சென்றாள்?’ என நினைத்த பாவனா அமைதியாக இருக்க, “வேற?” எனக் கேட்டான்.

ஒன்றுமில்லை என சொல்லி அழைப்பை துண்டித்து விட்டாள் பாவனா. கைபேசியை அணைத்து மேசையில் வைத்த பிரசன்னா அறைக்குள்ளேயே அங்குமிங்கும் நடை போட்டான்.

பிருந்தா படுக்கையில் தான் கிடந்த நிலையிலிருந்து மாறவில்லை. கோவம் மட்டு பட்டிருக்க அவள் அருகில் சென்றவன், “எதையுமே நல்ல முறையில சொன்னா புரிஞ்சுக்க மாட்டேன்னா நான் என்ன செய்ய? வா எழுந்திரு. கார்டன் போலாம், ரிலாக்ஸ் ஆகும்” என்றான்.

அவள் அசையாமல் இருக்க அவள் தோளில் கை வைத்தான். அடுத்த நொடி அவன் கையை வேகமாக உதறி விட்டவள், “என்னை தொட்ட தொலைச்சிடுவேன் உன்னை. போ சரியான காட்டுமிராண்டி நீ. போ இங்கேர்ந்து. உன்னை புடிக்கவே இல்லை. போ…” என சீறினாள்.

“போடி!” என அவளுக்கு சற்றும் குறையாமல் சீறியவன் பின் பக்க கதவை திறந்து கொண்டு வெளியேற, “போடா!” மூக்கு விடைக்க சத்தமிட்டாள் பிருந்தா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement