Advertisement

அத்தியாயம் -6(2)

நேரே படுக்கையில் சென்று குப்புற விழுந்தவளுக்கு மனம் நிதான பட முழுதாக ஐந்து நிமிடங்கள் ஆகின. சிறு பெண் கிடையாது பிருந்தா, விவரமும் மன முதிர்வும் கொண்டவள்தான். அதிலும் கடந்த சில வருடங்களாக பஞ்சாலையை பொறுப்பெடுத்து நடத்துவதிலிருந்து யோசனைகள் கூட சிறு பிள்ளை தனமாக இருந்ததில்லை.

திருமணம் முடிந்து நான்கு நாட்களே ஆகியிருக்க அதிலும் அத்தனை பிடித்தம் இல்லாமல் கொஞ்சம் கலக்கத்தோடு மணந்து கொண்டவன் மீது எப்படி பிடித்தம் ஏற்படுகிறது என அவளுக்கு சுத்தமாக பிடிபடவில்லை.

அவளுக்கு பிடித்தம் இல்லாத குணங்கள் கொண்ட அதே பிரசன்னாதான். என்ன மாற்றத்தை அவனிடம் கண்டு விட்டேன் நான்? ஏன் இப்படி ஆகிறேன்? என்ற அவளது கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை.

“முரடனை இப்படி ரசிப்பேன்னு நான் நினைச்சே பார்த்தது இல்லையே… அச்சோ என்னை பத்தி என்ன நினைப்பான்? என்ன… என்ன பெருசா நினைப்பான்? என்ன வேணா நினைக்கட்டும்? அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டான்? என் புருஷன்தானே… இதெல்லாம் நார்மல்… போடா பரங்கிமலை! இப்படி தனியா புலம்ப விட்டுட்டியே” தலையணையில் முகம் புதைத்து இவள் தனியாக புலம்பிக் கொண்டிருக்க அவன் வந்ததை கவனித்திருக்கவில்லை.

அவள் கவுன் பற்றி இழுத்தவன், “என்னடி முத்தி போய்டுச்சா?” எனக் கேட்க பதறி திரும்பி நேராக படுத்தவள் அசடு வழிய பார்க்க,

“இதெல்லாம் இதுல ஒரு ஸ்டேஜ், இதை கிராஸ் பண்ணாதவங்க யாரும் இல்ல. நான் கிண்டல் பண்ண மாட்டேன்” என்றான்.

“என்ன… அப்போ உங்களுக்கும் இப்படி ஆகியிருக்கா?”

“எப்படி?”

“தனியா புலம்பறது”

சிரித்தவன் கண்களை சிமிட்டி புருவங்கள் இரண்டையும் உயர்த்தி முக பாவனையில் ‘ஆகியிருக்கிறது, நிறைய முறை’ என்பது போல கூற, “யார் காரணம்?” என கடினமாக கேட்டுக் கொண்டே எழுந்து அமர்ந்தாள்.

சுதாரித்தவன், “புலம்பல் லவ் பண்ணினாதான் வருமா? நிறைய ஒர்க் டென்ஷன்ல ஆகியிருக்கு. இந்த ஸ்டூடென்ட்ஸ் அடிக்கடி பிபி ஏத்துவாங்க, அப்போ நடந்திருக்கு. நீ என்ன இதே ட்ரெஸோட இருக்க போறியா? கிளம்பு, பிரேக் ஃபாஸ்ட் முடிச்சிட்டு வெளில போலாம்” என்றான்.

“எங்க? முன்னாடியே சொல்லலை”

“போர் அடிக்குதுன்னு சொல்ற, காலையிலேயே விரல்ல காயம். வேற ஏதாவது செய்து நைட் என் பிளானை கெடுத்துட்டீனா? கிளம்பு கிளம்பு போலாம்” என்றான்.

“நைட் என்ன பிளான்?” விழி விரித்தாள்.

அவள் அருகில் அவளை இடித்துக் கொண்டு அமர்ந்தவன் தோளை சுற்றி கை போட்டு தன்னோடு நெருக்கிக் கொண்டு, “டைம் தர்றேன்னு சொன்னேன்தான். இப்போதான் நீ ரெடி ஆகிட்டியே… அப்புறமும் தள்ளி போடணுமா? ரெண்டு பேருக்கும் வயசாகல… அதது நடக்க வேண்டிய நேரத்துல நடக்கணும். ஆல்ரெடி மூணு நைட் வேஸ்ட்டா போச்சு” என்றான்.

“இல்லயில்ல… கொஞ்ச நாள் போகட்டும்” சிணுங்கினாள் பிருந்தா.

“நீ பொறந்ததிலேர்ந்து உன்னை எனக்கு தெரியும், உனக்கு விவரம் தெரிஞ்சதிலேர்ந்து என்னை உனக்கு தெரியும். கல்யாணம் முன்னாடி என்னை உனக்கு பிடிக்காதுங்கிறதாலதான் வெயிட் பண்றேன்னு சொன்னேன். இதுக்கு மேல முடியாதுடி” என்றான்.

“இப்பவும் ஒண்ணும் எனக்கு பிடிக்கல. இது ஏதோ… ஆப்போசிட் ஜெண்டர் அட்ராக்ஷன்” என்றாள்.

“குட்! அந்த அட்ராக்ஷனை பேஸ்மெண்ட்டா வச்சு நாம…” என்றவன் அவளை பார்க்க, வேகமாக மறுப்பாக தலை அசைத்தாள் பிருந்தா.

“எனக்கு தெரியும், அதெல்லாம் உனக்கு ஓகேதான். நைட் வரைக்கும் டைம் இருக்கு, மனசை தயார் படுத்திக்க” என்றவன் அவள் முகத்தை நெருங்க இருவரது இதழ்களுக்கும் இடையில் கை வைத்து மறைத்தவள், “ஃபர்ஸ்ட் மனசால நெருங்குவோம், அப்புறம் இப்படி… ஹ்ம்ம்?” எனக் கேட்டாள்.

“அப்படித்தான் இருக்கணும்னு அவசியம் இல்ல. நாம மாத்தி செய்வோம். ஃபர்ஸ்ட் இப்படி நெக்ஸ்ட் அப்படி” என்றான்.

“முடியாது முடியாது”

“நைட் அஞ்சு நிமிஷம் டைம் தா, அப்புறமும் நீ முடியாதுன்னு சொன்னா நான் ஏத்துக்குறேன்” என அவன் சொல்ல அவள் பதில் தராமல் பார்த்தாள்.

“என்ன அவ்ளோ நம்பிக்கையா உன் மேல?” கிண்டலாக கேட்டான்.

“ஹான் யார்கிட்ட? அஞ்சு என்ன பத்து நிமிஷம் டைம் தரேன். பார்க்கலாம்” என சிலிர்த்துக் கொண்டாள் பிருந்தா.

“குட், இப்போ ரெண்டு நிமிஷம் டைம் தா” என்றவன் அவள் கையை விலக்கி இதழ்களை மூடினான்.

இரண்டு என்றது நான்கு நிமிடங்கள் என ஆன பிறகே விலகியவன் அவளை விடாமல் தன்னோடு அணைத்துக் கொண்டு, “பிடிச்சிருக்குதானே? மத்த எல்லாம் கூட பிடிக்கும். ரொம்ப டீப்பா திங்க் பண்ணாம சீக்கிரம் கிளம்பு” என்றான்.

அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் மலர்ந்த சிரிப்பை இதழ்களை கடித்து அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தவள் தன் முகம் விழுந்த முடியை ஒதுக்கி விட, “என்னடி இது ஒளிச்சு மறைச்சு வைக்கிற சிரிப்ப? என்கிட்ட கொடுத்திடு” என சொல்லி மீண்டும் அவள் முகத்தை நெருங்கியிருந்தான்.

மீண்டும் அவன் விலகும் போது அவன் மார்பில் தலை புதைத்துக் கொண்டாள் பிருந்தா.

அவள் என்றால் பிடித்தம்தான். ஒரு வீம்பில் என் வாழ்வில் இவள் வந்தே தீர வேண்டும் என்ற தீவிரத்தோடுதான் நடத்திக் கொண்டான். மணம் செய்து கொண்டதில் மகிழ்ச்சிதான், ஆனால் இப்போது என்னவோ இத்தனை காலம் இவள் இல்லாமல் எப்படி இருந்தேன் என நினைக்க தோன்றியது.

இருவரும் அப்படி ஒன்றும் புரிந்துணர்வோடு பழகியிருக்கவில்லைதான். அவள் சொல்வது போல எதிர் பாலின ஈர்ப்பாக கூட இருக்கலாம். ஆனால் இப்படி இவளை தேடுவதை பிடித்திருக்கிறது, அவள் கண்களில் தன் மீதான மயக்கம் காண்கையில் ஏதோ பெருமையான உணர்வு.

பிருந்தாவிடம் மொத்தமாக தொலைந்து போக நினைக்கும் தன் எண்ணத்தை எல்லாம் அவனால் அவளுக்கு புரிய வைக்க முடியவில்லை. இவள் மன மாற்றத்துக்கு மாதக் கணக்காக காத்திருக்க வேண்டி வரும் என இவன் நினைத்திருக்க இத்தனை அதி விரைவான அவளது மாற்றம் இன்னுமின்னும் அவளை பிடிக்க செய்தது.

“இப்படியே இருக்க எனக்கும் ஆசைதான். ஆனா தேடுவாங்கடி வெளில” பிரசன்னா சொல்ல அவன் தோளை கிள்ளி விலகியவள், “போங்க நான் ரெடி ஆகி வர்றேன்” என்றாள்.

“நான் ரெடி ஆகியே போறேன்” என சொல்லி எழுந்தவன் பத்து நிமிடங்களில் தயாராகி விட அவனை பார்த்தே இருந்தவள் அவளுக்கான ஆடையை கையில் எடுத்து அவன் வெளியேற காத்திருந்தாள்.

வெளியே செல்ல நடந்தவன் வேகமாக இவள் அருகில் வந்து நின்று ஒரு தோளில் இருந்த முடிச்சை அவிழ்த்து விட, வேகமாக அவள் ஆடையை முற்றிலும் விலகாதவாறு பிடித்துக்கொண்டவள் முறைத்தாள். அவள் தோள் பட்டையில் அழுந்த முத்தமிட்டு, “இந்த நாட் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிச்சு. அதான்… சீக்கிரம் ரெடி ஆகு” என சொல்லி நிஜமாகவே வெளியேறி விட்டான்.

உள்ளே ஸ்தம்பித்து போயிருந்த மூச்சை வேகமாக வெளியேற்றியவள் அவனை செல்லமாக கடிந்து கொண்டே கதவை தாழிட்டு ஆடை மாற்றிக் கொண்டு ஒப்பனை செய்ய ஆரம்பித்தாள்.

கண்களுக்கு மை தீட்டியவள் அடுத்து உதட்டுசாயத்தை எடுக்க அவளது எண்ணங்களோ அவனிடம் ஓடி சென்று நின்றது. ஒரு ரகசிய சிரிப்போடு அதை போடாமல் வைத்து விட்டாள்.

சமையலறையில் பாவனா இருக்க, “நீ ஸ்கூல் போகல?” எனக் கேட்டாள்.

“ம்ம்… கல்யாணம் ஆச்சுன்னா ஞாயித்து கிழமை கூட மறந்து போய்டும் போலயே…” பாவனா கிண்டல் செய்ய, சிறு கேலிக்கும் சட் சட் என சிவக்கும் தன் கன்னங்களை கடிந்து கொண்டே பாவனாவை பார்த்து புன்னகை செய்து வைத்தாள்.

பாவனா அதிகம் சீண்டாமல் ஏதேதோ பேசி அவளை இயல்பாக்க, “சாப்பிடலையா?” என விசாரித்தாள் பிருந்தா.

“அப்பாவும் பொண்ணும் இன்னும் எழுந்திரிக்கல, அவங்களுக்காக வெயிட்டிங்” என்றாள் பாவனா.

“ஆழி பெரிய மாமா ரூம்ல தூங்கலையா?”

“அங்கதான் தூங்குறா. இன்னும் தூங்குறான்னு அத்தை சொன்னாங்க”

“விஜய் மாமா?”

“அவர் எங்க ரூம்ல தூங்குறார்”

“சண்டேன்னாலும் விஜய் மாமாக்கு ஒரு நியாயம் வேணாமா?” எனக் கேட்ட பிருந்தா, பாவனாவும் அப்போதுதான் தலைக்கு குளித்து வந்திருக்கிறாள் என்பதை அவள் தோற்றம் வைத்து புரிந்து கொண்டு, அடுத்து என்ன பேசுவது என விழிக்க, அவள் தெரிந்து கொண்டாள் என்பதில் பாவனாவுக்கும் லேசாக வெட்கம் வர, குரலை செருமிக் கொண்ட பிருந்தா நான் கிளம்பறேன் என சொல்லி அங்கிருந்து வந்து விட்டாள்.

உணவு முடித்துக் கொண்ட பின் பிருந்தாவின் விருப்பத்துக்கு இணங்க கோயில் சென்று விட்டு பின் ஈரோட்டில் பிரபலமான கடைகள் இருந்த பகுதிக்கு விட்டான் காரை.

“இப்ப என்ன வாங்க போறோம்? வேணாம் மாமா” என்றாள் பிருந்தா.

“கல்யாணம் அப்போ நீயா எதுவும் ஆசை பட்டு வாங்கிக்கலதானே? எங்க… நீதான் ஏதோ மாட்டிக்க போறோம் மூட்லேயே இருந்தியே. இப்ப வாங்கிக்க” என்றான்.

“ஆமாம் நீங்க மட்டும் ஆசை ஆசையா எல்லாம் வாங்குனீங்க!” நொடித்தாள்.

“அப்புறம் நீ நார்மலா இல்ல, அதான் எனக்கும் இன்ட்ரெஸ்ட் வரலை” என்றான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement