Advertisement

மெல்ல உன் வசமாகுறேன் -4

அத்தியாயம் -4(1)

திருமணம் நடத்தி முடித்திருந்த அசதியில் யாரும் அன்று வேலைக்கு செல்லவில்லை. பிருந்தாவுக்கும் உறக்கம் வராததால் பிரசன்னா உடற்பயிற்சி முடித்து வருவதற்குள் குளித்து சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டு வெளியேறி விட்டாள்.

கங்கா மட்டுமே சமையல் வேலையை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்க, “அத்தை காபி வேணும்” என சொல்லிக் கொண்டே வந்து நின்றாள் பிருந்தா.

“வா வா. யாருமே எழல இன்னும். நீயும் கொஞ்ச நேரம் தூங்குறதுக்கு என்ன? இது என்ன பழகாத இடமா தூக்கம் வராம போறதுக்கு?” எனக் கேட்டார்.

“எத்தனை முறை உங்க பையன் ரூம்ல போய் தூங்கியிருக்கேனாம்? வைஷு ரூம்னா தூக்கம் நல்லா வரும்” என்றாள்.

மருமகளை செல்ல கண்டிப்போடு பார்த்தவர், “அதனால என்ன இன்னிலேர்ந்து நீ மட்டும் வைஷு ரூம்ல தூங்கேன்” என கிண்டல் செய்தார்.

“என் செல்ல அத்தை! உங்க புள்ள ஒத்துக்கணுமே அதுக்கு, நீங்களே கேட்டு சொல்றீங்களா?” என வாயடித்துக் கொண்டிருக்க, “என்னடா புள்ளைய எதுவும் சொல்லி பயமுறுத்தி வச்சிருக்கியா?” எனக் கேட்டார் கங்கா.

யாரிடம் பேசுகிறார் என பிருந்தா திரும்பி பார்க்க அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் பிரசன்னா.

முதலில் விழித்தவள் பின் சாதாரணமாக தன் காபியை எடுத்துக் கொண்டு, “நியூஸ் பேப்பர் எங்க இருக்கும் அத்தை?” என மாமியாரிடம் கேட்டறிந்து கொண்டுஅவனை கடந்து சென்றாள்.

அவளையே பார்வையால் தொடர்ந்தவன், தன்னை கிஞ்சித்தும் கண்டு கொள்ளாத அவளது அலட்சிய போக்கில் சினம் கொண்டு, “எனக்கு காபி ரூமுக்கு கொடுத்து விடும்மா உன் மருமககிட்ட” என சொல்லி அறைக்கு சென்று விட்டான்.

காபி பருகி விட்டு பிருந்தா வருவாள் என கங்கா காத்திருக்க அவளோ தினசரியை மும்முரமாக படித்துக் கொண்டிருந்தாள்.

பொறுத்து பொறுத்து பார்த்த கங்கா, “பிருந்தா வாடா, எக்ஸர்சைஸ் எல்லாம் பண்ணிட்டு வந்து அவனுக்கும் பசிக்கும்ல… நீ வேணும்னா பேப்பர் ரூம்க்கே எடுத்திட்டு போயேன், அவனோட பேசிட்டே படி” என்றார்.

அத்தையிடம் வந்து நின்றவள், “பேசிக்கிட்டே எப்படி படிக்கிறது அத்தை? மாமா எதுவும் ஸ்பெஷல் கிளாஸ் எடுத்து உங்களுக்கு சொல்லி கொடுத்திருக்கிறாங்களா? புள்ளைன்னு வந்திட்டா மருமக பத்தி எல்லாம் யோசிக்கிறது இல்ல… ஹும்!” என கேட்டு அவரை கொஞ்சம் டென்ஷன் செய்து விட்டு அவனுக்கான காபி மற்றும் தினசரியோடு அறைக்கு சென்றாள்.

‘வர எவ்வளவு நேரம்?’ என கடுப்பில் இருந்த பிரசன்னா இவள் ஆடி அசைந்து வருவதை பார்த்து விட்டு வாய் திறக்கும் முன் காபியை டொங் என மேசையில் வைத்தவள், “நேத்து வந்த நானே தானா கேட்டு வாங்கி காபி குடிக்கிறேன். உங்க வீடுதானே தானா எடுத்துக்க தெரியாதா? ஒரு தாலி கட்டிட்டா நான் உங்களுக்கு சேவகம் செய்யணுமா? உங்க வேலைய நீங்களே பார்த்துக்கோங்க. வீட்டுக்கு ஒரே பொண்ணுன்னாலும் என் வேலைய நான்தான் பார்த்துப்பேன், இப்படி அடுத்தவங்களை ஏவ மாட்டேன்” என பொரிந்து தள்ளி விட்டாள்.

கை கட்டி நிதானமாக அவளது பட பட பேச்சை கேட்டு முடித்தவன் காபியை கண்களால் காட்டி, “ஆறிப் போச்சு, வேற எடுத்திட்டு வா” என்றான்.

எரிச்சலில் முகத்தை உர் என வைத்தவள், “இவ்ளோ நேரம் நான் சொன்ன எதுவும் மண்டையில ஏறலையா உங்களுக்கு?” எனக் கேட்டாள்.

“எங்கம்மாவும் உங்கம்மாவும் இப்படித்தான் அவங்க ஹஸ்பண்ட்ட கவனிக்கிறாங்க. நீயும் செய்யலாம் தப்பில்ல, போ” என்றான்.

“உங்க தங்கச்சி செய்றாளான்னு தெரியுமா? செய்வாளா இருக்கும், எங்கண்ணன் மேல இருக்க அன்புல செய்வா, அப்போ கூட இப்படி அதிகாரம் பண்ணினா செய்ய மாட்டா. காபி… ம்ஹூம் சூடான காபி வேணும்னா நீங்களே போய் வாங்கிக்கோங்க” என்றவள் பின் பக்க கதவை நன்றாக திறந்து வைத்து அறையை வெளிச்சப் படுத்தினாள்.

ஒரு பக்க திரை சீலையை மட்டும் இழுத்து விட்டு தோட்டத்தில் வேலை செய்பவர்களின் யார் பார்வையும் அறைக்குள் விழாத படி செய்தவள் ஒற்றை சோபாவை இழுத்து போட்டு இன்னொரு மர நாற்காலியை அதற்கு எதிரில் போட்டாள்.

பிரசன்னா அசையாமல் அவளையே முறைத்துக் கொண்டு நின்றிருக்க அவனை கண்டு கொள்ளாமல் சோபாவில் அமர்ந்து எதிரில் இருந்த நாற்காலியில் வசதியாக கால்களை நீட்டிக் கொண்டு தினசரி படிக்க ஆரம்பித்து விட்டாள்.

 இரண்டு நிமிடங்கள் அவளையே வெறித்துக் கொண்டிருந்தவன், “அழுத்தம் அழுத்தம். பார்க்கிறேன் எவ்ளோ தூரம் என் பொறுமைய சோதிக்கறேன்னு” என கூறிக் கொண்டே ஆறிப் போன காபி இருந்த கோப்பையை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

அவன் சென்றதும் தினசரியை மடித்து மடியில் வைத்து “ஹப்பா…” என மூச்சை இழுத்து விட்டாள்.

அவன் அறைக்குள் இல்லை என இன்னொரு முறை உறுதி செய்தவள், “நீர்யானை புஸ் புஸுன்னு எப்படி பார்க்கிறான்? கோவத்துல என்னைய இழுத்து புடிச்சு எதுவும் எக்குத்தப்பா செய்திடுவானோன்னு நினைச்சிட்டேன். பரவாயில்ல ஒரு ஒழுக்க சீலராதான் என் மாமா வளர்த்து வச்சிருக்கார். ஆனா கொஞ்சமும் மேனர்ஸ் கிடையாது” என வாய் விட்டு புலம்பி விட்டு இந்த முறை நிஜமாகவே தினசரியை படிக்க ஆரம்பித்தாள்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து அறைக்கு வந்தவன் அமைதியாக குளித்து தயாராக இவளும் தினசரியை மடித்து வைத்து விட்டு இன்று என்ன நிகழ்ச்சி என அத்தையிடம் கேட்க சென்றாள்.

பாவனா, வைஷ்ணவி இருவரும் சமையலறையில் குலாப்ஜாமூன் செய்து கொண்டிருக்க ஆழினி அங்குமிங்கும் ஓடி ஆடிக் கொண்டிருந்தாள். ஹாலை கடக்கும் போது மாமா, விஜய் இருவரிடமும் சாதாரணமாக பேசியவள் ஆழியை தூக்கிக் கொண்டு சமையலறை சென்றாள்.

கடந்த ஒரு வருடத்தில் பாவனாவோடு நன்றாகவே பேச ஆரம்பித்திருந்த பிருந்தா இப்போதும் இலகுவாக பேச ஆழினி அவளிடமிருந்து இறங்கி மீண்டும் ஹால் சென்று விட்டாள்.

“ச்சே இந்த பொம்பள பசங்க எல்லாம் இப்படித்தான் அப்பா தாத்தா மாமான்னு பசங்களோடவே அதிகம் ஒட்டிக்குவாங்க. பையன் ஒண்ணு பெத்து கொடேன்டி வைஷு. என் பின்னால சுத்துவான்ல?” வைஷுவின் பின்னலை இழுத்து விட்டுக் கொண்டே கேட்டாள்.

“அதான் உன் பின்னால சுத்த என் அண்ணனை கட்டி வச்சிருக்கேனே, போ, நீயும் என் அண்ணன் பின்னால சுத்து, என்னை விடு” என்றாள் வைஷு.

“சரி போ, நீ சரிப்பட்டு வர மாட்ட. என்ன பாவனா என் கோரிக்கைய நீ நிறைவேத்தி வைப்பியா? இல்ல நான்தான் மூத்த மருமக அக்கான்னு கூப்பிடுன்னு எல்லாம் மிரட்டுவியா? உன்னை விட மூணு மாசம் பெரியவ நான். சொன்னாலும் கூப்பிட மாட்டேன்” என்றாள்.

பாவனா சிரித்து விட்டு ஒன்றும் சொல்லாமல் குலாப்ஜாமூன் எல்லாம் அழகாக பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொண்டிருந்தாள்.

வைஷு புதுப்பெண்ணை கொஞ்சம் கிண்டல் செய்ய ஆரம்பித்தாள்.

“சீக்கிரம் எழுந்திட்டதா அம்மா சொன்னாங்க, என்ன நைட் முழுக்க தூங்காம இனிமே தூங்கினா எழவே முடியாதுன்னு எழுந்திட்டியா?” என கண்கள் சிமிட்டி வைஷு கேட்க, இது வேறயா என்பது போல பிருந்தா சலிப்பாக பார்க்க வைஷுவை அடக்கினாள் பாவனா.

குளித்து தயாராகி வந்த கங்கா காலை உணவுக்கு பின் குடும்பத்தினர் அனைவரும் அருகில் இருக்கும் குலதெய்வ கோயிலுக்கு சென்று விட்டு மணமக்கள் இருவர் மட்டும் மறுஅழைப்பு விருந்துக்கு பெண் வீடு செல்ல வேண்டும் என கூறினார்.

“ஓகே அத்தை, நான் எப்போலேர்ந்து என் ஃபேக்டரி போறது?” என பிருந்தா கேட்க கங்கா தன் பெரிய மருமகளை பார்த்தார்.

“ஓ ஆன்சர் பாவனாகிட்ட இருக்கா?” கிண்டலாக கேட்டாள் பிருந்தா.

“இல்லையில்லை எங்கிட்டேயும் இல்ல ஆன்சர். இதெல்லாம் உன் ஹஸ்பண்ட்டும் நீயும் டிஸ்கஸ் பண்ணிட்டு முடிவை மட்டும் சொல்லுங்க. படிச்சு கூட பார்க்காம பாஸ் மார்க் போட்ருவாங்க அத்தை” என பாவனாவும் கிண்டலாகவே சொன்னாள்.

“ஓய் ரெண்டு மருமகளும் சேர்ந்து என் அம்மாவை ஓட்டுறீங்களா? அப்புறம் உங்க அண்ணனை ஒரு வழியாக்கி விட்ருவேன் பார்த்துக்கோங்க” என மிரட்டினாள் வைஷு.

“பாருடா புள்ள பூச்சிக்கு கொடுக்கு முளைக்கிறதை. எங்க ரெண்டு பேருக்கும் ஒரு அண்ணன், ஸோ பாதிப்பு ஒருத்தனுக்குத்தான். உனக்கு ரெண்டு அண்ணன், சேதாரம் உன் பக்கம்தான் ஜாஸ்தி. அதிலேயும் உன் சின்ன அண்ணனை டபுலா டேமேஜ் பண்ணுவேன், யாருகிட்ட?” சுடிதார் டாப்பை லேசாக தூக்கி கட்டுவது போல செய்து காட்டிய பிருந்தா இன்னும் கொஞ்சம் கட்டம் கட்ட அவளின் சேட்டையில் ஆரம்பத்தில் சிரித்த மற்ற மூவரும் திடீரென பேரமைதி ஆகி விட்டனர்.

“உன்னைத்தான் டேமேஜ் பண்ண போறாங்களா சித்தப்பா?” என ஆழினி கேட்க பிரசன்னாவும் நிற்கிறான் என புரிந்து கொண்டவள் திரும்பாமல், “அத்தை நான் இதையெல்லாம் டைனிங் ஹால் எடுத்திட்டு போகவா?” என உணவு நிரம்பிய கேசரால்கள் காட்டி பொறுப்பாக அத்தையிடம் கேட்டாள்.

“வேணாம் நீ போ ரெடி ஆகி வா, டைம் இல்ல” என்ற கங்கா, “இங்க என்னடா வேலை உனக்கு? போ ஹால் போ. சும்மா அவளை முறைச்சுக்கிட்டு” என சின்ன மகனையும் விரட்டினார்.

“ஆழிக்கு குலாப்ஜாமூன் வேணுமாம், கொடுங்க” என பிருந்தாவின் முதுகையே வெறித்து பார்த்துக் கொண்டு பிரசன்னா கூற, வைஷு ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து குழந்தையிடம் கொடுத்தாள்.

பிரசன்னா ஆழியோடு சென்று விட, பிருந்தாவின் தோளை தொட்டு, “அண்ணன் போயாச்சு, நீ இன்னும் ஏதும் உருட்டறதுன்னா ஸ்டார்ட் பண்ணு” என்றாள்.

“என்னடி நான் உன் அண்ணனுக்கு பயப்படுறேன்னு நினைச்சியா? என்ன இருந்தாலும் பெத்தவங்க முன்னாடி டேமேஜ் பண்ணினா அவங்க மனசு கஷ்ட படாது? அதான், மத்த படி உன் அண்ணன் எனக்கு ஜு ஜூபி!” என்றவள் அடுத்து கங்கா எதுவும் சொல்வதற்குள் அறைக்கு செல்கிறேன் என சென்று விட்டாள்.

“ம்மா அண்ணன் சும்மா பிருந்தாவை முறைச்சிட்டே இருக்கான். அட்வைஸ் பண்ணுங்க, வைஃப் மாதிரி பார்க்காம அவன் காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரியே பார்க்கிறான்” என்றாள் வைஷு.

“ஒரு நாள்ல எல்லாம் தெரிஞ்சிடும் உனக்கு, புருஷன் பொண்டாட்டி விஷயத்துல எல்லாம் நீ தலையிடாத. ரெண்டு பேருமே விவரம் தெரிஞ்சவங்க, அவங்க பார்த்துக்குவாங்க. மாப்ள எப்ப வர்றார், நல்ல நேரத்துல கோயிலுக்கு போயிட்டு வந்திடனும், போ போன் போட்டு கேளு” என மகளையும் அனுப்பி விட்டு அவரும் பாவனாவுமாக இங்கு பார்த்தனர்.

அடுத்து உணவு, கோயில் வழிபாடு என சீராக எல்லாம் நடக்க கோயிலில் இருந்தே பிரசன்னா, பிருந்தா இருவரும் மறுவீடு சென்றனர். சௌந்தரியும் பாட்டியும் அங்குதான் இருந்தனர். நிர்மலா தடபுடலாக விருந்து செய்திருந்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement