Advertisement

அத்தியாயம் -3(2)

அன்றிலிருந்து கேசவனுக்கும் நிர்மலாவுக்கும் நிற்க நேரமில்லை. நிர்மலாவுக்கு அண்ணன் மகனே மாப்பிள்ளையாக வரப் போவதில் அத்தனை மகிழ்ச்சி.

“நாலு வருஷம் முன்னாடி நடக்க வேண்டியது, உங்க பொண்ணு அப்ப முறுக்கிட்டு நின்னா. இல்லைனா இந்நேரம் பேரப் புள்ளைய பார்த்திருப்போம்” என கூட கணவரிடம் அங்கலாய்த்தார்.

அரங்கநாதன் கங்காவுக்கு கூட மகிழ்ச்சியே. பிருந்தா சின்ன மருமகளாக வந்தால் இன்னும் புரிதலோடு இந்த குடும்பம் ஒற்றுமையாகவே இருக்கும் என கருதினார்கள்.

ஆனால் மணம் செய்து கொள்ள போகிறவர்கள் இன்னும் பேசிக் கொள்ளவில்லை. பிரசன்னா என்ன நினைக்கிறான் என எதுவும் யாருக்கும் புரியவில்லை. எப்பொழுதும் போல இருந்தான். ஏதாவது சம்பிராதயம் என சொன்னால் செய்தான். மற்ற படி முகூர்த்த புடவை எடுப்பது, அழைப்பிதழ் தேர்ந்தெடுப்பது என எதிலும் கலந்து கொள்ளவில்லை.

“எனக்கு என்னம்மா தெரியும்? நீயே பார்த்துக்க” என ஒரு வரியில் முடித்துக் கொண்டான்.

அம்மாவை மருத்துவமனை அழைத்து சென்று முழுதாக பரிசோதனைகள் செய்ய வைத்து பயப்பட ஒன்றுமில்லை என மருத்துவர் சொன்ன பிறகுதான் அம்மாவின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டாள் பிருந்தா.

அம்மா, வைஷு, அத்தை, பாவனா என மற்றவர்கள் உற்சாகமாக எல்லாம் செய்ய அவர்களின் மனநிலை கெடுக்க விரும்பாமல் எப்போதும் புன்னகை ஒன்றை ஒட்ட வைத்துக்கொண்டு எதையும் மறுக்காமல் ஒத்துழைப்பு நல்கினாள் பிருந்தா.

தாய்க்கு மகளை பற்றி தெரியாதா? ஆனால் எதுவும் பேசி எங்கே அவள் மீண்டும் வேண்டாம் என சொல்லி விடுவாளோ என பயந்தவர் திருமணம் முடிந்தால் எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கை கொண்டு மகளிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

அன்று முகூர்த்த கால் நடுவதற்கு இரு வீட்டு மனிதர்களுமே அதிகாலையில் தயாராக இருந்தனர். தேவா, வைஷ்ணவி, சௌந்தரி, கேசவனின் பெற்றோர் பிருந்தா வீட்டில் இருந்தனர்.

மூத்த மருமகளை முன்னிறுத்தி வந்திருந்த இன்னும் இரண்டு உறவுகளோடு தன் வீட்டில் நிகழ்ச்சியை நடத்தினார் கங்கா.

புடவையில் கண்ணாடி வளையல்கள் நிறைந்த கைகளில் நலுங்கு செய்யப் பட்ட முகத்தோடு இருந்த பிருந்தாவை புகைப்படம் எடுத்து அண்ணனுக்கு அனுப்பி வைத்தாள் வைஷ்ணவி. விஜய்க்கு அழைத்த வைஷு பிரசன்னாவின் புகைப்படம் அனுப்ப சொல்லி கேட்க வேஷ்டி சட்டையில் இருந்த தம்பியின் புகைப்படத்தை பிருந்தாவுக்கு அனுப்பி வைத்தான்.

சற்று நேரத்தில் பிருந்தாவை தன் கைபேசி திரையில் கண்ட பிரசன்னா, ‘ஹ்ம்ம்… நல்லாத்தான் இருக்கா’ என ரசனையாக பார்க்க, அவனை தன் கைபேசியில் கண்ட பிருந்தா, ‘ஜுல பார்த்த ரைனோசரஸ் கணக்கா போஸை பாரு! யாரை பயமுறுத்த இப்படி உடம்பு வளர்க்கிறான். பரங்கிமலை பரங்கிமலை!’ என திட்டினாள்.

அதன் பின்னர் கூட இருவரும் பேசிக் கொள்ள முனையவில்லை.

அவர்களின் திருமண நாள் அழகாக விடிந்தது. வீட்டின் கடைசி திருமணம் என்பதால் நேரம் குறைவாக இருந்த போதும் அத்தனை ஆடம்பரமாக நடந்தது திருமணம்.

மகள் கழுத்தில் அண்ணன் மகன் தாலி இடவும்தான் நிம்மதி மூச்சு விட்டார் நிர்மலா. இருவரும் கை கோர்த்து அக்னியை வலம் வரும் போதுதான் பிருந்தாவின் கை சில்லிப்பை உணர்ந்தான் பிரசன்னா. நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவனுக்கு அவள் முகத்தில் மலர்ச்சி இல்லை என்பதும் புரிந்தது. ஆனால் எதுவும் அவளிடம் கேட்டுக் கொள்ளவில்லை.

அடுத்தடுத்த சடங்குகளும் மாலை வரவேற்பும் எப்படி நடந்து முடிந்தது என பிருந்தாவுக்கு தெரியவில்லை. பிரசன்னா குணம் பற்றிய நெருடலும் எப்படி போகும் எனது வாழ்க்கை என்ற சிந்தனையும் வேறு எதை பற்றியும் அவளை சிந்திக்க விடாமல் செய்திருத்தன.

இரவு சடங்குக்காக பிரசன்னா அறை அலங்கரிக்க பட்டிருக்க வெறுமையான மனதோடு உள்ளே நுழைந்தாள் பிருந்தா.

அவளது மலர்ச்சியற்ற முகம் பார்த்த நொடியில் எரிச்சல் கொண்டவன், “எதுக்கு உனக்கு இவ்ளோ வெறுப்பு? கல்யாணம்தான் பண்ணியிருக்கேன், என்னவோ உன்னை கொடுமை படுத்த போறேங்கிற மாதிரியே இருக்கு உன் லுக். காலைல கூட அவ்ளோ நெர்வஸா இருக்க…” கடு கடுவென பேசினான்.

“எப்படி பேசுறீங்க நீங்க? என் நிலையில இருந்து பார்த்தாதான் புரியும் உங்களுக்கு?” என்றாள்.

“என்ன பெரிய நிலை உனக்கு? பேசி வச்ச கல்யாணம் நின்னு போய் யாரோ ஒருத்தனை உன் தலையில கட்டல. எல்லா வகையிலும் தி பெஸ்ட் பையனை கட்டியிருக்க, சும்மா அழுது வடியாத. வா வந்து படு” என்றான்.

சிறிதாக வாய் பிளந்து பிருந்தா பார்த்திருக்க அவள் எண்ணம் உணர்ந்து நமட்டு சிரிப்பு சிரித்தவன், “டயர்டா இருப்ப, அதனால இன்னிக்கு வேணாம்னு நினைச்சேன். உனக்கு ஏமாற்றமா இருந்தா வேணும்னா இன்னிக்கே…” என சொல்லி கண்கள் சிமிட்டினான்.

“இங்க பாருங்க அதெல்லாம் தானா நடக்கணும், எதுக்கும் ஃபோர்ஸ் பண்ணுனீங்க… அப்புறம் நடக்கிறதே வேற!” என எச்சரிக்கை செய்தவள் கொண்டு வந்திருந்த பாலை அவனிடம் நீட்டினாள்.

வாங்கிக் கொண்டவன், “இதென்ன சூடு ஆறிப் போயிருக்கு. எதுவா இருந்தாலும் சூட்டோட சூடா குடிச்சுதான் எனக்கு பழக்கம்” என அவளை கண்களால் சூறையாடிக் கொண்டே சொன்னான்.

“கொதிக்க கொதிக்க குடிச்சா வாய் வெந்து போகும், குடலும் புண்ணா போகும். அப்புறம் சூடு கண்ட பூனை கதை தெரியுமா அப்படி ஆகிடும் உங்க நிலைமை. பரவாயில்லையா?” தடுமாறாமல் அவள் கேட்ட விதத்தை ரசித்து பார்த்தவன், “அவ்ளோ கொதிப்பா இருக்கிறியா என்ன?” என மையல் நிறைந்த குரலில் கேட்டான்.

“அச்சோ சூடு வாங்காம அடங்காது போலயே இந்த அகங்காரம் புடிச்ச பூனை” கிண்டலாக சொன்னாள்.

“அப்படியா! ஆனா நான் பூனை இல்லை சூட்டுக்கெல்லாம் பயப்பட, நான் பிரசன்னா. டெஸ்ட் பண்ணி பார்க்கலாமா உன் கொதிப்பை நான் டாலரேட் செய்றேனா இல்லையான்னு?” கேலியும் நக்கலுமாக கேட்டான்.

“இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” என்றவள் படுக்க போக, பாலை பருகாமல் வைத்து விட்டவன், “என் கால்ல விழுந்து கும்பிட சொல்லலை உன்கிட்ட? நீ பாட்டுக்கும் படுக்க போற” எனக் கேட்டான்.

“ம்ம்… சொன்னாங்க சொன்னாங்க. எவளும் உங்களை கட்டிக்க சம்மதிச்சிருக்க மாட்டா. நான்தான் உங்களுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கேன், அதனால நீங்கதான் கால்ல விழணும்னு சொன்னேன். சரிதான் அப்படியே செய்மான்னு அனுப்பி வச்சிட்டாங்க” என்றவள் புடவையை தன் பாதங்கள் தெரியுமாறு லேசாக தூக்கிப் பிடித்து அவனை பார்த்து புருவங்கள் உயர்த்தினாள்.

அவளது பாதங்களில் பார்வை பதித்தவன் கொஞ்சம் கொஞ்சமாக பார்வையை மேல் நோக்கி நகர்த்த பிருந்தாவால் அவனை எதிர்கொள்ள முடியவில்லை.

“துச்சாதனன் தேவலாம் உனக்கு, ச்சீ…”

“அவன் தேவலாம் இவன் தேவலாம்னு பேசி வாங்கி கட்டிக்காத என்கிட்ட. ஏதோ போனா போகுதுன்னு ரொம்ப பொறுமையா டீல் பண்ணிட்டு இருக்கேன். பொறுமை பறந்துச்சு…”

“என்ன செய்வ?”

“என் பொறுமை பறக்கிற பக்கம் நீ கட்டியிருக்க புடவையும் பறந்து போய்டும். அப்புறம் நடக்கிற கசமுசால மாமா மாமான்னு என் வேட்டிய புடிச்சுகிட்டு சுத்துவ நீ” கைகளை உயர்த்தி சோம்பல் முறித்துக் கொண்டே அலட்சியமாக சொன்னான்.

“பரங்கிமலையோட பேச்சை பாரு, எப்ப வந்து பாயறதுன்னு காத்திட்டு இருந்திருப்பான் போல” என முணு முணுத்தவள் படுத்து விட்டாள். அவளது பேச்சில் தனக்குள் சிரித்துக்கொண்டான் பிரசன்னா.

தன்னுடைய அத்தனை பெரிய படுக்கை இன்றுதான் பார்க்க அழகாக இருப்பது போல பிரசன்னாவுக்கு பட்டது.

‘ம்ம்… என் பெட்டுக்கு மோட்சம் கிடைச்சிடுச்சு, எனக்கு என்னிக்கோ?’ என்ற நினைவுடன் மின் விளக்கை அணைத்து விட்டு சட்டையை கலைந்து விட்டு படுக்கையின் மறு ஓரம் படுத்துக் கொண்டான்.

நடு சாமத்தில் உறக்கம் கலைந்து எழுந்தமர்ந்த பிருந்தாவுக்கு எங்கே இருக்கிறோம் என்பது உரைக்க பிரசன்னாவை பார்த்தாள். அவனது முரட்டு தோற்றம் மனதை கலங்க செய்ய அறையில் இருந்த மற்றொரு கதவை திறந்தாள்.

அந்த அறை தரை தளத்தில் இருக்க அந்த மற்றொரு கதவை திறந்ததும் வராண்டா இருக்க அதை தாண்டி பூந்தோட்டம்.

வெளியில் சென்று வராண்டாவின் தூணில் சாய்ந்து அமர்ந்தவள் ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவளை அறியாமல் அழுகை வர துடைக்க கூட தோன்றாமல் அங்கேயே அமர்ந்திருந்தாள்.

விடியற்காலையில் எழுந்த பிரசன்னா படுக்கையில் பிருந்தா இல்லாமல் போகவும் அவளை தேடினான். பின் பக்கம் வெறும் தரையில் உடலை குறுக்கிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள்.

கட்டியிருந்த புடவை தாறுமாறாக விலகியிருக்க, தலையில் வைத்திருந்த வாடிப் போயிருந்த மல்லிகை கழுத்தை சுற்றிக் கிடக்க தன்னை மறந்த நிலையில் கிடந்தாள்.

எதற்கு இங்கே வந்தாள் என மெல்லிய கோவத்தோடே புடவையை அவனால் முடிந்த மட்டும் சீர் செய்து விட்டவன் மெதுவாக பூவை அகற்றினான். பின் அவளை தூக்கிக் கொண்டு அறைக்கு சென்றான்.

திடீரென தன் உடல் யாரின் தொடுகையையோ உணர கண் விழித்த பிருந்தா கைக்கு சிக்கிய பிரசன்னாவின் நெஞ்சு முடியை பிடித்து இழுக்க ஆ என அலறியவன், “அரக்கி!” என திட்டினான்.

தான் அவன் கையில் இருக்கிறோம் என்பது புரிய, “என்ன செய்ற நீ? இறக்கி விடு என்னை, விடுன்னு சொல்றேன்ல” துள்ளினாள் பிருந்தா.

எதற்கும் அசராமல் அவளை தூக்கியவாறே வந்தவன் படுக்கையில் பொத் என அவளை போட்டான். அவள் விழுந்த வேகத்தில் மெத்தை உள் அமுங்கி அவளையும் இழுத்து பின் மீண்டும் சீரானது.

“கொஞ்ச நேரத்துல தோட்ட வேலை பார்க்கிறவங்க வந்திடுவாங்க. என்ன நினைச்சுட்டு அங்க போய் படுத்து உருளுற? நைட் முழுக்க டச் பண்ணாம தூங்க விட்டவன் இப்ப என்னடி பண்ணுவேன்னு கத்தி கூச்சல் போடுற? நீயே சரின்னாலும் எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை. சும்மா ட்ராமா பண்ணாம இந்த பெட்லேயே படுத்து உருளு. நம்ம விஷயம் வெளில போச்சு தொலைச்சு கட்டிடுவேன்” என்றவன் குளியலறைக்குள் புகுந்து விட்டான்.

டிராக் பேண்ட்டில் வெளியில் வந்தவன் கால்களை குறுக்கிக் கொண்டு அவள் அமர்ந்திருப்பது கண்டு, “தூங்காம என்ன பண்ற?” எனக் கேட்டான்.

அவள் பதில் தராமல் போகவும், “உன் சம்மதம் கேட்டுத்தான் கட்டிகிட்டேன். உனக்கு நினைவு தெரிஞ்சதிலேர்ந்து தெரியும் என்னை. சின்ன புள்ள மாதிரி நடக்காம ஒழுங்கா பிஹேவ் பண்ணு. கல்யாணம் என் கூடன்னு உன் மனசுல பதிய இருபது நாள் அவகாசம் இருந்துச்சு. என் கூட வாழ ஆரம்பிக்க காலம் முழுக்க கூட அவகாசம் தர ரெடியாதான் இருக்கேன். எதுவா இருந்தாலும் நமக்குள்ள மட்டும், புரிஞ்சதா?” அழுத்தமாக பேசினான்.

பிருந்தா அவனையே பார்த்திருக்க, “என்ன வாய தொறக்க மாட்டியா? தலை கூட ஆட காணோம்? இவனுக்கெல்லாம் பதில் சொல்லணுமான்னு யோசிக்கிறியா? அப்படித்தான் யோசிப்ப நீ. என் அத்தை பாசத்தை ஊட்டி வளர்க்காம டின் டின்னா திமிரை ஊட்டி வளர்த்து விட்ருக்காங்க. ஏதாவது பதில் பேசுறியா நீ” என்றான்.

சற்று முன் பிரசன்னா பேசியதில் லேசாக அவனை நல்ல விதமாக பார்க்க ஆரம்பித்தவள், இப்போது பேசியதில் கோவம் கொண்டு, “நான் நினைக்கிறதுதான் உனக்கு நல்லா தெரியுதே ஆமாம்” என சொல்லி முகம் திருப்பிக் கொண்டாள்.

“திமிரு பிடிச்ச உன்னை எப்படி வழிக்கு கொண்டு வர்றதுன்னு தெரிஞ்சு வச்சுக்கிட்டுதான் கல்யாணம் பண்ணியிருக்கேன். நீ நினைக்கிற அளவுக்கு மோசமானவன் இல்ல நான்” என பிரசன்னா சொல்ல அவளோ அவன் பக்கம் திரும்பவே இல்லை.

“நீ நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு மோசமானவன்” குரலில் கடினமும் மிரட்டும் தொனியும் இருந்தாலும் அவன் முகத்தில் குறும்பான புன்னகைதான். ஆனால் பிருந்தா அவனை பார்த்திருந்தால்தானே.

‘என் வாழ்க்கை இவனோட மல்லு கட்டி மல்லு கட்டியே வீணா போக போகுது’ என பிருந்தா நினைத்துக் கொண்டிருக்க அவள் தலை கோத எழுந்த கையை பின் இழுத்துக் கொண்டு, பின் பக்கம் வழியாகவே தன் உடற்பயிற்சி கூடத்தை நோக்கி நடந்தான் பிரசன்னா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement