Advertisement

மெல்ல உன் வசமாகுறேன் -3

அத்தியாயம் -3(1)

தனது ஒரே மகளுக்கு இரண்டாவது முறையாக திருமணம் நின்று விட்டதை நிர்மலாவால் அத்தனை எளிதாக ஜீரணிக்க முடியவில்லை. அபியின் தந்தை பேசியதில் கோவம்தான், அதற்காக திருமணத்தை நிறுத்தி விட்டால் ஆகிற்றா? ஏற்கனவே சரியான இடங்கள் அமையாமல் எவ்வளவு மனவேதனை? பேசி சரி செய்யலாம் எனதான் நினைத்திருந்தார். பெரியவர்கள் நாங்கள் இருக்கையில் இவளை யார் அபியிடம் பேச சொன்னது என்ற ஆத்திரம் எழ அடித்து விட்டார்.

ஒரே பெண் என்றாலும் செல்லம் அதிகம் கொடுக்காமல் கண்டிப்பு காட்டித்தான் வளர்த்திருந்தார் நிர்மலா. ஆனால் ஒரு முறை கூட அடித்தது கிடையாது. பிருந்தா அழாமல் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு தரையை வெறிக்க பார்க்க நின்றிருக்க வைஷு அவளை அறைக்கு செல்ல அழைத்தாள்.

வைஷுவின் கையை உதறி விட்டு பிருந்தா அங்கேயே நின்றிருக்க பார்த்திருந்த பிரசன்னா, ‘நான் நினைக்கிறது விட வீம்பு அதிகம் இவளுக்கு’ எனதான் தோன்றியது.

வளர்ந்த மகளை அடித்து விட்ட குற்ற உணர்வு, திருமணம் நின்று போனதில் வருத்தம், அபியின் தந்தை பேசியது என எல்லாம் சேர்ந்து நிர்மலாவை மயக்க நிலைக்கு கொண்டு சென்றது.

சிறிது நேரத்தில் வீடு பர பரத்து போனது. தெரிந்த மருத்துவரை வீட்டிற்கு அழைத்திருந்தார் அரங்கநாதன். இரத்த அழுத்தம் உயர்ந்திருக்கிறது, இந்த வாரம் ஒரு நாள் மருத்துவமனை வந்து சில பரிசோதனைகள் செய்து கொள்ளும் படி பரிந்துரை செய்தவர் இப்போது உறங்க மருந்து செலுத்தி விட்டு கிளம்பி விட்டார்.

கேசவனும் அரங்கநாதானும் தனியாக ஒரு அறையில் ஏதோ பேசிக் கொண்டிருக்க, “இப்பவே இப்படி பேசுறவங்க வீட்ல பிருந்தா எப்படி போய் நல்லா இருக்க முடியும்? வேற நல்ல இடமா பார்க்கலாம். அத்தை எழட்டும் நான் பேசி புரிய வைக்கிறேன்” என அம்மாவிடம் விஜய் சொல்லிக் கொண்டிருக்க தேவாவும் அவன் கருத்தை ஆமோதிப்பதாக சொன்னான்.

பிரசன்னா தனியாக அமர்ந்திருக்க பிருந்தாவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி.

அரங்கநாதன் அறையை விட்டு வெளியில் வந்து பிரசன்னாவை மட்டும் உள்ளே அழைத்து சென்றார். கங்கா தன் பெரிய மகனை பார்க்க சில நொடிகள் நெற்றி சுருக்கி யோசித்த விஜய், “பிருந்தாகிட்ட கேட்காம திரும்பவும் அப்பா முடிவு எடுக்க நினைக்கிறார். அவரோட…” சலிப்பாக சொன்னான்.

பிருந்தா திகைத்து அவன் முகத்தை பார்க்க, “பயப்படாம மனசுல உள்ளதை சொல்லு. நான் இருக்கேன்” என்றான்.

பிருந்தாவுக்கு தெரியுமே தன் பெற்றோருக்கு இப்போதைய ஒரே கவலை தன் திருமணம்தான் என்று. நிர்மலா மயங்கி சரிந்ததில் பயந்து போயிருக்கும் தன் தந்தை தனக்காக தைரியமாக இருப்பது போல காட்டிக் கொள்கிறார் என்பதும் நன்றாகவே புரிந்தது. இந்த சமூகத்தில் பெற்றோரின் பெரும் கவலை பெண்ணின் திருமணம் குறித்துதான்.

திடீரென சென்ற மாதம் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போன அவள் தோழியின் தாயார் அவளின் நினைவில் வந்தார். அனிச்சையாக அவள் அம்மா இருக்கும் அறையை பார்த்தவளுக்கு உடல் ஒரு முறை நடுங்கி பின் அடங்கியது.

அபியோடு முடிவாக இருந்த திருமணம் நின்று போனதில் பிருந்தாவுக்கு பெரிதாக கவலைகள் இல்லை. இரு நாட்களில் முற்றிலும் தெளிந்து இயல்பு வாழ்க்கைக்கு மீண்டு விடுவாள் என அவளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவளது பெற்றோருக்கு இது அத்தனை எளிதான காரியமில்லை என்பது புரிய, தன் பெற்றவர்களை மட்டுமே முன்னிறுத்தி யோசித்துக் கொண்டிருந்தாள்.

அறையிலிருந்து அரங்கநாதன், கேசவன், பிரசன்னா மூவரும் வந்தனர். அப்பாவின் முகத்தைதான் பார்த்திருந்தாள். அவர் முகத்தில் பயமும் கவலையும் அப்பட்டமாக தெரிந்தது.

அவளின் மாமா அருகில் வந்தமர்ந்து பிருந்தாவின் தலை கோதினார். எடுத்த முடிவு பற்றி கூறினார். “உன் வாயால சம்மதம்னு சொன்னா அவனுக்கு சரின்னு சொல்றான்” பிரசன்னாவை கை காட்டி கூறினார்.

விஜய் ஏதோ பேசப் போக கங்கா அவன் கை பிடித்து காதில் ரகசியமாக, “பிருந்தா ஒண்ணும் குழந்தை இல்லை, நீ அவளை குழப்பாத. நம்ம பிரசன்னா நல்லா பார்த்துக்க மாட்டானா?” எனக் கேட்டு அவனை அமைதி படுத்தினார்.

“ரெண்டு நாள் பொறுக்கலாமே ம்மா” என்றான் விஜய்.

“உன் அத்தை கண் முழிக்கும் போது நல்ல சேதி காதுல விழுந்தாதான் இந்த வீடு வீடா இருக்கும்”

“கட்டாயத்துல செய்தா பிருந்தா பிரசன்னா ரெண்டு பேருக்குமே கஷ்டம் இல்லையாமா. நம்ம பிரசன்னா கூட வேற யாரையும் விரும்பறானோன்னு எனக்கு டவுட் இருக்கு. ரெண்டு பேருக்காகவும்தான் நான் சொல்றேன்” என்ற விஜய் தம்பி முகத்தை பார்க்க அவன் சாதாரணமாக நின்று கொண்டிருந்தான்.

“பிரசன்னாவா… அதெல்லாம் இருக்காது” என கங்கா சொல்ல என்னதான் நடக்கிறது பார்ப்போம் என விஜய்யும் அமைதி அடைந்தான்.

தேவாவுக்கு பிரசன்னாவை பெரிதாக பிடிக்காது. பிருந்தாவுக்கும் பிடிக்காது என தெரிந்த படியால் அண்ணனாக, “அவசர படாதீங்க சித்தப்பா” என கேசவனிடம் சொன்னான்.

அவர் தேவாவை அமைதி படுத்தி விட்டார். அனைவரும் பிருந்தா முகத்தை பார்க்க, அவள் பிரசன்னாவை பார்த்திருந்தாள்.

அவனது முகத்தில் சிறிதும் இளக்கமில்லை, இறுமாப்பாக நிற்பது போல பிருந்தாவுக்கு பட இன்னும் ஊன்றி பார்த்தாள். தன்னை ஏளனமாக பார்த்து நிற்கிறானோ என சந்தேகம் எழ அவளது மனம் அப்படி நினைத்ததால் அப்படித்தான் பட்டது.

“மச்சான், அவ குழம்பி போயிருக்கா. அதைவிட நிர்மலா நினைச்சு பயந்து போயிருக்கா. வேணாம்னு சொல்லலையே… அவளை விடுங்க” என்றார் கேசவன்.

பிருந்தா மறுத்து பேசாமல் இருக்க, “இல்லையில்ல, பிருந்தா வாய தொறந்து சொல்லட்டும்” என அழுத்தமாக சொன்னான் பிரசன்னா.

அரங்கநாதன் கண்டிப்பாக பார்க்க, “பிருந்தா சொல்லணும் ப்பா எனக்கு” என அப்பாவிடமும் உறுதி பட கூறினான்.

‘ஒரு சவால் விட்டதை இத்தனை தீவிரமாக எடுத்துக் கொண்டு அனைவர் முன்பும் சொல்ல வைக்கிறானா என்னை? சிறு வயதிலிருந்து தெரியும் என்னை, அறையில் என் அம்மா… என்னை கையில் தூக்குவதற்கு முன் உன்னை கையில் ஏந்திய உன் அத்தை மயக்கத்தில் இருக்கிறார், யாரும் உனக்கு முக்கியமில்லை, உனக்கு யாருக்குமே தெரியாத ஒரு சவாலில் வெற்றி பெற வேண்டும். ஹ்ம்ம்… இத்தனை கொடூர மனமா உனக்கு?’ பிருந்தாவின் மனம் காய்ந்தது.

“இப்படி அண்ணனையே பார்த்திட்டிருந்தா என்ன அர்த்தம்? ஏதாவது சொல்லு” அவள் காதில் சொன்னாள் வைஷு.

பிரசன்னாவையே பார்த்துக் கொண்டிருந்த பிருந்தா ‘இதோ சொல்லி விடுகிறேன், இதே இறுமாப்போடு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நில், எந்த நிலையிலும் மாறி விடாதே’ என நினைத்துக் கொண்டே, “பிரசன்னா மாமாவை கல்யாணம் பண்ணிக்கிறேன், எனக்கு சம்மதம்தான்” என தெளிவாக திண்ணமாக சொல்லி தனது அம்மா இருந்த அறைக்கு சென்று விட்டாள்.

பிரசன்னா முகத்தில் சிறு ஒளிக் கீற்றாக புன்னகை தோன்ற கவனித்த விஜய், “அடப்பாவி! எவ்ளோ நாளா நடக்குது இது?” தம்பியிடம் வந்து கிசு கிசுத்தான்.

“ஷ்! அதெல்லாம் இல்லை. இது அப்பா பார்த்து செய்ற கல்யாணம். நீ சும்மா இரு” என அண்ணனிடம் அவன் சொன்ன விதமே விஜய்க்கு அவன் மனதை புரிய வைத்தது.

அடுத்து பெரியவர்கள் ஒரு மாதம் எல்லாம் வேண்டாம் அதற்கு முன்னரே இருக்கும் முகூர்த்த நாளில் செய்யலாம், இருபது நாட்களில் நாள் வருகிறது என பேசிக் கொண்டனர்.

விஜய், பிரசன்னா, தேவா மூவரும் அவரவர் வீடுகளுக்கு புறப்பட மற்றவர்கள் அங்கேயே தங்கிக் கொண்டனர்.

விஜய்யும் பிரசன்னாவும் ஒன்றாகத்தான் பயணித்தனர். இன்னும் தம்பியின் இந்த மனமாற்றத்தை விஜய்யால் நம்ப முடியவில்லை.

“உனக்கு ஆசைன்னா பிருந்தா கல்யாணம் வரை எதுவுமே மெனெக்கெடலையா நீ?” சந்தேகமாக கேட்டான் விஜய்.

“எல்லார் முன்னாடியும் என்னை வேணாம்னு சொன்னவளை நானா போய் பேசுறதான்னு விட்டுட்டேன். நீ ஏன் ரொம்ப நோண்டுற? விடேன். இப்பதான் அவளே சரின்னு சொல்லிட்டாளே…”

“சரி விட்டுட்டேன், ஆனா பிருந்தாவை நல்லா பார்த்துக்கணும் நீ. ஏதாவது சேட்டை பண்ணுனியோ…”

“போதும், உன் மிரட்டலை எப்பதான் விடுவியோ போடா!” சலித்தான் பிரசன்னா.

“என்னடா பண்றது தன்மையா சொன்னாதான் காதுலேயே வாங்கிக்க மாட்டேங்கிறியே. உன் கோவத்தை எல்லாம் பிருந்தாகிட்ட காட்டாத. முக்கியமா அவ முன்னாடி மேரேஜ் நிறுத்தினது வச்சு எதுவும் பேசி ஹர்ட் பண்ணிடாத” என அறிவுறுத்தினான் விஜய்.

“இந்த உலகத்துல நீ மட்டும்தான் நல்லவன் மத்தவங்க எல்லாம் கெட்டவங்க ரேஞ்சுக்கு பேசாத. எல்லாம் எனக்கு தெரியும்”

“அடேய்! நீ என்ன பண்ணினாலும் அமைதியா போக மாட்டா, நல்லா திருப்பி கொடுப்பா. லவ் வேற பண்றேன்னு சொல்ற, உன்னால சமாளிக்க முடியுமான்னு தெரியலை. லவ் பண்ணியும் அவகிட்ட சொல்லாம அவ்ளோ திண்ணக்கமா இருந்திருக்க. இது தெரிஞ்சா இன்னும் கோவம் வரும் பிருந்தாக்கு, உன் நல்லதுக்குதான் பார்த்து நடன்னு சொல்றேன்” என சொல்லி சிரித்தான் விஜய்.

அண்ணனை முறைத்தவன், “இவர் பெரிய இவரு! லவ்வை கரைச்சு குடிச்சவரு. அவ என்ன பண்ணிடுவா என்னை? பார்க்கிறேன் நானும்” திமிராகவே சொன்னான் பிரசன்னா.

தம்பி பட்டு திருந்தி வரட்டும், என் சக்தியை ஏன் விரயம் செய்ய வேண்டும்? என எண்ணிய விஜய் அதன் பின் எதுவும் பேசவில்லை.

வீடு வரவும் பாவனாவும் ஆழினியும் இன்னும் உறங்காமல் காத்திருந்தனர். வழக்கம் போல பாவனாவை தவிர்த்து விட்டு அண்ணன் மகளை மட்டும் கொஞ்சி விட்டு அறைக்கு சென்று விட்டான் பிரசன்னா.

நடந்த விஷயங்களை சொல்லிக் கொண்டே மகளை தூக்கிக் கொண்டு தங்கள் அறைக்கு சென்றான் விஜய். பாவனா இருவருக்கும் எப்படி சரி வரும் என யோசித்துக் கொண்டிருக்க மகளை உறங்க செய்து விட்டு மனைவியின் நெற்றியில் முட்டி என்ன எனக் கேட்டான்.

“ரெண்டு பேருக்கும் டெர்ம்ஸ் சரியில்லை. ஏட்டிக்கு போட்டி செய்றவங்க. இதுல உங்க தம்பி பாவமா பிருந்தா பாவமான்னு யோசிச்சிட்டு இருந்தேன்” என்றாள்.

“பிரசன்னாவுக்கு அவ்ளோ சீன் இல்ல, பிருந்தாகிட்ட மாட்டிட்டு முழிக்க போறான் பய” என விஜய் சொல்ல, “ஈஸியா சொல்றீங்க. உங்க தம்பி அவ்ளோ ஈஸி கிடையாது. எனக்கு தெரியும்” என்றாள் பாவனா.

“அதென்னமோ இந்த லவ்வுன்னு வந்து தொலைச்சா எவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கிறவனையும் ஈஸியாதான் சாய்ச்சுபுடுறீங்க”

“அப்படி என்ன சாய்ச்சோமாம்?” படுத்துக் கொண்டே கேட்டாள்.

தன் எடை கொடுக்காமல் மனைவி மீது கவிழ்ந்து கொண்டவன், “இதோ இப்படி விழுந்து கிடக்கிறனே…” என சொல்ல அவன் எடை முழுதும் தன் மேல் அழுந்தும் படி கணவனை நன்றாக சாய்த்துக் கொண்டவள், “அதுல ரொம்பத்தான் வருத்தம் உங்களுக்கு” என கொஞ்சலாக சொன்னாள்.

அவளிடமிருந்து தள்ளி படுத்து அவளை தன் மார்பில் போட்டுக் கொண்டு, “நாங்க விழுந்தா நீங்களும் தன்னால விழுந்திட போறீங்க. அது தெரியாம முறுக்கிட்டு நின்னா லாஸ் யாருக்கு? அதனாலதான் ஈஸியா விழுந்திடுறோம்” என்றான்.

“ஏற்கனவே பிருந்தாக்கு கல்யாணம் தள்ளி போயிட்டே இருந்தது. தாத்தா பாட்டியெல்லாம் ரொம்ப கவலை பட்டாங்க. இப்ப நம்ம வீட்டுக்கே வர்றான்னு நினைச்சு சந்தோஷ படறதை விட அவங்களுக்குள்ள ஒத்து போகுனுமேன்னுதான் உள்ள ஓடிட்டு இருக்கு” கவலையாக சொன்னாள்.

 “கல்யாணம் முடிவாகிடுச்சு. பொண்ணும் பையனும் ஓகே சொல்லிட்டாங்க. கூட நாம இவ்ளோ பேர் இருக்கோமே, பார்த்துக்கலாம். நீ அதை பத்தி ரொம்ப கவலை படாத” என சமாதானமாக சொல்ல அவளும் சரி என சொல்லி கண் மூடிக் கொண்டாள்.

பிரசன்னா நல்ல உறக்கத்தில் இருக்க பிருந்தாவுக்குத்தான் உறக்கம் வரவில்லை. தன்னை மீறி நடக்கிறது, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என அவள் மீதே அவளுக்கு கோவம். விடியும் நேரத்தில்தான் கண் அயர்ந்தாள்.

ஒன்பது மணி போல நிர்மலாவே வந்து அவளை எழுப்பி விட அம்மாவின் முகத்தையே பார்த்தாள். அத்தனை சந்தோஷமாக இருக்கிறார் என்பது புரிய, இவளும் சிரித்தவள், நலம் விசாரித்தாள்.

“எனக்கு என்ன? கல்யாண வேலை அவ்ளோ கிடக்கு, நீ வா சாப்பிடு” என உற்சாகமாக மகளிடம் பேசினார்.

“இன்னும் கொஞ்ச நேரம் மா. கண் எரியுது” என்றாள்.

“சரி தூங்கு, ஒரு மணி நேரம்தான். மதியம் அப்பா வீடு வந்திடுவாங்க, நிறைய வேலை இருக்கு எங்களுக்கு. நீதான் ஃபேக்டரி போகணும்” என சொல்லி சென்றார் நிர்மலா.

தனது விருப்பு வெறுப்பை ஒதுக்கி வைத்து விட்டு மனதில் திடத்தை வரவழைத்துக் கொண்டு இன்னும் கொஞ்ச நேரம் உறங்கினாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement