Advertisement

அத்தியாயம் -13(2)

மொத்தமாக அனைத்தையும் சரி என சொல்லாமல் தவறுகளை ஒத்துக் கொண்டு சரி செய்ய முயல்கிறேன் என அவன் சொன்னதையே அவனுக்குள் வந்த மிகப்பெரிய மாற்றமாக கருதினாள் பிருந்தா.

“சின்ன வயசிலேர்ந்து என்னை தெரியும் உனக்கு. நான் இப்படிதானே பிருந்தா? நீ நினைக்கிற படி நான் செய்றது யோசிக்கிறது தப்பாவே இருந்தாலும் நானும் அதை தப்புன்னு நினைச்சாதானே மாறுவேன்?” எனக் கேட்டான்.

பிருந்தா என்ன சொல்வது என பார்த்திருக்க, “எனக்கு உன்னை கஷ்ட படுத்தணும்னு சத்தியமா எண்ணமில்ல. எதுவா இருந்தாலும் சொல்லு, எனக்கு சரின்னு பட்டா எடுத்துக்கிறேன், இல்லையா சண்டை போட்டு நீ செய்றதை செய். ஆனா அந்த சண்டையை வளர்க்காத. எனக்கு இருக்கிறது ஒரு லைஃப், ஒரு வைஃப். என் லைஃப் டைம்ல இருக்க எல்லா நைட்ஸும் என் வைஃப் மடியிலதான் முடியணும்” என சொல்லி அவள் கையை எடுத்து கன்னத்தில் வைத்துக் கொண்டான்.

“இப்போ என்ன சொல்ல நான்?” எனக் கேட்டாள்.

“ம்ம்… சொல்லு, எது வேணா சொல்லு. எப்பவும் விட்ருங்கனு மட்டும் சொல்லாத” என்றான்.

“ம்ம்… இனிமே ஒண்ணா சேர்ந்தே கும்மி அடிப்போம், போதுமா?” என பிருந்தா நக்கலாக கேட்க, “தாராளமா அடிக்கலாம் ஆனா ஒரு கை உன்னோடது இன்னொரு கை உன் மாமனோடது, என்ன?” என்றான்.

அவள் முறைக்க அவன் சிரிக்க, “உங்க மண்டைய எந்த ரிசர்ச் சென்டருக்கு அனுப்பி டெஸ்ட் பண்றது? போங்க மாமா. ஏதோ கொஞ்சம் இறங்கி வந்திருக்கீங்க, மத்தவங்க மலை இறங்கிறது விட ஒரு மலையே மலையிறங்கிறது கஷ்டம்ங்கிறதால விடுறேன்” என்றாள்.

பேசிக் கொண்டே பின் பக்கம் வழியாக தோட்டம் சென்றனர். பார்க்கில் ஆழினி, விஜய், பாவனா, அம்மா வீடு வந்திருந்த வைஷ்ணவி நால்வரும் இருக்க “பார்க் போலாமா?” எனக் கேட்டாள் பிருந்தா.

“இப்போ வேணாம், நான் வந்தா ஆழி அம்மா போய்டுவாங்க. நாம இங்கேயே இருக்கலாம்” என்றான்.

“ஒரு வீட்டுக்குள்ள இருந்துகிட்டு ஏன்தான் இப்படி இருக்கீங்களோ? உங்களுக்கு அண்ணிதானே அவ?”

“அதுக்கு? நீயே அக்கான்னு கூப்பிடுறது இல்ல. சில விஷயங்கள் இப்படித்தான் பிருந்தா. திடீர்னு உறவு கொண்டாட முடியாது. என்னால எப்பவும் அவங்களுக்கு சங்கடம் வராதுன்னு வேணா பிராமிஸ் பண்றேன். மத்த படி அவங்க கூட பேசு அண்ணின்னு கூப்பிடு எல்லாம் சொல்லாத. அகைன் நமக்குள்ள சண்டைதான் வரும்” என்றான்.

“சரி, ஆனா இப்படி ஒளிஞ்சு பிடிச்சு விளையாடறது அவாய்ட் பண்ணலாம்தானே. நீங்க வாங்க, பேச எல்லாம் வேணாம். ஆனா மூஞ்சு கூட பார்க்காம இப்படி இருக்கிறது… ப்ளீஸ் வாங்க மாமா” என்றாள்.

“எனக்கொன்னும் இல்ல, அவங்கதான் போய்டுவாங்க” என்றான்.

“நான் போய் அஞ்சு நிமிஷம் கழிச்சு வாங்க” என்றவள் அவன் பதிலுக்கு காத்திராமல் ஓடி சென்று விட்டாள்.

“அதிக பிரசங்கி, அவசர காரி! எல்லாம் உடனே உடனே நடக்கணும் இவளுக்கு” என சலிப்பாக சொல்லிக் கொண்டே தோட்டத்திலேயே சுற்றி வந்தவன் போகவே இல்லை அங்கு.

பத்து நிமிடங்களில் ஆழி வந்து அவன் கை பிடித்துக்கொண்டாள்.

“யாரு உன் சித்தி அனுப்பி வச்சாளா? வா நாம இங்கேயே இருப்போம்” என்றான் பிரசன்னா.

“நீங்க இப்படித்தான் சொல்வீங்க, அங்க அழைச்சிட்டு வந்தா எனக்கு டைரி மில்க் தரேன்னு சொன்னாங்க சித்தி. வாங்க” என அவனது ஒரு கையை தன் இரு கைகளாலும் பிடித்து இழுத்தாள் ஆழி.

“ஹேய் வாண்டு, எங்க அசை பார்ப்போம் என்னை” என அவன் நின்று கொள்ள, பாவம் குழந்தை முயன்று பார்த்து விட்டு முகத்தை தொங்க போட்டு விட்டது.

பொறுக்க முடியாத பிரசன்னா, “ட்ரை பேபி” என சொல்ல அவளும் மீண்டும் அவனை இழுக்க இப்போது அவளின் இழுப்புக்கு சென்றான்.

ஆழியின் முகத்தில் அத்தனை பெருமிதம், மகிழ்ச்சி. அதைக் கண்டு பிரசன்னா முகமும் ஒளிர்ந்தது.

பெண்கள் மூவரும் கூடி விட சகோதரர்கள் இருவரும் ஆழியோடு விளையாடினர். கங்கா கைபேசியில் நிர்மலாவோடு பேசிக் கொண்டே நடை போட்டு கொண்டிருந்தார்.

நடை பயிற்சி செய்து கொண்டிருந்த அரங்கநாதன் தன் மகளையும் நடக்க அழைத்தார். வைஷுவும் மகிழ்ச்சியாக அப்பாவிடம் சென்றாள்.

“என்னதான் வைஷுகிட்ட மாமா பேசினாலும் முன்னாடி மாதிரி கிடையாதுன்னு எனக்கு தோணும். அவ ப்ரெக்னென்ட் ஆனதும் பழைய மாதிரி ஆகிட்டாங்க போல” என பிருந்தா சொல்ல ஆமோதிப்பாக பார்த்திருந்தாள் பாவனா.

“நீங்க எங்கேயோ ட்ரிப் போறதா அத்தை சொன்னாங்க, எங்க?” எனக் கேட்டாள் பிருந்தா.

“விஜய் அவங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லோரோடயும் டூ டேஸ் தேக்கடி போறோம். எல்லாரோட ஃபேமிலியும் வராங்க” என்றாள்.

“என்ஜாய் பண்ணுங்க” என பிருந்தா சொல்ல இப்படியே வேறு ஏதேதோ பேசினார்கள்.

மனைவியை பார்க்க வந்திருந்தான் தேவா. “ரெண்டு நாள்ல தேடி வந்தாச்சா?” என விஜய் கிண்டல் செய்ய பதிலுக்கு தேவாவும் கிண்டலாக ஏதோ சொல்ல பிரசன்னா தள்ளியே நின்று கொண்டான். என்னவோ இத்தனை நாட்கள் முறைத்துக் கொண்டு திடீரென இலகுவாக பேசி சிரிக்க எல்லாம் அவனுக்கு வரவில்லை.

நன்றாக இருட்டிய பின் வீடு செல்ல நடந்தனர். வைஷுவையும் அப்பாவையும் பார்த்த பிரசன்னா, “உனக்கும் அம்மா வீடு போகணும்னு ஆசையா இருக்கா?” எனக் கேட்டான்.

“அபத்தமான கேள்வி, யாருக்குத்தான் ஆசை இருக்காது?”

“போ எவ்ளோ நாள் வேணா தங்கு” என்றான்.

“ஹோய் என்ன? பேசி ஒரு முடிவுக்கு வந்து இன்னும் முழுசா ரெண்டு மணி நேரம் ஆகல, அதுக்குள்ள அம்மா வீடு போக சொல்றீங்க?”

“ம்ம்… கூட நானும் வந்து தங்கிக்றேன்” என்றான்.

முன்பொரு முறை இவன் வில்லங்கமாக பேசிய சமயத்தில் சூடான கோதுமை அல்வாவை அவன் வாயில் திணித்து அதை துப்பவோ விழுங்கவோ முடியாமல் எழுந்து நிற்கும் போது அமரும் இடத்தில் சூடான தோசை கல்லை வைக்க வேண்டும் என இவள் நினைத்ததை சொல்லி சிரித்தாள்.

“எவ்ளோ நல்லவங்களா இருக்கீங்க… அதனால எங்கம்மா கோதுமை அல்வா மட்டும் தரல உங்களுக்கு. ஃபெவிகாலுக்கு டஃப் கொடுக்கிற டிஷ் அது” என சிரிப்பின் ஊடே சொன்னாள்.

முதலில் திகைத்தாலும் பின் அவள் சிரிப்பில் கலந்து கொண்டவன், “உன்னை மாதிரி இவ்ளோ கொடூர மனசு இல்லடி எனக்கு. டஸன் ஐஸ் க்யூப்ஸ்…” என்றவன் கேலியாக பார்க்க, “என்ன என்ன?” எனக் கேட்டாள்.

“எல்லா கியூப்ஸும் உன் உடம்பு சூட்டுலதான் மெல்ட் ஆகும், உன் கையும் காலும் என் பிடியில இருக்கும்” என்றவனை கலவரமாக பார்த்தாள் பிருந்தா.

“இன்னும் என்னென்ன நினைச்சன்னு சொல்லு, நானும் பதிலுக்கு கைவசம் நிறைய வச்சிருக்கேன்”

“ஹ்ம்… நான் வேற ஏதும் நினைக்கல, ஆனா உங்க பனிஷ்மென்ட்கெல்லாம் நான் ரெடிதான்” என குறும்பான சவால் நிறைந்த பார்வையோடு சொன்னவளை பார்க்க பார்க்க அவனுக்கு திகட்டவில்லை.

தேவா வைஷு ஒரு அணியாகவும் விஜய் பாவனா இன்னொரு அணியாகவும் பிரிந்து கேரம் விளையாடிக் கொண்டிருந்தனர். பாவனாவுடன் தேவாவுக்கு அத்தனை சகஜ பேச்சுக்கள் இல்லை என்றாலும் முன்பு போல் அல்லாது அவர்கள் உறவில் நல்ல முன்னேற்றம் இருந்தது.

அவளுடைய அண்ணனாக அனைத்து முறைகளும் செய்ய போவதாக அம்மாவிடம் சொல்லி சௌந்தரியின் சம்மதமும் பெற்று இருக்கிறான்.

ஆழினி டிவியில் கார்ட்டூன் பார்த்திருந்தாள். பேத்தி அருகில் அமர்ந்து அரங்கநாதனும் பார்த்திருந்தார். அவளுக்கு கம்பெனி தருகிறாராம். இன்னும் அரங்கநாதன் பெரிய மருமகளிடம் தள்ளியேதான் இருக்கிறார். சிறார் பள்ளியை திறம்பட அவள் நடத்துவதில் எல்லாம் பெருமைதான், ஆனால் அவளிடம் வாய் திறந்து பாராட்ட மாட்டார். விஜய்யிடம் சில சமயங்களில் சொல்வார். அவனும் மறக்காமல் மனைவியிடம் சொல்வான்.

பிரசன்னா கைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருக்க அத்தையோடு இருந்தாள் பிருந்தா.

மாப்பிள்ளை வந்திருப்பதால் சிறப்பாக சமையல் தயார் செய்ய சொல்லியிருந்தார் கங்கா.

“எப்பவோ வர்ற மாப்பிள்ளைக்கு இவ்ளோ கவனிப்பு, எங்க பொறந்த வீட்டை விட்டுட்டு வந்து நீங்க பெத்து வளர்த்த மியூஸியம் பீஸோடு குடும்பம் பண்ற தியாகி மருமகளுங்களுக்கு ஒண்ணுமே இல்ல” மாமியாரிடம் வம்பளந்து கொண்டிருந்தாள் பிருந்தா.

வீடு நிறைந்து காணப்பட்டது. இரவு உணவு அமர்க்களமாக சென்றது. தேவா அவனது வீடு புறப்பட்டு விட்டான். வழக்கம் போல தாத்தா பாட்டியுடன் உறங்க சென்று விட்டாள் ஆழினி. பாவனாவின் கை கோர்த்துக் கொண்டு தங்கள் அறைக்கு செல்ல நடந்தான் விஜய்.

அறைக்கு வந்த பிரசன்னா குளியலறையில் இருந்த மனைவி வெளியில் வர ஆவலாக காத்திருந்தான். சிவப்பு நிற குட்டை கவுனில் வந்த பிருந்தாவை பார்த்து விட்டு கிறங்கித்தான் போனான்.

சற்று முன் குளித்திருப்பாள் போலும், அவன் அவளின் கன்னத்தில் அந்த சில்லிப்பை உணர்ந்தான். சரியாக துடைக்கப் படாத அவளது கழுத்து வளைவில் ஈரம் இருக்க அவன் முகம் புதைத்து அந்த ஈரத்தை துடைத்தான். அவன் காது மடலை இதழ் கொண்டு வருடியவள், மடல் நுனியை வலிக்காமல் கடிக்க அதன் எதிர் வினையாக அவளது இடையை அழுந்த பற்றினான்.

அவள் ஆசையும் மோகமுமாக அவனது தோள்கள் வருட அவளது இதழ்களை நெருங்கினான் அவன்.

நீண்டதொரு இதழ் முத்தத்திற்கு பின் அவன் விலக, காலையில் அவளிட்டுக் கொண்ட மை சரியாக கலையாமல் இருந்த விழிகளை இமைகளால் அடைத்தாள். மூடியிருந்த கண்களுக்குள் கரு மணிகள் அலை பாய்வதை கண்டவன் அப்படியே அவளை அள்ளி எடுத்து படுக்கையில் விட்டான்.

மெல்ல மெல்ல ஒருவர் மற்றவர் வசமாக ஆரம்பித்தனர்.

எந்த மனிதனும் முற்றும் முழுதாக அவன் பிறவிக் குணங்களில் இருந்து வளர்க்கப் பட்ட தன்மையிலிருந்து மாறி விட முடியாது. ஆனால் பிருந்தா அவன் கை பிடித்து அவனை திசை திருப்பியிருக்கிறாள். அந்த வழியில் அவன் செல்வானா தெரியாது, சென்றாலும் அதற்கு மிகுந்த காலம் எடுக்கும்.

ஒத்த குணமுடைய ஆண் பெண் கணவன் மனைவியாக இணைவது அரிதிலும் அரிது. அவர்கள் ஒற்றுமையாக இல்லறம் நடத்துவதை காட்டிலும் சிறப்பு வேறுபட்ட குணங்கள் கொண்ட இருவர் ஒன்றிணைந்து வாழ்க்கையை எடுத்து செல்வது.

பிரசன்னா பிருந்தா இருவரும் கூட அவர்களின் குறை நிறைகளோடு சண்டை சமாதானங்களோடு விருப்பு வெறுப்புகளோடு காதலால் ஒன்றி வாழ்வார்கள் இனி…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement