Advertisement

மெல்ல உன் வசமாகுறேன் -13

அத்தியாயம் -13(1)

கடந்த இரண்டு நாட்களும் ஏதோ இந்த வாரம்தான் திருமணம் நடந்தது என்பது போன்று பிரசன்னா, பிருந்தா இருவருக்கும் வெட்கம், சீண்டல், தீண்டல், துணையை தொடரும் ஓரப் பார்வைகள், மூன்றாவது நபர் இருக்கும் போது பரிமாறிக் கொள்ளும் ஒன்றுமில்லா ரகசிய பேச்சுக்கள் என மிக மிக அழகாக கடந்திருந்தது.

‘அடடா வாழ்க்கை இப்படியே நகர்ந்தால் எப்படி இருக்கும்?’ என இருவருமே நினைத்துக் கொண்டனர். இப்படியே சென்றால் கூட சலித்து விடும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

மூன்றாவது நாள் இரவு வந்தும் கூட பிரசன்னா தன் செயல்களுக்கான விளக்கம் ஏதும் தராமல் இருக்க அவளும் நினைவு படுத்தவில்லை. அவனுக்கு நன்றாக நினைவிலிருக்கும் எனும் போது ஏன் நான் கேட்க வேண்டும்? அவனே ஆரம்பிக்கட்டும் என அமைதி காத்தாள்.

நான்காவது தினம் மாலை விரைவாகவே வீடு வந்தவள் அறைக்கு வரவும் பிரசன்னா அங்குதான் இருந்தான்.

“செம கிளைமேட், மழை வர்றது விட அதுக்கு முன்னாடி இருட்டா சில்லுன்னு காத்தோட… என்ஜாய் பண்ணிட்டே கார் ஓட்டிட்டு வந்தேன்” என சொல்லிக் கொண்டிருந்தவள் அறையின் மாற்றத்தை கண்டு மௌனமானாள்.

சுவரில் கண்களுக்கு மிதமான வால் பேப்பர், கட்டில் முன்பு இருந்த இடம் மாற்றி போடப் பட்டிருந்தது. அவள் தினசரி படிக்கும் இடத்தில் நிரந்தரமாக ஒரு நீள இருக்கை. படுக்கையின் நேர் எதிர் சுவரில் அவர்களின் திருமண புகைப்படம் மிக பெரிதாக இருந்தது.

இன்னொரு பக்க சுவரின் மேல் பக்கம் கிடைமட்டமாக ஒரு சிறு தடி தொங்க விடப் பட்டிருந்தது. அந்த தடியில் மனி பிளாண்ட் கொடி படர்ந்திருக்க அதே தடியில் கட்டி தொங்கிய சில சிறு தொட்டிகளில் சிறு சிறு செடிகள்.

“என்னங்க இதெல்லாம்!” என வியப்பாக கேட்டாள்.

“ரூம் வந்தா சண்டை போடுற மூட் டக்குன்னு மாறணும் நமக்கு. அப்புறம் மாற்றத்துக்கான முதல் அடின்னு கூட எடுத்துக்க” என்றான்.

பிருந்தாவுக்கு அறையின் இந்த மாற்றங்கள் வெகுவாக பிடித்திருந்தது. ரசித்து பார்த்தவள், “இன்னிக்கு காலேஜ் போகலையா நீங்க?” எனக் கேட்டாள்.

“ம், போகல. உனக்கு பிடிச்சிருக்கா?” எனக் கேட்டான்.

“ம்ம்…” பெரிதாக தலையாட்டியவள், “நீங்க குளிச்சு ஃப்ரெஷா நிக்கிறீங்க, நான் கொஞ்சம் கச கசன்னு இருக்கேன். இல்லைனா இந்நேரம் ஓடி வந்து ஹக் பண்ணியிருப்பேன்” என்றாள்.

பிரசன்னா இரு கைகளையும் விரித்து வா என கண்களால் அழைக்க அவள் தயங்கி நிற்க அவனே வந்து அவளை அணைத்து, “பிடிச்சிருக்கா பேப்?” எனக் கேட்டான்.

வார்த்தை கொண்டு அல்லாமல் முத்தமிட்டு தன் பிடித்தத்தை உணர்த்தினாள் பிருந்தா.

சில நிமிடங்கள் சென்று விலகியவன் அவள் அவனுக்கு அணிவித்த கழுத்து சங்கிலியை காட்ட அதில் லாக்கெட் ஒன்று புதிதாக இருந்தது.

ஆர்வமாக அதை பிரித்து பார்த்தவள் அவன் கன்னங்கள் இரண்டையும் கிள்ளி கொஞ்ச, “சும்மா நீ மட்டும்தான் தாலி போட்ருக்கேன்னு சொல்லக்கூடாது, அதான்” என்றான்.

இன்று காலையில் அவளது உடை நிறத்துக்கு ஏற்ப அவனே அவளது நகங்களில் நகப் பூச்சு வைத்து விட்டான். இறுதியில் அவள் கையோடு கை கோர்த்து கைபேசியில் புகைப்படம் ஒன்றும் எடுத்து வைத்தான். பிணைந்திருந்த அவர்களின் கைகள் அழகாக இந்த லாக்கெட்டில் படமாக சேமிக்க பட்டிருந்தது.

சிறு பிள்ளையின் செயலாக தோன்றினாலும் இவன் குணத்துக்கு இப்படி செய்வதெல்லாம் பிருந்தாவுக்கு வியப்பையும் கர்வத்தையும் அளவில்லாமல் கொடுத்தது.

“ஹையோ மாம்ஸ்! நான் உனக்கு எவ்ளோ முத்தம் கொடுத்தாலும் நீ ஒர்த்துதான்” என்றாள்.

அவன் அவளின் உற்சாகத்தை ரசித்து பார்த்து நிற்க, “அப்புறம் இன்னும் என்னெல்லாம் சர்ப்ரைஸ் இருக்கு?” எனக் கேட்டாள்.

“போடி இதுக்கே மண்டைய குடைஞ்சு யோசிச்சு செஞ்சேன். இனிமே நீதான் கொடுக்கணும்” என காதலாக கிறங்கினான்.

“ம்ம்…” வெட்கத்தோடு சொன்னவள், “நான் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வர்றேன் மாமா” என சொல்லி குளியலறை ஓடினாள்.

அவள் வரும் போது இருவருக்கும் காபி, ஸ்நாக்ஸ் தயாராக இருந்தது.

“இனிமே நமக்குள்ள சண்டை வராதா மாமா?” கிண்டலாக கேட்டுக் கொண்டே காபி பருக ஆரம்பித்தாள்.

“குறைக்க முயற்சி எடுத்துப்போம். ஆனா இந்த காபி மாதிரிதான் வாழ்க்கையும், கொஞ்சம் கசக்கலைனா நல்லா இருக்காது. சண்டைக்கு பின்னாடி வர்ற சமாதானம் லைஃப இன்னும் கூட அழகா வைக்கும்” என்றான்.

“நடந்ததுக்கே இன்னும் ஒண்ணும் சொல்லலை நீங்க” என குறையாக சொன்னாள்.

“நான் நினைக்கிறது எல்லாம் சொல்ல போய் திரும்ப உனக்கு கோவம் வந்தா… அதான் ஒரு செட் அப் போடதான் உன்கிட்ட பேசணும்னு வெயிட் பண்ணினேன்” என்றான்.

காபியை நிதானமாக பருகி முடித்தவன் அவளை கூர்ந்து பார்க்க அவளும் காபி பருகி முடித்து அவன் பேச்சை கேட்க தயார் என்பது போல நிமிர்ந்து அமர்ந்தாள்.

“கல்யாணம் ஏன் அப்படின்னு உனக்கு மட்டுமில்லை எல்லாருக்கும் சொல்லிட்டேன். திரும்ப சொல்லணுமா இப்போ?” எனக் கேட்டான்.

“இருந்தாலும் லவ்ன்னு இப்போ வரை நம்ப முடியலை மாமா, சும்மா சைட் அடிப்பீங்க அப்பப்ப. ஆனா… நிஜமா லவ்தானா மாமா?” எனக் கேட்டாள்.

“ம்ம்ம்… நாலு வருஷம் முன்னாடி என்னை கட்டிக்க மாட்டேன்னு சொன்னதுல உன் மேல செம கடுப்புல இருந்தேன். விஜய் வீட்டை விட்டு போனதை விட நீ வேணாம் சொன்னதுலதான் ரொம்ப அப்செட் நான். என்னால தாங்கவே முடியலை. கண்ண மூடினா நீ வேணாம்னு சொன்னதுதான் ஓடும். அவமானமா ஃபீல் பண்ணினேன். அதுலேர்ந்து வெளி வர என்னை ரிலாக்ஸ் பண்ணதான் எக்ஸர்சைஸ் பக்கம் போனேன்”

“என்ன நீங்க உடம்பு வளர்த்ததுக்கு பின்னால நான்தான் இருக்கேனா?” அவனது புஜத்தை ஆசையாக தொட்டு பார்த்துக் கொண்டே கேட்டாள்.

“அப்பல்லாம் கைல மாட்டியிருந்த…”

“என்ன செஞ்சிருப்பீங்க? என்ன வேணா பண்ணிக்கோங்க ஆலம்பனா ன்னு தலை குனிஞ்சு நின்னுருப்பேன்னு நினைக்கிறீங்களா?” தன் கையை முறுக்கிக் கொண்டு கேட்டாள்.

அவளை அவன் நக்கலாக பார்க்க, “அப்ப எப்படியோ இப்ப ஜஸ்ட் ஒன் மினிட் போதும் உங்களை கவுக்க, பார்க்குறீங்களா?” என புருவங்களை உயர்த்தி தோரணையாக கேட்டாள்.

இரு கைகளையும் மேலே உயர்த்தி, “சரண்டர்” எனக் கூறி சிரித்தான்.

சட்டென எழுந்து அவனை அணைத்து, “ஸ்வீட் மாமா!” என கொஞ்சி விட்டு அமர்ந்தாள்.

“இப்படி டிஸ்டர்ப் பண்ணினா எப்படி நான் பேச? எல்லாம் மறந்து போச்சு, வா வேற வேலை பார்ப்போம்” என சொல்லி அவள் கை பிடித்திழுத்து கொஞ்சம் சேட்டைகள் செய்தான்.

கொஞ்சம் இசைந்து அதிகம் முரண்டு செய்து எப்படியோ அவனிடமிருந்து விலகி அமர்ந்தவள் முறைக்க, “சரி இன்னொரு முறை கொஞ்சிட்டு போ, பேச வந்ததை ஃபோகஸ் பண்ணிக்கிறேன்” என்றான்.

“போங்க சொல்லவே வேணாம் எதுவும், நான் போறேன்” என எழுந்தவளிடம் அவன் பாணியில் மன்னிப்பு கேட்டு அமர வைத்து பேசினான்.

“அபினேஷ் வீட்டு ஐடி ரெய்ட் தெரிஞ்சதும் உடனே நீயா கிளம்பி போனதுல எனக்கு செம கோவம், என்னவோ நீயாதான் வரணும்னு வீம்பு. நீ இல்லாம இருக்கவும் முடியலை, ஆனந்தி விஷயம் யூஸ் பண்ணிக்கிட்டேன். என் நோக்கம் உன்னை என்கிட்ட வரவைக்கிறது மட்டும்தான், தப்புன்னா… சாரி” என்றான்.

“பார்த்தீங்களா தப்புன்னா… அப்படினு கேட்குறீங்க, அது தப்புதான்னு ஏன் உங்களுக்கு தோண மாட்டேங்குது?” பொறுமையாகவே கேட்டாள்.

சில நொடிகள் எடுத்துக் கொண்டவன், “காலேஜ்ல நான் எல்லாருக்கும் பொதுவா ஒரு ரூல் ஃபாலோ செய்யும் போது எனக்காக செய்ங்கனு ஏன் கேட்ட நீ?” எனக் கேட்டான்.

“அந்த பொண்ணோட நிலை யோசிச்சு பாருங்க மாமா, நீங்க விடாப்பிடியா இருந்தீங்க, எனக்குன்னு கேட்டா செய்வீங்கனு தோணிச்சு கேட்டேன்” என்றாள்.

“அந்த செகண்ட் வரை எனக்கும் அதை வச்சு உன்னை கூப்பிடணும்னு ஐடியா இல்லை. வரவே மாட்டேங்குறா இதை வச்சு வர சொன்னா வந்திடுவான்னு நானும் கேட்டேன்”

“நான் கோவத்துல இருந்தா என்னை சமாதானம் செய்து அழைச்சிட்டு வரணும், இப்படி செய்யலாமா?”

“நீ கேட்டா என்ன வேணா செய்வேங்கிறதுக்காக நீ மட்டும் ஆனந்திக்கு ஃபேவர் பண்ணலாமா?”

“வயசுப் பசங்களுக்கு நார்மலா நடக்கிற விஷயம் மாமா அது”

“அதை தடுத்து படிப்புல மட்டும் எப்படி அவங்கள நான் கான்சென்ட்ரேட் பண்ண வைக்கிறது? உனக்காக நான் சும்மா விட்டேனே”

“அப்ப அது தப்பில்ல?”

“ஒரு விஷயத்தை தெளிவா புரிஞ்சுக்க பிருந்தா. இதுதான் சரின்னு சில விஷயங்கள் நமக்குள்ள பதிஞ்சு போய்டும், உன் பார்வையில தப்புன்னா உனக்காக நானும் ஆமாம்னு சொன்னா அது பொய். நமக்குள்ள நிறைய டிஃபரன்ஸஸ் இருக்கு. நீ சொன்னியே எதுவும் விளக்கம் கேட்காம கோவ படுறேன்னு… எஸ் அது தப்பு, அந்த நேர கோவத்துல கத்துறேன், கண்டிப்பா மாத்த முயற்சி பண்றேன். அன்னிக்கு சொன்னியே ஆழியோட அம்மா இந்த வீட்டு பொண்ணு இனிமே தப்பா பேசக்கூடாதுன்னு… அக்செப்ட் பண்ணிக்கிறேன், இனி எப்பவும் அவங்களை பத்தி வித்தியாசமா பேச மாட்டேன். உன் பெரியப்பா பார்க்க போறது பிடிக்கல சொன்னேன், நீ கேட்கல, நமக்குள்ள சண்டை வந்தது. இதே மாதிரி உனக்கு பிடிக்காத யாரையும் நான் பார்க்க கூடாது பேசக்கூடாது சொன்னா நான் கேட்டுப்பேன். அதனாலதானே உன்கிட்டேர்ந்தும் எதிர்பார்த்தேன்?” எனக் கேட்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement