Advertisement

அத்தியாயம் -12(2)

பிரசன்னா மெல்ல சிரிக்க முறைத்தவள், “வாழ்க்கை பறி போனவன் மாதிரி சுத்துற, நான் தப்பு செஞ்சிட்ட ஃபீல் தர்ற, நான் என்ன தப்பு பண்ணினேன்? நீதானே எல்லாம் பண்ணி தொலைச்ச? என்னை ஏன் அழ வச்ச இப்போ?” எனக் கேட்டாள்.

அவள் கையை மென்மையாக பற்றிக் கொண்டவன், “இன்னொரு முறை கால்ல விழவா?” எனக் கேட்டான்.

அவள் முறைக்க, “தோப்புக்கரணம்?” எனக் கேட்டான்.

“தொட்ட கொன்னுடுவேன்” என மிரட்டினாள்.

அவளை இழுத்து தோளோடு அணைத்துக் கொண்டவன், “எவ்ளோ கஷ்டம்டி ரெண்டு பேருக்கும்? அப்படியென்ன வீம்பு உனக்கு?” எனக் கேட்டான்.

அவனை பிடித்து தள்ளி விட்டவள் விலகி நிற்க, விழாமல் சுதாரித்து நின்றவன் அவளது கோவ முகம் பார்த்து விக்கித்து போனான்.

“இப்ப என்ன பிருந்தா? ஃபர்ஸ்ட்லேர்ந்தா… ஏய்!” அதிர்ந்தான்.

“நான் வீம்பு பிடிச்சு பேசாம இருந்தேனா? உங்களை…” பற்களை கடித்தாள்.

“போதும் பிருந்தா, கோவம் இல்லாம பேசு, கேட்கிறேன்”

“காதால கேட்டுப்பீங்க, செயல்ல காட்டுவீங்களா?”

“முதல்ல கேட்கிறேன், அப்புறம் இதுக்கு பதில் சொல்றேன்” என்றான்.

அவள் ஓரளவு சமாதானம் அடைந்தவளாக மூச்சு விட, “எனக்கு பசிக்குது, உனக்கு?” எனக் கேட்டான்.

தனக்கும் பசிப்பதை உணர்ந்தவள், “ம்ம்… சரியாவே சாப்பிடல நான்” என்றாள்.

அங்கிருந்து அவள் கை பிடித்து வீட்டுக்கு அழைத்து சென்றான். அவளை ஹாலில் அமர வைத்தவன் ஆப்பிள் நறுக்க ஆரம்பிக்க, “யானை பசிக்கு இது எப்படி பத்தும்?” எனக் கேட்டாள்.

“அவ்ளோ பசியாடி உனக்கு?”

“நான் உங்களை சொன்னேன்” என குறும்பாக கூறினாள்.

“அப்ப நீ யாரு?”

“நான் யாரோ ஆனா யானை இல்ல” என்றவள் சமையலறை செல்ல பழத்தை வைத்து விட்டு அவனும் சென்றவன், “யானையோட அங்குசம் என்ன செய்யுது இங்க?” எனக் கேட்டான்.

“ஹா ஹா… அங்குசமாம்ல… இது எதுக்கும் அடங்காத யானை” என்றவள் மாவு எடுத்தாள்.

“இல்ல உன்னால அடக்க முடியாட்டி போகுது, ஆனா நான் உனக்குள்ள அடங்குறவன்தான் டி” என்றான்.

அவன் பேச்சில் லேசாக சிரித்தவள், “சட்னி எல்லாம் இல்ல மாமா, பொடி வச்சு அட்ஜஸ்ட் பண்ணுங்க” என்றாள்.

“உன் கையால வெறும் தோசை கூட கொடு” என்றான்.

“ஏன் பச்ச மாவை கரைச்சு தர்றேன் வாயில ஊத்திக்கோங்களேன்” என வம்பளந்து கொண்டே மறு பக்கம் தோசை கல்லை அடுப்பில் போட்டு விட்டு வெங்காயம் நறுக்கி மள மளவென வெங்காய பொடி தோசை வார்த்து நெய் ஊற்றினாள்.

தோசையை தட்டில் வைத்து அவனிடம் கொடுத்தவள் அடுத்த தோசை வார்க்க அவளின் பின்னால் அவள் முதுகோடு உரசியவாறு நின்றவன் அவளுக்கு ஊட்டி விட வாங்கிக் கொண்டவள் சாப்பிட்டுக் கொண்டே, “நல்லா பெரிய பீஸா கொடுங்க, இது பத்தல” என்றாள்.

“எனக்கும்தான் இப்படி உரசிகிட்டு நிக்கிறது மட்டும் பத்தல பத்தல, பத்தவே இல்லடி” என சொல்லிக் கொண்டே அடுத்த வாய் ஊட்டி விட்டான்.

“என்னை டைவர்ட் பண்ணாதீங்க. நமக்குள்ள பிரச்சனை அப்படியேதான் இருக்கு. ம்ம்ம்… இப்படி உரச விட்டதே பெரிய விஷயம்” வாயில் உணவை வைத்துக் கொண்டே பேசியதில் அவளுக்கு புரையேறியது.

சமையல் மேடையில் இருந்த தண்ணீர் பாட்டில் எடுத்தவன் அவள் முன் நீட்ட பருகியவள் பாட்டிலை வைத்து விட்டு அவனை திரும்பி பார்க்க, புரையேறியதில் அவள் விழிகள் கலங்கி போயிருந்தன.

கையில் இருந்த தட்டை மேடையில் வைத்து விட்டு ஒரு கை கொண்டு அவளை அணைத்தவன் இன்னொரு கையால் தோசையை எடுத்து தட்டில் வைத்து இன்னொரு தோசைக்கு மாவை கல்லில் வைத்து விட்டு, “என்னடி இது தோசை கல்லுல இட்லி வருது?” எனக் கேட்டான்.

அடுப்பு பக்கம் திரும்பியவள் அவனிடமிருந்து கரண்டி வாங்கி மாவை நன்றாக இழுத்து விட்டு, “ஒரு தோசை ஊத்த தெரியல, தள்ளுங்க” என்றாள்.

பின் பிருந்தா தோசை ஊற்ற அவளுக்கும் ஊட்டி தானும் உண்டான் பிரசன்னா. அப்போதே நேரம் பனிரெண்டு ஆகியிருந்தது. வெகு நாட்களுக்கு பின் இனிமையாக நேரம் சென்றது அவர்களுக்குள்.

அறைக்கு வந்ததுமே அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

“பேசணும் மாமா” என்றாள்.

“பேசலாம் பேசலாம்” என்றவன் சில நிமிடங்கள் அவளை தனக்குள் பொதிந்து விடும் அளவு அணைத்து அவள் வாசம் உணர்ந்து கேசம் அளந்து ஓரளவு தன் தாபம் தீர்ந்த பின்னர்தான் விலகினான்.

சிவந்த முகத்தோடு அவள் பார்த்திருக்க, “அழகுடி நீ!” என சொல்லி முகத்தை இரு கைகளால் பற்றிக் கொண்டவன் நெற்றி முட்ட, “பேசணும் மாமா” கண்டிப்பான குரலில் சொன்னாள்.

அவனும் விலகி படுக்கையில் அமர்ந்து கொள்ள அவள் ஒற்றை சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

“என்ன கிஃப்ட் எல்லாம்?” எனக் கேட்டாள்.

“இப்பவும் சொல்றேன், எனக்கு மேக் அப் பிடிக்காது. உனக்கு பிடிச்சிருக்கு, வேணாம்னு சொன்னா வில்லன் மாதிரி பார்க்கிற. போட்டுக்க”

“ஓ பெர்மிஸன் தர்றீங்களா?”

“இல்ல, உன் ஆசைய நிறைவேத்துறேன்” என்றான்.

அவள் முறைக்க, “பேசணும்னு சொல்லிட்டு முறைச்சா? பேசு” என்றான்.

“பேச்சுன்னா… வள வளன்னு எதுவும் பேசலை மாமா நான். நீங்க பிருந்தாவா மாறி என் இடத்திலேர்ந்து யோசிங்க மாமா. கல்யாணம் நடந்ததை காதல்னு சொல்லி கன்வின்ஸ் பண்ணிட்டீங்க. எனக்கு பிடிச்சதை செய்ய விடாம செய்றதும் பெரியப்பாவை பார்க்க போறதுல இருந்து நிறைய விஷயங்கள் ரெஸ்ட்ரிக்ட் செய்றதும் ஆனந்தி வச்சு மிரட்டி என்னை இங்க அழைச்சிட்டு வந்ததும் எது நடந்தாலும் என்கிட்ட விளக்கம் கேட்காம உடனே திட்ட ஆரம்பிக்கறதும் எல்லாம் சரியான்னு யோசிங்க மாமா” என்றாள்.

அவன் அவளை பார்த்திருக்க, “ரெண்டு நாள் நடந்த எல்லாத்தையும் யோசிங்க, இடையில எதுவும் எனக்கு சொல்லாதீங்க, நானும் கேட்கல. ஓகேவா?” என்றாள்.

“என்னவோ சொல்ற, ம்ம்… அப்புறம்?” என்றான்.

அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தவளாக, “எனக்கு எதுவும் அப்ஜக்ஷன் இல்ல மாமா” என்றாள்.

எழுந்து வந்து அவளை எழுப்பி அணைத்துக் கொண்டவன், “ஆனா ஆசையும் இல்ல இப்போ, என்ன கரெக்ட்டா?” எனக் கேட்டான்.

“அதெல்லாம் இல்ல, நிறைய இருக்கு. பேசி தெளிஞ்சிட்டோம்னா உறுத்தல் இருக்காதுதானே மாமா. நான் எதுவும் சொல்ல மாட்டேன், டெஸிஸன் உங்களோடதுதான்”

அவள் கழுத்து வளைவில் ஊர்ந்த அவனது இதழ்கள் அவன் விருப்பத்தை சொல்ல அவளும் தடை செய்யாமல் இருந்தாள். கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு விலகியவன், “ரெண்டு நாளுக்கு அப்புறம் உன் உறுத்தல் போகுமா போகாதன்னு தெரியாது, ஆனா அந்த ரெண்டு நாள் உனக்கு நான் தரணும்” என்றவன் அவளை தூக்கிக் கொண்டு போய் படுக்கையில் விட்டான்.

பல நாள் பிரிவு… படுக்கையில் அணைத்துக் கொண்டவர்களின் செயல்கள் அவர்களை மீறியதாக இருக்க அவள் முகத்தை தன்னிடமிருந்து விலக்கியவன், “உறுத்தல் இருக்குன்னு சொல்லிட்டு என்னடி செய்ற?” எனக் கேட்டான்.

வெட்கத்தோடு அவன் மார்பில் புதைந்து கொண்டவள், “மாமா ஸ்டெடியா இருக்காரா சொன்ன சொல் காப்பாத்துறாரான்னு டெஸ்ட் பண்ணினேன்” என்றாள்.

அவள் தலையை அழுத்திக் கொடுத்தவன், “ரொம்ப லேட் ஆகிடுச்சு, இப்போ தூங்கலாம். ரெண்டு நாள் கழிச்சு சிறப்பா கொண்டாடிடலாம்” என்றான்.

அறக்கட்டளை மாணவர்கள் படிப்பு பற்றி கேட்டாள்.

“இந்த விஜய்கிட்ட சொல்லாதன்னு சொன்னா கேட்க மாட்டான். அதுக்கென்ன இப்போ?”

“ஏன் சொல்லலை என்கிட்ட?”

“அதான் சீட் கிடைச்சிடும் சொன்னேனே?” என அவன் சொல்ல கண்டனமாக உச்சு கொட்டி பார்த்தாள்.

“நீ ஆசை பட்டதை நடத்தித்தான் வைப்பேன், எப்படின்னு எல்லாம் சொல்லணுமா என்ன?” எனக் கேட்டவன் இதழ்களை ஒரு வழி செய்து விலகினாள். அவன் சத்தமாக சிரித்தான்.

ஏதோ கதைகள் பேசிக் கொண்டே அப்படியே உறங்கி விட்டனர்.

 காலையில் அவளுக்காக அவன் இருக்கைகள் போட்டுக் கொண்டிருக்க விழித்தவள், “இன்னிக்கு கிஃப்ட் இல்லையா மாமா?” எனக் கேட்டாள்.

“கொடுத்த கிஃப்ட்டே சும்மா தூங்கிட்டு இருக்கு, போடி” என்றான்.

எழுந்து வந்தவள் அவனை முதுகோடு அணைத்து விலக, “சும்மா டெஸ்ட் பண்ணிட்டே இருக்காத. அப்புறம் ஃபெயில் ஆகிடுவேன்” என்றான்.

“பாஸ் ஆகியே தீரணும்னு நான் சொல்லவே இல்லையே…” வம்பாக சொல்லி விட்டு ஓய்வறை சென்று விட்டாள்.

வழக்கமானவற்றை முடித்த பின் இருவரும் தயாராகினர். கரு ஊதா நிற டாப், இளஞ்சிவப்பு பேண்ட் என ஆடை உடுத்தியவள் அவன் வாங்கிக் கொடுத்த நகப் பூச்சுக்களை வெளியே எடுத்தாள்.

அவளை கவனித்து கொண்டிருந்தவன் அவளருகில் ஒரு நாற்காலி இழுத்து போட்டுக் கொண்டு அமர்ந்து, “மே ஐ?” எனக் கேட்டான்.

“சரியா வராது உங்களுக்கு?” என்றாள்.

“கொடு டி” என்றவன் அவள் வலது காலை மடியில் தூக்கி வைத்துக்கொள்ள ஏற்கனவே நகங்களில் நகப் பூச்சு இருந்தது.

நெயில் பெயிண்ட் ரிமூவர் எடுத்து நீட்டினாள் பிருந்தா. மென்மையாக பொறுமையாக நகப் பூச்சை அகற்றியவன், “என்ன கலர்?” எனக் கேட்டான்.

“இந்த நேவி ப்ளூ, பிங்க் ரெண்டு ஷேட்லேயும் போடணும்” என்றாள்.

“ஹான்!” என விழித்தவன், “கைல ப்ளூ கால்ல பிங்க் போடணுமா?” எனக் கேட்டான்.

“ம்ஹூம்… ரெண்டும் நெயில்ல போடணும். நான்தான் சொன்னேன்ல, நீங்க சரிப்பட்டு வர மாட்டீங்க, தள்ளுங்க” என்றவள் காலை அவனிடமிருந்து எடுத்தாள்.

அவளது பாதத்தை இறுக்கி பிடித்து அவளை முறைத்தவன் அவள் சொன்ன நிறங்களில் நகப் பூச்சுகளை எடுத்தான்.

அழகாக நேர்த்தியாக பாதி நகத்தில் அடர் நீல வண்ணம் பூசியவன் அது உலர இதழ் குவித்து ஊதி விட்டு பின் இளஞ்சிவப்பு வண்ணத்தை மீதி நகத்திலும் பூசி விட்டான்.

எப்போதாவது பிருந்தா இப்படி உடைக்கு ஏற்ப இரு வண்ணங்களில் போட்டுக் கொள்வாள். பாதியில் அவளுக்கே பொறுமை போய் அலுத்து விடும். அவன் தந்த பரிசு, இத்தனை நாட்கள் உபயோகிக்கவில்லை என்பதால் இன்று ஏதோ போடலாம் என தோன்றியது.

பிரசன்னா அத்தனை பொறுமையாக கால் நகங்களில் போட்டு முடித்து கைகளிலும் போட, “ரைட் ஹேண்ட் போட மாட்டேன் மாமா, லெஃப்ட் போதும்” என்றாள்.

“ப்ச்… ஸ்பூன் வச்சி சாப்பிடு, போட்டுக்க” என்றவன் இரு கைகளுக்கும் போட்டு விட்டு அவளை பார்க்க அவளும் இமைக்காமல் இவனைத்தான் பார்த்திருந்தாள்.

“என்ன டி?” என்றான்.

அவன் முகம் நெருங்கி இதழ்களில் மென்மையாக முத்தமிட்டு விலகியவள், அழகாய் சிரிக்க அவனும் இவளை நெருங்கியவன் அவள் மூக்கோடு மூக்குரசி விட்டு எழுந்து சென்றான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement