Advertisement

மெல்ல உன் வசமாகுறேன் -12

அத்தியாயம் -12(1)

பிருந்தாவை மருத்துவமனை அழைத்து வந்திருந்தான் பிரசன்னா. இலகுவாக ஒரு சட்டையும் ஜீனசும் அணிந்து வந்திருந்தாள். தோளில் அடிபட்டதற்கு காட்டி விட்டு வெளியே வர, “நான் மில் போகணும்” என்றாள்.

“ரெண்டு நாள் ரெஸ்ட்ல இருக்க சொன்னார் டாக்டர், நான் சொல்றதுதான் கேட்க மாட்ட, டாக்டர் அட்வைஸாவது கேளு. வீட்டுக்கு போய் மருந்து போட்டுக்கிட்டு ஃப்ரீயா இரு” என்றான்.

அவள் அமைதியாக இருக்க அவள் பதிலை இவன் எதிர்பார்க்கவும் இல்லை. நேராக வீட்டுக்குத்தான் அழைத்து வந்தான். அறைக்கு வந்தவுடன், “ஏதாவது ஸ்லீவ்லெஸ் ட்ரெஸ் மாத்திக்க, ஆயிண்ட்மெண்ட் போட்டு விட்டுட்டு போறேன்” என்றான்.

“என் ரைட் ஹேண்ட் நல்லாத்தான் இருக்கு, நானே போட்டுப்பேன்” என்றாள்.

“நேத்து உன் ரைட் ஹேண்ட் என்ன பண்ணிட்டு இருந்தது?” நக்கலாக கேட்டவன், “நீயா போடணும்னா நீ ஸ்ட்ரெயின் பண்ணிக்கணும்” என்றவன் அவள் அடுத்து சொல்வதற்கு காத்திராமல் அவனே வேறு உடை எடுத்து மாற்றி மருந்தும் தடவி, “ஒரு நாள் நீ இல்லைனா உன் மில்ல யாரும் தூக்கிட்டு போயிட மாட்டாங்க, ஃபோன்ல இன்ஸ்ட்ரக்சன்ஸ் கொடுத்துக்க, மதியம் அம்மாவை மருந்து போட்டு விட சொல்லு, ஈவ்னிங் நான் வந்து பார்த்துக்கிறேன்” என சொல்லி விட்டு கிளம்பினான்.

அவன் சொன்ன படியே இவளும் அறையிலேயே படுத்து ஓய்வு எடுத்தாள். ‘சிலருக்கு சில குறை. இவனுக்கும் அப்படித்தான் தலைக்கனம், முன்கோவம், முரட்டுதனம் எல்லாம். இவன் மாறுறது கஷ்டம், நான்தான் இவனுக்கு பழகணுமோ?’ என சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

 ஆலையில் ஏதோ இயந்திரம் பழுதாகி நின்று விட்டது என செய்தி வர அவள் அப்பாவும் வெளியூர் சென்றிருக்க அவளே ஆலைக்கு சென்று விட்டாள்.

சர்வீஸ் செய்யும் நிறுவனத்துக்கு அழைத்து பேசி அங்கிருந்து ஆட்கள் வந்து சீர் செய்யும் பணியை துவக்கியிருக்க அவள் ஆலையிலேயே நின்று விட்டாள்.

மாலை வீடு திரும்பிய பிரசன்னாவுக்கு மனைவி இங்கு இல்லை என்பது தெரியவர தன்னை வெகுவாக அலட்சியம் செய்கிறாள் என்பது போல அவனுக்கு தோன்றியது.

பிருந்தாவுக்கு இவனிடம் சொல்லக்கூடாது என எண்ணமில்லை, சொன்னால் புரிந்து கொள்ளாமல் போக கூடாது எனதான் சொல்வான், அதனால் சென்று விட்டு இரவில் புரிய வைக்கலாம் என இருந்தாள்.

அவள் வீடு வரவுமே இவன் அவளை பேச விட்டால்தானே? அவள் மூச்சு விடக்கூட நேரம் தராமல் ஆரம்பித்து விட்டான். பொறுத்து பார்த்த பிருந்தா முடியாமல் அவன் முன் கை கூப்பி விட்டாள்.

“போதும் என்னால சத்தியமா உங்களோட போராட முடியலை. விட்ருங்க என்னை” என்றவளை அதிர்ச்சி தாங்கி பார்த்தான் பிரசன்னா.

கையை தூக்கியதில் வலி உண்டாக முகத்தை சுளித்துக் கொண்டே வலது கை கொண்டு தோளை பற்றிக் கொண்டே இடது கையை கீழே இறக்கினாள்.

“இதுக்குதானே சொன்னேன்…”

“விட்ருங்கன்னு சொன்னேன்” எரிச்சலாக சொன்னாள்.

“என்னடி விட்ருங்கன்னா என்ன அர்த்தம்? உன் மேல உள்ள அக்கறையிலதான சொன்னேன், நீ புரிஞ்சுக்கவே மாட்டியா?”

“நீங்க என்னை புரிஞ்சுக்க ட்ரை பண்றீங்களா?”

“அந்த விட்ருங்கவுக்கு என்ன அர்த்தம்?”

பிருந்தா சலிப்பாக பார்க்க, “அப்படியெல்லாம் யாரும் யாரையும் விட முடியாது. உன்னை பத்தி உனக்கே கவலையில்லைங்கிறப்போ எனக்கென்ன? விட்ருவங்கவாம்ல… ஒன்றரை மாசம் விட்டுட்டு போய் இருந்தியே… இங்க ஒருத்தன் என்ன தவி தவிச்சிருப்பான்னு யோசிச்சிருந்தா இப்படி சொல்வியா? என்ன இப்போ… பேசிக்காமதான இருந்தோம்? அப்படியே இருந்திட்டு போவோம்” என சொல்லி அறையை விட்டு வெளியேறி விட்டான்.

உடலும் உள்ளமும் தளர அப்படியே அமர்ந்து விட்டாள்.

மீண்டும் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இல்லாமல் போனது. இந்த மௌன சண்டையில் இருவருமே துன்பத்தை அனுபவித்தனர்.

இரு வாரங்களில் பிரசன்னாவை அவனது இத்தனை வருட வாழ்க்கையில் அனுபவித்திராத வெறுமையை உணர வைத்து விட்டாள் பிருந்தா.

பிரசன்னாவின் நிலை இப்படி எனில் பிருந்தா மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறாளா? தன்னை ஏக்கத்தோடு அவன் பார்க்கும் போதெல்லாம் அவனைப் போலவே இவளும் வருத்தம் கொண்டாள். வருந்தி வருத்தம் தந்தனர் இருவரும்.

பிருந்தா ஆலையில் இருக்கும் சமயம் அவளை பார்க்க விஜய் வந்திருந்தான்.

“பிரசன்னா சொதப்புறான்னா எனக்கு அவனை தெரியும், ஆனா நீ ஏன் சரியா ஹேண்டில் செய்ய மாட்டேங்குற அவனை? ரெண்டு பேருக்கும் பிடிக்கலன்னா அடுத்து வேற யோசிக்கலாம். ஒருத்தருக்கு ஒருத்தர் அவ்ளோ பிடிக்கும் போது ஏன் கஷ்ட படுறீங்க?” எனக் கேட்டான்.

“நான் என்ன மாமா செய்ய? அவர் நினைக்கிறதுதான் சரின்னு இருக்கார், சொல்லி புரிய வைக்கிற ஆள் கிடையாது அவர். நானும் சரின்னு விட்டுட்டு அடுத்து மூவ் ஆனா திரும்ப அவர்தான் சண்டை போடுற மாதிரி நடக்கிறார். நிஜமா நானும் சந்தோஷமா இல்லை மாமா” எனும் போதே அவள் குரல் உடைவது போலிருந்தது.

அவள் முன் தண்ணீரை நகர்த்தி வைத்தான் விஜய். அவளும் பருகி விட்டு, “எங்க மேல உள்ள அக்கறையிலதான் பேசுறீங்க, எனக்கும் தெரியலை மாமா எப்படி எங்க ரிலேஷன்ஷிப்ப ஸ்மூத்தா எடுத்திட்டு போறதுன்னு…” என்றாள்.

“நீ குழம்பாம கொஞ்சம் நிதானமா யோசி பிருந்தா”

பிருந்தா பெரு மூச்சு விட, “அவன் ரொம்ப கால்குலேட்டிவ், எல்லா விஷயத்திலும் அப்படித்தான். ஆனா உன்கிட்ட அப்படி கிடையாது. நீன்னா அவனுக்கு ரொம்ப ஸ்பெஸல்” என விஜய் சொல்ல நம்பாமல் கிண்டலாக பார்த்தாள் பிருந்தா.

“இல்லாமலா அப்பா உன் ட்ரஸ்ட் மூலமா வர்ற ஸ்டூடண்ட்ஸுக்கு இருபது சீட் கொடுக்க முடியாதுன்னு சொன்னப்புறமும் அதுக்கு அரேஞ் பண்ணியிருக்கான்?” எனக் கேட்டான்.

“என்ன மாமா புரியலை எனக்கு, நெக்ஸ்ட் இயர்லேர்ந்து சீட்ஸ் அலாட் ஆகும்னு சொன்னாரே?”

“ம்ம்… ட்ரஸ்ட் வச்சு நடத்துறாங்கன்னா அவங்கதான் ஃபீஸ் பே பண்ணனும், அவங்க பேர் வாங்க நாம ஏன் லாஸ் ஆகணும்? ஓசியில ஒரு சீட் கூட கிடையாதுன்னு சொல்லிட்டார் அப்பா. பிரசன்னாவும் என்ன ஃபீஸோ அதை ட்ரஸ்ட் கொடுத்திடுவாங்கனு சொல்லி சம்மதிக்க வச்சிட்டான். ஆனா நீ கேட்ட இருபது ஸ்டூடண்ட்ஸுக்கும் அவன்தான் ஸ்பான்சர் பண்ண போறான்” என்றான்.

“என்கிட்ட அப்படி சொல்லலையே அவர்”

“உன்கிட்ட சொல்ல மாட்டான். நீ கேட்ட செஞ்சிட்டான் அவ்ளோதான், சொல்லிக்க மாட்டான் பிருந்தா. அவனுக்கு அவ்ளோ சேவை மனப்பான்மையா இதை செய்றதுக்கு? இதுக்கு நீ கேட்டேங்கிறது மட்டும்தான் காரணம். எனக்கு தெரிஞ்சு அப்பாவை மீறி அவன் செய்ற விஷயம்னா இதுதான்” என்றான்.

யோசித்த பிருந்தா, “அப்போ இன்ஜினியரிங் காலேஜ்ல அஞ்சு சீட் கொடுத்தது?” எனக் கேட்டாள்.

“அதுக்கும் நல்லா வாங்கி கட்டினான். நம்ம காலேஜ்க்கு விளம்பரம் ஆச்சுன்னு சொல்லி சமாளிச்சான்”

“பெரிய மாமா ஏன் இப்படி இருக்காங்க? பணத்தை சேர்த்து வச்சு மூட்டை கட்டி எங்க வைக்க போறாங்களாம்?” எனக் கோவமாக கேட்டாள்.

“நான் கேட்காம இருப்பேனா? இது நீங்க நடத்துற ட்ரஸ்ட்டாம், உங்க ட்ரஸ்ட்டுக்கு அவர் செலவு செய்ய மாட்டேன்னு சொல்லிட்டார். மத்த படி அவரும் யாராவது பசங்க நல்லா ஸ்கோர் பண்ணி ஃபீஸ் கட்ட முடியலைன்னா அவர் சார்புல ஹெல்ப் பண்ணுவார்தான். அவர்கிட்ட அதிகமா வாதாட முடியாது. இப்போ வரப் போற பாராமெடிக்கல் காலேஜ் என்னோடது, நாம இன்னும் விரிவா ஏதாவது செய்யலாம் பிருந்தா” என்றான்.

அவனது வார்த்தைகளில் மகிழ்ச்சி வரப் பெற்றவளாக பார்த்தவள், “சும்மா சொல்லிட்டதா நினைக்காதீங்க மாமா, நான் விட மாட்டேன்” என உரிமையாக மிரட்டினாள்.

“நான் சொன்னா சொன்னதுதான். நீ உன் வீட்டுக்காரன் மூஞ்சிலேயும் இப்படி சிரிப்ப வர வை” என்றான்.

பிருந்தா ஒன்றும் சொல்லாமல் சிரித்தாள். விஜய்யும் மேற்கொண்டு அதை பற்றி பேசவில்லை. சிறிது நேரம் அவளது ஆலை பற்றி கேட்டான், அத்தனை உற்சாகமாக பேசினாள். அவளது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் வாய் விட்டு மெச்சிய விஜய் பின் கிளம்பி விட்டான்.

பிருந்தாவுக்கு தன் கணவனை நினைத்து பெருமையாக இருந்தது. எவ்வளவு பெரிய விஷயம் செய்திருக்கிறான். இன்று காலையில் கூட ஏதோ பரிசு வைத்திருந்தான் அறையில், கோவத்தில் இவள் பிரித்து பார்க்கவே இல்லை. இதை மட்டுமல்ல இதற்கு முன்னர் அவன் வைத்த அத்தனையும் பிரிக்க படாமலே ட்ரெஸிங் டேபிள் டிராயரில் கிடந்தன.

வெகு நாட்களுக்கு பின் பிரசன்னா பற்றிய எண்ணங்களே மனதில் வலம் வந்தன. முகம் புன்னகையை பூசிக் கொண்டது. நேரம் நகர்வது கொஞ்சம் இழுபறியாக தோன்றியது.

மாலை வீடு வந்து சேர்ந்தவள் கண்கள் அவனைத்தான் தேடின. பார்க்கில் ஆழியோடு இருந்தான் பிரசன்னா.

ஒற்றைக் கையால் குழந்தையை தூக்கி இறக்கி விளையாடிக் கொண்டிருந்தவன் இவளை கவனித்து விட்டு சோகமாக மாற, இவளுக்கும் மனம் உருகி விட்டது. என்ன எப்படி பேசுவது என யோசித்துக் கொண்டே இவள் அவர்களிடம் சென்றாள்.

தன்னிடம் பேச வருகிறாள் என்பதை உணராதவன் தான் இருப்பதால் அவள் இலகுவாக இருக்க மாட்டாள் என கருதி ஆழியை அங்கேயே விட்டு அவன் மட்டும் சென்று விட்டான்.

லேசாக கோவம் வரப் பெற்றவள் மீண்டும் அவனை தேடி செல்லாது ஆழியோடு விளையாட ஆரம்பித்து விட்டாள். பாவனா வந்தாள், இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். நேரம் இப்படியே நகர்ந்தது. சாப்பிடும் நேரம் அவனை காணாமல் சரியாக சாப்பிடவே முடியவில்லை இவளால். பெயருக்கு சாப்பிட்டு அறைக்கு சென்றாள்.

நேரமாகியும் இன்னும் தூங்க வராமல் உடற்பயிற்சி கூடத்தில் இருந்தான் பிரசன்னா. இத்தனை நாட்களில் அவனுடன் பேசா விட்டாலும் அவன் உறங்க வரும் வரை இவளும் உறங்க செல்வதில்லை. இவள் பொறுமையாக அவன் கொடுத்த பரிசு பொருட்களை பிரித்து பார்த்தாள். வித விதமான உதட்டு சாய குப்பிகள், நகப் பூச்சுகள், மஸ்காரா என எல்லாம் முக அலங்காரம் செய்யும் பொருட்கள்.

சிரிப்புடன் அனைத்தையும் பிரித்து அடுக்கி வைத்தாள். நேரம் கடந்தும் அவனை காணாமல் எழுந்து சென்றாள்.

உடற்பயிற்சி கூடத்தில் சாய்வு நாற்காலியில் தளர்ந்து போய் அமர்ந்திருந்தவன் இவளை கண்டதும் சட்டென எழுந்து நின்றான். அங்கு வந்து விட்டவளோ அடுத்து என்ன பேச என தடுமாறி கையை பிசைந்து கொண்டு நிற்க அவனுக்கு அவளின் வார்த்தை கூட தேவைப் படவில்லை. தன்னை தேடி வந்ததே அந்த நொடி இதம் தர வேகமாக வந்து அவளை அணைக்க பார்த்தான்.

அவளை தொடும் இறுதி நொடியில் அணைக்காமல் விலகி நின்றவன், தன் முகத்தை கையால் அழுந்த தேய்த்துக் கொள்ள பிருந்தாவுக்கு என்னவோ போலாக அவளை மீறி அவன் கையை பிடித்தாள்.

அந்த ஒரு செய்கையில் அவனது கட்டுப்பாடு எல்லாம் காற்றில் பறக்க வேகமாக அவளை அணைத்துக் கொண்டான். பிருந்தாவுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

“போங்க… போங்க…” என சொல்லி அவனை விலக்கி விட பார்த்தாள்.

அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து விடாமல் இறுக்கிக் கொண்டவன் சில நொடிகளுக்கு பின் அவள் காது மடலோரம் முத்தமிட்டு, “போடி…” என்றான்.

காரணம் இல்லாமல் எதற்கென தெரியாமல் அழ ஆரம்பித்தாள் பிருந்தா. லேசான அழுகை பெரும் அழுகையாக மாற பயந்து போய் தன்னிடமிருந்து அவளை அவன் விலக்க, அவளோ மீண்டும் அவனை அணைத்துக் கொண்டு அழுதாள்.

நிமிட நேரம் எதுவும் சொல்லாதவன், “நிறுத்து… நிறுத்து பிருந்தா!” என அதட்டினான்.

அவளாக விலகி கண்களை துடைத்துக் கொண்டவள், “போ ரொம்ப டார்ச்சர் பண்ற என்னை. எனக்கு பிடிக்கல உன்னை” என்றாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement