Advertisement

அத்தியாயம் -1(2)

இது நடந்து ஒரு வருடமாகி விட்டது. அவ்வப்போது பிருந்தா தனிமையில் சிக்கினால் வம்பு செய்வான், அவளும் திருப்பி தருவாள். ஆனால் அவளை திருமணம் செய்ய குடும்பத்தினர் மூலமாக முயலவே இல்லை பிரசன்னா. குறைந்த பட்சம் பிருந்தாவை அவனை விரும்ப செய்யும் அளவுக்கு கூட எதுவும் மெனெக்கெடவில்லை அவன்.

‘நான் இப்படித்தான் இருப்பேன், எதுவும் மாற மாட்டேன். நீதான் எனக்கு மனைவி, உன் வாயாலேயே சொல்ல வைக்கிறேன்’ என தெனாவெட்டாவாகவே இருக்கிறான். இதோ இன்னும் ஒரு வாரத்தில் பிருந்தா அபினேஷ் நிச்சயதார்த்தம் வரை வந்தாகி விட்டது.

உணவை முடித்து விட்டு அம்மாவிடம் “ஈவ்னிங் ராதா மேடம் மகன் ரிசப்ஷன் இருக்கு. கரெக்ட் டைம் வந்திடுவேன், ரெடியா இரு” என சொல்லி விட்டு கல்லூரி புறப்பட்டு விட்டான்.

தன் அம்மா நிர்மலாவிடம் தயக்கமாக, “நான் வேணாம்னுதான் சொன்னேன் ம்மா. அபி ஃபிரெண்ட் ரெண்டு நாள்ல அப்ராட் போய்டுவாராம். ஈரோட்டுல உள்ள ஓட்டல்லதான் அவர் ஃபிரெண்ட் மேரேஜ் ரிசப்ஷன் நடக்குது. நைட் எய்ட்க்குள்ள வீட்ல விடுறேனு சொல்றாரு. ஃபர்ஸ்ட் டைம் கேட்கும் போது நோ ன்னு சொல்ல முடியலை மா” என்றாள்.

“அதனால உடனே ஓகே சொன்னியா நீ? இன்னும் உங்களுக்கு நிச்சயம் முடியலை பிருந்தா” கண்டிப்பாக சொன்னார் நிர்மலா.

“வர்றேன்னு சொல்லலை. அப்பாம்மா கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னுதான் சொன்னேன். என்ன இப்போ முடியாதுன்னு சொல்லிடுறேன், போதுமா?” கோவமாக எழுந்து சென்றாள் பிருந்தா.

கேசவன் வரவும் அவரிடம் மகள் சொன்னதை பற்றி நிர்மலா சொல்லிக் கொண்டிருக்க, “போனா என்ன தப்பு நிர்மலா? எப்படியும் ஒரு மாசத்துல கல்யாணம் ஆக போகுது, அப்போ நம்ம தடுக்க போறோமா?” என மகளுக்கு பரிந்து பேசினார் கேசவன்.

“அதைத்தான் நானும் சொல்றேன், கல்யாணம் ஆனதும் யார் என்ன சொல்ல போறாங்க? அப்போ எங்க வேணா அழைச்சிட்டு போகட்டும். என் அண்ணனுக்கு எல்லாம் தெரிஞ்சா திட்டுவாரு என்னை” என அரங்கநாதனை உள்ளே இழுத்தார் நிர்மலா.

“ஆமாம் உன் அண்ணன் இப்படி என் பொண்ணுகிட்டதான் அவர் கண்டிப்ப காட்டுவார். அவர் பொண்ணும் புள்ளையுமே அவர் இஷ்டம் இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. என் பொண்ணு என்ன அப்படியா? இப்ப கூட நம்மகிட்ட பெர்மிஷன் கேட்குறாதானே? போயிட்டு வரட்டும்”

கணவரை முறைத்த நிர்மலா, “என் அண்ணன் பொண்ணும் பையனும் உங்க அண்ணன் பசங்களதான் கட்டியிருக்காங்க. அதுவும் வைஷு கல்யாணம் பேச நீங்களே போய் நின்னீங்க” என்றார்.

ஆமாம், அரங்கநாதனின் மகள் வைஷ்ணவி மணந்திருக்கும் தேவா ரமணனின் மகன். ரமணன் வேறு யாருமில்லை கேசவனின் உடன் பிறந்த அண்ணன்.

“யார் இல்லைனு சொன்னது, ஆனாலும் விஜய் வைஷு விஷயத்துல உன் அண்ணன் கண்டிப்பு பலிக்கலதானே? நம்ம பொண்ணு நம்ம பேச்சு படி கல்யாணம் பண்ணிக்க போறா, அவ விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்கணும்” என்றவர் மகளை காண செல்ல அரங்கநாதன் வந்தார்.

நிச்சயம் முன்னரே இப்படி மகள் செல்வது நிர்மலாவின் மனதை உறுத்த அண்ணனிடம் கவலையாக சொன்னார்.

பிருந்தா வந்து அரங்கநாதனை வாங்க மாமா என அழைக்கவும் வரவேற்பு யாருக்கு எங்கு நடக்கிறது என விசாரித்தறிந்தவர், “பையன் அம்மா நம்ம காலேஜ்ல கம்பிப்யூட்டர் டிபார்ட்மெண்ட் எச் ஓ டி. பிரசன்னாவும் கங்காவும் கூட போறாங்க. என்ன இப்போ மாப்பிள்ளைக்கு அவர் ஃபிரெண்ட்கு நம்ம பிருந்தாவை இன்ட்ரொட்யூஸ் செய்யணும் அவ்ளோதானே? கங்காவோட போயிட்டு அவளோடவே திரும்பி வரட்டும்” என யோசனை தந்தார்.

பிருந்தா தனது மாமாவை மனதில் திட்டிக் கொண்டே தன் அப்பாவை பார்க்க அவரோ அதான் என் மச்சான் சொல்லிட்டாரே எனும் விதமாக நிற்க மாமா முன்னிலையில் எதுவும் சொல்ல முடியாமல் தொழிற்சாலைக்கு புறப்பட்டு சென்றாள் பிருந்தா.

முன்மாலையிலேயே வீடு வந்து விட்ட பிருந்தா சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு பின் வரவேற்பு நிகழ்ச்சி செல்ல தயாரானாள். புடவை வேண்டாமென முன்னரே முடிவெடுத்து விட்டவள் உடுத்திக் கொள்ள இள மஞ்சள் நிற கவுன் ஒன்றை தேர்ந்தெடுத்தாள்.

கைகளில் நெட் வேலைப்பாடு செய்யப் பட்டிருக்க உடல் முழுதும் சிறு சிறு வெள்ளைப் பூக்கள். முதுகு வரை நீண்டிருக்கும் கூந்தலை அழகாக தோளில் வழிய விரிந்தவாறு சிகை அலங்காரம் செய்து பொருத்தமான வைர நகைகள் அணிந்து கொண்டு வெளியில் வர நிர்மலா தன் மகளை அதிருப்தியாக பார்த்தார்.

“என்ன நல்லா இல்லையா?” என பிருந்தா கேட்க,

“பட்டு புடவை இல்லைனா கூட டிசைனர் சாரி ஏதாவது கட்டிக்க பிருந்தா. முடியை பின்னல் போடாட்டாலும் ஏன் இப்படி விரிச்சு விட்ருக்க? பூ இல்லாம ஃபங்ஷன் போவியா? ஸ்லீவ்லெஸ் போலத்தான் இருக்கு இந்த ட்ரெஸ்ல இருக்க நெட் கை. வேணாம் டி, வேற மாத்திக்க” என்றார்.

இப்போது அம்மாவை முறைத்த பிருந்தா, “எனக்கு பிடிச்சிருக்கு ம்மா” என்றாள்.

“மாப்ள ஏதாவது நினைச்சுக்க போறார் பிருந்தா”

“நாங்க பேசியிருக்கோம் மா. அபி அப்படி கிடையாது. ஒருவேளை ஏதாவது சொன்னா நான் புரிய வைக்கிறேன்”

“இல்லைனா?”

“இல்லைனா என்ன? ட்ரெஸ் போடுற விஷயத்துல கூட எனக்கு சுதந்திரம் இல்லைனா இந்த மேரேஜ் அவசியம்தானான்னு யோசிக்க வேண்டியதுதான்” என சொல்ல நிர்மலா நெஞ்சில் கை வைத்து அதிர்ந்து நின்றார்.

ஒரே பெண் என்பதால் தூரமாக இல்லாமல் அருகிலேயே வேண்டும் என்பதை மனதில் வைத்துதான் பிருந்தாவுக்கு மாப்பிள்ளை பார்த்தனர். எத்தனை இடங்கள் பார்த்து ஒன்றும் சரி வராமல் போனது. ஏற்கனவே பிருந்தாவுக்கு திருமணம் வரை நின்று போனது வேறு, சிலருக்கு தெரிந்திருக்க மனதுக்கு பிடித்தது போல அமையவே இல்லை.

எத்தனை கோயில்களுக்கு பரிகாரம் என மகளை அழைத்து சென்றிருப்பார் நிர்மலா என கணக்கே இல்லை. அபினேஷ்தான் பையன் என கிட்டத்தட்ட முடிவாகி விட்ட நிலையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மகள் கூறியது அம்மாவுக்கு அத்தனை உவப்பாக இல்லை.

எப்படி இப்படி பேசலாம் என மகளை நிர்மலா கண்டித்து கொண்டிருக்க பிரசன்னா வந்தான். கண்ணுக்கு நிறைவான அண்ணன் மகன் இருக்கையில் மகளுக்கு வெளியில் செய்கிறோமே என நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டே, “வா பிரசன்னா, அண்ணியும் வர்றாங்கன்னு அண்ணன் சொன்னாரே. எங்க அண்ணி?” எனக் கேட்டு அவனுக்கும் பின்னால் பார்த்தார்.

“அவங்க இன்னும் ரெடி ஆகல, பிருந்தாவை அழைச்சிட்டு அப்படியே வீடு போய் அம்மாவையும் கூப்பிட்டுக்கிட்டு கிளம்பணும்” என்றான் பிரசன்னா.

பிரசன்னாவை வாங்க என அழைத்த பிருந்தா, “சொல்லியிருந்தால் நானே உங்க வீட்டுக்கு வந்திருப்பேனே. எதுக்கு உங்களுக்கு சிரமம்?” எனக் கேட்டாள்.

அவளை கண்களால் அளவிட்டுக் கொண்டே, “கொஞ்ச நாளைக்குதானே நீ வெறும் அத்தை மக, அப்புறம் வேற வேற பதவி கிடைச்சிடும். அதான் அத்தை மகளா இருக்கிறப்ப கொஞ்சம் அக்கறையா இருக்கலாம்னு வந்தேன். ஜஸ்ட் ஒன் மன்த் எல்லாம் மாறிப் போய்டும்ல…” என்றான் பிரசன்னா.

நிர்மலா புன்னகையோடு நிற்க, பிருந்தாவுக்கு இவன் பேசுவதில் எதுவும் உள்ளர்த்தம் இருக்கிறதோ என சந்தேகம் எழ அவளது நெற்றியில் யோசனை வரிகள்.

“ஏதாவது குடிக்கிறியா பிரசன்னா, காபி தரவா?” என கேட்ட நிர்மலாவிடம் மறுத்து சொன்னவன், “லேட் ஆகுது, சீக்கிரம் போயிட்டு எட்டு மணிக்கெல்லாம் இங்க வீட்ல கொண்டு வந்து விடணும்னு அப்பாவோட ஆர்டர்… சீக்கிரம் வா” என சொல்லி வெளியேறினான் பிரசன்னா.

அம்மாவிடம் சொல்லிக் கொண்டு தன் கைபேசியோடு பிருந்தாவும் சென்றாள்.

பிரசன்னா காரை தயாராக நிறுத்தியிருக்க அவனுக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். அவளை அலட்சியமாக பார்த்தவன், “இதென்ன கோமாளி வேஷம்? நல்லதா ட்ரெஸ் இல்லையா உன்கிட்ட?” எனக் கேட்டான்.

ஒரு நொடி திகைத்தவள் அவனை முறைத்துக் கொண்டே, “உங்க பார்வைக்கு கோமாளி வேஷமா தெரியற இந்த ட்ரெஸ் எனக்கு ரொம்ப பிடிச்ச ட்ரெஸ். உங்களுக்காக ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கிற அளவுக்கு நமக்குள்ள எந்த பாண்டிங்கும் இல்ல. உங்க அப்பாவோட ஆர்டரை அப்படியே செய்றவர் கொஞ்சம் சீக்கிரம் காரை ஸ்ட்ராட் செய்யலாம்” என்றவள், “எப்பதான் ப்ராடா யோசிக்க வருமோ?” என முணு முணுத்தாள்.

கோவத்தை புன்னகை முலாம் பூசி மறைத்துக் கொண்டவன், “அப்படி நீயாவே நமக்குள்ள ஒண்ணுமில்லைனு முடிவு பண்ணிட்டியா? செகண்ட்ஸ்ல லைஃப் மாறிப் போய்டும். எதுக்கும் என்கிட்ட ஜாக்கிரதையாவே இரு!” என எச்சரிக்கை போல சொல்லி விட்டு காரை சாலையில் சீறிப் பாய விட்டான் பிரசன்னா.

பிருந்தா விழி விரிக்க அவனையே பார்த்திருக்க இதற்கு மேல் நீ என்ன கேட்டாலும் என்னிடம் வார்த்தைகள் இல்லை எனும் விதமாக திமிரான உடல்மொழியோடு இருந்தான் பிரசன்னா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement