Advertisement

அத்தியாயம் -11(3)

அடுத்த நாள் கல்லூரியிலிருந்து இவன் வீடு வரும் போது பிருந்தா வீட்டில்தான் இருந்தாள். வந்த உடனே எதற்கு என் பேச்சை மீறி சென்றாய் என பிடித்துக் கொண்டான்.

“என்னை விட உனக்கு அந்தாள் முக்கியமா?” என சீறினான்.

“கல்யாணம் ஆகிடுச்சுன்னா புருஷனை தாண்டி வேற எதுவுமே அந்த பொண்ணு பார்க்க கூடாதா?” என இவளும் கோவப்பட்டாள்.

“சும்மா இப்படியே பேசாத. உன்னை வீட்டுக்குள்ளேயே அடைச்சு வச்சிருக்கேனா நான்? சுதந்திரமாதான் இருக்க, என்ன சென்ஸ்ல என்னை தாண்டி பார்க்க விடலைன்னு சொல்ற?”

“உங்க மூளை என்ன நினைக்குதோ அதைத்தான் நானும் நினைக்கணும் செய்யணும்னு சொல்றதுக்கு என்ன அர்த்தம்?”

“என் வைஃப் இப்படி இருக்கணும்னு நான் எக்ஸ்பெக்ட் பண்றது ஒண்ணும் தப்பில்ல. இப்பதான் சண்டை முடிஞ்சு ஓரளவு நமக்குள்ள சரியானது. அதனால மட்டும்தான் நேத்து நான் ரொம்ப பேசி தடுக்கல உன்னை. இனி எப்பவும் எனக்கு பிடிக்காததை செய்யாத” என்றான்.

கை நீட்டி அவனை அடுத்து வேறு எதுவும் பேச விடாமல் தடுத்தவள், “அத்தனை பேர் முன்னாடி லவ் பண்றேன்னு நீங்க சொன்னதுல முட்டாள்தனமா உருகி நின்னது என்னமோ உண்மைதான். தப்புன்னு இப்போ புரியுது, நமக்குள்ள எப்பவும் செட் ஆகாது. பேசாதீங்க என் கூட” என்றாள்.

“நான் உன் மேல வச்சிருக்க அன்பு தெரியலை உன் கண்ணுக்கு, மத்த படி உப்பு சப்பில்லாத விஷயம் எல்லாம் பூதம் மாதிரி தெரியும். ஃபெட் அப் வித் யூ பிருந்தா, பேச வேணாம், பேசவே வேணாம், போ… போடி!” என்றான் பிரசன்னா.

சத்தம் இல்லாமல் அறை அமைதியாக இருக்க உள்ளுக்குள் குமுறினர் இருவரும்.

அன்றிலிருந்து இருவரும் மிக மிக அத்தியாவசியம் அன்றி பேசிக் கொள்வதில்லை. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேல் மிக மிக இனிமையாக நடத்திய வாழ்க்கை கனவு போலானது இருவருக்கும்.

சென்னையிலிருந்து திரும்பி வந்த விஜய், பாவனா இருவரும் கூட மீண்டுமா என கவலை கொண்டனர்.

முறைத்துக் கொண்டு திரிபவர்கள் இப்படி முகத்தை கூட நோக்காமல் இருப்பது கண்டு பெரியவர்களுக்கும் பயம் வந்தது. இவர்களுக்குள் எல்லாம் சரி ஆகிவிட வேண்டும் என வேண்டிக் கொண்டார்களே தவிர தலையிடவில்லை.

ஆனால் பிரசன்னாவின் கோவம் இரண்டு நாட்களுக்குள் குறைந்து மறைந்து போயிருக்க பிருந்தா இன்னும் கோவமாகவே இருந்தாள். அவனாக பேச முயன்றாலும் தவிர்க்க ஆரம்பித்தாள்.

ஒரு அறைக்குள் இருந்தும் தன்னை ஏதோ அந்த அறையில் இருக்கும் ஒரு பொருள் போல எண்ணி பிருந்தா நடப்பதை துளி கூட பிரசன்னாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

அவள் அம்மா வீட்டில் இருந்த போது கூட கோவம் கொண்டு இருந்தவனுக்கு வந்துவிடுவாள் வரவழைத்து விடுவேன் என்ற எண்ணம் இருந்தது.

இதோ தன்னிடம் வந்தும் தன்னை அந்நியன் போல நடத்தும் அவள் செய்கையை தாங்கிக் கொள்ள முடியவில்லையே.

வீம்பும் பிடிவாதமும் அவனது பிறவிக் குணங்கள் என்ற போதும் பிருந்தா என வருகையில் அவன் தளர்ந்துதான் போகிறான். பேச அனுமதிக்காதவளிடம் எப்படி பேசுவது என குழம்பி தவித்தான்.

அன்றைய தினம் காலையில் பிருந்தா எழுந்து ஓய்வறை சென்று வர அவளுக்கான இருக்கைகள் தயாராக போடப் பட்டிருக்க அருகில் குட்டி மேசையில் ஒரு ஃபிளாஸ்க், கோப்பை, அன்றைய தினசரி இருந்தன.

பிருந்தா கோவமாக படுக்கையை பார்க்க அவன் அங்கு இல்லை, அறையிலேயே இல்லை அவன்.

“செய்றதெல்லாம் செஞ்சிட்டு பெரிய அக்கறை? நான் கேட்டேனா இவனை?” வாய் விட்டு திட்டிக் கொண்டே இருக்கைகளை சற்று இடம் நகர்த்தி போட்டு அமர்ந்து கொண்டாள்.

“இவன் போட்ட காபியா என்ன? எதுக்கு வேஸ்ட் பண்ணனும்? அவனா கொண்டாந்து வச்சா நான் பொறுப்பில்ல” என்றவள் காபியை கோப்பையில் ஊற்றி எடுத்துக் கொண்டாள்.

பிரசன்னா வியர்த்து வழிந்து உள்ளே வர அவனை கண்டு கொள்ளாமல் தன் வேலையை முடித்துக் கொண்டு இருக்கைகளை அதன் இடத்தில் வைக்க போக அவளை விடாமல் அவனே செய்தான்.

“ரொம்ப நல்லது எனக்கென்ன வந்தது?” என சொல்லி சென்று விட்டாள்.

அவள் குளித்து விட்டு வர அவன் அறையில் இல்லை. இரு பக்க கதவுகளையும் தாழிட்டவள் ஆடை மாற்றி விட்டு ட்ரெஸிங் டேபிள் முன் அமர வண்ணக் காகிதம் சுற்றிய பரிசு பெட்டி இருந்தது.

“அடுத்து இதுவா? நகை நட்டெல்லாம் பார்த்தது இல்ல பாரு நாங்க” அலட்சியமாக சொல்லிக் கொண்டே பிரிக்க உள்ளே உதட்டு சாய குப்பி.

கொஞ்சமல்ல நிறையவே திகைப்புதான் அவளுக்கு. ஆனாலும் உபயோகிக்காமல் வைத்தவள் ‘இதை எப்படி அவன்…?’ என சிந்தித்து கொண்டிருக்க கதவு தட்டப் பட்டது.

பிருந்தா கதவை திறக்க கைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டே உள்ளே நுழைந்தவன் அவளை கண்டு கொள்ளாமல் கடந்து சென்று அவனுக்கான உடைகளை எடுத்து வைத்து கைபேசி உரையாடலை முடித்துக் கொண்டு குளிக்க சென்று விட்டான்.

‘இந்த பரிசு இவன் தரவில்லையோ?’ என குழம்பியவள் தலையை சிலுப்பிக் கொண்டு வெளியே சென்று விட்டாள்.

மாலை அவள் வீடு திரும்பியதும் வழக்கம் போல இருவரும் பேசிக் கொள்ளாமலே நேரம் செல்ல இரவானதும் உண்டு உறங்க வந்தனர். படுக்கையில் தள்ளி இருப்பதை காட்டிலும் அவளது பாராமுகம் அவனை வெகுவாக வதை செய்தது.

புரண்டு புரண்டு அவள் படுக்க இன்னும் உறங்கியிராதவன் மின் விளக்கை போட்டான். திடீர் வெளிச்சத்தில் அவள் முகத்தை கையால் மறைத்துக் கொள்ள, “என்ன செய்யுது பிருந்தா?” எனக் கேட்டான்.

முதலில் அவனிடம் எதுவும் சொல்லாமல் விட்டவள் அவன் வற்புறுத்தி கேட்டுக் கொண்டே இருந்ததிலும் அவளால் சமாளிக்க முடியாமல் போனதிலும், “இன்னிக்கு மில்ல ஸ்லிப் ஆகி கீழ விழுந்திட்டேன், அப்ப பெருசா தெரியல, இப்போ வலிக்குது” என்றாள்.

“எங்க?” என அவன் கேட்க தன் இடது பக்க தோள் பட்டையை காட்டினாள்.

“எங்க காட்டு பார்க்கிறேன்” என அவன் நெருங்க, “வேணாம் காலைல சரியாகிடும்” என்றாள்.

அவள் பேச்சை கேட்காமல் அவளை நெருங்கி இரவு உடையாக அவள் அணிந்திருந்த சட்டையின் மேலிரு பொத்தான்கள் விடுவித்து அவன் பார்க்க தோளில் இருந்து கையின் மேல் பகுதி வரை சிவந்து கன்றி போயிருந்தது.

அவன் மருந்து எடுக்க போக, “வேணாம், நீங்க எதுவும் செய்றதுக்கு இந்த வலி பரவாயில்ல” என்றாள்.

“கண்ணு முன்னாடி நீ அனுபவிக்கிற வலிய கூட போக்க முடியாத அளவுக்கு அப்படி என்ன தப்பு செஞ்சிட்டேன் பிருந்தா?” கோவமாக கேட்டான்.

“ஷ் ஷ்… உங்களோட முடியலை. எத்தனை முறை சொல்றது?”

“ஏய் நான் சரின்னு நினைக்கிறத நானா தப்புன்னு உணரணும். சும்மா உன்கிட்ட ஆமாம் தப்புதான்னு நடிக்க முடியாது, உன் மேல கோவம் இருந்தாலும் அன்னிக்கு நீ கொடுத்த சாப்பாட்ட நான் சாப்பிடல? எதுவும் பேசாத, சொல்லிட்டேன்” என கோவமாக சொன்னவன் இன்னும் கொஞ்சம் ஆடை தளர்த்தி அவளுக்கு மருந்து தடவி விட, ஆடை அதிகம் விலகாதவாறு மேலேற்றி பிடித்துக்கொண்டாள்.

மருந்திடுவதை நிறுத்தி விட்டு அவன் முறைக்க அவளும் முறைப்பாக பார்த்தாள்.

“மருந்து எப்படி போடுறது நான்?” எனக் கேட்டவன் சற்று தளர்த்தி விட ஆடையை இறுக பற்றினாள்.

“ரொம்பத்தான்… இன்னும் நல்லா பிடிச்சுக்கோ. ஆள பாரு! இன்னும் கொஞ்சம் இறுக்கினா ஷர்ட் கிழிஞ்சிடும்” நக்கலாக சொன்னான்.

அவள் முறைத்தே இருக்க, “நீ பிடிக்கிறதுல கிழியாது. என் பொறுமை பறக்கிறதுல நடக்கும்” என அவன் சொல்ல, செய்தாலும் செய்வான் என்ற நினைவில் இலகுவாக அமர்ந்தாள்.

தன் வேலை முடித்து கை கழுவி வந்து வலி நிவாரணி மாத்திரை ஒன்று கொடுத்து போட செய்தான்.

மாத்திரை விழுங்கி விட்டு அவள் பார்க்க ஆடை தாராளமாக விலகி போயிருக்க அவள் திடுக்கிட்டு போனாள். அவனோ பொருட் படுத்தாமல் முன்னர் அவன் வாங்கி கொடுத்திருந்த கை இல்லாத கவுனை கப்போர்டில் இருந்து எடுத்து அவளிடம் நீட்டினான். கையை அசைக்க அவள் சிரமப்பட, அவனே அவளுக்கு பொறுமையாக ஆடை மாற்றி விட்டு விளக்கை அணைத்து விட்டு விலகி படுத்தான்.

அவள் அமர்ந்தே இருக்க, “நீ கஷ்ட பட்டிட்டு இருக்கும் போது ட்ரெஸ் விலகுறதை பார்த்து ரசிக்கிற அளவுக்கும் எந்த சான்ஸ் கிடைச்சாலும் அட்வான்டேஜ் எடுத்துக்கிற அளவுக்கும் மோசமானவன் இல்ல பிருந்தா நான்” என்றான்.

‘கொஞ்சம் இவன் கர்வத்தை மட்டும் குறைத்துக் கொள்ள கூடாதா?’ என நினைத்தவள் அவனையே பார்த்திருக்க,

“ரொம்ப யோசிக்காத, என்கிட்ட உனக்கு பிடிக்காத விஷயங்கள் இருக்கலாம், எனக்கும் அப்படி இருக்குன்னாலும் அதை தாண்டி உன்னை ரொம்ப பிடிக்கும். உனக்கும் எப்ப என்னை எல்லாத்தையும் தாண்டி அப்படி பிடிக்குதோ அப்பதான் மத்தது எல்லாம். நீ என்னை பத்தி கேவலமா சொன்ன மாதிரி எந்த திட்டமும் என்கிட்ட இல்ல, நான் இப்படித்தான், எனக்கு என் மனசாட்சிக்கு நான் நல்லவன்தான். என்னை புரிஞ்சுக்கிட்டு மெதுவா வா. இப்போ படு” என்றான்.

ஆயாசமாக அவள் பார்க்க, “என்னடி இப்போ? நல்லா தூங்கிட்டு விடிஞ்சப்புறம் பார்க்கலாம் என்னை, படு” என அதட்டினான்.

இடது பக்கம் வலி என்பதால் அவன் பக்கம் பார்க்கவே படுத்தாள். மெல்லிய வெளிச்சத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்திருக்க இரவு கடந்து சென்றது.

Advertisement