Advertisement

அத்தியாயம் -11(2)

“முரடன் எப்படி லவ் சொல்றான் பாரு, இவனை என்னடி செய்றது?” என பாவனாவுக்கு மட்டும் கேட்கும் படி கேட்டான் விஜய்.

“பிருந்தாதான் சொல்லணும்” என்றாள் பாவனா.

ஆழினிக்கு எதுவும் புரியா விட்டாலும் சித்தி சித்தப்பாவிடம் காய் விட்டிருக்கிறாள் எனும் அளவில் மட்டும் புரிந்து கொண்டவள் பிருந்தாவின் புடவை முந்தானையை பற்றி இழுக்க அவள் குழந்தையை பார்த்தாள்.

“பாவம் சித்தப்பா, பழம் விடுங்க சித்தி” என்றாள்.

ஆழியின் கன்னத்தை வருடி விட்ட பிருந்தா அமைதியாக இருக்க, சற்று குனிந்து குழந்தையின் கையை பிடித்து முத்தமிட்டு நிமிர்ந்து மனைவியை பார்த்தான்.

அவள் முகம் திருப்ப, “இறங்கி வந்தா ஏறி மிதிப்பேன்னு நல்லா தெரியும். இன்னும் நல்லா திருப்பிக்க மூஞ்சிய” என சொல்லி அங்கு நிற்காமல் வெளியே செல்ல நடந்தான்.

“சாப்பிட்டு போடா” என்ற கங்காவின் குரல் அவன் காதில் தேய்ந்து ஒலித்தது.

வேகமாக டைனிங் ஹால் ஓடிய பிருந்தா, பாவனா ஆழினிக்கு மதிய உணவு கொடுத்தனுப்பும் இரண்டடுக்கு ஹாட் கேஸில் அவசரமாக இட்லியும் சட்னியும் பேக் செய்து இன்னும் வேகமாக வெளியே விரைந்து சென்றாள்.

பாவனா திகைப்போடு தன் கணவனை பார்க்க, “வேற எடுத்துக்கோ” என்றான்.

“அது இல்லைங்க, அதெப்படி அந்த பாக்ஸுக்குள்ள அஞ்சு இட்லிய வச்சு அடைச்சா?” எனக் கேட்ட தன் மனைவி முதுகில் செல்லமாக தட்டியவன், “என் தம்பிக்கு அஞ்சு இட்லி எப்படி பத்தும்னு நான் யோசிச்சா உனக்கு எவ்ளோ பெரிய டவுட்?” எனக் கேட்டு சிரித்தான்.

பிருந்தா பின்னால் ஓடி வருவது கண்டு வெளி கேட் அருகில் காரை நிறுத்தினான் பிரசன்னா.

மூச்சு வாங்க அவள் வந்து நிற்க கார் கதவை திறந்து விட்டு அவளை பார்த்தான். இருக்கையில் ஹாட்கேஸை வைத்தவள், “அவ்ளோ நீள நீளமான டயலாக் பேசிட்டு சாப்பிடாம வந்தா என்ன அர்த்தம்? அங்க எல்லாரும் என்னை குறை சொல்றதுக்கா?” என கோவமாக கேட்டாள்.

“ம்ம்… உன் கடமை முடிஞ்சதுல்ல… போ” என்றான்.

“இந்த சாப்பாடு குப்பைக்கு போனாலோ இல்ல திரும்ப வந்தாலோ…”

“ம்ம்ம்… வந்தாலோ?”

“நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணுனீங்களோ என்னவோ எனக்கு தெரியாது. ஆனா கல்யாணம் ஆன அப்புறம்…”

“அப்புறம்?”

“ப்ச் ரெண்டு பேரும் ஒரு மாசம் மேல ஒண்ணு மண்ணா வாழ்ந்திருக்கோம். எனக்கும் உங்ககிட்ட முறைச்சுக்கிட்டு திரிய ஒண்ணும் ஆசை கிடையாது. ஒழுங்கா சாப்பிடுங்க” என்றாள்.

அவன் சிறு சிரிப்புடன் சரி என தலையாட்ட, “நான்… என் கோவம் அப்படியேதான் இருக்கு. கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க ஓகே, அதுக்கப்புறம் நீங்க நடந்துகிட்டது எல்லாம் இருக்கு. சாப்பாடு மட்டும்தான் கொடுத்தேன், மத்தபடி நான்… நம்ம சண்டை அப்படியேதான் இருக்கு” என்றாள்.

பிரசன்னா ஒத்துக் கொள்வது போல தலையாட்ட, “பூம் பூம் மாடு மாதிரி தலையாட்ட வேணாம். கிளம்புங்க” என்றாள்.

“கிட்ட வா” என அழைத்தான்.

அவள் காருக்குள் தலை விட்டு “என்ன?” என கேட்க, அவளை நெருங்கியவன் அவள் வலது கண்ணோரம் லேசாக இழுவியிருந்த கண் மையினை இடக் கையின் சுண்டு விரல் கொண்டு படு நாசூக்காக துடைத்து விட்டு, “நீயும் சாப்பிட்டு கிளம்பு” என்றான்.

அவள் தலையை விலக்கி நிமிர்ந்து நிற்க தலையசைப்பு மூலம் விடை பெற்று காரை எடுத்தான்.

பிருந்தா வீட்டுக்குள் நுழையவும் வீடே அவளை நோட்டமிட, அத்தையையும் அம்மாவையும் பார்த்தவள், “உங்களுக்காகதான், அவர் சாப்பிடாம போனா நீங்க வருத்த பட மாட்டீங்க? அதனாலதான்… வேற… வேற எதுவுமில்லை” என விரைப்பாக சொல்லி சென்றாள்.

அனைவரும் வாய்க்குள் சிரித்துக் கொண்டார்கள்.

‘இவன் லவ் பண்ணினான்னு என்னை தவிர எல்லாருக்கும் சொல்லுவான், எனக்கு தெரியணும்னு சொல்லும் போது கூட ஊரையே கூட்டி வச்சுகிட்டு சொல்லுவான். பிருந்தா இதுக்கெல்லாம் மயங்காத, அப்படி மயங்கி மயங்கித்தான் முட்டாளா போய்கிட்டு இருக்க!’ என தனக்கு தானே எச்சரிக்கை செய்து கொண்டவளும் அவளை அறியாத புன்னகையை முகத்தில் தேக்கிக் கொண்டே சாப்பிட்டு ஆலைக்கு கிளம்பினாள்.

மாலையில் வீடு திரும்பிய பிரசன்னா அவள் சமாதானம் அடைந்து விட்டாள் என நினைத்துக்கொண்டே அவளது வரவை ஆவலாக எதிர் நோக்கியிருந்தான்.

வீடு வந்தவள் அவசரமாக அவளுக்கான உடைகள் ஒரு செட் எடுத்து வைத்துக்கொண்டு கிளம்ப அறைக்கு வந்தவன், “எங்க பிருந்தா?” எனக் கேட்டான்.

“சின்ன தாத்தா இறந்திட்டாங்களாம். எல்லாரும் ஊருக்கு போறாங்க” என்றாள்.

“நீயும் போறியா?”

“இல்ல நான் போகல. அங்க பெரியப்பா கூட யாராவது துணைக்கு இருக்கணும்ல… அதான் நான் போறேன்” என்றாள்.

“ஏன் உன் பெரியப்பா பொண்ணு என்ன செய்றாங்க?” எரிச்சலாக கேட்டான்.

“பாவனா அவ அம்மாவை பார்க்க ஆழியோட சென்னை கிளம்பி ரெண்டு மணி நேரம் ஆகுது. விஜய் மாமாவும் அவங்க ஃபிரெண்ட் பார்க்க போறாங்க, இந்நேரம் பாதி வழியில இருப்பா. ஏன் அவளை டிஸ்டர்ப் செய்யணும்?”

“ஆழிய கூட்டிகிட்டா? இந்த விஜய் ஏன் இப்படி பண்றான்? ஆழி அம்மாவுக்குதான் அறிவில்லன்னா இவனுக்கும்…”

“என்ன பேச்சு இது மாமா? அவ அவளோட அம்மாவை பார்க்க போறா”

“அதை பத்தி எனக்கென்ன கவலை? ஆழிய ஏன் அழைச்சிட்டு போறாங்க? இந்த வீடு வந்த பிறகும் கூட ஜெண்டிலா நடக்க மாட்டேன்னா என்ன சொல்ல நான்?”

“தப்பு மாமா, ஊரான் வீட்டு பொண்ணை எதுவும் பேச நமக்கு உரிமை கிடையாது, அதை விட நம்ம வீட்டு பொண்ணை நாமளே பேசறது அநியாயம்”

“எதுக்கெடுத்தாலும் ஏதாவது சொல்லு, நம்ம கதைக்கு வருவோம். உன் பெரியப்பா கூட இருக்க யாராவது இங்கேர்ந்து ஆள் அனுப்புறேன், நீ போக வேணாம்” என்றான்.

“அங்கேயே தேவையான அளவு ஆளுங்க இருக்காங்க, இருந்தாலும் நம்ம மனுஷங்கனு யாரும் துணைக்கு வேணாமா? நான் போறேன்”

“சொன்னா கேட்க மாட்டியா நீ?”

“எந்த சமயத்துல போய் உங்க வீம்ப தூக்கி பிடிப்பீங்க நீங்க? அவர் யாரோ ஒரு மனுஷன்னு நினைச்சுக்கோங்க. உடம்பு முடியாதவருக்கு துணைக்கு போறேன்” என்றவள் அறையை விட்டு செல்ல, அவள் பின்னால் வந்தவன், “என் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கிறதா இருந்தா போக கூடாது பிருந்தா நீ. நான் வேற அரேஞ்மெண்ட் பண்றேன்” என்றான்.

காதில் வாங்காதவள் தன் மாமியாரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டே விட்டாள்.

பிரசன்னா தன் அம்மாவை முறைக்க, “உன் அப்பாக்கே தெரியும், அவரே எதுவும் சொல்லலை. ஒரு நைட் ஒரு பகல்தான் டா. நாளைக்கு வந்திடுவா போ” என்றார் கங்கா.

“நான் சொல்லிட்டு இருக்கும் போது போயிட்டு வான்னு எதுக்கு சொல்ற நீ?” என கோவப்பட்டான்.

“அடடடா! காலைல சமாதானம் ஆகுற மாதிரி ஆவீங்க, சாயந்தரம் புதுசா ஒண்ண கொண்டு வந்து சண்டை போட்டுக்குவீங்க. நீ ஒரு குணங்கெட்டவன் டா. நான் போகாதன்னு சொன்னா கேட்பாளா அவ? ஒரு பொண்ணை வச்சு ஒழுங்கா வாழ தெரியாத கிறுக்கு பயடா நீ. போ போய் ஏதாவது வேலை இருந்தா பாரு” என கங்கா திட்ட அவரை முறைத்துக் கொண்டே அறைக்கு சென்று விட்டான்.

நேரம் கடந்தும் பிரசன்னாவுக்கு மனம் சமாதானம் ஆகவில்லை. மனைவியை நினைத்து உள்ளுக்குள் உறுமிக் கொண்டிருந்தான்.

Advertisement