Advertisement

மெல்ல உன் வசமாகுறேன் -11

அத்தியாயம் -11(1)

காலையில் காபியோடு பிருந்தா தினசரி படிக்கும் நேரம் அவளருகில் அமர்ந்து “குட் மார்னிங்” என அன்றைய நாளின் பேச்சை பிரசன்னா துவக்க அவள் கண்டுகொள்ளவே இல்லை.

இளஞ்சிவப்பு நிற நகப் பூச்சில் பள பளத்த அவளது கால் விரல் நகங்கள் அவனை ஈர்க்க அவளோடு கூடியிருந்த பொழுதுகளில் அவன் முத்தமிட்ட கணுக்காலும் கெண்டைக் கால் தழும்பும் இனிய அனுபவங்களை நினைவுகளாக தூவி விட்டன.

தானாக ஒரு பெரு மூச்சு எழ அவளது மென் பாதங்களை வருட அவன் கையும் நீள சிரமப்பட்டு தன்னை கட்டுப் படுத்திக் கொண்டான்.

 நேற்று இரவு அவளை அணைத்த போது அவள் சொன்ன வார்த்தையில் மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவன் இனி அவள் அனுமதி இன்றி அவளை தீண்டுவதில்லை என மனதில் பிரமாணமே செய்து கொண்டிருந்தான்.

“உனக்கு புரியலையா பிருந்தா? எனக்கு உன்னை எவ்ளோ பிடிக்கும்னு நான்தான் புரிய வைக்க விட்டுட்டேனா? நேத்து போல ஏதாவது திட்டி கூட பேசேன்” என அவன் கெஞ்சலில் இறங்கியிருக்க தன் முகம் மறைத்திருந்த தினசரியை விலக்கியவள் அவனை உற்று பார்த்தாள்.

கனிவான அவனது முகமும் அகம்பாவம் தொலைத்த பார்வையும் மனதை இளக்கினாலும் நடந்தவைகளை நினைவு படுத்திக் கொண்டவள், “அவ்ளோ பிடிச்சிருந்தா என்னை தேடி வர வேண்டியதுதானே? இப்போ கெஞ்சுறதை அம்மா வீட்ல இருந்தப்பவே ஏன் செய்யல?” எனக் கேட்டாள்.

“ஏன்னா நான் உன்னை அனுப்பல, நீயாதான் போன. அது தப்புதானே?”

“நீங்க செஞ்சது?”

“அதை விடவே மாட்டியா பிருந்தா? அவன் அவ்ளோ நல்லவன் இல்ல”

“ஓ ஒருவேளை நல்லவன் எவன் கூடயாவது எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகியிருந்தா?”

பிரசன்னா முகத்தை இறுக்கமாக்க, “சொல்லுங்க மாமா?” என்றாள்.

“என்ன செஞ்சிருப்பேன்னு தெரியலை, ஆனா அப்பவும் நீ என் வைஃபாதான் ஆகியிருப்ப. ஒரு நல்லவனைத்தான் நீ கட்டியிருக்க” என்றான்.

“உங்க ஆட்டிடியூட் ரொம்ப மோசம். இதைதான் நான் வெறுக்கிறேன். பேச நினைச்சா கூட கோவம் வர்ற மாதிரியே பேசுறீங்க. ரொம்ப கொடுமை என்ன தெரியுமா? நமக்கு ரொம்ப பிடிச்சவங்க நமக்கு பிடிக்காத மாதிரி இருக்கிறதுதான். என்னை நிம்மதியா இருக்க விடுங்களேன் ப்ளீஸ்” என்றாள்.

 திட்டுவாள், சண்டையிடுவாள் சமாளிக்கலாம் என இருந்தவனுக்கு பிருந்தாவின் இந்த விலக்கி நிறுத்தும் பேச்சை சமாளிக்க முடியவில்லை. அவள் மீதும் கோவம், அவளை சரிகட்ட இயலாத தன் மீதும் கோவம். இயலாமையில் அமைதியாக எழுந்து சென்று விட்டான்.

மனம் முழுதும் பிருந்தா பிருந்தா பிருந்தா மட்டுமே இருக்க வழக்கமான பயிற்சிகளை அனிச்சை செயல் போல செய்து கொண்டிருந்தான். அவளை தாண்டி எதுவும் கவனத்தில் பதிய மறுத்தது.

‘இதுவா நான் ஆசை பட்டது? இரவில் என்ன சொல்லி விட்டாள்? படுக்கையில் எனை அறியாது கூட காயம் செய்து விடக்கூடாது என எத்தனை கவனமாக அவளை கையாள்வேன்?

‘அப்படிப்பட்ட என்னை ஏதாவது வைத்து மிரட்டி படுக்கைக்கு அழைத்துக் கொள் என்றாளே…’ அந்த சொல் அவனது உள்ளத்தை கூறு போட்டுக் கொண்டிருந்தது.

வியர்வை பெருகி வழிய இன்னும் உடலை வருத்தினான். அந்த பக்கமாக வந்த விஜய் பார்த்து விட்டு, “டேய்!” என அதட்டி அழைக்க, கரலா கட்டையை தரையில் வைத்து விட்டு நின்றவனுக்கு மூச்சு வாங்கியது.

அங்கிருந்த அவனது துண்டு எடுத்து தம்பியின் முகத்தில் வழிந்த வியர்வையை ஒற்றி எடுத்தவன்அவனது கழுத்தின் பின் பக்கம் துடைக்க போக அண்ணனை மறுத்து அவனே துடைத்துக் கொண்டான்.

“என்ன கோவம் உனக்கு? அதான் பிருந்தாவ அழைச்சிட்டு வந்திட்டியே. நீ செய்றது நடக்கிறது பார்த்து அவளுக்குத்தான் கோவம் வரணும்” என்றான் விஜய்.

“போ இங்கேர்ந்து உன்னை ஒண்ணும் நான் கூப்பிடல” என எரிந்து விழுந்தான்.

“அவ கோவப்பட்டா பதிலுக்கு இப்படி உன்னை டார்ச்சர் பண்றது விட்டுட்டு அவளை எப்படி இம்ப்ரெஸ் செய்றதுன்னு யோசி. உன் பிரச்சனை வேறடா, நான் இல்ல வேற யார் நினைச்சாலும் இதை சரி செய்ய முடியாது. நீ.. நீ மட்டும்தான் சரி செய்துக்க முடியும். போ உன் வைஃப் மனசுல இடம் பிடிக்கிற வழிய பாரு. போடா” என்ற அண்ணனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

“போடா!” சிரித்துக் கொண்டே சென்று விட்டான் விஜய்.

பிரசன்னா அறைக்கு செல்லும் போது தயாராகி அறையை விட்டு வெளியேறியிருந்தாள் பிருந்தா. நிர்மலா கணவருடன் மகளை பார்க்க வந்திருந்தார்.

ஏன் வந்தேன் என்ற காரணத்தை எல்லாம் பிருந்தா சொல்லவில்லை. கெஞ்சி அழைத்தார், வந்துவிட்டேன் என அம்மாவிடம் சொல்லி விட்டாள். கேசவனுக்கு காரணமே தேவையில்லை, மகள் புகுந்த வீடு வந்து விட்டாள், அது போதும் என இருந்தார்.

ஹால் வந்த பிரசன்னா அவர்களை வரவேற்று விட்டு அத்தையை உர் என பார்த்தான்.

“அதான் என் பொண்ணு வந்திட்டாளே இங்க, அப்புறம் என்ன பிரசன்னா? நீயா பேசி அவ சமாதானம் ஆனாதானே சரியா இருக்கும்?” எனக் கேட்டார் நிர்மலா.

இன்னும் அவன் முகம் இறுக்கம் குறையாமல் இருக்க நிர்மலாவுக்கு கண்கள் கலங்கி விட்டன.

 பிருந்தா கணவனை முறைக்க, அத்தை அருகில் வந்து, “இருக்கிற பிரச்சனை போதாதுன்னு நீங்க வேற… உங்க பொண்ணுன்னுதானே ஆசையா கட்டினேன், அப்ப நீங்க எனக்குதானே சப்போர்ட் பண்ணனும்? பொண்ணு கூட இருக்க ஆசைன்னா இங்க வந்து இருக்கணும், அங்கேயே வச்சுகிட்டு என்னை போட்டு படுத்தினது சரியா?” என தன்மையாக கேட்டான்.

அவர் அவன் செய்ததை குற்றம் என சொல்ல, “உங்க பொண்ணே நம்ப மாட்டேங்குறா நான் அவளை…” என்றவன் சுற்றிலும் பார்க்க, சோபாவில் அமர்ந்திருந்த அரங்கநாதன, கேசவன் இருவரும் இவனையே பார்க்க, உள் ஹால் வாயிலில் கங்கா நின்றிருக்க டைனிங் ஹாலில் அமர்ந்திருந்த விஜய், பாவனா இருவரும் கூட இவனைத்தான் கவனித்திருந்தனர்.

பிருந்தா முகத்தை பிரசன்னா ஏறிட அவள் இவனை தவிர்த்து தன்னருகில் நின்றிருந்த ஆழினியின் சீருடையை சரி செய்வது போலவும் அவள் தலையை சரி செய்வது போலவும் பாவித்து நின்றிருந்தாள்.

“என்னவோ அவளை தவிர யாரையும் என் லைஃப் பார்ட்னரா நினைக்க முடியலை. பிருந்தாகிட்டு கேட்டு அவளா ஒத்துப்பான்னு நம்பிக்கையும் இல்ல எனக்கு. முன்னாடியே அபினேஷ் பத்தி சொன்னாலும் கல்யாணம் நிக்கும், ஆனா நான் மாப்ள ஆக மாட்டேன்தானே? அதான் அப்படி செஞ்சிட்டேன்… எனக்கொன்னும் தப்பா தெரியலை. உங்க பொண்ணை என்னை தவிர எவனாலயும் நல்லா பார்த்துக்க முடியாது. ஆளாளுக்கு கொலை குற்றவாளி மாதிரி என்னை பார்த்துகிட்டு…” என்றவன் பிருந்தாவின் அருகில் வந்து நின்றான்.

அவள் ஆழினியை விட்டு அவனிடமிருந்து இடைவெளி ஏற்படுத்தும் நோக்கத்துடன் பின்னால் தள்ளி நிற்க, “சும்மா அந்த நேர கோவத்துல ஒரு சவால் விட்டேன். அந்த சவாலே நீ என் மனசுல இருந்ததாலதான். எனக்கும் இருந்தது உன்கிட்ட தோத்திட கூடாது, உன் வாயால சொல்ல வைக்கணும் அப்படியெல்லாம் இருந்தது. ஆனா அப்படி ஒரு மண்ணும் இல்ல, எனக்கு நீ வேணும் இல்லைனா என் வாழ்க்கைல வேற பொண்ணே இல்லைனு அன்னிக்கு அந்த அபினேஷ் கூட உன்னை…” என்றவன் பின் கழுத்தை தேய்த்து விட்டுக் கொண்டு கொஞ்சம் நிதானித்தான்.

“என் பக்கத்துல இருக்க வேண்டியவ எப்படி அப்படினு அவ்ளோ கோவம் வந்தது. உன்கிட்ட சொல்லி புரிய வைக்க தெரியலை, அதெல்லாம் வரலைடி எனக்கு. என் சேலஞ்சுக்காகத்தான் எல்லார் முன்னாடியும் உன்னை உன் வாயால என்னை கட்டிக்க சம்மதம் சொல்ல சொன்னேன்னு நினைக்கிறதானே?” என அவன் கேட்க அவனையே பார்த்துக் கொண்டு அழுத்தமாக நின்றிருந்தாள் பிருந்தா.

தங்களை கவனித்துக் கொண்டிருந்த அனைவரையும் ஒரு முறை பார்த்தவன், “நல்லா கேட்டுக்கோங்க, ஒரு வருஷம் முன்னாடி இவகிட்ட இவ வாயாலேயே என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ல வைக்கிறதா சேலஞ் பண்ணியிருந்தேன். அதுக்குத்தான் மேரேஜ்க்கு கேட்கும் போது இவ சொல்லணும்னு நான் சொன்னதா இவ நினைக்கிறா. எல்லார் முன்னாடியும் சொல்ல வச்சிட்டேன்னு நினைக்கிறா…” என்றவன் பிருந்தாவை தீர்க்கமாக பார்த்தான்.

“நானும் எல்லார் முன்னாடியும் சொல்றேன். நிஜமா அதுக்காக உன்னை சொல்ல சொல்லலை. எனக்கு உன் சம்மதம் வேணும்னு இருந்தது. நீ சம்மதம்தான் சொல்வேன்னு தெரிஞ்சாலும் அந்த வார்த்தை எனக்கு தேவையா இருந்தது. நம்பினாலும் நம்பாட்டாலும் அதுதான் நிஜம்” என்றான்.

புரிந்தும் புரியாமலும் மற்றவர்கள் குழம்பினாலும் எதுவும் தலையிடாமல் அமைதியாக இருந்தனர்.

“எல்லார் மத்தியிலும் சொல்லிட்டேன் போதுமா? எனக்கு ஒரு வெட்கமும் இல்ல, நான் உன்னை லவ் பண்ணினேன், உன்னை மிஸ் பண்ணிடவே கூடாதுன்னு எனக்கு நானே பிடிவாதம் பண்ணிக்கிட்டேன், நடத்திக்கிட்டேன்” சத்தமாகவே சொன்னான்.

“அதுல நிறைய குழப்பம் வந்திருக்கலாம், அத்தைக்கு அப்படி ஆகும்னு கொஞ்சமும் யோசிக்கல நான். எனக்கு நீ வேணும் அது மட்டும்தான். போதுமா விளக்கம்?” கோவமாக அவன் முடிக்க, “டேய்!” என அதட்டினார் அரங்கநாதன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement