Advertisement

மெல்ல உன் வசமாகுறேன் -1

அத்தியாயம் -1(1)

புதன் கிழமை காலையில் அவசரமில்லாமல் எழுந்து சூடான காபியோடு நாளிதழை படித்துக் கொண்டிருந்தாள் பிருந்தா. அவளுக்கு பிடித்தது போலவே கொஞ்சம் சர்க்கரை குறைவான ஸ்டராங் கசப்பு காபியை மிடறு மிடறாக ரசித்துக் கொண்டே அவர்களின் கல்வி அறக்கட்டளையின் சார்பில் அன்று கொடுத்திருந்த விளம்பரம் வந்திருந்த பக்கத்தில் கவனம் வைத்தாள்.

பிருந்தாவின் தந்தை கேசவனுக்கு சொந்தமாக பஞ்சு ஆலை இருக்க அவரது ஒரே மகளான இவள்தான் இப்போது நிர்வாகத்தை கவனித்துக் கொள்கிறாள். அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மேலே மதிப்பெண்கள் பெற்றால் அவர்களின் அறக்கட்டளையின் உதவி மூலம் மேற்படிப்பு பயில முடியும்.

வருடத்திற்கு ஐந்து மாணவர்களுக்கு பிருந்தாவின் தாய் மாமா அரங்கநாதன் அவர்களின் பொறியியல் கல்லூரியில் இடம் கொடுக்க படுவதாக இப்போது கல்லூரி நிர்வாகத்தை பார்க்கும் அவரின் இளைய மகன் பிரசன்னா சொல்லியிருக்க அதன் பொருட்டு இந்த விளம்பரம்.

“அந்த பரங்கிமலையோட பேர் சின்னதா இருக்கே… நொட்டம் சொல்வானோ?” என வாய் விட்டு அவளை அவளே கேட்டுக் கொள்ள சரியாக அதே நேரம் அவளது கைபேசியில் அழைத்தான் அவளால் பரங்கிமலை என பட்டப் பெயர் சூட்டப் பட்டிருக்கும் பிரசன்னா.

திரையிலும் பரங்கிமலை எனும் பெயரே மின்ன முகத்தில் அலட்சியம் காட்டிக் கொண்டே ரிங் முடியும் தருவாயில் அழைப்பை ஏற்றவள் சோம்பேறித்தனம் நிறைந்த குரலில் “ஹலோ” என்றாள்.

உடற்பயிற்சி கூடத்தில் வியர்வை வழிய நின்றிருந்த பிரசன்னாவுக்கு அவளது ஹலோ காதையும் மூளையையும் குளிர செய்வதாக இருந்தது. நல்ல உயரத்தில் உடற்பயிற்சி செய்யும் உடம்புக்கு சொந்தக்காரன் என்பதை பறைசாற்றுவது போல இருந்தான். அவனை பற்றி தெரியாதவர்கள் யாரும் பார்த்தால் ‘யாருக்கும் பாடிகார்ட் போல இவன்’ என்றே நினைத்துக்கொள்வர்.

“என்னடி அத்தை பெத்த தங்க ரதமே! ஒரு பக்க விளம்பரம் செய்ய கூடவா காசில்லாம போய்டுச்சு உனக்கு? என் காலேஜ்ல அஞ்சு சீட்டுக்கு எவ்ளோ டப்புன்னு தெரியுமா உனக்கு?” எடுத்த எடுப்பில் நக்கலும் கிண்டலுமாக பேசினான்.

“சொல்ல வேண்டிய மேட்டர்தான் வந்தாச்சுல்ல? முழு பக்கம் முக்கா பக்கம்னு எல்லாம் நாம பேசிக்கல” என்றாள்.

“என் பேர் தம்மாந்துண்டு போட்டுட்டு உன் பஞ்சாலை பேரையும் ட்ரஸ்ட் பேரையும் மட்டும் பெரிய ஃபாண்ட் சைஸ்ல போட வச்சிருக்க. என்ன சுய விளம்பரமா?” இன்னும் நக்கல் தொனியை அவன் கைவிடவில்லை.

“நீங்க தனியா ஏதாவது சாதிச்சு பேர் வாங்குங்க. பாராட்டி நானே நாலு பக்கத்துக்கு விளம்பரம் போட்டு விடுறேன். என் மாமா நிழல்ல குளிர் காயாதீங்க”

“உன் மாமாவா அஞ்சு சீட் ஃப்ரீயா தந்தார். இந்த ஆஃபர் நான் தந்தது. அட்லீஸ்ட் என் அப்பா பேராவது பெருசா போட்ருக்கலாம்… போடல. இப்போ என்ன பண்றது? ஹ்ம்ம்…” என யோசனையாக பிரசன்னா இழுக்க,

‘அச்சச்சோ வில்லங்கமா ஏதோ சொல்லப் போறான் இவன்!’ என மனதிற்குள் நினைத்தாள் பிருந்தா.

அவளின் நினைப்பை பொய்க்க வைக்காகதவாறு, “அஞ்ச நாலா குறைச்சுடுறேன்” என அதிராமல் குண்டை தூக்கி போட்டான்.

“விளையாடுறீங்களா? நம்ப வச்சு ஏமாத்தாதீங்க?”

“நான் ஏன் ஏமாத்துறேன். ஒரு சீட்க்கு நீயே பே பண்ணிடு” என்றான்.

இங்கே பிருந்தாவுக்கு கோவமான மூச்சுகள் வந்தாலும் தன் கோவத்தால் எதுவும் இவனிடம் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்து, “சரி சரி, ஏதோ மிஸ்டேக் ஆகிப் போச்சு. நாளைக்கு ஃபர்ஸ்ட் பேஜ்லேயே விளம்பரம் செய்திடுறேன். ஆனா பாருங்க, இன்னிக்கு ஏற்கனவே விளம்பரம் கொடுத்தாச்சு. ஃபர்ஸ்ட் பேஜ்ல கொடுக்கும் போது அஞ்சு சீட்னா நல்லாவா இருக்கும்?” என கேள்வியாக நிறுத்தினாள்.

“அதுக்கு?”

“ஆர்ட்ஸ் காலேஜ்லேயும் ஏதாவது சீட்ஸ் அலாட் பண்ணிக் கொடுங்க. அஞ்சு பத்துனு அல்பமா…” பிருந்தா சொல்லிக் கொண்டிருக்க,

“பர்டன்” கடினக் குரலில் சொன்னான் பிரசன்னா.

குரலை செருமிக் கொண்டவள், “நான் சொல்லலை, வேற யாரும் அப்படி சொல்லிடக் கூடாதுல்ல? அதுக்குத்தான்… என்ன நமக்குள்ள பேரம்? ஆர்ட்ஸ்ல இருக்க ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்க்கும் ரெண்டு ரெண்டு சீட் அலாட் பண்ணி தாங்க” என்றாள்.

“அட்ரா சக்கை! ஏது அறக்கட்டளை நீ வச்சு நடத்துறியா இல்ல நாங்களா?”

“முதல் பக்கத்துல விளம்பரம் வேணும்னா இதெல்லாம் செஞ்சாதான். இல்லை ஒரு சீட் குறைச்சுக்குறேன்னு நீங்க சொன்னா நாளைக்கே அஞ்சு சீட்னு தப்பா போட்டுட்டோம், ஒரு சீட் குறைச்சிட்டாங்கனு இன்னொரு விளம்பரம் கொடுத்திடுறேன். என்ன இருந்தாலும் பேப்பர்ல பொய் நியூஸ் தரக் கூடாது பாருங்க”

“நீ பொழைச்சுக்குவ. ஆமாம் அதென்ன எதுவும் முறை இல்லாம மொட்டையாவே பேசுற என்கிட்ட. என் அண்ணன்கிட்ட பேசுறப்ப மட்டும் விஜய் மாமான்னு கூப்பிடுறதானே? முன்னாடி என்னையும் இப்படித்தான் கூப்பிட்டதா ஞாபகம்”

பிருந்தாவும் பிரசன்னாவை மாமா எனதான் அழைத்துக் கொண்டிருந்தாள். சமீப காலமாக சில பல மனக் கசப்புகள், அதனை கொண்டு மாமா என விளிப்பதை நிறுத்தியிருந்தாள். என்னவோ இருவருக்கும் ஏகத்துக்கும் முட்டிக்கொள்ள யாருமில்லாமல் இவர்கள் இருவர் மட்டுமே இருக்கிறார்கள் என்றால் கோவத்தில் ஒருமையில் கூட பேசி விடுவாள்.

“என்ன கேட்டுட்டு இருக்கேன், சைலன்ட்டா இருக்க?” பிரசன்னா விடாமல் கேட்டான்.

தெரிந்தும் கேட்டால் என்ன சொல்வது என பிருந்தா எண்ணிக் கொண்டிருக்க, அபினேஷ் வந்தான் இன்னொரு அழைப்பில்.

சட்டென முகம் மலர்ந்தவள், “அபி கூப்பிடுறாங்க, நான் அப்புறம் பேசுறேன்” என சொல்லி அவனது அழைப்பை துண்டித்து விட்டு அவளுக்கு நிச்சயம் செய்யப் படப் போகும் அபினேஷின் அழைப்பை ஏற்றாள்.

தன் காதோரம் இரண்டும் ஜிவ் என சூடாவதை உணர்ந்த பிரசன்னா கழுத்தை சுற்றிக் கிடந்த வெள்ளை நிற துவாலையை சுருட்டி விட்டெறிந்தான். அங்கிருந்து வெளியேறி தன் அறைக்குள் நுழைந்தவன் வேகமாக குளியலறை சென்று ஷவரை திறந்து விட்டு நீருக்கடியில் நின்று கொண்டான்.

கண்கள் மூடினாலே பிருந்தா வந்து நின்று கொண்டு கேலியாக கெக்கரிப்பது போலவே இருந்தது. ‘தோல்வியா? எனக்கா?’ என செருக்கோடு நினைத்தவன் கண்கள் திறந்து நிமிர்ந்து நின்றான். முகம் மலர கண்கள் ஒளிர உதடுகளில் அலட்சிய புன்னகை. மிக பொறுமையாக குளித்து தயாராகி உணவு மேசைக்கு வந்தான்.

பிரசன்னாவுக்கு அவனது தாய் கங்கா உணவு பரிமாற, “எங்கம்மா மத்தவங்க எல்லாம்? அதுக்குள்ள கிளம்பியாச்சா?” என விசாரித்தான்.

“ஆழிய ஸ்கூல் விட போயிருக்கார் உன் அப்பா, அப்படியே பிருந்தா நிச்சய வேலை ஏதோ இருக்குனு அவர் தங்கச்சி வீடு வரைக்கும் போயிட்டு வர்றதா சொல்லியிருக்கார். விஜய்யும் பாவனாவும் இப்போதான் கிளம்பி போனாங்க” என விவரம் தந்தார்.

அரங்கநாதன் கங்கா தம்பதிகளின் மூத்த மகன் விஜய், கலைக் கல்லூரியின் பொறுப்பு அவனுடையதுதான். அவனது மனைவி பாவனா, சிறார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறாள். இவர்களுடையது காதல் திருமணம். பாவனாவை பிரசன்னாவுக்கு பிடிக்காது. அவளின் தந்தை ரமணன் முதல் திருமணம் செய்து ஒரு மகன் மகள் இருந்த நிலையில் திருமணம் செய்யாமல் ஒரு பெண்ணுடன் வாழ்ந்து அவர்களுக்கு பிறந்தவள் பாவனா.

விஜய், பாவனா திருமணம் முடிந்த போதே வீட்டில் எதிர்ப்புதான். ஒரு நாள் கூட வாழாமல் சில சூழ்ச்சிகளின் விளைவாக பிரிந்தும் விட்டனர். அப்போது அவசரம் அவசரமாக அரங்கநாதன் தன் தங்கையின் மகள் பிருந்தாவை விஜய்க்கு மணமுடிக்க ஏற்பாடு செய்ய விஜய் மறுத்து வீட்டை விட்டே சென்று விட்டான்.

திருமணம் தடை படாமல் நடக்க உடனடியாக பிரசன்னாவை பிருந்தாவுக்கு மாப்பிள்ளை ஆக்கினார் அரங்கநாதன். ஆனால் அனைவர் முன்பும் முடியாது என மறுத்து விட்டாள் பிருந்தா.

அதுவரை பிருந்தா மீது எந்தவித ஈடுபாடும் இல்லாமல் இருந்த பிரசன்னாவுக்கு லேசாக அவள் மீது ஈர்ப்பு ஏற்பட துவங்கியது.

ஆனாலும் தன்னை வேண்டாம் என மறுத்தவள் தனக்கும் தேவையில்லை எனதான் வீம்போடு இருந்தான். எப்போதுமே அவனை மீறி பிருந்தா அவனை ஈர்க்கவே செய்தாள். ஆசையை மறைத்தே வைத்திருந்தவனுக்கு அதனை செயல் படுத்தும் எண்ணம் இல்லை.

‘என்ன இருந்தாலும் என்னை வேணாம்னு சொன்னவ, நானா போய் பேசி நடத்திக் கொள்வதா?’ என்ற எண்ணமே அவனுள் பிரதானமாக இருந்தது.

மூன்று வருடங்கள் வெளிநாட்டில் வேலை பார்த்து திரும்பி வந்த விஜய் ஒரு நாள் பாவனா மற்றும் அவன் இரண்டரை வயது பெண் ஆழினியோடு வந்து நின்றான். திருமணத்திற்கு பின் ஒரு நாள் கூட வாழாமல் குழந்தை எப்படி எனதான் அனைவரும் அதிர்ந்தனர். பின்னர்தான் ஏன் அவசர அவசரமாக திருமணத்தை நடத்திக் கொண்டான் விஜய் என குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.

அதிலிருந்து பிரசன்னாவால் பாவனாவை நல்ல விதமாக பார்க்க முடியவில்லை. அவளின் தாய் ஷைலஜாவும் ரமணனை விடுத்து வேறு திருமணம் செய்திருக்க பாவனாவின் பிறப்பை கொண்டு அவளை ‘அண்ணி’ என ஏற்காமல் துச்சமாக நினைத்தான்.

அப்படி ஒரு நாள் பிருந்தாவிடம் சொல்லிக் கொண்டிருக்க அவள் கோவப்பட்டு இவனை திட்டி விட்டாள்.

அப்போது சவால் போல, ‘உன் வாயாலேயே என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ல வைக்கிறேன்’ என சொல்லியிருந்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement