Advertisement

அத்தியாயம் -10(2)

“என்னடா பண்ணி தொலைச்ச அவளை? இப்படி கிடக்காளே!” என பதறினார் கங்கா.

பிரசன்னா அம்மாவுக்கு எதுவும் பதில் சொல்லாமல், “டாக்டர்கிட்ட போலாமா?” எனக் கேட்டான்.

கங்கா மருமகள் கன்னம் தொட்டு எழுப்ப விஜய் தண்ணீர் தெளிக்க முகத்தை சுருக்கி கண்கள் திறந்தவள் அலங்க மலங்க பார்த்து விட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.

“என்னடி ஆச்சு? இவன் என்ன பண்ணினான் உன்னை?” என மருமகளிடம் கேட்டார் கங்கா.

அவள் பேசவே திணறுவது போலிருக்க, “தண்ணி கொஞ்சம் கொடு, புள்ள பேசவே முடியாம இருக்கு” என்றார் அரங்கநாதன்.

தண்ணீர் புகட்டிய கங்கா மீண்டும் அவளிடம் விசாரிக்க, “எனக்கு வாமிட் வர்ற மாதிரி இருக்குன்னு சொன்னேன், சொல்ல சொல்ல கேட்காம வாயில ஊத்தி விட்டுட்டார் டீய. வேணாம்னு திரும்பவும் சொன்னேன் கப்ப போட்டு உடைச்சிட்டார். அப்புறம்… அப்புறம்…” என திணறினாள் பிருந்தா.

“அப்புறம் என்னடி ஆச்சு?” கங்கா கேட்க பிரசன்னா அமைதியாகவே இருக்க, “நினைப்பு இல்ல அத்தை” என்றாள்.

“கிராதகம் புடிச்ச பய இவன். கொஞ்ச நேரம் முன்னாடிதான் உன் அம்மா போன் பண்ணி கேட்டா. ஏதாவது ஒண்ணுன்னா என்ன பதில் சொல்றது? உன்னை யாரு இப்பவே இங்க வர சொன்னது?” என அங்கலாய்த்தார் கங்கா.

அரங்கநாதனும் “என்னடா இதெல்லாம்?” என கண்டிப்போடு கேட்க, விஜய் முறைக்க பதில் சொல்ல முடியாமல் மௌனியாகவே இருந்தான் பிரசன்னா.

“நீ ரெஸ்ட் எடும்மா, உன் அம்மாகிட்ட இதெல்லாம் சொல்லாத. பயந்து போய்டுவா. இனிமே இப்படி ஏதாவது செஞ்சா என்கிட்ட சொல்லு பார்த்துக்கிறேன்” என மருமகளிடம் சொன்ன அரங்கநாதன், “மூளைய அடகு வச்சிட்டான் ராஸ்கல்!” என மகனை திட்டி விட்டு சென்றார்.

கங்காவும் மருமகளிடம் ஆறுதலாக, “பயப்படாத கண்ணு, நாங்க இருக்கோம்” என சொல்லி செல்ல, “இடியட்!” என தம்பியை திட்டி சென்றான் விஜய்.

வாயை குவித்து மூச்சு விட்ட பிரசன்னா, அவளை பார்த்து, “பயந்திட்டேன் பிருந்தா, சும்மா விளையாடதான செஞ்சேன். என்னடி ஆச்சு உனக்கு? மதியம் சாப்பிடலையா? இப்போ ஓகே தானே?” என அக்கறை ஒழுக கேட்டான்.

படக் என அமர்ந்து கொண்டவள், “பாத்ரூம்ல உருள வச்சிட்டீங்க, ச்சே… போய் குளிச்சிட்டு வர்றேன்” என சொல்லி எழுந்து மாற்றுடைகள் எடுத்துக் கொண்டு, “மயக்கம்னா கொஞ்சமா தண்ணிய தெளிப்பாங்கனு பேரு. அண்டா தண்ணிய தலையில கவுக்குறான்” என அவன் காதில் விழும் படியே முணு முணுத்து விட்டு குளியலறை சென்று விட்டாள்.

அதிர்ச்சி குறையாமல் பார்த்திருந்தவன் கோவத்தோடு அறைக்குள் நடை போட்டு கொண்டிருக்க தலைக்கு குளித்து வந்தாள் பிருந்தா.

இவனை கண்டு கொள்ளாமல் திரும்பி நின்று ஆடை மாற்றிக் கொண்டவள் தலை துவட்டி கூந்தலை உலர்த்த ஆரம்பிக்க, “சீப் ட்ராமா எல்லாம் எங்கேர்ந்து கத்துகிட்ட?” என சீறினான்.

அவன் பக்கம் திரும்பாமலே, “இதை விட சீப் பிளே எல்லாம் செய்ற என் புருஷன்கிட்டேர்ந்துதான்” என்றாள்.

“பிருந்தா!” என அதட்டினான்.

“என்ன தப்பா சொல்லிட்டேன். நிஜம்தானே… கல்யாணம் எப்படி செஞ்சுக்கிட்டீங்க என்னை? அதுக்கு எல்லார்கிட்டேயும் என்னை முன்னாடியே பிடிச்சிருந்தது, லவ்னு பொய் காரணம் வேற. மயக்கம் போடாம என்ன செஞ்சிருக்கணும் நான்? ஓ உங்க கூட ஜலக்கிரீடை பண்ணியிருக்கணுமோ!”

“ஏய் ஏய் நீ பாட்டுக்கும் பேசிட்டு போகாத. நிஜமா நான் உன்னை லவ் பண்ணினேன்” என்றான்.

சட்டென திரும்பி அவனை பார்த்தவளின் பார்வை ஏளனமாக இருந்தது.

“பிராமிஸ்டி, லவ்தான்” என்றான்.

“லவ்க்கு மீனிங் தெரியுமா உங்களுக்கு?” எனக் கேட்டாள்.

“உனக்கு ரொம்ப தெரியும் போலயே… நீயே சொல்லு”

“அன்பு மரியாதை நம்பிக்கை புரிதல் விட்டுக் கொடுக்கிறதுன்னு எல்லாமே பரஸ்பரம் இருக்கிறது. எனக்கு பிடிச்சிருக்கு, உன்னை பத்தி கவலையில்லை, என்ன திருட்டுத்தனம் செஞ்சாவது கல்யாணம் பண்ணிப்பேங்கிறது இல்ல”

“கை நீட்டக் கூடாதுன்னு பார்க்கிறேன். இன்னொரு முறை திருட்டுதனம் அது இதுன்னு சொன்ன… சும்மா இருக்க மாட்டேன்” என்றான்.

“பேசி பேசியே நிஜமா மயக்கம் வந்திடும் எனக்கு” என்றவள் தலைவலி தைலம் எடுத்து நெற்றியில் தேய்த்துக் கொண்டு படுத்து தலைமுடியை தலைக்கு மேல் விரித்து போட்டு போர்வை எடுத்து போர்த்தி கண்களை மூடிக் கொண்டாள்.

கோவம் ஒரு பக்கம் அவளுக்கு முடியவில்லையே என்ற வருத்தம் மறு பக்கம் என போட்டி போட அவனால் கோவத்தை காட்ட இயலவில்லை.

குளித்து வந்தவன் அவளிடம் வேறு எதுவும் பேசாமல் திரை சீலைகளை இழுத்து விட்டு அறையை வெளிச்சம் இல்லாமல் செய்து வெளியே சென்று விட்டான்.

ஹாலில் அரங்கநாதன் இருக்க பத்து நிமிட நேரம் அறிவுரை சொன்னார். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருந்தான். அவர் செல்லவும் கங்கா பிடித்துக்கொண்டார்.

“ம்மா… நிப்பாட்டு. அவளுக்கு தலைவலி போல. போய் பாரு, சூடா ஏதாவது குடிக்க கொடு. பசிக்குதா தெரியலை, சாப்பிடவும் ஏதாவது எடுத்திட்டு போ” என்றான்.

கங்கா அவனை முறைக்க, “நான் கொடுத்தா சாப்பிட மாட்டா” என்றான்.

“வாந்தி வர்ற மாதிரி இருக்குன்னாளே?”

“நான் கொடுத்தா வாந்தி வரும் பேதி வரும் எல்லாம் வரும் அவளுக்கு. வள வளக்காம போ. தூங்கிட போறா” என அவன் சொல்ல அவரும் சென்று விட்டார்.

மருமகளிடம் எப்படி வந்தாய் என எதுவும் விசாரிக்காமல் அவள் வயிற்றை மட்டும் கவனித்தார் கங்கா.

“இது போதும் அத்தை, நைட் எழுப்பாதீங்க, இனி காலையிலதான் எழுந்திரிப்பேன்” என சொல்லி விட்டாள் பிருந்தா.

டிவி ஓடிக் கொண்டிருக்க கொஞ்சமும் அங்கு கவனிக்காமல் பார்வையை மட்டும் அங்கு வைத்துக்கொண்டு பிருந்தா பற்றிய யோசனையில் இருந்தான் பிரசன்னா. அவனுக்கு இன்னும் நான் என்ன தவறு செய்தேன் என்ன செய்கிறேன் என்ற எண்ணம்தான்.

‘நல்லாத்தானே பார்த்துக்கிறேன் அவளை, ஏன் இப்படி கோவ படுறா? என்ன வேணும் அவளுக்கு?’ எனதான் யோசனை செய்திருந்தான்.

அவன் பக்கத்தில் வந்தமர்ந்த கங்கா, “சொல்லு, என்ன சொல்லி அவளை இங்க அழைச்சிட்டு வந்த?” என விசாரணை செய்தார்.

சுருக்கமாக அவன் விஷயத்தை சொல்ல, “வெட்கமா இல்லடா உனக்கு?” எனக் கேட்டார்.

“போம்மா இந்த பொம்பளைங்க எல்லாம் ஏன்தான் இப்படி இருக்கீங்களோ? அவளும் அப்படித்தான் புரிஞ்சுக்கவே மாட்டேங்குறா. அவளுக்காகத்தான அந்த பொண்ணு ஆனந்திய மன்னிச்சு விட்ருக்கேன்? வச்சு வாழதானே கூட்டிட்டு வந்திருக்கேன், ஏன் வில்லன் மாதிரியே பார்க்குறீங்க என்னை?”

“அப்ப நீ செஞ்ச எதுவும் தப்பு இல்லையா?”

“ஒரு வேளை அவளுக்கு என்னை பிடிக்காம போயிருந்தா நீங்க எல்லாம் கோவ படுறதுல நியாயம் இருக்கு. அவளுக்கும் என்னை பிடிச்சிருக்கு, அப்புறம் என்னம்மா?”

“கண்ண கட்டிகிட்டு எல்லாமே இருட்டாதான் இருக்குன்னா நான் என்ன செய்ய? ஆனா ஒண்ணு சொல்லிட்டேன்டா. எதுவும் தானா கனியனும், தடி வச்சு அடிச்சு கனிய நினைச்சா நீடிக்காது!” என எச்சரிக்கை போல சொல்லி விட்டு சென்று விட்டார்.

அறைக்கு சென்றவன் பிருந்தா உறங்குவதை பார்த்து விட்டு மீண்டும் வெளியே வந்து விட்டான். ஆழியோடு சிறிது நேரம் விளையாடி முன் நேரமாகவே உணவை முடித்துக் கொண்டு உறங்க வந்தான்.

வெகு நாட்களுக்கு பின் தன்னருகில் மனைவி இருப்பதில் மனம் அமைதியாக உணர படுத்து அவளை அணைத்துக் கொண்டான். அடுத்த நொடி முழங்கையால் அவனை இடித்து தள்ளி விட்டாள் பிருந்தா.

எழுந்தமர்ந்தவன் “என்னடி செஞ்சாங்க இப்போ? ஓவரா சீன் போட்டு மிருகம் ஆக்காத என்னை” என கோவமாக கத்தினான்.

“உங்க கூட வர்றதுக்குதான் ஒத்துகிட்டேன், இதுக்கெல்லாம் இல்லை” என்றாள்.

“இதுக்கெல்லாம்னா? புரியலை” கண்கள் சுருக்கி கேட்டான்.

“ஒண்ணும் புரியாத பச்ச மண்ணுதான் நீங்க”

“அந்த எண்ணத்தோட உன்னை தொடல. அப்படியே எனக்கு அந்த எண்ணம் வந்தா என்ன தப்பு? அதுக்கும் சேர்த்துதான் கல்யாணம்”

“உங்களை கல்யாணம் செய்தே ஆகணும்ங்கிற நிலைல நிறுத்தி வச்சு என்னை கல்யாணம் பண்ணிகிட்டீங்க. அது எனக்கு தெரிஞ்சப்புறம் கொஞ்சமும் உங்க செயலுக்காக மன வருத்தம் இல்லாம ஒரு சாரி கூட கேட்காம…” பிருந்தா முடித்திருக்கவில்லை.

“சாரி சாரி சாரி போதுமா?” எனக் கேட்டான்.

“சாரிங்கிற வெறும் வாய் வார்த்தை வேணாம் எனக்கு. இப்பவும் உணராமல் இப்போதைக்கு என்னை சமாதானம் செய்ய வாய் அளவுல கேட்குறீங்க சாரிய”

“என்னதான் டி பண்ணனும்?” எரிச்சல் அடைந்தான்.

“எதுவும் பண்ண வேணாம், பெட் ஷேர் பண்ணிக்க கூட ஏதாவது விஷயம் கிடைக்கும் உங்களுக்கு, அதை வச்சு மிரட்டி உங்க காரியத்தை சாதிச்சுகோங்க”

“பிருந்தா!” அதிகபட்ச அதிர்வில் அழைத்தான்.

அவனை வெறுப்பு கக்க பார்த்தவள் முதுகு காட்டி படுத்து விட்டாள்.

செயலற்று போய் அமர்ந்திருந்தான் பிரசன்னா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement