Advertisement

அத்தியாயம் – 9
காலை உணவு முடிந்து நவனீதன் தம்பதியுடன் ஆதியும் மதுவும் பேசிக்கொண்டிருக்க, ப்ரியா ப்ரசன்னமானாள்.
‘அல்டாப்பு ப்ரியா, இப்ப எதுக்கு வந்தா ?’, என்று மது யோசித்து முடிவதற்குள்,
ஆதியின் அருகே வந்தவள், அவன் கைப்பற்றி அருகிலேயே அமர்ந்து, கொஞ்சும் குரலில்,
“சோ சாரி ஆதி, பாட்டி பத்தி நியூஸ் கேட்டதும் எனக்கு ரொம்ப கஷ்டமாகிருச்சு. நீ இப்ப ஓக்கேவா ? “, என்று கேட்க, அவளைப் பார்த்து சிரித்தவன்,
“அங்கிள், இது ப்ரியா, சின்ன வயசிலர்ந்து இங்க வரும்போது என் ஃப்ரெண்ட். ப்ரியா,  நவனீதன் அங்கிள் தான் பாட்டியோட பேப்பர்ஸ் எல்லாம் செட்டில் பண்றாங்க. சங்கரி ஆன்ட்டி அவர் மனைவி. ஐ திங்க், மது உனக்கு தெரியும்”, என்று அறிமுகப் படுத்தினான்.
நவனீதன் புன்னகைத்து, “தனம்மாவை உனக்கும் சின்ன வயசிலர்ந்து தெரியுமாம்மா ?”, என்று கேட்க,
“ஹ… யாரு தனம்மா ?”, என்று திருப்பிக் கேட்டாள் ப்ரியா,
ஆதி, “என் பாட்டி பேருதான் தனம்.”, என்று சொல்லவும், சமாளித்து, “பாட்டின்னு கூப்பிட்டுதான் பழக்கம். வெரி ஸ்வீட் அவங்க. இல்ல ஆது ?”, என்று இளித்து வைத்தாள்.
‘ம்ம்… நோனா டின் கட்டினதெல்லாம் துடைச்சி போட்டா போல”, என்ற நினைப்பில் நக்கலாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள் மது.
“பாட்டியை உனக்கு ரொம்ப புடிக்குமா ப்ரியா ? பாட்டி உன்னை பத்தி ரொம்ப உயர்வா எங்கிட்ட கூட சொல்லிருக்காங்க.”, மது ப்ரியா போலவே கொஞ்சி கேட்க, இவள் கிண்டல் புரிந்து, ஆதி அவளை நோக்கி நெற்றியை சுருக்கி லேசாய் வேண்டாம் என்பது போல தலையசைத்தான்.
ப்ரியா என்ன பதில் சொல்வது என்று முழிக்க, சங்கரி “பாட்டி இறந்த அன்னிக்கு நீ ஊர்ல இல்லையாமா ? உன்னை பார்த்த ஞாபகம் இல்லையே.”, என்றார்.
“ஆமா ஆன்ட்டி, காலேஜ் எனக்கு கோயம்பத்தூர். இப்ப ஒரு வாரம் லீவ்ல வீட்டுக்கு வந்திருக்கேன். தெரிஞ்சதும் ஆதியைப் பார்க்க வந்துட்டேன். “
உதட்டை இழுத்து புன்னகை போல ஒன்றை அவர்களைப் பார்த்து சிந்தியவள், “ஆது.. ரொம்ப கஷ்டமா இருக்கா ? வெளிய கொஞ்சம் போய் ரிலாக்ஸ் பண்ணலாமா ? உனக்காக நான் வேற எந்த அப்பாயிண்ட்மெண்ட்டும் வெச்சிக்கலை.”
“ஆமா இல்லாட்டி பாவம் ஜனாதிபதி இவளை பார்க்க வந்திருப்பார்.”, மது முணுமுணுத்தது சங்கரிக்குக் கேட்க, வந்த சிரிப்பை அடக்க பாடுபட்டார்.
“ம்ம்… கொஞ்சம் வேலை இருக்கு ப்ரியா, லன்ச் வெளிய போகலாம்.”, என்றான் ஆதி.
“நான் இப்ப டயட்ல இருக்கேன் ஆது. பட் உனக்காக கம்பனி குடுக்கறேன். “
அவள் சொல்லவும், ஆதி மதுவின் புறம் திரும்பி, “நீயும் வரயா மது லன்சுக்கு ?”, என்று கேட்டான்.
“யாரும் பாட்டி பத்தி கேக்க வந்தா மது  இருக்கணும் இல்ல? இப்ப வெளிய வந்தா எப்படி?”, என்று ப்ரியா கேட்க,
“அதானே ஆதி, யாரும் விசாரிக்க வந்தா நீயும்  இருக்கணும். இப்ப லன்சுக்கு போயிருக்கன்னு சொன்னா நல்லாவா இருக்கும் ? நீயும் போகாத.”, வெள்ளந்தியாகக் கூறுவதுபோல, ப்ரியாவின் எண்ணத்தில் நீரை ஊற்றினாள் மது.
ப்ரியாவின் முகம் ஒரு நொடி இறுகி தளர்ந்ததை, அவள் அருகே இருந்த ஆதியைத் தவிர, எதிரே இருந்த மூவருமே பார்த்தனர்.
“லன்ச்தான, போயிட்டு ஒரு டூ அவர்ஸ்ல வந்துடுவேன்.”, ஆதி பதில் சொல்ல, மதுவின் மீதிருந்த எரிச்சலில் ப்ரியாவும்,
“மது, நீ கூட டயட்ல இருக்கறது பெட்டர். குண்டடிச்சிருக்க.”, என்று அக்கறையாக சொன்னாள் ப்ரியா.
“அது பரவாயில்லை ப்ரியா. சனிக்கிழமை சாவற மாதிரி இருக்கறதுதான் அழகுன்னா, எவனும் என்னை அழகுன்னு சொல்லவே வேண்டாம்.  என்னால எல்லாம் சாப்பாட்ட வேடிக்கை மட்டும் பார்க்க முடியாது உன்னை மாதிரி.”,  என்ற மது ஈ யென்று சிரித்து வைத்தாள்.
பெரியவர்கள் இருவரும் சுவாரசியச் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர் இந்தப் பேச்சுகளை.
“ஆது… பாரு மது  என்னை என்ன சொல்றான்னு.”, என்று ஆதியிடம் கொஞ்சிய வாறே கோள் சொல்ல, ஆதி மதுவை முறைத்தான்.
‘என்ன கொடுமை சரவணா”, என்று முனகியவாறே, “நான் சாப்பிட போறேன். பசிக்குது.”, என்று ஆதி முறைப்பைக் கிடப்பில் போட்டவள் இடத்தை காலி செய்தாள்.
“இப்பதான டிபன் சாப்பிட்டோம்”, என்று ஒரு நிமிடம் யோசித்த ஆதி, ப்ரியாவை வெறுப்பேற்ற சொல்லியிருக்கிறாள் என்று புரிந்து, “ நோனா, நீ இல்லாத குறையை உன் பேத்தி தீர்த்து வெக்கறா. ரெண்டு பேருக்கும் ப்ரியாவைக் கண்டா ஏன் இந்த காண்டோ ? சபரியத்தான் கேட்கணும்.”, என்று எண்ணிக் கொண்டான்.
சுப்பு எடுத்து வந்த ஜூசைப் பார்த்து, “இதுல சர்க்கரை போட்டீங்களா ? வெறும் பழம் மட்டுதானே ?”, என்று கேட்க,  சுப்பு பாவமாய், “ லெமன் ஜூஸ், எனக்கு தெரிஞ்ச மாதிரி, கொஞ்சம் உப்பு, சர்க்கரை போட்டு கலந்தேன்.முன்னாடி இதுதானேமா குடிப்பீங்க ?”
“ஓ…இப்ப உப்பு சர்க்கரை ரெண்டுமே சாப்பிடறதில்லை. வேண்டாம்.”, என்று திரும்பிக்கொண்டாள்.
சுப்பு முழித்தவர், ஆதியைப் பார்க்க, “குடுங்க அண்ணா நான் குடிக்கறேன்.”, என்று வாங்கிக்கொண்டான்.
‘இதென்ன இந்த பொண்ணு கொண்டு வந்ததை வேண்டாம்னு ஒரு சாரி கூட சொல்லாம முகத்த திருப்புது.’, என்று எண்ணிக்கொண்டனர்  நவனீதனும் அவர் மனைவியும், ஒரே பார்வையில்.
“நானும் உன் கூடவே உன் வேலை முடியற வரை வெயிட் பண்றேன் ஆதி. திரும்ப என்னை வந்து கூப்பிட நீ வர வேண்டாம் இல்லையா ?”, என்று கொஞ்சினாள் ப்ரியா.
“சரி, வா. எனக்கு ஒரு கால் இருக்கு இப்ப. இல்லை நான் மதுவை வர சொல்லவா ? அவளோட பேசிகிட்டு இருக்கியா ?”, என்று ஆதி கேட்க,
“இல்ல இல்ல, என் போன் போதும் எனக்கு பொழுது போக.  யாரும் வேண்டாம்.”, என்றாள் ப்ரியா அவசரமாய்.
சங்கரி முகத்தில் ஒரு நமட்டு சிரிப்பு வந்து போனது. ஆதி நவனீதனிடமும், சங்கரியிடமும் தலையசைத்து விடை பெற்று அவன் ஆபிஸ் ரூம் செல்ல, உடன் அவர்கள் புறம் பார்வையக்கூட திருப்பாமல், அவள் போட்டிருந்த ஸ்கர்ட் சுழல, ப்ரியா ஆதியைத் தொற்றிக்கொண்டு போனாள்.
அவள் அறையில் தஞ்சம் புகுந்திருந்த மது,  மதியம் சாப்பிட வந்த போது, சங்கரிதான் சொன்னார், ப்ரியா ஒரு மணி நேரம் ஆதியின் அறையில் அவன் வேலை முடியும் வரை காத்திருந்து, அவனுடனே வெளியே சென்றதை.
“சரியான அட்டை. என்னதான் கண்டானோ அவகிட்ட. மெழுகு பொம்மை மாதிரி இருந்தா போறும், எவ்ளோ மொக்க போட்டாலும் தாங்கிடுவாங்க போல இந்த பசங்க.”, உள்ளுக்குள் ஆதியால் ஆண் வர்கத்தையே தாளித்துக் கொண்டிருந்தாலும், வெளியில் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை மது.
எல்லாம் இரவு எட்டு மணி வரைதான். அது வரையிலும் ஆதி வராதது அவளை கோபமூட்டியது. வாட்சப்பில், அவன் மெசேஜ் பார்ப்பது, ஆன்லைனில் இருப்பது தெரியவே, இவளாகக் கூப்பிட வில்லை.
அன்று, பாட்டியின் பதினாறாம் நாள் காரியம் பற்றிப் பேசி முடிவெடுக்கலாம் என்று நேற்று இருவருக்கும் நவனீதன் சொல்லியிருந்தார். அதற்கேற்ப அவருமே நேரத்திற்கு வந்துவிட்டார். ஆதியைத்தான் காணவில்லை.
சரி, இரவு உணவை அருந்தி பின் பேசலாம் என்று நினைத்தால், அது முடிந்தும் இவனைக் காணவில்லை. மதுவிற்கு கோபத்தின் அளவு ஏறிக்கொண்டிருந்தது.
“நாமளே பேசி முடிச்சிடலாம் அங்கிள். ஆதிக்காக காத்திருக்க வேண்டாம். நாம் முடிவு பண்ணிட்டு நாளைக்கு சொல்லிக்கலாம் அவங்கிட்ட.”, என்று கூறிவிட்டாள்.
அடுத்த ஒரு மணி நேரமும் என்ன முறைகள் செய்வது, என்று தாத்தா பக்கத்து  வயதான ஒருவரை போனில் பேசி கேட்டு, யாரை அழைக்க  என்பதிலிருந்து காரிய சாப்பாட்டிற்கு என்ன ஸ்வீட் என்பது வரை மது முடிவு செய்திருந்தாள் நவனீதன், சங்கரி துணையுடன்.
பத்து மணி நெருங்கும் நேரம் ஆதி உள்ளே நுழைய, மூவருடன் சுப்புவும் வரவேற்பறையில் இருப்பது பார்த்து, “என்ன டிஸ்கஷன் அங்கிள். இன்னும் தூங்கப் போகாம பேசிகிட்டு இருக்கீங்க ?”, என்றான்.
அவர் பதில் எதுவும் சொல்லுவதற்கு முன், மது, “ மீட்டிங் நீ கலந்துக்கலை. எல்லா முடிவையும் நானே எடுத்துட்டேன். நாளைக்கு மீட்டிங் மினிட்ஸ் ஈமெயில் ல வரும். பார்த்து தெரிஞ்சிக்கோ. “, என்றாள்.
மீட்டிங் என்ற வார்த்தையில் நெற்றி சுருக்கியவன், இன்று காரியம் பற்றி பேசப்போவதாக இருந்தது ஞாபகம் வர, “அஹ்…ஷிட்… சுத்தமா மறந்துட்டேன்.”, என்று நெற்றியில் தட்டிக்கொண்டான்.
“ஆமாமாம். ஸ்கர்டை பிடிசிக்கிட்டு பின்னாலயே போனா, எப்படி ஞாபகம் வரும் ?”, என்று மது நக்கலடிக்க,
“ஹே… மைன்ட் யுவர் வொர்ட்ஸ்.”,  என்று அவளை நோக்கி விரலை நீட்டியவன், “சாரி, அங்கிள். மிஸ்ஸாகிடுச்சு. போன் பண்ணிருக்கலாமே?  நாளைக்கு காலைல பேசிடலாம். இல்லைனா உங்க ஆஃபிஸ் வரேன்.“, என்று  அவரை நோக்கி மன்னிப்பு கேட்டான்.
“ஆமாம், லன்சுக்கு போனவர் டின்னர் முடிச்சிட்டு வீட்டுக்கே வருவியோ மாட்டியோ தெரியாது. இதுல நாங்க போன் செய்து சாருக்கு ரிமைண்ட் பண்ணனும். என்ன தேவைக்கு ? எல்லாம் நாங்களே பார்த்துக்கறோம், நீ ரிலாக்ஸ் பன்ணு.”, என்று மது மேலும் நக்கலடிக்க,
“என்ன ? என்ன உன் ப்ரெச்சனை ? நீயா உன் பாட்டுக்கு முடிவு எடுப்பியா. அதான் இன்னும் பத்து நாள் இருக்கில்ல ? என்ன அவசரம் உனக்கு ?”, அங்கிள், ஆன்ட்டி முன்னர் அவள் நைட் வீட்டுக்கு வருவியோ மாட்டியோ போன்ற பேச்சு பேசியது ஆதிக்கு பிடிக்கவில்லை.
“நீ என்ன டிசைட் பண்றது ? பாட்டிக்கு எப்படி பண்றதுன்னு, நாந்தான் முடிவு பண்ணுவேன். “, எரிச்சலில் பேசினான் ஆதி.
“பாட்டி மேல அவ்ளோ அக்கறை இருக்கவன், ஞாபகமா வந்திருக்கணும். அவர் வேலையெல்லாம் ஒதுக்கி வெச்சிட்டு அங்கிள் வரல ? உனக்கு அக்கறை இல்லை. இப்ப வந்து தாம் தூம்னு குதிக்காத. எல்லாத்தையும் மொதல்லர்ந்து பேச யாருக்கும் டைம் கிடையாது.”, கறாராய் மது பேச, ஆதிக்கு கோபத்தில் முகம் சிவக்க ஆரம்பித்தது.
சங்கரி இவர்கள் சண்டை சூடு பிடிக்கவும், “ என்ன செய்யணும்னு யோசிச்சு வெச்சிருக்கறதை பாரு ஆதி. எதுவும் மாத்தணும்னா மாத்திக்கலாம்.”, என்று சமாதானக் கொடியை பறக்கவிட்டார்.
நவனீதனும், அதையே பிடித்து, “ஆமாம் ஆதி. நேரமாச்சு. எல்லாரும் படுக்கலாம். காலைல பேசிக்கலாம்.”, என்று எழுந்து கொண்டார்.
தீப்பார்வைகளை பறிமாறிக் கொண்டனர் ஆதியும் மதுவும்.
“உன் மினிட்ஸ் காலைல எட்டு மணிக்கெல்லாம் என் மெயில் பாக்ஸ்ல இருக்கணும்.”, என்றான்.
அவனைப் பார்த்து தோளைக் குலுக்கிய மது, “ஆர்டர் போடறதெல்லாம் உன் ஸ்டாஃப்கிட்ட மட்டும் வெச்சிக்கோ. எனக்கு எப்ப தோணுதோ அப்பதான் அனுப்புவேன். இல்ல அனுப்பாமலும் போவேன்.”, அலட்சியமாய் சொல்லிச் செல்ல ஆதியின் பற்கள் அறை பட்டதுதான் மிச்சம்.
‘ஒரு நாள் ரிலாக்ஸ் பண்ணா என்னவோ பெருசா தப்பு பண்ணது மாதிரி என்னா ஒரு அட்டகாசம் பண்றா ? இதுக்குதான் ரொம்ப பழகாம இருக்கணும். ‘, என்ற பாதையில்தான் போனது ஆதியின் எண்ணம்.  மதுவிற்கு ப்ரியாவுடன் அவன் இவ்வளவு நேரம் சுற்றிய பொறாமையில் வந்த எரிச்சல் என்று சத்தியமாக தோன்றவில்லை.
மதுவிற்கு மனதே சரியில்லை. ஆதி ப்ரியாவுடன் போனது ஏன் தன்னை இவ்வளவு பாதிக்கிறது ? அவன் இஷ்டம் , அவன் யாருடன் வேண்டுமானாலும் செல்லலாம். என்ன உரிமையில் அவனை திட்டினோம் என்று யோசித்துக்கொண்டிருந்தாள். 
காரியம் பற்றிய முடிவுகள் நாளை இரவு கூட எடுத்திருக்கலாம். என்னவோ வேகம், அவன் அவளை புறக்கணிப்பது போல் தோன்ற, பதிலுக்கு நானும் செய்கிறேன் பார், என்று வேண்டுமென்றே எல்லாவற்றையும் முடிவு செய்தாள். அப்போதும், பாட்டிக்கு என்ன பிடிக்கும் என்பதை யோசித்துத்தான் முடிவுகளை செய்திருந்தாள்.
இனி ஆதியிடம் சற்று தள்ளிதான் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

Advertisement