Advertisement

அத்தியாயம் – 7
அன்றிரவு, வீட்டின் பின்புறம் தீ மூட்டி, குளிருக்கு இதமாய் அதை சுற்றி அமர்ந்திருந்தனர் மூவரும்.
“மதியம்தான் ரெண்டு பேரும் எஸ்ஸாகிட்டீங்க. இப்ப சொல்லு ? “, மது கேட்டாள்.
சபரி அந்த நிகழ்வின் ஞாபகத்தில்  சிரிக்க ஆரம்பிக்க, ஒழுங்கா என்னாச்சுன்னு முழு கதையும் சொல்லுங்க என்று ஆர்டர் போட்டாள் மது.
அவள் அதிகாரக் குரலும், குளுருக்கு  ஷாலுக்குள் மொத்தமாக ஒளிந்திருந்த அவள் தோற்றமும் முரணாய் இருப்பது கண்டு புன்னகை பூத்த ஆதி,
“எப்பவும் போல நோனா நாங்க சுத்தப் போறோம்னு சொன்னதும், எங்களோட தொத்திகிட்டு வரேன்னு சொல்லுச்சு. சரின்னு கார் எடுத்துட்டு அதையும் கூட்டிட்டு கமர்ஷியல் ரோடு போனேன். சபரி தனியா கிளம்பி வந்து சேர்றதா பிளான்.”, கதை சொல்ல ஆரம்பித்தான் ஆதி.
காரைப் பார்க் செய்து, மெதுவாய் பாட்டியுடன் நடந்து கொண்டிருந்தான் ஆதி. பதினோரு மணி இள வெய்யில் இதமாய் இருக்க, அங்கிருந்த இளம் பெண்களை நோட்டம் விட்டுக்கொண்டு , பாட்டி சொல்வதற்கு உம் கொட்டிக் கொண்டிருந்தான்.
ஒரு கடையில் நின்ற பாட்டி, “ ஆதி, ஒரு ஹாண்ட் பாக் வேணும்டா.” என்றதும், “சரி நோனா, நீ பாரு. நான் இங்க இருக்கேன்,”, என்று வெளியில் நின்றான்.
பத்து நிமிடத்திற்கெல்லாம் வந்து, “இங்க வேண்டாம், அந்த கடைக்கு போலாம் வா.”, என்று அவனை இழுத்துக்கொண்டு நடந்தது.
அங்கேயும், “நீ பாரு நோனா. நான் இங்கயே வெய்ட் பண்றேன்.”,  என்று நின்றான்.
சற்று நேரத்திற்கெல்லாம் வேர்த்து விறுவிறுத்து ஓடி வந்து, ‘ஆ…ஆதி, எனக்கு பயமா இருக்குடா… அங்க …அங்க ஒருத்தன்…”, பயந்து இருந்த பாட்டியைப் பார்த்து டென்ஷனாகி…
“என்ன …யார் என்ன பண்ணா ? பயப்படாத பாட்டி…”, ஆதி தோளை அணைக்கவும்,  “ம்ம்…அங்க ரோஜா பூவ வெச்சிகிட்டு ஒரு கடங்காரன் என்னை பார்த்து… என்ன பார்த்து…என்னவோ ஜாடை காட்டறாண்டா…அந்த கடையிலர்ந்து இங்கயும் வந்துட்டான்… “
தனம் விவரித்ததைக் கேட்டு  ‘ஞே’, என்று  முழித்துக்கொண்டிருந்த ஆதி, “பாட்டி, அவன் வேற யாரையாச்சம் பார்த்திருக்கப்போறான்.  நீ உன்னைன்னு தப்பா நெனச்சிருப்ப.”, என்று சொல்லவும், தனம் பாட்டியின் கண்கள் கலங்கிவிட்டன.
“நீ  என்னை நம்பல… கலி காலம், கிழவிக்குக் கூட நிம்மதி இல்லை.”, தனம் விசும்ப,
“ஐய்யோ, நோனா, இப்பவும் நீ அழகிதான். அதுக்குன்னு ஒருத்தன் உன் பின்னாடி பூவோட சுத்தறான்னு சொல்றதெல்லாம்…”, ஆதி கலாய்க்க, வேகமாய்த் திரும்பிய தனம்,  “அங்க பாரு , அந்தக் கிழம்தான். பாக்கறான் பாரு. கட்டையில போறவன்.“, அழுகையும் ஆத்திரமுமாய் தனம் காட்ட,  திரும்பியவன் பார்த்தது, ஜீன்ஸ், டீ -ஷர்ட்டில் ரோஜாப் பூவுடன், வழுக்கை தலையும் வெள்ளை ஆட்டு தாடியுடன் புன்னகையோடு நின்ற ஒரு அறுபது அறுபத்தியைந்து வயது மதிக்கத்தக்க ஒருவரை.
இவன் பார்க்கையிலேயே, அந்த மனிதர் கையாட்டவும், இங்கே பாட்டி இவன் கை வளைவில், “ஐயோ, என் மானமே போச்சு…ஆதி எனக்கு வயத்த கலக்குதுடா, பாத்ரூம் போகணும். “, நெளியும் பாட்டியைப் பார்த்தவன், “இரு இரு…”என்று சுற்றி, அருகில் இருந்த ஒரு உணவகத்தைப் பார்த்து, இழுத்துச் சென்றான்.
“கடைசீல போய் லெஃப்ட்ல இருக்கும். போயிட்டு இங்கயே இரு. நான் அந்த ஆளை ஒரு வழி பண்ணிட்டு வரேன். பயப்படாத, தைரியமா போ.”, என்று அனுப்பிவிட்டு திரும்பினால், அந்த ரோஜாப்பூ ரோமியோ, உணவகம் அருகே வந்து கொண்டிருந்தான்.
‘யார் முகத்துலடா முழிச்ச ஆதி இன்னிக்கு ? ஃபிகரோட அப்பா, அண்ணன் வந்து உன்னை மிரட்ட வேண்டிய வயசுல, பாட்டிய காப்பாத்த கண்ட கிழத்தை நீ மிரட்டற நிலமைல நிக்கற ?’, என்று மைண்ட் வாய்ஸ் கடுப்படிக்க,
‘யோவ்… யாருயா நீ ? எதுக்கு என் பாட்டிய ஃபாலோ பண்ற , அதுவும் பூவோட ?”, என்று அந்தாளிடம் கோவத்தைக் காட்டினான்.
“தம்பி என் பேரு பீட்டர். உங்க தனத்தை எனக்கு பிடிச்சிருக்கு. அவங்களுக்கும்னு கேள்விப் பட்டேன், அதான்…”, என்று வழியவும்,
“ யோவ்..யாரை பத்தி என்ன பேசற ? வகுந்துடுவேன். இப்படியெல்லாம் பேசின பல்லை தட்டிடுவேன்.”, ஆதி முறைக்க,
“அது தட்ட வேண்டாம்பா, பல் செட் எடுத்தாலே வந்துடும்.  உன் பாட்டிய நான் பத்திரமா பார்த்துக்குவேன்.“, என்று பீட்டர் சொல்ல,
“அடிங்க… சொல்லிட்டே இருக்கேன்… “,என்று அவர் டீ-ஷர்ட்டைக் கொத்தாகப் பிடிக்க,  “ சபரிதான் சொன்னான். தனம் என்னை விசாரிச்சதா. எனக்கும் பிடிச்சிருக்கு. அதான், பேசலாம்னு வந்தேன்.” , பல் செட் தந்தியடிக்க பீட்டர் வேகமாக சொல்ல, ஓங்கின கையை மெதுவாக இறக்கினான்.
“பல்லைக் கடித்தபடி, அவன் உன்னை மாட்டிவிட எதாவது கதை சொன்னா… உடனே நம்பிக்கிட்டு பூவ தூக்கிட்டு வந்துடுவியா ? ஒழுங்கா ஓடிப் போயிடு. இன்னொரு தரம் உன்னை இங்க பார்த்தனோ, இல்லை பாட்டி கண்ல பட்டதா சொன்னாலோ…தொலஞ்ச நீ. புரிஞ்சுதா ? “, ஆதியின் கண்களில் இருந்த கோவமும் வெறியும் பீட்டரின் நெஞ்சை அடைக்க,
 “இல்லை.. இல்லை …இனி இங்க வரவே மாட்டேன்.”,  என்று பூவைக் கீழே போட்டு கை கூப்பினார்,
“போ.. “, என டீ-ஷர்ட்டை விட்டதும், தட்டுத் தடுமாறி திரும்பிப் போகவும், வேகமாய் சபரிக்கு போன் செய்தான் ஆதி.
“அங்கதாண்டா வந்துட்டு இருக்கேன்… நீ எங்க இருக்க.”, என்று சபரி உற்சாகமாய்க் கேட்க, “வாடி செல்லம்.”, என்று மனதுக்குள் நினைத்தவன், உணவகத்தின் பேரைச் சொல்லி வைத்தான்.
வரும் வழியில் அவனைப் பார்த்த பீட்டர், “ டேய் சபரி… உனக்கு என்ன பாவம்டா பண்ணேன் ? எதுக்கு என்னை இப்படி மாட்டி விட்ட ? நீ சொன்னதை நம்பி, நான் தனத்துக்கு பூ குடுக்க போனா, அவங்க பேரன்… என்னை அடிக்க வரான். மிரட்டறான்.” அழ மாட்டாத குறையாக சொல்ல,
சபரிக்கு உள்ளுக்குள் உதைத்தது.
“அங்கிள், உங்களை யாரு உடனே போக சொன்னா? நான் இன்னும் ஆதி கிட்ட சொல்லவே இல்லையே.”, என்று சபரி சொல்ல,
“வேண்டாம்டா, இந்த வயசுல அடி உதையெல்லாம் தாங்க மாட்டேன். சட்டைய பிடிச்சதுக்கே நெஞ்சு வலி வர மாதிரி இருக்கு. நீ என்னை விட்டுட சொல்லு, அவங்க வழிக்கே நான் போகமாட்டேன் .”,  என்று மூச்சிரைக்க சொல்லிவிட்டு முடிந்த அளவு வேகமாக நடையைக் கட்டினார்.
அதற்குள் மறுபடி போன் வர, எடுத்தவன் ஆதியின் பெயரைப் பார்த்ததும்,  ‘இன்னிக்கு கைமா பண்ணப்போறான்.  இந்த பெருசுக்கு என்ன இவ்ளோ அவசரம்.’, என்று நினைத்தவாறே,
“சொல்லு ஆதி, அப்பா கூப்பிட்டாருடா, நான் உன்னை நாளைக்கு பாக்கறேன்.”, என்று சொல்லும் போதே தோளில் ஒரு கை வந்து விழுந்தது.
“ஹி ஹி…ஆதி, இப்பதாண்டா அப்பா கூப்பிட்டாரு…”, என்று வழிந்த வாறே போனை அணைத்து வைத்தான்.
அவன் கழுத்தைப் பிடித்து திருப்பிய ஆதி, “டேய் பரதேசி,  என்னடா பண்ணி வெச்சிருக்க ? “, என்று கடித்துத் துப்ப,
“இத பாரு ஆதி, அன்னிக்கு நான் ஐடியா குடுத்தப்போ, நீ சரின்னு சொன்ன, அதை நம்பிதான் நான் பீட்டர் அங்கிள் கிட்ட பேசினேன்.  உங்கிட்ட சொல்றதுக்குள்ள அவர் வருவாருன்னு நான் எங்க கண்டேன். என்னாச்சு ?”, என்றான் சபரி பணிவாகவே.
“என்னாச்சா… அந்தக் கிழம் ரோஜாப்பூவை தூக்கிட்டு பாட்டி பின்னாடியே போயிருக்கு, ஏதோ லூசுத்தனமா ஜாடையெல்லாம் காட்டிருக்கு. பாட்டி பயந்து போயிருக்கு. மவனே, நம்ம பேச்சுவார்த்தைய தனியா வெச்சிக்கலாம். இப்ப பாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டு போகணும் வா.”, என்று முறைத்துத் திரும்பி உணவகம் நோக்கி நடந்தான் ஆதி.
“அடே கிழவா. இப்படி சிக்கல்ல மாட்டிவிட்டுட்டியேடா. என்ன வெச்சி செய்வானே ஆதி. பாட்டிக்கு தெரிஞ்சா என்னை பொங்கல் வெச்சி ஊருக்கே போடுமே.”, புலம்பியவாறே ஆதியின் பின்னே சென்றான் சபரி.
உணவகத்தில் பாட்டியைக் காணாது, பாத்ரூம் சென்று, “நோனா..உள்ள இன்னும் என்ன பண்ற, வா போகலாம்.”, ஆதியின் குரல் கேட்டதும், கதவைத் திறந்து “போயிட்டானா அந்த கிழவன் ? நல்லா நாலு அடி அடிச்சி அனுப்பிச்சயா அவனை ?”, வியர்வையைத் துடைத்தவாறே தனம் வர, மெல்ல கை பிடித்து ஒரு டேபிளில் அமர வைத்து, ஜூஸ் ஆர்டர் செய்தான் ஆதி.
பாட்டியின் வெளிறிய முகம் பார்த்து சபரிக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. “எதுக்கு இவ்ளோ பயம் நோனா, நாங்க இருக்கும்போது . இனி அவர் உன் கண்லயே தெரிய மாட்டார்.”  என்று சபரி ஆறுதல் சொல்ல,
“நீ என்னடா அந்த கிழபோல்ட்டுக்கு அவர்ர்ர்னு மரியாதை குடுக்கற ?  அரை மணி நேரத்துல என்னமா பயம் காட்டினான். என் வீட்டுக்காரர் இருந்திருக்கணும் இன்னேரம். அவனை ரத்த வாந்தி எடுக்க வெச்சிருப்பார். “, பாட்டிக்கு ஆத்திரத்தில மீண்டும் மூச்சிரைக்க,
“ஷ்… நோனா, விடு. இப்படி செஞ்சு பிபிதான் ஏறும். இந்தா ஜூசைக் குடி முதல்ல. வீட்டுக்கு போகலாம்.”, ஆதி சபரியை தீப்பார்வை பார்த்தவாறே தனத்தை அமைதிப் படுத்தினான்.
காரில் வீட்டுக்கு வரும் வழியெல்லாம் , பீட்டரை வறுத்தெடுத்தார் பாட்டி. ஆதி பெயரைச் சொல்லவும், “கர்த்தருக்கு என் மேல என்ன கோவம்னு தெரியலையே. “, என்று ஒரு பக்கம் புலம்பவும், அடுத்த நிமிடம், பீட்டருக்கு வித விதமாக சாவு வர சாபமிட்டும் பாட்டி புலம்ப, ஒரு கட்டத்தில் சபரி,
“நோனா..த பாரு, இன்னும் ஒரு மனுஷனை எப்படியெல்லாம் சாவடிப்ப ? ஒண்ணு காலரா வந்து கொத்தா போகட்டும், இல்லை லாரில அடிபட்டு கூழா போகட்டும்.  எல்லாம் ஒண்ணா எப்படி வரும் ? “, கேக்கற எனக்கே கேராகுது. கொஞ்ச நேரம் சும்மா வா. “, என்று அடக்கவும்தான் அடங்கினார் தனம்.
ஒரு வழியாக பாட்டியை அவர் அறையில் ஓய்வெடுக்க விட்டு, ஆதி தன் அறைக்கு சபரியோடு வந்தவன் அவனை அடிக்க, இதை எதிர்பார்த்த சபரி ஓடிய வாறே. “டேய் … நீ சரின்னு சொல்லவேதாண்டா நான் செஞ்சேன்.” என்று கெஞ்சி சமாளித்து மலை இறக்கினான்.
ஆதியும் சபரியும் மாறி மாறி சொல்லி முடிக்க,
“பக்கி… பக்கி, என் பாட்டி தாத்தாவைத் தவிர யாரையும் பார்த்தேயில்லை. அதைப் போய்… அடுக்குமாடா உனக்கு ? அதுக்கு மட்டும் தெரிஞ்சிருக்கணும், உன்னை மலையிலருந்து அடிச்சு உருட்டி விட்டுருக்கும். “, என்று  மது அவன் முதுகை பதம் பார்க்க ஆரம்பித்திருந்தாள்.
“ஏ…நிறுத்துடி… பாட்டி ஆவி புகுந்திருச்சா ? இப்படி போட்டு அடிக்கற ? எங்கம்மாவுக்கு ஒரே புள்ள நான்.”, சபரி அலற, ஆதி எட்டி அவள் கைகள் இரண்டையும் பிடித்துக்கொண்டான்.
“ஷ்.. எப்பவோ நடந்ததுக்கு இப்ப அடிக்கற ? உன் கேள்விக்கெல்லாம் பதில் வேணுமா வேணாமா ?”, திமிறிக் கொண்டிருந்தவள், மூக்கை சுருக்கி, உதட்டை சுழித்து, “ சரி சரி அடிக்கலை. இந்தக் கேவலமான ஐடியா ஏன் வந்துச்சு, அதை நீ எப்படி ஓக்கே பண்ணன்னு சொல்லு.”, என்று கேட்டாள்.
கைகளை மெதுவாக விட்டவன் மனதில் , ‘என்னா பஞ்சுமாதிரி கை, இதுல அடிச்சது சபரிக்கு வலிக்குதாமா’,என்று யோசிக்கையில் எண்ணம் போகும் போக்கை உணர்ந்து, தலையை லேசாக உலுக்கி,
அருகில் இருந்த சிறு கல்லை சபரியின் மேல் எரிந்த ஆதி,  “தோ இந்த பக்கியோட ஐடியாதான்.”
“டேய்… நீ சரின்னு சொல்லவேதான் நான் ஏற்பாடு பண்ணேன். இப்ப மொத்தமா என்னை சொல்ற ?”, பாவமாய் கேட்டான் சபரி.
“அப்போ நான் மப்புல இருந்தேன். பாட்டி படுத்தின பாட்டுல கோவமா வேற இருந்தேன்.அதுக்காக அப்படியேவாடா செய்வ ?”, அப்பாவியாய் ஒரு பார்வை பார்த்து வைத்தான் ஆதி.
“அடப் பாவிகளா… மப்புல யோசிச்சு, இப்படி ஒரு ஆள செட் பண்ணி, எவ்வளவு பயந்து போச்சு தெரியுமா நோனா ? போன் பண்ணி அப்படி ஒரு புலம்பல். அப்பவும் நான் சொன்னேன், எல்லாம் உங்க ரெண்டு பேர் வேலயா இருக்கும்னு. அதுதான் நம்பவே இல்லை. “, முறைத்தவள்,
“கேட்டியா நோனா… எல்லாம் உன் அருமை தடித் தாண்டவராயங்க வேலைதான். “, என்று வானத்தைப் பார்த்து கத்தினாள்  மது.
“ எல்லாம் பாட்டி இழுத்து விட்டதுதான். ப்ரியா என்னை தேடி வந்திருந்தா. அவளை தேவையில்லாமல் கார்னர் பண்ணிகிட்டு இருந்தது . “ என்று ஆதி ஆரம்பித்தான்.
“யார் ப்ரியா, அந்த ஆர்மி மேஜர் வீட்டுக்கு பக்கத்து வீடு ஒரு அல்டாப்பு இருக்குமே ? அதுவா ?”, என்று கேட்டாள் மது.
“அல்டாப் எல்லாம் நம்ம கிட்டதான் மது. ஆதி கிட்ட அந்தம்மா ஸ்வீட் பேபிதான். இவனே அவளை ஸ்வீட்டின்னுதான் கூப்பிடுவான்.”, சபரி போட்டுக் கொடுத்தான்.
“இது வேறயா ? என்ன லவ்ஸா ?”, புருவம் இரண்டையும் நெளித்துக் கேட்டாள் மது.
“ஹே… நல்ல பொண்ணுதான். அழகா இருக்கோமேன்னு கொஞ்சம்  திமிர் அவ்ளோதான்.”, ஆதி அவளுக்கு பரிந்து பேசினான்.
“சரி…பாட்டிக்கு அவ மேல என்ன கடுப்பு ? அதை சொல்லு.”, எடுத்துக் கொடுத்தாள் மது.
“ஆதி வந்தது தெரிஞ்சதும் வீட்டுக்கே வந்துட்டா பார்க்க. குட்டி ஸ்கர்ட் போட்டு. பாட்டி முன்னாடி கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருந்தா. ஆதி வந்ததும், அவன் மேல ஈஷிகிட்டு வழிஞ்சு பேசினா… போறுமா இன்னும் சொல்லவா?”, என்று சபரி அடுக்க, மது சிரிக்க ஆரம்பித்திருந்தாள்.
“பாட்டிக்கு காதுல புகை வந்திருக்குமே ! கடவுளே, என்ன சொல்லுச்சு ? ஆயுசுக்கும் மறக்காதே அது திட்ட ஆரம்பிச்சா!”
“வீட்ல உன்னையெல்லாம் தண்ணி தெளிச்சு விட்டுடாங்களா ? குன்னூர் என்ன சென்னை மாதிரி வெய்யிலா, இத்தணூண்டு பாவாடை கட்டிருக்கன்னு வெச்சி செஞ்சுது, ஆதி ட்ரெஸ் மாத்திகிட்டு வர எடுத்துகிட்ட பத்து நிமிஷத்துல. கண்ணுல தண்ணி வந்துடுச்சு ப்ரியாக்கு. “, சபரி விவரித்தான்.
“அவ ஆதிகிட்ட ஒரே ஒப்பாரி, ‘ பாட்டி ஸ் சோ மீன், கருவாடுன்னு.’ அதுல பய காண்டாகிட்டான் பாட்டி மேல.”
“அடப் பாவி, ஃபிகருக்காக பாட்டிய பயமுறுத்திட்டியே…”, முறைத்தாள் மது.
“பாரு…ப்ரியாவை தேத்தி, ஊர் சுத்திட்டு, நைட் பீரும் கையுமா இருந்தோம். அப்ப நான் திட்டுனத பார்த்துட்டு இந்த பக்கிதான், பேசாம உன் பாட்டிக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட ஏற்பாடு பண்ணிடலாம், அப்பறம் உன் பின்னாடியே வால் பிடிச்சிகிட்டு வராதுன்னு ஐடியா குடுத்தான். “, ஆதி தன்னிலை விளக்கம் தந்தான்.
“ரெண்டு டின் பீர் குடிச்ச அப்பறம் இந்த மாதிரி ஐடியாதான் வரும். நீ அப்போ சூப்பர் ஐடியாடான்னு என்னை கட்டி பிடிச்சு நடு ரோட்டுல டான்ஸ் ஆடுன, அதையும் சொல்லு.”, என்று சபரி நினைவூட்டினான்.
புன்னகை மிளிர்ந்த மதுவின் முகத்தைப் பார்த்து அசடு வழிந்த ஆதி, “இப்ப அதெல்லாம் கேட்டாளா மது. அந்தாள எப்படி செட் பண்ண அதை சொல்லு.”, என்று ஊக்கினான்.
:அந்த மனுஷன தெரியும்டா, நல்லவர்தான். அவர் பொண்டாட்டி இறந்த அப்பறம் VRS  குடுத்துட்டு இங்க வந்து செட்டிலானார். அவர் கிட்ட அங்கிள் உங்களுக்கு ஒரு கம்பனி வயசான காலத்துலன்னு பாட்டிய பத்தி ஆகா ஒஹோன்னு சொல்லி, அவங்களுக்கும் உங்களை பிடிக்கும் போல. எங்கிட்ட விசாரிச்சாங்கன்னு ஒரு ரெண்டு மூணு பிட்ட போட்டேன்.  நான் கண்டேனா, அந்தாள் இப்படி ஒவர் நைட் ரோமியோ ஆவார்னு ? அதுக்கப்பறம் அவரை இங்க பார்க்கவேயில்லை நான்.”, என்று சபரி பரிதாபமாகச் சொல்லி முடித்தான்.
“ விஷயம் அத்தோட முடியலை. நீங்க கிளம்பி போன மூணு மாசத்துல நான் வந்ததும் என்ன பண்ணுச்சு தெரியுமா ? “, மது கேட்க, இருவரும் அவளைப் பார்த்தனர்.
“இல்லை அப்பறம் அதை பத்தி பேசவேயில்லை. நாங்களும் எதுவும் கேட்டுகலை. என்னாச்சு ?”, ஆதி கேட்டான்.
“கர்த்தருக்கு என்னவோ என் மேல கோவம், அந்த கடங்காரன் என்னை தொல்லை பண்ணாம இருக்க காசு முடிஞ்சு வெச்சேன்.  காணிக்கை செலுத்தணும். சர்ச்சுக்கு கூட்டிட்டு போன்னு ஓர் அடம் பண்ணுச்சு.  நானும் சரின்னு  இங்கயே ஆல் செயின்ட்ஸ் சர்ச்சுக்கு  கூட்டிட்டு போனேன்.
ஒரு வார நாள் காலையில் இருவரும் செல்லவும், சர்ச் அமைதியாக இருந்தது. மெதுவாக பாட்டியுடன் அந்த அமைதியை அனுபவித்தபடி, ஆங்கிலேயர் காலத்திய அந்த பெரிய சர்ச்சில் நடந்து கொண்டிருந்தார்கள் இருவரும்.
அங்கே பாதிரியார் ஒருவர் எதிரே வரவும், “வணக்கம் ஃபாதர்”, என்று மது முகமன் செய்யவும், தனம் முந்திக்கொண்டு, “தோத்திரம் ஃபாதர்”, என்றுவிட்டு மதுவை கெத்தாக ‘எங்களுக்கும் தெரியும்’, என்பதுபோல ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ என் மகன் வயசுதான் இருக்கும் தம்பி உனக்கு, ஃபாதர்ன்னு எப்படி கூப்பிட ? எனக்கு ஒரு சந்தேகம். அதை கேக்கத்தான் வந்தேன்.”, பாட்டி கூறவும்,
ஷாக்காகி மது நிற்க, சற்று அதிர்ந்த அந்த மத்திம வயது பாதிரியாரோ, “என்னமா சந்தேகம் ? “, என்றார்.
“இல்லை, எங்க இதுல வேண்டுதல்னா, மஞ்சத்துணில ஒரு ரூபா காசு முடிஞ்சு வெச்சு, அப்பறம் உண்டில போடுவோம். உங்களுதுல எந்த கலர் துணில முடியணும் தம்பி ? கர்த்தருக்கு ஒரு வேண்டுதல்.”, பாட்டி கேட்கவும் அந்த மனிதர் முகம் புன்னகை பூக்க, மதுவுக்கு தலை சுற்றியது.
“அப்படியெல்லாம் முடிஞ்சு வெக்கறது இல்லை. உள்ள போய், ஒரு மெழுகுவர்த்தி ஏத்தி உங்க வேண்டுதலை சொல்லுங்க. கர்த்தர் ஆசி எல்லாருக்கும் உண்டு.”, சிலுவைக் குறியிட்டு செல்ல முயன்றவரை, “தம்பி… என்ன மந்திரம் சொல்லணும், ஏதோ அல்லான்னு வருமே.”, என்று கேட்க,  கடவுளே என முனங்கியவள், “அது அல்லேலூயா, நான் சொல்லிக்கறேன் ஃபாதர். நீங்க பாருங்க.”, என்று மது சொல்ல, மீண்டும் புன்னகைத்துவிட்டு சென்றார்.
“ஏன் மதுமா ? இப்ப அல்லேலூயா சொல்லிட்டு அப்பறம் நாராயணான்னு சாயந்திரம் சொன்னா பெருமாள் கோச்சிப்பாரோ ?”, யோசனையாய் கேட்க, “நோனா… சர்ச்சுன்னு கூட பாக்காம கத்திருவேன். உனக்குன்னு எப்படிதான் இப்படியெல்லாம் தோணுமோ? மொதல்ல இங்க உன் வேண்டுதலை முடி. பெருமாளுக்கு சனிக்கிழமை துளசி மாலை போட்டு சரி கட்டிக்கலாம். வா.”, எனவும், “ஆங்…சரி. இதுக்குதான் உன்னைக் கேக்கறது.  கொஞ்சம் கோச்சிக்காம சொன்னா என்ன ?”, என்று  மீண்டும் நடக்கத் தொடங்க, மதுவோ முகம் தெரியாத பீட்டரை அவளுக்குத் தெரிந்த வகையில் அர்ச்சித்துக் கொண்டிருந்தாள்.
“ஒரு வழியா மெழுகுவத்தியை ஏத்தி, உண்டில காசு போட்டு, மூணு வாட்டி அலேலூயா சொன்னப்பறம் வீட்டுக்கு வந்தோம். “
மது முடிக்கவும், சபரியும் ஆதியும் கண்ணில் நீர் வர சிரித்துக்கொண்டிருந்தனர். “சரியா வெச்சி செஞ்சிருக்கு போல ? “, ஆதி குதுகலித்தான். நெருப்பின் ஒளியில் சிரிக்கும் அவன் அழகில் ஒரு நிமிடம் உறைந்தவள், சட்டென்று மீண்டாள்.

Advertisement