Advertisement

 அத்தியாயம் – 6
மறு நாள் மதியம் வீடு அமைதியாக இருந்தது.  பெற்றோர்களும் கிளம்பியிருக்க, நவனீதன் மனைவி சங்கரி அவருக்கான அறையில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தார்.
ஆதியும், சபரியும் ஒரு அறையை அவர்கள் ஆபிஸாக செட்  செய்திருந்தார்கள். அங்கே வேலையைத் தொடர, மது அமைதியாக வரவேற்பரையில் அமர்ந்திருந்தாள். வீட்டின் சூழலை உள்வாங்கிக்கொண்டிருந்தாள்.
அரவம் கேட்டு திரும்ப, அங்கே சபரியும் ஆதியும் வருவது தெரிந்தது. அவளைக் கண்டதும் இருவரும் வந்து சோஃபாக்களை நிறைத்தனர்.
“என்ன பண்ணிட்டு இருக்க மது ?”, என்றான் சபரி.
“ஓண்ணும் இல்லை. வீட்டோட  சூழலை அனுபவிச்சிகிட்டு இருந்தேன்.”
அவளை கிண்டலாக பார்த்த ஆதி, “வெட்டியா இருக்கறதுக்கு இப்படி ஒரு  பிட்டா ? “, என்றான்.
“அடுத்து என்ன, அடுத்து என்னன்னு பார்த்துகிட்டே, இருக்கறத அனுபவிக்க தெரியாதவங்களுக்கு இதெல்லாம் புரிய வைக்க முடியாது.”, என்றாள் அவள் ட்ரேட் மார்க் தோள் குலுக்கலுடன்.
“ஏ…ஆரம்பிகாதீங்கப்பா.  பாட்டி சொன்னதை எப்படி செய்யறதுன்னு பேசலாம். பாட்டியோட  உங்க மெமரீஸ் எப்படி ஷேர் பண்ண போறீங்க இரண்டு பேரும் ? “, என்று சபரி அவர்கள் வாக்குவாதத்தைத் தடுத்து திருப்பிவிட்டான்.
“பாட்டி கூட இருந்த ஸ்வீட் மெமரீஸ் எல்லாம் உங்களோட நான் பேசினா, இதோ இப்ப பேசினான் பார் இந்த வளர்ந்து கெட்டவன், அந்த மாதிரி எதாச்சம் சொல்லி என்னை கடுப்படிப்பான். “, மது உதட்டை சுழித்தாள்.
“என்னது, வளர்ந்து கெட்டவனா ? மரியாதையா பேச கத்துக்கோ முதல்ல.”, முறைத்தான் ஆதி.
“நீ என்னை மண்ணாந்தின்னு கூப்பிடறது மட்டும் ரொம்ப மரியாதையோ ? நீ குடுக்கறதுதான் உனக்கு திரும்பும்.”, சூடாய் திருப்பினாள் மது.
“அய்யோ சாமி… இவங்க நடுவுல என்னை சிக்க வெச்சிட்டியே பாட்டி. பதினஞ்சு பவுன் சங்கிலிய குடுத்துட்டு நாப்பது பவுனுக்கு  வேலை வாங்கறியே ? வாயிக்கு வாய் சங்கலிய டார்கெட் பண்ணதுக்கு, கூடவே அந்த வைர தோட்டையும் சேர்த்து கேட்டிருக்கலாமேடா சபரி…”, அவன் பாட்டுக்குப் புலம்ப, கேட்ட இருவருக்கும் சிரிப்பு தாளவில்லை.
“அது எப்படிடா, எலியும் பூனையுமா இப்பதான் அடிச்சிக்கிட்டீங்க….ஆனா என்னை பொலம்ப விட்டு ஒண்ணா சிரிக்கறீங்க ? நல்லா வருவீங்க ரெண்டு பேரும். நாந்தான் என்னாவேனோ தெரியலை….”, வராத கண்ணீரைத் துடைத்து, மூக்கை சிந்தினான் சபரி.
“போறும் அடங்குடா…”, என்று அவனை அடக்கிய சபரி,  “ இவ பண்ணதிலயே நமக்கு பயங்கர கடுப்பானதை சொல்லுவோம். அதே மாதிரி அவ சொல்லட்டும்.  அதுவும் மெமரீஸ்தான ?”, என்ற யோசனையை முன் வைத்தான்.
“கடுப்பு லிஸ்ட் பெருசாச்சேடா. எதை எடுக்க, எதை விடுக்கன்னு வருஷா வருஷம் டிசைன் டிசைனா பாட்டியை ட்யூன் பண்ணி வெச்சிருப்பாளே. எதை சொல்ல ?”, என்று சபரி யோசிக்க, மதுவின் முகத்தில முகம் கொள்ளா சிரிப்பு.
“ஹான்…இது நல்லாருக்கு. சொல்லுங்க கேப்போம்.”
“மச்சி… ரிவர்ஸ் ஆர்டர்ல போவோம். பாட்டிக்கு இங்கலீஷ் சொல்லி குடுத்து நோனான்னு புதுசா அதுக்கு பேரு வெச்சாளே,  சரி கடுப்பானோமேடா.” சபரி கேட்க,
“ஆமா மச்சி. அது ஏன் மண்ண… ம்ம்…மது  அந்த மாதிரி சென்டன்சா சொல்லிக் குடுத்த ?”, அந்த ஞாபகத்தில் அவளை பார்க்க,
இரு கைகளையும் தூக்கி காண்பித்தவள், “ உன் பேரன் உன்னை திட்டினா இப்படி சொல்லு, அவனை கடுப்படிக்கணும்னா இப்படி பேசுன்னு ரெண்டு வாக்கியம் சொன்னது உங்களை கடுப்படிச்சுதா ?”, நாக்கை துறுத்திக் காட்டினாள் மது.
புன் முறுவல் தோன்ற, “வந்து சேர்ந்த உடனே வெச்சி செஞ்சுது என்னை.” என்று அன்றைய நிகழ்வை பகிர ஆரம்பித்தான் ஆதி.
இரவு ஒன்பது மணியளவில் ஆதியை அழைத்துக்கொண்டு லக்ஷ்மி விலாஸிற்குள் நுழைந்தது சியெல்லொ கார்.
நின்றதும், கதைவைத் திறந்து நான்கே எட்டில் வாசலை அடைந்தான் ஆதி.
“பாட்டி…என் செல்ல பாட்டி….”, என்ற குரலுடன் வரவேற்பறை செல்ல, எதிரே வேகமாக வந்துகொண்டிருந்தார் தனலக்ஷ்மி.
“ஆதி… கண்ணு…நல்லாருக்கியா ?”, என்று அவனை கண்ணாலேயே ஒரு ஸ்கேன் எடுத்தவர், ஆதியின் கைபிடித்து தன்னுடன் சோஃபாவிற்கு சென்று அம்ர்ந்தவாறே,
“ஆதி…இனிமே என்ன நானான்னு கூப்பிடு என்ன ? பாட்டி வேண்டாம்.”, என்றார் .
“நானாவா ? அது தெலுங்குல அப்பான்னு அர்த்தம் பாட்டி ”
“ச்சு… இது இத்தாலி பாஷைடா…” என்று ஆதியிடம் சொன்னவர், அவன் முழிப்பதைப் பார்த்துக்கொண்டே “என்னவோ சொன்னாளே”, என்று முணுமுணுத்தவர்,  “ஆங்… நோனா…நோனான்னு கூப்பிடு என்னை.”, என்று அவன் முகம் பார்த்தார்.
தனத்தை முறைத்த ஆதி, “பாட்டி … அந்த பாஷைல நோனான்னாலும் பாட்டின்னுதான் அர்த்தம்.”
“அது இங்க இருக்க பரதேசிங்களுக்கு தெரியாதில்லை… அதுனால, நீ என்னை பாட்டின்னு சொல்லாதே, வயசாகிட்டமாதிரி தோணுது எனக்கு. நோனான்னு கூப்பிடு.”, பெரிய கண்டுபிடிப்பாய் கை ஆட்டி சொன்னார் தனம்.
“வேணும்னா ஆயான்னு கூப்பிடறேன், ஜெர்மன்ல ஆயான்னா சின்ன பொண்ணுன்னு அர்த்தம்.”, ஆதி நக்கலாய் கூறினான்.
அவனைப் பார்த்து நொடித்தவர், “ யு ஆர் ஆல்வேஸ் அப்யுசிங் மீ.” என்றாரே பார்க்கலாம்.
சட்டென்று எழுந்த ஆதி, “ உன் பேத்தி சொல்லி குடுத்தாளா ? அவ வாயில வசம்ப வெச்சு தேய்க்க…”, என்று பல்லைக் கடித்து சபிக்க,
“டேய்… ஃபாரின் ரிட்டர்ன்டா நீ, கிராமத்தான் மாதிரி பேசற ?”, வாயில் கை வைத்து பொய்யான அதிர்வைக் காட்டினார் தனம்.
அதில் காண்டான ஆதி, “  நீயெல்லாம் இங்கிலீஷ் பேசினா அப்பறம் நானெல்லாம் இப்படி கிராமத்து பாஷைதான் பேசணும்.”
அதற்கும் பதில் சொல்ல முயன்ற பாட்டியை முறைத்து, “தனலஷ்மி ராமசாமி…ஷ்ஷ்ஷ்…. இப்பதான் வந்திருக்கேன். இப்பவே உன் அலும்ப ஆரம்பிச்ச, இப்படியே கிளம்பிடுவேன். எப்படி வசதி ?”, என்று மிரட்ட,
“ம்க்கும்… நான் எப்படி இருக்கேன்னு கூட நீ கேக்கலை, வந்ததும் என்னை மிரட்டற !”, வராத கண்ணீரை துடைத்தவாறே, “போ, உன் ரூமுக்குப் போய் படு. காலைலயாச்சம் சிடுசிடுப்பு குறையுதா பார்ப்போம். அப்படியே என் மாமனாரைக் கொண்டு பொறந்திருக்க…”, என்று செத்து அரை நூற்றாண்டுக்கு மேலான அவர் மாமனாரைப் பழித்தவாறே மாடியேறினார்.
தனத்தின் பின்னோடே ஏறிய ஆதி, அவர் அறை வரவும், “குட் நைட் நோனா”, என்று சொல்லவும், முகம் ஆயிரம் வாட்ஸ் பல்ப்பாய் மிளிர, “ குட் நைட் ஆதி கண்ணா”, என்று கையாட்டிச் சென்றார்.
காலையில் பொறுமையாக கிளம்பி எட்டு மணிக்கு கீழே வந்தான் ஆதி. அங்கே    நண்பன் சபரி பாட்டியிடம் சிக்கி விழி பிதிங்கியிருப்பதை பார்க்கவுமே தானே புன்னகை அரும்பியது ஆதிக்கு.
“குட் மார்னிங் நோனா ? ஹொ ஆர் யூ ?”, என்று கேட்டு ஆங்கிலேயர் பாணியில், அவர் கன்னத்தில் முத்தமிட்டு சபரியைப் பார்க்க, அவனோ, “அடே கிராதகா…”, என்ற பார்வை பார்த்தான்.
“பார்த்தியா என் பேரனை… எவ்ளோ அழகா நோனான்னு கூப்பிட்டான். நீ எதுக்கு பாட்டி, பாட்டின்னு உசுர வாங்கற ?”, என்று சபரியைக் காந்தினார்.
சபரியில் அருகில் ஆதி அமரவும், “டேய் டேனி எப்படா நோனாவாச்சு ? கூச்ச நாச்சமே இல்லாம உன்னால எப்பிடிடா நோனா கோனான்னு இது கேக்கற மாதிரியெல்லாம் கூப்பிட முடியுது ?”, என்று புலம்பலாய்க் காதைக் கடித்தான் சபரி.
“அதான.. கேட்டா போச்சு… பாட்டி போன வாட்டி தனத்தை சுருக்கி டேனின்னு கூப்பிட சொன்ன, இப்ப என்ன டேனியை கழட்டி விட்டுட்ட ?”, ஆதி தனத்தைக் கேட்கவும்,
இருவரையும் முறைத்தவர், “ உங்களாலதாண்டா… அந்த கிழவன் போட்டோவை காமிச்சு அவன் பேரும் டேனின்னு சொன்னீங்கல்ல, அதுலேர்ந்து எனக்கு அந்த பேரே புடிக்காம போச்சு. “
“ஆஹா… டேனி டெவிட்டோ புண்ணியம் கட்டிகிட்டாருடா…”, என்று சபரி முணுமுணுக்க, அதை கவனிக்காத தனம், “என் பேத்தி உங்க ரெண்டு பேரையும் நல்லா திட்டினா, அப்பறம் ரொம்ப யோசிச்சு நோனாவைக் கண்டுபுடிச்சா.”, என்று பெருமையாகக் கூறவும்,
“ஆமாமாம் உன் பேத்திக்கு இருக்க குட்டியூண்டு மூளையை கசக்கி புழிஞ்சாத்தான், இந்த மாதிரி ஐடியால்லாம் கிடைக்கும்.”, என்று நக்கலடித்தவன்,  “ பசிக்குது வா சாப்பிடலாம்…”, என்று சபரியையும் அழைத்துக்கொண்டே பாட்டியோடு சாப்பாட்டு மேசைக்குச் சென்றான்.
பேரன் சாப்பிட அமர்ந்ததும் , பரபரப்பான தனம், “சுப்பு… ஆதி சாப்பிட வந்துட்டான், ஆப்பத்தை போட ஆரம்பி .”, என்று குரல் கொடுத்தவர், மேசைக்கு வந்து இட்லியை பரிமாற, அவர் கை பிடித்து தடுத்தவன்,
“மனசுல சின்ன பொண்ணுன்னு நெனப்பா , அங்க இங்கன்னு அலையாம ஒழுங்க என் பக்கத்துல உட்கார்ந்து நீயும் சாப்பிடுற. சுப்புவுக்கு தெரியும் ஆப்பம் கொண்டு வர.”, என்று கடிந்தவன் அவருக்கும் இட்லியை பறிமாற,
சபரியைப் பார்த்து, “ ஹீ  இஸ் ஆல்வேஸ் அப்யூசிங் மீ.”, என்று சொன்னார்.
அவர் அட்சர சுத்தமாய் ஆங்கிலம் பேசியதைக் கேட்டு ஜெர்க்காகி , “ஆத்தி.. இது எப்ப ?”, என்று கூறியவாரே கலவரமாய் சபரி ஆதியை நோக்க,
தனத்தின் காதில் விழவும், “ என்னடா ? ஐ ஆம் அ மாடெர்ன் தமிழ் லிட்ரச்சர் கேர்ள்.  (I am a modern tamil literature girl)”ஆங்.”, என்று  கெத்தாய் பார்க்க,
“அவசரத்துக்கு முட்டிக்க பக்கத்துல ஒரு செவுறு கூட இல்லையே….. “, என்று அங்கே இங்கே பார்த்த சபரி,  “  அறுவது முடிஞ்சு பல வருஷமாச்சு, இது கேர்ள், அதுவும் தமிழ் லிட்ரெச்சர் கேர்ள்…. இங்க லிட்ரெச்சர் எதுக்கு ?  நாடு தாங்குமாடா இதெல்லாம்? “, என்று மென்குரலில் பொங்கி எழுந்தான் நண்பனைப் பார்த்து.
பின்னே, பாட்டி காதில் விழுந்தால், தோலை உரித்து தோரணம்  கட்டிவிடுவாறே !
ஆதியோ,  பாட்டியின் ஆங்கிலத்திலும், சபரியின் புலம்பலிலும் சத்தமில்லாமல் தோள்கள் குலுங்க, கண்ணில நீர் வர சிரித்துக்கொண்டிருந்தான்.
“என்னடா புலம்பற அங்க ? என் பேரன் கன்னம் குழி விழ சிரிச்சாலே என்னா அழகு. சுப்பு, ராத்திரிக்கு சுத்திப் போடணும்டா”, என்று ஆப்பம் வைக்க வந்தவரிடம் கூற, சுப்புவும் நிறைவாக ,”ஆகட்டும்மா.”, என்று சொல்லிச் சென்றார்.
“ சுத்திப் போடறதுக்கு என்ன இங்லீஷ்லன்னு கேட்டேன் பா..”, என்று வார்த்தையை முடிக்காமலே நிறுத்தினான் சபரி தனத்தின் முறைப்பில்
“நீயும் தான படிக்கறன்னு இத்தனை வருஷம் பேர் பண்ண, இதெல்லாம் சொல்லித் தரலையாக்கும் ? சாப்பிடு, அந்த வேலையாச்சம் முழுசா பாரு.”, என்று அவனை மீண்டும் வாரினார் தனம்.
மேலே பார்த்த சபரி, “ராமசாமி தாத்தா, இது உனக்கே நியாயமா ? நீ எஸ்கேப்பாகி, எங்களை உன் வைஃப்கிட்ட இப்படி கோர்த்துவிட்டுட்டு நீ மட்டும் சொர்கத்துல செட்டிலாகிட்டியே ! நீ போகும் போது கூட கூட்டிட்டு போயிருக்கக் கூடாதா ?”, என்று வேண்டுவதைப் போல சீண்டினான்.
“டேய். என் எதிர்லயே இந்த பேச்சு பேசறயாடா படவா ? ஆனா எனக்கும் அவர் என்னை மட்டும் விட்டுட்டு போனது கஷ்டமாத்தாண்டா இருக்கு. அவர் சொர்கத்துலதான் இருப்பாருன்னு நீ எப்படி சொல்ற ? உனக்கு அவரைப் பத்தி என்ன தெரியும் ?”
“விடு டேனி. உன் கூட முப்பது வருஷம் வாழ்திருக்காரே. எல்லா பாவக் கணக்கையும் தீர்த்திருப்பார். அதனால கன்ஃபர்மா சொர்க்கம்தான்.”, என்றான் சபரி .
“எடு கட்டைய ! அவர் என் கூட வாழ்ந்தது அவர் பாவத்தை போக்கவா ? ராஸ்கல். “, என்று கையில் கிடைத்த கரண்டியை அவன் மேல் வீச,
“ஆதி, அப்பறமா பார்க்கலாண்டா. பாட்டி வயலன்ட்டாகிடுச்சு.”, என்று ஓடினான்.
மாறி மாறி அவர்கள் விவரித்ததைக் கேட்டு இடுப்பைப் பிடித்துக் கொண்டு, கண்ணில் நீர் வர, வாய்விட்டுச் சிரித்தாள் மது. சத்தம் கேட்டு சங்கரியும் வந்து விட்டார். சுப்புவும் சமயலறையின் வாயிலில் நின்று அன்றய நிகழ்வில் புன்னகை முகமாக இருந்தார்.
“அப்பறம் என்னாச்சு ?”
“ஒரு ரெண்டு நாள் பாட்டி கண்ல படாம இருந்தேன். அப்பறம் கொஞ்சம் மலை இறங்கவும், தாஜா பண்ணி சரியாச்சுன்னு வை. எங்கிருந்து புடிச்சேமா அந்த நோனாவை ?  “, சபரி கேட்கவும்,
“நான் ஒழுங்கா தனம்ன்ற பேரை சுருக்கி டேனின்னு சொல்லி ஒரு மாதிரி தேத்தி வெச்சிருந்தேன். நீங்க ரெண்டு பேரும்தானே பாட்டிகிட்ட டேனி சொன்னா, எல்லாருக்கும் ஹாலிவுட் நடிகர் டேனிதான் ஞாபகம் வருவார்ன்னு சொல்லி அந்த மனுஷன் போட்டோ வேற காமிச்சி கெடுத்து விட்டீங்க ? எங்கிட்ட ஒரே பொலம்பல். வேற பேரு சொல்லு, அந்த கிழவன் பேரு எனக்கு வேணாம்னு.”
“நான் என்ன சமாதானம் சொன்னாலும் ஒத்துக்கலை. அதான், உங்களை பழி வாங்கணும்னே தேடி பிடிச்சேன். இங்கலிஷ் கத்துக்கோன்னு சொல்லி இதை கத்துகுடுத்தேன்.  நான் நினச்சத விட சூப்பரா வொர்க் அவுட் ஆகிருக்கு.  செம்ம நோனா, கலக்கிட்ட போ.”, என்று குதூகலித்தாள் மது.
“ம்க்கும்…அந்த நோனா பேரையும் ரெண்டு நிமிஷத்துல கலைச்சிருப்பேன். ஆதிதான் தடுத்துட்டான்.”, என்றான் சபரி.
“ஹ… அந்து எப்படி கலைச்கிருப்ப ? சாதாரண வார்த்தைதானே அது ?”, என கேட்டாள் மது.
“ம்ம்… பாட்டி இந்த பேருல உள்குத்து இருக்கு. நீ ரொம்ப நொர நாட்டியம் பேசற. அதைத்தான் உன் பேத்தி சுருக்கமா நோனான்னு வெச்சிருக்கான்னு சொல்லிருப்பேன். அதுக்கப்பறமும் அந்த பேரை வெச்சிருப்பாங்க?”
“யப்பா…புண்ணியவானே….நல்ல வேளை கலைச்சிவிடலை… மறுபடி பேர் யோசிக்க நொந்திருப்பேன்.”, சபரிக்கு ஒரு கும்பிடைப் போட்டாள்.
“சரி சரி, இப்ப உன் டர்ன். நீ சொல்லு.”, ஆதி ஆர்வமாய் கேட்டான்.
“ம்ம்…அந்த பீட்டர் மாட்டர் பத்தி சொல்லு. எனக்கு ரொம்ப நாளா ட்வுட்.”, சந்தேகக் கண்ணோடு இருவரையும் பார்க்க,  நொடி நேர முக மாற்றம் இருவரிடையேயும்.
“அ…அதுக்கென்ன …சொல்லாம், ஆனா ஆதி, அடுத்த மீட்டிங் ரெடியாகணும், க்வாலிடி டீம் வர சொல்லிருந்த.”, சபரி ஆதியைப் பார்க்க.
“ஹான்…ஆமாம். மது…அப்பறம் பேசுவோம்.”, என்று இருவரும் எஸ்கேப்பாகவும், மதுவின் சந்தேகம் மேலும் வலுப் பெற்றது.

Advertisement