Advertisement

அத்தியாயம் – 5
ஆதி மதுவைப் பார்க்க அவள் எரிச்சலான முகமே சொல்லியது, அவளுக்குமே கல்யாணம் பற்றிய எண்ணம் எதுவும் இல்லை என்று. ஏனோ மனதில் சட்டென்று ஒரு கோவம். “ஓஹ்..என்னை வேணாம்னு சொல்லுவாளா இந்த மண்ணாந்தி ?”. இவனும் நோ என்று சொல்லியது வசதியாக மறந்துவிட்டது.
மதுவுக்குமே ஏகக் கடுப்பு. ‘பேரன் மேல ஆசையிருந்தா, அதுக்கு என்னைத்தான் கோத்து விடணுமா ? எவ்வளவு கொழுப்பிருந்தா இந்த வளர்ந்து கெட்டவன் உடனே நோ சொல்லுவான். எனக்கு இந்த அவமானம் தேவையா ?’, உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தாள்.
இருவரையும் பார்த்த நவனீதன்,  தொண்டையைக் கனைத்து கடிதத்தைத் தொடர்ந்தார், “ இரண்டு பேரும் என்னை திட்டி முடிச்சிட்டீங்களா பசங்களா ? இது பேராசைன்னு எனக்கும் தெரியும். அதான், அது முடியாட்டா ஒரே ஒரு சின்ன ஆசையாச்சம் கேட்டுகறேன்.
என்னோட முப்பதாவது நாள் பூஜை முடியற வரைக்கும் ரெண்டு பேரும் இந்த வீட்ல இருக்கணும். என் கூட நீங்க இருந்த சந்தோஷமான நாட்களை பேசி பகிர்ந்துக்கணும். என்னோட சேர்ந்து அடிச்ச கொட்டம், நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து செய்யணும்.   இந்த ஆசைக்குத்தான், உங்க ரெண்டு பேரையும் ஒரே நேரம் என் கூட தங்க இந்த ரெண்டு வருஷமா கூப்பிடறேன். நீங்க ஒண்ணா இருக்கற மாதிரி வரவே இல்லை.
நிராசையோட இருக்கற ஆன்மா பேயா சுத்துமாம். இன்னிக்கு டீ.வீல சொன்னான். இந்த ஆசை நிறைவேறலைன்னா, நான் தாத்தாகிட்ட போக முடியாம போயிட போகுது. அதுனால தப்பாம இதை எனக்காக செய்யுங்க செல்லங்களா.
இப்படிக்கு உங்க ஆசை நோனா.”
கடிதத்தைப் படித்து நிமிர்ந்து பார்க்க, ஆதி, மது, சபரி மூவரின் முகத்திலும் புன்னகை.
“ஒரு மாசம் இங்க இருந்தா, பிசினஸ் யார் பார்க்க…”, என்று ஆரம்பித்தார் ஆதியின் தந்தை ப்ரபாகர்.
“இன்னும் முடிக்கலை. இருங்க மிச்ச உயிலை முடிச்சிடறேன். அப்பறம் பேசிக்கலாம்.”, என்று  நவனீதன் சொல்லவும் அமைதியானார்.
“என்னன்னு நீங்களே சொல்லிடுங்க, படிக்க வேண்டாம்.”, என்று மனோகர் சொல்லவும், அனைவரும் ஆமோதித்தனர்.
“பாட்டி பேர்ல பஜார்ல இன்னும் நாலு கடை இருக்கு. இந்த வீடிருக்கு.  ஆதியும் மதுவும் கல்யாணம் முடிச்சா, வீடு இவங்க ரெண்டு பேர் பேர்லயும் வரும். கடைகளை வித்து, குன்னூர்ல இருக்க ரெண்டு அனாதை இல்லத்துக்கும் முதியோர் இல்லத்துக்கும் நன்கொடையா போகும்.
அப்படி இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்கலைன்னா, வீட்டை இடிச்சு, மனையை வித்து அனாதை இல்லத்துக்கும், முதியோர் இல்லத்துக்கும்  குடுத்துட்டு, கடைகள் ஆளுக்கு ரெண்டா மதுவுக்கும் ஆதிக்கும் வரும். அவங்க அதை என்ன வேணும்னாலும் செய்துக்கலாம். இதான் உயில் கண்டிஷன். “
“அங்கிள், மார்கெட் ரேட்விட நான் அதிகம் தரேன். வீட்டை இடிக்காம அப்படியே எனக்கு வித்துடுங்க. சாரிட்டிக்கு நிறையவே காசு கிடைக்கும்.”, ஆதி அவன் யோசனையை வைத்தான்.
“இல்லை ஆதி. பாட்டி கண்டிஷனா சொல்லியிருக்காங்க. நீங்க முப்பது நாள் இருந்துட்டு, போனதும் வீட்டை இடிச்சு தரை மட்டமாக்கிடணும்னு. இல்லாட்டி இந்த வீட்டை யார் வாங்கறதுன்னு உங்க ரெண்டு பேருக்குள்ள போட்டி வரும். வேற யாருக்காச்சம் விக்கலாம்னாலும், உங்க பினாமியான்னு தெரியாது. அதுனால ரெண்டு பேருக்குமே வேண்டாம், தரை மட்டமாக்கி மனையாத்தான் குடுக்கணும்னு உயில்லயே சரத்து இருக்கு.”
“கேடி பாட்டி. உன்னை பத்தி நல்லா எடை போட்டிருக்குடா ஆதி.”, சபரி முணுமுணுத்தது, அவன் இரு புறமும் அமர்ந்திருந்த ஆதி, மதுவின் செவிகளை மட்டும் அடைந்தது.
“என்னையும் தெரிஞ்சிருக்கு. இந்த வீட்ல எனக்கு இருக்க மெம்ரீஸ்க்காகவே நான் சரின்னு சொல்லிடுவனோன்னு ஆசையிலதான் இப்படி ஒரு கண்டிஷனைப் போட்டு கார்னர் பண்ணப் பாக்குது.”, மது மென்குரலில் சிடுசிடுத்தாள்.
“அப்ப, சரின்ன போறியா ?”, சபரி ஆச்சரியமாய்ப் பார்த்தான். ஆதியுமே அவளை நோக்க,
சபரியை வினோதமாகப் பார்த்த மது, “எங்கப்பா அம்மா மாதிரியான ஒரு வாழ்க்கையை வெறும் மெமரீஸ்காக தேர்ந்தெடுக்கற முட்டாள் இல்லை நான். “
“ஏய்… என்னை என்ன உங்கப்பா மாதிரி மாசத்துக்கு ஒரு செட்டப்புன்னு சுத்தறவன்னு நெனச்சியா ? பல்லு பேந்துடும்.”, ஆதி சீறினான்.
விழிகளில் ஒரு வலி வந்து, கண்ணீரில் கலங்கினாலும், “ சரி உங்க அப்பா அம்மா மாதிரி வாழ்க்கையும் வேண்டாம் எனக்கு. உன்னை கல்யாணம் செஞ்சா அதான் வரும் எனக்கும்.”, அழுத்தமாய்க் கூறினாள் மது.
“ஏன், என்ன குறைச்சல் ? ரெண்டு பேரும் பாசமாத்தான் இருக்காங்க. உங்க வீட்டைப் போல இல்லை.”, தன் பெற்றோரை மது விமர்சிப்பது பிடிக்காமல் அவள் பெற்றோரைப் பேசினான் ஆதி.
“உங்க அப்பாவுக்கு பிஸ்னஸ்தான் முதல் காதலி. எல்லாத்துக்கும் கடைசியா உங்க அம்மா. ஆனா உங்க அம்மாக்கு உன் அப்பாதான் எல்லாமே. நீயும் அவரும்தான் அவங்க உலகமே, ஆனா உங்களுக்கு அப்படி இல்லை. அவங்க வருத்தத்தை கோவில் குளம்னு போக்கிக்கறாங்க. அந்த மாதிரி உதாசீனப்பட்டு என்னால ஒரு வாழ்க்கை வாழ முடியாது. “
“ஏய்… மூடிட்டு போ. உன்னை ஒண்ணும் நான் கல்யாணம் பண்ணிக்க சொல்லிக் கேக்கலை.”, ஆதியின் முகம் கோவத்தில் சிவந்தது.
தோளைக் குலுக்கியவள், “நான் சபரி கேட்டதுக்குத்தான் பதில் சொன்னேன். நீதான் தேவையில்லாம நடுவுல வந்ததும் இல்லாம, எங்க அப்பாவை பேச்சுல இழுத்த. அதுக்கும் நான் கோவப்படலை. நான் பாட்டிகிட்டயே சொல்லிருக்கேன் கல்யாணமே செஞ்சிக்க போறது இல்லைன்னு. வேணும்மே என்னை நோனா கோர்த்து விட்டுருக்கு.”, என்றுவிட்டு முகத்தைத் திருப்பினாள்.
அவர்களுக்குள் வாக்குவாதம் முடிந்ததைப் பார்த்த நவனீதன், “ என்னப்பா முடிவு செஞ்சிருக்கீங்க ? இன்னும் டைம் வேணுமா பேச ? “
“டைமெல்லாம் வேண்டாம் அங்கிள். நான் முப்பது நாள் இருக்கேன். பாட்டிக்காக அவ்வளவுதான் முடியும்.”, ஆதி சொல்லவும், மதுவைப் பார்த்தார்.
“டேய்….”, என்று இடை மறித்த அவன் தந்தையைப் பார்த்த ஆதி, “தனியா பேசிக்கலாம்பா.”, என்று விட்டான்.
மதுவும், “ நானும் முப்பது நாள் இருக்கேன் அங்கிள். அது மட்டும்தான். கடைகளும் எனக்கு வேண்டாம், அதையும் வித்து சாரிட்டிக்கே குடுத்துடுங்க.” என்றாள்.
“மது அவசரப் படாதே..”, என்று அவள் அம்மா பரிமளா சொல்லவும், அவரை ஒரு பார்வை மட்டுமே பார்த்தாள் மது.
நவனீதன், “ நீங்க ரெண்டு பேரும் மட்டும் தனியா இருக்க முடியாது. ஊர் பேசும், கூட உங்க பேரண்ட்ஸ் யாரும் தங்க முடியுமா? “, என்று பெற்றோர்களைப் பார்க்க, வந்த பதில்கள் எல்லாம், கிளம்பியாக வேண்டும் என்பதாகவே இருந்தது.
“ இதெல்லாம் ஆகிற காரியமில்லை. முப்பதுக்கு வந்து  ஆதி செய்ய வேண்டிய பூஜையை செய்யட்டும்.”, என்றார் ப்ரபாகர்.
ஆதி கடுப்புடன் ஏதோ சொல்ல வர, அவனை முந்திக்கொண்டு, “ உங்களால முடியலைனா, என்னையும் என் மனைவியையும் இங்க வந்து இருக்க சொல்லிருக்காங்க சார். ஒண்ணும் ப்ராப்ளமில்லை.  நாங்க இருந்து பார்த்துக்கறோம். சுப்புவும் இருப்பாரு.“, என்றார் நவனீதன்.
“ஹூம்… எல்லாம் பக்காவா ப்ளான் போட்டுத்தான் வெச்சிருக்கு லேடி கேடி.”, என்றான் சபரி.
சம்பிரதாயமான பேச்சுகளுடன் நவனீதன் கிளம்ப எத்தனிக்க, ஆதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு மனைவியுடன் அவர்கள் அறைக்குச் சென்றார் ப்ரபாகர்.
“மது மா, கொஞ்சம் பேசணும். வாம்மா.”, என்று விட்டு அவள் தந்தை செல்லவும், “நீங்க ரெண்டு பேரும் போய் பேசிட்டு, அடுத்து என்னனு எனக்கு சொல்லுங்க. நான் என் வீட்டுல இருக்கேன்.”, என்று சபரியும் விடை பெற்றான்.
ஆதி அறைக்குள்  நுழையவும், “ என்னடா, இங்க ஒரு மாசம் இருந்தா, வேலை எல்லாம் யார் பார்க்க ? யோசிக்காம நீ பாட்டுக்கு இருக்கேன்னு சொல்லிட்ட ?”,  ப்ரபாகர் பொரிந்தார்.
“கொஞ்சம் பொறுமையா இருங்க. பாட்டி மேல எவ்வளவு உயிரா இருந்தான் பிள்ளை.”, ஆதியின் அன்னை சரஸ்வதியும் மகனுக்குப் பரிந்து வந்தார்.
“என்ன பேசற சரசு ? இங்க இருந்தா மட்டும்  மனசு மாறிடுமா ? இல்லை போனவங்கதான் வந்துடுவாங்களா ? ”
“அப்பா. இங்க இருந்தே பிசினஸ் ரன் பண்ண முடியும். ஆபிஸ்ல போய் உக்கார்ந்தாதான்னு இல்லை.  நீங்க, சபரி இருக்கப் போறீங்க. ஒரு மாசம் நான் மெஷினரிக்காக ஜெர்மனி போன போது எப்படி பிசினஸ் ஓடுச்சு ? அதே மாதிரி நினைச்சுக்கோங்க.”, இதுதான் முடிவு என்பதாயிருந்தது அவன் குரல்.
சரஸ்வதி, “ஏன் ஆதி, உனக்கு அந்த பொண்ணு மதுவை பிடிக்கலையா ? உனக்கும் கல்யாணம் பண்ற வயசாகிடுச்சுதான ?”, என்றார்.
“என்னது ? மனோகர் பொண்ணையா ? “, ஏளனமாக வந்தது ப்ரபாகர் குரல்.
“ஏங்க. பொண்ணு நல்லாதான் இருக்கா ?  நல்ல குணமாத்தான் தெரிஞ்சா. இல்லாட்டி தனம் அத்தைகிட்ட நல்ல பேர் எடுத்திருக்க மாட்டா.”
“பொண்ணு பத்தி எனக்கு தெரியாது. அவங்கப்பா நடத்தை சரியில்லை. அவங்க அம்மாவும் தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க புருஷனை. இப்படி ஒரு குடும்பத்துல சம்பந்தம் பண்ணணுமா என் புள்ளைக்கு ? போய் கிளம்பற வேலையைப் பார்.”, அதிகாரமாகக் கூறினார் ப்ரபாகர்.
ஆதிக்கு மதுவை நினைத்து கஷடமாகியது.  கல்யாணமே செய்யப் போவதில்லை என்று அவள் சொன்னதன் பின்னணி இப்போது புரிந்தது. அவள் தந்தையைக் கன்னம் கன்னமாக அறையும் அளவு ஆத்திரம் பெருகியது. அடக்கியவன், “ அப்பா, அவ அப்பா அப்படி இருக்கறதுக்கு அவ என்ன செய்வா ? “,  என்று பேசியவனை முறைத்தவர்,
“ ஏண்டா…அந்தாளை எப்படி  சம்மந்தின்னு சபையில சொல்ல முடியும் ? சிரிக்க மாட்டாங்க ? ஏன் நீ அவளை கட்டிக்கற எண்ணம் ஏதாச்சம் இருக்கா?”, கேள்வியாய்ப் பார்த்தார்.
“பேச்சு அவ அப்பா பத்தி. நீங்க பழகற பல பேர் அவர் செய்யற அதே தப்பை மறைவுல செய்யறாங்க. இவர் பப்ளிக்கா செய்யறதுதான் கேலியாகுது. அதான ?”, நக்கலாய்க் கேட்டான் ஆதி.
“ஆதி , என்ன இது அப்பா கூட கூட பேசற ? அவளை கல்யாணம் பண்ணப் போறதில்லைங்கறப்போ, இது மாதிரி அவங்க குடும்பத்தைப் பத்தி பேசறதே தப்பு.  மது வரைக்கும் , நல்ல பொண்ணு. அதுக்கு நல்ல வாழ்க்கை அமையும். தனம் அத்தை அமைச்சி குடுப்பாங்க. “, என்று பேச்சை அத்தோடு முடித்தார் சரஸ்வதி.
தந்தையும் மகனும் பிசினஸ் பேச, தன் வேலையை பார்க்கலானார்.
மது, உள்ளே செல்ல, ஆளுக்கு ஒரு மூலையில் இருந்தனர் அவள் பெற்றோர். 
“என்னப்பா கூப்டீங்க ?”
“உனக்கு ஆதியை பிடிக்கலையாமா ? நல்ல பிள்ளை. பிசினஸ்லயும் நல்ல பேரு. பெரிசா வருவான்.  உனக்கும் கல்யாண வயசு ஆச்சே மா.“ ஆர்வமாய்க் கேட்டார் மனோகர்.
“நான் கல்யாணம் பண்ணிக்கறதாவே இல்லை பா. “
“என்ன உளர்ற ?”, என்றார் அவள் தாய் பரிமளா.
தோளைக் குலுக்கியவள், “ நீங்க கேட்கவும் என் முடிவைச் சொன்னேன். அது உங்களுக்கு உளறலா இருந்தா நான் ஒண்ணும் செய்ய முடியாது.”
“ஏன்மா இப்படி ஒரு முடிவு ?”, மனோகர் கேட்க,
“கல்யாணம் பண்ணி என்ன பெருசா கண்டுட்டீங்க நீங்க எல்லாம் ? எனக்கு அப்படி ஒரு வாழ்க்கை அவசியமா தோணலை.”
“எங்களை உதாரணமா எடுத்துக்காதே மது. ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் ஒவ்வொரு மாதிரி.”, கொஞ்சம் சங்கடமாய்ச் சொன்னார் மனோகர்.
“என்னைப் பாக்கறவங்க, உங்களை உதாரணமா வெச்சிதானப்பா பார்க்கறாங்க. உங்க பொண்ணு நானும் உங்க ரெண்டு பேரையும் கொண்டுதான இருப்பேன்னு சொல்லுறாங்க ?”, வறண்ட புன்னகையுடன் வந்தது மதுவின் பதில்.
கன்னத்தில் அறைந்தது போல இருந்தது மனோகருக்கு. “யாருடி, யாரது அப்படி சொன்னது ? அவங்க கிடக்கறாங்க. நீ சரின்னு சொல்லு. என் ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ளயே உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன்.”,  பரிமளா வேகமாய் சொன்னார்.
“அம்மா, நீ கிளப் , பார்லர், பார்ட்டின்னு சுத்தறது பத்தாதுன்னு, என் மாமியாரும் அப்படியேவா ? தாங்காதுமா.  இந்த விபரீத முயற்சி எல்லாம் வேண்டாம்.”, என்று கரம் கூப்பி கிண்டலடித்தாள்.
அவளை முறைத்துக்கொண்டு, பரிமளா பாத்ரூமில்  நுழையவும், அவள் கைப்பிடித்த மனோகர், “ யார் என்ன சொன்னாங்க மதுமா ? உனக்கு யாரையும் பிடிச்சிருந்தா சொல்லுமா. நான் பேசிக்கறேன் அவங்ககிட்ட.”
“எனக்கு யாரையும் அப்படியெல்லாம் பிடிக்காம நான் பார்த்துப்பேன் அப்பா. உங்களுக்கு என்னால எந்த சங்கடமும் இருக்காது.”
“ஆனா, என்னால உனக்கு சங்கடம்னு தெரியுது மதுமா. யார் என்ன சொன்னா ?”, மீண்டும் அழுத்திக் கேட்டார்.
“ஏன்பா ? சொன்னவங்க கிட்ட ஏன் அப்படி சொன்னன்னு கேட்க முடியாது. இல்லாததையா பேசிட்டோம்னு சொல்லுவாங்க. அந்த அசிங்கம் வேணுமா ? எப்பவும் போல நம்ம பாட்டு அவங்க அவங்க வழியில போவோம். திடீர்னு மாப்பிள்ளை பார்க்கவா, கல்யாணம் பண்ணவான்னு ஆரம்பிக்காதீங்க. இந்த பாட்டி இப்ப இதைக் கிளப்பலைனா இந்த ஐடியாவே உங்களுக்கு தோணியிருக்காது. ”, ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியில் வந்தாள் மது. அந்தப் பார்வையே மனோகரைத் தள்ளி நிறுத்தியது.
என் வாழ்க்கை, அதை என் இஷடப்படி வெளிப்படையாக வாழ்கிறேன் என்று இருப்பது தவறோ ? முதல் முறையாக யோசிக்கத் தொடங்கினார் மனோகர்.

Advertisement