Advertisement

அத்தியாயம் – 4
“எங்க..”, ஆதி குரல் கனைத்து சரி செய்து, “இப்ப எங்க இருக்காங்க ?”, என்று கேட்டான்.
 “இப்பதான் நவனீதன் அங்கிள்கிட்ட பேசினேன். ஃபார்மாலிடீஸ் நடந்துகிட்டு இருக்கு. நம்மள ஹாஸ்பிடல்தான் வர சொன்னாரு. கார்  புக் பண்ணி ரெடியா இருக்கு. வா போகலாம்.”, என்று அழைத்து வந்தான்.
“பாட்டி முழிச்சதும் எனக்கு போன் செய்ய சொன்னேன்டா… , போன்ல கூட பேச முடியாம போச்சே. இன்னிக்குன்னு பார்த்தா இந்த டெல்லி வேலை அமையணும். இங்க பெங்களூர்லயே இருந்திருந்தா, உடனே வந்திருக்கலாம்டா.”, கண்கள் பனிக்க சபரியிடம் புலம்பினான் ஆதி.
“ஆதி, அப்பிடியிருந்தா, இப்படியிருந்தான்னு இல்லாததைப் பத்தி பேசி ஆகப்போறது ஒண்ணுமில்லை. அந்த சுழல்ல சிக்கினா அடுத்து என்னன்னு யோசிக்கமுடியாதுன்னு நீதானடா  எங்களுக்கு சொல்லுவ. இப்ப நீயே இப்படி சொன்னா எப்படி ? வேண்டாம், நெகட்டிவா யோசிக்காதே.”, சபரி தேற்றினான்.
மருத்துவமனையை அடையவும், சுப்பு வாசலிலேயே அவர்களுக்காக காத்திருந்தார். ஆதியைக் கண்டதும், அடக்கமாட்டாமல் அழ, ஆதிதான் அவரைத் தேற்றினான்.
மேலே வரவும், ஒரு தனியறையில் பாட்டி, பேத்தி எடுத்த மஞ்சள் பட்டுப்புடவையில், அவர் எப்போதும் அணிந்திருக்கும் நகைகளோடு, சந்தன கீற்றுடன் தூங்குவதுபோலவே படுத்திருந்தார்.  அங்கே சென்று பார்த்த ஆதி, எந்த நொடியும் முழித்து ‘ஆதி கண்ணா’, என்று எப்போதும் போல கூப்பிடுவாரோ என்று ஒரு நொடி காத்திருந்தான்.
‘பாட்டி…”, என்று கைப்பிடித்தவன் கண்கள் சிவந்து நீர் சுரந்தது. சபரியுமே அழுதுகொண்டிருந்தான். அவன் சொந்தப் பாட்டிகளை விட அவனிடம் அதிகம் அன்பு செலுத்தியது தனம் அல்லவா.
கடைசீ நேரத்தில் கூட இல்லையே என்ற குற்ற உணர்வு இருவரையுமே தாக்கியது. 
உள்ளே யாரோ வரவும், திரும்பிய சபரி, அழுது வீங்கிய முகத்துடன் வரும் மதுவைக் கண்டதும், அவள் கைப் பிடித்து “மது… பாட்டி என்ன சொன்னாங்க ? முழிச்சாங்களா ? உன்னைப் பார்த்தாங்களா ?”, என்று கேட்கவும்,  பாட்டியோடு மானசீகமாக பேசிக்கொண்டிருந்த ஆதி, சட்டென கவனம் கலைந்து அவளைப் பார்த்தான்.
பல வருடமாய் தன்னுடன் போட்டி போட்டவள். போட்டோவில் பார்த்திருந்தாலும் நேரில் இப்போதுதான் பார்க்கிறான். அவளது கசங்கி நலுங்கிய தோற்றமே காண்பித்தது, அவள் துயரத்தை. கண்களில் தெரிந்த கலக்கமோ, அவளை பாதுகாத்து துயர் துடைக்க உந்தியது.  பார்த்தது பார்த்தபடி இருந்தான் ஆதி.
சபரியை ஒரு நொடி பார்த்தவள், ஆமென தலையாட்டி, ஆதியின் அருகே வந்து, “நமக்கு வேலை சொல்லிட்டுதான் போயிருக்கு நோனா. கடைசியா பேசினதும் உன்கிட்டதான். பாரு.”, என்று அவள் எடுத்த வீடியோவைப் போட்டு போனை அவன் கையில் கொடுத்தாள்.
ஒரே எட்டில் அவளைத்தாண்டி சபரியும் போனைப் பார்த்தான். பாட்டி பேசியதைக் கேட்ட இருவர் கண்ணிலுமே தாரை தாரையாக கண்ணீர். “உனக்கென்ன இவ்ளோ அவசரம் நோனா. போ நான் மன்னிக்கவே மாட்டேன்.”, என்று சிறுபிள்ளையாய் பாட்டியிடம் சண்டையிடும் ஆதியைப் பார்த்து உருகிப்போனாள் மது.
அவன் தோள் அழுத்தி, “ஷ்…ஆதி, பாட்டியை குன்னூர் கூட்டிப் போகணும்.  அது இஷ்டப்படி எல்லாத்தையும் நம்மளே செய்யணும். வேலை இருக்கு. வா.”, என்றாள்.
மூக்கை உறிந்து கொண்டு கர்சீஃபை தேடியவன் கையில், தான் வைத்திருந்த டிஷ்யுவைத் தந்தவள், பாட்டியின் கன்னம் வருடி, முத்தம் பதித்து, “பை நோனா. எங்க இருந்தாலும் நீ சந்தோஷமா இரு.”, என்று சொல்லிவிட்டு  வெளியேறினாள்.
குளிர் சாதனப் பெட்டியுடன் ஆட்கள் வர, ஆதி தன்னை சமன் செய்தவன், அவர்களைத் தவிர்த்து, அவனும் சபரியுமாகவே பாட்டியின் உடலை அதில் கிடத்தினர். ரோஜா, சந்தன மாலைகளுடன் மது வரவும், மூவரும் சேர்ந்தே  பாட்டிக்கு அணிவித்தனர்.
மறு நாள் உறவினர் , நண்பர் கூட்டம் வந்ததும், இறுதிச் சடங்கு ஆதியின் கையால் செய்யப்பட்டது. அவன் தந்தைக்கு பிடித்தமில்லாத போதும், பாட்டியின் வீடியோ பார்த்து, யாருக்கும் ஒன்றும் மறுத்துப் பேச முடியவில்லை.
அன்று மாலை கிளம்புவதைப் பற்றி இருவரின் தாய் தந்தையரும் பேச, நவனீதன், “பாட்டி உயில் எழுதி வெச்சிருக்காங்க. நாளைக்கு பத்து மணிக்கு ரீடிங் இருக்கு.  அது  முடிஞ்சதும்  உங்க சௌகர்யம் போல செய்ங்க.”, என்று சொல்லி நிறுத்தி வைத்தார்.
குளிருக்கு ஒரு போர்வையைப் முக்காடிட்டுப் போர்த்தியபடி, அண்ணாந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்  மது. பாட்டி இனி இல்லை என்பதை உள்வாங்க சிரமப்பட்டது மனது. ஆயினும் யாருடனும் அவள் துக்கத்தைப் பகிர முடியவில்லை.  தாய் தந்தை வந்தாலும், பட்டும் படாமலும் இருந்தார்கள். 
அவள் கண்ணீர் பார்த்து, “என்னமா, பாட்டி வயசாகித்தானே போனாங்க. எதுக்கு அழற, எப்பவும் கூடவே இருக்க முடியாதில்லையா ? ஆரோக்கியத்தோட இருக்கும் போதே போயிட்டாங்கன்னு நெனச்சிக்கோ.”, என்று ஆறுதல் பேசிப் போனார் மதுவின் தந்தை மனோகர்.
எத்தனை வயதாகி இருந்தாலும், அன்பானவர்களின் மறைவு  ஏற்படுத்தும் தாக்கம், அவர்கள் அறியாதது என்று தெரிந்ததாலேயே, ஒன்றும் சொல்லாமல் தலையாட்டி அவள் அறைக்கு வந்துவிட்டாள்.
“நோனா…இப்படி சொல்லாம கொள்ளாம கம்பி நீட்டிட்டயே. நல்லாருக்கா நீ பண்ணது ? யாருக்கு புரியும் என் கஷ்டம் ?”, என்று வானத்தைப் பார்த்து வாய் விட்டு கேட்டாள் மது.
“எனக்கு புரியுது. அதைத்தான் நானும் யோசிச்சிட்டு இருந்தேன். என்ன உன்னாட்டம் வானத்தைப் பார்த்து பேசற அளவுக்கு மறை கழண்டு போகலை..”, குரல் வந்த திசையில் பார்வையைத் திருப்பினாள் மது.  அவனின் நையாண்டிக் குரலைக்கொண்டே அது ஆதி என்பது தெரிந்தது. அவன் அறை பால்கனியில் நின்றிருந்தான்.
“பாட்டி இங்கதான் இருக்காங்கன்னு தோணுது . அதான் அவங்க கிட்ட பேசறேன். உனக்கென்ன வந்துச்சு ?”, கண்களைத் துடைத்து முறைப்புடன் கேட்டாள் மது.
“இல்லை, பாட்டி போயாச்சு. நம்ம மனசுக்கு உடனே ஒத்துக்க முடியாததால , இங்க இருக்காங்கன்னு நமக்கு நாமே ஏமாத்திக்கறோம். இந்த சடங்கு சம்பரதாயம் எல்லாமும் கூட நமக்கு ஒரு க்ளோஷர் குடுக்கத்தான். போனவங்க போயாச்சு. அவங்களை நல்ல படியே அனுப்பி வைச்சாச்சு. இனி உன் வாழ்க்கையைப் பார்னு நமக்கு ஒரு மனோதிடம் குடுக்கறதுக்காக செய்யறது.”, ஆதி பொறுமையாகக் கூறினான். அவளின் துக்கத்தைத்தான் நாள் முழுதும் கண்டிருந்தானே.
“நீ சொல்றதெல்லாம் அறிவுக்கு புரியும். மனசுக்குத் தெரியலை. எண்பது, தொண்ணூறுன்னு எத்தனை பேர் இருக்காங்க. பாட்டிக்கு எழுவத்தி நாலுதான் ஆகுதாம்.  அதுக்குள்ள என்ன அவசரம் அதுக்கு ?”, மதுவின் கேள்வியில் அவள் ஆதங்கம் தெரிந்தது.
“பாட்டியோட கடைசீ நிமிஷம் வரைக்கும் கூட இருந்திருக்க. அதுக்கே நீ திருப்தி பட்டுக்கணும். அவங்களை உயிரோட பார்க்க முடியலையேன்ற கில்ட் என்னை அரிக்குது. ஆனா நீ எடுத்த அந்த வீடியோக்கு கோடி நன்றி. அப்பவும் பாட்டிய சிரிக்க வெச்ச. என் கிட்ட பேச வெச்ச. அதுதான் எனக்கு ஆறுதலா இருக்கு. தாங்க்ஸ் மது.”, உள்ளார்ந்து நன்றி சொன்னான் ஆதி.
“ம்ம்… என் கஷடத்தை விடவும் உன்னுது அதிகம்தான். என்னைவிட பாட்டிய உனக்குத்தான் முன்னாடியே தெரியும். நீ கூட இல்லாம போனது பாட்டிக்கும் வருத்தம்தான். உன் மேல அதுக்குக் கொள்ளை ஆசை. எனக்கு ஒரே ஒரு ரிக்வஸ்ட்தான் ஆதி.  பாட்டி இருந்த இந்த வீடு, அனேகமா உனக்குத்தான் குடுக்கும்.  வருஷத்துல ஒரு வாரம் நான் இங்க வந்து இருக்க விடுவியா ? “, குரல் தேய்ந்து வந்தது.
“ஹே… பாட்டி அநேகமா சாரிட்டிக்கு எழுதிருக்கும்னு நினைக்கிறேன்.  அவங்ககிட்டருந்து  காசு கொஞ்சம் கூட குடுத்து வாங்கிடலாம்னு யோசிச்சிருக்கேன்.  பார்த்துக்கலாம்.  உனக்கு வேணும் போது நீ வா. “, என்றான் ஆதி.
என்னவோ, ஆதியுடன் பேசியது மனதுக்கு ஆறுதலாய் இருந்தது. ஆதியை எப்படி கடுப்படிக்கலாம் என்று யோசிப்பதும், அவனால் கடுப்பாகி கோவப்படுவதும்தான் வாடிக்கை. இன்று அவனால் ஆறுதல் அடைவது வித்தியாசமாகப் பட்டது.
பாட்டியின் மறைவு தன்னளவு அவனும் பாதிக்கப்பட்டதினால் வந்த நெருக்கம் என்று நினைத்துக்கொண்டாள்.  இன்முகமாகவே இருவரும் குட் நைட் சொல்லிப் படுக்கச் சென்றார்கள்.
மறு நாள் பத்து மணியளவில் ஆதியின் பெற்றோர், மதுவின் பெற்றோர், ஆதி, சபரி , மது, பாட்டியின் தூரத்து சொந்தம் சிலர், தாத்தாவின் வகையறாவில் சிலர் வந்திருந்தனர். இவர்களுடன் சுப்புவும் இருந்தார்.
நவனீதன், சரியாக பத்து மணிக்கு உயிலை எடுத்தவர், “இது போன வருஷமே பாட்டி சுய நினைவோட எழுதின உயில். இதை நடை முறை படுத்த என்னைத்தான் லீகல் அட்வைசரா அப்பாயிண்ட் பண்ணிருக்காங்க. அதுக்கான பேப்பர்ஸ், எப்ப யார் கேட்டாலும் ரெடியா இருக்கு.
இப்ப உயிலை ஒரு வாட்டி முறையா படிக்கறேன். அப்பறம் யாருக்கு வேணாலும் காப்பி தரேன்.”, நிறுத்தி அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவர், யாரும் எதுவும் சொல்லாததால் படிக்கத் தொடர்ந்தார்.
முதலில் தூரத்து சொந்தங்களுக்கு பணம், சில நகை என்று படித்தவர், சபரிக்கு தான் எப்போதும் அணியும் ரெட்டை வட சங்கலியை தன் ஞாபகமாக விட்டுச் செல்வதாய் படிக்க, சபரி கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர்.  இவனுக்கு எதுக்கு ரெட்டை வடம் என்று எல்லோரும் யோசிக்க, ஆதிக்கும், மதுவிற்கு மட்டுமே தெரியும் இதன் பின்னணி.
சபரியைப்  பாட்டி கடுப்படிக்கும்போதெல்லாம், இந்த ரெட்டை வட சங்கலியைத்தான் இழுப்பான். ‘இரு  திருடன் கெட்டப்ல வந்து ஒரு போடு போட்டு கழுத்துல போட்டிருக்க இந்த தாம்புக்கயிறை அத்துக்கிட்டு போறேன்.’ என்று ஒரு நாள் மிரட்டுவான். ‘இந்த வெயிட்டுக்கு  எப்படி உனக்கு கழுத்து வலி வரலை ? ‘, என்று ஒரு நாள் கலாய்ப்பான். ‘உன் சங்கலிய குடு, வித்து வர காசு போறும் எனக்கு, ரிட்டையர்ட் ஆகிடுவேன்.’ என்பான் ஒரு நாள்.’ உனக்கு சங்கலி வாங்கிப் போட்டு சொத்து போச்சுன்ற கவலைலதான் தாத்தா சீக்கிரம் போயிட்டார்.’ என்று ஒரு நாள் பாட்டியை கடுப்படிப்பான்.
ஆதி இதையெல்லாம் நேரில் பார்த்தானென்றால், மதுவிற்கு பாட்டி சபரியைப்பற்றி அவளிடம் அர்ச்சிக்கும்போது தெரியும்.
ஆதி சபரியின் கைப் பிடித்து அழுத்த, மது அவன் பின் நின்றவள் தோளழுத்தி ஆறுதல் தர, சபரி தன்னை சற்று தேற்றிக்கொண்டான்.
அடுத்து சுப்புவின் விஸ்வாசத்திற்கு, அவன் பெயருக்கு ஒரு கடையை எழுதி வைப்பதாகவும், அதில் வரும் வாடகை அவனது இறுதிக் காலம் வரை அவனை காக்கும் என்று பாட்டி எழுதி வைக்கவும், சுப்பு குலுங்கி குலுங்கி அழுதார். மறுபடியும் ஆதியும், மதுவும்தான் அவரை தோள் தட்டி தேற்றினர்.
இதைக் கண்டு இரு அப்பாக்களும் முகம் சுருக்கினாலும், ஒன்றும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவருக்கு சென்ற சொத்தைப் பற்றியது இல்லை இந்த சுருக்கம். ஒரு வேலைகாரனை எழுந்து சென்று தேற்ற வேண்டுமா தங்கள் வாரிசு என்ற ஒருமித்த எண்ணம்தான் இரு அப்பாக்களுக்குமே.
அடுத்து, தன் மிச்ச தங்க வைர நகைகளை. தன் மகள், மருமகள் என்று ஆதியின் அன்னைக்கும், மதுவின் அன்னைக்கும் சமமாக எழுதியிருந்தார்.
இறுதியாய், ஒரு இடைவெளி விட்டு, ‘ஆதி, மது, பாட்டி உங்க ரெண்டு பேருக்கும் ஒரு லெட்டர் எழுதியிருக்காங்க. அதுவும் உயிலைச் சேர்ந்ததுதான்.  படிக்கறேன்.”
“ஆதி கண்ணா, மது செல்லம்… உங்க ரெண்டு பேர் மேலயும் எனக்கு கொள்ளை பிரியம். தாத்தா என்னை விட்டு போனதும் வாழ்க்கையில இனி ஒண்ணுமில்லைன்னு நான் நெனச்ச காலத்துல, ஒரு விடிவெள்ளியாய் வந்தான் என் பேரன் ஆதி. யாருக்கு யார் உதவினோமோ அப்போ, ஆனா ஒருத்தரைப் பார்த்து ஒருத்தர் ஸ்திரமானோம். சபரியும் ஆதியும் வாழ்க்கையை புதுசா வாழ என்னை பழக்கிவிட்டாங்க.
எனக்குன்னு ஒரு மகளா வந்து , மக இல்லைங்கற குறையும் தீர்த்து வெச்சா என் செல்லம் மது. அவளோட சேர்ந்து , வாழ்க்கையோட சின்ன சின்ன சந்தோஷங்களை கடந்து போயிடாம, நின்ணு அனுபவிக்க கத்துக்கிட்டேன்.
இத்தனை வருஷங்களையும் எனக்கு சந்தோஷங்களை அள்ளித்தந்த என் பேரனும் பேத்தியும் கல்யாணம் பண்ணிக்கணும். இந்த வீட்ல அவங்க குழந்தைகள் ஓடி விளையாடணும்ங்கறதுதான் என்னோட ஆசை. “
“வாட்… நோ…”, ஆதியும் மதியும் ஒரே குரலில் அலற, அவர்களின் பெற்றோருமே அதிர்ந்து பார்த்தனர்.
“அங்கிள்… இதெல்லாம் செல்லாது. “, என்று ஆதியும், “ பாட்டிக்கு விளையாட அளவே இல்லாம போச்சு.”, என்று மதுவும் குதிக்க, நவனீதன் பொறுமையாய் பார்த்திருந்தார்.

Advertisement