Advertisement

அத்தியாயம் -31

ஞாயிறு காலையில் சபரியின் தந்தை திருமலை பரபரப்பாய்க் கிளம்பி, மனைவி ரஞ்சிதத்தயும் சபரியையும் கிளப்பிக்கொண்டிருந்தார்.

“பா… எதுக்கு இப்படி படுத்தறீங்க ? ஒன்பது மணிக்குத்தான முஹூர்த்தம் ?”, என்று சபரி கேட்க்கவும்,

“டேய், ஒண்ணு விட்ட தங்கைன்னாலும் ராணிக்கு நாந்தாண்டா அண்ணன். அப்ப தாய் மாமன் ஸ்தானத்துல நான் தான இருக்கணும் ?  ரஞ்சிதம் தாய்மாமன் பட்டம் கட்ட எடுத்து வெச்சிகிட்டயா ?”, என்று மனைவியைக் கேட்டார்.

அனைவரும் காரில் ஏற, “ எல்லாம் இருக்கு. உங்க சொந்தத்திலயே தப்பி பொறந்த நல்ல மனுஷி ராணிதான். பணம் காசுக்கு பஞ்சம்னாலும் குணம் தங்கம். அவ பொண்ணு புவனாவும்  நல்ல மாதிரி. பொறுப்பான பொண்ணு. அவளுக்கு செய்யலாம். தப்பில்லை.”, ரஞ்சிதம் பாராட்டவும், வண்டியோட்டிக் கொண்டிருந்த சபரி ‘அஹா, அம்மாவே நல்லவங்கன்னு சர்டிஃபிகேட் குடுக்கறாங்களே.’, என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டான்.

இவர்கள் அந்த சிறிய மண்டபத்தில் நுழையும் போது மாப்பிள்ளை பெற்றோருக்குப் பாத பூஜை செய்து கொண்டிருந்தான். சபரி நாற்காலியில் அமர்ந்து போனைப் பார்க்க, ரஞ்சிதம் உறவுகளைத் தேடிப் போக, திருமலை தன் மச்சானை தேடிப் போனார்.

மணமகள் வந்து மறுகூரைப் புடவையை வாங்கிப்போனது கூட தெரியாமல் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்தவனை ரஞ்சிதம் தட்டி அழைத்தார்.

“சபரி, அப்பா சம்மந்திங்க கூட பேச போனாங்க, இன்னும் வரலை. என்னன்னு பார்த்து கூட்டிட்டு வா. டிபன் சாப்பிடலை அவர்.”

மணமகன் அறை பக்கம் சென்ற சபரி, பேச்சுக் குரல் ஓங்கிக் கேட்கவும், உள்ளே நுழைந்தான்.

“சம்மந்திம்மா. இப்பவே என்ன அவசரம், வீட்டை உங்க மகன் பேருக்கு மாத்த கேட்கறீங்க ?”, திருமலை பொறுமையை இழுத்து வைத்து கேட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது. அவன் அத்தை மாமா கண்களில் கலக்கமும் கண்ணீருமாய் நிற்க, மாப்பிள்ளையின் தாய் வீராப்பாய் பேசிக்கொண்டிருந்தார்.

“இங்க பாருங்க, அந்த வீட்டு பேர்ல கடன் வாங்கித்தான் கல்யாணம் செய்யறாங்கன்னு இப்பத்தான் தெரிஞ்சுது. அது ஒண்ணுதான் இவங்க சொத்து. அதை வித்துட்டா, என் பிள்ளைக்கு என்ன டவுரி தேறும் ? இவங்க போடற பத்து பவுனுக்கு, மாசம் இருவத்தஞ்சாயிரம் வாங்கற என் பையன் வேணுமா ?”

கேட்டுக்கொண்டிருந்த சபரிக்கு ஆத்திரம் பொங்கினாலும் இழுத்துப்பிடித்து அமைதியாக இருந்தான். அப்பொழுதுதான் வந்தாள் அவள். உடையிலேயே மணப்பெண் என்று தெரிந்தது.

“எங்க அப்பா அம்மா இருக்கற வரை எங்க வீடு அவங்களதுதான். யார் பேருக்கும் மாறாது.”, உறுதியாக வந்தது அவள் குரல். அம்மா சொன்னாங்களே பேரை என்று சபரி யோசிக்கையிலேயே,

“புவனா, நீ எதுக்குமா வந்தே ? போய் ரெடியாகு ?”, என்றார் அவள் அன்னை.

“இரும்மா.”, என்றவள் வருங்கால மாமியாரைப் பார்த்து, “ உங்க பிள்ளை இருவத்தஞ்சாயிரம் சம்பாதிச்சா, நானும் பதினஞ்சாயிரம் சம்பாதிக்கறேன். என்னவோ கையை வீசிகிட்டு உங்க வீட்டுக்கு வர மாதிரி பேச வேண்டாம். வீட்டை உங்க பிள்ளை பேருக்கு எழுதி வெச்சிட்டு எங்க அப்பா அம்மா என்ன தெருவில நிப்பாங்களா ?”, என்றாள் அழுத்தமாக.

“என்ன, நீ அமைதின்னு பார்த்தா சரியான அடாவடியா இருப்ப போலிருக்கே ?”, என்று சம்மந்தியம்மா குதர்க்கமாக பேச,

“ஆமாம். உங்க..”, எதோ பேசப் போனவளை தடுத்தார் அவள் தந்தை.

“எப்படியும் உனக்குத்தானேமா அது எப்ப குடுத்தா..”, என்று சொன்னவரை தடுத்தவள், “இப்பவே கழுத்தை பிடிக்கற மாதிரி கேக்கறாங்க. மொத்தமா அட்டையா உறிஞ்சிட்டு சக்கையா தூக்கிப் போடுவாங்கப்பா. என் பேர்ல எழுத சொன்னாக்கூட ஒரு நியாயம் இருக்கு. அது கூட இங்க இல்லை. எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்.”, உறுதியாய் ஒலித்தது புவனாவின் குரல்.

சபரிக்கு ‘சபாஷ்.’, என்று கத்தி விசிலடிக்கத் தோன்றியது. பெண்ணின் பேச்சைக்கேட்டு ஆளாளுக்குப் பேச,

“உனக்கு வேற கல்யாணம் நடந்துடுமா? இப்படி அடங்காபிடாரிய யார் கட்டுவா, நானும் பார்க்கறேன்.”, சம்மந்தியம்மாவின் குரல் ஆங்காரமாய் ஒலிக்க,

“உங்க குடும்பத்துல கல்யாணம் செய்துகிட்டு தினம் தினம் வேதனைப் படறதைவிட, கல்யாணம் நின்னு போச்சுங்கற ஒரு வருத்தத்தோட எங்க அப்பா அம்மாவோட நிம்மதியாத்தான் இருப்பேன்.”, என்று சொன்னவள், “நீங்க சொல்ற விலைக்கு உங்க பிள்ளையை வாங்கற அளவுக்கு அவன் வொர்த் இல்லை வேற இடத்துல வித்துக்கோங்க. ஹேய், “, என்று முழித்துக்கொண்டிருந்த மாப்பிள்ளையை சிட்டிகைப் போட்டுக் கூப்பிட்ட புவனா, “நீ கட்டியிருக்க வேட்டி கூட என் காசுல வாங்கினதுதான். கழட்டி குடுத்துட்டு, உங்கம்மா மூக்கால அழுதுகிட்டு வாங்கின புடவையை சுத்திகிட்டு போ.”, என்றாள் நக்கலாய் அவன் காலடியில் கூரைப் புடவையை வீசியபடி,

“என்னடி, கொழுப்பா…”, என்று அந்தம்மா அலற, “இன்னும் அஞ்சு நிமிஷம் இருந்தா, வரதட்சணை கேஸ்ல உங்களை உள்ள தள்ளிடுவேன்.”, என்று அசராமல் மிரட்டினாள்.

“சத்தியமா உனக்கு கல்யாணமே ஆகாதுடி…”, என்று அந்தம்மா சாபமிடுகையில், சபரி அவன் தந்தையின் காதைக் கடித்தான். ஒரு நொடி திடுக்கிட்டவர், மெச்சுதலாய் பார்த்து, “ பாண்டி மச்சான், தங்கச்சி ராணி, என் பிள்ளை சபரிக்கு உங்க மகளை கட்டித்தருவீங்களா ? “, என்று கேட்டிருந்தார்.

ஆதியிடம் போனில் விவரித்துக்கொண்டிருந்தான் சபரி.

“அம்மாவை நான் பேசி சம்மதிக்க வைக்க, அப்பா அவங்க வீட்ல பேச, அரை மணி நேரத்துல புவனா கழுத்துல தாலி கட்டினேன்டா. கனவு மாதிரிதான் இருக்கு.”

ஆதி எதிர்புறம் எதோ கேட்க,

“சே சே… அனுதாபம் இருந்தா, காசு  பணம் உதவியிருப்பேன். இல்லை அவங்களுக்கு நம்ம பாக்ட்டரில வேலை போட்டு கொடுத்திருப்பேன். அதில்லை ஆதி. நிஜமாவே அவ தைரியம் ரொம்ப பிடிச்சது. இக்கட்டான சூழ்னிலை. தெளிவா யோசிச்சா. இரண்டுமே நெகடிவ் சாய்ஸ்தான் அவ முன்னாடி இருந்தது, இருந்தாலும் சுத்தி இருக்கவங்க ப்ரஷரை எதுவும் எடுத்துக்காம பதறாம முடிவு எடுத்தது பயங்கரமா இம்ப்ரெஸ் செஞ்சுதுடா.”, என்று விளக்கியபடியே திரும்ப, அங்கே கதவோரம் சாய்ந்தபடி நின்றிருந்தாள் அவன் மனைவி புவனா.

“நான் திரும்ப கூப்பிடறேன் ஆதி. நீ மதுவுக்கு சொல்லிடு. நான் அப்பறம் பேசறேன்.”, என்றவன் ‘ஒப்புதல் வாக்குமூலம் குடுத்த மாதிரியாடா பேசுவ, அவ வந்தது கூட தெரியாம’, என்று வழிந்தவாறே கைப்பேசியை துண்டிக்கவும்,

“என்னை அனுதாபத்துலதான் கல்யாணம் செய்துகிட்டீங்கன்னு நினைச்சேன். அதனாலதான் நான் உடனே கல்யாணம் வேண்டாம்னு சொன்னாலும் எங்க அப்பா அம்மா ஒத்துக்கலை. கொஞ்சம் சஞ்சலத்தோடதான் சம்மதிச்சேன். நன்றி. அப்படியில்லைன்னு சொன்னதுக்கு”, என்றாள் புவனா.

மையமாய் தலையாட்டினான் சபரி. ‘அப்ப, அப்பா அம்மாக்காகத்தான் சரின்னாளா ? முதல்ல வேண்டாம்னு சொன்னாளா ?’,  உள்ளுக்குள் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது.

“உங்களை எனக்கு முன்னாடியே தெரியும். உங்க வீட்டுக்குக் கூட வந்திருக்கேன். அப்போ நீங்க பெங்களூர்ல காலேஜ் படிச்சிட்டு இருந்தீங்க. உங்க அம்மா உங்க பெருமையைத்தான் சொல்லிகிட்டு இருந்தாங்க. அவங்க சொன்னதுக்கும் நான் பார்த்ததுக்கும் சம்மந்தமே இல்லை.”

“பார்த்திருக்கியா ? எப்ப ?”

“ஒரு வாட்டி, நீங்க காலேஜ் படிச்சிட்டு இருந்தப்ப நான் ஊட்டிலர்ந்து அப்பாவோட திரும்பி பஸ்ல வந்துட்டிருந்தேன், குன்னூர் கிட்ட, ரோட்டோரம் நீங்களும் உங்க ஃப்ரெண்டும் பாட்டிலும் கையுமா அலப்பறை செய்துகிட்டிருந்தீங்க. அப்பா தூங்கிட்டார். கொஞ்சம் ட்ராபிக் ஜாம் செய்துட்டீங்க.”, நமுட்டு சிரிப்போடு சொல்ல,   ‘அஹா… இன்ட்ரோ சிரியில்லையேடா சபரி..’, என்று முழித்தவன்,

“நானா ? இருட்டுல உனக்கு சரியா தெரிஞ்சிருக்காது.”, என்று சமாளித்தான்.

“நீங்க ரெண்டு பேரும் தலையில டார்ச் லைட் இருக்கற மாதிரி ஹெட்லைட் போட்டிருந்தீங்க. உங்க வீட்டுக்கு வந்தப்போ உங்க போட்டோஸ் நிறைய பார்த்திருக்கேன். தெளிவா அடையாளம் தெரிஞ்சுது. “, என்று விம் போட்டு விளக்கவும்,

“ஹி..அது சும்மா விளையாட்டுக்கு.”, என்று இழுக்கவும்,

“அப்பறமும் கூட, ஒரு வாட்டி சிம்ஸ் பார்க்ல, உங்க ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து பொண்ணுகளைப் பார்த்து சைட் அடிச்சி, பாட்டு பாடி கலாட்டா செய்துகிட்டு இருந்தீங்க.”, மென்று விழுங்கினாலும், சபரியின் திருட்டு முழியில் புன்னகை எட்டிப் பார்த்தது புவனா முகத்தில்.

“ஹி …ஹி… அது சும்மா… காலேஜ் டைம்ல…”, ‘ஜாதகத்தையே வெச்சிருப்பா போலவேடா….சபரி, சிக்கிட்டியோ ? அதான் வேண்டாம்னு சொன்னாளோ ?’, என்று உள்ளுக்குள் ஜெர்க்காகிக் கொண்டிருந்தான்.

“இப்ப ரொம்ப பொறுப்பு, சின்ன வயசிலயே நல்ல பதவியில இருக்கீங்க. நம்ம சொந்தத்துல கூட சில பேருக்கு வேலைக்கு ஏற்பாடு செய்திருக்கீங்க. அப்பா அம்மா மேல பாசமா இருக்கீங்கன்னு தெரியும். அந்த தைரியத்துலதான் சரின்னு சொன்னேன்.“, புவனாவே காப்பாற்றிவிட்டாள் சபரியை.

முடிவில் அவனைப் பற்றிப் பெருமையாக சொல்லவும், ‘பரவாயில்லை, நம்மள பத்தி இப்ப ஒரு நல்ல அவிப்ராயம் இருக்கு போல. இப்படியே மெயின்டெய்ன் பண்ணுடா சபரி.’, என்று உள்ளுக்குள் வார்னிங் கொடுத்துக் கொண்டே, புவனாவிடம் ஒரு பெருமையான பார்வை ஒன்றை வீசினான்.

“நம்மளை வர சொன்னாங்க. கூப்பிடத்தான் வந்தேன். வாங்க போகலாம்.”, என்று திரும்பினாள்.

பெண் வீட்டிற்கு சென்றுவிட்டு, தன் வீடு வந்த சபரி, மதுவிடம் பேசிக்கொண்டிருந்தான்.  “மது, அம்மா வீட்டு சொந்தம் இல்லாமயே கல்யாணம் முடிஞ்சிடுச்சு. அதனால ஒரு ரிசப்ஷன் அப்பா கோவைல அரேஞ் செய்ய ஹோட்டல் பார்க்க போயிருக்காங்க. புவனாக்கு ட்ரெஸ் உன் பொறுப்பு. நீ அவ கூட பேசிட்டு சொல்லு. நான் வேணுங்கற பணம் ட்ரன்ஸ்பர் செய்துடறேன்.”

பட்ஜட் பற்றிக் கேட்டிருப்பாள் போல, “ புவனாக்கு நான் கல்யாண சேலை கூட எடுத்துக்கொடுக்கலை. நோ பட்ஜெட். நீங்க ரெண்டு பேரும் என்ன டிசைட் செய்யறீங்களோ அதுதான்.”, என்று திரும்ப, இப்போதும் புவனா அவனைத்தான் பார்த்திருந்தாள்.

வரும் வழியில்தான் ஆதி, மதுவைப் பற்றி அவளிடம் சொல்லியிருந்தான் சபரி. பெண்கள் பேச, வெளியே வந்தவன் தாயைத் தேடிச் சென்றான். அவர் அமர்ந்திருப்பதைப் பார்த்தவன்,

“ம்மா…என்னமா வருத்தமா ?”

“ம்ச்…எவ்வளவு கனவுடா உன் கல்யாணம் பத்தி. இப்படி திடுதிடுப்புன்னு நடக்கும்னு சத்தியமா நினைக்கலை. எங்க வீட்டு ஆளுங்களுக்கு பதில் சொல்லி மாளலை.”

“விடுமா. எல்லா ஆசையும் ரிசப்ஷன்ல நிறைவேத்திடலாம். மதுவையே உனக்கு புடவை எடுக்க சொல்லட்டுமா இல்லை கோவைக்கு நாளைக்கு போகலாமா ?”, என்று அவரை திசை திருப்பினான்.

இரண்டு நாள் கழித்து, புதன் மாலை அந்த ஹோட்டலில் கோலாகலமாய் நடந்தேறிக்கொண்டிருந்தது சபரி – புவனா கல்யாண ரிசப்ஷன். அத்தனை ஏற்பாடுகளையும் முன்னின்று கவனித்திருந்தான் ஆதி. புவனாவின் அலங்காரம் மொத்தம் மதுவின் மேற்பார்வையில்.

மது  அழகான ஒரு பீச் கலரில் வெள்ளை முத்துக்களின் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தரை தொடும் சல்வாரில் இருக்க, ஆதியின் கண் அவ்வப்போது உரசிச் சென்றது. சபரி ஆதியை கலாய்க்க நேரமில்லாமல் அவன் மனைவியின் அழகில் சொக்கி நின்றான்.  சில பல ஆயிரங்களை முழுங்கிய ட்சைனர் டஷர் சேலை, கான்ட்ராஸ்ட் ப்ளவுசில் மதுவின் டிசைனில் தனித்துவமாகத் தெரிந்தாள் புவனா. புடவையின் நீலம் அவள் நிறத்தை எடுத்துக்காட்டியது.

“டேய்… கொஞ்சம் கெத்தாய் நில்லுடா. புவனாவை முழுங்கிடுற மாதிரியே பார்த்துகிட்டு இருக்க.”, ஆதி மிரட்டவும்,

“நாளைக்கு உன் கல்யாணத்துல நான் பார்க்கறேண்டா. இப்பவே உன் கண்ணு மதுவைத்தான் சுத்துது. எனக்கு தெரியாதா. வந்துட்டான் அடைவைஸ் செய்ய.”, என்று சபரி கலாய்த்தான்.

“புவனா, உனக்கு எதுவும் செல்ல பேரு வெச்சானா சபரி ? எல்லா பொண்ணுக்கும் வெப்பானே ?”, சபரியை தொக்காக மாட்டிவிட, சபரி அலட்டிக்கொள்ளவேயில்லை.

“ஒரு நேரத்துக்கு ஒரு பேரு சொல்றாங்கண்ணா. ஒரு பேரெல்லாம் எனக்கு பத்தாதாம்.”, புன்னகை பூத்து புவனா சொல்ல,

“அச்சோ..அதுவா முக்கியம் ? எல்லா பொண்ணுக்குமா? எத்தனை பொண்ணுன்னு நீ பொங்க வேண்டாமா புவனா ? இப்படி வெள்ளந்தியா இருக்கியே…”, என்று எடுத்துக்கொடுத்தாள் மது.

“முதல் நாள் நைட்டெல்லாம் ஒப்புதல் வாக்குமூலம் குடுத்துட்டாரே. நீங்க ரெண்டு பேரும் பழைய கதை எதையாச்சம் எடுத்து விடுவீங்கன்னு, யோசிச்சு யோசிச்சு சொல்லிகிட்டு இருந்தார்.”, புவனா சிரிக்க,

“உங்களை மாதிரி நல்லவங்க இருக்கும் போது, நான் உஷாரா இருக்கணும்தானே. “,ஆதியையும் மதுவையும் கெத்தாய் பார்த்துக் கூறினான் சபரி.

Advertisement