Advertisement

“அடப்பாவி, அதுக்காக உன் பர்ஸ்ட் நைட்டை இப்படியா வேஸ்ட் செய்வ ?”, ஆதி காதைக் கடிக்க, “ஒரு நைட் போனா பரவாயில்லை, எல்லாம் திடீர்ன்னு நடந்துச்சு. எங்களுக்குள்ள ஒரு கம்ஃபர்ட் வேணும்தானே ? அதான் பேசிக்கிட்டு இருந்தோம்.”. சபரியின் பதிலில் மெச்சுதலாய் தோள்தட்டினான் ஆதி.

“மச்சி, உன் ஹனிமூனுக்கு கோவால ரிசார்ட் புக்காகிடுச்சு. ஃப்ளைட்டும் போட்டாச்சு, எல்லாம் உன் மெயில்ல இருக்கும். இன்னும் இரண்டு நாள் இங்க முடிச்சுட்டு கிளம்பற. உன் லீவ் இன்னும் பத்து நாள் எக்ஸ்டெண்ட் பண்ணிட்டேன்.”, என்று சொல்லிக்கொண்டிருக்க,

மதுவோ புவனாவிடம், “நாங்க என்ன கலாச்சாலும், சபரி ஜெம் புவனா. ரொம்ப நல்லவன். நீ ரொம்ப லக்கி அவன் கிடைக்க.”, என்று பாராட்டிக்கொண்டிருந்தாள்.

“தெரியும் மது. அவர் பாசம் வெச்சிட்டா, உயிரா பழகுவார்னு தெரியும். உங்க பாட்டியோட செயின் பத்தி சொல்லி அதுல தாலிய கோர்த்துக்க சொல்லிருக்கார். என் அப்பா அம்மாகிட்ட, எங்க கூடவே வந்து இருங்க பெங்களூர்ல. அங்க வேலை பார்த்துக்கலாம்னு கூப்பிட்டார். அப்பாக்கு இங்க இருங்து போக மனசு வராது, ஆனாலும் அப்படி மாப்பிள்ளை சொன்னது ரொம்ப பெருமை. இந்த இரண்டு நாள்லயே நிறைய இப்படி சின்ன சின்ன விஷயம் பார்த்தேன்.”, புவனா மூச்சு விடாமல் கணவன் பெருமை பேசவும்,

“சபரி… ப்ரோ… நீ கில்லி ப்ரோ… ரெண்டே நாள்ல, பொண்டாட்டி உனக்கு ரசிகர் மன்றம் வெக்கற ரேஞ்சுக்கு ரெடி செய்ய தீயா வேலை பார்த்திருக்க ! வேற.. வேற லெவல் நீ. “, என்று கலாய்த்தாள் மது. “ஆதி… நீ பேசாம சபரி கிட்ட ட்யூஷன் போ. “, என்று ஆதியையும் வெறுப்பேற்றினாள்.

அடுத்த ஒரு மாதம் கழித்து, தனம் பாட்டி வீட்டில், நெருங்கிய உறவுகள் மட்டும் இருக்க எளிமையாக நிச்சயம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டான் ஆதி. இவர்கள் இருவரும் திருமணம் செய்ய சம்மதிக்கவுமே, வீட்டை இருவரின் பேரிலும் மாற்றி, கடைகளை இல்லங்களுக்கு விற்றுக் கொடுப்பதற்கு நவனீதன் ஏற்பாடுகளை தொடங்கிவிட்டார். ஸ்டோரேஜில் இருந்த பொருள்களெல்லாம் அதனதன் இடத்தில் மீண்டும் வீட்டில அமர்ந்துகொள்ள, பாட்டி வீடு புதிதாய் சாயம் பூசிக்கொண்டு மின்னியது.

நிச்சயத்தன்று பார்லருக்குச் சென்று ஐந்து மணிக்கு அழகுப் பதுமையாய் திரும்பிய மது காரைவிட்டு இறங்கியவள் மலைத்து நின்றாள். அவள் கிளம்பிச் சென்ற போது சாதாரணமாக இருந்த வீடு, இந்த நான்கு மணி நேரத்தில் மாறியிருந்தது. திரும்பி அவள் தோழி ஸ்வாதியைப்  பார்க்க, “ நீ முதல்ல போ மது, நான் அப்பறம் வரேன். “, என்று புன்னகைத்தாள்.

வாயிலில் இருந்து ஒரு நீண்ட குகை போல நிஜ கொடிகள், மலர்கள் கொண்டு பின்னப்பட்டிருந்தது. பூக்களின் வாசம் அசரடித்தது.  கீற்றாய் மேலிருந்த இலை கொடிகளூடே துளைத்த மாலைச் சூரியனின் வெளிச்சம் மட்டுமே. ஒரு காட்டுச் சோலைக்குள் நுழைந்ததுபோல இருந்தது.  பாதை  முழுதும் சிகப்புக் கம்பளம் போன்று குல்மொகார் பூக்கள் இறைந்திருந்தது. சற்றே மிரண்டு உள்ளே சென்றவள் மெல்ல எல்லாவற்றையும் பார்த்தபடி நடக்கவும், போர்ட்டிக்கோ தெரியாதபடி,  தொட்டியில் நின்ற மரங்கள், பூக்களால் நிரம்பியிருந்தது, வண்ண வண்ண லவ் பர்ட்ஸ் பறந்து கொண்டிருக்க, தனியே நின்றாள்.

பறவைகளின் கீச்சொலியை மீறி வயலின் இசைக்கவும், திரும்பி இசை வரும் திசை பார்க்க, அங்கே அவள் விருப்பமான வெளிர் மஞ்சள் ஸ்வெட்டர், ஜீன்ஸ் அணிந்து டெனிம் கோட்டை கையில் பிடித்தபடி நின்றிருந்தான் ஆதி, ஒரு கண் கவர் புன்னகையுடன்.

அடர் சிகப்புல் தங்க சரிகை வேலைப்பாடுகள் மின்னும் லெஹங்காவில் முழங்கை வரை மருதாணி மின்ன, பொருத்தமான நகைகளும், சிகப்பும் வெண்கற்களும் பதித்த நெற்றிச்சுட்டியும் அதன் கீழே இருந்த அலங்காரப் பொட்டும் என்று பார்த்துக்கொண்டே வந்தவன்,மிரண்ட அவள் விழிகளை பார்த்ததும், பார்த்த பார்வை விலகாமல், அருகே வந்து மதுவின் கைபிடித்து, ஒரு கால் மண்டியிட்டு,

“மதுவந்தி, எனக்கு இயற்கையை ரசிக்க கத்துக்கொடுத்த மாதிரி, வாழ்க்கையையும் ரசிக்க வைக்க வாழ் நாள் முழுக்க என்னோட வருவியா? உன் கண்ணால இந்த உலகத்தைப் பார்க்கணும்.  நமக்கு ரோல மாடலா நோனாவும் தாத்தவையும் எடுத்துப்போம். நம்ம அப்பா அம்மா வேண்டாம். எப்பவும் உனக்காக இருப்பேன். ஐ ப்ராமிஸ். ஐ லவ் யூ மது. வில் யூ மேரி மீ?”, ஆதி ரத்தின சுருக்கமாய்க் கேட்கவும், கண்ணில் கண்ணீர் ததும்ப சிரித்துக்கொண்டே மதுவும் மண்டியிட்டு அவனை கட்டிக்கொண்டு, “யெஸ்… யெஸ் ஆதி…நானும்…நோனா தாத்தா மாதிரி… எப்பவும் உன்னோடவே…”, என்று நெற்றி , கண்கள் என முத்தம் தர, அவளை அதற்கு மேல்  தடுத்தவன், “ஷ்… எல்லாம் ரெக்கார்ட் ஆகுது.”, என்றான்.

“ஹ..”, சட்டென்று விலகி அவனை முறைத்தவள், “ரிகார்ட்  ஆகுதா?”, என்று திரும்பி காமராவைத் தேட,

“விஷுவல் மட்டும்தான்.  நீ லவ் சொல்லுடி…நான் மட்டும்தான் சொல்லிருக்கேன்.”, என்றான் ஆதி.

“நீ ரிகார்ட் செய்யற, எனக்கு கூச்சமா இருக்கு… அதான் சொன்னேனே… அவளதான்.”, விலகி எழவும், உடன் எழுந்தவன் சிரித்தபடி, “இரு மறந்திட்டேன்.”, என்று அவள் கை பிடித்து பாக்கெட்டிலிருந்து வைர மோதிரம் ஒன்றை மாட்டினான். அவன் போடும் நேரம்  ‘வானே வானே’ பாடல் ஒலித்தது. ஸ்க்ரிப்டில் இல்லாது, இது சபரி சேர்த்திருப்பது புரிந்து, காமிரா நோக்கி  கை காட்டினான் ஆதி, மதுவிடமிருந்து பார்வையை விலக்காமலேயே.

“ஹே…பிங்க் டைமண்ட்.”, ஆச்சரியமாய் ஆதியைப் பார்க்க, “ம் … என் ராணிக்கு ஸ்பெஷல். இரு இன்னும் ஒண்ணு இருக்கு.”, என்று சென்றவன், மூலையில் இருந்த ஒரு பேப்பரை விலக்கி, இரு கைகளில் அள்ளிக்கொண்டு வந்தான் இரு பெரிய பூங்கொத்தை.

“ஹோ… ஹே… ட்யூலிப்ஸ்… அச்சோ எல்லா கலர்லயும்… ஹௌ லவ்லி.” , ஆர்பரித்த மது, எதிர் புறம் இரு கை கொண்டு கட்டிக்கொள்ள, அவளின் ஆர்பரிப்பைப் பார்த்தவன்,

“தெரியும்டி… பிங்க டைமண்ட்விட வரவேற்பு இதுக்குத்தான் இருக்கும்னு தெரிஞ்சுதான் இதை வரவழைச்சேன்.”, என்று சிரித்தான்.

பூக்கள் இருபுறமும் அவன் கைகளில் இருக்க நடுவில் அவன் மார்பில் சாய்ந்த  மது நிமிர்ந்து அவன் கண் பார்த்து, “ ஐ லவ் யூ சோ மச் ஆதி… என்னை முழுசா புரிஞ்சு வெச்சிருக்க. “, என்று சொல்லும்போதே, மீண்டும் கண்கள் நீர் கோர்க்க, எட்டி ஆதியின் கன்னத்தில் முத்தம் வைத்தாள், பூக்கள் மறைத்திருக்கும் தைரியத்தில்.

“கேடி… தாங்க்ஸ்..”, என்று சிரித்தவன், ஒரு கட்டுப் பூவை அவள் கையில் திணித்து, “ வா, உள்ள போவோம். எல்லாரையும் உள்ளயே இருக்கச் சொல்லி சபரியை காவலுக்கு நிக்க சொல்லிருக்கேன். “

“அச்சோ ஸ்வாதி வெளிய நிக்கறா..”, என்று திரும்ப,

“புதுசா வரவங்க உள்ள வந்துடாம பிடிச்சி வைக்க அவ அங்க நிக்கறா. நாம் உள்ள போனதும், சபரி அவளை கூப்பிடுவான். நீ வா. இதெல்லாம் பக்கா பளானிங்ல ஓடுது.”, என்று சும்மாயிருந்த கையால் அவள் இடை அணைத்து,  மதுவை விட்டு கதவை திறக்கச் சொல்லி பின்னே இருக்க,

“மது… ப்ளொவ்ஸ்ல முதுகைக் காணோம்…”, ஆதி அலறி பிடித்து நிறுத்த,

“அதான் கயறு கட்டிருக்கில்ல. தாவணி மாதிரிதான் துப்பட்டாவை போட்டிருக்கேன், பாவாடையும் ஹை-வெய்ஸ்ட்தான? “ ,என்று முகம் மட்டும் திரும்பி சிரித்தாள்.

அவள் முதுகைப் பார்த்து கண்ணை விலக்க முடியாது,“ இந்த நெட் துணிக்குப் பேரு தாவணியா? கடவுளே இன்னிக்கு ஒரு வழியாகப் போறேன்.”, என்று தொங்கிக்கொண்டிருந்த முந்தானையைக் கொண்டு பாதி முதுகை மறைத்து, அவள் கையில் நுனியைத் திணித்தான். “பிடிச்சிகிட்டே இரு. விட்டுடாத. என்ன டிசைனிங் படிச்சியோ? “, என்று முனகியபடியே கதவை திறந்து உள்ளே நுழையவும், ஓவென்று ஆர்பரிப்பு.

இரண்டு காமெராவில் பதிந்த அவர்களது ப்ரபோசல், உள்ளே லைவ் ரிலே ஆகியிருந்ததால், அனைவர் முகத்திலும் சிரிப்பு. ஆளாளுக்கு ஓட்டிக்கொண்டிருந்தார்கள்.

சங்கரியோ, “மண்டி போட்டு என்ன மது சொல்லுச்சு ஆதி தம்பி? ஹ்ம்ம் ஒரு மைக்கும் வெச்சிருக்கலாம்.”, என்றே சொல்லிவிட, மதுதான் முகம் சிவந்து போனாள்.

சபரியோ…”ஏன் மது..இந்த ரோஜாப்பூ போட்டா நீ அதுமேல நடந்து வரமாட்டியா? குல்மொஹார் தான் வேணும்னு ஒரே அடம். நைட்டே போய் ஒவ்வொரு மரத்துக்குக் கீழ ப்ளாஸ்டிக் ஷீட் விரிச்சு, விடியக் காலைல நானும் ஆதியும் இரண்டு ஆளை கூட்டிட்டுப் போய் வாரிக்கிட்டு வந்தோம்.”, என அவன் பங்குக்கு சொல்ல, ஏன் குல்மொஹர் என்று புரிந்த மதுவோ, ஆதியைக் காதலுடன் நோக்க,

‘ஆஹா… மதுகிட்ட இவன் ஸ்கோர் செய்ய எப்பவும் போல நம்ம தூக்கத்தை கெடுத்தானா கேடி..’, என்று தலையில் அடித்தபடி நகர்ந்தான் சபரி,  நிச்சய வேலைகளை கவனித்துக்கொண்டிருந்த மனைவியை நோக்கி.

ஆதியின் மெனக்கெடலைப் பார்த்த மனோகருக்கு, “ மாப்பிள்ளை நமக்கு மேல ரொமான்ஸ் மன்னனா இருப்பாரு போலவே.”, என்று குதுகலம், பெருமை.

ப்ரபாகருக்கோ, “அடப்பாவி, சினிமா ரேஞ்சுக்கு இப்படியெல்லாம் செய்யறானே. பேசாம இவங்கிட்டயே ஐடியா கேட்டு சரசுவை தாஜா செய்யலாமா?”, என்று ஓடியது.

மதுவின் அம்மா, “ஓஹ்… இது என் சர்க்கிள்ல காமிக்கணும். பாரு என் பொண்ணை எப்படி தாங்கறாரு மாப்பிள்ளைனு. எல்லார் காதுலையும் புகை வரும்.”, என்று நினைக்க,

இதைக் கண்டு நிஜமாகவே நெகிழ்ந்தது சரஸ்வதியும், சுப்புவும்தான்.

“தனம்மா இருந்து இதைப் பார்க்கக் குடுத்து வைக்கலியேம்மா.”, என்று சுப்பு வாய்விட்டே சொல்ல,  கண்கள் பனிக்க பார்த்துக்கொண்டிருந்த சரஸ்வதியோ, “ பார்த்துகிட்டுத்தான் இருப்பாங்க சுப்பு. இவங்களுக்கே மகளா வந்து பிறப்பாங்க.”, என்றபடி நிச்சயதார்த்தத்தைத் தொடங்க ஐய்யரைத் தேடிச் சென்றார்.

தனம் பாட்டி தன் ஆசைப்படியே பேரனும் பேத்தியும் அவர் தாத்தாவுடன் மனமொத்து வாழந்த இந்தக் குன்னூர் வீட்டில் வைத்து தங்கள் காதலையும் கல்யாணத்தையும் உறுதி செய்ய, போட்டோவிலிருந்தபடியே பார்த்து ஆசீர்வதித்துக்கொண்டிருந்தார்.

நிறைவுற்றது…

Advertisement