Advertisement

அத்தியாயம் -30

ஜிம்மில் நுழைந்த ஆதியும் சபரியும் உடை மாற்றி வர தனியறைக்குச் சென்றார்கள். முதலில் வந்த சபரி, போனுடன் ஆதியின் வரவுக்காக நின்றிருந்தான்.

ஆதி ஜிம்மில் வெர்க் அவுட் செய்வதை வீடியோ எடுக்க வேண்டும் என்று சபரியிடம் சொல்லியிருக்கவும் போனுடன் நின்றிருந்தான். அரவம் கேட்டு நிமிர்ந்த சபரி அதிர்ந்து, “டேய் என்னதிது?”, என்று அலறினான்.

“என்னடா?”

“என்னடா…. ஆர்டின் போட்ட அன்ட்ராயர் மட்டும் போட்டிருக்க? பனியன் கூட இல்லை….”,

“டேய் ஷார்ட்ஸ் தானடா போட்டிருக்கேன்?” பல்லெல்லாம் தெரியக் கேட்டான் ஆதி.

“ஹான்…ஷார்ட்ஸ்னா இதோ முட்டி வரைக்கு வரணும்.”, என்று தன் முட்டியைக் காட்டியவன், நீ போட்டிருக்கறது தொடை  வரை கூட வரலை. எங்க ஊர்ல இது அன்ட்ராயர் தான்.”,  சபரியின் காண்டில் சிரித்தவன், “பரவாயில்லை. இது மென்ஸ் ஜிம் தானேடா.  நான் வெய்ட்ஸ் அடிக்கறேன், நீ வீடியோ எடுக்க ரெடியா?”

“கிரகமே, பனியனாவது போடேன் டா?”, சபரி கெஞ்ச,

“பனியன் போட்டா மசில் எப்படி மச்சி தெரியும்?”, ஆதி அப்பாவியாய் கேட்க,

“டேய் டேய்… நீ மதுவுக்கு அனுப்ப வீடியோ எடுக்கணும்னு சொல்லும்போதே நான் உஷாராகிருக்கணும்டா. என்னை பலான விடியோ எடுக்கற ரேஞ்சுக்கு ஆக்கிட்ட. உங்க போதைக்கு சின்ன பையன் நாந்தானாடா சிக்குனேன்? இதெல்லாம் நல்லாயில்லைடா…”, முறைப்பும் புலம்பலுமாக சபரி கெஞ்சினான்.

இந்த முறை வாய்விட்டு சிரித்த ஆதி, “ டேய், உனக்கு நிச்சயமானதும், நான் இதே மாதிரி எடுக்கறேன்டா..”, என்று டீல் பேசினான். சபரிக்கும் அவன் தந்தை பெண் பார்த்துக்கொண்டிருந்தார்.

“நீதான? நல்லா எடுப்பியே? எனக்கிருக்க சின்ன தொப்பையை ஜூம் போய் பெரிய தொந்தியா காட்டுற மாதிரி எடுப்ப. எனக்கு தெரியாதா? ஆணியே புடுங்க  வேண்டாம். போய் சீனைப் போடு. பழகின பாவத்துக்கு எடுத்துத் தொலைக்கறேன், என் கண் அவிஞ்சு போகலைன்னா…”, சிலிர்த்துக்கொண்டாலும், அழகாகவே எடுத்துக் கொடுத்திருந்தான் சபரி.

பாட்டிக்கு கொள்ளி போட்டிருந்ததால், ஒரு வருடம் முடிந்த பின்னரே திருமணம் என்று முடிவெடுத்திருந்தார்கள். இந்த நான்கு மாதமாய் ஆதி, மதுவின் காதல் எல்லா தொலை தொடர்பு சாதனங்களையும் சூடேற்றிக் கொண்டிருந்தது.  கூட வே சபரியையும். அவ்வப்போது ஆதியும் சென்னை சென்று வந்தான்.

அன்று கோவையில் அவள் தந்தையைப் பார்த்துவிட்டு கிளம்பி குன்னூர் வரும் வரையிலும் மது ஒன்றுமே பேசாமல் இருந்தாள். ஆதிக்குத்தான் அவளைக் கண்டு தவிப்பாய் இருந்தது. நோனா வீடு வந்து சேர்ந்ததும், அவளை அணைத்துக் கொண்டவன், “மது …என்ன யோசிக்கற? எதுவும் நீயா நினைச்சுக்காதே. எங்கிட்ட சொல்லு.”, என்று கெஞ்ச,

“ஷ்… எதுவுமில்லை ஆதி. இதை அப்பா எங்கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தா என்ன குறைஞ்சிருக்கும்னுதான் யோசிக்கறேன்.  என்னைப் பத்தின நினைப்பே இல்லை அவங்களுக்கு. அப்படித்தான அர்த்தமாகுது?”, கண்கள் கலங்கியிருந்தது.

“மது… ப்ளீஸ், அவங்களுக்காக அழாதே. உன் கண்ணீருக்கு அவங்க வொர்த் இல்லைடா.”

மூக்கை உறிந்து சிரித்தவள், “என் முட்டாள்தனத்தை நினைச்சுதான் கண்ணீர். என்னவோ நான் இல்லாட்டா அவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு அவங்களுக்கு ஏத்த வாழ்க்கையை அமைச்சிருப்பாங்க. என்னாலதான் பிடிக்காம இப்படி இருக்காங்கன்னு நினைச்சிகிட்டு…. அவங்க மனசு இன்னும் என்னால கஷ்டபடக்கூடாதுன்னு நடந்துகிட்டதெல்லாம் நினைச்சா….”

“மது… வேண்டாம். உனக்கு புரிய வெச்சிருக்க வேண்டிய பெரியவங்க அதை செய்யலை. உன் வயசுக்கு மீறின பக்குவத்தோட நீ இருந்திருக்க. தப்பெல்லாம் அவங்க மேலதான். இந்த மாதிரி ஒரு சூழ்னிலையில வளர்ற எத்தனையோ பிள்ளைங்க வழி தவறி சின்னாபின்னமாகறாங்க. உன் பக்குவம்தான் உன்னை நேர் வழியில நல்லபடியா நடத்திருக்கு., வேற ஒருத்தரா இருந்திருந்தா இன்னைக்கு அடிதடியாகியிருக்கும். உங்கப்பாவா போயிட்டதால வந்த கோவத்தையெல்லாம் அடக்கிக்கிட்டேன்.”, மிச்சமிருந்த கோபம் எட்டிப்பார்த்தது.

காதலாகிப் பார்த்த மது, “தாங்க்ஸ் ஆதி. நீ மட்டும் என்னை தொடர்ந்து வந்து, இப்படி உண்மையை சொல்ல வைக்கலைன்னா, நான் என்னவாகிருப்பேன்னே….”

அவள் வாயைக் கையால் மூடியவன், “ என்னவாயிருந்தாலும், என் பொண்டாட்டி ஆகறதைத் தவிர உனக்கு ஒரு சாய்ஸும் குடுத்திருக்க மாட்டேன். “, என்று முறைத்தான்.

அவன் விரல்களைப் பற்றி முத்தமிட்டவள், அவன் கண் நோக்கி, “ஆதி, ஐ…”, என்று காதலை சொல்ல ஆரம்பிக்க, மீண்டும் அவள் வாய் பொத்தியவன்,

அன்று அவள்  சொன்னதைப் போலவே, “ஷ்… ஒண்ணும் சொல்லாதே மது.  இது…இந்த ஃபீல் நம்ம ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு. அப்படியே விட்டுடலாமே. இதுக்கு எந்த அடைமொழியும் வேண்டாம்.”, எனவும், மதுவின் முகமே விழுந்துவிட்டது.

“இப்படித்தாண்டி எனக்கும் இருந்துச்சு அன்னிக்கு. எவ்வளவு ஆசையா இருந்திருப்பேன் உங்கிட்ட சொல்ல? எவ்ளோ ஒத்திகை பார்த்திருப்பேன்? நிமிஷமா பஸ்பமாக்கிட்டல்ல? நானா எப்ப தோணுதோ அப்பத்தான் சொல்லுவேன். நான் சொன்ன அப்பறம்தான் நீ சொல்லணும். அதுக்கு முன்னாடி நீயும் சொல்லக் கூடாது.”, கண்களை உருட்டி மிரட்டினான்.

செல்லமாய் முறைத்தவள், அவன் விரல்களை கடிக்க, உதறி கையை எடுத்தான். “இராட்சசி..”

“நான் உங்கிட்ட அப்படி சொல்லும்போது எனக்கு எவ்ளோ கஷடமாயிருந்துச்சு தெரியுமா உனக்கு? நீ சும்மா என்னை பழி வாங்க இப்ப இப்படி சொல்ற. போ. நானா சொல்ல மாட்டேன்.”, முகம் திருப்பி நடந்தவளை இழுத்துப் பிடித்தவன்,

“மண்ணாந்தி…. போற போக்குல சொல்ற விஷயமா இது? ஃப்ர்ஸ்ட் டைம் ஸ்பெஷலா இருக்கணும். நீ எதிர்பார்க்காதப்போ, சர்ப்ரைஸா. அது வரைக்கும் வெய்ட் பண்ணு.”, அவள்  நெற்றியோடு முட்டி விளக்கவும், முகம் மலரச் சிரித்தாள் மது.

“அடடே… வாத்து கொஞ்சம் லவ் ப்ர்டா மாறுதே, வாட் அ மெடிகல் மிராக்கிள்!”, பொய்யாய் வியந்து கேலி செய்ய, அவள் கிண்டலில் சற்று முகம் சிவந்தவன், “எல்லாம் எங்களுக்கும் முதல்லயே தெரியும். காட்டிகிட்டதில்லை அவ்ளதான். வா அம்மாகிட்ட பேசிட்டு, கல்யாணத்தை ப்ளான் செய்யலாம்.”, என்று அழைத்துப்போனான்.

“என்னாடா… ஆஃப் ஆகிட்ட ? நின்னுகிட்டே கனவு காணறயா ? என்ன சொல்றா மதி.”,  மதி  என்று அழுத்தி உச்சரிக்கவும் நினைவு கலைந்த ஆதி சூடான பார்வை வீசினான்.

“ஜிம்ல இருக்கோம். ஒரு வெயிட்டை தூக்கி அடிச்சேன்னு வெச்சிக்கோ, நாளைக்கு குன்னூர் போகமாட்ட. இன்னொரு வாட்டி உன் வாயில மதின்னு வந்துச்சு….”, அதியின் மிரட்டலை தூசி போலத் தட்டிவிட்ட சபரி, “டேய்…உனக்கு மதுவுக்கு ஒரு செல்ல பேரு செலக்ட் செய்ய துப்பில்லை. ஒத்துக்கோ. ஒழுங்கா எங்கிட்ட கேட்டிருக்கலாமில்ல ?”

போன வாரம் ஒரு நாள் அலுவலகம் முடிந்து, ஸ்கைப்பில் மதுவிடம் கடலை போட்டுக்கொண்டிருந்தான் ஆதி.  வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருந்த சபரி, ஆதியின் அறையில் லைட் எரியவும், கதவைத் தட்டி எட்டிப் பார்த்தான்.

“வாடா…”, அழைத்த ஆதி, “சபரி மதி..”, என்று சொல்லியபடியே, லாப்டாப்பில் இணைத்திருந்த ஹெட் போனைக் கழட்டவும், “ ஹாய் மது…”, என்று சபரி ஆதியின் பின் நின்று கை ஆட்டினான்.

“ஹே ப்ரோ… எப்படி இருக்க ? பொண்ணு எதுவும் செட்டாச்சா ?”, என்று மது விசாரித்தது லாப்டாப்பின் ஸ்பீக்கர் வழியே வந்தது.

“எங்க மது…எங்கப்பா, அம்மாவைத் தாண்டியே வர மாட்டேங்குது. எதையாச்சம் கண்ல காட்டினாத்தான..”, என்று சலித்தவன், “ இரு இப்ப ஆதி உன்னை மதின்னா கூப்ட்டான் ?”

“ம்ம்… எல்லாரும் என்னை மதுன்னு கூப்பிடறதால, ஆதி அவனுக்கு ஸ்பெஷலா வேணும்னு, மதின்னு கூப்பிடறான். “, சொஞ்சம் வெக்கத்தோடு மது சொல்ல,

“அச்சோ மது… இப்படி  பச்சை மண்ணா இருக்கியே ? எப்படி இந்த பேருக்கு ஒத்துக்குவே ?”, என்று சபரி தலையில் அடித்துக்கொள்ள, ஆதியும் மதுவும் முழித்தார்கள்.

“ஏன் சபரி, என் பேரோட முதல், கடைசி எழுத்து சேர்த்தா மதி தான ?”, மது கேட்கவும்,

“அப்படின்னு சொன்னா நம்பிடுவியா ? ஆதிய தெரியாதா உனக்கு ? அவன் மண்ணாந்தியத்தான் சுருக்கி மதின்னு வெச்சிருக்கான்…அது தெரியாம…”, என்று சபரி சொன்னபடியே மெதுவாக எதிர்புறம் நகர,

“அப்படியா ஆதி ?”, மது கோபமாய் கேட்கவும், “ ஹே… இல்லடா…எனக்கு … நான் …அப்படியெல்லாம் நினைக்கல… இந்தப் பரதேசி… டேய்..” என்று  உறுமிய படி திரும்பி சபரியைப் பார்க்க, அவன் மூலையில் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தான்.

“பாரு… அந்தப் பக்கம் டான்ஸ் ஆடுறான்…”, என்று லாப்டாப்பை அவன் புறம் திருப்பும் முன் முகத்தை பாவமாக வைத்து, “ ஏன் மது… உன் பேரை சுருக்கணும்னா, துவா, தியா, வனினு எத்தனை விதமா மதுவந்திய கூப்பிடலாம் ? அது ஏன் மதி ? டவுட் வரது நியாயம்தான ?”

“ஆதி… அவன் கேக்கறது கரெக்ட்தான ? பதில் சொல்லு.”, மது கோபம் தணியாமல் கேட்டாள். திரும்ப காமெராவை தன் புறம் திருப்பியவன்,

“மதி…சத்தியமா எனக்கு இந்த பேரெல்லாம் தோணலை. இவன் நோனாக்கு வெச்ச பேரையெல்லாம் கலைச்ச மாதிரி இப்ப உங்கிட்ட ஆரம்பிக்கறான் மதி.”, ஆதி பாவமாக சொல்ல,

“ம்ம்…சரி…ஆனாலும் மதி வேண்டாம். நீ அப்படி நினைக்கலன்னாலும், நீ கூப்பிட்டா, இனி எனக்கு மண்ணாந்திதான் தோணும்.”, உதடு பிதுக்கி மது சொல்லவும், அவளை முறைத்தான்.

“. சரி போ. அதுக்காக அவன் சொன்ன பேர்ல எதையும் நான் யூஸ்  பண்ணமாட்டேன். இனி மதுதான்.”, ஆதி முறுக்கிக் கொண்டான்.

“என்னவோ போ மது, என் நண்பன் வாத்துதான். கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும்,  தட்டி தேத்தி வாழ்க்கை குடுமா.”, என்று வராத கண்ணீரைத் துடைக்கவும்,

“டேய்… “, அமர்ந்திருந்த ஆதி எழுந்து சபரி மீதி பாய்ந்து அடிக்க, “ஆ… மது… காப்பாத்து என்று அலறிய படியே ஆதியை உதறிய சபரி தள்ளி நின்று போக்குக் காட்டினான்.

அந்தப்புறம் மது கத்த, “ ஓடிடு… செம்ம காண்டுல இருக்கேன்.”, என்று பல்லைக் கடித்தபடி வார்த்தைகளை ஆதி துப்பவும்,

“சில் ப்ரோ… “, என்று இரு கைகளையும் தூக்கிக் காட்டி, திரையில் தெரிந்த மதுவுக்கு கை ஆட்டிவிட்டு தப்பித்தேன் சாமி என்று சபரி ஓடியிருந்தான்.

“மச்சி, அதுக்குத்தான என்னை இப்படி ஒரு வீடியோ எடுக்க விட்டு பழி தீர்த்துக்கிட்ட ? அதுக்கு இது சரியா போச்சு.”, என்று அன்று நடந்ததுக்கு இன்று சபரி சமாதானம் செய்தான்.

அதில் சிரித்த ஆதி, ட்ரெட்மில்லில் ஒடிய படியே, “ சரி நாளைக்கு குன்னூர் போக ரெடியா? என்ன ப்ளான் ஒரு வாரமும் ?” என்று கேட்டான். வரும் வாரத்தில் இரண்டு நாட்கள் பொது விடுமுறை வரவும், ஒரு வாரம் சேர்ந்தார் போல விடுப்பெடுத்து சபரி குன்னூர் செல்லவிருந்தான்.

“பெருசா ஒண்ணும் இல்லைடா. சண்டே ஒரு கல்யாணம் அப்பா சைட்ல, அதுக்கு போகணும். அப்பறம் அம்மா எதோ கோவில் போகணும்னு சொன்னாங்க.”, என்று சொன்னவன் வழக்கம் போல அரட்டையில் இறங்கினான்.

ஞாயிறு காலை எப்போதும் போல பறவைகளைப் பார்த்துவிட்டு வந்த ஆதி உணவருந்தி வந்து அமரவும், சரஸ்வதி “என்ன ஆதி. என்ன முடிவு செய்திருக்கீங்க ?”, என்று கேட்டார். ப்ரபாகரும் அவர் கிளப்பிலிருந்து வந்து அமர்ந்திருந்தார்.

“மதுக்கு பேசிடலாம்மா. நிச்சயதுக்கு ஓகேதான்.”, என்றபடியே அழைத்தான். பாட்டியின் திதி முடிந்து கல்யாணம் என்று முடிவாகியிருக்க, முதலில் ஒரு நிச்சயதார்த்தம் செய்துவிட நினைத்தார் சரஸ்வதி.

மது லைனில் வரவும், சுருக்கமாக பேசியவன் ஸ்பீக்கரில் போடவும், பரஸ்பர நலன் விசாரிப்பு முடித்து, சரஸ்வதி , “என்ன மது ? அடுத்த மாசத்துல நிச்சயம் வெச்சிக்கலாமாம்மா ? பெருசா இல்லைன்னாலும், வீட்டு பெரியவங்க வரைக்குமாவது ?”

“சரி அத்தை. ஒரு ரிக்வெஸ்ட்தான் எனக்கு. கல்யாணம் சென்னையிலயும் ரிசப்ஷன் பெங்களூர்லயும் நடக்குது. நிச்சயம் சொந்தக்காரங்க மட்டும்னா பாட்டி வீட்ல வெச்சிக்கலாமா? அவங்க ஆரம்பிச்சு வெச்சதுதான எங்க கல்யாணம் ?”

மது கேட்கவும், ஒரு பெரிய புன்னகை சரஸ்வதியின் முகத்தில். “உன்னை மாதிரி யோசிக்க தெரியலை பார் எனக்கு. கண்டிப்பா குன்னூர்லயே வெக்கலாம். உங்க பாட்டி இருந்திருந்தா அங்க வெச்சிக்க ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பாங்க. முக்கியமான வயசான சொந்தம் நிறைய கோவைலதான் இருக்காங்க. அவங்களுக்கும் வசதி. சரி கண்ணம்மா. ஆதி அப்பா மனோகர் அண்ணாகிட்ட பேசுவாங்க.“

இதைக் கேட்டுக்கொண்டிருந்த ப்ரபாகர், “ஆதி அப்ப குன்னூர் வீட்ட ரெடி செய்யணும். பெயிண்ட் அடிக்க, ரிப்பேர் வொர்க் செய்யன்னு. அடுத்த மாசத்துலயே ஒரு நல்ல நாள் பார்க்கணும். தள்ளி போட்டா மழை சீசன் ஆரம்பிச்சிடும், அப்பறம் அங்க வெக்கறது கஷ்டம்.”, என்று ப்ளான் போட ஆரம்பித்துவிட்டார்.

“பார்த்துக்கலாம்பா. சபரி அப்பா, லாயர் அங்கிள் இருக்காங்க. மேற்பார்வைக்கு சுப்பு அண்ணா இருக்கார்.”, ஆதி கூறிக் கொண்டிருக்கும் போதே, சபரியிடமிருந்து போன் வந்தது.

“மது, சபரி ஆதியைக் கூப்பிடறான். நான் வெக்கறேன் மா. நாம நாளைக்கு பேசலாம்.”, என்றவர், ஆதியின் போனை அவனிடம் திருப்பிக் கொடுக்க, சபரியின் அழைப்பு மீண்டும் வந்தது.

“சொல்லுடா, கல்யாணத்துல இருப்பேன்னு நினைச்சேன் ?”, என்று சொல்லியபடியே அழைப்பை ஏற்றான்.

“அமாம்டா. கல்யாணத்துக்குத்தான் போனேன். கடைசில கல்யாணமே எனக்குத்தான்.”

“வாட் ? என்னடா கலாய்க்கறயா ?”

“இல்ல மச்சி. இப்பதான் திடீர்னு மாப்பிள்ளையாகி கல்யாணமே முடிஞ்சிடுத்து. “, சபரியின் குரல் சீரியசாய் வரவும் அதிர்ந்து நினறான் ஆதி.

Advertisement