Advertisement

அத்தியாயம் – 3
மதியம் இரண்டு மணியளவில் மருத்துவமனையை அடைந்தாள் மதுவந்தி.  சுப்பு வாயிலிலேயே காத்திருந்தார்.
“பாட்டிக்கு இப்ப எப்படி இருக்கு சுப்பு  மாமா? டெஸ்ட் ரிசல்ட் வந்துடுச்சா ?”, கேள்விகளை அடுக்கியவாறே அவருடன் உள்ளே சென்றாள்.
ஐ.சி.யூவிற்கு வழி காண்பித்தவாறே, தளர்ந்த குரலில், “மதுமா… ரொம்ப பயமா இருக்குமா. பாட்டி கண்ணு முழிக்கவேயில்லை. ஒரே டியூபா போட்டிருக்காங்க. டாக்டர் வருவாங்கன்னு லாயர் சார் அங்கனவே இருக்கார்.”
“ஐ.சியூன்னும்போதே, இந்த ட்யூப் எல்லாம் மாட்டுவாங்கதான் மாமா. எல்லா உறுப்பும் ஒழுங்கா வேலை பாக்குதான்னு தொடர்ந்து செக் பண்றதுக்கான். அதுக்கெல்லாம் பயப்படவேண்டாம். “, அவருக்கும் தனக்கும் சேர்த்தே மது ஆறுதல் கூற,  லிப்ட் சரியான தளத்தில் நிற்கவும், இறங்கினார்கள்.
காரிடாரின் நீளத்திற்கு ஆங்காங்கே நாற்காலிகள் போடப்பட்டிருக்க, நோயாளிகளின் கவலை தோய்ந்த உறவினர்கள் சிலவற்றில் அமர்ந்திருந்தார்கள். இறுக்கமான ஒரு சூழல். அதை உணர்ந்தவாறே, மதுவின் கண்கள் லாயர் மட்டுமல்லாது, பாட்டியின் குடும்ப நண்பராகவும் இருந்த நவனீதன் அங்கிளைத் தேடின.
ஐ.சியு வார்ட் 2 என்ற கதவின் முன் டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தவர் தென்பட, வேக நடையில் அவர்களை அடைந்தாள் மது.
“மது, வாம்மா. டாக்டர், இது பாட்டியோட பேத்தி மதுவந்தி.  “, என்று மருத்துவருக்கு அறிமுகம் செய்ய, ‘நல்ல வாக்கு சொல்லுங்களேன்’, என்ற பாவனையில் மது அவர் முகம் பார்த்தாள்.
அனேக முறை அந்தப் பார்வையை கண்டிருந்த அந்த மருத்துவரோ, “ சாரிமா. சர்ஜரி பண்றதுக்கான வாய்ப்பு இல்லை, அதை தாங்கற சக்தியும் அவங்ககிட்ட இல்லை. இன்னொரு ஒரு மணி நேரத்தில அவங்களுக்கு குடுத்த மருந்தோட மயக்கம் தெளியும். நீங்க கொஞ்சம் பார்த்து பேசலாம். ஆனா நீங்க மென்டலா ப்ரிபேர் ஆகிக்கோங்க. அவங்களோட கடைசீ  மணி நேரங்கள் நெருங்கிட்டு இருக்கு.”
கண்களில் ஆறாய் நீர் பெருக்க, “ஏன் டாக்டர், காலையில நல்லாத்தான இருந்தாங்க.  திடீர்ன்னு எப்படி ?”
“சடன் அட்டாக்மா, அதுவும் சிவியரா வந்திருக்கு. வயசானதுல இருந்த தளர்ச்சியோட, அதுவும் சேர இதயம் ரொம்ப பலவீனமாகிட்டுது. இதயத்தோட தசைகள் ரொம்ப வீக்காகிடிச்சி. , என்றவர் இன்னும் சில மெடிகல் டெர்ம்ஸ் சொல்ல மதுவிற்குப் புரிந்ததெல்லாம், பாட்டி தன்னைவிட்டு போகப்போகிறார் என்பது மட்டுமே.
டாக்டர் அவள் தோள் தட்டிச் செல்ல, நவனீதன் அவள் கை பற்றி, “ மது , வா பாட்டியை பார்த்துட்டு வரலாம்.”, என்று உள்ளே அழத்துச் சென்றார்.
சுப்பு சொன்னது போல அத்தனை மெஷிங்கள் வயர்கள் மத்தியில் பாட்டி காணாமல் போயிருந்தார். அருகே சென்றவள், “பாட்டி” என்று மெதுவாக அழைக்க, சலனமில்லாமல் இருந்தார். முகம் வெளுத்துக் களைத்திருந்தது, மூச்சு விட மாஸ்க் முகத்தில் போட்டிருந்தது. அவர் சுவாசம் செய்கிறார் என்பதே அருகிலிருந்த ஹார்ட் பீட் மானிடர் மூலம்தான் தெரிந்தது.
“இன்னிக்கு என்ன பண்ணலாம் மதுமா ?”, என்று ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளையும் அவளுடன் எதிர் நோக்கும் நோனா, போறும் என்று ஓய்ந்துவிட்டதுபோலத்தான் பட்டது மதுவிற்கு.
பாட்டியின் கைகளை மெதுவே தேடிப் பிடித்தாள். ஏ.சி அறையின் சில்லிப்பு அவர் கைகளிலும் தெரிந்தது. கண்களை நீர் மறைக்க நின்றவளை, தோளணைத்து வெளியே கூட்டிச்சென்றார் நவனீதன்.
“மது கண்ணா. தைரியமா இருக்கணும். பாட்டி அவங்க  வாழ்க்கையை நிறைவா வாழ்ந்துட்டாங்க. அவங்க கடைசீ நேரத்துலயும் சந்தோஷமா இருக்கணும்.  அவங்க கண்ணு முழிச்சதும், அழாதேடா. தெம்பா பேசு. அவங்க எண்ணம் பூரா உன்னைப் பத்தியும் ஆதியைப் பத்தியும்தான். “
“சரி அங்கிள். “, என்று கண்ணை துடைத்தவள், “அந்த வளர்ந்து கெட்டவன் எப்ப வரானாம் ?”,என்றாள்.
சிரித்தவர், “ அவன் வர சாயந்திரம் ஆகிடும்மா. பாட்டி முழிச்சதும் விடியோ கால் பண்ண சொன்னான். பாட்டி முழிக்கறதுக்குள்ள, நீ கொஞ்சம் சாப்பிட்டு வா. அப்பதான் பாட்டி கூட இருக்க முடியும்.”
வேண்டாம் என்றவளை வம்பு செய்து சுப்புவுடன் அனுப்பி வைத்தார்.ஆதியின் தந்தைக்கும், மதுவின் தந்தைக்கும் , பாட்டி இரவு தாண்டமாட்டார் என்று மது வரும்முன் டாக்டர் சொன்னதை சொல்லி வரச் சொல்லிவிட்டு வைத்தார்.
சபரிக்கு மதுவே போன் செய்து சொல்லவும்,  அவன் தானும் கிளம்ப முன்பே முடிவு செய்ததாகவும், ஆதி வரும் நேரம் தானும் அவனுடன் இருப்பேன் என்று சொல்லவும் வைத்தாள்.
சாப்பிட்டோம் என்று பெயர் செய்து அவர்கள் திரும்ப வரவும், நவனீதன் சாப்பிடச் சென்றார். சற்று நேரத்திற்கெல்லாம் பாட்டிக்கு முழிப்பு வருவதாய் சொல்லி நர்ஸ் அவர்களை உள்ளே அழைத்தாள்.
அவர் மாஸ்க்கை எடுத்தவள், “பாட்டி… உங்க பேத்தி வந்திருக்காங்க பாருங்க.” என்று கத்தவும், சிரமப்பட்டு கண்களைத் திறந்து பார்க்க, அவர் அருகில் சென்று, “நோனா… என்ன இப்படி பயமுறுத்தற ?”, என்றாள் மது. விழிகள் சற்று கலங்கியிருந்தாலும், குரல் பாட்டியைக் கொஞ்சியது.
அவள் புறம் மெல்ல திரும்பி பார்த்த பாட்டியின் கண்கள் ஒரு திருப்தியைக் காட்டியது.
“ ஆதி ? “, அவர் குரலைவிட வாயசைப்பில் புரிந்து கொண்ட மது, “ம்க்கும்… உனக்கு முடியலைன்னு கேட்டதும் விழுந்தடிச்சி ஓடி வந்த என்னை விட்டுட்டு உன் பேரனைத்தான் கண்ணு தேடுது. அவன்தான் உனக்கு எப்பவும் ஃபர்ஸ்ட்.”, செல்லமாய்க் கோபித்தாள்.
லேசான புன்னகையோடு அவள் கையை தட்டிக் கொடுத்தார் பாட்டி. ஆனாலும் பதிலுக்காக மதுவின் முகம் பார்க்க, “துரை டெல்லியில இருக்காராமாம். சாயந்திரம் வந்துடுவார் உன் தாடையை பிடிச்சுக் கொஞ்ச. இப்ப நீ முழிச்சதும் உனக்கு விடியோ கால் போடணுமாம் ஆர்டர் போட்டிருக்கார்.”
அவள் சொல்லவும் , இன்னுமே புன்னகை விரிந்தது தனலக்ஷ்மி பாட்டியிற்கு. பேரனும் பேத்தியும் அவர் அன்பிற்குப் போட்டி போடுவது அலாதி இன்பத்தைக் கொடுக்கும் அவருக்கு.
ஆதியின் போன் நம்பரை சுப்புவின் மொபைலில் தேடி எடுத்தவள், அவள் போன் மூலம் கால் செய்ய அது ஆதியின் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனதைச் சொல்லியது.
சுப்புவிடம் அழாதே என்று ஜாடை செய்து பாட்டியைப் பார்த்தவள், “உன் பேரன் ஃப்ளைட் ஏறிட்டான் போல நோனா, போன் ஸ்விட்ச் ஆஃப் சொல்லுது.”
பாட்டியின் ஏமாற்றம் முகத்தில் தெரிய, “சரி… உன் பேரன் கிட்ட சொல்றத சொல்லு. நான் விடியோ எடுத்து அவனுக்கு அனுப்பறேன். இறங்கினதும் பார்த்துடுவான். “
தலையை லேசாய் ஆட்டியவர், உதட்டை நனைக்க, அருகிலிருந்த நர்ஸ், தண்ணி ஸ்பூன்ல கொஞ்சமா குடுங்க என்றார். மதுவே,  இரண்டு ஸ்பூன் தண்ணீர் கொடுக்கவும், அருந்திவிட்டு போனைக் காட்டினார்.
“ம்ம்.. வீடியோ எடுக்கறதுக்கு முன்ன, மேக்கப் எதுவும் போடணுமா ?”, என்று மது கேட்க, அவளைப் பார்த்து உதட்டை சுழித்தவர், போனைப் பார்க்க, “ ஆன் பண்ணிட்டேன். ரெக்கார்ட் ஆகுது, பேசு உன் ஆசை பேரங்கிட்ட.”, என்றாள் அவர் முகம் நோக்கி போனை ஏந்தி பிடித்து.
“ஆதிக் கண்ணா, நீ வரதுக்குள்ள நான் போயிட்டேன்னா மன்னிச்சிடுப்பா. என் கடைசி ஆசை, எனக்கு நீதான் கொள்ளி போடணும். எல்லா சடங்கும் நீயும் மதுவும்தான் செய்யணும்.”
விட்டு விட்டு பாட்டி பேசியதைக் கேட்ட மதுவிற்கு நெஞ்சை அடைத்தது. அதற்குள் பாட்டிக் மூச்சிறைக்கவும், நர்ஸ் மீண்டும் மாஸ்க்கை அணிவித்து, “பாட்டி ரொம்ப பேசக் கூடாது. அமைதியா இருங்க.  உங்க பேரன் வந்ததும் நீங்களே  சொல்லிக்கலாம். “, என்றாள்.
சோர்வாய் மதுவின் புறம் திரும்பியவர், அவள் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து, கையை மெல்ல தூக்க முயற்சிக்க,  ரெக்கார்ட் பண்ணுவதை நிறுத்திய மது, அவர் கையைப்  பிடித்துக் கொண்டே, “, நான் ஓண்ணும் அழலை.  உனக்கும் உன் பேரனுக்கும் ஓடற இந்த பாச சீனைப் பார்த்து கண்ணு வேர்த்துட்டேன். நீ அலட்டாம படுத்துட்டு இரு. நான் பேசிகிட்டு இருக்கேன். நீ கேட்டுகிட்டு இரு.”, என்றாள் அதட்டும் குரலில்.
சுப்பு எங்கிருந்தோ ஒரு ஸ்டூல் ஒன்றைக் கொண்டுவந்து போட்டுவிட்டு செல்ல, பாட்டிக்கு அருகில் அமர்ந்து, மென் குரலில் மது கதை பேச, ஒரு பத்து நிமிடத்திற்கெல்லாம் பாட்டி உறங்கிவிட்டது தெரிந்தது. முகத்தில் ஒரு நிறைவு தெரிந்தார் போல இருந்தது.
நர்ஸ், “அவங்க முழிப்பு தட்டினதும் கூப்பிடறேன் மேடம். கொஞ்ச நேரம் வெளிய இருங்க,  ப்ளீஸ்.”, எனவும், மனதே இல்லாமல் வெளியே வந்தாள் மது.
பாட்டியின் சொந்தங்கள் ஓரிருவர் வரத்துவங்க,  நவனீதனும், சுப்புவும் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர். அரை மணி கழித்தும் நர்ஸ் வராமல் போகவே, மதுவே உள்ளே செல்ல, பாட்டி உறக்கத்தில்தான் இருந்தார். ஐந்து நிமிடம் உடனிருந்துவிட்டு போவதாய் சொல்லிவிட்டு, பாட்டியின் கைபிடித்து அமர்ந்தாள் மது.
பாட்டியின் தலைமுடி கோதிவிட, சட்டென்று பாட்டி முகம் சுளிப்பது தெரிய, என்னவென்று மது சுதாரிக்கும்முன் அவள் கையை இறுக்கிப்படித்தார் . பக்கமிருந்த மெஷின் ஒன்று அலரவும், பாட்டி உடல் முறுக்கவும் “நர்ஸ், டாக்டர் “ , என்று கத்திக்கொண்டிருக்கையிலேயே அங்கே  நாலைந்து பேர் வந்துவிட்டனர். 
இன்னொரு நர்ஸ் அவளை வெளியில் இருக்கும் படி  அழைத்துச் செல்ல, பாட்டியை மறைத்தபடி டாக்டர் இருவர் இருக்க, திரைச்சீலையை ஒரு நர்ஸ் மூடிக்கொண்டிருந்தார்.
அடுத்த கால் மணி நேரத்திற்கெல்லாம், இந்த முறை வந்த அட்டாக்கைத் தாங்க முடியாது, பாட்டி உலகைவிட்டு சென்றுவிட்டதை டாக்டர் சொல்லிச் செல்ல, கதறும் மதுவைத் தேற்ற முடியாது தவித்துக்கொண்டிருந்தார்  லாயர் நவனீதனின் மனைவி சங்கரி.
அழுது அழுது ஓய்ந்தவளைத் தேற்றிய சங்கரி, “மதுமா, பாட்டிக்கு கட்டிவிட புடவை கேக்கறாங்கடா. நீயும்  வரியா எடுக்க, இல்லை நானே பார்த்து எடுத்துகிட்டு வரவா ?”
கேட்டதும், “இல்லை ஆன்ட்டி. நானே வரேன். எல்லாத்தையும் நானும் ஆதியும்தான் பண்ணனும்னு ஆர்டர் போட்டிருக்காங்க.”, என்று எழுந்துகொண்டாள். சொல்லும்போதே விம்மினாலும், முகம் துடைத்து கிளம்பினாள். கடைக்குச் சென்று பாட்டிக்குப் பிடித்த வெளிர் மஞ்சள் நிறத்தில் பட்டுப்புடவை ,ரெடி மேட் ரவிக்கை எல்லாம் எடுத்து வந்து நர்ஸிடம் கொடுத்தனர்.
பாட்டியின் உடலை குன்னூர் எடுத்துச் செல்ல வேண்டிய ஏற்பாடுகளை லாயர் கவனிக்க, சுப்பு விஷயம் தெரிந்து வந்தவர்களைப் பார்ப்பதிலும், மேலும் தகவல் சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லிக்கொண்டிருப்பதிலுமாய் இருக்க, மதுவிற்கு நடப்பதெல்லாம் எங்கேயோ, யாருக்கோ என்பதுபோலத் தோன்றியது.  பாட்டிக்காக அழக்கூட அங்கே ஆளில்லை. எல்லோரும் அடுத்தது என்ன என்பதைப்போலத்தான் இருந்தனர்.
“படுக்காம கொள்ளாம சட்டுனு போயிட்டாங்கப்பா, புண்ணியவதி.”, என்று யாரோ பாட்டியின் துரித மறைவிலும் பொறாமை கொண்டார்.
கோவை விமான நிலையத்தில், ஆதியின் விமானம் தரை தொட்டதும் கைபேசியை ஆன் செய்து, நெட் கனெக்டாகப் பொறுமையின்றி காத்துக்கிடந்தான் ஆதி.
சில பல நிமிடங்கள் காக்க வைத்து, அவன் வாட்சப் மெசெஜ்கள் வரவும், முதலில் பார்த்தது, சபரியின் “வெய்ட்டிங் இன் ஏர்போர்ட் ஃபார் யு.”, என்பதுதான்.
இவன் எப்பக் கிளம்பி இங்க வந்தான் என்று சிந்தனை ஓட, அது பாட்டிக்கு ரொம்பவும் சீரியஸாகிடுச்சா என்ற பாதையில் சென்ற எண்ணத்தை அடக்கி முதல் ஆளாய் விமானத்தை விட்டு வெளியில் வந்தான்.
கேட்டை விட்டு வரவேற்பு அறை வரவும், ஆதியைக் கண்டு கை ஆட்டி சபரி வரவும், “என்னடா ? இங்க இருக்க, என்னாச்சு பாட்டிக்கு?”, வாய் கேள்வி கேட்டாலும், பதில் தெரிந்துவிட்டது ஆதிக்கு சபரியின் முகம் பார்த்தே.
“சாரிடா ஆதி, பாட்டிக்கு நாலு மணி போல திரும்ப அட்டாக் வந்து…..போயிட்டாங்கடா.”, ஆதியின் புஜம் பற்றி சபரி கண்கள் பனிக்க சொல்லவும், ஆதியின் முகமே விழுந்துவிட்டது.
ஒரு நொடி தடுமாறி நின்றவனைத் தோள் தாங்கி ஆறுதல் அளித்தான் சபரி.

Advertisement