Advertisement

அத்தியாயம் -29

விவாந்தா ஹோட்டலின் காலை உணவு பஃபே முறையில் இருக்க, அவரவருக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு ஒரு மேசையில் அமர்ந்தனர் மது, ஆதி மற்றும் மனோகர்.

“என்ன மது, ஆதிய கல்யாணம் செய்ய ஏன் யோசிக்கற?”, என்று மனோகரே ஆரம்பித்தார்.

“அதான் ஆதி நேத்து போன்ல சொன்னாரேப்பா. அம்மாக்கு எதுவும் மெடிகல் கண்டிஷன் இருக்கா? அது எனக்கு வந்தா, ஆதி லைஃப் ஸ்பாயில் ஆகக் கூடாதுன்னுதான் …”

“அது…அம்மாக்கு கொஞ்சம் மன நிலை பாதிப்பு இருக்குடா, ஆனா அது பரம்பரை நோயின்னு சொல்ல முடியாதுன்னுதான் நினைக்கிறேன்.”

“அப்ப உங்களுக்கும் தெரியாதா மாமா? அவங்களுக்கு ட்ரீட்மென்ட் எதுவும் செய்யலையா சரிபடுத்த?”

முகத்தை ஒரு முறை அழுந்தத் துடைத்த மனோகர், “இது அவசியம் பேசணுமா? அதான் நான் சொல்றேனே ஒண்ணும் இல்லைனு…”, என்று சொல்லவும்,

ஆதிக்கு கோபம் கொப்பளித்தது. கட்டுப் படுத்திக்கொண்டு, “மாமா எங்களுக்கு டீன்-ஏஜ் இல்லை. இது ஆர்வத்துக்காக கேட்கலை. எங்க வாழ்க்கைக்காக கேட்கறோம். அதோட முக்கியத்துவத்தை உணர்ந்து பேசுங்க.”, என்றான் அடக்கப்பட்ட குரலில்.

பெருமூச்சுடன், “தெரியும் ஆதி. அதனால்தான் எல்லா வேலையும் விட்டுட்டு இங்க வந்திருக்கேன்.”, என்றவர் தொடர்ந்து,

“எனக்கு இருவத்தியாறு வயசு, அப்பா தவறி ஒரு ரெண்டு வருஷம் இருக்கும்.  தொழில்ல பிசியா இருந்த மாதிரியே அந்த வயசுக்கேத்த ஃப்ரெண்ட்ஸ், பார்ட்டி, பெண்கள்னு இருந்தேன். எங்கம்மாக்கு பயம், எங்க ஒரு நான் எவளையாச்சம் கூட்டிட்டு வந்து காதலிக்கறேன்னு சொல்லிடுவனோன்னு. “

“திடீர்னு பரிமளாவை பேசி முடிச்சிட்டு எங்கிட்ட போட்டோ காமிச்சாங்க. இப்ப எதுக்கு கல்யாணம்னு கேட்டதுக்கு நான் யாரையோ காதலிக்கறதா முடிவே பண்ணிட்டு ஒரே அழுகை. அதனாலேயே அவங்களோட பரிமளா ஊருக்கு போனேன். “, இடையில் கொஞ்சம் பொங்கலை சாப்பிட்டவர்,

“கிராமமா இருந்தாலும், சேலம் பக்கமா இருக்கவும், பரிமளா டிகிரி முடிச்சிருந்தா. வந்து கொஞ்ச நேரம் நின்னுட்டு போயிட்டா. அம்மா என்னை பார்க்கவும், வேணாம்னு சொல்ற அளவு ஒண்ணும் இல்லை. அவளும் அழகா இருந்தா. பேச விடமாட்டாங்கன்னு தெரியும். சம்மதம்னு சொன்னேன். பரிசம் போட்டு வந்துட்டோம்.”

“எல்லா ஏற்பாடும் அவங்க ஊர்லயே நடந்துச்சு. கல்யாணம் முடிஞ்சு இங்க வந்தும், ரொம்ப ஒண்ணும் கலகலப்பா இல்லை. கேட்டதுக்கு பதில், சொல்றதை செய்யன்னு இருந்தா. பெருசா ஒட்டுதல்னு இல்லை. கிராமத்துல வளர்ந்ததுல ரொம்ப வெக்கம் போல, சரி கொஞ்ச நாள் போனா சரியாகிடும், பழகிடுவான்னு நினைச்சோம்.”, யார் வீட்டுக் கதையையோ சொல்வது போல சொல்லிக்கொண்டிருந்தார் மனோகர்.

கேட்டபடியே மெதுவாக உண்டு கொண்டிருந்தார்கள் மதுவும் ஆதியும்.

“சீக்கிரமே பரிமளா மாசமானா. எங்க அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். அவளைத் தாங்கினாங்க. மாடி ரூம் வேண்டாம்னு அவங்க கூடவே தங்க வெச்சிகிட்டாங்க. எனக்கு அப்ப தொழில்ல கொஞ்சம் கவனிக்க வேண்டியிருக்கவும், நான் அதுல பிசியா இருந்துட்டேன். மூணாம் மாசமே பரிமளா வீட்டிலருந்து அவங்க அப்பா, அம்மா அவளை கூட்டிகிட்டு போயிட்டாங்க.”

“அப்ப எங்களுக்கு பெருசா எதுவும் தெரியலை. இடையில இரண்டு முறை அம்மாவும் நானும் போயிட்டு வந்தோம். வளைகாப்பு கூட அவங்க வீட்டுலையே ஏற்பாடு செய்தாங்க, அவளுக்கு அலைச்சல் வேண்டாம்னு. குழந்தை பிறந்தும் அஞ்சாம் மாசம் கொண்டுவந்து விடறதா சொல்லிட்டாங்க. “

“பரிமளா திரும்ப சென்னைக்கு வந்தும், மதுவை காரணம் காட்டி கீழயே இருந்தா. அம்மா அவளை திட்டி என்னோட இருக்க சொல்லவும், ஒரு நாள் வெடிச்சிட்டா. அப்பதான், எனக்கு பிடிக்கலை நீங்க இதுக்கு வேற பார்த்துக்கோங்க. என் கடமைக்கு ஒரு வாரிசை குடுத்துட்டேன். இதுக்கு மேலயும் வற்புறுத்தினா செத்துடுவேன்னு மிரட்டினா.”

“என்னைவிட அம்மாக்கு இன்னுமே ஷாக். பிள்ளை வாழ்க்கையை பாழாக்கிட்டமோன்னு பயம். கொஞ்சம் விட்டு பிடிச்சு நயமா பேசிப் பார்த்தாங்க பரிமளாகிட்ட. இந்த டாபிக் எடுத்தாலே வித்தியாசமா நடக்க ஆரம்பிச்சா. கண்டதையும் தூக்கி வீசறதும், முகமே சிவந்து கத்தறதும்.”

சாப்பிடுகிறேன் என்று பேர் செய்து கொண்டிருந்த மது அதை நிறுத்தியிருந்தாள். ஆதி மனோகரின் முகத்தை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

“அவளை சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட போகலாம்னு சொன்னதுக்கும், எனக்கு பைத்தியம் பட்டம் கட்டுறீங்களான்னு ஒரே அழுகை ஆர்பாட்டம். அண்ட் அந்த நேரத்துக்கு எப்படியோ போய்த் தொலைன்னு விட்டுட்டேன். மதுவை எங்கம்மா பார்த்துகிட்டாங்க. நான் என்பாட்டுக்கு இருந்தேன். அம்மாகிட்ட பரிமளாவை டைவர்ஸ் செய்யட்டுமான்னு கேட்கவும், கௌரவம், குழந்தைன்னு யோசிச்சாங்க. இப்படியே ஒரு வருஷம் போகவும், ஊர்ல பரிமளாவோட அப்பா காலமானார்.”,  கதையை நிறுத்தி, கொஞ்சம் தண்ணீரைப் பருகினார்.

“சரி ஊருக்கு போகலாம்னு டிக்கெட் போட்டா, பரிமளா வர முடியாதுன்னு அடமா சொல்லிட்டா. அந்த மனுஷன் செஞ்சதுக்கு அப்படித்தான் புழுத்துப்போய் சாகணும்னு சொல்லிட்டு ரூமுக்குள்ள போய் கதவை சாத்திகிட்டா. எங்களுக்கு ஒண்ணும் புரியலை. அம்மா என்னை மட்டுமாச்சம் போக சொன்னாங்க.”

“அங்க போனதுக்கு அப்பறம்தான் தெரிஞ்சது, அவர் ஒரு மாசமாவே ஸ்ட்ரோக் வந்து இழுத்துகிட்டு இருந்ததும், பரிமளாவுக்கு விஷயம் தெரிஞ்சும் எங்ககிட்ட சொல்லாம , வராம இருந்திருக்காங்கறதும்.”

“ஏன்ப்பா அம்மாக்கு அவங்க அப்பா மேல அப்படி ஒரு கோவம்?”, என்று மெதுவாய்க் கேட்டாள் மது.

“எனக்கும் அந்த கேள்வி இருந்துச்சு, அவளை சின்ன வயசுலேர்ந்து பார்த்துகிற ஒரு பாட்டி என்னை தனியா பார்த்து மறு நாள் பேசும்போதுதான் பதில் கிடைச்சுது.”

“தம்பி… பரிமளா நல்லா இருக்காளாப்பா? அவ அப்பனைப் பார்க்க வரமாட்டான்னு எனக்கும் அவ அம்மாக்கும் நல்லா தெரியும். ஆனாலும் எதுவும் காட்டிக்க முடியலை.”, என்றார் கனகு பாட்டி.

“ஏன் பாட்டி அப்படி சொல்றீங்க? எங்ககிட்ட மாமாக்கு உடம்பு முடியலைன்னு சொல்லவேயில்லை பரிமளா.”, மனோகர் வினவ,

“அந்த மனுஷம் செஞ்ச காரியம் அப்படி… ஊர் உலகத்துல நடக்காததா என்ன? “, என்று உச்சு கொட்ட,

“என்ன பாட்டி, என்ன செஞ்சார்?”

“பரிமளா, இங்க தோட்டதுல வேலை செய்யற ஒரு கீழ் சாதிப் பையனைக்கண்டு இஷ்டப் பட்டிருக்கா போல. எனக்கும் தெரியலை. பயந்த சுபாவமுள்ள பொண்ணு தம்பி பரிமளா. ஏதோ வயசுக் கோளாறு. எடுத்து சொன்னா புரிஞ்சிகிட்டு இருக்கும். அதை விட்டுபோட்டு அந்த மனுஷன்….” பாட்டி கண்ணில் கோபத்தின் எச்சங்கள் இருந்தன.

அமைதியாக பார்த்திருந்தார் மனோகர்.

“அந்த பையனை மோட்டார் ரூம்புல கட்டிப்போட்டு, இந்த கண்ணுதான என் பொண்ணை பார்த்துச்சுன்னு கொள்ளிக் கட்டையால கண்ணை அவிச்சு, அடி அடின்னு வெளுத்திருக்காங்க. குத்துயிரும் குலை உயிருமா இருக்கையில, பரிமளாவை கூட்டிட்டு போய் காமிச்சு இதுதான் நடக்கும் எவனையாச்சம் பார்த்தியானான்னு மிரட்டியிருக்கார் அவங்க அப்பாங்கற பெரிய்ய்ய்ய மனுஷன்.”, வெறுப்பில் உமிழ்ந்தார் கனகு பாட்டி.

அவர் கூறும் கதையைக் கேட்டே ஆடிப்போயிருந்தார் மனோகர். மேல்தட்டு சென்னைப் பையன். இது போன்ற விஷயம் பேப்பரிலும் சினிமாவிலும்தான் பார்த்திருந்தார். சொந்த மாமனாரே அதுபோல காட்டுமிராண்டித்தனமாய் நடந்திருப்பார் என்பதை நம்ப முடியவில்லை. “அன்னிக்கு ராத்திரியே அந்த பையன் செத்துட்டான். அவனைப் பார்த்து பயந்ததுல ராத்திரியே பரிமளாக்கு ஜன்னி கண்டிடுச்சு. ஒரு வாரம் ஆசுபத்திரியில வெச்சி வைத்தியம் பார்த்தாங்க. அதுக்குள்ள காசை குடுத்து மிரட்டி அவன் அம்மா, தங்கச்சிங்களை ஊரை விட்டு விரட்டிட்டார் பரிமளா அப்பா.”

“அப்பறம் ஆறு மாசத்துல உங்க கூட கல்யாணம் ஆகவும், மறு மாசமே புள்ளை வரவும், எல்லாருக்கும் நிம்மதி.  அதையாச்சம் நிலைக்க விட்டானா ஆண்டவன்?”

“ஏன் பாட்டி, என்னாச்சு?”, இப்போது பரிமளா கல்யாணமானவுடன் நடந்து கொண்ட விதம் புரிய ஆரம்பித்தது மனோகருக்கு.

“ ஆறாம் மாசம் தொடக்கத்துல ஒரு நாள் கோயிலுக்கு போயி விளக்கு போட்டுட்டு, செத்த நாழி நான் பேசிகிட்டு இருக்கவும், பரிமளா முன்ன கிளம்பிச்சு. கொஞ்ச நேரத்துலயே நான் பின்னாடியே போறேன், பரிமளா கிட்ட யாரோ கையை நீட்டி பேசறது தெரியுது. .”

“வேகமா போகவும் அது பாண்டியோட அம்மான்னு தெரியுது., ‘என் புள்ளைய முழுங்கிட்டு உன் வயத்துல புள்ளையை வாங்கிட்டு வந்து நிக்கறயா? கூசலையா உனக்கு உடம்பு, வேலையை பார்த்துகிட்டு சும்மாயிருந்தவனை மினுக்கி சிரிச்சு மயக்கிட்டு, அவனுக்கு கொள்ளி வெச்சுட்டு எப்படி இன்னொருத்தனோட இருக்கன்னு கேவலமா பேச, இந்த பொண்ணு மலங்க மலங்க முழிச்சிகிட்டு, கண்ணுல தண்ணி விட்டுகிட்டு நிக்குது.’

“அந்த பொம்பளைய நல்லா ஏசி விரட்டிவிட்டுட்டு பிள்ளைய வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா, அன்னிக்கு திரும்ப காய்ச்சல். ஆஸ்பத்திரில மறுபடி ஒரு வாரம் வச்சு சரியாச்சு. பல்லை கடிச்சிகிட்டுதான் இருந்தா இங்க ஊர்ல இருக்கற வரைக்கும். அந்தம்மா சொல்ற மாதிரியெல்லாம் இல்லை தம்பி. பரிமளா தங்கம். ஆனா ஒடுங்கிடுச்சு அவங்க அப்பாரு கூட பேசறதே கம்மி, அதுக்கப்பறம் அதுவும் சுத்தமா நின்னுடுச்சு.”

கனகு பாட்டி சொல்லியதை கூறி முடித்தவர், ஆதியையும் மதுவையும் பார்த்து, “அதனாலதான் மது உங்க அம்மாவுக்கு யார் தொடறதும் பிடிக்காது. அவளுக்கு நிறைய குற்ற உணர்ச்சி. தன் மேலையும் அவ அப்பா மேலையும் வெறுப்பு. இதெல்லாமே என் சைக்கியாட்ரிஸ்ட் ஃப்ரெண்டு மூலமா, அவளுக்கே தெரியாம சாதாரணமா பேசறமாதிரி பேசி கண்டுபிடிச்சது. கவுன்சிலிங் போயிருக்கலாம் ஆனா அவ சுத்தமா ஒத்துக்கலை. ஏதோ ஒரு அளவுல வாழறா, அப்படியே விட்டுட்டேன்.”

“இதெல்லாம் அவளுக்கு நடந்த விஷயங்களால வந்த பாதிப்புதான். அதுனால நீ பயப்படற மாதிரி எதுவும் இல்லை மது. வேணும்னா, அவகிட்ட பேசின என் சைக்கியாட்ரிஸ்ட் ஃப்ரெண்டு கணபதி நம்பர் தரேன். பேசி கேட்டுக்கோங்க.”, என்றார் மதுவைப் பார்த்து.

“இதுல நான் எங்கப்பா வந்தேன்?”, என்று கேட்டாள் மது மெதுவாக.

தட்டில் மிச்சமிருந்த பொங்கலை வழித்தவர், “என்ன மது? புரியலை.”, என்று சொல்லியபடியே வாயிலிட்டார்.

“இல்ல, இப்ப நீங்க சொன்னதுல, எனக்காகத்தான் நீங்களும் அம்மாவும் ஒண்ணா இருக்கறதா முன்னாடி சொன்னீங்களே, அது எங்க எப்ப வந்துச்சுன்னு கேக்கறேன்.”

“அது…. எங்கம்மா யோசிச்சாங்கடா. விவாகரத்து செய்துட்டு, பொண்ண வெச்சிகிட்டு எப்படி தனியா சமாளிப்பன்னு. அதை சொன்னேன்.”

“அம்மா கூட இருந்தும் எதுவும் செய்யலைதானே?”, ஆதங்கமாய் மது கேட்க,

“மது, அம்மா நிலைமை இப்ப புரியுதுதானே? அவதான் என்ன செய்வா?”

“ம்ம்… ஆமாம். புரியுது. நான் கொஞ்சம்  கார்டன்ல இருந்துட்டு ரூமுக்கு வரேன். நீங்க இங்க வெயிட் பண்ண வேண்டாம்.”, என்றவள் மேசை மேல் அவள் வைத்திருந்த அறையின் கார்ட்டை எடுத்துக்கொண்டு ஆதியிடம் விழியாலே விடைபெற்று விருட்டென சென்றுவிட்டாள்.

“ம்ப்ச்… நீ தப்பா நினைக்காதே ஆதி. மது கொஞ்சம் மூடி டைப். ஒரு அரை மணி நேரத்துல சரியாகி அவளே வந்துடுவா.”, என்று மகளுக்காக மன்னிப்புக் கோரினார்.

“ஹான்… மாமா, நாம ரூம் போகலாம். எனக்கு கொஞ்சம் கேட்க வேண்டியிருக்கு.”, என்று இலகுவாகக் கூறியவன், அவருடன் அவர் புக் செய்திருந்த அறைக்குச் சென்றான்.

சோஃபாவில் அமர்ந்தபடியே, “மாமா, உங்க மனைவி நீங்க வேற பார்த்துக்கோங்கன்னு சொன்னதும், அவங்களை விவாகரத்து செய்ய பாட்டிக்காக யோசிச்சீங்க. ஆனா பாட்டி ரொம்ப நாள் இருக்கலையில்லையா?”

“ஆமாம் ஆதி, மதுவுக்கு ஒரு ஆறு வயசிருக்கும்போதே பாட்டி என் வாழ்க்கையை கெடுத்துட்டோம்னு குற்ற உணர்ச்சியிலயே போயிட்டாங்க.”

“அப்பறமாவது அத்தையை டைவர்ஸ் செய்துட்டு ஒரு வாழ்க்கையை உங்க பொண்ணுக்காகவாச்சம் அமைச்சிருக்கலாமே மாமா?”

“அது பரிமளா தனியா இருக்க பயந்தா ஆதி. எனக்குமே அந்த வாழ்க்கை பழகிடுச்சு.”, ஹ ஹ என்று சிரித்து வைத்தார்.

“மது பத்தி யோசிக்கலையா அப்போ?”

“அது… எங்கம்மாவும் இல்லைன்னா மதுவைக் கொஞ்சம் கவனிப்பா பரிமளான்னு நினைச்சேன். ஆனா நடக்கலை.”

“எனக்கு ஒண்ணு புரியலை மாமா. செத்துப்போனவனோட அம்மா பரிமளா அத்தையை என்ன பேசியிருந்தாலும், அது உங்ககிட்ட நெருங்க ஒரு குற்ற உணர்ச்சி குடுத்தாலும், அது மதுமேலயும் ஏன் வரணும்? தாய்ப்பாசம் இருக்காதா?”

“ம்ம்…அது அவன் செத்துப்போயிட்டான். நாம குழந்தை குடும்பன்னு நல்லா வாழறமேன்னு ஒரு குற்ற உணர்ச்சி. அதுல மது மேல பாசம் இருந்தாலும் காட்டி சந்தோஷபட்டுக்க மாட்டா.”, மனோகர் தெளிவு படுத்தினார்.

“அது தெரிஞ்சு என்ன செய்தீங்க?”, முயன்று அவன் கோவத்தையெல்லாம் அடக்கி இயல்பாகவே பேசிக்கொண்டிருந்தான்.

“என்ன செய்ய ஆதி, அப்ப எனக்கு ஒரு முப்பதிரெண்டு வயசிருக்குமா? பிசினஸ் டென்ஷன், என்னை ரிலாக்ஸ் செய்யன்னு ஓடிருச்சு. மதுவும் நல்ல பொண்ணு, அடம், அழுகைன்னு கிடையாது. வீட்டுல சமையலுக்கு இருந்த கமலம்மாதான் மதுவை பார்த்துகிட்டாங்க. மதுவும் கமலாம்மாவோட ஒட்டிக்கவும், சரின்னு விட்டுட்டேன்.”

“ஹான்,  கரெக்ட். மொத்ததுல நீங்களும் உங்க மனைவியும் மதுவை விட்டுட்டீங்க. புதுசு புதுசா புடவை, நகை வாங்கி போட்டுக்கும்போது வராத குற்ற உணர்ச்சி, பார்லர், ஜிம்ன்னு தன் உடம்பை பராமரிக்கரப்போ வராத குற்ற உணர்ச்சி, பார்ட்டிக்கு போறப்போ வராத குற்ற உணர்ச்சி, அத்தைக்கு பெத்த பொண்ணுகிட்ட பாசம் காட்டும்போது வருது? நீங்களும் அதை நம்பி, என்னையும் நம்ப சொல்றீங்க?”, ஊசியாய் குத்தியது ஆதியின் கேள்விகள்.

Advertisement