Advertisement

“அதில்ல ஆதி…”, என்றவரை கை காட்டி நிறுத்தி, நானும் கொஞ்சம் சைக்காலஜி படிச்சவந்தான் மாமா, எனக்கு என்ன புரியுது சொல்லவா?

“உங்க மனைவிக்கு எந்த பொறுப்பும் ஏத்துக்க பிடிக்கலை. கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை வாழ பிடிச்சிருச்சி.  இந்த குற்ற உணர்ச்சிக்கு பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டு சுய நலமாய் அவங்க இஷட்டப்படி வாழறாங்க. “

“ஆதி… அவ ஒழுக்கத்தை எப்பவும் விட்டதில்லை. எல்லாரையும் எட்டித்தான் நிறுத்துவா.”, கொஞ்சம் கோபமாய் இடைமறித்தார் மனோகர்.

“ஆமாம்.இங்க நான் கட்டுப்பாடுன்னு சொன்னது, ஒரு குடும்பத் தலைவிக்கு உரிய பொறுப்புகள், ஒரு தாயா அவங்க மதுவுக்கு செலுத்திருக்கவேண்டிய அன்பு, கடமை, எல்லாத்தையும் தட்டிக் கழிச்சிட்டாங்க. கண்டிக்க வேண்டிய நீங்களும், என்னை தொந்தரவு செய்யாத வரை நிம்மதின்னு உங்க மகிழ்ச்சியைத் தேடி நீங்க போயிட்டீங்க.”

“இன் ஃபாக்ட், அத்தையை நீங்க டைவர்ஸ் செய்யாததுதான் உங்களுக்கு வசதியாயிருந்தது. என்ன ஆடினாலும், ஒரு லெவலுக்கு மேல கழட்டி விட பொண்டாட்டி, பொண்ணுகங்கற தடுப்புக்குப் பின்னாடி ஒளிஞ்சிகிட்டீங்க.”

”நீங்க இரண்டு பேருமே உங்க பேரண்ட்ஸ பழி வாங்கறதுலதான் குறியா இருந்திருக்கீங்க. அத்தை ‘பொறுப்பா நான் குடும்பம் நடத்தணும்னா கட்டிக் குடுத்தீங்க? நடந்துடுவேனான்னு’ இருந்தாங்க. ‘யாரையாச்சம் இழுத்துட்டு வந்துடுவேன்னா பயந்தீங்க. இப்ப மாசத்துக்கு ஒருத்திய ஊர் தெரிய அழைச்சிட்டு சுத்தறேன், பாருங்கன்னு’ நீங்க உங்கம்மாவை பழிவாங்கனீங்க.”, வேக மூச்சுக்களுடன் கை வீசி  நடந்தபடியே மனோகரின் வாழ்க்கையை கிழித்துக் கொண்டிருந்தான் ஆதி.

ஆதி சொல்வதில் இருந்த நியாயம் அவரை பேசவிடாமல் தடுத்தது.

“மதுவோட குழந்தை பருவத்தை உங்க பழிவாங்கலுக்கும், மகிழ்ச்சிக்காகவும் குழி தோண்டி புதைச்சிட்டீங்க. எப்படி எப்படி? கமலம்மாவோட ஒட்டிக்கிட்டாளா? வேற என்ன செய்வா? பாசம் காட்ட வேண்டிய அப்பாவும் அம்மாவும் இல்லன்னா அந்த குழந்தை என்ன செய்யும், யாராவது கொஞ்சம் அனுசரணையா இருந்தாலும் ஒட்டத்தானே செய்வா?”

“ஆதி… நீ சொல்ற அளவு எல்லாம் இல்லைப்பா.”

“என்ன இல்லை? உங்களுக்கு ஞாபகம் இருக்கா? ஏழாவது படிக்கும்போது முதல் ராங்க் வாங்கினதுக்கு ஆனுவல் டே விழால பரிசு தராங்கன்னு உங்களை கூப்டிருக்கா. நீங்க வரேன்னு சொன்னவர், மறந்துட்டு ஊருக்கு கிளம்பிட்டீங்க. அத்தையும் வரேன்னு வரவேயில்லை. எதிர்பார்த்து ஏமாந்தவ, ‘அன்னிக்கு நான் ராங்க் எடுக்கலைன்னா நாலாவது ராங்க் எடுத்த அந்த பொண்ணுக்கு மேடையில ப்ரைஸ் கிடைச்சிருக்கும் ஆதி. அவ சும்மா ஏதோ டான்ஸ் ஆட வந்ததுக்கே அவங்க அப்பா, அம்மா ரெண்டு பேரும் வந்து, வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்தாங்க. அப்ப முடிவு செய்தேன். எந்த பரிசும் வாங்கக்கூடாது. பிள்ளையைக் கொண்டாடற பேரண்ட்ஸுக்கு அந்த சந்தோஷம் போகணும்னு. அடுத்த வருஷம் என் மார்க் அம்பது, அறுபதுன்னு வந்தப்போவும், யாரும் என்னை எதுவும் கேட்கலை. அப்பறம் எதுக்கு மெனக்கெடனும் நான் ?’ அப்படின்னு சொன்னா எங்கிட்ட. சின்ன பொண்ணு, பத்து வயசிருக்குமா இது நடந்தப்ப? எவ்வளவு காயப்பட்டு, பக்குவப்பட்டிருந்தா, அப்படி யோசிக்கத் தோணும்?”, அடக்கப்பட்ட ஆவேசம் தெறித்தது ஆதியின் கேள்வியில்.

“நான் கூட மதுவை கேட்டிருக்கேன் மாமா. எப்படி உங்க அப்பாவோட காசுல இருக்க முடியுது? நான் என்னிக்கோ வெளிய போயிருப்பேன்னு. அதுக்கு சொன்னா, ‘ஏன் அந்த பணத்தை அனுபவிக்க என் குழந்தை பருவத்தை, கண்ணீரை , ஏக்கத்தை விலையா கொடுத்திருக்கேன். ‘.  அவ சொன்னது என்னை அறுத்துச்சு. இப்படி எத்தனையோ சொல்லுவேன்.  சுயனலமிகள் ரெண்டு பேருக்குப் பிறக்க என்ன பாவம் செய்தாளோ. போனது போகட்டும், இத்தோட இதெல்லாம் முடியுது.”, என்று உறுமி நிறுத்தினான் ஆதி.

மழையடித்து ஓய்ந்தது போன்ற அமைதியில், வெளிறிப் போய் அமர்ந்திருந்தார் மனோகர். தான் பார்த்து வளர்ந்த சிறுவனால், முகத்திரை கிழிக்கப்பட்டு அசிங்கப்பட்டிருந்தார்.

உள்ளே சொருகிய வார்த்தைக் கத்தி குத்தி கிழிப்பது பத்தாதென்று இன்னும் திருக முடிவு செய்தவனாக, “உங்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சின்னு ஒன்னு இருந்தா, வயசாகி முதுமையும் தனிமையும் வந்து சேரும் போது, மதுவை தேடி வந்துடாதீங்க. வேலைக்காரங்க கடனேன்னு ஆக்கி டேபிள்ள வெக்கறதை தனியா போட்டு சாப்பிடுங்க. இப்படித்தானே என் பொண்ணு அறியாத வயசுல தவிச்சிருப்பான்னு மறுகியே போய் சேர்ந்துடுங்க. அவகிட்ட வந்தீங்கன்னா அப்பவும் அவ உங்ககிட்ட பாசமா இருப்பா,  நீங்க கேட்காமலயே உங்களுக்கு பார்த்து பார்த்து செய்வா. ஆனா அதை பார்த்துகிட்டு சும்மா இருக்க என் மனசு விடாது. அதனால அப்படி ஒரு நிலைமை வராம பார்த்துக்கோங்க.” என்றான் வேண்டுமென்றே.

“ஆதி…”, நிந்திக்கும் தொனியில் மதுவின் அழைப்பைக் கேட்டு இருவரும் திரும்ப, கண்ணில் நீரோடு வாசலில் அவள் நிற்பது தெரிந்தது. அவள் முகமே சொல்லியது, ஆதி பேசியதெல்லாம் கேட்டிருப்பாள் என்று.

“அப்படியெல்லாம் இல்லைப்பா. நீங்க கவலைப் படாதீங்க.”, என்று தந்தையைப் பார்த்து ஆறுதல் கூறினாலும், அவள் சென்று நின்றதோ ஆதியின் கை வளைவில்தான்.

மெதுவே எழுந்த மனோகர், “மதுமா…நான்… அப்பாவை மன்னிச்சிடுமா. அது…”, என்ன சொல்ல முடியும் அவரால். வார்த்தை வராமல் தவித்தார்.

தந்தையை சில நிமிடங்கள் பார்த்தவள், “எதையும் சொல்லி ஈடு கட்ட முடியாதுப்பா. ஏன் இப்படினு தெரியாம தவிச்சதுக்கு, இப்ப காரணம் தெரிஞ்சுது. எனக்கு எந்த குறையும் இல்லைன்னு தெரிஞ்சதே போறும். விட்டுடலாம். கமலாம்மா, நோனா, சுப்பு மாமா, நல்ல ஃப்ரெண்ட்ஸ், அப்பறம் எனக்காகவே யோசிக்கற ஆதி, சரஸ்வதி அத்தைன்னு நிறைய நல்லவங்க பாசம் காட்டிருக்காங்க. நான் மிஸ் செய்ததையெல்லாம் ஆதி எனக்குத் தருவான். என் பிள்ளைங்களுக்கு நான் தருவேன். போறும்.”, தந்தையின் கவிழ்ந்த முகத்தைப் பார்த்து நிதானமாகக் கூறியவள், “கல்யாண வேலையைப் பார்க்கலாம்ப்பா.”, என்றாள்.

அதில் நிமிர்ந்தவர், “ஹா…ஜமாச்சிடலாம் மது. நான் ப்ரபாகிட்ட பேசறேன் உடனே.”, என்றார் பரபரப்பாய்.

“மாமா. எங்க கல்யாணம் எங்க எப்ப எப்படி நடக்கணும்னு எல்லா முடிவும் செய்துட்டு உங்ககிட்ட சொல்றோம். அதுபடி நடத்தினா போறும். அதுவும் நானே பார்த்துக்குவேன். ஆனா மது வருத்தப்படுவா, அதனால மேற்பார்வையை மட்டும் நீங்க பாருங்க. “

“ஓரே பொண்ணு ஆதி எங்களுக்கு. அவ அம்மா என்னன்னவோ ஆசை வெச்சிருக்கா, அவ சர்க்கிள்ல நடக்கற கல்யாணத்துக்கு போயிட்டு வரும்போது சொல்லுவா. நீ கூட கேட்டிருக்கற இல்லை மது?”, கொஞ்சம் தவிப்பாய் மகளைப் பார்த்தார்.

“ஓ, உங்க அறுபதாம் கல்யாணத்துல அதையெல்லாம் நிறைவேத்திக்கட்டும். மது என்ன சொல்றாளோ அது மட்டும்தான் எங்க கல்யாணத்துல நடக்கும். அத்தைகிட்ட புரியற மாதிரி சொல்லி வைங்க. உங்க கிட்ட பேசின மாதிரி நான் அவங்க கிட்ட பேசினா தாங்க மாட்டாங்க. “, நக்கலாய் ஆதி பேசவும்,

“ஆதி…”, என்று மது அவள் குரலிலேயே அவனை அடக்கினாள்.

“என்ன… என்ன ஆதி… உங்கம்மா சொல்ற ஆடம்பரம் எதுவும் உனக்குப் பிடிக்காது. எனக்குத் தெரியும். நம்ம கல்யாணத்துல எந்த விதத்திலையும் நீ காம்ப்ரமைஸ் செய்யக்கூடாது சொல்லிட்டேன்.”, நீ கேட்டே ஆக வேண்டும் என்று ஆதி அவளை முறைக்கவும், மதுவின் மெல்லிய புன்னகையிலும், தலையாட்டலிலும் ஆதி அமைதியாவதையும் பார்த்த மனோகருக்கு,

‘ இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் வாழ்க்கை.’, என்ற எண்ணம் தோன்றாமலில்லை பிரபாகருக்கு. ‘ஆண்டவா, என் மகளுக்கு அவள் புகுந்த வீட்டிலயாவது சந்தோஷம் நிறைஞ்சிருக்கணும். சிறப்பா ஒரு வாழ்க்கை அவ புருஷனோட வாழணும்.’, என்று முதல் முறையாக ஒரு தந்தையாக வேண்டிக்கொண்டார்.

Advertisement