Advertisement

அத்தியாயம் -28 -1

அவளுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட போட்டோவைப் பார்த்து மது அலறினாலும் சற்றும் கண்டுகொள்ளாமல், “ஆமாம். என்ன இப்ப அதுக்கு.”, என்றான் ஆதி.

“எதுக்கு இப்படி வேவு பாக்கற என்னை?”

“ம்ம்…உன்னை பார்க்க வரதுக்கு முன்னாடி கொஞ்சம் ஹோம் வொர்க் செய்தேன். அப்பதான நீ சொல்றதுல எது நிஜம், எது பொய்னு தெரியும்.”, நக்கலாக பதில் கூறினான்.

“நான் ஒண்ணும் உங்கிட்ட பொய் சொல்லலை. “, தோளை குலுக்கினாள் மது.

“உண்மையும் சொல்லலை. ஆனால் இன்னிக்கு சொல்லப் போற. அதுவரை விடறதாயில்லை.”

‘ஆன்ட்டி கம்பனி கொடுக்க வரேன்னாங்களே’, என்று யோசித்தபடியே மணியைப் பார்க்க,

“சங்கரி ஆன்ட்டி வரமாட்டாங்க. நான் போன் செய்யற வரை சுப்பு அண்ணாவும் வர மாட்டாங்க. எல்லாம் என் ஏற்பாடுதான்.”, சாவகாசமாய் சாய்ந்து அமர்ந்தான் ஆதி.

“என்ன ப்ரச்சனை உனக்கு. என்ன சொல்லணும்?”, குரலில் உதறலை மறைக்க எரிச்சலைப் பூசிக் கேட்டாள்.

“ஏன் நம்ம கல்யாணம் வேண்டாங்கற?”, உன்னிப்பாய் அவளை கவனித்தபடி கேட்டான் ஆதி.

“எத்தனை முறை சொல்றது? உன் வேலை நேரம், உங்க அப்பா, எங்க அப்பா இஷ்யூ….”, தோளைக் குலுக்கியபடி மது அடுக்க,

“அதெல்லாம் முடிஞ்சுது. வேற சொல்லு.”

“ஹான்?”, மது முழிக்க,

“சபரி இப்போ ஜி.எம். என்னோட ரொட்டீன் அட்மின் வேலையெல்லாம் அவன் பார்த்துப்பான். பிசினஸ் டெவெலப்மெண்ட், ஆப்பரேஷனல் எஃபிஷியன்சின்னு எனக்கு பிடிச்சதை நான் பார்க்கபோறேன். சோ, வேலை ஆபிஸ்லதான் இருக்கணும்னு இல்லை அண்ட் அவ்வளவு நேரமும் தேவையில்லை. அடுத்து, உங்கப்பா பேசி எங்கப்பா கூட இருந்த ப்ரச்சனையை முடிச்சிட்டார். சோ, இப்ப எங்கப்பா பொண்ணு கேட்டு வர தயாரா இருக்கார். எப்ப கல்யாணம் வெச்சிக்கலாம்?”, அவளை கவனித்தபடியே கேட்க,

திகைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் மது. “எங்கப்பா எப்ப … என்ன பேசினார்?”

தேதியைக் கூறி, “எனக்கும் தெரியாது என்ன பேசிகிட்டாங்க, அவங்களுக்குள்ள என்ன ப்ராப்ளம்னும். அம்மா சொன்னது ஏதோ பழைய மனஸ்தாபம். இப்ப சரியாகிடுச்சு.”, என்றான் ஆதி.

“உங்கப்பா… எப்படி சம்மதம் சொன்னார்?”, அவன் சொல்வதை உள்வாங்கிக்க்கொள்ளத் திணறியபடி கேட்டாள்.

“ம்ம்.. வாயாலதான்.”

“ம்ச்சு… ஆதி.”, மது முறைக்கவும்.

“உங்க அப்பாகிட்ட பேசிட்டு வீட்டுக்கு வந்தார். ‘மனோகர் சொல்லித்தான் உன் விருப்பம் எனக்குத் தெரியணுமா ஆதி’,ன்னு மொதல்ல கொஞ்சம் கோச்சிகிட்டார். நான் முன்னாடி அவர் கிட்ட சொல்ல ட்ரை பண்ணப்போ அவர் கேட்டுக்கலை. அம்மாக்கும் முன்னாடியே தெரியும்னு சொன்னதும் நாந்தான் கடைசியான்னு வருத்தப்பட்டார்.”, அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் மது.

“அப்பறம், அம்மாக்கு பிள்ளைக்கும் பிடிச்சிருக்கு, இனி நான் சொல்ல என்ன இருக்கு? எப்ப போகணுமோ அப்ப பொண்ணு கேட்டு அவங்க வீட்டுக்கு போகலாம்னு பச்சை கொடி காட்டிட்டார்.”

“ஓஹ்.. எங்க அப்பா எங்கிட்ட எதுவும் சொல்லவேயில்லை.”, குழப்பம் தீராத குரலில் சொன்னாள்.

“ம்ம்…. எங்கிட்ட சொன்னார், மதுவை முதல்ல கட்டிகிட்டு அப்பறமா சரிகட்டிக்கோன்னு. நாந்தான் உன் சம்மதம் இல்லாம செய்யமாட்டேன்னு சொல்லிருக்கேன். அவ்வளவுதான உன் கண்டிஷன்? ஓகே சொல்லிடலாமா?”, என்று ஆதி கேட்கவும்

“ஹ.. இல்லை. எனக்கு அப்படியெல்லாம் இப்ப இன்ட்ரெஸ்ட் இல்லை. உனக்குமே இல்லை. இல்லைன்னா இந்த ஒரு மாசமும் கான்டாக்டே செய்யலைதானே.”

“உஷ்ஷ்….” , என்று ஊதியவன், “மது கடுப்படிக்காதே. நாம பழகின புதுசுலயே ப்ரியாவோட நான் போனது உனக்கு பொறாமையா இருந்துச்சுன்னு தைரியமா ஒத்துகிட்ட மது எங்க போனா?  எதுக்கு அப்பட்டமா பொய்னு தெரிஞ்சும் அதையே சொல்லிகிட்டு இருக்க?”

கண்ணை கட்டியது மதுவிற்கு. என்ன இவனுக்கு கோவமே வரமாட்டேங்குது. இப்படி லாயர் கணக்கா மடக்கறானே என்று உள்ளுக்குள் புலம்பினாலும் , “என்ன? என்ன பொய்? நான் ஸ்லிம் ஆனது, நேத்து யோசனையா லேக்ல இருந்தது வெச்சு நீயே கற்பனை செய்யாதே. “, தோளை குலுக்கினாள்.

“அப்ப எதுக்கு உன் லாப்டாப் ஸ்க்ரீன் சேவர்ல நம்ம போட்டோஸ் வெச்சிருக்க. அதையும் பார்த்து அழுதுகிட்டே தூங்கின?”

திக்கென்றானது மதுவிற்கு. “யாரு..யாரு சொன்னது?”

“உங்கப்பா. அதை பார்த்துட்டுதான் எனக்கு போன் செய்தார். என் பொண்ணு விரும்பறா, நீதான் வேண்டாம்னு சொன்னியான்னு கேட்டார்.”, அவள் கண்கள் பார்த்துக் கூற, மதுதான் அவன் விழிகளை சந்திக்க முடியாமல் தன் விழிகளை தாழ்த்தினாள்.

“அது.. அது… என்னை விடு. நீ மறந்துட்டதானே என்னை? இந்த ஒரு மாசமும் உனக்கு ஒண்ணும் கஷடமில்லைதானே? அப்ப நான் சொன்ன மாதிரி வெறும் ஈர்ப்பு தானே?”, பாயிண்ட் பிடித்து விட்டதில் வேகமாகக் கேட்டாள்.

“அறைஞ்சிடப் போறேன். எதுக்கு இவ்ளோ ஃபிட்டா இருக்கேன்னு நினைக்கற? காலைல செய்யறது பத்தாம, நைட்டும் இரண்டு மணி நேரம் எக்ஸ்சர்சைஸ் செய்யறேன். அப்பதான் என்னை மீறி தூங்க முடியுது. முதல் ஒரு வாரம் நல்ல  வேளை டில்லி போயிட்டேன். நைட்டெல்லாம் பீரும் கையுமா புலம்ப விட்டடி. ஏன் எதுக்கு வேண்டாம்னு தெரியாம மண்டை காஞ்சு போனதெல்லாம் உனக்கெங்க தெரியப்போகுது. எதாச்சம் சொல்லிடப் போறேன்.”, பல்லைக் கடித்து ஆதி வார்த்தைகளைத் துப்பினாலும், அத்தனையும் தேனாய் இனித்தது கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு.

அவளையும் மீறி புன்னகை முகத்தில் அரும்ப, “ஓ மேடத்துக்கு இப்பதான் குஷியோ? ஆனா பாரு, இப்ப ‘நான் மறந்துட்டேன், நீ என்னை பாதிக்கலை’ங்கற அந்த ரீசனும் இல்லை. எப்ப கல்யாணம் வெச்சிக்கலாம் சொல்லு.”, என்று ஆதி முடிக்க, மது ,’ சிக்கிட்டையேடி வசமா’,என்று முழித்தாள்.

இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் மௌனம் காக்க, ஆதி மெதுவாக அவள் கை பிடித்து, ‘மது… அவுட் வித் இட். என்னவா இருந்தாலும் பார்த்துக்கலாம். சொல்லு,”, என்று அழுத்தம் கொடுக்க, மதுவின் கண்களில் நீர் கோர்த்தது,

“நாந்தான் …எனக்குத்தான் தகுதியில்லை உன்னை கல்யாணம் செய்ய. எனக்குத்தான் குடுத்து வைக்கலை. என்னை விட்டுட்டு உன் வாழ்க்கையைப் பார்.”, என்று கண்கள் நீரில் கரைய, கையை அவனிடமிருந்து உறுவ முனைந்தாள்.

“திரும்ப இதே பல்லவியைப் பாடாதே. என்ன தகுதியில்லை உனக்கு? “

“என்னால உனக்கு மனைவியா இருக்க முடியாது. அப்பறம் எதுக்கு என்னை கல்யாணம் செய்யணும்?”

புரியாமல் பார்த்தான், “என்ன சொல்ற மது?”

“ம்ம் ….வெறும் பேருக்குத்தான் நான் மனைவி. நான் சொல்றது புரியுதா ? நத்திங் பிசிகல்.”, முகம் கசங்கி அவனைப் பார்த்தவள் கைகளால் முகத்தைப் பொத்தி குலுங்கி அழ, ஆதிக்கு விபரீதமாக சென்றது எண்ணங்கள்.

‘அச்சோ…இந்த பொண்ணை கவனிக்காம இருப்பாங்களே. யாராவது சின்ன போதே நாசம் பண்ணிட்டாங்களா? அதனாலதான் தகுதியில்ல, குடுப்பினையில்லைன்னு புலம்புறாளா? டாமிட்.’, அவள் பெற்றோர் மீது கோவம் கரை புரண்டாலும், அதை ஒதுக்கியவன், அவளை அணைத்து, “சாரி மது. யார் உன்னை என்ன செஞ்சிருந்தாலும் சொல்லு, உன்னை ஜட்ஜ் பண்ணமாட்டேன். அவனை தொலைச்சுகட்டிடலாம். உன் கில்டி பீலிங் எல்லாம்  கவுன்சலிங் போய் சரி பண்ணிக்கலாம். நான் இருக்கேன்…”, என்று பேசிக்கொண்டே போக, அவனிடமிருந்து விலகியவள்,

“என்ன பேசற? யாரை தொலைச்சுகட்டுவ?”, என்று கேட்டாள் அப்பாவியாக.

கண்ணை இருட்டிக்கொண்டு வராத குறைதான் ஆதிக்கு. “ ம்ம்… நீதான என் மனைவியாக தகுதியில்லை அது இதுன்ன? யாரும் உன்னை எதுவும் ரேப்…”

“ஷட்டப் ஆதி. கடவுளே …ஏன் உன் புத்தி இப்படி போச்சு? அந்த மாதிரியெல்லாம் ஒண்ணுமில்லை…”, தலையில் அடித்துக்கொண்டாள் மது.

“பின்ன என்னதாண்டி உன் ப்ரச்சனை. மனுஷனைப் பைத்தியமாக்காம விஷயம் என்னன்னு சொல்லறியா? என்ன எய்ட்ஸா உனக்கு?“, கோவம், அவளை யாரும் எதுவும் செய்துவிடவில்லை என்ற நிம்மதியில் என்ன சொல்கிறோம் என்றே தெரியாமல் வாயை விட,

“சீ… உன் புத்தி ஏன் இப்படி வில்லங்கமா யோசிக்குது? முதல்ல என்னை யாரும் ரேப் பண்ணிட்டாங்களான்ன, இப்ப எனக்கு எய்ட்ஸாங்கற? நல்ல எண்ணமே தோணாதா உனக்கு?”, என்று மது கத்த,

“அந்த எழவுக்குத்தான் என்னை யோசிக்க விடாம ஒழுங்கா என்ன ப்ரச்சனை உனக்குன்னு சொல்லித் தொலையேன். “, பதிலுக்கு ஆதியும் சிம்ம,  மது முகம் சுருக்கி அமைதியானாள்.

‘அமைதிடா…அமைதி, அப்பறமா ஜிம்ல ஆத்திரம் தீர பன்சிங்க் பாகை அடிச்சி நொறுக்கலாம்.’, என்று தன்னை கட்டுப்படுத்தியவன்,

“மது… இப்படி தயங்கறது உன் பிஹேவியரே இல்லை. எனக்குத் தெரியும் நீ இது வரை சொன்ன காரணம் எதுவும் முக்கியமானது இல்லைன்னு. எதையோ மறைக்க அதெல்லாம் சொல்லிகிட்டு இருந்த. தைரியமா போட்டு உடைக்கிற மது எங்க போனா?”, பொறுமையாக அவள் முகம் தூக்கி தன் கண்களைப் பார்க்க வைத்துக் கேட்கவும், மீண்டும் அவள் கண்களில் நீர் பெருகியது.”

“ம்ம் …என்னை இவ்வளவு தெரிஞ்சி வெச்சிருக்க. எப்படி? வேற யாராச்சமாயிருந்தா, என்னை ஒரு டீஸ்னு திட்டிட்டு போயிருப்பாங்க.”, மூக்கை உறிந்துகொண்டு கேட்கவும், அவளுக்கு தன் கர்சீஃபக் கொடுத்தவன், சிரித்து,

“ஹ்ம்ம்… முதல் ரெண்டு மூணு நாள் அப்படித்தான் நினைச்சேன். ஆனாலும் மனசு ஒத்துக்கலை, நீ அந்த மாதிரி பொண்ணு இல்லை. ரொம்ப பக்குவமான, ரொம்ப யோசிக்கற பொண்ணுன்னு அடிச்சு சொல்லிச்சு. ஆக்ஸ்ஃபொர்ட்ல நான் படிச்ச சைக்காலஜிதான் க்ளூ கொடுத்துச்சு.”, ஆதி நிறுத்த,

“நீ எம்.பி.ஏ தானே படிச்ச லண்டன்ல?”

“ம்ம்… கூடவே பிசினஸ் சைக்காலஜில மைனர் பண்ணேன். எதிராளி பேசற தொனி, உடல் மொழி மூலமா நிறைய விஷயம் தெரிஞ்சிக்கலாம். பிசினஸ் பேசும்போது ரொம்ப உபயோகமா இருக்கும்.”

“அதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?”

“ம்ம்… மப்புல ஒரு நைட் யோசிக்கும்போதுதான் நீ அடிக்கடி தோள் குலுக்கற உன் ஹாபிட் ஞாபகம் வந்துச்சு. “

“அதுல என்ன தெரியும்? எல்லாரும் செய்யறதுதானே.”

“காஷுவலா எல்லாரும் எப்பவாவது செய்யறதுதான். ஆனா அதுலையும் நிறைய தெரிஞ்சுக்கலாம். ரெண்டு தோளையும் சமமா ஏத்தி இறக்கினா, ‘எனக்குத் தெரியாது’ங்கறதை அழுத்தமா சொல்றது. அதுவே ஏத்துன தோளை அப்படியே வெச்சிருந்தா அடிபணியறது. ஒரு டீச்சர் முன்னாடி திட்டு வாங்கப்போற குழந்தை, பெரிய ஆபிசர் முன்ன நிக்கற ஒரு வொர்க்கர்னு பார்க்கலாம். அதுல உன் மாதிரி ஒரு தோள் மற்றதைவிட கொஞ்சம் மேல ஏத்தி குலுக்கறதுக்கு அர்த்தமே வேற.”

ஒரு தோளை குலுக்கறதுல இவ்வளவா என்று பார்த்திருந்தவள், “அதுல என்ன விசேஷம்? என் ஹாபிட் அது.”

“ஹ்ம்ம்… நான் யோசிச்சபோதான், எப்ப ஒரு விஷயம் உன்னை ஹர்ட் பண்ணுதோ, ஆனா அது உன்னை பாதிக்கலைங்கற மாதிரி பேசி மறைக்க நீ தோள் குலுக்கறது புரிஞ்சுது.”

“ ஙே… “, என்று விழித்துக் கொண்டிருந்தாள் மது ஆதி கூறுவதைக் கேட்டு.

“உங்க அப்பா அம்மா அவங்க ரிலேஷன்ஷிப் பத்தி பேசும் போது, இப்ப என் மேல விருப்பமில்லைன்னு சொன்ன போது, இந்த மாதிரி நிறைய சொல்லலாம். நீ சொல்றதை நீயே நம்பலைன்னு சொல்லுது உன் உடல் மொழி. ஆனா நம்ம காலைல வாக்கிங் போகும்போது நீ பேசறப்போ அப்படி தோள் குலுக்கினதா எனக்கு ஞாபகம் வரலை. அன்னிக்கு நைட் குன்னூர்ல நீ வெறும் ஈர்ப்பு, மறைஞ்சிடும்னு பேசின போதெல்லாம் அடிக்கடி ஏத்தயிறக்கமாத்தான் தோளை குலுக்கின…”

“அதையெல்லாம் யோசிச்சப்போதான் இது வேற என்னவோ விஷயம். அதை சொல்லாம இந்த மாதிரி காரணமெல்லாம் சொல்லி டிஸ்ட்ராக்ட் செய்யறன்னு புரிஞ்சுது. அதை உங்கிட்டருந்து வாங்கத்தான் இப்படி  தனியா உன்னை லாக் செய்யணும்னு நினைச்சேன். நீயே அதுக்கு அழகா வாய்ப்பு குடுத்துட்ட.”

“போறும் மது. நீ என்னை டிஸ்ட்ராக்ட் செய்யத்தான் இந்த கேள்வியை கேட்டன்னு எனக்கும் தெரியும். ஆனா எல்லாத்துக்கும் ரெடியாத்தான் நான் வந்திருக்கேன்னு உனக்குத் தெரியணும்னுதான் இவ்வளவு பொறுமையா உனக்கு விளக்கிட்டு இருக்கேன்.”

இதற்கும் மேல் என்ன சொல்வது என்று தெரியாமல், மெதுவாக, “ அது என்னை பத்தின விஷயமா இருந்தா சொல்லிடுவேன் ஆதி. இது அம்மாவோட பர்சனல். “

“அதுக்கும் நமக்கும் என்ன மது?”

“அது ஹெரிடிட்டரியா அம்மாகிட்டருந்து எனக்கும் இருக்கும்.”

“எது? “

அவள் அங்குமிங்கும் நெளியவும், தோளைப் படித்து நிறுத்தி, “உன்னையும் என்னையும் பாதிக்கும்னா அது உங்கம்மாவோட பர்சனல் மட்டும் இல்லை.   என்ன ப்ரச்சனை அவங்களுக்கு?”

“அது… அது… அவங்க ஏசெக்சுவல்.”

“ஹான்…?”

“அது அவங்களுக்கு …. ம்ம்…  அது… பிசிகல்… செக்ஸ் பிடிக்காது….”

Advertisement