Advertisement

அத்தியாயம் -28 -2

மது அவள் அம்மாவிற்கு தாம்பத்தியம் பிடிக்காது என்று சொல்லவும் ,

முதலில் அவள் சொல்வதை உள்வாங்கும் வரை ‘ஙே’ என்று முழித்தவன், சுதாரித்து, “அ…அது ஒண்ணும் பரம்பரை நோயெல்லாம் இல்லை. அது நோயான்னே தெரியாது, ஒரு மெடிகல் கண்டிஷன். ப்ளஸ் நீ இருக்க சாட்சியா.”, என்றான் சமாளித்தபடி. சத்தியமாய் இப்படி ஒரு விஷயம் எதிர்பார்க்கவேயில்லை.

“அவங்களுக்குப் பிடிக்காமத்தான் நான் உதிச்சேன். ரெண்டுத்துக்கும் சம்மந்தமில்லைன்னு உனக்கே தெரியும்.”, என்று அவனை முறைத்தவள்,

“நான் படிச்சேன் இந்த நோயைப் பத்தி. எவ்வளவு பசங்க, பொண்ணுங்க எழுதிருக்காங்க தெரியுமா இன்டர்னெட்ல, அவங்க அம்மா, சித்திங்க இந்த மாதிரின்னு. பாவம் இந்த பிள்ளைங்களுக்கும் அதே. எல்லாம் தனித் தனியா வாழ்ந்துகிட்டு இருக்காங்க. மெடிக்கலா இன்னும் அது பரம்பரை நோயான்னு சொல்லலைன்னாலும் இல்லைன்னும் சொல்ல முடியாத அளவு டேட்டா இருக்கு.”, மது சொல்லவும்,

ஒரு நிமிடம் கண்களை அழுந்தத் தேய்த்தவன்,

“சரி மத்தவங்களை விடு. உனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை என்மேலங்கறியா? ஊட்டி லேக்ல அன்னிக்கு நைட் ஏன் போட் கவிழப் போச்சுன்னு தெரியும்தானே? இன்னும் என் கிட்ட வரணும்னுதானே உன்னையும் மீறி எழுந்து வந்த?”

கன்னம் சற்று சிவந்தாலும், “அது ஜஸ்ட் அந்த செட்டிங் ஆதி. எனக்கு எப்பவும் எது பார்த்தும் அப்படியெல்லாம் தோணினதேயில்லை.”

பதிலே பேசாமல், அவளை சுண்டி இழுத்துத் தன் மேல் சாய்த்தவன், இதழ்களைக் கவ்வ, நீண்ட நிமிடங்கள் கரைந்தது முத்தத்தில். அவளையும் மீறி மீண்டும் அவனின் மேல் இன்னும் நெருங்க, அசைய என்றிருந்தவளைப் பிரித்தெடுத்தவன்,  ” நீ ஏசெக்சுவல்னா, நானும் அதே.”, என்று மூச்சு வாங்கி, முகம் சிவந்து கிடந்தவளைப் பார்த்து சிரித்தான் ஆதி.

“இப்ப ஒரு செட்டிங்கும் இல்லை, லைடிங்கும் இல்லை. உங்கம்மாவை விடு . உனக்கு எந்த ப்ராபளமும் இல்லை. சரியா? வீணா குழப்பிக்காதே.”, ஆதி அவள் முடி திருத்தி பாசமாய் சொல்லவும், வெட்க மிகுதியில், அவனை விட்டு தள்ளி நின்றவள், லேசாய் தலை அசைத்து ஆமோதித்து,

“ஹ்ம்ம்.. நீ என்னை கிஸ் பண்ண அந்த நைட் நானும் நினைச்சேன் ஆதி, எனக்கு அம்மாவோட ப்ராப்ளம் இல்லையோன்னு. ஆனா, அந்த ஜீன் நம்ம குழந்தைக்கு வந்துச்சுன்னா? அது இன்னும் கொடுமை.”, என்றாளே பார்க்கலாம்.

“ஆஹ்…”, என்று கத்தியவன், “சரி குழந்தையே பெத்துக்கவேணாம். தத்து எடுத்துக்கலாம்.”, என்று கூற,

“விளையாடதே. நீயே ஒரே பிள்ளை உங்க வீட்டுக்கு. அதெப்படி ஒத்துக்குவாங்க அத்தை மாமா?”

‘இருடா… திரும்ப யோசி, என்ன தப்புது?’, என்று அவள் பேசுவதைக் காதில் வாங்காமல் யோசித்தவன், சட்டென்று நிமிர்ந்து, “மது..வெய்ட். உங்கம்மாக்கு இப்படி ஒரு ப்ரோப்ளம்னு உனக்கெப்படி தெரியும்? நீ அவங்க மெடிகல் ரிகார்ட்ஸ் பார்த்தியா?”, என்றான்.

“இல்லை. அப்பா சொன்னார். “

“என்ன சொன்னார்?”

“ஆதி, அவங்க பர்சனல் ஆதி.  நான் இப்படி சொல்றது தப்பு.”, மீண்டும் மது தயங்க, ‘இவ்ளோ பார்க்கறா அவங்க அப்பா அம்மாக்கு ஆனா அவங்க கொஞ்சம் கூட இவளைக் கண்டுக்கவேயில்லை. சே… இவங்களுக்குப் போய் இப்படி ஒரு மகளா?’, என்று நினைத்தவன்,

“திரும்பவும் சொல்றேன். அவங்க பர்சனல்ங்கறது நம்மை பாதிக்காத வரைதான். நான் யாருக்கும் சொல்லப்போறதில்லை. நீ சொல்லு முழுசா.”, என்று ஊக்கினான்.

“காலேஜ் படிக்க ஆரம்பிச்சப்போ, அப்பா கூட ஒரு நாள் நைட் சண்டை போட்டேன். ஏன் இப்படி அம்மாக்கு துரோகம் செய்யறீங்கன்னு. அப்ப சொன்னார்.”

“அவங்களுக்கு இந்த நோய் இருக்குன்னா?”

“இல்லை… கல்யாணம் முடிஞ்சு ஒரு  மாசத்துகுள்ளயே அம்மா கன்சீவானதும் தனியா இருந்துகிட்டாங்க. அப்பறம் அம்மாவை அவங்க அப்பா அம்மா ப்ரசவத்துக்கு அழைச்சிட்டு போயிட்டாங்க. என்னை தூக்கிட்டு, திரும்ப வந்த அப்பறம்… அம்மா தனி ரூம்லதான் தங்கினாங்க… அப்பாகிட்ட, ‘எனக்கு இது பிடிக்கலை. உங்களுக்கு குழந்தைன்னு ஒண்ணு பெத்துட்டேன். இனி என்னை தொந்தரவு செய்யாதீங்க. உங்க தேவைக்கு… யாரையாச்சம் பார்த்துக்கங்க. நான் எதுவும் சொல்லமாட்டேன்னு’…சொல்லிட்டாங்களாம். “ தயங்கி தயங்கி ஒரு வழியாக மது முடிக்கவும்,

“உங்கப்பாகிட்ட பிடிக்கலைன்னுதானே சொல்லிருக்காங்க. இந்த நோயிருக்குன்னு சொல்லலையே? அப்ப உனக்கு உங்க அம்மா சொன்னங்களா?”

அவன் குடைந்து குடைந்து கேட்பதில் நொந்துபோனவள், “அம்மா சொல்லலை. அப்பா இப்படி சொன்னதும், பொறுக்க முடியாம, ஏன்மா இப்படி அப்பாவை விட்டீங்கன்னு கேட்டதும் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகிட்டாங்க. கத்த ஆரம்பிச்சிட்டாங்க, கைல கிடைச்சத வீசவும், நான் அவங்க ரூம் விட்டு வந்துட்டேன். அப்பா சத்தம் கேட்டு வந்து, அம்மாவை ஏதோ சொல்லி சமாதானப் படுத்தினார். வெளிய வந்து, இனி இது பத்தி பேசாதே அம்மாகிட்ட. எங்க பர்சனல் உனக்கு தேவையில்லாததுன்னு கோவமா சொல்லிட்டு போயிட்டார்.  நானா சிம்டம்ஸ் பார்த்து இன்டெர்னெட்ல தேடி கண்டுபிடிச்சேன்.”, என்றாள்.

ஒரு நிமிடம் மூச்சை இழுத்து விட்ட ஆதி, “மது, நீ புத்திசாலிப் பொண்ணு.இப்படி நீயா ஒரு கெஸ் செய்து, இன்டர்னெட்ல கண்டதையும் படிச்சிட்டு இப்படி ஒரு வியாதின்னு நினைச்சுக்குவியா?”

“நான் ஒண்ணும் சும்மா வரலை இந்த முடிவுக்கு. அம்மாவை வாட்ச் செய்தேன். ஒரு வேளை அவங்களுக்கு அப்பாவைத்தான் பிடிக்கலை வேற யாரையும் பிடிக்குமோன்னு. ஆனா அவங்களுக்கு சுத்தமா யார் மேலையும் இன்ட்ரெஸ்ட் இல்லை. ஒரு வேளை , பொண்ணுங்களைப் பிடிக்குமோன்னு கூட நினைச்சேன். பட் அவங்களை யாரும் தொடறதையே அவங்க விரும்பலை. நானே சின்ன போதுல கட்டிப் பிடிச்சா,அவங்க கை முதல்ல என்னை விலக்கத்தான் செய்யும். தனியா இருக்கறதைத்தான் விரும்புவாங்க. இல்லை கூட்டமா இருக்கணும். ஜ்ஸ்ட் ஒருத்தர் இரண்டு பேர் இருந்தா, கிளம்பிடுவாங்க அந்த இடத்தை விட்டே. இப்படி நிறைய சொல்லலாம்.”, வருத்தமாய் கூறிக்கொண்டிருந்த மதுவைப் பார்த்து ஆதிக்குத்தான் மனது வலித்தது. ‘என்ன செய்து வைத்திருக்கிறார்கள் இந்தப் பெண்ணை’, என்று.

மது அவனைப் பாவமாய் பார்க்க, “இதுக்கு ஒரு வழிதான் இருக்கு. உங்கப்பாவை கேட்கலாம்  அவங்களுக்கு என்ன ப்ரச்சனைன்னு.”, என்றான் ஆதி அமைதியாக.

“நோ ஆதி. அவருக்கு பிடிக்காது. எங்கிட்டயே அவங்க பர்சனல்னு சொன்னவர், இப்ப நீ கேட்டா இன்னும் கோபம்தான்படுவார். வேண்டாம்.”

“இங்க பார் மது. உங்க அப்பா அம்மா மேல பயங்கர ஆத்திரம் இருக்கு எனக்கு. அத்தனையும் உனக்காகத்தான் அடக்கிட்டு இருக்கேன். இது நம்ம வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அவர் சொல்லட்டும் எங்கிட்ட. அவர் பர்சனல்னு. அப்பறம் டிடெக்டிவ் வெச்சி நான் கண்டுபிடிச்சிக்கறேன். ஆனா, அவ்வளவு தூரம் போகாதுன்னு நினைக்கிறேன். நான் பேசிக்கறேன். நீ எதுவும் அவர் கிட்ட சொல்ல வேண்டாம்.”, என்று மேலும் மதுவை பேசி சரிகட்டி, மனோகரை கைபேசியில் அழைத்தான் ஆதி.

அவர் அழைப்பை ஏற்றதும், “ ஆதி? என் மக ஓக்கே சொல்லிட்டாளா?”, என்றுதான் ஆரம்பித்தார்.

“இல்ல மாமா. இன்னொரு குண்டை தூக்கிப் போடறா. “, ஆதி வருத்தமான குரலில் பேசி வலையை விரித்தான்.

“என்னப்பா? என்னவாம்? நீ பேசி புரிய வைக்கவேண்டியதுதானே.”

“அது கொஞ்சம் சென்சிட்வ் மாமா.”

“என்னது?”

“ம்ம்… மது உங்க வாழ்க்கையைப் பார்த்து பயப்படறா. நான் உனக்கு மனைவியா வந்து, எங்க அம்மா மாதிரியே நானும் ஆகிட்டா, உன் வாழ்க்கை வீணாகிடும்னு என்னன்னவோ சொல்றா.”

“ஆதி…”

“ம்ம்… அவளுக்கு என்னனு சொல்லத் தெரியலையா, இல்லை எனக்குத்தான் புரியலையான்னு விளங்கலை மாமா.”, அவன் எதிர்பார்த்தபடியே வலைக்குள் சிக்கினார்.

“அவ ஏன் அப்படில்லாம் நினைச்சிக்கறா?”, குரல் சற்று இரங்கி வந்தது மனோகரிடமிருந்து.

“அவளுக்கு நீங்க எதுவும் சொல்லலை. அவளுக்கு தெரிஞ்சதை வச்சு, இன்டெர்னெட்ல படிச்சு, என்னவோ வியாதிங்கற ரேஞ்சுக்கு கற்பனை செய்து வெச்சிருக்கா.”

“ஹ்ம்ம்… இது போன்ல பேசக் கூடியது இல்லை.  நான் நைட் கோவை வந்துடறேன். விவாந்தாலதான் தங்குவேன். நீ அவளை கூட்டிட்டு காலைல வந்துடு ஆதி. நாம் நேர்ல பேசறது பெட்டர். “, ஒரு பெருமூச்சுடன் அவர் அழைப்பை துண்டிப்பது கேட்டது ஆதிக்கு.

ஸ்பீக்கரில் போட்டிருந்ததால், மதுவும் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“அப்பா… அப்பா எதுவும் அவங்க பர்சனல்னு சொல்லலை?”

“ஹ்ம்ம்… நீ அப்ப கேட்டதுக்கும் நான் இப்ப கேக்கறதுக்கும் வித்தியாசம் இருக்குதானே? எனிவே, உனக்கு எந்த நோயும் இல்லை, உங்கம்மாக்கும் இல்லைனுதான் நினைக்கறேன்.”, என்றான் ஆதி.

“அவர் வந்து எக்ஸ்ப்ளைன் செய்யறதாத்தான் சொல்லிருக்கார். இல்லைனு சொல்லலை. அப்படியிருந்தா உடனே சொல்லிருக்கலாம்தானே? எதுக்கு இங்க வரணும்? நீயே சொல்லு ஆதி. எங்கம்மா இப்படி இருக்க வேற என்ன ரீசன் இருக்க முடியும்?”

“ஷ்… நாமளா எதுவும் கெஸ் செய்ய வேண்டாம்.  நாளை வரை யோசிக்காதே இதைப் பத்தி. போய் முகம் கழுவிட்டு வா. கொஞ்ச நேரம் வெளிய போயிட்டு வரலாம்.”, என்று அவளை அனுப்பி வைத்தான்.

அவள் சென்றதும் சபரிக்கு அழைத்தான்.

“ஹலோ மச்சி… மது ஓக்கே சொல்லிட்டாளா?”, என்றுதான் ஆரம்பித்தான் சபரி.

“இல்லைடா. அவங்க அப்பா அம்மா கல்யாணத்தால நிறைய குழம்பியிருக்கா. அவ அப்பா இங்க கோவை வராரு. நாளைக்கு பேசணும்.”

“ம்ம்… மாமனார் மாமியார் சேர்த்து வச்சாதான் உன் கல்யாணமா? எதோ படத்துல வருமே அந்த மாதிரியா?”

“டேய்… அவங்க அப்பா அம்மா மேல சரி கடுப்புல இருக்கேன். நீ வேற என்னை கிளப்பி விடாத. எனக்கு ஹோட்டல்ல ஒரு ரூம் போடு. நான் இங்க தங்க முடியாது. ”

“எங்க வீட்டுக்குப் போய், என் ரூம்ல தங்குடா. நான் அப்பாகிட்ட சொல்றேன்.அங்க வந்து ஹோட்டல்ல தங்குவியா?”, சபரி கோபிக்க, ஆதி சரியென்றான்.

மதுவுடன் கூட்டமில்லாத இடமாக மெதுவே நடை பயில, அமைதியாக உடன் வந்தாள்.  அவ்வப்போது அவன் முகம் பார்க்க,

“என்ன மது? என்ன கேக்கணும்? கேளு?”, என்றான்.

“என்னை லூசுன்னு நினைக்கிறயா ஆதி?”, மது அவனைப் பார்த்து கேட்க,

“அப்படி நினைச்சிருந்தா, உன் சங்காப்தமே வேண்டாம்னு என் வேலையை பார்த்துகிட்டு இருந்திருப்பேனே மது?”

“இல்லை. என்னை பிடிச்சிருக்கு, அதனால பொருத்துக்கறயா?”, கொஞ்சம் சந்தேகமாக பார்த்தாள்.

“மது, குறை நிறையோட அப்படியே ஒருத்தரை ஒருத்தர் அக்செப்ட் பண்ணிக்கணும், மாத்த ட்ரை செய்யக்கூடாது.”

“நான் கேட்டதுக்கு இது பதில் இல்லை. அப்படி பார்த்தா, நீ வேலை வேலைன்னு சுத்தறதை நான் மாத்தறேந்தானே? அக்செப்ட் செஞ்சிக்கலையே.”

“நீ சொல்றதுல எனக்கும் சம்மதமிருக்கவும்தானே செய்யறேன். பிடிக்காம செய்யலையே?”, நீண்ட நாள் கழித்து அவளுடன் தர்க்கம் செய்வது ஆதிக்கு மிகவும் பிடித்தது.

“சரி. நான் முதல்ல கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.”, அவள் பிடியிலேயே நின்றாள்.

“இல்லை மது. மேலோட்டமா பார்த்தா, எதுக்கு இப்படி தேவையில்லாம பயப்படறான்னுதான் தோணும். ஆனா நீ வளர்ந்த சூழல். உன் சென்சிடிவ் நேச்சர், அன்புக்கு ஏங்கின உன் குழந்தை பருவம், உங்க அப்பா அம்மாகிட்ட உனக்குக் கிடைக்காத ஒரு பாதுகாப்பு உணர்ச்சின்னு நிறைய விஷயம் சேர்த்து பார்க்கும்போது, உன்னை புரிஞ்சிக்க முடியுது.”, அவளை லேசாய் தோளணைத்து விடுவித்தான்.

“இவ்வளவா என்னை பத்தி யோசிச்சு வெச்சிருக்க? நான் எதிர்ப்பார்க்கலை. நிறைய உங்கிட்ட விளக்கி மன்னிப்பு கேக்கணும்னு நினைச்சேன்.” ,ஆச்சரியமும், மையலும் போட்டி போட்டன அவள் முகத்தில்.

“எதுக்கு மன்னிப்பு?”

“இல்லை, குன்னூர் விட்டு கிளம்பறதுக்கு முன்னாடி நாள் நான் பேசினதுக்கு, நீ எவ்வளவு ஹர்ட் ஆகிருப்பன்னு தெரியும். உனக்கும் என் மேல இன்ட்ரெஸ்ட் இருக்குன்னு தெரிஞ்சும், நான் விலகலைதானே. அது தப்புதானே. நான் நிஜமா ட்ரை பண்ணேன் ஆதி. தள்ளிப் போகணும்னு நினைப்பேன், ஆனா நீ எதாவது சொல்ல, பேச, என்னையும் மீறி உன்னோட இருப்பேன்.”, மது வருத்தமாய் சொல்லிக்கொண்டு போகவும்,

“மது… என்னை கஷ்டப்படுத்தக்கூடாதுன்னு நீ என்னைவிட வருத்தப் பட்டிருப்ப. உனக்கு கொஞ்சம் டைம் குடுத்துட்டு, எப்படியும் உன்னைத்தான் கல்யாணம் செய்யபோறேன்னு நான் உறுதியா இருந்தேன். நீ, நாம ப்ரேக்-அப் ஆனதா நினைச்சு வருந்திகிட்டு இருந்த. சபரி உன்னை பார்த்துட்டு அனுப்பின போட்டோ பார்த்து, அன்னிக்கு எனக்கு தூக்கமே போச்சு. எதுக்கு இந்த பொண்ணு இப்படி வருத்திக்கறான்னு.”

“சபரி போட்டோ அனுப்பினானா? நான் செல்ஃபி வேண்டாம்னு சொல்லிட்டேனே. அப்பறம் எப்படி?”

அவளுக்குத் தெரியாமல் சபரி எடுத்து அனுப்பியிருந்த போட்டோக்களைக் காட்டவும், “அடப்பாவி…நான் கொஞ்சம் கூட கெஸ் செய்யலை. பாரு பஞ்சத்துல அடிபட்ட மாதிரி இருக்கேன்.”, முகம் சுருக்கினாள்.

“பஞ்சத்துல இல்லை பசலை நோயில… என்னை நினைச்சு. ஐயாவோட பவர் அப்படி..”, என்று காலர் தூக்கவும்…

“ஐயோடா… ரொம்பத்தான். உன்னை மாதிரி பீர் பாட்டலும் கையுமா அலையலைதானே. அப்ப நானே மேல்.”, என்று சிரித்தாள். கூடவே,

“ஆதி, எனக்கு நீ ஒரு விஷயம் ப்ராமிஸ் செய்யணும்.”

அவள் குரல் இலகுத்தன்மை விடவும், “என்ன மது?”, என்று கேட்டான்.

“நாளைக்கு அப்பா, நிஜமாகவே அம்மாக்கு அந்த மாதிரி ஒரு கண்டிஷன்னு சொன்னா…. நீ என்னை விட்டுடணும். “, கண்ணில் நீர் கோர்க்க மது கை நீட்டவும்,

“முடியாது போடி…”, என்று முறைத்தவாறே அவள் கையை தட்டிவிட்டு “நாளைக்கு ஆறு மணிக்கு வரேன், கோவை போக ரெடியா இரு.”, என்ற உத்தரவுடன் அவளை அப்படியே விட்டுவிட்டு சென்றே விட்டான்.

அவள் வீடு வரும்போது, சுப்பு வந்திருந்தார். மதுவின் அழைப்புகளை ஏற்கவேயில்லை ஆதி.

‘வாயை வெச்சிகிட்டு சும்மா இருக்க முடியலை மது உனக்கு. சின்ன குழந்தைக்கு சொல்ற மாதிரி சொன்னான். அப்பவும் தத்து பித்துன்னு உளற ஆரம்பிச்சா, அவன் வேற என்ன செய்வான். ‘, என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டு அன்றிரவைக் கழித்தாள்.

Advertisement