Advertisement

அத்தியாயம் – 26

பறவைகளைப் அதிகாலையில் ஏரிக்கு சென்று பார்த்துவிட்டு திரும்பும் வழியில் ஒரு உணவகத்தில் சபரியை சந்தித்தான் ஆதி.

“என்ன ஆதி, அடுத்து என்ன ப்ளான்? “, என்றான் சபரி காலை மினி டிபனை ஒரு கை பார்த்தவாறே.

“ம்ச்.. அப்பாவை சரி கட்டணும்டா. நேத்து நைட் மது பத்தி பேச்செடுத்தப்போ அப்பா பேச்சை மாத்திட்டார்.  இதுல இன்னிக்கு மதுவோட அப்பா எங்கப்பாவை கிளப்ல பார்த்து பேசறதா சொல்லிருக்கார். அதான் கொஞ்சம் டென்ஷன்.”

“மதுவோட அப்பா இங்க பெங்களூரு வந்திருக்காரா? உங்கிட்ட மது பத்தி பேசினாரா? எப்படா நடந்துது?”, சபரி முழிக்க,

“நீ சென்னையில இருந்தப்போ.”, என்று மனோகருடனான உரையாடலைக் கூறி முடித்தான்.

“பார்றா, இப்பவே மாமனார் சப்போர்ட் கிடைச்சிருச்சி.”

“டேய்.. இவரு எதையாச்சம் பேசி அப்பா கோவத்தை இன்னும் ஏத்தி விட்டுட போறாரோன்னு இருக்குடா.”, ஆதி அவன் பயத்தைக் கூறவும்,

“ம்ம்.. ஆமாம் நம்ம பெருசு எந்தப்பக்கம் எப்படி பாயும்னு சொல்ல முடியாது. எல்லாம் ப்ரிப்பேர் பண்ணிகிட்டு மீட்டிங்க்கு போனா அவுட் ஆஃப் சிலபஸ்ல கேள்வி கேட்டு ஃபுயூசை புடுங்குவார். உன் மாமா எப்படி பேசி கரெக்ட் செய்யறதா எதாச்சம் சொன்னாரா?”

“ஒண்ணும் சொல்லலை. அம்மா சொன்னது மட்டும்தான் தெரியும். பதினைஞ்சு வருஷத்துக்கு முன்ன இவங்க ஜெர்மனி ட்ரிப் போன அப்பறம் பேசிக்கறதில்லை.”

“ம்ம்… இதென்னடா இத்தனை வருஷமாவா முட்டிகிட்டு இருப்பாங்க?” இவர்கள் அலசிக்கொண்டிருக்க, அந்த பெருமைமிக்க பெங்களூரு கிளப், ஞாயிறு காலையில் சுறுசுறுப்பாக இருந்தது.

நண்பன் ப்ரசாத்துடன், சாவதானமாய் காரைவிட்டு இறங்கினார் மனோகர். இன்னேரம் ப்ரபாகர் சாப்பிட்டு முடித்திருப்பார் என்று கணக்கிட்டுத்தான் வந்தார்.

பேசியபடியே, இருவரும் உள்ளே செல்ல, “தாங்க்ஸ் ப்ரசாத். ஒரு ஒன் அவர்ல நான் கால் செய்யறேன். “, என்று விடை பெற்று, மெதுவாய்  ப்ராபகர் அவர் நண்பர் சாரியுடன் உணவருந்திவிட்டு பேசும் ஓய்வறை பக்கம் சென்றார். ஒரு காலத்தில் பெங்களூரு வந்தால், ஞாயிறு காலைக் கச்சேரியில் மனோகரும் உண்டு.

எதிர்பார்த்தபடியே இருவரும் அமர்ந்திருக்க, அருகே சென்ற மனோகர், சாரியின் தோளில் தட்டியபடி, “என்ன சாரி? எப்படி இருக்கீங்க?”, என்று வினவியபடியே ப்ரபாகரின் அருகில் அமர்ந்தார்.

அவரை பார்த்து திகைத்தாலும் உடனே சமன் செய்தனர் இருவரும். “ஹாஹ்.. மனோகர் சார். எங்க இந்தப் பக்கம்?  நல்லாருக்கோம். நீங்க?”

“நல்லாருக்கேன். பழைய நண்பனைப் பார்த்து பேசித் தீர்க்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கு. அதான் வந்தேன்.”

இதற்கென்ன சொல்வது என்று சாரி முழிக்க, “என்ன ப்ரபா… பேசுவோமா?”, என்றாய் மனோகர்.

“உங்கிட்ட எனக்கென்ன பேச்சு? “, அலட்சியமாகக் கேட்டார் ப்ரபாகர்.

“அப்படித்தான் நானும் இருந்தேன் ப்ரபா. ஆனா பாரு. இப்ப அதுக்கான அவசியம் வந்திருக்கு.  மேல தனியா ஒரு மீட்டிங் ரூம் புக்காகியிருக்கு நமக்கு. இல்லை இங்கவே பேசணும்னாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை.”,  தோளைக் குலுக்கினார் மனோகர்.

உள்ளுக்குள் கொஞ்சம் உதைக்க, “சரி வா. என்ன பேசணுமோ பேசிக்கலாம்.”, என்று எழுந்தார் ப்ரபாகர்.

“ரொம்ப நேரமெல்லாம் ஆகாதுன்னு நினைக்கறேன் சாரி. சீக்கிரமே வந்துடுவார்.”, என்று சொல்லி முன்னே மனோகர் செல்ல, இடைவெளி விட்டு தொடர்ந்தார் ப்ரபாகர்.

அறைக்குச் சென்று கதவை மூடியதும், “என்ன மனோ? உன் சங்காத்தமே வேண்டாம்னு விட்டுட்டேனே. இப்ப என்ன இருக்கு பேசித் தீர்க்க?”

“ஏண்டா… இத்தனை வருஷம் கழிச்சும் இன்னும் அதைப் பிடிச்சே தொங்கிகிட்டு இருக்க?”,  மனோகர் கேட்கவும்,

“நீ செஞ்சது அப்படி…”, என்றார் ப்ரபாகர் பழைய கொதிப்பில்.

“இங்க பார். என் மேல பழி சொல்லறதுனால உன் குற்ற உணர்ச்சி போயிரும்னா தாராளாமா என் மேலயே பழி சொல்லிக்கோ. அதனாலதான் நீ எங்கிட்ட பேசாத போது, நானே ஒதுங்கிப் போனேன்.”

“உன்னாலதாண்டா…உன்னாலயேதான்…”, ஆங்காரமாய் ஒலித்தது ப்ரபாகரின் குரல்.

“ எது? வீட்ல அன்பான மனைவி இருக்கறவன் தப்பு செய்யவேமாட்டான்னு சொன்னது நானா நீயா?”

“…”

“அதையே சவாலா எடுத்துகிட்டு, நான் உன்னை பெர்லின்ல அந்த பாருக்கு கூட்டிட்டுப் போன போது வரேன்னு மார்தட்டி கூட வந்தது நானா நீயா?”

இப்போது முகம் சிறுத்துப் போனது ப்ரபாகருக்கு.

“பேச்சே வரலை? பதினாறு பதினேழு வருஷம் இருக்குமா இது நடந்து? இன்னும் பிடிச்சி தொங்கிட்டு இருக்க?”

“அது…அது… நீ எங்க சொல்லிடுவியோன்னு…”, ப்ரபாகர் இழுத்தார்.

“டேய்… இங்க பாரு. அப்பவும் நான் உன்னை காப்பாத்தித்தான் விட்டேன். நான் என் பெண்டாட்டிக்கு உண்மையானவன்னு மார்தட்டின நீ, அந்த வெள்ளைக்காரி லாப் டான்ஸ்ன்னு உன் மடியில ஆடவும், மயங்கிப் போய் அவளோடவே போயிருப்ப.  தப்பு பண்ணிட்டோம்னு மறுனாள் வருத்தப்படுவியேன்னு, அவளை துரத்திவிட்டேன். மத்தவனுங்க அதே பாருக்கு வந்த போதும், நீதான் என்னை முறை தவறிபோகாம பார்த்துக்க வந்திருக்கன்னு அங்கயும் உன் மானத்த காப்பாத்தினேன். அப்பறம் என்ன இதுக்குடா இங்க வந்து யார்கிட்டயும் சொல்லப்போறேன்? “

தான் மனைவிக்கு செய்யவிருந்த துரோகமாகத்தான் அதை நினைத்தார் ப்ரபாகர். தானும் ஒரு சராசரிக்கும் கீழான மனிதன் என்று அன்று உணர்ந்த போது மிகவுமே குன்றிப்போனார். அதை தனக்கு உணர்த்திய மனோகரின் மீது அத்தனை கோபத்தையும் திருப்பினார். அதன் விளைவே  பேசாமலிருந்ததும், மனோகரை இகழ்ச்சியாக பேசியதும். ஆனாலும் மனோகர் அன்று நடந்ததை யாரிடமுன் சொல்லிவிட மாட்டார் என்பது நிச்சயமாகத் தெரியும்தான்.

“இங்க பாரு ப்ரபா… உன்னால உன் நடத்தையை மன்னிக்க முடியலை. அதனால உன் கோவத்தை என் மேல திருப்பினன்னு புரிஞ்சுதான் நான் விலகினேன். என் நடத்தை ஊரறிஞ்ச விஷயம். நீ பேசறதுனால எதுவும் மாறப் போறதில்லைன்னுதான் நான் எப்பவுமே கண்டுக்கலை. ஆனா இப்ப இதை சரி செய்தாக வேண்டியிருக்கு.”

“ஏன்? என்ன காரணம் இப்ப?”

“ம்ம்.. என் பொண்ணு உன் மகனை விரும்பறா. உன் மகனுக்கும் இஷ்டம்தான் போல. ஆனா, நீ என்னை அலட்சியமா ட்ரீட் செய்யறது என் பொண்ணுக்கு ஏத்துக்க முடியலை. தன்னால அப்பாக்கு ஒரு தலை குனிவு வரக்கூடாதுன்னு அவ விருப்பத்தை ஆதிகிட்ட ஒத்துக்கவே இல்லை. எந்த காலத்துல என்ன புன்ணியம் செஞ்சேனோ, எனக்கு இவ்ளோ நல்ல பொண்ணு வந்து பொறந்திருக்கா.”, மனோகர் சொல்ல சொல்ல, திகைத்துப்போய் பார்த்திருந்தார் ப்ரபாகர்.

“ம்ம்.. அவ விரும்பின வாழ்க்கை அவளுக்கு அமைச்சு கொடுக்கணும். ஒரு அப்பாவா அதையாவது அவளுக்கு செய்யணும். அதனால….அவ ஒத்துக்கணும்னா, நீ உன் பிடிவாதத்தையெல்லாம் விட்டுட்டு எனக்கு சம்மந்தியா குடுக்க வேண்டிய மரியாதையைக் குடுத்து என் வீட்டுக்கு வந்து பொண்ணு கேக்கற. புரியுதா?”, மனோகர் பேசிக்கொண்டே செல்ல, ‘ஆதி மதுவை விரும்புகிறானா?’ , என்ற அதிர்விலேயே இருந்தார் ப்ரபாகர்.

“என்ன யோசிக்கற ப்ரபா? பொண்ணு கேட்டு வர. கல்யாணம் முடிஞ்சு கூட தேவையான பொழுது சம்மந்திக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கரெக்டா குடுக்கணும். இல்லை… நீ எதுக்கு பயந்தியோ, அது நடந்திடும். ஞாபகம் இருக்கட்டும்.”, மனோகர் ஒரு அழுத்தமான பார்வையை வீச, ப்ரபாகருக்கு சற்று வியர்த்தது.

“ஆதி நெஜமாவே மதுவை விரும்பறானா? அன்னிக்கு உயில் படிக்கும்போது இரண்டு பேருமே முடியாதுன்னு சொன்னாங்க?”

“ஒரு மாசம் பழகினபோது பிடிச்சிருக்கணும். ஆனாலும் ஏதோ சிக்கல் இருக்கு இரண்டு பேருக்குள்ளையும். அதை அவங்க தீர்த்துக்குவாங்க. எனக்கு ஆதி மேல நம்பிக்கை இருக்கு.  நீயோ நானோ அவங்க சிக்கல்ல ஒரு முடிச்சா இருக்கக் கூடாது. அதனாலதான் வந்தேன்.”

“ஹ்ம்ம்…இத்தனை நாள் பேசாம, திடீர்னு சம்மந்தம் பேசணும்னா….”, ப்ரபாகர் இழுக்க,

“ம்ம்… உனக்கு தெரிஞ்சிருக்கும், இந்த ரெண்டு மாசமா யாரோடையும் நான் சுத்தலை. மொத்தமா விட்டுட்டேன்.”

“ஹா… எல்லாரும் இவ்வளவு நாளாகுதே, அடுத்தது யாருன்னு யோசிக்கறாங்க… நீ இப்படி சொல்ற?”, என்றார் ப்ரபாகர் புருவம் உயர்த்தி.

“ம்ம்… திருந்திட்டேன்னு சொல்லு. மகளுக்கு கல்யாணம் பேசவும், இனி மனோ யாரோடவும் அஃபேர் வெச்சிக்கறதில்லைன்னு முடிவு செய்திட்டான். அதான் நான் என் மகனுக்கு அவன் பொண்ணை சம்மந்தம் பேசறேன்னு சொல்லிக்கோ. உறவு, பாட்டி ஆசைன்னு இன்னும் உனக்கு என்ன வேணுமோ சொல்லிக்கோ. எனக்கு ஆட்சேபணை இல்லை.”, என்றார் மனோகர்.

“நெஜமாவே திருந்திட்டியா?”, ப்ரபாகர் நம்ப முடியாமல் மீண்டும் கேட்டார்.

“இங்க பார், நான் சுத்தினப்போவும் மறச்சதில்லை. இப்ப நிறுத்தறப்போவும் மறைக்கலை.  கண்ணதாசன் ஒரு பாட்டுல சொல்லுவாரே, “மது எத்தனை கிண்ணத்தில் இட்டாலும், அத்தனையும் சுவை ஒன்றாகும்னு.”, அனுபவத்துல சொல்லிருக்கார்னு என் அனுபவத்துல நான் தெரிஞ்சுகிட்டேன். போறும்.”, என்று பெரிதாக சிரித்தார் மனோகர்.

தலையை உலுக்கிக் கொண்ட ப்ரபாகர், “சரி. இப்ப நான் என்ன செய்யணும்?”

“உன் மகன் எப்ப வந்து மதுவை பொண்ணு கேளுங்கன்னு சொல்றானோ, அப்ப முறையா என் வீட்டுக்கு வந்து தட்டு மாத்தி, கல்யாணத்தை உறுதி செய். அவ்வளவுதான்.”

மகன் நேற்று இரவு மதுவைப் பற்றி பேச்செடுத்ததும், தான் தட்டிக் கழித்ததும் நினைவுக்கு வந்தது ப்ரபாகருக்கு. கொஞ்சம் பொறுமையாக கேட்டிருக்க வேண்டுமோ? கேட்டிருந்தாலும் முடியாது என்றுதான் சொல்லிருப்போம். இப்போதாவது, உனக்குப் பிடித்திருந்தால் நான் ஒத்துக்கொள்கிறேன் என்று சொல்லிக்கொள்ளலாம், என்று மனதை தேற்றியவாரே, மனோகரிடம் விடை பெற்று வெளியே வந்தார்.

நிமிட நேரத்தில் கணக்கிட்டிருந்தார். முடியாது எனபதால் வரும் பாதகங்களையும், முடியும் என்பதால் வரக்கூடிய ஆதாயங்களையும். மனோகரின் மேல் அவருக்கிருந்த பிடித்தமின்மையைத் தவிர வேண்டாம் என்பதற்கு அவரிடம் காரணம் ஒன்றும் வலுவாக இல்லை. சரஸ்வதிக்கு ஏற்கனவே மதுவைப் பிடிக்கும், இப்பொழுது மகனுக்கும் பிடித்தம் என்றால் கண்டிப்பாக கல்யாணத்திற்கு ஆதரவு தருவாள். மனைவிக்காக சம்மதம் சொன்னால், தன் மேல் கொஞ்சம் கரிசனம் வரலாமே என்ற எண்ணமும் சேர, நேரே வீட்டிற்கு கிளம்பினார்.

ப்ரபாகருடன் பேசி முடித்த மனோகரோ, ஆதியை அழைத்தார். உணவகத்தில்லிருந்த ஆதி, சபரியிடம் சைகை செய்தபடியே அழைப்பை ஏற்றான்.

“ஹலோ..சொல்லுங்க மாமா.”, ஆதியின் குரலில் இருந்த மரியாதை பார்த்து சபரி புருவம் உயர்த்தி, கண்கள் உருட்டி கலாய்த்தான். அதை கண்டுகொள்ளாத ஆதி எதிர் முனையில் என்ன வரப்போகறது என்பதில் கவனமானான்.

“ஆதி… உங்கப்பாகிட்ட பேசிட்டேன். அவருக்கு நீ மதுவை விரும்பற விஷயம் தெரியாதா? நான் சொன்னதும் அதிர்ச்சியா பார்த்தார்.”

“அது.. நேத்து சொல்ல ஆரம்பிச்சேன், ஆனா பேச்சு மாறிடுச்சு மாமா. அம்மாகிட்ட சொல்லிட்டேன்.”

“ஓஹ்… நீ சொல்லாம நான் சொன்னதுக்கு உன் கிட்ட எதாச்சம் முரண்டு பிடிப்பான். சமாளிச்சிக்கோ. என் பக்கம் நான் சரி செய்துட்டேன் ஆதி.”

“மாமா?”

“நீ எப்ப சொல்றியோ, அப்ப உங்கப்பா மதுவை பொண்ணு கேட்டு வருவார் எங்க வீட்டுக்கு. சம்மந்திக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கரெக்டா கொடுப்பார்.”

“ஹ.. எப்படி மாமா? என்ன சொன்னீங்க?”, ஆதிக்கு ஆச்சரியம்.

“அது எதுக்கு உனக்கு? நீயும் அதைப் பத்தி கேட்காதே உங்கப்பாகிட்ட. மதுவை நீ கல்யாணம் செய்துக்கறதுல அவருக்கு சம்மதம்தான். இனி நீ மதுவை சம்மதிக்க வை. இல்லை நேரே வீட்டுக்கு வாங்க நிச்சயம் செய்துடலாம். அவளை கட்டிகிட்டு அப்பறமா சரி கட்டிக்கோ.” என்று சிரித்தார் மனோகர்.

“இல்லை, அவ சம்மதம் இல்லாம அதெல்லாம் வேண்டாம். கொஞ்சம் டைம் குடுங்க மாமா. அப்பறம் அத்தைக்கு சம்மதமா? கேட்டீங்களா?”

“மது உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னா, உங்க அத்தை சரின்னு சொல்லிருவா. நீ அது பத்தி வொர்ரி பண்ணாத. நான் பார்த்துக்கறேன் ஆதி.”, என்று நம்பிக்கையளித்து பேசி வைத்தார்.

“மச்சி, கங்ராட்ஸ்டா. எல்லாம் தானா கூடி வருது.”, சபரி ஆர்பரித்தான்.

“மதுங்கற மலை இருக்குடா. அதை நகர்த்தணும். “

“அவ சொன்ன கண்டிஷன்ல கல்யாணம் செய்தா சண்டை வரும்ங்கற ஒண்ணுதான் பாக்கி. அதுக்கு லாயர்கிட்ட சொல்லி? ‘சண்டை வரும்போதெல்லாம் பதில் பேச மாட்டேன். உன் காலில் விழுகிறேன். ‘ன்னு ,ஒரு பத்திரம் ரெடி செய்யவா? கையெழுத்து போட்டு குடுத்துடு மதுகிட்ட.”, சபரி கிண்டலடிக்க, ஆதி அவனை முறைத்தான்.

“அவளுக்கு என்னவோ ப்ரச்சனைடா. இந்த சொத்தை காரணத்தையெல்லாம் சொல்லி மறைக்கறா.”, ஆதி யோசனையாய் சொல்ல,

“எப்படி ராசா இப்படி ஒரு முடிவுக்கு வந்த? அந்த பொண்ணு பாதி உடம்பா இளைச்சு கருத்துட்டா இந்த ஒரு மாசத்துல. அப்படி… என்னா…”, என்ற சபரியின் குரல் சட்டென்று தேய்ந்து…

“டேய் ஆதி, அவளுக்கு பெருசா எதாச்சம் வியாதியாடா? அதான் உன்னை காதல், கல்யாணம்னு இழுக்க வேண்டாம்னு இருக்காளோ? அதான் உடம்பு இளைக்குதா?”, சபரி சீரியசாக கேட்கவும்,

‘அப்படியும் இருக்குமோ?’, ஆதிக்கு ஒரு நிமிடம் பயம் தொற்றியது.

Advertisement