Advertisement

அத்தியாயம் – 24

“ஹலோ”

“ஹாய் மது, நான் சபரி பேசறேன். எப்படியிருக்க?”

“ஒஹ்… ஹாய் சபரி. நல்லருக்கேன். என்ன திடீர்னு போன்?”, கொஞ்சம் படபடப்பு தெரிந்ததோ குரலில்?

“ஏன்மா? பண்ணக்கூடாதா? உன் ஊருக்கு வரவும், சரி உன்னைப் பார்க்கலாமேன்னு கூப்பிட்டேன்.”, சபரி கொஞ்சம் வருத்தப்படுவது போல் சொல்லவும்,

“அச்சோ…அப்படியில்லை சபரி.  சென்னைக்கு வந்திருக்கீங்களா? கண்டிப்பா பார்க்கலாம்.”, இப்போது படபடப்பை நன்றாகவே உணர்ந்தான் சபரி.

ஆனாலும் அவளாய் கேட்கும் வரை ஆதியைப் பற்றி வாய் திறப்பதில்லை என்று முடிவு செய்தவனாக,

“இன்னிக்கு நீ ஃப்ரீயா மது? திங்கள்ளேர்ந்து வேலை பிசியாயிடும். அடுத்த சனிக்கிழமை கிளம்பிடுவேன்.”

“ஓஹ்… நீ மட்டும்தான் வந்திருக்கியா சபரி?”, குரலில் சற்று ஏமாற்றம் ஒலித்தது.

“ஆமாம்.  ஏன் கேட்கற மது?”, சபரி போட்டு வாங்கப் பார்த்தான்.

“இல்லை, டேபிள் புக் செய்ய கேட்டேன். எந்த ஏரியா உனக்கு பக்கம்?”, மது அதற்குள் சுதாரித்திருந்தாள்.

‘அதானே… நம்மைத்தான ரெண்டும் போட்டு வாங்கி தாக்கும். நமக்கு அப்படி ஒரு சான்ஸ் குடுக்காதே’, என்று குமைந்தவன், “நுங்கம்பாக்கம் ஏரியா ஓகேவா மது?”, என்றான்.

சரி என்று காதர் நவாஸ் கான் ரோட்டில் ஒரு உணவகம் பெயரினைக் கூறியவள், மாலை ஐந்து மணி போல சந்திப்பதாய் உறுதி செய்து வைத்தாள்.

மது குன்னூர் விட்டு வந்த இந்த ஒரு மாத காலத்தில் ஆதி தொடர்பு கொள்ளவேயில்லை. “ஆமாம் நீதான் உப்பு பெறாத காரணத்தை சொல்லி, அவன் வேண்டாம்னு வந்துட்ட. அவன்  எதுக்கு உன் பின்னாடி வரணும்?” என்று ஒரு நேரமும், “அத்தனை பேசினான், கண்ணு போதை தருது, நான் என்ன விடலை பையனா, மறந்துபோகன்னு, இப்ப மறந்துதான போயிட்டான்.” என்று மறு நேரமும் மாறி மாறி அவள் மனம் அலைகழித்துக்கொண்டிருந்தது மதுவை.

ஆதிக்கு எப்படியோ, ஆனால் தான் முற்று முதலாய் காதலில் விழுந்துவிட்டோம் என்று தெளிவாகப் புரிந்தது மதுவிற்கு. ஆனால் அதை மேற்கொண்டு எடுத்துச் செல்ல முடியாத கையறு நிலை அவளை உருக்கிக் கொண்டிருந்தது.

மாலை அந்த உயர் தட்டு மக்கள் கூடும் உணவகத்தில் மதுவைக் கண்ட சபரிக்கும் திகைப்பே.

“என்ன மது, அல்டாப்பு ப்ரியா சொன்னாளேன்னு டயடிங் செய்யறியா? இப்படி ஒல்லியாகிட்ட?”

“ஹே… சேச்சே, கொஞ்சம் வேலை அதிகம். அதான். மத்தபடி நல்லாருக்கேன். உன் ப்ரெண்ட் , அத்தை மாமால்லாம் எப்படி இருக்காங்க?”, கொஞ்சம் ஆவல் எட்டிப் பார்த்தது மதுவின் கண்களில்.

“ஆதிக்கென்ன, வழக்கம்போல பிசிதான். இப்பவும் சப்ளையர்ஸ் பார்க்கறதுக்காகத்தான் என்னை அனுப்பினான். அவன் பக்கத்துல ஆந்தரா பார்டர், வேலூர் வரை இருக்க சில சப்ளையர்ஸ் பார்க்க போயிருக்கான். என்னை சென்னை அனுப்பினான்.”, மெனு கார்டை புரட்டியவாறே சபரி நூல் விட, செய்தி மதுவை சென்றடைந்தது.

ஆக, சென்னை வரக்கூடிய வாய்ப்பு இருந்தும் அவன் வரவில்லை என்றால் வர பிரியப்படவில்லை என்றுதானே அர்த்தம்?  நொடி நேர வலி கண்ணில் வர, “ ஒரு நிமிஷம் சபரி, நீ ஆர்டர் செய். இப்ப வரேன்.”, என்று சென்றாள்.

சபரி பொறுக்க முடியாமல் ஆதிக்கு அழைத்து, “ டேய்… பாதியா கரைஞ்சு போயிருக்கா. நீ எதுக்கு அவளை இப்படி காய விடுற? நீ சொன்ன மாதிரி நீ ஆந்தரா பக்கமும், என்னை சென்னைக்கும் அனுப்பிச்சன்னு சொன்னதும், முகமே விழுந்துடுச்சு. கண்ல அப்படி ஒரு வலி. எழுந்து போயிட்டா. பாவம்டா. போறும். இத்தோட நிறுத்திக்கோ. இல்லை நானே சொல்லிருவேன் அவகிட்ட.”, என்று ஆத்திரத்தோடு மிரட்டினான்.

“மச்சி… இரு. காரியத்தை கெடுத்திடாதே. அவளுக்குத் தெரியாம ஒரு போட்டோ அனுப்புடா.ப்ராமிஸ், நீ திரும்பி ஊருக்கு வந்ததும், அம்மாவ விட்டு முதல்ல பேசி, அப்பறம் நான் பேசறேண்டா. அவளுக்கு என்ன ப்ரச்சனைன்னு முடிஞ்சா கண்டுபிடி.”, என்று ஆதி கெஞ்சிவிட்டு வைத்தான்.

சபரி ஆர்டர் கொடுத்த சற்று நேரத்தில் மது வரவும், முகம் கழுவி சற்று தெளிந்திருந்தாள். மேக்கப் இல்லாது, கண்ணை சுற்றி கருவளையம் இப்போது தெரிந்தது.

“என்ன மது, கண்ண சுத்தி வளையமெல்லாம் இருக்கு? என்ன அப்படி வேலை உனக்கு?”

“அதெல்லாம் இல்லை சபரி, இப்ப திரும்ப கொஞ்சம் ஃபாஷன் டிசைன் செய்ய ஆரம்பிச்சிருக்கேன். என் கூட படிச்ச ஒருத்தி பொடீக் ஆரம்பிச்சிருக்கா. அவளுக்காக செய்யறேன். அது வேலை இழுக்குது. சீக்கிரம் சரியாகிடும்.  நீ சொல்லு, குன்னூர்ல எப்படி இருக்காங்க எல்லாரும்? “

அவளின் சப்பைகட்டை ஏற்றுக்கொண்ட சபரி,  “எல்லாரும் நல்லாத்தான் இருக்காங்க. நீங்க இருக்கும்போது வந்ததுதான். நானும் அப்பறம் குன்னூர் போகலை.”, என்றான்.

“நோனா… நோனா வீடு இடிச்சிட்டாங்களா சபரி? உனக்குத் தெரியுமா? சுப்பு மாமாக்கு ஒரு வாட்டி பேசினேன், வந்த கொஞ்ச நாள்ல,  அப்பறம் யார் கிட்டையும் பேச தோணல.”, வருத்தமாய் கேட்டாள் மது.

“இன்னும் இல்லை மது. அங்கிள் சரியான டெவெலப்பர் தேடிகிட்டு இருக்கார்.  அனேகமா ஒரு கம்பனி சரிவரும் போலருக்குன்னு சொன்னார். ஒரு பத்து நாளிருக்கும் நான் பேசி.”

“ஓ.. நான் அங்க இடிக்கற வரை தங்கலாமான்னு கேக்கப்போறேன் சபரி.”, அப்போதுதான் தோன்றிய முடிவை கூறினாள்.

“வீட்டை காலி செஞ்சாச்சு மது. ஃபர்னிசர் எல்லாம் எடுத்தாச்சு. சுப்புவும் உறவுக்காரங்களை பார்த்துட்டு வரேன்னு போயிருக்கார். அங்க எப்படி தங்குவ?”

“ஓ… “, மீண்டும் டல்லடித்தாள் மது. அதன்பின் பொதுவான பேச்சுகள் ஓடியது. பேச்சினூடே அவ்வப்போது ஆதியும் வந்தான். அவன் பாட்டுக்கு அவன் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று உறுதிப்படுத்தும் வகையில்தான் இருந்தது அவள் கேள்விகள்.

விடை பெறும் தருவாயில், “ மது, உனக்கும் ஆதிக்கும் என்ன ப்ரச்சனை? கடைசீ ஒரு வாரம் பத்து நாள் ரொம்ப க்ளோசானீங்க. அப்பறம் என்னாச்சு?”, உடைத்தே கேட்டுவிட்டான் சபரி.

“ஏன், உங்க ப்ரெண்டு கிட்ட கேக்கறதுதான?”

“கேட்டேன். என்னவோ, ஊருக்குத் திரும்பினதும் எல்லாம் பழையபடி ஆகிடும்னு சொன்னியாம்.  அவ்வளவுதான் சொன்னான்.”, என்று சபரி ஒரு பிட்டைப் போட

“அதானே சரி?  அவன் வேலைல பிசியாகிட்டாந்தானே? என்னமோ ப்ளான் எல்லாம் இருக்கு, நான் பிஸ்னஸ்ல மூழ்கிடமாட்டேன். எனக்குன்னு டைம் ஒதுக்குவேன்னு வீர வசனம் பேசினான். ஒண்ணும் நடக்கலைதானே?”, சபரியின் வலையில் விழுந்தது தெரியாமல் பொரிந்தாள் மது.

“அப்ப அதுதான் ப்ரச்சனையா? அவன் சீக்கிரம் வீட்டுக்கு வர மாதிரி இருந்தா, உனக்கு ஓகேவா?”, நிஜமாகவே இதுவா காரணம் என்று விழித்தான் சபரி.

“இல்லை சபரி.  அந்த நேரம் ஆதிக்கு என் மேல ஒரு பாசம், ஈர்ப்பு அதுவும் பாட்டியப் பத்தி நிறைய பேசினதால. இதோ, இப்ப நான் ஒருத்தி இருக்கறதையே மறந்துட்டான். நானுமே, வேலைல பயங்கர பிசி. அதுதான் சொன்னேன். வீட்டுக்கு வந்ததும் எல்லாம் மறந்துடும்னு. அதான் நடந்திருக்கு.”

“நல்லா சொல்றமா டீடெய்லு. அப்பறம் எதுக்கு குன்னூர் போகணும்னு சொன்ன?”, சபரி மடக்கவும்

“அதான் சொன்னேனே, வொர்க் ப்ரஷர். இந்த லாட் டிசைன் முடிச்சிட்டேன்னா, ஒரு ப்ரேக் வேணும். அதான் குன்னூர் வர நினைச்சேன். வேற எதுக்கு நான் சொல்லப் போறேன். தரை மட்டமாகறத்துக்குள்ள, இன்னும் கொஞ்சம் பாட்டி வீட்டை , அவங்க நெருக்கத்தை அனுபவிக்கலாமேன்னுதான்.”, ரோஷமாய் சொன்னாள் மது.

‘அதானே. உஷார் பக்கிரியாச்சே நீ. அப்படியெல்லாம் உண்மையை ஒத்துக்குவியா?’, என்று உள்ளுக்குள் அவளைத் திட்டியவன், வெளியில் நல்லவிதமாகவே விடை பெற்றான்.

“மது, ஒரு செல்ஃபி எடுக்கலாம் வாயேன்.”, என்று அழைக்க, “மேக்கப் எல்லாம் கலைஞ்சிடுச்சு சபரி, அனதர் டைம் ப்ளீஸ்.”, என்று மறுத்துவிட்டாள்.

“நான் எடுத்தாச்சு பொண்ணே. சும்மாதான் கேட்டேன்.”, என்று நினைத்துக்கொண்டான்.

ஆதி கேட்பான் என்று அனுமானித்தே அவள் முதலில் வந்த போது எடுத்திருந்தான். அவன் கேட்டதும், மீண்டும் ரெஸ்ட் ரூமிலிருந்து வந்த போதும் போட்டோ எடுத்திருந்தான் சபரி. அதை வாட்சப்பில் ஆதிக்கு அனுப்பியபடியே, தான் வாடகைக்குப் பேசியிருந்த காரில் அமர்ந்தான்.

ஆதி போட்டோவை பார்த்த அறிகுறி தெரிந்தது, தாங்க்ஸ்டா என்ற மெசேஜ் மட்டும் போட்டிருந்தான். ‘அது விடாக்கண்டின்னா, இவன் கொடாக் கண்டன். எதாவது கேக்கறானாப் பாரு. நானே போன் செய்து சொல்லணும்.’, திட்டிக்கொண்டே, ரூம் சென்று பேசுவோம் என்று கைப்பேசியை பையில் வைத்தான்.

போட்டோவைப் பார்த்த ஆதி ஒன்றும் பேசும் நிலையில் இல்லை. “ இப்படி கரைஞ்சு போயிருக்காளே. பிடிவாதக்காரி. என்னனன்வோ காரணம் சொல்லி எஸ்ஸாகிட்டு, இப்ப கிடந்து உருகறா. இன்னேரம் டூயட் பாடிகிட்டு  இருந்திருக்கலாம். என்னதாண்டி உன் ப்ரச்சனை? சொல்லித் தொலையேன்.”, ஆதி போனில் தெரிந்த அவள் போட்டோவோடு சடைத்துக்கொண்டிருந்தான்.

வீட்டிற்கு சென்ற மது, ஒரு பாட்டம் அழுது முடித்தாள். ஆதி இப்படி நொடியில் ஒதுக்கிவிட்டானே என்று விரக்தியில் ஒரு அழுகை. தான் அவனிடம் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையா? தான் மட்டும் இப்படி அவனிடம் மனதைப் பறிகொடுத்துவிட்டோமே என்று ஆதங்கத்தில் ஒரு அழுகை. அவன் சட்டையைப் பிடித்து தன்னை கல்யாணம் செய்து கொள் என்று கேட்கமுடியாத இயலாமையில் ஒரு அழுகை என்று பல காரணங்களைக் கொண்டு அழுது கொண்டிருந்தாள். மடிக் கணினியில் ஆர்ட் ஸ்டூடியோ, மற்றும் ஆதியுடன் எடுத்த செல்ஃபிக்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தது. பார்க்க பார்க்க அழுகை இன்னும் பொங்கியது.

தேற்றுவதற்கு ஆளில்லாமல் தனியே அழுது கரைந்து கொண்டிருந்தாள். அப்படி தேற்றுவதற்கு அவள் யாரையும் எதிர்பார்க்கவில்லை.வீட்டில்தான் அவள் சந்தோசஷத்தையோ, துக்கத்தையோ பகிர யாரும் இருந்ததில்லையே. அதனால் கூட இருந்திருக்கலாம். அழுதபடியே அவள் அறை சோஃபாவிலேயே கண் அயர்ந்துவிட்டாள் மது.

தன் ஹோட்டல் ரூமிற்கு சென்ற சபரி ஆதியை அழைத்தான்.  அவன் மறுமுனையில் எடுத்ததும், கோபமாக

“ஏன்டா? நானேதான் கூப்பிடணுமா? அவ போட்டோ பார்த்தப்பறம் கூட என்ன ஏதுன்னு கேட்க உனக்கு தோணலை?”, என்று கேட்டான் சபரி.

“டேய்… பார்த்துட்டு எனக்கும்தான்டா கஷ்டமாகிடுச்சு. “, ஆதியின் குரலுமே கசங்கித்தான் வந்தது.

“மண்ணாங்கட்டி… குன்னூர்லர்ந்து வந்தப்பறம் ஏன் பேசவேயில்லை அவகிட்ட? நீ அவளை சுத்தமா மறந்துட்டன்னு நினைச்சு அவளுக்கு ரொம்ப கஷ்டமாகிடுச்சு. இல்லை நீயாவது சென்னைக்கு வந்திருக்கலாமில்ல?”

“வந்தா? திரும்பவும் அவ மொக்கை காரணத்தைதான் சொல்லுவா. அவதான சொன்னா, நீ திரும்ப போனதும் ரொடீன்ல என் நினைப்பு மறந்துடும் , எனக்கும் அப்படித்தான்னு? இதோ இப்ப ப்ரூப் இருக்கா, அவ என்னை மறக்கலைன்னு?” ஆதி கேட்கவும்,

“அதுக்கு அவளை இப்படி நோகடிக்கணுமாடா? பாவம்டா.”

“சபரி. எனக்கு தெரியுது. ஆனா அவ பின்னாடி இப்ப போய் நின்னா, நான் கல்யாணம் வேண்டாம்னு சொன்ன காரணம் எதுவும் மாறலைன்னுதான் சொல்லிகிட்டு இருப்பா. அதை எல்லாம் சால்வ் செய்துட்டுதான் அவளைப் பார்க்கணும். “

“என்னடா சொல்ற? உங்கப்பாக்கு அவ அப்பான்னாலே மட்டம். அவர் மரியாதையா ட்ரீட் செய்யறது கஷ்டம்டா. இதெல்லாம் என்னடா கண்டிஷன்?”

“இதெல்லாம் இல்லை, வேற எதுவோ இருக்கு, சொல்லாம மறைக்கறா பிடிவாதக்காரி. அதை வெளிய கொண்டு வரணும். விடு ஒரு ப்ளான் இருக்கு. நாளைக்கு அம்மாவைவிட்டு பேச சொல்றேன். அப்பாவை சரி கட்ட யோசிக்கணும்.”

“இப்பவே பாதியா கரைஞ்சிட்டா. மிச்சமும் கரையறதுக்குள்ள சால்வ் பண்ணுடா. ஊர்ல காதலிக்கற எவனுக்கும் இப்படி ஒரு வினோத ப்ரச்சனை இருக்காது.”, சலித்துக்கொண்டே கைபேசியை அணைத்தான் சபரி.

அன்றிரவு சீக்கிரமே வீடு வந்திருந்தார் மனோகர். அவரும் சில வாரங்களாய் மகள் சோகமாய் இருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தார். முதலில் பாட்டியின் பிரிவில் வருந்துகிறாள் என்று நினைத்தார். இன்று மதுவிடம் பேச வேண்டுமென்று நினைத்துத்தான் வந்திருந்தார்.

மதுவைத் தேடி அவள் அறைக்கு வந்தவர், கதவு சற்று திறந்திருக்கவும், குரல் தந்தபடியே திறக்க, மகள் உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். கீழே விழும் வகையில் இருந்த லாப்டாப்பை உள்ளே நகர்த்தி வைக்க, அதில் மது, ஆதியின் போட்டோக்கள் ஸ்க்ரீன் சேவராய் ஓடியது தெரிந்தது.

அவரையும் அறியாமல் எடுத்துப் பார்த்தவருக்கு இருவரின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி ஏதோ சொல்ல, கடல் கொள்ளையன் உடையில் எடுத்த அந்த இரண்டாவது படம் வர, ஆச்சரியமாகப் பார்த்தார்.  விரும்புகிறார்களா என்ற சந்தேகம் தெளிந்து,  ஆம் உறுதியாக என்ற எண்ணம் தோன்றியது.

‘சரி, விரும்பினா வந்து சொல்ல வேண்டியதுதானே?’, என்று யோசித்து மகளின் முகத்தைப் பார்க்க, அப்போதுதான் அவள் அழுத தடையம் தெரிந்தது. திகைப்பாய் உறங்கும் மகளைப் பார்த்தபடி இருந்தார்.

‘இப்படி தனியே கரைகிறாள் என்றால், ஆதியுடன் சண்டையா? இல்லை அவன் முடியாதென்று சொல்லிவிட்டானா? ஆனால் ஆதியைத் தெரியும். அப்படி ஒரு பெண்ணின் மனதை கலைத்து விளையாடமாட்டான்’.

யோசனையுடன், வந்த சுவடு தெரியாமல் வெளியேறினார் மனோகர்.

Advertisement