Advertisement

அத்தியாயம் – 23

மதியம் பதினொரு மணி போல, கதவைத் தட்டி உள்ளே வந்த பணியாள், “ஐயா, அம்மா இந்த நேரம் உங்களுக்கு மோர் தர சொல்லியிருந்தாங்க.”, என்று ஒரு சின்ன மண்பானைக் குடுவையில் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றான்.

அப்போதுதான் நினைத்திருந்தார் ப்ரபாகர். எழுந்து போய் கொஞ்சம் தண்ணீர் அருந்த வேண்டுமென்று. மனைவி கிளம்பும் அவசரத்திலும், தனக்காகப் பார்த்து சொல்லிவிட்டு சென்றது சந்தோஷத்தைக் கொடுத்தது. எடுத்துப் பருகியவருக்கு அதன் சுவையிலேயே தெரிந்தது. இது மனைவியே செய்திருக்கிறாள் என்று. அவருக்கு கொத்தமல்லி, இஞ்சியுடன், கொஞ்சம் சின்ன வெங்காயமும் போட்டு நீராய் அடிக்க வேண்டும்.

“சே..நம்மதான் ஏதேதோ கற்பனை செய்து குழப்பிக்கிட்டோம் போல. நான் வீட்ல இருக்கேன்னு அவளே மோர் அடிச்சி வெச்சிட்டு போயிருக்கா.”, கொஞ்சம் ஆறுதலானார். ஆனாலும் தன் முகம் பார்த்தே இருக்கும் மனைவி, இன்று தான் இருந்தும் கிளம்பிப் போனது மனதை வருத்த செய்ததுதான். எப்போதும் நாந்தான் அவளுக்கு முதல் என்ற கர்வம் சற்று அடிவாங்கியது. அதுவும் மகனிற்காக தான் இரண்டாம் பட்சம் ஆகியிருந்தால் கூட பரவாயில்லை. ஒரு தமிழ் கிளாஸ், தன்னை முந்திக் கொண்டதுதான் நோகடித்தது.

மனைவி வரும் வரையில் அலுவலக வேலையைப் பார்த்தவர், ஒரு மணிக்கு சாப்பிட வெளியில் வர, சரஸ்வதியும் வீட்டுக்குள் வந்தார்.

“சாப்பிட உக்காருங்க. ஒரு அஞ்சு நிமிஷம், ப்ரெஷ் செய்துட்டு வந்துடறேன்.”, என்றார் சரஸ்வதி.

“அவசரமில்லை. நீ வா. நான் வெய்ட் பண்றேன்.”, என்றபடி சாப்பாட்டு மேசைக்கு செல்லவும், ‘இன்னிக்கு என்னவோ ஆகிடிச்சு இவருக்கு. ‘, என்று மீண்டும் எண்ணியபடி விரைந்து ஃப்ரெஷ் செய்து வந்தார் சரஸ்வதி.

“நீயும் உக்காரு. சேர்ந்தே சாப்பிடலாம்.”, என்ற கணவருக்கு சம்மதமாய் தலையசைத்து, அவருக்கு வேண்டியதை கொடுத்தபின், தானும் போட்டுக்கொண்டு அமர்ந்தார்.

“நீ நல்லா பேசினியா? அப்பறம்தான் தோணிச்சு. உன் பேச்சை கேட்கவாச்சம் வந்திருக்கலாம்னு.”, ப்ரபாகர் பேச, ஆச்சரியம் தாங்காது விழி விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் சரஸ்வதி.

“உங்களுக்கு இதுக்கெல்லாம் பொறுமை கிடையாதேன்னுதான் நான் கூப்பிடலைங்க. நல்லாத்தான் பேசினேன்னு சொன்னாங்க.”

அதற்கு மேல் என்ன கேட்க என்று தெரியவில்லை. முப்பது வருஷம் கூட இருக்கும் மனைவியிடம் பேச ஒரு டாபிக் இல்லாமல் திணறுவது சற்று அவமானமாகப் பட்டது ப்ரபாகருக்கு. ஆனால் சரஸ்வதி அதை கண்டுகொண்டதைப் போலத் தெரியவில்லை. அமைதியாக தானும் சாப்பிட்டபடி அவரையும் கவனித்துக்கொண்டிருந்தார். முன்னொரு காலத்தில் மனைவியே எதை பற்றியாவது பேச்செடுக்க, தான் அலுவலக சம்பந்தமாக போன் செய்தபடியே உணவருந்திய நாட்கள் நினைவடுக்கில் வந்து போனது.

சாப்பிட்டு முடிக்கவும், “நான், அந்த குட்டி ரூம் பால்கனியில் உக்கார்ந்துதான் படிப்பேன். இப்ப வெயில் இல்லாம இருக்கும். அங்க வரீங்களா. இல்லை உங்க ஆபிஸ் ரூம்ல பேசணுமாங்க?”, என்று கேட்டார் சரஸ்வதி.

“ஆபிஸ் ரூம் வேண்டாம். நாம பால்கனிக்கே போகலாம். “, எனவும், வேலையாளிடம் பேசிவிட்டு சரஸ்வதி முன்னால் செல்ல, ப்ரபாகர் தொடர்ந்தார்.

அந்த அறைக்குள் நுழைய, அது ஒரு சிறிய புத்தக அறையாகவே மாற்றப்பட்டிருந்தது அப்போதுதான் தெரிந்தது. பல புத்தகங்கள், அலமாரியில் இருந்தது. அருகே இருந்த மேசையின் மீதும் சில. பால்கனியில், வெயில் மறைக்க மூங்கில் திரையிருக்க, சிறிய திவான் போல போடப்பட்டிருந்தது. உத்திரத்தில் தொங்கிக்கொண்டிருந்த பூச்செடிகளில் மெல்லிய நறுமணம், அருகில் தொட்டியிலிருந்த அலங்காரச் செடிகள் என்று ரசிக்கும்படி இருந்தது.

“எப்ப இதெல்லாம் செஞ்ச?”, ஆச்சரியமாகக் கேட்க, “ ஒரு வருஷமாச்சு. உங்க கிட்ட காமிக்க கூப்பிட்டேன். அப்பறம் அப்பறம்னு சொன்னீங்க.அதோட விட்டுட்டேன். இதுக்கு முன்னாடி ஊஞ்சல் மாதிரி போட்டிருந்தேன். அது ரொம்ப நேரம் உட்கார்ந்தா முதுகு வலிக்கவும், இப்படி சாஞ்சி படிக்க வசதியா இதை வாங்கினேங்க.”

திவானில் ப்ரபாகர் அமர, பக்கவாட்டு சுவரில் சாய்ந்த படி, அருகில் அமர்ந்தார் சரஸ்வதி.

“நல்லா இருக்கு. “, என்று நிறுத்தியவர், மனைவியின் முகத்தைப் பார்த்து, “ நிறைய கவனிக்காம விட்டுட்டேன் இல்லை?”, என்றார் குற்ற உணர்வுடன்.

“என்னங்க? எனக்கு புரியலை? என்ன கவனிக்கலை? பிசினஸ்லையா?”, என்று அடுக்க,

“ம்ச்.. பிசினசை நல்லாத்தான் கவனிச்சேன். நான் சொன்னது உன்னை கவனிக்கத் தவறிட்டேன்னு. நீ கிளாசுக்கு போற, இலக்கியம் படிக்கற, இவ்ளோ அழகா ஒரு இடத்தை வீட்லயே அமைச்சிருக்க. எதுவுமே தெரியாம இருக்கேன்.”

“நான் உங்ககிட்ட சொன்னேங்க…”,என்று இழுக்க

“அதுதான் இன்னும் கஷ்டமா இருக்கு. நீ சொல்லிருக்க, அது என் கவனத்துலயும் இல்லை, ஞாபகத்திலயும் இல்லை.”, என்று  வருத்தமாய் ப்ரபாகர் சொல்லவும், என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை சரஸ்வதிக்கு.

“என்னங்க திடீர்ன்னு ….?”

“இல்ல சரசு. நேத்து ஆதி கல்யாணம் பத்தி பேச்சு வந்தது. அப்ப அவங்கிட்ட சொன்னியாமே நீ. இன்னொரு சரஸ்வதி ஆகிடக்கூடாது உனக்கு வர மனைவின்னு. அதை கேட்டதும்…. எனக்கு… சங்கடமாப் போச்சு. “

“…..”

“சரஸ்வதியிடமிருந்து பதில் எதுவும் வராததால், “ யோசிச்சுப் பார்த்தா, நம்ம இப்ப கொஞ்ச வருஷமா…. ஒரு காப் (gap)  விழுந்திருக்க மாதிரி…..”, மீண்டும் ஒரு குற்ற உணர்வு மேலோங்கிட பேசுவதை நிறுத்தி மனைவியைப் பார்த்தார்.

தலை குனிந்து  தன் விரல்களைப் பார்த்துக்கொண்டிருந்த சரஸ்வதி, “ அது ஒரு அஞ்சு, அஞ்சரை வருஷம் இருக்குங்க. நீங்க அதை கவனிக்க இத்தனை நாளாகிருக்கு. அதுவும் நம்ம பிள்ளை சொல்லி…”, லேசாய் சிரித்தார் சரஸ்வதி. அதில் கோபமில்லை, கொஞ்சம் வருத்தம் மட்டுமே இருந்தது.

திக்கென்று இருந்தது ப்ரபாகருக்கு. அஞ்சரை வருஷத்துக்கு முன்னாடி என்ன நடந்துச்சு? வேகமாய் அவர் மனது யோசித்தாலும், பெரிதாக ஒன்றும் தட்டுப்படவில்லை.

கொஞ்சம் அவமானமாய் உணர்ந்தாலும், “ என்னாச்சு சரசு அப்போ? எனக்கு ஞாபகமில்லை.”, என்று கேட்டார்.

“ நீங்க ஞாபகம் வெக்கற அளவுக்கு எதுவும் நடக்கலைங்க. எனக்குத்தான் ஒரு உண்மை விளங்குச்சு.”

ப்ரபாகர் அமைதியாய் மனைவியின் முகம் பார்க்க, “ அது ஒரு கட்டுரை படிச்சேன். என்னை மாதிரி நிறைய பேர் கணவன், பிள்ளைங்களோட அன்புக்கு ஏங்கிட்டு இருப்பாங்க போல. அவங்களுக்கெல்லாம் சொல்ற மாதிரி உன் சந்தோஷத்தை அடுத்தவங்க கிட்ட தேடினா கிடைக்காதுன்னு மண்டையில அடிக்கற மாதிரி எழுதியிருந்தாங்க. அப்பதான் எனக்கும் புரிஞ்சுது. “

“என்ன புரிஞ்சுது சரசு?”

“பிசினஸ் உங்களுக்கு பிடிச்ச விஷயம். அது உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குது. ஆதி வளர்ந்துட்டான். என்னோட இருந்தாலும், அவன் ஃப்ரெண்ட்ஸ், அவனுக்கு பிடிச்சதுன்னு செய்யறான்.

இதுல, என் சந்தோஷம் நீங்க இரண்டு பேரும் என்னோட இருக்கறதுன்னு நான் நினைக்கறது என்னோட முட்டாள்தனம்னு புரிஞ்சது.  நீங்க என் கூட இருக்க அரை மணி நேரத்துக்கு நான் மணிக் கணக்கா உங்களுக்காக காத்திருக்கறது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்னு புரிஞ்சுது.”

“சரசு… அது…அப்ப தொழிலை வளர்க்கற நேரம்….”

“நீங்க சொல்றது, நமக்கு கல்யாணமான புதுசுல. அஞ்சு வருஷம் முன்னாடி, தொழில் ஸ்திரமாத்தான் இருந்ததுங்க. ஆதியும் படிப்பை முடிச்சு லண்டனிலிருந்து திரும்ப வர நேரம்.”

என்ன பதில் சொல்ல? தலையசைத்து ஆமோதித்தார் சரஸ்வதியின் கூற்றை.

“அப்பறம்தான் எனக்கு என்ன பிடிக்கும்னு யோசிச்சி, கொஞ்சம் கொஞ்சமா எனக்கு எது சந்தோஷத்தை தருதுன்னு பார்த்து செய்ய ஆரம்பிச்சேன். உங்க தேவைகளை குறையில்லாம பார்த்துகிட்டா போறும்னு நீங்க இருந்தீங்க. வருத்தமாத்தான் இருந்துது, வாழ்க்கை இப்படியா ஒட்டுதல் இல்லாம ரொடீனா போகணும்னு.ஆனா கிடைச்சிருக்க இந்த நிம்மதியான வாழ்க்கையும் நீங்க கொடுத்தது. உங்க நேரத்தைத் தவிர, மற்றபடி எனக்கு என்ன வேணுமோ எல்லாமே கிடைக்கறா மாதிரிதான் வெச்சிருக்கீங்க.”, கொஞ்சம் விரக்தி எட்டிப் பார்த்தது சரஸ்வதியின் குரலில்.

“சரசு…அப்படியில்லைமா. உன் மேல நிறைய பாசமிருக்கு எனக்கு.”, தான் சொல்வது சப்பைக்கட்டோ என்று இப்போது ப்ரபாகருக்கே ஒரு சந்தேகம்.

“ தெரியுங்க. என் மேல அன்பு இருக்கு அது வெளிப்படுத்த உங்களுக்கு நாழியும் இல்லை, நோக்கமும் இல்லைன்னு புரியவும், உங்களுக்கேத்த மாதிரி மாறிக்கிட்டேன்.  என்னையும் மகிழ்ச்சியா வெச்சிக்க அரம்பிச்சேன்.”

சரஸ்வதியின் பேச்சைக் கேட்டு அயர்ந்து போய் அமர்ந்திருந்தார். ‘நாழியும் இல்லை நோக்கமும் இல்லை’ என்ற வார்த்தைகள் நெத்தியடியாய் தாக்கின.

அவர் முகம் விழுந்து கிடப்பதைப் பார்த்த சரஸ்வதி, “ உங்களை கஷ்டப்படவைக்க நான் சொல்லலைங்க. உங்களை பிடிச்சி வைச்சிக்க எனக்குத் தெரியலைன்னு நிறைய நாள் அழுதிருக்கேன். அப்பறம்தான் எனக்கே விளங்குச்சு. ஒரு கை தட்டினா ஓசை எழும்பாதுன்னு. உங்களுடைய அவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய மனைவி இருந்தா போறும்னு நீங்க நினைக்கும் போது, நான் என்ன முயற்சி எடுத்தாலும் வீண்தான். “

“சரசு… அப்படில்லாம் இல்லை. உன்னை கஷடப்படுத்தணும்னு நினைக்கலை.“, ப்ரபாகரின் குரல் சன்னமாக வந்தது.

“அதுதாங்க இன்னமும் கொடுமை. என் வருத்தமோ, கஷ்டமோ எதுவுமே உங்க கவனத்தை ஈர்க்கலை. அவ்ளோ ஒரு மூலையில இருந்திருக்கேன். நான் உங்ககிட்ட பேசாம இருந்ததும் உங்களுக்கு தெரியலை. மனசை தேத்திகிட்டு வந்து பேசினதும் உங்களுக்குத் தெரியலை.”, குரலில் துயரம் இருந்தாலும் ஏதோ ஒரு பழைய துக்கத்தைப் பற்றி சொல்வது போலத்தான் இருந்தது சரஸ்வதியின் பேச்சு.

சரஸ்வதி கன்னம் கன்னமாய் அவரை அறைந்திருந்தால் கூட இந்த வலி இருந்திருக்காது என்று தோன்றியது ப்ரபாகருக்கு. அத்தனை அவமானமாக இருந்தது.

“சரசு… மன்னிச்சுடுன்னு கேக்கக்கூடிய அளவுல இல்லை நான் உனக்கு குடுத்திருக்கிற கஷ்டம்….”, வருத்தமாய்ச் சொன்னார் ப்ரபாகர்.

“அதெல்லாம் நான் எதிர்பார்க்கலைங்க. நான் ஏற்கனவே மன்னிச்சிட்டேன். என்னோட நிம்மதிக்காக. என் கர்மவினை இதுன்னு ஏத்துகிட்டு வாழறேன். உங்களுக்கு நான் என்ன விதத்தில் தேவையோ, அதை குறையில்லாமல் நிறைவேத்தறேன். உங்ககிட்ட எனக்கான தேவைகளை, நீங்க தர விரும்புற அளவுல சுருக்கிக்கிட்டேன். வாழ்க்கை அதும் போக்குல போகுது.”

“என்ன நீ… சாமியார் மாதிரி பேசற?”

புன்னகைத்தவர், “ம்ம்… பக்தி இலக்கியம் நிறைய  படிக்கவும், கொஞ்சம் அப்படித்தான் ஆகிட்டேன் போல.”

“எனக்கு இந்த சாமியார் பேச்செல்லாம் வேண்டாம். என் பொண்டாட்டி சரஸ்வதிதான் வேணும்.  உன் தேவை எல்லாம் எதுக்கு சுருக்கணும்? உனக்கு என்ன வேணும்னு சொல்லு. நான் செய்யறேன். நான்… நான்… ஆபிசுக்கு போற நேரத்தை குறைச்சிக்கறேன். “, பெரிய வியாபார காந்தம்தான். மனைவி கை நழுவிச் செல்வதுபோலிருக்கவும், குழந்தையாய் அடம் பிடித்தார்.

“வேண்டாங்க. இரண்டு நாள் இருப்பீங்க, அப்பறம் என் மேல எரிச்சல் வரும். எனக்குத்தான் எந்த வருத்தமும் இல்லையே. நீங்க பாட்டுக்கு உங்களுக்கு பிடிச்சதை செய்யுங்க. “

“ஏன், என்னால ஆபிஸ் வேலை விட்டு இருக்க முடியாதுன்னு சொல்றியா?”, அவரது பிறவிக் கோபம் எட்டிப் பார்த்தது.

“உங்க அலைவரிசையில பேச என்னால முடியாது. அது சாரி அண்ணனுக்கும், ஆதிக்கும்தான் வரும். பக்தி மார்க்கம், தமிழ் இலக்கியம்னு உங்களுக்கு தெரியாத விஷயம்தான் எனக்கு பிடிக்குது. உங்க கூட பேசவாவது இந்த பிஸ்னஸ் பத்தி கத்துக்கணும்னு நான் முயற்சி செய்து மண்ணக் கவ்வினதெல்லாம் போறும். விடுங்க.”, என்றார் சரஸ்வதி.

“நீ எப்ப பிசினஸ் பத்தி கத்துகிட்ட? எங்கிட்ட சொல்லவேண்டியதுதானே. நானே கத்து கொடுத்திருப்பேன்ல்ல?”, ப்ரபாகரின் ஆர்வத்தைப் பார்த்து கொஞ்சம் நக்கலாய், “ஹ்ம்ம்… சப் ப்ரைம் மார்க்கெட் பிரச்சனையின் போது அதைப் பத்தி மனப்பாடம் செய்யாத குறையா படிச்சி, உங்ககிட்ட சாப்பிடும்போது நான் பேச,”, சரஸ்வதி நிறுத்த,

‘என்னடா சொல்லித் தொலைச்ச…’,என்று அவர் மனம் கேட்டது, “சொல்லு…என்னாச்சு?”

“உன் வேலை என்னவோ அதைப் பாரு. தெரியாத விஷயத்தைப் பத்தி உனக்கென்ன பேச்சுன்னு ஒரு வரியில முடிச்சிட்டீங்க.”,

முகத்தை எங்கே கொண்டு வைக்க என்று தெரியவில்லை ப்ரபாகருக்கு. சத்தியமாய் நினைவுக்கு வரவில்லை, ஆனால் ஒரு அலட்சியம் எப்போதும் தனக்குள் ஓடிக்கொண்டிருந்தது தெரிந்தது.

ஒரு நெடிய பெருமூச்சை இழுத்து விட்டவர், “உன்னை நிறைய காயப்படுத்தியிருக்கேன்னு புரியுது சரசு. இத்தனைக்கும் நீ இதைப்பத்தி பேசும்போது, உன் கண்ல கொஞ்சம் வருத்தம் இருக்கேத் தவிர கண்ணீர் இல்லை. அதுலயே எனக்குப் புரியுது. இவன் தேறமாட்டான்னு நீ என்னை விட்டுட்ட இல்லை?”

“இல்லைங்க. உங்களுக்கு ஏத்த மாதிரி மாறிகிட்டேன். அவ்வளவுதான்.”

“பழையபடி நீ மாறுன்னு சொல்ற யோக்கியதை எனக்கில்லைன்னு புரியுது. அதுக்கான தகுதியை வளர்த்துக்கறேன் முதல்ல. நீ படிக்கற நேரம். அதை நான் கெடுக்கக் கூடாது.  இழந்த உன் காதலை மீட்க நான் கண்டிப்பா முயற்சி எடுக்கறேன் சரசு. நம்பிக்கை வை.”, சரசுவின் தோளை அழுத்தி, நெற்றியில் ஒரு முத்தமிட்டு மெதுவாய் அறையை விட்டு வெளியேறினார் ப்ரபாகர்.

என்னவோ மனைவியோடு பேசினால் சரி படுத்திவிடலாம். இனி அவளுடனும் கொஞ்சம் நேரம் செலவிட வேண்டும் என்று எண்ணியிருந்தவர், இப்போது அந்தலை சிந்தலையாக அவர் ஆபிஸ் அறைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். கிட்டத் தட்ட முப்பது வருட நிராகரிப்பு. லேசில் சரி செய்துவிட முடியாது என்பது உரைத்தது. எங்கே ஆரம்பிப்பது என்பது கூட புரிபடவில்லை. சரஸ்வதியின் தெளிவு அவரை மேலும் கலவரப்படுத்தியது. எதிராளியினை தேர்ந்து எடைபோடும் அந்த வியாபாரிக்குத் தெரிந்தது, மனைவி அவ்வளவு எளிதில் அவரை நம்பப் போவதில்லை என்று.

ஆழ்ந்த சிந்தனையிலிருந்தவரை கதவைத் தட்டும் ஒலி மீட்டெடுத்தது. சரஸ்வதிதான் மாலை காபியுடன் வந்தார்.

“அஞ்சு மணியாச்சு. நீங்க வேலை பிசில வெளிய வரலையோன்னு கொண்டு வந்தேங்க.”, புன்னகையுடன் விளக்கி, மேஜையின் மேல் காபியை வைத்து விட்டு திரும்பும் மனைவியையே பார்த்திருந்தார்.

“சரசு… வா உக்காரு ஒரு நிமிஷம்.”

“என்னங்க ?”, என்றபடியே வந்து அமர்ந்தார் சரஸ்வதி.

“இல்லை. எங்காச்சம் ஒரு வாரம் வெளியூர் போயிட்டு வரலாமா ?”, உள்ளுக்குள் ஒரு கலவரம் இருந்தாலும், வெளியே அதைக் காட்டாமல் கேட்டார் ப்ரபாகர்.

“என்ன திடீர்னு ?”, கேள்வியாய் பார்த்த மனைவியின் பார்வையை எதிர் நோக்க முடியாமல்,

“சும்மாதான். முன்னாடி நீதான கேப்ப ? அப்ப நாழியில்லை. இப்ப இருக்கு. அதான் கேட்டேன்.”, சற்றே ரோஷமாய் பதிலளித்தார் சரசுவின் பார்வையை தவிர்த்தபடி.

“ஓ, நீங்க நான் மதியம் பேசினதுல கில்டியா ஃபீல் பண்றீங்களா ? அதெல்லாம் வேண்டாங்க. அங்க வந்தும் உங்க மனசு ஆஃபிஸ், ஃபாக்ட்ரின்னு சுத்தி வரும். இந்த வயசுல நான் எந்த ஊரைப் பார்த்து என்ன செய்யப் போறேன்? அந்த ஆசையெல்லாம் எப்பவோ போயாச்சு. நீங்க பாட்டு உங்க வேலையைப் பாருங்க.”, என்று புன்னகையுடனே எழுந்து சென்றார்.

‘பேசாம இப்படியே விட்டுருவமா ? அவளே தேறிகிட்டாதானே ?’, கொஞ்சம் சுயனலமாய் யோசனை வந்ததை தடுக்க முடியவில்லை. பின்னோடே, ‘சே, புத்தி ஏன் இப்படி போகுது ? செஞ்ச தப்பை மெது மெதுவாத்தான் சரி செய்யணும். வயசான காலத்துலயாவது பார்த்துக்கணும். ‘, என்று நினைத்துக்கொண்டார்.

இப்போதும் சுய நலமாக, தன் வயோதிகத்தின் போது தன்னை கடமையாக இல்லாமல் ஆசையாக பார்த்துக்கொள்ள வேண்டி உறவை சரி செய்ய நினைக்கிறோம் என்பதை யோசிக்கவில்லையோ இல்லை வசதியாக மறந்துவிட்டாரோ இல்லை நிஜமாகவே சரசுவுக்கு ஒரு நியாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணமோ, அவருக்கே வெளிச்சம்.

Advertisement