Advertisement

அத்தியாயம் – 21

”ஆதி… சாப்பிடலாமா?”, என்று கேட்டபடி கான்டீனிலிருந்து வாங்கி வந்த பார்சலை டீப்பாயின் மீது வைத்தான் சபரி.

“ம்ம்..வரேன்டா. என்னோடதையும் எடு.”, என்றவாறே ஈமெயில் டைப்  அடித்துக்கொண்டிருந்தான் ஆதி. குன்னூரிலிருந்து வந்து இரண்டு வாரமாகிவிட்டது.

வந்ததும் வேலை வரிசைகட்டி நின்றது. இடையில் ஒரு வாரம் போல டெல்லி சென்று வந்தான். இன்றுதான் சபரியுடன் லன்ச் சாப்பிடவே நேரம் கிடைத்தது.

“வானே வானே…” என்ற விஸ்வாசம் பாடல் குறைந்த ஒலியில் பாடிக்கொண்டிருந்தது. முடியும் தருவாயிலிருந்தது மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கவும், “ என்ன ஆதி, இந்த பாட்டை ரிபீட் மோட்ல வெச்சிருக்க? படம் வந்தப்போகூட நிறைய கேட்டதில்லையே?”, என்றான் சபரி.

அதற்குள் வேலையை முடித்திருந்தவன், நெட்டி முறித்தவாறே எழுந்து, “அது…பாட்டோட ராகம் ரொம்ப புடிச்சிருச்சு. அதான்.”, என்று கூறியபடி அங்கிருந்த அட்டாச்ட்  பாத்ரூமுக்குள் புகுந்துகொண்டான்.

“அஹ்… இவன் எப்ப ராகம் எல்லாம் நோட் செய்ய ஆரம்பிச்சான்?அப்படி என்ன அப்பாடக்கர் ராகம்…”, கூகிளிடம் கேட்க, அது சொன்ன பதிலைப் பார்த்து முழித்துக்கொண்டிருந்தான்.

ஆதி கதவைத் திறந்துகொண்டு வரவும், “என்னடா… மதுவந்தி ராகம்னு சொல்லுது? அப்ப… அப்ப மதுவை புடிக்குமா உனக்கு? அவளுக்கு? சொல்லிட்டியா?”, கேள்வியாய் அடுக்கினான் சபரி.

“ம்ம்… என்று அவன் எதிரில் தன் லாப்டாப்பை காட்ட, அதில் ஸ்க்ரீன் சேவரில் அவர்களின் போட்டோ ஷூட் படங்கள் வந்தன.

“உங்க போட்டோ ஷூட்…. டேய்…இது எப்ப?”, அவன் பேசுவதற்குள்  அவர்களது க்ளோ-சப் போட்டோ வரவும் சபரி அலறினான்.

தான் பார்த்தது நிஜமா என்று ஆதியின் முகத்தைப் பார்க்க அங்கு ஒன்றும் தெரியாமல், மீண்டும் மடிக்கணினியின் திரையைப் பார்க்க, அதில் திரும்பவும் பார்த்தவன்,

“அடப்பாவிகளா? எலியும் பூனையுமா இருந்தீங்க? எப்படா ரெமோ ரேஞ்சுக்குப் போனீங்க? அப்பாம்மாக்கு சொல்லிட்டீங்களா? ஒத்துக்கிட்டாங்களா?”

ஆதி இல்லை என்று தலையசைக்கவும், “ஏன் ஆதி, சொல்ல வேண்டியதுதானே? சரி எப்ப ப்ரபோஸ் பண்ண? ”, என்றான் கதை கேட்கும் ஆவலில். மடிக்கணினியை ஓரம் வைத்த ஆதி, சபரியின் எதிரில் அமர்ந்தான்.

“அவகிட்ட சொல்லவே விடலை. அப்பறம் எங்க அப்பா அம்மா கிட்ட சொல்ல?”, அவன் லன்ச் பாக்ஸில் இருந்ததை கொஞ்சம் சபரிக்காக மூடியில் எடுத்து வைத்தவாறு கூற,

“ஏன் சொல்லலை? யார் சொல்ல விடலை? கொஞ்சம் தெளிவாத்தான் சொல்லேண்டா?”, எரிச்சலாய்க் கேட்டான் சபரி.

“அவகிட்ட ப்ரபோஸ் செய்ய போனப்போ என் வாயை மூடிட்டு, ‘இந்த ஃபீல், இதை அப்படியே விட்டுடலாம். எதுக்கு பேரு வெச்சிகிட்டு?’ன்னு சொல்லிட்டா.

“ஆங்… ஃபீலு….அப்படியே விடறதா?  அப்படின்னா?”, சபரியின் குழப்ப முகம் ஆதிக்கு ஒரு புறம் சிரிப்பை வரவழைத்தது.

“கல்யாணம் எல்லாம் ஆனா, சண்டை போடுவோம், எதுக்கு, வேண்டாம்னு சொன்னா.”, மதுவைப்போல தோளைக் குலுக்கினான் ஆதி.

“டேய் சண்டையில் கிழியாத சட்டையும் இல்லை. சண்டை போடாத புருஷன் பொண்டாட்டியும் இல்லை. இது என்னடா காரணம்?“, சபரிக்கு ஒன்றும் புரியவில்லை.

“தெரியலயே மச்சி. இதான் அவ சொன்னா. மறுனாள், பூஜை முடிச்சிட்டு நான் கிளம்பிட்டேன். அப்பறம் பேசிக்கவேயில்லை.”, என்றான் ஆதி ஒரு வாய் சாப்பிட்டுக்கொண்டே.

“என்னடா அவளுக்கு புடிக்கலியா உன்னை… ஆனா, போட்டோ பார்த்தா அப்படி தெரியலையே…”, குழம்பிப்போய் மீண்டும் லாப் டாப்பைப் பார்த்தான் சபரி.

“ம்ம்… ஊருக்குப் போனா இதெல்லாம் ரொடீன்ல மறந்துடும்னு சொல்லிட்டா.”

“ஊப்… என்னடா கேக்கறவ கேனையனா இருந்தா என்னா வேணா சொல்லுவீங்களா? ஒருத்தரை ஒருத்தர் கபளீகரம் பண்ண ரெடியா இருக்க மாதிரி போட்டோலயே அள்ளுது… மறந்துடுமா? ”, ஆதி தன்னை வம்பிழுப்பதாக நினைத்து சபரி கோபித்தான்.

“மறந்துடும்னு அவதான் சொன்னா.”

புசு புசுவென்று மூச்சு விட்ட சபரி, “டேய்…உங்க ரெண்டு பேர் விஷயம்னாலே என் காதுலதாண்டா புகை வருது. நீ பாட்டுக்கு கொட்டிக்கற? அவ்ளதானா? அப்படியே விட்டுடப் போறீயா?”

“அவளுக்கு என் நினைப்பு இன்னேரம் இருக்கா இல்லையான்னு தெரியாம என்ன செய்ய மச்சி?”, அதி கேட்க

“ஆங்… மறந்துட்டா… போட்டோ காமி.  இதெல்லாம் என்னடா காரணம்? கல்யாணம் செய்தா சண்டை வராதா? அப்படிப் பார்த்தா எவனுக்கும் கல்யாணமே ஆகாதேடா?”

“ஹ்ம்ம் …. உனக்குத் தெரியுது மச்சி… உன் தங்கச்சிக்கு தெரியலையே…”, சிவாஜி மாடுலேஷனில் சொல்லி, மேலும் சபரியின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள,

“நோனா, என்னை இதுங்க கிட்ட மாட்டிவிட்டுட்டு நீ எஸ்கேப்பாகிட்ட. மேல என்ன தாத்தாகூட டுயட் பாடிகிட்டு இருக்கியா? ஒழுங்க ரெண்டுத்தையும் சேர்த்து வைக்கற வழியைப் பாரு.”, என்று மேலே நோக்கி சொன்னவன், மள மள வென்று சாப்பிட ஆரம்பித்தான்.

“என்ன சபரி. உன் தங்கச்சிகிட்ட பேசி புரிய வைப்பன்னு பார்த்தா, நீ கொஞ்சம் கூட கவலையே படாம சாப்பிடற?”, ஆதி பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்க,

“அவகிட்ட என்னை கோர்த்து விட பார்க்கற. அதானே உன் ப்ளான்? வாடா சேர்ந்து சாப்பிட்டு நாளாச்சுன்னு நீ கூப்டப்பவே நான் உஷாராகியிருக்கணும்.”, மேலும் இரண்டு கவளம் சாப்பிட விக்கல் எடுத்தது சபரிக்கு.

“உன் தங்கச்சி நினைக்கிறாளோ உன்னை?”, என்று கேட்டபடியே தண்ணீர் பாட்டிலைத் திறந்து நண்பனுக்குத் தர, உறுத்துப்பார்த்தபடியே வாங்கிக் குடித்தான் சபரி.

“உனக்கே கவலையில்லை. அப்பறம் எனக்கென்ன? “, சபரி சொல்ல,

“அப்ப…அவ்வளவுதானா? என் லவ்வுக்கு உதவ மாட்ட? உன் தங்கச்சி மாதிரியே நீயும் கை கழுவிட பார்க்கற? அதானே? என் நோனா இருந்திருந்தா இப்படி விட்டுருக்குமா என்னை?”, ஆதி முகம் திருப்ப,

“டேய்… நீ நெஜமாவே ஃபீல் பண்றியா இல்லை என்னை ஓட்டிகிட்டு இருக்கியான்னே தெரியலையேடா? என்ன ஆச்சுன்னு முழுசா சொல்லு. அங்க ஒண்ணு இங்க ஓண்ணுன்னு பிச்சி பிச்சி சொன்னா,எனக்கு  இருக்கற சின்ன மூளையும் ஆவியா போயிரும்.”, சபரி புலம்ப,

அதற்குள் சாப்பிட்டு முடித்திருந்த ஆதி, “நான் சொல்றேன். நீ சாப்பிடு.”, என்றபடி அவளோடிருந்த கடைசி இரு வாரங்களில் நடந்ததைக் கூறினான்.

அவன் சொன்னதையெல்லாம் கேட்டும் சபரியின் முகம் தெளிவடையவில்லை. அதைப் பார்த்த ஆதி, “ஒரு விஷயத்துல இப்பதாண்டா எனக்கு நிம்மதி.”, என்றான்.

“என்னா விஷயம்?”

“ இல்ல…. அவ சொல்றது புரியாம நான் மட்டும்தான் பேக்காட்டம் முழிச்சேனான்னு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சா. இப்ப உன்னை பார்த்ததும், பரவாயில்லை எங்கூட நீயும் இருக்கன்னு ஒரு நிம்மதிதான்.”, என்று ஆதி சிரித்தான்.

“அடிங்க… ஒரு பொண்ணை பார்த்து பேசி கரெக்ட் பண்ணத் துப்பில்லை…எங்கிட்டதான் உன் அலப்பறையெல்லாம். போடா டேய்…போடா.”, என்று சபரி கலாய்த்தான்.

“நான் இல்லை மச்சி நீதான் போக போற…சென்னைக்கு. அங்க போய் உன் தங்கச்சிய பார்த்து பேசிட்டு வர.”, ஆதி சொல்லவும்,

‘ஐயோ…சிக்கிட்டயே பரட்டை’, என்று நினைத்தவன், “இப்ப சென்னைல என்ன வேலைன்னு நான் சொல்ல முடியும் ஆதி. உங்கப்பா கேப்பாரே?”

“இத யோசிச்சவன், அத யோசிக்க மாட்டேனா பங்கு. நீ என்ன செய்யற, நான் சென்னைல செலெக்ட் செஞ்சிருக்க இந்த மூணு கம்பனிக்கும் நேர்ல போற. அவங்களோட பேசி, அவங்க ஃபாக்டரி போய் பார்த்து, எல்லா டீடெயிலும் ரிபோர்ட் ரெடி செய்யற. அப்பறமா, நாம் எல்லாருமா சேர்ந்து யாரு பெட்டர்ன்னு முடிவு பண்ணலாம்.  இதுக்கு நீ எப்படியும் ஒரு வாரமாச்சம் அங்க இருக்க வேண்டியிருக்கும். சனிக்கிழமையே கிளம்பிடு.சன்டே என்ன செய்யப் போற? மதுவை பார்த்து பேசு. சரியா?”, ஆதி அவன் திட்டத்தை சொல்ல,

“ம்க்கும்… இதெல்லாம் பக்காவா ப்ளான் பண்ணு. அப்படியே சென்னை போனாலும், சன்டே எங்க அத்தை பொண்ணைப் போய் பார்க்கறேன், எதுக்கு மதுவை பார்க்கணும்? நீ என்னை செஞ்சது பத்தாதுன்னு அவ என்னை மொத்தமா மண்டை காய விடுவா? வாலன்ட்ரியா எதுக்கு வாய்கரிசி போட்டுக்கணும் நானு?”, சபரி வாதாடினான்.

“நீதாண்டா என் வாழ்க்கையில் அனுமார். நீ தூது போகாம வேற யார் போவா செல்லம்? நீ மாட்டேன்னா நோனா நைட்டெல்லாம் உன்னை மிரட்டும். அதைப்பத்தி தெரியுமில்ல? “

“ஓ…தெரியுமே? பேத்திய புடுங்காது, அப்பிராணி என்னைத்தான் புடுங்கும். “, கடுகடுத்தான் சபரி.

“கோச்சிக்காதடா… உனக்கு ஒரு லவ் வந்தா நான் ஹெல்ப் பண்ணமாட்டேனா?”

“அதான் அனுமார்னு சொல்லிட்டயே. அப்பறம் எங்க லவ்? இராமாயணத்துல அனுமார்க்கு ஏன் ஜோடியே இல்லை தெரியுமா?”, சபரி கேட்க,

“ஏன்?”

“ராமருக்கு சேவகம் செய்துகிட்டு அவர் பின்னாடியே சுத்திகிட்டு இருந்தா, எங்கேர்ந்து பொண்ணுங்களை பார்க்க டைம்? அப்படியே பார்த்துட்டாலும் அந்த பொண்ணுங்க உஷாரா, விட்டா நம்மையும் அவங்களுக்கு சேவகம் பார்க்க விட்டுருவான்னு ஜகா வாங்கியிருக்கும்ங்க.”

வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தான் ஆதி. “உனக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் யோசினை வரும் சபரி. சான்சே இல்லைடா நீ…ஹாஹ்ஹா”

கதவைத் தட்டி உள்ளே  நுழைந்தார் ப்ரபாகர். “லன்ச் டைம் முடிஞ்சாச்சு. உங்க சிரிப்பு சத்தம் காரிடார் வரைக்கும் கேட்குது. வேலை இல்லையா ரெண்டு பேருக்கும்?”, என்று சிடுசிடுத்தார்.

‘நான் எங்க சிரிச்சேன். அவர் புள்ளை சிரிச்சதுக்கு எனக்கும் சேர்ந்து டோஸ் விழுது. குடும்பத்துக்கே இதுதான் வேலை போலிருக்கு.’, என்று சபரி குமைய,

“அப்பா. சிரிச்சது நானு, ஆனா ஜோக் சொன்னது சபரி.”

‘அஹா…கோர்த்து விடறான் பாரு.’,என்று ஆதியை சபரி முறைக்க,

“சப்ளையர் லிஸ்ட் எங்க? ரெடியாச்சா இல்லையா?”, என்றார் ப்ரபாகர்.

“ம்ம்.. சென்னைல மூணு , சித்தூர், வேலூர்ல ஒண்ணும் பார்த்திருக்கேன். அதான் சபரிய சென்னைக்கு போய் பார்த்துட்டு வர சொல்லிருக்கேன். நான் சித்தூர், வேலூர் பார்த்துட்டு வந்துட்டா, அப்பறம் ஃபைனல் பண்ணிக்கலாம்.”

“வெரி குட். சபரி சென்னைக்கு போறதுன்னா நம்ம க்ளையண்ட் சில பேரை பார்த்துட்டு வரணும். நான் டீடெய்ல் அனுப்பறேன்.”, என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

“அதான, ஒரு இடம் போனா அப்படியே அவர் கம்பனிக்கும் என்னையே சேல்ஸ்மேன் வேலை பார்க்கவெச்சு, அப்படியே பில் கலெக்டர் வேலையும் பார்க்க வெச்சிடுவாரே உங்கப்பா.”, சபரி உதட்டை சுழித்தான்.

ஆதியின் கம்பனியில் வேலை பார்த்தாலும், ப்ராபகரின் கம்பனிக்கும் அவர் சொல்லும்போது தட்டாமல் செய்து கொடுப்பான் சபரி.எல்லாமும் ஒரே குழுமத்தின் கீழ் வருவதால் பிரித்துப் பார்ப்பதில்லை.

“அதனால்தான் உன்னை ஜி.எம் போஸ்ட்க்கு ப்ரமோஷன் குடுத்துடலாம்னு இருக்கேன்.”, என்றான் ஆதி.

“ம்க்கும். அப்படி ஒரு போஸ்டே இல்லை. அந்த தைரியத்துலதானே சொல்ற?”, என்று சபரி கிண்டலடிக்க,

“இல்லை சபரி. நெஜமாத்தான் சொல்றேன்.  இந்த போஸ்ட் புதுசா க்ரியேட் செய்யறோம். அப்பாகிட்ட எல்லாம் பேசிட்டேன். என்னோட ரொடீன் வொர்க்கெல்லாம் நீ பார்த்துக்க. ப்ரெச்சனைன்னா மட்டும் எங்கிட்ட வரட்டும்.  உன் வேலை பார்க்க வேற ஆள் போடலாம், இல்லை இருக்கறவங்கள்ல உனக்கு செட் ஆகும்ன்னா சொல்லு பார்க்கலாம்.”

திகைத்த பார்வை பார்த்துக்கொண்டிருந்த சபரியை, “என்னடா? முழிக்கற?”, என்றான் ஆதி ஒரு புன்னகையுடன்.

“இவ்வளவு பொறுப்பை எதிர்ப்பார்க்கலைடா நான். எங்கிட்ட குடுத்துட்டு நீ என்ன செய்யப் போற? அதெப்படி அங்கிள் இதுக்கு ஒத்துகிட்டார்?”, இன்னும் சந்தேகமாகவே கேட்டான்.

“அவருக்கு புரிய வெச்சேன்டா.  எனக்கு பிடிக்கற விஷயம் பிசினஸ் டெவலப்மென்ட். ஆனா இந்த ரொடீன் வேலைகள்ல அதுக்கு நேரமே கிடைக்கறதில்லை. இந்த ஒரு மாசத்துல நிறைய நீ பார்த்துகிட்டதுல எனக்கு ஃப்ரீ டைம் கிடைக்கவும்தான், அந்த பை ப்ராடக்ட வெச்சு நாமளே நமக்கு வேணுங்கற கெமிக்கலை ரெடி செய்யலாம்னு ஐடியா வந்துச்சு, புது கம்பனி ப்ரபோசல்  க்ளிக் ஆச்சு. அப்பாக்கும் உன் மேல நிறைய நம்பிக்கை வந்திருக்கு.  ‘நல்லா ட்ரெய்ன் பண்ணிருக்கடா சபரியை. நீ என்ன முடிவெடுப்பியோ அதையேதான்  கரெக்டா  அவனும் செய்யறான்.’னு பாராட்டினார்.”,ஆதி விலாவாரியாக சொல்லி முடித்த போதும்,

“அப்பவும் நீ நல்லா ட்ரெயின் பண்ணிருக்கன்னு உன்னைத்தான் பாராட்டினார். ஆனாலும் உங்க பாமிலிக்கே இது கை வந்த கலைடா.  திட்டணும்னா என்னை திட்ட வேண்டியது. பாராட்டணும்னா மட்டும் அது உனக்கு. “,சபரி பொருமினான்.

“டேய்…வேற யாரையாச்சம் அவர் க்ளைன்ட் பார்க்க பேச விட்டிருக்காரா அப்பா. உன் மேல நம்பிக்கை இருக்கவும்தான் சொல்றார்.  அதுலையே தெரியலையா? விட்றா..விட்றா.  நீ சென்னை போயிட்டு வந்த அப்பறம் பார்மலா ஸ்டாஃப் மீட்டிங்கல சொல்லிடலாம். டிப்பர்ட்மெண்ட் ஹெட் எல்லாம் உங்கிட்ட ரிபோர்டிங் செய்யட்டும்.  உன் சாலரியும்  ரிவைஸ் செய்திருக்கு”, என்று தொகையைச் சொன்னவன், “பெனெஃபிட்ஸ் எல்லாம் எச்.ஆர்ல  சொல்லுவாங்க. வேற எதுன்னாலும் சொல்லு செய்துக்கலாம்.”

“டேய் ஆதி….”, அவன் சொன்ன சம்பளத்திலும், அதிகார வரம்பிலும் சற்று திணறித்தான் போனான் சபரி.

“இதோ பார். இதெல்லாம் நீ போன மாசம் அன்-அஃபிஷியலா செய்துகிட்டு இருந்த. இப்ப அதையே பார்மலா செய்யப் போறோம்.  நைட் டின்னர் போலாம். உங்கிட்ட இன்னும் பேச வேண்டியது இருக்கு.”, என்று ஆதி லன்சை பாக் செய்ய, சபரியும் உதவிவிட்டு, கிளம்பிச் சென்றான்.

Advertisement