Advertisement

அத்தியாயம் – 20
என்ன முயன்றும் மதுவால் ஆதியை தள்ளி வைக்க முடியவில்லை. அவனுக்கு முன்னரே அவளின் பார்வை ஆதியை மொய்த்தது. படுக்கையில் விழும் போதும், எழும் போது, அவனின் அணைப்பில் கரைந்த நொடிகளே நினைவடுக்கில் நர்த்தனமாடிக்கொண்டிருந்தது.
ஆதியுமே அவள் படபடப்பையும், சற்று நெருங்கினாலே சிவக்கும் அவள் கன்னக் கதுப்பையும் கண்டு தனக்குள் தடுமாறிக்கொண்டிருந்தான். இந்த மூன்று வாரமாய் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை அவளிடம் தொலைத்திருப்பதை இப்போதுதான் முழுதாய் உணர ஆரம்பித்திருந்தான்.
அவளோடு கழித்த பொழுதுகள் இனித்தது ஏன் என்று இப்போது புரிந்தது. அவளோடான பேச்சுகள் குறைந்து பார்வைகளின் பரிமாற்றங்கள், அமைதியான மௌனங்கள் அதிகரித்திருந்தன.
இருவருக்கும் அடுத்தவரின் நிலை புரிந்தாலும், எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. இந்த ஒரு இன்ப அவஸ்தை தரும் நிலையை இருவருமே அனுபவித்தார்கள். இதுவரை அறிந்திராத இந்த உணர்வுகள் ஒரு போதையைக் கொடுத்தது.
உணவருந்தும்போது, ‘என்னை பார்…பார் ‘, என்று நினைக்க அடுத்தவர் சரியாய் பார்க்கவும் சட்டென்று ஒரு மின்சாரம் பாய்ந்தது உடலில். அந்த சிலிர்ப்பு, கண்ணில் தெரிந்த ஒளி பார்ப்பவரை மயக்க என்று இவர்கள் ஒர் தனி நாடகத்தை நடத்திக்கொண்டிருந்தார்கள்.
இவர்களை கவனிப்பதையே உப தொழிலாகக் கொண்டிருந்த சங்கரியும் சுப்புவும் ஒரு நாளிலேயே கண்டுபிடித்து விட்டார்கள். மறுபடி முட்டிக்கொள்ளாமல் இது கல்யாணத்தில் முடிய வேண்டுமே என்று பேசிக்கொண்டார்கள்.
அடுத்த இரண்டு நாட்கள் இனிமையாகவே சென்றது. பாட்டியின் முப்பதாவது நாள் பூஜை நெருங்குவதால் அதற்கான ஏற்பாட்டினையும் ஆரம்பித்தார்கள். வீட்டோடு பூஜை என்பதால் பெரிதாக ஒன்றும் மெனக்கெட வேண்டியிருக்கவில்லை.
இடையில் ஸ்டூடியோவிலிருந்து கால் வரவும், ஆதி வாங்கி வர சென்றிருந்தான். அவன் கேட்டிருந்தபடி மூன்றாவதாக மது ஆதியின் க்ளோச-அப் ஷாட் நெருக்கமாக இருந்தது.
போட்டோகிராபர், “அந்த போஸ்ல நாலஞ்சு ஷாட் எடுத்திருந்தேன் சர்.  முழு படத்துக்கு வேற ஷாட் யூஸ் பண்ணேன். இந்த ஸ்டில்ல, கொஞ்சம் உங்க ஷாடோ வந்திருச்சு, பட் க்ளோ-சப்க்கு கரக்ட்டா இருக்கவும், ஃபைனல் செய்திட்டேன். இல்லை , கொஞ்சம் தள்ளியிருக்கறதுதான் வேணும்னா, போட்டுக்கலாம் சர்.
புன்னகையுடன், “இல்லை இதுவே இருக்கட்டும்.  குட் வெர்க்.”, என்று பாராட்டி விடை பெற்றான்.
‘க்ளோ-சப் போட்டோ கல்யாணத்துக்கு அப்பறமாத்தான் காட்டணும். ‘, என்று நினைத்தவன், மற்ற இரண்டின் பிரதியை மட்டும் அவளிடம் கொடுத்தான்.
“சாஃப்ட் காப்பி உன் மெயிலுக்கு அனுப்பிடறேன் மது.”, என்று சொல்லும்போதே அங்கு வந்துவிட்ட சங்கரி, “போட்டோ வந்துடுச்சா ஆதி. பார்க்கத்தான் காத்துகிட்டே இருந்தேன்.”,  என்று கேட்க, நாலுக்கு ஆறு அளவில், கையில் இருந்த இரண்டு போட்டோவையும் மது அவரிடம் கொடுத்தாள்.
அவர்கள் எடுத்திருந்த இரண்டாவது போட்டோவை இப்போதுதான் பார்த்தவர், “அட, இதைக் காட்டலையே ஆதி நீ? நீங்க ரெண்டு பேரும் வாளோட நிக்கறது மட்டும்தான காமிச்சே அப்போ?”, போட்டோவிலிருந்து கண்களை எடுக்காமல் கேட்டார் சங்கரி.
மதுவை கண்ணாலே “ஏன் தத்தி?” , என்பது போலப் பார்த்த ஆதி, “ இது, உங்களுக்கு சர்ப்ரைஸ் குடுக்கத்தான் ஆன்ட்டி .”, என்று சமாளித்தான்.
“சுப்பு…சுப்பு”, என்று மகிழ்ச்சியாகக் குரல் கொடுத்த சங்கரி, சுப்பு வந்ததும், “இந்தா அவங்க ஸ்டூடியோ போய் போட்டோ எடுத்தாங்களே. வந்திருக்கு பாரு, என்று அவரிடமும் காட்ட, சுப்புவிற்கும் ஏக மகிழ்ச்சி.
“தத்தி, ரெண்டாவது போட்டோவையும் காட்டுவியா? அதுதான் இவ்ளோ எக்சைட் ஆகறாங்க.”, என்று செல்லமாக ஆதி கடிய, “ திடீர்ன்னு கேட்கவும் அப்படியே குடுத்துட்டேன்.”, என்று அசடு வழிந்தாள் மது.
“சுப்பு, நம்ம வேண்டுதல் பலிச்சிரும் போலிருக்கே. ரெண்டும் குசுகுசுன்னு பேசுதுங்க பாரு.”, என்று முணு முணுத்தபடியே, மீண்டும் போட்டோவைப் பார்த்தார் சங்கரி.
“அப்படித்தான்மா படுது. தனம்மாதான் நல்லபடியே சேர்த்து வைக்கணும்.”, என்று பதிலுக்கு முணுமுணுத்த சுப்பு,
“ போட்டோ ரொம்ப நல்லாருக்கு தம்பி, மதுமா அழகா இருக்கீங்க.”, எனவும்,
“ஏண்ணா, அப்ப நான் அழகா இல்லையா?”, என்று ஆதி சீண்டினான்.
“ஹஹா.. உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா தம்பி. நீங்க அழகா இருக்கீங்கன்னு சொன்னா அதுக்கு , ஆம்பளைங்களை அழகுன்னு சொல்லுவீங்களான்னு மடக்குவீங்க. நீங்க கம்பீரமா இருக்கீங்க தம்பி.”, என்றார்.
கலகலவென்று சிரித்த மது, “ஆதியை கரெக்டா எடைபோட்டு வெச்சிருக்கீங்க சுப்பு மாமா.”, என்றாள்.
அவள் தலையை செல்லமாக ஆட்டியவன், “சின்ன வயசுலேர்ந்து பார்த்து பார்த்து அவருக்கு நான் யாருன்னும் தெரியும், நீ யாருன்னும் தெரியும்.  ஃப்ரெஷ் செய்துட்டு வரேன். சாப்பிடலாம்.”, என்றுவிட்டு , மாடிப்படியை இரண்டிரண்டு படிகளாகத் தாவிச் சென்றான்.
ஆதியின் தந்தை ப்ரபாகர், ஆதியின் வரவை நோக்கியிருந்தார். முப்பதுடன் அனைவரும் கிளம்புவதாக இருந்தது. சுப்பு மட்டும் பொருட்களையெல்லாம் பாக் செய்து கோடவுனில் வைப்பதற்காக ஒரு வாரம் தங்கியிருப்பதாய் முடிவு. ஆதிதான் நவனீதனிடம் சொல்லி எல்லாவற்றையும் தான் பாதுகாத்துக்கொள்வதாக ஏற்பாடு செய்திருந்தான்.
முப்பது பூஜைக்கு முன் தினம் இரவு, பின்புற தோட்டத்தில் அன்று போல தீ மூட்டி, அமர்ந்திருந்தார்கள் ஆதியும் மதுவும்.
பூஜை முடிந்து மறு நாள் காலை சென்னை திரும்புவதாக ஏற்பாடு. பூஜை அன்று பின் மதியமே ஒரு முக்கிய அலுவலகப்பணிக்காக ஆதி செல்ல வேண்டியிருந்தது.
இன்று இரவு மட்டுமே கடைசீ என்பதால் மது ஆதியுடனான இந்த நேரத்தை முடிந்த மட்டும் அனுபவித்துக்கொண்டிருந்தாள்.  நெருப்பையே பார்த்துக்கொண்டிருந்த ஆதி, அவள் தோளில் கையிட்டு, லேசாய் தலையில் முட்டி,
“மது, உன் முகத்தைப் பார்த்தாலே நேரம் போறது தெரியாது, நீ பேசற அழகுல என்னையே தொலைச்சிடறேன். “, அவள் கண் பார்த்து பேச ஆரம்பித்தவன் சிறு வெட்கம் கொண்டு மீண்டும் நெருப்பைப் பார்க்க, அந்த ஒளியில் அவனின் அந்த சிறு வெட்கமும் பேரழகாய்த் தெரிய வாய்பிளக்காத குறையாக ஆதியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மது.
அன்றொரு நாள் பிரியா  பற்றி, ‘இப்படியெல்லாம் பேசிடாதே, கேட்கமுடியாது என்னால்’, என்று மது பேசியது அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவளுக்குப் புரிந்தது என்று தெரிந்ததும், லேசாய் சிரித்தவன்,
“இப்படியெல்லாம் நான் பேசுவேன்னு நினைக்கவேயில்லை. ஆனா,  நீ பேச வைக்கற….”, தலையை உலுக்கி மதுவைப் பார்த்தவன் அவளின் கனிந்த முகம் கண்டு, ஆழ்ந்த குரலில், “மது…ஐ…திங்க்…”, என்று ஆரம்பிக்கவும் சுதாரித்தவள், சட்டென்று தன் கையால் அவன் இதழ் மூடி, “ஷ்… ஒண்ணும் சொல்லாதே ஆதி.  இது…இந்த ஃபீல் நம்ம ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு. அப்படியே விட்டுடலாமே. இதுக்கு எந்த அடைமொழியும் வேண்டாம்.“ மதுவின் பார்வை புரிந்துகொள்ளேன் என்று கெஞ்சியது.
ஆதிக்குத்தான் புரியவில்லை. “அப்படியே விட்டுடலாம்னா? என்ன சொல்ற மது?”
“ நாளைக்கு நம்ம வழிய பார்த்துக்கிட்டு பழைய வாழ்க்கைக்கு போயிடுவோம். கொஞ்ச நாள் ஆச்சுன்னா, இதெல்லாம் மறந்துடும். “, அவள் சொல்வது அவளுக்கே அபத்தமாகத் தோன்றியதென்றால் ஆதிக்கு கேட்கவே வேண்டாம்.
“வாட் ரப்பிஷ்…. நாம என்ன ஸ்கூல் பிள்ளைகளா? கொஞ்ச நாள் போனா மறக்க? “
“இல்லை ஆதி, இது நம்ம இத்தனை நாள் ஒண்ணா இருந்ததால வந்த ஒரு ஈர்ப்பு. நம்ம ரொட்டீன் லைப்…”
“என்ன ப்ரியாக்கு நான் சொன்னதை எனக்கு நீ சொல்றியா?”, இப்போது ஆதியின் எரிச்சல்  வெளிப்படையாகவே தெரிந்தது.
“அது உண்மைன்னா இதுவும் உண்மைதானே ஆதி. நாம நல்ல பழகினதும் இந்த ரெண்டு வாரமாத்தான? “, மது தன் விதண்டாவாதத்தை விடவில்லை.
“அப்ப, நீ சென்னைக்கு போனதும்  என்னை மறந்துடுவ?”, சற்று நக்கலாய் கேட்டான். “இப்படி சொல்லி நீ வேணா உன்னை ஏமாத்திக்கலாம் மது, ஆனா இது என்னன்னு உனக்கும் நல்லா தெரியும். உனக்குத் தெரியும்ங்கறது எனக்கும் தெரியும். எதுக்கு இந்த கண்ணாமூச்சி?”
ஐய்யோ, எப்படி வந்தாலும் மடக்கறானே, என்று மனதுக்குள் புலம்பியவள், “ பாரு ஆதி, பாட்டியோட ஆசையை முதல்ல சொன்னப்போ நான் வேண்டாம்னு சொன்னதுக்காக காரணம் எதுவும் மாறலை. எதுக்கு இதை வீணா வளர்த்து, எல்லரையும் கஷ்டப்படுத்துவானே?”, கொஞ்சம் பரிதாபமாகக் கேட்டாள்.
“எங்க வீட்டை சமாளிக்கறது என் பொறுப்பு. உனக்கென்ன அதைப்பத்தி? “
“காரணம் அது மட்டுமில்லை. நீ, உன் வேலை, எல்லாம்தான் சேர்த்து சொல்றேன்.”, மது இன்னும் அதையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தாள்.
“அதான் எங்கம்மாவையே எனக்கெதிரா திருப்பி விட்டயே? காரியம் முடிஞ்சி கிளம்பும்போது எங்கிட்ட சொல்லி அவ்வளவு குறை பட்டாங்க.  உனக்கு வரவ இன்னொரு சரஸ்வதியாகிடக் கூடாது ஆதி. வேலை நேரத்தை குறைச்சுக்கன்னு ஓரே அட்வைஸ்.”, அம்மாவின் ஞாபகத்தில் முகத்தில் சற்று மென்மை வந்திருந்தது.
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் மது. நீ தேவையில்லாம யோசிக்காத.”, என்றான் காதலுடன்.
சண்டை ஒன்றுதான் வழி என்று முடிவு செய்த மது, “ அதெல்லாம் இப்ப இப்படித்தான் சொல்லுவே. பெங்களூரு போனதும் உங்கப்பா வரிசையா வேலை வெச்சிருப்பாரு. அது பின்னாடி ஓடத்தான் உனக்கு சரியா இருக்கு,ம்.”, முகம் வெட்டினாள் மது.
“ஹே …என்ன நீ. விதண்டாவாதமா பேசிகிட்டு இருக்க?”, ஆதிக்கு இவள் விடேத்தியாகப் பேசுவது புரியவேயில்லை. என்னென்னவோ கற்பனை செய்திருந்தவனுக்கு மதுவின் பேச்சு குழப்பியது.
“நான் நிஜத்தைத்தான் பேசறேன். பிசினஸ்மேன் நீங்க எல்லாரும் இப்படித்தான் சொல்வீங்க. அடுத்த ஒரு பிரச்சனை கம்பனில வந்தா அவ்வளவுதான், அப்பறம் ஆபீஸே கதின்னு கிடப்பீங்க. எங்க அப்பாகிட்ட சின்ன வயசுல நிறைய பட்டுட்டேன். ஏன், உங்க அம்மா கிட்டயும் கேட்டுப் பார், இதையேத்தான் அவங்களும் சொல்லுவாங்க.”
சரஸ்வதி, கிட்டத் தட்ட இதுபோலதான் அன்று அவன் தந்தை வீட்டிலிருப்பதைப் பற்றிப் பேசிய போது,’ கேட்டுக் கேட்டு காது புளித்துவிட்டது’, என்று சொல்லியது  ஞாபகத்தில் வந்தது.
பொறுமையை இழுத்துப் பிடித்து, “மது, அவங்க ஜெனரேஷன் வேற. இதுக்கு என்ன செய்யணும்னு நான் ஏற்கனவே முடிவு செய்து, அதுக்கான வேலை நடக்குது. வீட்ல இருந்தும் வேலை பார்க்கலாம். அப்பப்ப ப்ரேக் எடுக்கலாம். “, என்றான் ஆதி.
நம்பிக்கையில்லாதது போல உதட்டை சுழித்த மது, தலையை இடம் வலமாக அசைத்தவள், “ முதல்ல இந்த பிடித்தமே உறுதியானதா தெரியலை. அதுக்குள்ள எதுக்கு நீ மாத்திக்கற? என்னால நீ மாற வேண்டாம் ஆதி.  அப்பறம் அதுவே ஒரு வெறுப்பை உண்டாக்கும். நீ வேணும்னா பாரு. வீட்டுக்குப் போனதும், இதெல்லாம் பெருசா தெரியாது.”
“ஆக உனக்கு என் மேலயும் நம்பிக்கையில்லை, உன் மேலயும் நம்பிக்கையில்லைன்னு சொல்ற?”, ஆதிக்கு எங்கே சென்று முட்டிக்கொள்வதென்று தெரியவில்லை.
“எனக்கு இந்த காதல், கல்யாணம் எதுமேலையும் நம்பிக்கையில்லை. இன்னிக்கு நல்லா இருக்கற மாதிரி தோணும், அப்பறம் எல்லாம் கலைஞ்சிடும். வேண்டாம்.”, கண்ணில் நீர் திரையிட பேசும் மது புதிதாய் தெரிந்தாள் ஆதிக்கு.
“ஹே… அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது.”
“உனக்கு ரொம்ப தெரியுமா? என்ன ஒரு ரெண்டு வாரம் பேசி பழகினா எல்லாம் புரிஞ்சிடுமா உனக்கு என்னைப் பத்தி?  எதுக்கு இப்ப என்னை வற்புறுத்தற? ஏன் பாட்டியோட வீடு உனக்கு வேணுமா? அதுக்குதான் முப்பது முடியறதுக்குள்ள …”,
“ஷட் அப். உளறாதே மது. இந்த தெருவையே வாங்கற அளவுக்கு எனக்கு வசதி இருக்குன்னு உனக்கும் தெரியும். உன் ப்ரச்சனை என்னன்னு சொல்லு, சும்மா என் கடுப்பைக் கிளப்பாதே.”, மதுவை இடைமறித்து சீறவும்,
“ஆமாம் எனக்குத்தான் ப்ரச்சனை.  நீ சொன்னது எனக்குப் பிடிக்கலைன்னதும் எவ்வளவு கோவம் வருது உனக்கு. அதான் சொல்றேன்.  நாளாக நாளாக அதுதான் நிறைய நடக்கும். இதுக்கு மேல இதைக் கொண்டு போற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை.  சென்னைக்குப் போனதும் இந்த க்ரேசினெஸ் எல்லாம்  சரியாகிடும். இதுக்கு மேல பேசாத ஆதி. உன் வாழ்க்கையை நீ பாரு. என்னை விடு.”, என்றவள் எழுந்து விறு விறுவென்று சென்றுவிட்டாள்.
“இப்ப இங்க என்ன நடந்துச்சு?”, என்பது போல  ஒரு நிமிடம் அவள் சென்ற திசையைத்தான்  பார்த்திருந்தான் ஆதி.

Advertisement