Advertisement

அத்தியாயம் – 2

டெல்லியில் விமானம் தரை இறங்கியதும், தன் ஐ-போனை ஆன் செய்தான் R.R. குழுமத்தின் ஒரே வாரிசும், அதன் எம்.டியுமான ஆதித்யன்.

ஆறடியைத் தொடும் உயரம்,  தினமும் உடற்பயிற்சி செய்வான் என்று பார்ப்பவர் எவரும் சொல்லிவிடும் தேகம்.அவன் சிகையும், அரும்பு மீசையும் லேசான தாடியும், லேசர் பார்வையும் பெண்களை சுண்டியிழுக்கும். ஆனால், அவனாய் அழைக்காமல் நெருங்கிவிட முடியாதபடி எவரையும் தள்ளி நிறுத்தும் அவன் பார்வையும் உடல் மொழியும்.

இருபத்தியெட்டு வயதிலேயே தொழிலில் சாதித்திக்கொண்டிருந்தான். R.R. குழுமம் இன்னும் இன்னும் பெரிதாக வளர்ந்து கொண்டிருந்தது அவன் முயற்சியில். அவனது ஒவ்வொரு நொடியும் அதற்காகவே செலவழித்துக்கொண்டிருந்தான்.

கைபேசியைப் பார்த்தவன், சுப்புவிடமிருந்து மூன்று மிஸ்ட் கால், அவன் தோழனும், பி.ஏவுமான சபரினாதனின் , ‘கால் மீ , வெரி அர்ஜன்ட்’  என்ற செய்தியும் பார்த்ததுமே, பாட்டிக்கு ஏதோ சரியில்லை என்பதை ஊகித்தான்.

விமானத்தை விட்டு, அவன் கைப் பெட்டியுடன் இறங்கையிலேயே, சபரியை அழைத்தான்.

“பாட்டிக்கு என்னாச்சு சபரி ?”

“பாட்டிக்கு சீரியஸ். ஹார்ட் அட்டாக், ஐ.சி.யூல இருக்காங்க. கோயம்பத்தூருக்கு, மூன்றரைக்கு ஒரு ஃப்ளைட் இருக்கு. டிக்கெட் ப்ளாக் பண்ணிருக்கேன். ஆறரை, ஏழு மணிக்கு வந்துடுவ. ராமகிருஷ்ணாலதான் அட்மிட் பண்ணிருக்காங்க பாட்டியை.”

அதுதான் சபரி. ஆதிக்கு என்ன தெரிய வேண்டும் என்று புரிந்து, ரத்தின சுருக்கமாய் சொல்லிடுவான்.

“புக் பண்ணிடு. ஆஃபிஸ்லர்ந்து புது ப்ரொஜெக்ட் க்ரூப்பை  ஏர்போர்ட் ராடிசான் ஹோட்டலுக்கு வர சொல்லிடு. அங்க மீட்டிங் வெக்க ஏற்பாடு பண்ணிடு.  அங்கயே பேசிட்டு சைன் பண்ணிடலாம்.”

“ம்ம், இதைத்தான் சொல்லுவேன்னு நினைச்சேன். எல்லாம் ரெடியா இருக்காங்க வரதுக்கு. நீ ராடிசான் போ. நான் எல்லா ஏற்பாடும் கன்பர்ம் பண்ணிட்டு மெசெஜ்  செய்யறேன். நீ லாயர் அங்கிள்க்கு பேசிடு.”

“குட்.”, போனை வைத்தவன், வெளியே நடந்தவாறே லாயருக்கு அழைத்தான்.

“சொல்லுங்க அங்கிள். பாட்டி எப்படி இருக்காங்க.”

காலையில் நடந்ததை விவரித்தவர், “கொஞ்சம் கஷ்டம்தான் ஆதி, உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குது. சபரி சொன்னான் நீ டெல்லில இருக்கன்னு.”

“ம்ம்… ஏழு மணி போல அங்க வந்துடுவேன் அங்கிள்.  அவங்க ஆசை பேத்திக்கு சொல்லிட்டீங்களா ? அவ வந்தாலே எழுந்துடுவாங்களே ?”

லேசாய் சிரித்தவர், “சொல்லியாச்சுபா. வந்துட்டு இருக்கா, இன்னும் கொஞ்ச நேரத்தில லான்ட் ஆகிடுவா.”

“சரி  அங்கிள். இங்க இருக்க கொஞ்ச நேரத்தல, நான் முடிக்க வேண்டிய வேலைங்களைப் பார்த்து முடிச்சிடறேன். பாட்டி கண் முழிச்சா, எனக்கு போன் பண்ணுங்க. விடியோ கால்லையாச்சம் முதல்ல பேசிக்கிறேன் அவங்ககிட்ட.”

போனை வைத்தவன், ஒரு பெருமூச்சுடன் அருகிலிருக்கும் ஹோட்டல் செல்ல டாக்சியை அணுகினான். பாட்டியை நினைத்து வருந்தும் மனதை ஓரம்கட்டி, இருக்கும் 2.5 மணி நேரத்தில் செய்ய வேண்டியதை யோசித்தான்.

சொன்ன நேரத்திற்கு கால் மணி நேரமே தாமதமாய் கிளம்பியது  விமானம்., சாய்ந்து அமர்ந்தது, காலை நீட்டியவன் மனம் இப்போழுது முழுதும் அவன் அன்னைக்கு அடுத்து மிகவும் நேசிக்கும் அவன் செல்ல பாட்டியின் மீதுதான். அவன் தந்தைக்கு அத்தை.  அவன் ஊட்டியில் படித்தபொழுது, அன்னையின் பிரிவை சரி கட்டியது அவன் பாட்டியே.

தாயின்பின் சுற்றிக்கொண்டிருந்தால், ஆதிக்கு தன் தொழில் சாம்ராஜ்ஜியத்தின் மீதான பற்று வராமல் போய்விடும் என்று எட்டாவது முடித்தவுடன், ஊட்டி பள்ளியில் சேர்த்துவிட்டார் அவன் தந்தை ப்ரபாகர். பெங்களூரில் அவர்கள் தொழில். பாட்டிதான், ஹாஸ்ட்டலில் சேர வேண்டும் என்றால், என் கண் பார்வையில் இங்கே ஊட்டியில் படிக்கட்டும் என்று விட்டார்.  ஆதியின் அன்னை சரஸ்வதி அமைதியே உருவானவர். மகன், கணவரைப் பார்த்துக்கொள்ளும் நேரம் போக, மீதியில் கோவில், பூஜை என்று இருப்பார். கணவர் தொழிலே கதியென்று இருந்தாலும், கோவிக்க மாட்டார்.  ப்ரபாகருக்கு மனைவி மீது பிரியம்தான். ஆனாலும் லிஸ்ட்டில் கடைசி இடம்தான் மனைவிக்கு.

மகனைப் பிரிவதில்  நெஞ்சு நிறைய வருத்தம் இருந்தாலும், பிரபாகர் சொல்லே இறுதி என்பதால், அதனை ஏற்றுக்கொண்டார்.  ஆதிக்குத்தான் பிரிவு மிகவும் பாதித்தது. பாட்டியின் அன்பே அவனை வெளிக்கொணர்ந்தது எனலாம். ஆனாலும் அந்த பிரிவு அவனின் மென்மையை பின்னுக்குத் தள்ளியது. ஹாஸ்டல் வாசம் எல்லோரையும் சமாளிக்க ஒரு கவசத்தை அணிந்துகொள்ளும் அவசியத்தை கற்றுக் கொடுத்தது. அதுவே, உணர்வுகளை ஒதுக்கி, செய்ய வேண்டிய காரியத்தில் கவனம் வைக்கவும் பழக்கிவிட்டது. இல்லாவிட்டால், சேர்ந்த முதல் வருடம் எந்த பாடத்திலும் தேறியிருக்க மாட்டான்.

இரண்டு மூன்று நாட்கள் சேர்ந்தார்போல விடுமுறை வந்தாலே ஆதியை அழைத்துக்கொள்வார் பாட்டி.  சபரியை அப்படித்தான் தெரியும். பாட்டியின் வீட்டிலிருந்து சற்று தள்ளி இருக்கும் அவர்கள் வீடு. இருவரும் சேர்ந்து ஊட்டி குன்னூரை சுற்றி வருவர். சில நேரம், சரஸ்வதி, பாட்டி வீட்டிற்கு அந்த நேரம் வந்து மகனுடன் இருப்பார். அதுவுமே ஒரு வருடம் போல அவன் தனித்து இருந்து பழகிய பின்பே அனுமதித்தார் பிரபாகர்.

தனம் பாட்டி அவனுக்கு தோழியாய் மாறியது அப்போதுதான். அவன் ஊட்டியில் படித்த நான்கு வருடமும் அவனுக்கு பொக்கிஷமான நினைவுகள். கல்லூரி பெங்களூரிலேயே படித்தாலும், அப்போதும் ஹாஸ்டலில்தான் படித்தான். வருட விடுமுறையில் ஒரு மாதமாவது பாட்டியோடுதான் வாசம்.

பாட்டி ஜாலியான பேர்வழி, மல்லுகட்டி இவனுடனும் சபரியுடனும் சினிமாவிற்கு வருவார்.  ஆங்கில படம், சண்டைபடம் பாட்டி என்றாலும் விடாமல் வந்து, என்ன சொல்றான் ? ஏன் போறான் ? என்று கேள்வியாய்க் கேட்டு குடைந்து எடுப்பார். ஆனால் குடைவது சபரியைத்தான். பேரனை தொந்தரவு செய்யமாட்டார். சபரி முனகுவதும் புலம்புவதும் தனி காமெடி ஆதிக்கு.

ஊட்டியை சுற்றிப் பார்க்க வரும் இளம் பெண்களை நோட்டமிட குன்னூர் சிம்ஸ் பார்க் , தொட்ட பெட்டா, ஊட்டி ரோஸ் கார்டன் என்று எங்கு சென்றாலும் தொத்திக்கொண்டு வருவார்.

“ பாட்டி உன்ன வெச்சிகிட்டு நாங்க யாரையும் பார்க்க முடியாது. நீ கூட வரதே எங்களுக்கு டாமேஜ்தான், எவளும் திரும்பி கூட பார்க்கமாட்டா…”, என்று புலம்பினாலும் கேட்க மாட்டார்.

“உங்க டேஸ்ட் எப்படி இருக்குன்னு பாக்கறேன்டா? நீங்க பாட்டுக்கு சொத்தை சொள்ளையா பார்த்து பின்னாடி போனா என்ன பண்றது? அதான் ஒரு பாதுகாப்புக்கு நான் வரேன்.”, என்று அடம்  பிடித்து வருவார்.

அப்பறம் எங்கே, யாரை பார்க்க ? அப்படியும் ஏதாவது பெண்ணை கொஞ்சம் உற்றுப் பார்த்துவிட்டால் போதும், நான் போய் பேசவா அந்த பொண்ணு கிட்ட ? என்பார், இல்லாவிட்டால் அந்த பெண் நல்லா இல்லை, மூக்கு இப்படி, நடை அப்படி என்று தோரணம் கட்டுவார்.

பாட்டியை ஏமாற்றி விட்டு செல்வதே அலாதி சாதனை.  கிருஷ்ணா ராமா என்று கோவில் குளம் போகாமல், ஆதி இருக்கும் நேரமெல்லாம் அவனைக்கொண்டே தன் நாளை அமைத்துக்கொள்வார்.

அப்படி ஒரு பாட்டியை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும் ? காலேஜ் இரண்டாம் வருட விடுமுறையின் போதுதான், பாட்டியின் ஏகபோக அன்புக்குப் போட்டி போட புதிதாய் ஒரு பேத்தி வந்தது தெரியும்.

அந்த விடுமுறை, அவன் வந்தது முதலே புதிதாய் முளைத்த மதுவந்தி பற்றிய புராணம்தான் ஓடியது.

“ஆதி கண்ணா… மதுவந்தி தாத்தாவோட அண்ணன் பேத்திடா, எனக்கும் பேத்திதான். அருமையான பொண்ணு. அவங்க அப்பா அம்மாக்குத்தான் அவ அருமை தெரியலை.  பூ மாதிரி மனசுடா.”, என்று பாட்டி சிலாகித்துப் பேச என்னவோ ஒரு பொறாமை சுறு சுறு வென்று ஏறியது.

மேலும் வெறுப்பேற்றுவது போல, “ ஆமாம்டா… அண்ணான்னு பார்த்த உடனே நல்லா பழகினாடா…ரொம்ப நல்ல பொண்ணுடா”,  என்று  சபரியும் ஒத்து ஊத, ஏறிக் கொண்டது ஆதிக்கு.

“சரி பாட்டி, இனிமே அந்த மண்ணாந்தியே உன்னை வந்து பார்த்துக்கட்டும். என் வேலையை விட்டுட்டு இனி நான் வர வேண்டாமில்ல ?”

“ஆதி, அவ பேரு மது… மதுவந்தி.”, சபரி திருத்தவும், அவனை ஒரு பார்வை பார்த்தவன், “ யார் நீ ? எதுக்கு இங்க வந்து உட்கார்ந்திருக்கே ?”, என்று அலட்சியமாய் எழுந்து போக, கண்கள் விரித்து வாய் பிளக்கத்தான் முடிந்தது சபரியால்.

“ஆதி கண்ணா… நீ பேரன்னா அவ எனக்கு பேத்திடா. கோவிக்காதப்பா”, என்று பாட்டி கெஞ்சவும்…

“அப்படின்னா எங்கிட்ட அவ பத்தி பேசாத. “, என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டு மாடிக்கு சென்றான்.

அவளை நல்லவள் என்று சொன்னதற்காகவே சபரியிடம் அன்று முழுதும் பேசாமல் அவனை அலைகழித்தான். மதுவோடு சேரவே மாட்டேன் என்று சத்தியம் செய்யாத குறையாய் சபரி கெஞ்சவும்தான் ஆதி அவனை மன்னித்தான்.

ஆதி, மதுவந்தி, இருவருக்குமான ஒரு பனிப்போர் முதல் வருடத்திலேயே ஆரம்பித்தது. ஆதி, அவன் அறையில் அப்போதைய பாடகர்கள் ஷகீரா, ரிஹானாவின் கவர்ச்சி போஸ்டர்கள் ஒட்டி வைத்திருந்தான். அவன் வந்து பார்த்தபோது, அவற்றுக்கு பேப்பரால் செய்யப்பட்ட அங்கி போன்ற உடைகள் கழுத்திலிருந்து, கால் வரை ஒட்டப்பட்டிருந்தது. எல்லாம் புதிதாய் முளைத்த பேத்தி செய்த வேலை என்று புரிந்தது. 

சபரியை இழுத்து வந்து காட்டினான். “என்னமோ நல்ல பொண்ணுன்னு சர்டிஃபிகேட் குடுத்த ?”

போஸ்டரைப் பார்த்து முழித்த சபரி, “ அடிபாவி, அப்ராணி மாதிரிதாண்டா இருந்தா ? ஆனாலும் சின்ன பொண்ணு ஆதி, ஏதோ விளையாட்டுத் தனமா, ட்ரெஸ் போட்டு விட்டுருக்கு ஷகிராக்கு. குத்தம்தான், அவங்க எல்லாம் ஃப்ரீயா இருந்தாத்தான் அழகு… போகுது விடுடா.”, என்று சமாதானம் செய்தாலும் எரிச்சல் அடங்கவில்லை ஆதிக்கு.

அதே காண்டில், அவள் அறைக்குச் சென்றால், டென்னிஸ் வீரர் ராஜர் ஃபெடெரர் , அலமாரிக்குள் ஒளிந்திருந்தார்.  மார்க்கர் பேனா கொண்டு மீசை தாடி, கருப்புக் கண்ணாடி என்று முடிந்த மட்டும் அலங்கோலமாக்கியவன், மானசீகமாக மன்னிப்புக் கோரினான் ஃபெடரரிடம். அவனுக்கும் பிடிக்குமே. ஆனாலும் அந்த மண்ணாந்தியை கடுப்பேத்த வேண்டும். பாட்டியை வெறுப்பேற்ற,  மதுவந்தியைத்தான், மண்ணாந்தி என்று மாற்றிச் சொல்லி, அதுவே மனதில் பதிந்துவிட்டது.

அதோடு விட்டிருந்தால் கூட அப்படியே போயிருக்கும். கல்லூரி மூன்றாம் வருட பரீட்சை முடித்து, பாட்டியோடு ஒரு மாதம் தங்கிவிட்டு செல்ல வந்த போதுதான் அவன் கோவம் பொங்கியது. இந்த முறை அவன் மிகவும் விரும்பும் மான்செஸ்டர் யுனைடட் கால்பந்தாட்ட டீமின் டீ-ஷர்ட் கத்தரிக்கோல் கொண்டு கிழிக்கப்பட்டிருந்தது. கைகள், நெஞ்சுப் பகுதி லோகோக்கள்,  முன்புறம் முக்கால் வாசித்துணியைக் காணவில்லை.

சுறுசுறுவென்று பொங்கிய கோவத்தில் அவள் அலமாரியைத் திறந்தவன், கண்ணில் பட்ட அவள் உடுப்புகளை தாறுமாறாய் கிழித்து வைத்தான்.

மறு வாரம்தான் சபரியின் பேச்சில் தெரிந்தது. அடுத்த தெருவில் புதிதாய் வந்துள்ள சிறுவன், நடக்க முடியாமல் இருந்தும் கால் பந்தாட்ட விசிறி என்று தெரிந்து, மதுவந்தி அவன் பிறந்த நாளுக்கு சிறு சிறு கால் பந்தாட்ட வீரர்களின் பொம்மைகள் வாங்கி, அதற்கு மான்ச்ஸ்டர் யுனைடட் லோகோ வைத்த டீ-ஷிர்ட் தைத்துப் போட்டு பரிசாய் கொடுக்க அவனோடு பாட்டியும் சேர்ந்து மகிழ்ந்து போனதை.

“சோம்பேறி… தடி மாடே…”, சர மாறியாக ஆதி திட்டவும், ஜெர்க்காகி, “இல்லை ஆதி, நானும் எங்கம்மாவை கூட்டிகிட்டு பர்த்-டே பார்ட்டிக்குத்தான் போனேன்டா… அவ கூட பேசவேயில்லை. அங்க பார்த்ததைத் தான் சொன்னேன். இனிமே அதுவும் சொல்லலை, போதுமா ?”, சரண்டரானான்.

“பக்கி… அந்த டீ-ஷ்ர்ட் எல்லாம்,  என்னோடதை கிழிச்சி தெச்சிருக்காடா… எனக்கு பிடிச்ச டீ-ஷர்ட் கிழிஞ்சிருக்கவும், பயங்கர கோவம் வந்திருச்சு.  அவ அலமாரில மாட்டியிருந்த எல்லா ட்ரெஸ்சையும் தாறுமாறா கிழிச்சிட்டேன்.”

“அடக் கடவுளே ! ஆனாலும் உனக்கு அவசரம் ஆதி. அவ ஒரு நல்ல விஷயத்துக்குதான செஞ்சா ?”

“ம்ம்… இப்ப வந்து சொல்லு. நான் வந்த அன்னிக்கே சொல்லித் தொலைக்கறதுக்கென்ன ?”, சீறினான் ஆதி.

“ம்க்கும்… நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்ன பந்தாடுங்கடா… அவளைப் பத்தி பேசினா நீ கடுப்பாவேன்னுதான் நான் டாபிக்கே எடுக்கறதில்லை. இப்ப ஏன் சொல்லலைன்னு காயற ! அவளுக்கு என்ன ஒரு அதுப்பு பாரேன். உன் டீ-ஷர்ட்தானா கிடைச்சது அவளுக்கு கண்டெம் பண்ண….”

“ம்ம்.. அந்த மண்ணாந்தி வேணும்னுதான் பண்ணிருக்கா. “

“டே… இப்ப அவ டிரெஸ் கிழிச்சதுக்கு வேற வாங்கி வெச்சிடலாமா ?”, சபரி யோசனை சொல்ல, அவனை முறைத்தவன்

“என் பெர்மிஷன் இல்லாம, என் ட்ரெஸ் கிழிச்சது அவ தப்பு. நல்ல விஷயத்துக்குன்னு செஞ்சாலும், ஒரு நோட்டாவது எழுதி வெச்சிருக்கணும். சோ, நான் குடுக்கற பனிஷ்மெண்ட் கரெக்ட்தான்.”, கெத்தாய் ஆதி சொல்ல,

“நாட்டாமை தீர்ப்பு சொல்லிட்டா சரி. வா போவோம்.”, என்று பதில் கூறிய சபரி,  “அந்த புள்ளை அடுத்த வாட்டி வரும்போது, நான் ஊர் பக்கம் வரக் கூடாதுடா சாமி..”, என்று முணுமுணுத்ததும் ஆதியின் காதில் விழத்தான் செய்தது.

இந்த முறை தான் செய்தது தவறு என்று புரிந்தாலும், சரிகட்ட ஈகோ விடவில்லை. பார்க்கலாம், இதுக்கு என்ன பதில் வெச்சிருக்கான்னு என்றுதான் தோன்றியது.

இப்படி மாறி மாறி சேதப் படுத்திக்கொண்டாலும் இருவரும் பாட்டியிடம் மட்டும் ஒருவரைப் பற்றி ஒருவர் கோள் சொல்லவே இல்லை.  தன் குட்டும் வெளிப்படுமே என்றா, இல்லை வேறு எதுவும் காரணமா என்று இதுவரை ஆதிக்குத் தெரியவில்லை.

இத்தனை வருடமும் ஒருவர் பாட்டியிடம் தங்க வரும்போது, அடுத்தவர் வராமல் பார்த்துக்கொண்டனர். இப்போதுதான் நேரடி சந்திப்பு. அந்த எண்ணம் வரவும், ‘பாட்டி வேணும்னே சீன் போடுதோ? அப்பவாச்சம் ரெண்டு பேரும் ஓரே நேரம் அதைப் பார்க்க வருவோம்னு ? அப்படி ஏதாச்சம் பண்ணிருந்துது, வெச்சு செய்யணும்.’, இதழ் புன்னகைப் பூக்க நினைத்துக்கொண்டான்.

Advertisement